Vaanavil – 18

DT0dH5cU8AA1bbP-b62fb2d6

அத்தியாயம் – 18

மறுநாள் காலைப் பொழுது அழகாக விடிந்தது. கிழக்கு வானம் பொன்னிறமாக சிவக்க, உறக்கம் கலைந்து கண்விழித்து பார்த்த மகிழ்வதனிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தன்னை யாரோ இறுக்கியணைத்து உறங்குவதை உணர்ந்தவள் சடாரென்று திரும்பிப் பார்த்தாள். இளஞ்செழியன் நிம்மதியாக உறங்குவதைக் கண்டு அவள் மனம் மெல்ல அமைதியடைந்தது.

நேற்று செண்பகம் பேசிய வார்த்தைகள் ஞாபகம் வரவே, ‘என்னைப் பெத்தவங்க வைத்திருக்கும் அன்பைவிட அதிகமாக வச்சிருக்கும் இவருக்கு என்ன கைமாறு செய்ய போறேன்’ யோசிக்கும் போதே கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு, சட்டென்று எழுந்து கதவைத் திறந்து பார்த்தாள்.

தன்னுடைய அத்தையின் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கவனித்தவளிடம், “இந்த புள்ள குழலுக்கு உடம்பு நெருப்பாக கொதிக்குது கண்ணு. வா ஆஸ்பத்திரிக்கு போலாம்னு சொன்னாலும் காதில் வாங்காம வேலை செய்யறா. நீ வந்து என்னன்னு கேளு தாயி” என்றார் பூரணி.

மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட, தன்னை மறந்து சமையலறைக்கு சென்றாள் மகிழ்வதனி.

தன் கணவனுக்கு காஃபி போட்டுக் கொடுக்கும் வேலையில் அவள் தீவிரமாக ஈடுபட்டிருக்க, “ஏட்டீ உமக்கு உடம்பு சரியில்லன்னு அத்த சொன்னாக… அது உண்மையா?” வேகமாக அவளை நெருங்கினாள்.

அதுவரை இருந்த கவலையை மனதோடு மறைத்துவிட்டு, “சாதாரண காய்ச்சலுக்கு நீனு எதுக்காக இப்ப பதறியடிச்சு ஓடி வரவ” அவள் சமாளிக்க முயற்சிக்க, அதைக் காதிலேயே வாங்காமல் குழலியின் நெற்றியில் கைவைத்து பரிசோதிக்க, அவளது உடல் நெருப்பாக கொதித்தது.

 “நீ இதை ஓரமாக வச்சிட்டுபோய் முதல்ல புடவையை மாத்திட்டு வா. இப்பவே ஹாஸ்பிட்டல் போலாம்” என்ற அண்ணியின் குரல்கேட்டு வேந்தனின் கோபம் அதிகரித்தது.

 “ஒரு காஃபி கேட்டு எந்நேரம் ஆச்சு. இன்னும் உன்னால அதைக்கூட போடா முடியல” கணவனது குரல்கேட்டு காஃபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு விரைந்தாள் குழலி.

“ச்சே காலங்காத்தால எவம்லே இந்த கத்து கத்தறது?” செழியன் எழுந்து வெளியே வர, மகிழ்வதனி தன் தோழியைப் பின்தொடர்ந்து ஹாலுக்கு வந்தாள். செண்பகம் பேரனை முறைத்தபடி வீட்டின் வாசலில் அமர்ந்திருக்க, அத்தையின் குணமறிந்த பூரணி கையைப் பிசைந்தபடி சமையலறையின் அருகே நின்றிருந்தார்.

அவள் வருவதைக் கவனிக்காமல் வேந்தன் காலை குறுக்கே நீட்டிட, சட்டென்று சுதாரித்து நின்றவளின் கையில் இருந்த காஃபி தவறி அவன் மீது விழுந்துவிட, சடாரென்று இருக்கையைவிட்டு எழுந்தவனின் கரங்கள் அவளது கன்னத்தைப் பதம் பார்த்தது.

மற்றவர்களின் கவனம் தன்மீது படிவத்தை உணர்ந்து கார்குழலி கலக்கிய விழிகளோடு விளக்கம் சொல்ல நினைத்து நிமிர, “ஏ கொதிக்கும் காஃபியை என்மீது ஊத்தணும்னு எத்தனை நாளாக பிளான் போட்டே” அவளிடம் எரிந்து விழுந்தான் வேந்தன்.

“கட்டிய மனைவியைக் கை நீட்டி அடிக்கும் உரிமையை உமக்கு எவன்லே கொடுத்தது?” செழியன் தம்பியை அதட்டியபடி அருகே செல்ல, அதற்குள் ஓடிவந்த வதனி குழலியை சற்று விலகி நிற்க வைத்தாள்.

கார்குழலி உதட்டைக் கடித்து தலைக்குனிய, “என்னவே ஆம்பள என்ற திமிரை காட்டுறீயா? நீனு வேணும்னு காலைக் குறுக்கே விட்டதும் இல்லாமல், அதை சொல்லி கை நீட்டுதியா?” என்றவளின் பார்வையில் கனல்போல ஜொலித்தது.

அவளை தன் அண்ணி என்று நினைக்காமல், “இங்கே பாருங்க! அவ என் மனைவி, அவளை அடிக்க மட்டும் இல்ல அணுஅணுவாக சித்ரவதை கூட செய்வேன்… அதைக் கேட்க நீங்க யாரு?” அவளிடம் எகிறினான்.

அந்தநேரம் தர்மசீலன் பின்வாசலின் வழியாக வீட்டிற்குள் நுழைய, “உங்க அண்ணனுக்கு மனைவி. இந்த வீட்டுக்கு மூத்த மருமகள்” என இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“அவளுக்கு யாருமில்லன்னு எவம்லே சொன்னது? அவளுக்கு நான் இருக்கேன், என்னைக்குமே இருப்பேன். இன்னும் சொல்ல போன உன்னைய விட எனக்கு உரிமை ஜாஸ்திலே… இனி அவளைக் கை நீட்டியதைப் பார்த்தேன்னு வை, அடுத்த மொற நீட்ட கை இருக்காது” மற்றவர்களைப் பொருட்டாக மதிக்காமல், வேந்தனை விரல்நீட்டி எச்சரித்தாள்.

வீடு கலவர பூமியாக மாறி இருப்பதைக் கண்ட பெரியவர் அமைதியாக நின்று வேடிக்கைப் பார்க்க, “அடியே சிறுக்கி மவளே! எம் பேரனின் கையை உடைக்கும் அளவுக்கு வந்திட்டியா? இன்னொரு மொற உம குரல் ஒசந்தது, கோழி கழுத்தை திருகுவதுபோல திருகிப் போடுவேன் சாக்கிரதை!” செண்பகம் கடைசி பேரனுக்கு சாதகமாகப் பேச, அதுவரை இழுத்துப் பிடித்திருந்த பொறுமைக் காற்றில் பறந்தது.

தன் முன்னே நின்றிருந்த கொழுந்தனை முறைத்து, “பெத்தவ இறந்த உண்மையைக் கூட மறச்சிட்டு, உங்க கண்ணாலத்தை நடத்த காரணம் உன் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்குதான். நீனு எதையோ மனசில வச்சிகிட்டு, இவள நோகடிச்ச உன்னைய சும்மா விடமாட்டேன் அம்பூட்டுதான்” என்றதோடு தன் தோழியின் பக்கம் திரும்பினாள் மகிழ்வதனி.

“ஏட்டி தப்பு செய்த அவனே நெஞ்சை நிமித்திட்டு நிக்குதான், னே எதுக்குவே குற்றவாளி கணக்கா தலைய குனிஞ்சி நிக்கிற? சீக்கிரம் போய் புடவையை மாத்திட்டு வா, ஹாஸ்பிட்டல் போகணும்” அவளை அதட்டி அனுப்பிவிட்டு திரும்ப, செழியன் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

தன் கணவனின் குறும்பு பார்வையைக் கண்டவள் தலையைத் தாழ்த்திகொண்டு அறைக்குள் சென்று மறைய, “பொம்ள பிள்ளயைக் கை நீட்டுவது தப்புடா, இனிமேல் இப்படி செய்யாதே” தம்பியைக் கண்டித்துவிட்டு அறைக்குச் சென்றான்.

இந்த காட்சியைப் பார்த்த செண்பகம், “ஒரே நாளில் என் பேரனை பொட்டிப் பாம்பாய் மாத்தி வச்சிருக்காளே! இவளெல்லாம் உருப்புடவாளா?” வயிற்றெரிச்சலோடு சாபம் கொடுக்க, அதைப் பார்த்து மனம் வருந்திய பூரணி தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

தங்களின் அறைக்குள் நுழைந்த மகிழ்வதனி படுக்கையில் அமர்ந்து, “தாலி என்ற ஒரு மஞ்சள் கையிறை கட்டிவிட்டால், இவங்க ஆட்டி வைக்கும் பொம்மைன்னு நெனைக்காங்க. அத்தனை கஷ்டத்திலும் தலை குனியாதவளை இப்படி நிக்கதியாக நிக்க வைக்கத்தான் கண்ணாலம் முடிச்சு வெச்சேன்?” ஆதங்கத்துடன் தனியாக புலம்பும் மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான்.

அதுவரை இருந்த பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு, “நான் என்னைக்கு உன்னைய பாத்தேனோ அன்னைக்கே என் நிம்மதி எல்லாம் போயிடுச்சுவே. நேற்று நடந்த கலவரம் பத்தாதுன்னு, இன்னைக்கு உம்மோட தம்பி தனியாக ஓரண்டு இழுக்குதான்” கணவனை சாடியவளின் கோபத்தை ரசித்தவன், அவளை இழுத்தணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.

சில்லென்ற உணர்வு உடலெங்கும் ஓடி மறைய, அவளின் கோபம் அனைத்து காற்றில் கரைந்த கற்பூரமாக மாறிப் போனது. தன்னவளிடம் எதிர்ப்பு வரவில்லை என்றவுடன், “நீனு பேசியது சரின்னு புரிந்ததால் தாம்லே நான் அமைதியா இருந்தேன்” இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“குழலி மீது நீனு காட்டும் பாசத்தை இந்த அப்பாவி புருஷன் மேலயும் கொஞ்சம் காட்டுடி!” செல்லமாக அவளின் நெற்றியில் முட்டிவிட்டு, சட்டென்று விலகிய கணவனைக் கேள்வியாக நோக்கினாள்.

“அந்த பிள்ளய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்னு சொல்லி, இங்கன உட்கார்ந்து கதை பேசினால் சரிவருமா? நீனு முதலில் போய் குளிச்சிட்டு வா! உனக்கு தேவையான துணியெல்லாம் அலமாரியில் இருக்கு எடுத்துக்கோ” செழியன் புன்னகையுடன் அறையைவிட்டு வெளியேற, பெருமூச்சுடன் எழுந்து குளிக்கச் சென்றாள்.

அவள் குளித்து உடையை மாற்றிவிட்டு வந்து கண்ணாடி முன்பு நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள். அப்போது அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனின் பார்வை அவளை அளவேடுத்தது. சிவப்பு நிற காட்டன் புடவையில் ஓவியமாக நின்றிருந்த மனையாளின் மீதிருந்து பார்வையை எடுக்க முடியாமல் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

‘அம்மாவோட இறப்பைக் கூட உணராமல், கோமாவில் இருக்கும் அப்பாவை பழைய நிலைக்கு கொண்டு வரணும். அதுவரை இங்கன நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி மூச்சுவிட கூடாது’ சிந்தனையில் தன்னை மறந்து நின்றவளின் இடையோடு கரம்கொடுத்து இறுக்கியணைத்தான்.

அவனின் ஸ்பரிசத்தில் தன்னிலைக்கு மீண்டவள், “இங்கன எம்புட்டு பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, அதெல்லாம் பெருசா நெனைக்காம என்னைய கட்டுப்பிடிச்சுட்டு நிக்குதியலே உம்ம என்னவே செய்ய?” என்றாள் எரிச்சலோடு.

சட்டென்று அவளைத் தன்பக்கம் திருப்பி, “வாழ்க்கை என்றாலே பிரச்சனைதாம்லே… அதுக்காக என்ன செய்ய சொல்லுதே! நமக்காகவும் கொஞ்சம் வாழணும்!” என்றவன் அவளின் கன்னம் தட்டிவிட்டு குளிக்க சென்றான்.

சிறிதுநேரத்தில் அவன் தயாராகி வரவே, கணவனுடன் ஹாலுக்கு வந்த மகிழ்வதனி,“ஏட்டி குழலி! இன்னும் எம்பூட்டு நேரம்லே இப்படியே காத்திருக்கறது? சீக்கிரம் வா” என்று குரல்கொடுக்க, பதுமைபோல அமைதியாக கீழே வந்தாள் கார்குழலி.

“அவளை நீங்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போக வேண்டாம்” செண்பகம் தடுக்க வர, வேந்தன் அவளைப் பார்வையால் எரித்தான்.

அதைக் கண்டு சிந்தனையுடன் தடைபட நின்றவளின் மீது பார்வையைப் பதித்து, “ஏ நான் சொல்லுதைக் கேளுவ… இவிய யாரும் உன்மேல அக்கறை உள்ளவங்க இல்லவே. நீனு இங்கன நல்லா இருந்தாதான், அங்கன உம் தம்பி, தங்கச்சி நிம்மதியா இருப்பாக” அவளது மூளையை சலவை செய்தாள்.

‘தம்பி மற்றும் தங்கைகளுக்காக நான் என்னை கவனிச்சுக்கணும்’ என்ற எண்ணம் தோன்றியதும், “சரி வா போலாம்” என்றவள் யாரையும் கண்டுகொள்ளாமல் அவர்களுடன் வீட்டைவிட்டு வெளியேற, அதுவரை வீட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த செண்பகத்தை, ஒரே நாளில் தோற்கடித்தாள் மகிழ்வதனி.

‘என்னையே தூக்கி கணம் பார்த்த உன்னைய இந்த வீட்டில் வாழ விட மாட்டேன்ல… உன்னையும், என் பேரனையும் பிரிக்கல என்ற பேரு செண்பகம் இல்ல’ மனதிற்குள் வஞ்சம் வளர்க்க, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினார்.

மருத்துவமனைக்குச் சென்று கார்குழலிக்கு ட்ரீட்மெண்ட் முடித்த கையோடு, தன் தந்தையின் நிலையைப் பற்றி விசாரித்துவிட்டு வீடு திரும்பினர். எந்தவிதமான எதிர்மறையான விஷயத்தையும் அவரிடம்  கூற கூடாதென்று டாக்டர் சொன்னதே நினைவில் படமாக ஓடியது.

இந்த ஒருவாரமாக அலைச்சலில் சரியாக தூங்காத கார்குழலி, மற்ற பிரச்சனைகளை மறந்து உறங்கிப் போயிருந்தாள். அவள் தூங்குவதைக் கவனித்த செழியனோ, “பாவம் இந்த புள்ள! என் தம்பியின் கோபத்திற்கு காரணமே இல்லாமல் ஆளாகிட்டு இருக்கு” என்று வருத்தப்பட்டான்.

அதுவரை வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்த வதனியும், “அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியாமல் உங்க தம்பி அவளை சித்ரவதை செய்வது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கு” என்றவளின் பார்வையும் குழலி மீது படிந்து மீண்டது.

சிறிதுநேரம் இருவருக்கும் நடுவே அமைதி நிலவிட, “ஒரு வாரம் வீட்டில் இருந்துட்டு பொறவு கம்பெனியைக் கவனிக்கும் வேலைய பாரு வதனி… நீனு வீட்டில் இருந்தால் பாட்டி வேண்டுமென்றே வம்பிழுத்து உன் நிம்மதியைக் கெடுக்கும்” கணவன் சொன்னது காதில் விழுக, “சரிங்க” என்றாள்.

தன் தோழியின் வாழ்க்கையை நினைத்து ஒருபக்கம் மனசு பரிதவிக்க, “உங்க தம்பி நிசமாவே கோபக்காரா?” என்றபடி கணவனை ஏறிட்டாள்.

சாலையின் மீது கவனம் பதித்திருந்த செழியன், “அவனுக்கு என்னைவிட மணி அண்ணனை ரொம்ப பிடிக்கும். அவரோட இறப்பு அவனை மனசளவில் பாதிச்சிருக்கு. இன்னும் சொல்ல போனா, கார்குழலி தான் தன் அண்ணனோட இறப்புக்கு காரணம் என்ற எண்ணம் தான் அவனை இப்படி ஆட்டி வைக்குது. அது இல்லன்னு புரியும்போது மாறிடுவான்” விளக்கம் கொடுக்க, அவளின் முகம் தெளிந்தது.

இளஞ்செழியன் வீட்டின் முன்பு காரை நிறுத்த, “குழலி எழுந்திருடி! வீடு வந்திடுச்சு” வதனியின் குரல்கேட்டு உறக்கம் களைய, பட்டென்று கண்விழித்தாள்.

“கொஞ்சநாளாவே நல்ல தூக்கம் இல்லபிள்ள. அதுதான் அசந்து தூங்கிட்டேன்” என்றவள் காரின் கதவைத் திறந்துகொண்டு இறங்கியவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள். வேந்தன் மனைவியை பார்வையால் சுட்டெரிக்க, அதைக் கண்டுகொள்ளாமல் மாடிக்குச் சென்றாள்.

தன்னுடைய அத்தைக்கு உதவலாம் என்று வந்தவளைக் கவனித்த செண்பகம், “இந்த சனியன் பிடிச்சவளை அடுக்களைக்குள் விட்டேன்னு தெரிஞ்சிது, உன்னைய என்ன செய்வேன்னு தெரியாது” மருமகளை அதட்டிவிட்டு மற்ற வேலையாட்களை விரட்டி வேலை வாங்க தொடங்க, பூரணி மறுப்பேச்சு பேசாமல் சமையலில் ஈடுபட்டார்.

அன்றைய பொழுது அப்படியே கழிய, “போறவாசல் வாசல் வழிய வீட்டுக்குள் வந்தவளை நம்மோடு சரிக்கு சரி உட்கார வைக்காதே! உமக்கு மருமவ என்றாலும், எனக்கு அவ அறவே ஆகாது சொல்லிட்டேன்” செண்பகம் வார்த்தைகளால் வாட்டி வதைக்க, மீண்டும் தன் கூட்டிற்குள் சென்றார் பூரணி.

பெரிய மகனின் இறப்பிற்கு பிறகு அவர் நொடிந்து போயிருப்பதைக் கண்டு மனம் வருந்திய மகிழ்வதனி, முடிந்தவரை ஒதுங்கியிருக்க முடிவெடுத்தாள். அன்றிரவு அனைவரும் சாப்பிட அமர, ‘இந்நேரத்திற்கு எங்க போனா?’ தன்னவளை காணாமல் பார்வையால் தேடியவனின் மனம் புலம்பியது.

அவனது பார்வையில் இருந்த தவிப்பை உணர்ந்த வேந்தன், “ஆச்சிக்கு அவியல சுத்தமா பிடிக்கல, அதுதான் குழலிட்ட சொல்லி அறையில் கொண்டுபோய் சாப்பாடு கொடுக்க சொன்னேன்” விளக்கம் கொடுத்த தம்பியைப் புரிதலோடு நோக்கினான் தமையன்.

அவனுக்கு கோபம் எல்லாம் குழலி மீதுதானே தவிர, தன் மனைவி வதனி மீது இல்லை என்று உணர்ந்தான். பிள்ளைகளின் ஒற்றுமையைக் கண்ட தாய் மனம் பூரித்துபோக, தன் கணவனிடம் கண்சாடை காட்டினார்.

“கிறுக்கின்னு நினைச்சேன் கைகாரின்னு இப்போதானே புரியுது, கொழுந்தனையும் கைக்குள் போட்டுகிட்டா” பேரன்களின் காதுபடவே பேசினார் செண்பகம்.

“என் தம்பிக்கு அவ அண்ணி. கிட்டத்தட்ட தாய் ஸ்தானம். அதை அவனே புரிஞ்சிகிட்டான். இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு தான் அது புரியவே இல்ல” கையை கழுவிவிட்டு எழுந்து அறைக்குச் செல்ல, அங்கே தோழியிடம் பேசியபடி சாப்பிட்டு கை கழுவினாள் மகிழ்வதனி.

இருவரின் நட்பின் ஆழம் என்னவென்று புரிந்து கொண்டவன், “எனக்கு ஒரு வேலையை மிச்சம் பண்ணிட்டம்மா. நைட் மறக்காமல் மாத்திரை போட்டுட்டு படு” அறிவுரை சொல்ல சரியென்று தலையசைத்த குழலி தட்டை எடுத்துகொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.

“சரி நம்ம தூங்கலாம்” என்று கதவை அடைத்துவிட்டு செழியன் வர, படுக்கையில் சரிந்த மகிழ்வதனி தன்னை மறந்து உறங்கினாள்.

இரவு வெகுநேரம் சென்று அறைக்குள் நுழைய கார்குழலி ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு, ‘அவ்வளவு காய்ச்சலை எப்படி சமாளித்தாளோ தெரியல’ என்ற எண்ணத்துடன் அவளின் அருகே சென்று அமர்ந்து, நெற்றியில் கைவைத்து பார்த்தவனின் மனம் வலித்தது.

வெகுநேரம் அவளைப் பார்த்தபடி உறங்காமல் விழித்திருந்த வேந்தன், விடியலின் போது தன்னையும் அறியாமல் உறங்கிப் போனான்.