Thanimai – 10

0c1b858a855a3164320c1c181f5b7a9f-50ba7cd0

Thanimai – 10

நிம்மதியான உறக்கம்

இருவரும் அங்கிருந்து கிளம்பும்போது தான் கீர்த்தியை பார்த்தான் விக்னேஷ். சட்டென்று அவள் கொள்கைகள் நினைவரவே, ‘இந்த பெண்ணைத்தானே அரவிந்தன் செலக்ட் பண்ணினான்’ என்ற யோசனையுடன் வீட்டிற்குள் சென்றான்.

“அன்னைக்கு அரவிந்தன் செலக்ட் பண்ணிய பொண்ணு வீட்டுக்கு வந்துட்டு போகுது” என்றான்.

தன் மகனின் குரலில் இருந்த மாறுதலை கவனித்த நிர்மலா, “ம்ஹும் கீர்த்தனா, மௌனிகா இருவரும் வந்ததும், நீ அந்த பெண்ணையே கண்ணிமைக்காமல் பார்த்ததையும் கவனிச்சேன்” என்று கூறவே அசடுவழிய சிரித்தான் மைந்தன்.

“அவங்க அம்மா இன்னும் பொண்ணுகிட்ட பேசலன்னு சொன்னாங்கடா. அதுதான் உன் பார்வையை கண்டவுடன் அந்த பொண்ணு பயந்துவிட்டது” என்று காரணத்தை சொல்ல அவனின் மனமும் சமாதானமானது.

இருவரும் கோவை செல்லும் பேருந்தில் ஏறிய பிறகு அவரவர் சிந்தனைகளில் மூழ்கினர். கீர்த்திக்கு அவளை நினைத்தே வியப்பாக இருந்தது. கடந்த சில வருடங்களாக திருமணம் பற்றிய கனவுகளை மனதில் போட்டு புதைத்துவிட்டு மற்றவர்களுக்காக புன்னகைக்க தொடங்கியிருந்தாள்.

அரவிந்தனிடம் திருமணம் வேண்டாமென்று சொல்ல சென்றவள் சட்டென்று சம்மதித்தது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அடிக்கடி மனதினுள் தோன்றி மறையும் அவனின் பிம்பம் அவளுக்குள் மாற்றத்தை கொண்டு வர போதுமானதாக இருந்தது என்று யோசிக்கும்போது புரிந்தது.

அந்த இடத்தில் அரவிந்தனை தவிர வேறு யாராக இருந்தாலும் அவளால் சட்டென்று திருமணத்திற்கு சம்மதித்திருக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தவளின் மனதில் திடீரென்று அந்த கேள்வி எழுந்தது.

‘அந்தக் குட்டி பெண்ணை தூக்கியபோது எனக்குள் ஏன் அப்படியொரு துடிப்பும் தவிப்பும் எழுந்தது. ஏதோ கிடைத்தற்கு அறிய பொக்கிஷம் கைக்கு கிடைத்துவிட்ட உணர்வு. எனக்குள் புதைத்திருந்த தாய் பாசத்தை தட்டி எழுப்புகிறாளே! அவளுக்கும் எனக்கும் என்ன சம்மதம்?’ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் அதற்கான விடைதான் அவளுக்கு கிடைக்கவில்லை.. 

மௌனிகா விக்னேஷ் பார்க்கான பொருள் புரியாமல் குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள். வீட்டிலிருந்து கிளம்பும்போது இருந்த உற்சாகம் இப்போது எங்கே சென்றதென்று தெரியவில்லை. அவனின் பார்வையில் தெரிந்த ஏதோவொன்று அவளை நிம்மதியிழக்க செய்தது.

அவளின் கவனத்தை கலைப்பது போல அலைபேசி சிணுங்கியது.

அவள் வேண்டாவெறுப்பாக போனை எடுத்து காதில் வைக்க, “மௌனிகா எப்படி இருக்கிற?” என்ற தாயின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவள், “ம்ம் நல்ல இருக்கேன் அம்மா” என்றாள்

“உனக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணியாச்சு. நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு கிளம்பி வா” என்று மகளுக்கு கட்டளையிட்டார் தேவகி.

அதுவரை இருந்த குழப்பத்தை ஒதுக்கிவிட்டு, “ம்ஹும் சரிங்கம்மா. கீர்த்தியிடம் சொல்லிட்டு கிளம்பி வரேம்மா” என்றவள் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த கீர்த்தியிடம், “இப்போ என்னடி செய்யறது?” சோகமாக கேட்டாள்.

“எங்க வீட்டில் கல்யாணத்திற்கு சரின்னு சொன்னால் அப்பாவும் இப்படிதான் சொல்வார். அதனால் வீட்டை காலி பண்ணிட்டு ஊருக்குக் கிளம்பலாம். மற்ற விஷயங்களை பற்றி பிறகு யோசிக்கலாம்” என்றாள்.

அதுவே சரியென்று தோன்றிட, “சரி அப்படியே செய்யலாம். ஆமா கேட்கனும்னு நினைச்சேன். மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்கா?” என்ற கேள்விக்கு சம்மதமாக தலையசைத்தாள்.

இதுநாள்வரை அவளின் முகத்தில் இருந்த இறுக்கம் சற்று குறைந்து இளகி இருப்பது போல தோன்றவே, ‘இவ மனசுக்குள் நமக்கு தெரியாத ரகசியம் ஏதோ இருக்கு. அதை வெளியே சொல்லாமல் இருக்கிறா! அது என்னவா இருக்கும்?’ என்ற சிந்தனையோடு வீடு நோக்கி பயணித்தாள் மௌனிகா.

வீட்டிற்குள் நுழைந்ததும், “கீர்த்தி என் திருமணத்திற்கு நீ கண்டிப்பா வரணும் சரியா? நான் உனக்கு இன்விடேஷன் அனுப்புவேன்” என்று அதட்டலோடு முடித்தாள்.

அவளை பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி, “உனக்கும் அதேதான் சொல்றேன். நீ முன்னாடி மேரேஜ் பண்ணிட்ட உன் ஹஸ்பெண்ட் கூட வந்துவிடு” என்றாள்.

இரண்டு பெண்களும் எடுத்த முடிவின் படி அந்த வார இறுதியில் வேலையை ரிசைன் செய்துவிட்டு வீட்டையும் காலி செய்து அவரவர் வீடு நோக்கி சென்றனர்.

மௌனிகா பொள்ளாச்சி சென்றடைந்தவுடன், “வாடா.. பிராயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்றார் பாசத்துடன் தலையை வருடியபடி.

அவள் ஒப்புதலாக தலையசைக்க, “நீ இல்லாத வீடு களையிழந்து போச்சு. ஒற்றை பெண்ணை பெற்று அவளை தனியாளாக நின்று வளர்த்தது எவ்வளவு பெரிய கஷ்டம்னு எனக்குதான் தெரியும். உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா கொஞ்சம் நிம்மதியாக இருப்பேன்” என்றவர் தன் கஷ்டத்தைச் சொல்லி புலம்ப மௌனி அமைதியாக இருந்தாள்.

சிறு வயதிலேயே அவளின் தந்தை வேறொரு பெண்ணை மணந்த காரணத்தினால், கணவனே வேண்டாமென்று உதறிவிட்டு மகளோடு சொந்த ஊருக்கே வந்துவிட்டார் தேவகி. அன்றிலிருந்து மகள்தான் அவரின் உலகம்.

தனியொரு மனிஷியாக சமுதாயத்தில் தனித்து நின்று தன்னை வளர்த்த தாயின் விருப்பத்திற்கு மாறாக இதுவரை எந்தவொரு காரியத்தையும் அவள் செய்ததில்லை. அவர் விருப்பம்போல படிப்பை முடித்து வேலைக்கு சென்றாள். தனக்கு திருமணம் என்றவுடன் மறுப்பின்றி கிளம்பி வந்துவிட்டாள்.

“உங்க விருப்பம்போல என் திருமணம் நல்லாவே நடக்கும் அம்மா” என்று தாயின் கழுத்தை கட்டிகொண்டாள். அவரும் செல்லமாக மகளின் கன்னத்தை வருடிவிட்டு எழுந்து சென்றவர் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை கொண்டுவந்து காட்டினார்.

அந்த புகைப்படத்தில் இருந்தவனை பார்த்தும், ‘ஓஹோ இவர்தான் மாப்பிள்ளையா? அதுதான் அன்னைக்கு அந்த பார்வையில் உரிமை இருந்ததா? இது தெரியாமல் ஏதேதோ யோசித்து ஹப்பா செம தலைவலி சாமி’ என்று பெருமூச்சுடன் நிமிர்ந்தாள்.

“உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்க, “டபிள் ஓகே அம்மா” என்றாள் புன்னகையோடு. அவள் சம்மதம் சொன்னவுடன் தாயின் முகம் பூவாக மலர்ந்தது.

சேலம் சென்ற கீர்த்தி உடனே திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள். பெற்றவர்கள் இருவரும் கல்யாண வேலையில் மும்பரமாக இறங்கினர். அரவிந்தனுக்கு யாருமில்லாத காரணத்தினால் நிர்மலா தாய் ஸ்தானத்தில் இருந்து கீர்த்தியை பெண்கேட்டு திருமண நாளை முறைப்படி குறித்தனர்.

மற்றொரு புறம் மௌனியின் வீட்டிலும் அந்த தேதியில் திருமணம் செய்யலாம் என்று சொல்லவே, “இரண்டு திருமணத்தையும் ஓரிடத்தில் நடத்தலாம்” என்று நிர்மலா சொல்லவே மற்றவர்கள் சரியென்று சம்மதித்தனர்.

நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது. 

திருமணத்திற்கு ஒருவாரம் முன்னரே சொந்தபந்தங்களோடு அன்னூர் வந்து சேர்ந்தார் ராமலிங்கம். அங்கே அவரின் பூர்வீக வீட்டில் அனைவரும் தங்கிகொண்டனர். மௌனிகாவின் தாயாரும் ஒருநாள் முன்னரே அன்னூரில் வந்து மண்டபத்தில் தங்கிக் கொண்டனர்.

அரவிந்தன், விக்னேஷ் இருவரும் திருமண நாளை பற்றி யோசிக்காமல் தனியாக வேலை செய்யும் தாய்க்கு உதவியாக இருந்தனர். கீர்த்தனா, மௌனிகா இருவரும் தங்கள் திருமண விஷயத்தை தங்களின் நட்பு பட்டாளத்திற்கு கூறவே ஜெயராம், ரோஹித், மீரா மூவரும் முதல் நாளே வந்தனர்.

இரண்டு பெண்களும் தங்களின் உறவினர்களோடு ஒரே அறையில் சிரிப்பும், சந்தோஷமாக இருந்தனர். ஓரிடத்தில் இரண்டு தோழிகளின் திருமணம் என்ற விஷயம் அவர்களை மட்டுமல்ல நண்பர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“ஹப்பா எங்களுக்கு செலவு இல்லாமல் ஒரே இடத்தில திருமணத்தை வச்சிட்டீங்க” என்று ஜெயராம் பெருமூச்சுவிட்டான்.

“அதுக்காக ஒரே கிப்ட் கொடுத்து ஏமாற்ற நினைக்காதே” என்றனர் மௌனியும், கீர்த்தியும் ஒருமித்த குரலில்.

“இவங்க நம்மளை கூப்பிட்டதே கிப்ட்காக மச்சி” என்று ரோஹித் சொல்ல,

“நாளைக்கு பிரச்சனை வந்தாலும் இவங்க மட்டும் இல்ல நானும் உங்களைத்தான் கூப்பிடுவேன் லூசு..” என்றாள் மீரா.

மூன்று பெண்களும் ஹை – பை கொடுக்க, “நல்ல வருவீங்க” என்று சிரிப்பும் கூத்துமாக அன்றைய பொழுது ஓடி மறைந்தது.

இரவு அனைவரும் களைப்பில் உறங்கிட கீர்த்தனாவிற்கு தூக்கம் வர மறுத்தது. மீண்டும் பழைய நினைவுகள் மனதினை ஆக்கிரமித்தது. அதிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தவளின் தோளை ஒரு கரம் தொட்டது.

அவள் நிமிர்ந்து பார்க்க, “இன்னும் தூங்காமல் என்ன செய்யற?” என்று மீரா கேட்க அவள் பதில் சொல்லாமல் அவளின் மடியில் தலைசாய்த்து கொண்டாள். சிறிதுநேரம் மெளனமாக அழுதவள் அப்படியே உறங்கி விட்டாள்.

“நம்மகிட்ட இருந்து மறைக்கும் அளவுக்கு அவளுக்குள் என்ன ரகசியம் இருக்குன்னு படைத்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும்” மீரா மறுபக்கம் திரும்பி படுத்துகொள்ள, கீர்த்தியின் முகத்தில் வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கும் தெளிவு மௌனிகாவிற்கு மன நிறைவைக் கொடுத்தது

இரவு அனைவரும் தூங்கியிருக்க, தன் மகளை மடியில் போட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் அரவிந்தன். இதுநாள் வரை மனதை ஆக்கிரமித்திருந்த கவலைகள் சென்ற இடம் தெரியவில்லை.

தன் குடும்பத்தின் அனுமதியோடு இதழினியைக் கரம்பிடித்தது மனக்கண்ணில் படமாக ஓட, “என்னடா பழைய நினைவுகளா?” என்றான் விக்னேஷ்

அவன் ஒப்புதலாக தலையசைக்க, “திருமணமே வேண்டான்னு இருந்தவன் எப்படி சம்மதம் சொன்னன்னு எனக்கே புரியல” அவனின் அருகே அமர்ந்தான்.

“சில நேரங்களில் முடிவுகள் எடுக்கப்பட சில காரணங்கள் இருக்கு. இப்போ நான் எடுத்த முடிவுக்கு பின்னாடி என் மகளோட வாழ்க்கை மட்டும் இல்ல, என்னோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு விக்கி” என்று வெளியே சொன்னவன்,

‘என் வாழ்க்கையில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்று இருந்தேன். ஆனால் இப்போது எல்லாமே மாறிப்போக ஒரே காரணம் கீர்த்திதான். என் மகளின் வளமான எதிர்காலத்துடன், அவளின் காயத்திற்கும் முற்றுப்புள்ளியாக இந்த திருமணம் அமையுமானால் அதை செய்வதில் தவறில்லையே..’ என்று மனதினுள் நினைத்தான்.

தன்னை நம்பி வரும் பெண்ணை தன்னால் முடிந்தவரை நல்லபடியாக வைத்து கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வந்தவனின் விழிகளை தூக்கம் தழுவியது.

அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மணநாளும் இனிதே விடிந்தது.

அரவிந்தன் – கீர்த்தனா, விக்னேஷ் – மௌனிகாவின் திருமணம் பெரியவர்களின் ஆசியோடு விமர்சியாக நடந்து முடிந்தது. மற்ற சடங்குகள் முறைப்படி நடந்தது.

மற்றவர்கள் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற உதயா கீர்த்தியிடம் உடனே ஒட்டிக் கொண்டாள். அன்றைய பொழுது அழகாக கழிந்திட, வீட்டில் இருந்தவர்கள் முறைப்படி இரண்டு தம்பதிகளுக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்தனர்.

விக்னேஷ் அவனின் அறையில் காத்திருக்க மௌனிகாவை அலங்காரம் செய்து அறைக்கு அனுப்பிவைக்க, தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள்.

அவளின் விழிகளில் தெரிந்த பயத்தை கண்டுகொண்ட விக்னேஷ், “ரொம்ப டென்ஷன் ஆகாதே.. இங்கே வந்து உட்காரு.. கொஞ்சநேரம் பேசலாம்” என்றவுடன் அவளின் முகம் சற்றே தெளிந்தது. இருவரும் அவரவர் படிப்பு, ரசனை என்று பேச தொடங்க நிமிடங்கள் மெல்ல கரைந்தது.

மற்றொரு பக்கம் அரவிந்தனின் அறைக்கு கீர்த்தனாவை அனுப்பி வைக்க அவளோ நடுக்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள். அங்கே எந்தவிதமான அலங்காரமும் படுக்கையறை வழக்கம்போலவே இருந்தது.

உதயாவை மார்பில் போட்டுக்கொண்டு கையில் ஒரு புத்தகத்துடன் அவளை எதிர் கொண்டான்.

இருவரையும் பார்த்தும் அவள் முகம் மலர, கையோடு கொண்டு வந்த பாலை இருவருக்கும் ஆற்றி கொடுத்துவிட்டு, “உதயாவிற்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்டாள்.

அரவிந்தனிடமிருந்து அவளிடம் தாவிய உதயா, “இனிமேல் நீங்களும் இங்கேயே இருப்பீங்களா?” என்று புரியாமல் கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

உதயா சின்னவளாக இருந்தாலும் உடனே அனைவரிடமும் பழகும் குணமுடையவள் என்பதால், “என்னோடு விளையாடுவீங்களா?” மகள் அடுத்த கேள்வி தொடுக்க,

“என்னையும் விளையாட்டில் சேர்த்து கொள்வாயா?” என்று கண்ணை உருட்டிட மகளோ சிரிப்புடன் தலையசைத்தாள்.

“உனக்கு கார்டூன் பிடிக்குமா?” என்ற கேள்வியில் சின்னவளின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

“உங்களுக்கு பிடிக்கும்மா.. எனக்கு சோட்டா பீம், டோரா, டாம் அண்ட் ஜெரி ரொம்ப பிடிக்கும்” என்று வரிசையாக விரல்விட்டு சொல்ல இருவரும் அவர்களுக்கான தனி உலகிற்குள் அழைத்து சென்றாள்.

இரண்டு பெண்களும் அவர்களுக்கான உலகத்தில் சஞ்சரித்துவிட தனியாக விடப்பட்டான் அரவிந்தன். உதயாவின் கேள்விகளுக்கு குழந்தையாக மாறி பதில் சொல்லும் கீர்த்தியின் முகத்தில் சந்தோஷத்தை கண்டவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“அப்பா” என்று உலுக்கிய மகளைக் கேள்வியாக நோக்க,

 “எனக்கு தூக்கம் வருது தூங்கலாமா?” என்றாள்.

தன் மகளை மார்பில் போட்டு தட்டிக்கொடுக்க உடனே உறங்கி போனாள். அதுவரை அவளிருக்கும் தைரியத்தில் பேசிக்கொண்டிருந்த கீர்த்தி திடீரென்று மெளனமாக இருப்பதை அவனும் கவனித்தான்.

“கீர்த்தி உனக்கு சேலை கட்டி தூங்க ஒரு மாதிரி இருந்தால் நைட் ட்ரஸ் போட்டுட்டு வந்து தூங்கு” சாதாரணமாக சொல்ல  சரியென்று தலையசைத்துவிட்டு உடைமாற்றிவிட்டு வந்தவளின் பார்வை படுக்கையில் படிந்து மீண்டது.

 அரவிந்தன் – உதயாவின் தலையை வருடியபடி விழித்திருந்தவன் தன்னவள்  தயங்கி நிற்பதை கண்டு அவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.  மறுப்பாக தலையசைத்தவள் படுக்கையின் ஓரத்தில் படுத்து விழிமூடிகொள்ள அவளின் மனம் பயத்தில் படபடவென்று அடித்துக்கொண்டது.

அவளின் மனநிலையை கணித்த அரவிந்தன் அவளை இழுத்து தோளோடு சேர்த்து அணைத்தான். வலது பக்க மார்பில் மகள் வழக்கம்போல துயில் கொள்ள இடது பக்க தோளில் சாய்ந்திருந்தவளின் உச்சந்தலையை வருடிவிட்டு, “குட் நைட்” என்று அவளின் நெற்றியில் பட்டும்படாமல் முத்தம் பதித்தான்.

ஒரு ஆணின் ஸ்பரிசத்தில் அவளின் மேனி சிலிர்த்து அடங்கியது.

அவளின் படபடப்பை உணர்ந்த அரவிந்தன், “இதுநாள் வரை இருந்த பயம், கவலை அனைத்தையும் மறந்து நிம்மதியாக தூங்கு” என்று சொல்ல அவளும் சரியென்று தலையசைத்து விழிமூடினாள்.

அவனது அரவணைப்பு தந்த பாதுகாப்பில் அவளின் விழிகளை தூக்கம் வந்து தழுவியது. தன் மகளை போலவே அவளும் நிம்மதியாக உறங்குவதை கண்ட அரவிந்தனும் சில வருடங்களுக்கு தன்னை மறந்து நிம்மதியாக உறங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!