Vaanavil – 1

1399.ngsversion.1467942034668.adapt_.768.1-2fcdfc09

Vaanavil – 1

அத்தியாயம் – 1

ஐந்திணை என அழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை,, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐந்தில் முதல் மூன்றையும் தன்னுள் அடைக்கியபடி அழகிய இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் குற்றாலம்மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

சிற்றாறு, மணிமுத்தாறு, தாமிரபரணி மற்றும் பச்சையாறு என்ற ஆறுகளின் பிறப்பிடத்தை கொண்டதால் இங்கே அருவிக்கு பஞ்சமில்லை. தென்மேற்குப் பருவக்காற்று வீச தொடங்கிவிட்டால், தமிழ்நாட்டின் எல்லை மற்றும் கேரளாவின் அருகே அமைந்திருக்கும் மலைத்தொடர்களில் மழை பொழியும்.

இந்த மழைநீர் நதியில் கலந்து மூலிகைக் காடுகளின் வழியாக பயணித்து வந்து குற்றாலதின் மலைகளில் அருவியாக கொட்டும். இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும்போது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுவதை காண கண்கோடி வேண்டும்.

சில்லென்ற தென்றலும், கார்கால குளிரையும் கலைக்கும் விதமாய் கிழக்கே உதயமானான் கதிரவன். அவனின் செங்கதிர்களின் வெளிச்சம் வானில் பரவியதே தவிர அந்த ஊரின் காற்றோடு கலந்திருந்த ஈரப்பததை குறைக்க முடியவில்லை. விடியல் வேளையில் இரைதேடி பறவைகள் வானத்தில் பறந்து செல்ல, எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தம் மனதை நனைத்தது.

அவளின் கரம்பிடித்து ஆற்றுக்கு செல்லும் செம்மண் பாதையில் வேகமாக நடந்தான் சிறுவன்.

“பைய.. பைய.. இப்படி நீ வெரசா இழுத்துகிட்டு எங்கடே போற..” வதனியின் குரல் பதைபதைப்புடன் ஒலித்தது.

“நா பள்ளிக்கிடத்தில நடந்த நீச்சல் போட்டில கலந்துட்டு முதல் ப்ரைஸ் வாங்குனேன்னு சொன்னத நீ நம்பலல்லா”

“அதுக்காக என்ன எதுக்குலே காலங்காத்தால ஆத்துக்கு இழுத்துகிட்டு வந்திருக்கன்னு சொல்லுவே” என்றாள் சிணுங்கலோடு.

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையில் டைம் கடிகாரத்தைக் கொடுத்து, “இதில டைம் செட் பண்ணிட்டு இங்கனவே நிக்கிற. அந்த நேரம் முடியறதுக்குள்ள நா நீந்தி போய் எதிர்க்கரை படித்துறையை தொட்டுகிட்டு வர்றேன்..” அவனின் பேச்சைக்கேட்டு உள்ளம் திக்கென்றது.

“என்னலே விளையாடுதியா? சத்தியமா நீ அத சீரியஸா எடுப்பேன்னு எனக்கு தெரியாதுலே.. இப்போ என்ன நீதான் வின்னர்னு நான் ஒத்துக்கிடணும் அம்புட்டுத்தானே? நான் உன்னைய நம்புதேன். போதுமா வாலே வூட்டுக்கு போலாம்”என்ற வதனி அவனின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

இரட்டை ஜடையில் மஞ்சள் நிற ரிப்பனை வைத்துக் கட்டிக்கொண்டு, பச்சை நிற பாவாடை, சட்டையில் அவனின் கைபிடித்து கெஞ்சியவளை பார்க்க அவனுக்குப் பாவமாகவும் இருந்தது.

அவளின் கன்னத்தை பிடித்து வலிக்காமல் கிள்ளியவன், “எதுக்கு இப்போ பதறுகிறவ.. நீ பயப்படாம செத்தநேரம் சத்தமில்லாம நிக்குதிய.. நான் இப்போ வந்துடுதேன்..”தன் சட்டையைக் கலட்டி படித்துறையில் வைத்துவிட்டு தண்ணீருக்குள் இறங்கினான்.

“வேணாம்லே! இந்த விஷயம் உங்க ஆச்சி காதுக்கு எட்டினா என்ன உண்டு இல்லன்னு பண்ணிபோடுவாக.. வாலே போலாம்..” எனப் புலம்பினாள்.

“மொதல்ல நான் சொன்னத செய்வ. வீணாப் புலம்பி என்னையும் பயப்பட வக்கிறவ..” என்றான் கோபத்துடன்.அவளின் பார்வையோ ஓடும் ஆற்றின் மீது படிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவன் சொன்ன படித்துறை தெரியவில்லை.

வழக்கத்திற்கு மாறாக தண்ணீரும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது..

“ஏலே உன் வெளையாட்ட விட்டுட்டு வாலே போலாம்” அவள் மீண்டும் அழைக்க மறுப்பாக தலையசைத்துவிட்டு கண்ணிமைக்கும் நொடியில் தண்ணீருக்குள் குதித்தான்.

தன் பேச்சைக் கேட்காமல் செல்லும் அவன் உயிருடன் திரும்பி வரவேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொண்டு கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்தாள். ஒருபக்கம் அவளின் மனம் பயத்தில் வேகமாக துடித்தது. மற்றொரு பக்கம் நேரம் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது தன் சின்ன பேரனை காணாமல் தேடி வந்த தர்மசீலன் படித்துறையில் தனித்து அமர்ந்திருந்த மகிழ்வதனி அருகே வந்து, “ஏ புள்ள வதனி எங்க சின்னவன பாத்தியாலே?” என்றார்.

திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்ப, “என்னாலே நீ பாக்கும் பார்வையே சரியில்லே.. ஆமா என்ன சங்கதி” என்றவரின் கண்ணில் பட்டது டைம் கடிகாரம்.

“கையில என்னல வச்சிருக்கிறவ” என விசாரித்தபடி அவர் நெருங்க பயத்துடன் நின்றவள்,

“நான் சொன்னத கேட்காம தண்ணிக்குள்ள நீச்சப்போட போயி இம்புட்டு நேரம் ஆகியும் கரைக்கு வரல அய்யா”வதனி சொன்னதைகேட்டு அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.

“எம்மாடி என்ன சொல்லுதே.. அந்த பயலுக்கு நீச்சம் அவ்வளவா தெரியாதே..”ஆற்றில் இறங்கி இங்குமங்கும் நீச்சலடித்து தேடினார். வதனியின் பதட்டம் சற்றே அதிகரிக்க மீண்டும் படித்துறைக்கு வந்தவரின் பார்வையில் விழுந்தான் செந்தூரன்.

“ஏலே செந்தூரா நம்ம சின்னவன் நீருக்குள்ள நீச்சமடிக்க போயி காணாம போயிட்டான்லே.. நீ வெரசா ஊருக்குள் போயி தகவலைச் சொல்லி ஆளை கூட்டிட்டு வாலே” சத்தமாக குரல்கொடுக்க அதைக்கேட்டு வேகமாக தகவல் சொல்ல ஊருக்குள் ஓடினான்.

சற்றுநேரத்தில் ஆண்கள் படை திரண்டு வந்து ஆற்றினில் இறங்கி சிறுவனைத் தேடினர். யாரின் கைகளுக்குள் சிறுவன் அகபடாமல் போகவே வதனி பயத்தில் அழுகத் தொடங்கினாள்.

சட்டென்று நீருக்குள் இருந்து வெளியே வந்த பெரியவர், “ஐயோ புள்ள இறந்து போயிடுச்சோ என்னவோ தெரியலயே.. ஆத்தா மகமாயி என் பேரபிள்ளய எனக்கு மீட்டுக்கொடுத்திடு தாயி” என தெய்வத்திடம் மனமுருகி வேண்டினார்.

அவன் இறந்துவிட்டானோ என்ற பயத்தில் தன்னையும் அறியாமல் தலைச்சுற்றி கீழே விழுந்தவள் படித்துறையில் மூன்று படிகளில் உருண்டதைக் கண்ட தர்மசீலன், “ஏ பிள்ள வதனி” என்று ஓடிவந்து ப தூக்கினார்.

அதே நேரத்தில்இந்த விஷயம் அறியாத அவளின் அம்மா இருவரும் வதனியை ஊருக்குள் தேடினர். மனோகரனுக்கு தென்காசியில் வேலை கிடைக்க குடும்பத்துடன் கிளம்பியபோது மகளை மட்டும் காணவில்லை என்றதும் அவர்களின் மனம் பதறியது.

கணவனும், மனைவியும் ஆளுக்கு ஒரு பக்கமாக மகளைத் தேட மற்றவர்கள் ஆத்தங்கரை நோக்கி ஓடுவதைக் கண்டு,“இப்புட்டு வெரசா எங்கலே போயிறீய?” என விசாரித்தார் மனோகரன்.

“நம்ம பெரிய வூட்டுக்கார தர்மசீலனோட பேரன் நீச்சமடிக்க ஆத்துல எறங்கி ஏதோ சுழல சிக்கி காணாம போயிட்டானாம். அதுதான் அய்யா ஊருலே தகவல் சொல்லி ஆளைக் கூட்டிட்டு வர சொன்னக..” நடந்ததை கூறினான்.

அந்த விஷயத்தைக் கேட்டு உள்ளம் திக்கென்று இருக்க, “உம்மவள கூட அங்கன பாத்த ஞாபகம்..” என்றவுடன் இருவரும் ஆற்றங்கரை நோக்கி ஓடினர்.

தர்மசீலன் மகளைக் கையில் வைத்துக்கொண்டு கண்ணீரோடு அமர்ந்திருப்பது கண்டு, “வதனி.. வதனி..” என்று தட்டியும் அவள் கண்விழிக்காமல் இருக்க பதறியபடி மகளை ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

 அவளுக்கு மருத்துவம் செய்த டாக்டர், “பிள்ள எதையோ கண்டு அதிர்ச்சியில மயக்கமடஞ்சிருக்கு. வேற ஒண்ணும் இல்ல” என்று சொல்லி இருவரின் வயிற்றிலும் பாலை வார்த்தார்.

 மகிழ்வதனியை தென்காசியிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டுவிட்டு தங்களின் வேலையைக் கவனித்தனர். மனோகரன் பேங்க் மேனேஜர், பரிமளா ஸ்கூல் டீச்சர்.

அவள் வேலை செய்யும் பள்ளியில் தான் இப்போது மகளையும் சேர்த்து இருந்தனர். அன்று பள்ளிகூடத்திற்கு மகிழின் தோழிகள் யாரும் வரவில்லை. அதனால் அவள் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

பள்ளி சீருடையில் தன்னருகே அமர்ந்தவனின் முகம் பார்த்தும் அவளின் முகமும் சட்டென்று மலர்ந்திட, “இப்பதாம்லே உன்ன நெனச்சேன்” என்றாள் புன்னகையோடு.

“ஏட்டி என்ன எதுக்குலே தேடின?”  அவளின் மீது பார்வை பதித்தான் அவன்.

“இன்னைக்கு அம்மா குழி பணியாரம் செஞ்சாவ. நீனு அத விரும்பி சாப்பிடுவ.. அதுக்குதாம்லே உன்ன நினைச்சேன் நீயே வந்திட்டுட்ட”மூன்று பணியாரத்தை டிப்பன் பாக்ஸ் மூடியில் வைத்து புதினா துவையலை வைத்து அவனிடம் நீட்டினாள்.

“வதனி”குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கே அவளின் வகுப்புத்தோழி கார்குழலி, கையில் சத்துணவுடன் நின்றிருந்தாள்.

அவள் தன்னருகே அமர்ந்திருந்தவனைப் பாவமாக நோக்கிட, “நீ அவகூட சாப்பிடு.. நான் பொறவு வாரேன்” என்று அங்கிருந்து செல்ல, கவலையோடு அவன் செல்லும் திசையை நோக்கினாள்.

“நான் உன்னோட சேர்ந்து சாப்பிட வந்தது உனக்கு புடிக்கலயா” என்றாள் சோகமாக.

“அதெல்லாம் இல்லடி. நீ வா இங்கன உட்காரு” அவளை இழுத்து அருகே அமர வைத்தாள்.

குழலி சத்துணவை சாப்பிட, “எனக்கும் கொஞ்சம் குடுக்கியா?” என்றாள்.

அதைகேட்டு, “இந்த சாப்பாடு வேணாட்டி.  நீ டீச்சரு பொண்ணு” என்றாள்.

“ஏட்டி டீச்சரு பொண்ணு சத்துணவை சாப்பிடக்கூடாதுனு எவம்லே சட்டம் போட்டது. எனக்கு புடிக்குது நான் கேக்குறேன். நீ என்ன சொல்லுத”வீம்புடன் கேட்டவள் தன்னிடமிருந்த பனியாரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு சத்துணவு ரசித்து உண்டாள்.

அதைக்கண்டு கண்கள் கலங்கியது கார்குழலிக்கு,“செத்த நேரம் டேமைத் திறந்து விடாமல் இருக்கியா, கொடுத்த பனியாரத்த மொதல்லே சாப்பிடுடி” அவளை அதட்டிட அது சரியாக வேலை செய்தது.

அவளின் பாசம் கண்டு, “ஏட்டி உம்மோடு பொறந்தவ எத்தன பேரு” கார்குழலி ஆர்வத்துடன் கேட்டாள்.

“எங்க வீட்டுல நான் மட்டுந்தான்” என்றாள்.

“ஓ!.. எங்க வீட்டுல நானு, எனக்கு பொறவு ஒரு தம்பி இரண்டு தங்கச்சி.” தன் குடும்பம் பற்றி கூறினாள்.

“மொதல்ல அவிய பேரு சொல்லுதியா?” என்றாள் கேலியுடன்.

சட்டென்று சிரித்த குழலி, “தம்பி சரவணா, பெரிய தங்கச்சி பேரு அனிதா, கடைக்குட்டி காயத்ரி” என்றாள்.

“அப்பா, அம்மா என்ன வேலை செய்யிறாக?”என்றதும் சட்டென்று அவளின் முகம் வாடிப்போனது.

“என்னாச்சுடி?”தோழியின் கரம்பிடித்து அழுத்தம் கொடுக்க, சட்டென்று நிமிர்ந்தாள்.

“அப்பா தற்கொலை பண்ணி இறந்துட்டாக வதனி” என்றாள் கண்கள் கலங்க.

“குழலி சத்தியமா இந்த சேதி எனக்கு தெரியல. தேவையில்லாம கேட்டு உன்ன வருத்தப்பட வச்சிட்டேன்ல” சங்கத்துடன் அவளிடம் சொல்ல,

“நீ என்ன தெரிஞ்சா கேட்டவ… ப்ச்… அத வுடுஅப்பாவுக்குக் விவசாயத்துல பெருத்த நஷ்டம். பேங்கில வாங்கின லோனை சரிவர கட்ட முடியாம போயிடுச்சு. பொறவு என்ன, பூச்சி மருந்து குடிச்சிட்டு வயக்காட்டிலேயே இறந்துட்டாக. அதுக்காக கண்ணக்கசக்கிட்டு இருக்க முடியுமா? அதுதான் அம்மா விவசாயம் பாத்து எங்கள படிக்க வைக்குறாவ”அவள் வருத்ததுடன் முடிக்க சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

இன்று விவசாயிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை.

“இப்போ அம்மாதான் விவசாயம் பார்த்து என்னையும், என் தம்பி, தங்கச்சிகளையும் படிக்க வைக்கிறாக…” என்றாள் தலையைக் குனிந்தபடி.

அப்படி கஷ்டப்பட்டு பிள்ளையைப் படிக்க வைக்கும் அவரை நினைத்து மகிழுக்கு பெருமையாக இருக்க, “உங்கம்மா சூப்பர் உமன்தாம்டி”அவளையும் அறியாமல்  சிரித்துவிட்டாள் கார்குழலி.

அதன்பிறகு அவர்களின் இடையே அழகாக நட்பு ஆழமாக மலர்ந்தது.

அன்று மாலை வீட்டிற்கு வந்த மகிழ் தன் தந்தையின் வரவை எதிர்ப்பார்த்தபடி வாசலில் அமர்ந்திருந்தாள். அவளின் இந்தச் செயல் பரிமளாவிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“ஏட்டி எங்கனவெல்லாம் தேடுத்தேன். ஒரு வார்த்தை இங்கனதான் இருக்கேன்னு சத்தம் குடுத்தா என்னட்டி இப்படி இங்கன வந்து சத்தமில்லாம உட்கார்ந்தா என்ன அர்த்தம்?” அவளை ஏசியபடி, கையில் முளை கட்டிய பச்சைபயிறுடன் மகளின் அருகே வந்து அமர்ந்தார்.

அவள் மெளனமாக இருப்பதைக் கண்டு, “என்ன தாயி ஒரு மாதிரியா இருக்கிறவ?” அக்கறையுடன் விசாரிக்க தன் தோழி பற்றிய தகவலை தாயிடம் சொல்லிவிட்டு தோள் சாய்ந்தாள் மகள்.

அவளின் எண்ணவோட்டம் என்னவென்று கணித்த பரிமளா, “இப்போ என்ன செய்யணும்னு சொல்லுத வதனி” என்றார்.

“நம்ம அப்பாட்ட சொல்லி அவுகளுக்கு லோன் ஏற்பாடு பண்ணலாம்மா” என்றாள் மகள் கண்ணில் ஆர்வம்  மின்ன.

அவளின் உதவி செய்யும் எண்ணம் அவருக்குப் புரிந்துபோக, “பொழுது சாய அப்பா வந்ததும் நானே பேசி, ஒரு முடிவு சொல்லுதேன் சரியா? இப்போ இந்த பச்சை பயிர சாப்புடு” மகளின் தலையைக் கலைத்தபடி அவர் புன்னகையுடன் சொல்ல அவளும்  சரியென்று தலையசைத்தாள்.

மாலை ஆறு மணிபோல வீடு திரும்பிய கணவனுக்குக் காபியை கொடுத்தபடி, அவரின் அருகே அமர்ந்த பரிமளா, மகள் சொன்ன விஷயத்தை அவரிடம் கூற, “அவங்கள நேரில் வந்து சந்திக்க சொல்லு. என்ன நிலவரம்னு பாத்துட்டுசொல்லுதன்” என்றார் சிந்தனையோடு.

மறுநாள் பள்ளிக்குக் கிளம்பிய மகளிடம், “வதனி அப்பா சரின்னு சொல்லிட்டாவ. கார்குழலி அம்மாவைப் பேங்க் போயி அப்பாவைப் பார்க்க சொல்லுதியா?” என்றதும் சரியென்று தலையசைத்துவிட்டு பள்ளிக்கூடம் சென்றாள்.

இந்த விஷயத்தை சொல்ல கார்குழலியை தேட அவளோ ஹெச். எம். ரூம் வாசலில் பதட்டத்துடன் நின்றிருப்பது கண்டு, “ஏட்டி குழலி நீ எதுக்கு இங்க நிக்குதே?” என விசாரிக்க,அவள் ஃபீஸ் கட்டாத விஷயத்தை குற்றவுணர்வுடன் கூற, வதனி சென்று தாயிடம் சொல்லி அவளுக்கு எக்ஸாம் பீஸ் கட்ட  வைத்தாள்.

அதற்கு அடுத்தநாளே கார்குழலியின் தாயார் செல்வி நேரடியாக வந்து மகிழின் அம்மாவைச் சந்தித்து, பணத்தை கொடுத்து நன்றி கூறவே,

“வதனி அவுக அப்பாகிட்ட பேசி மானியம் வாங்கி தர சொல்லி இருக்கும் போல.நீங்க நேராபேங்க் போயி என் கணவரைப் பாருங்க ஏதாவது வழி கிடக்கும்னு நினைக்கிறன்” என்று செல்வியை அனுப்பி வைத்தார் பரிமளா.

அவளின் தாயாருக்கு பயிர் காப்பிட்டு திட்டத்தில் மானியம் வாங்கி கொடுதாள். அடுத்து விவசாயம் செய்யப் பருவகால பயிர் லோன் வாங்கி தந்தாள்.

நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!