Vaanavil – 19

1eaafb4f4592c45fa474c92c341fa8cb-f6f01539

Vaanavil – 19

அத்தியாயம் – 19

பரிமளாவின் இறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகியிருந்த போதும், அந்த துயரில் இருந்து மீள முடியாமல் தவித்தாள் மகிழ்வதனி. மற்றொரு பக்கம் இருகோடுகள் தத்துவம் போல, அடுத்தடுத்து வந்த பிரச்சனையில் சிக்கித் தவித்த மனையாளை அரணாக நின்று காப்பாற்றினான்.

இதற்கிடையே, மேகவேந்தன் – கார்குழலி வாழ்க்கையில் அன்றாடம் ஏதோவொரு பிரச்சனை வந்தவண்ணம் இருக்க, வீடே அமைதி இழந்து காணப்பட்டது. இது எல்லாவற்றிற்கும் நீதான் காரணம் என்று செண்பகம் வதனியைக் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்க, அவளும் அதைப் பெரிதாக நினைக்காமல் கடந்து செல்ல பழகியிருந்தாள்.

துன்பங்கள் இல்லாத வாழ்க்கை எது என்ற எண்ணத்தை மனதில் தேக்கி, தன்னை நம்பி வாழும் குடும்பங்களையும் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற எண்ணமே அவளது மனதை திடப்படுத்தியது.

‘வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் அதற்காக அப்படியே நீர்போல பள்ளம் கண்ட இடத்தில் தேங்கி நிற்க முடியாதே!’ சிந்தனையோடு, மீண்டும் அலுவலகம் செல்ல முடிவெடுத்தாள்.   

தினமும் மருத்துவமனைக்குச் சென்று கோமாவில் இருக்கும் தந்தையிடம் தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களைச் சொல்லிவிட்டு, மீண்டும் அலுவலகம் செல்வது வாடிக்கையாக மாற்றிக் கொண்டாள்.

அன்று வழக்கம்போல தன் கேபினுக்குள் நுழைந்த மகிழ்வதனியிடம், “அக்கா இந்தாங்க என்னோட ரிசைனிங் லெட்டர்” என்றான் சரவணா.

திடீரென்று வந்து வேலையை விடுவதாக சொன்ன தம்பியை ஏறிட்டு, “ஏன் வேலையை விடுறேன்னு சொல்ற?” கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

தன் தமக்கையின் கல்யாணம் வரை தோட்டத்தை அவள் பார்த்துக் கொண்டதாகவும், இனிமேல் அவை அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் கூறினான்.

“உங்கக்கா இனிமேட்டு வயல் வேலையே செய்ய மாட்டேன்னு உமக்கு சத்தியம் செய்து கொடுத்து இருக்காளா?” என்றவுடன், அவனது உதடுகளில் கசந்த புன்னகை தோன்றி மறைந்தது.

“எங்களையே வர வேண்டாம்னு சொல்லிட்டாக வதனிக்கா, அப்புறம் எப்படி அக்காவை இங்கன அனுப்புவாக சொல்லுங்க, அதுதான் இந்த முடிவெடுத்தேன். இன்னும் இரு தங்கச்சிகளைக் கவனிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கு” அவனின் விழிகளிரண்டும் கலங்கிட, சட்டென்று இருக்கையைவிட்டு எழுந்து சென்று அவனது கண்ணீரைத் துடைத்தாள்.

அவனது இந்த பக்குவமான பேச்சு அவளைக் கவர்ந்திட, “எங்க சரவணா சின்ன பையன்னு நினைச்சேன், அது இல்ல நானும் கொஞ்சம் வளர்ந்துட்டேன்னு புரிய வச்சிட்ட” சிரித்த தமக்கையைப் பார்த்து, அவனும் சிரித்தான்.

“நான் அவகிட்ட பேசி இதுக்கொரு முடிவு சொல்லுதேன், அதுவரை இந்த லெட்டருக்கு இங்கன வேலையே இல்ல” அதை கிழித்து குப்பையில் போட்டு, அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

தங்களின் வீட்டில் நடக்கும் பிரச்சனை அனைத்தும் மனத்திரையில் படமாக ஓடிட, ‘அந்த வீட்டின் மருமகள் என்றபோதும், அவளுக்கென்று இருக்கும் பிறந்த வீட்டின் சொந்தத்தை வேண்டாமென்று ஒரேயடியாக ஒதிக்கிவிட முடியாதே! இவளிடம் இது பற்றி பேச வேண்டும்’ மனதிற்குள் முடிவெடுத்தவள், அன்று மதியம் சாப்பிட வீட்டிற்குச் சென்றாள்.

தங்களுடைய நிறுவனம் விஷயமாக இளஞ்செழியன் மற்றும் மேகவேந்தன் இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, தர்மசீலன் – செண்பகம் இருவரும் ஒரு திருமணத்திற்கு வெளியே சென்றிருந்தனர்.  

தன் அத்தையுடன் இணைந்து வீட்டுவேலைகளை முடித்துவிட்டு குளித்துவிட்டு குழலி கீழே வர, ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

சட்டென்று திரும்பி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்து, “மகிழ் மதியம் சாப்பிட வருவதாக தகவல் சொல்லவே இல்லையே?! என்ன விசயமாக இருக்கும்…” தனக்குள் புலம்பியபடி செல்லும் அவளை செழியனும், வேந்தனும் பார்த்தனர்.

“ஏட்டி குழலி எங்க பிள்ள இருக்கே?” வீட்டிற்குள் நுழையும்போதே தன் மனைவியின் பெயரை ஏலம்விட்ட அண்ணியை ஏறிட்ட வேந்தனின் பார்வை சிந்தனையில் சுருங்கியது.

“நான் இங்கன இருக்கேன் வதனி” தோழியின் குரல்கேட்டு அவள் சமையலறைக்குச் சென்றுவிட, இளஞ்செழியன் எதையோ நினைத்து சிரித்தபடி தன் கையில் இருக்கின்ற ஃபைலை மூடி வைத்தான்.

அண்ணனின் சிரிப்பினைக் கவனித்த வேந்தனோ, “எதுக்காக இப்போ சிரிக்கிற?” காரணம் புரியாமல் வினவினான்.

“இங்கன கட்டின புருஷன் உட்கார்ந்து இருக்கேனே, அதைக் கூட கவனிக்காத அளவுக்கு போறாளே… இவளை என்ன செய்து என் வழிக்கு கொண்டு வரதுன்னு நினைச்சதும் சிரிப்பு வந்துடுச்சு” மற்றொரு  ஃபைலை எடுத்து  பார்வையிட, தமையனின் மனக்குமுறலைப் புரிந்துகொண்டான்

“நானும் அண்ணியை ஒரு மாசமாக கவனிச்சிட்டு தாண்ணே இருக்கேன், எந்தநேரமும் குழலிக்கு ஒரு பிரச்சனைன்னா அவியதான் முதலில் வந்து நிக்கிறாவ! என்னிடமே சரிக்கு சரி சண்டை போட்டு, அவளோட தேவையை நிறைவேற்றி வைச்சிடுறாங்க” மனைவியைப் பாதுகாக்கும் அண்ணியின் பாசத்தை உணர்ந்து பேசிய தம்பியை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னதை யோசித்துப் பார்த்தால், அந்த இடத்தில் அவன் கோபபட வேண்டும். கார்குழலி மீது அதிக அக்கறையுடன் இருக்கும் அண்ணியின் மீதான பொறமையுடன் கூறியதுபோல தோன்றியது.

“இன்னும் உனக்கு அந்த பிள்ள மேல கோபம் இருக்குதாவே?” பெரியவன் தூண்டிலை வீச, சட்டென்று சின்னவனின் முகம் கடுகடுத்தது.

மணிவண்ணனின் கம்பீரமாக முகம் மனதினுள் தோன்ற, “அவள என்னால மன்னிக்கவே முடியாதுண்ணே!” என்றவன் எழுந்து விறுவிறுவென்று மாடிக்குச் சென்றான்.

“அந்த பிள்ள மேல அளவு கடந்த அன்பை வளர்த்து வச்சிட்டு வீம்புக்கு வேஷம் போடுதான். தூங்கறவனை எழுப்பலாம், தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்ப முடியுமா?” தனியாக புலம்பியபடி ஃபைலின் மீது பார்வையைப் பதித்தான்.

அதே நேரத்தில் சமையலறைக்குள் நுழைந்த மகிழ்வதனி, “இன்னைக்கு ஆபீசில் என்ன நடந்தது தெரியுமா?” எனத் தொடங்கி நடந்தவற்றைப் படபடவென்று கூறி, கார்குழலி தன் வருத்தத்தை மனதோடு மறைக்க நினைத்தாள்.

தன் தோழியை சமாளிக்கும் விதமாக, “அதுக்காக என்னவே செய்ய சொல்லுதே… இதை ஏற்கனவே வீட்டில் பேசி பாட்டி பெரிய போர்களமே செய்துட்டாக!” சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் கொண்டு போய் வைக்க, அவளின் பின்னோடு சென்றாள்.

“உன் கணவர் என்ன சொன்னாரு?” கார்குழலியை குறுக்கு விசாரணை செய்ய, அதைக் கவனித்தபடி அங்கே வந்தான் மேகவேந்தன்.

 “அவிய மட்டும் புதுசாக என்ன சொல்லிட போறாக! கண்ணாலம் முடிஞ்ச அன்னைக்கே தம்பி, தங்கச்சிகளை பாக்க கூடாதுன்னு சொல்லிட்டாக. பொறவு விவசாயம் செய்ய போவுதேன்னு நான் அடம்பிடிச்சா, கட்டிய தாலியை கலட்டி வச்சிட்டுப் போன்னு சொல்றாவ” என்றவளின் விழிகள் கலங்கிட, மகிழ்வதனி கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

அதுவரை இருந்த உறுதி முற்றிலும் உடைய, “அந்த மவராசன் பால்டாயிலை குடிச்சிட்டு போயிட்டாரு, நானு இங்க நெதமும் ஏதாவது பிரச்சனையில் மாட்டிட்டு முழி பிதுங்குதேன். இந்த நிலைமை இப்படியே நீடிச்ச, சத்தியமா எங்காவது கண்காணாத தேசத்துக்கு சொல்லாமல் கொல்லாமல் ஓடிடுவேன்” கதறி அழும் சத்தம்கேட்டு கீழே வந்த வேந்தன் முகம் கோபத்தில் சிவந்தது.

“அதான் போக முடிவெடுத்துட்ட இல்ல, அப்போ கிளம்பி போக வேண்டியதுதானே… பொறவு என்னத்துக்கு நல்லவள போல இங்கன நின்னு ஏன் நீலிக்கண்ணீர் வடிச்சு வேஷம் போடுதே!” அவளிடம் சண்டைக்கு வர, சட்டென்று எழுந்து வந்தான் இளஞ்செழியன்.

மகிழ்வதனி ஆறுதலாக குழலியின் முதுகை வருடிவிட்டு, “கண்ணாலம் கட்டிட்டா பொண்ணுங்க உங்களுக்கு அடிமை கிடையாது. உங்க கட்டாயத்திற்கு ஆட்டி வைக்க அவ ஒண்ணும் பொம்மை இல்ல” கண்டிப்புடன் கூற, அவனது கோபம் அதிகரித்தது.

தன் அண்ணி இனிமேல் சப்போர்ட் செய்ய விடாமல் தடுக்க நினைத்தவன், “நான் சொல்லும் வேலையை இவ முடிச்சிட்டால், கட்டாயம் அவளோட விருப்படி விவசாயம் செய்ய அனுப்புதேன். அதில் வரும் வருமானத்தை பிறந்த வீட்டுக்கே கொடுக்கலாம்” சட்டென்று தோழியை விலகி நிறுத்தியவளின் பார்வைக் கூர்மைப் பெற்றது.

“நீ சொல்லும் வேலையை செய்ய முடியாமல் போயிட்டால்…” அவள் பாதியில் நிறுத்த, தன் கணவன் என்ன சொல்ல போகிறானோ என நினைத்து குழலியின் மனம் படபடவென்று துடித்தது.

“சிம்பிள் காலம் முழுக்க நான் கொடுக்கும் சித்ரவதைகளை இவ அனுபவிக்கணும். எக்காரணம் கொண்டும் அதில் நீங்க தலையிடக்கூடாது” அழுத்தம் திருத்தமாக கூற, அதைக் கேட்டு செழியனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சிறிதுநேரம் அவன் சொன்ன சவாலை சிந்தித்துப் பார்த்த மகிழ்வதனி, “உன் சவாலை நான் ஏத்துக்கிடுத்தேன்” என்றாள்.

தன்னருகே நின்றிருந்த மனைவியை இழுத்துக்கொண்டு வீட்டில் இருந்த அலுவலக அறைக்குச் சென்று, “இது எங்க கம்பெனி ஃபைல்ஸ்! இதில் என்ரி போட்டு, இந்த மாசம் வருமானம் எவ்வளவு சொல்லு” என்று கூற, சட்டென்று நிமிர்ந்து வதனியைப் பார்த்தாள் குழலி.

அவர்களின் பின்னோடு அலுவலக அறைக்குள் நுழைந்த செழியன், “அந்த பிள்ளக்கு இது எதுவும் தெரியாதுடா! பாவம் படிக்காத பெண்ணிடம் இப்படியொரு வேலையைக் கொடுக்கிற?” தம்பியிடம் சண்டைக்குப் போன கணவனை விழிகளாலேயே வேண்டாமென்று சமிஞ்சை செய்ய, ஏனென்ற காரணம் புரியாதபோதும் மௌனமானான்.

“இதை இவங்க யார் உதவியும் இல்லாமல் நீயே செய்யணும், ஆல்மோஸ்ட் நானே முக்கால்வாசி முடிச்சிட்டேன். மீதி இருக்கும் வேலையை நீ முடிச்சிட்டு சொல்லு” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

அவனுக்கு நன்றாக தெரியும் ஏர் பிடித்தவளுக்கு கம்பியூட்டர் பற்றி என்ன தெரியும் என இழிவாக நினைக்க, “நீ வேலையைத் தொடங்கு, நாங்க எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து இருக்கோம்” என்றவன் அறையைவிட்டு வெளியேற, தன் தோழிக்கு நம்பிக்கைத் தரும் கட்டியணைத்து விலகினாள்.

மூவரும் சென்று ஹாலில் அமர, “என்னங்க நம்ம வீட்டில் புக் இருந்தால் கொஞ்சம் எடுத்து கொடுங்க, நான் கொஞ்சநேரம் படிக்கிறேன்” என்ற மனையாளைக் குறும்புடன் ஏறிட்டான்.

“ஒரு மாசம் ஆகியும் நீ இன்னும் இந்த வீட்டைக் கட்டிடமாகத் தான் பார்க்கிறீயாடி? நம்ம ரூமில் என்னவெல்லாம் இருக்குன்னு நீனு கவனிக்கவே இல்லையா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்த மனையாளை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.

உடனே அவளை அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்றவன், “இன்னைக்கு நல்ல பாரு!” என்று சொல்ல, அவளும் பார்வையைச் சுழற்றினாள்.

அப்போதுதான் அவன் அறையிலிருந்த புகைப்படங்கள் தொடங்கி, அவன்  போட்டியில் ஜெய்த்து வாங்கிய மெடல்கள் மற்றும் லைப்ரரி போல அமைக்கபட்டிருந்த புத்தக அலமாரியைப் பார்த்து அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

தர்மசீலன் – செண்பகம் இருவரும் அமர்ந்திருக்க, அவர்களின் பின்னோடு சத்தியசீலன் – பூரணியின் நடுவே மணிவண்ணன் புன்னகையுடன் நின்றிருக்க, தாத்தா பாட்டியின் மடியில் அமார்ந்திருந்தனர் இளஞ்செழியனும், மேகவேந்தனும்!

இதற்கிடையே தன்னுடைய சின்ன வயதில் ஸ்கூல் மற்றும் கல்லூரியில் போட்டியில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள்அணிவகுத்து நேர்த்தியாக மாட்டபட்டிருக்க, அவற்றை நிதானமாக பார்வையிட்டாள்.

அவளின் பின்னோடு வந்து அணைத்துக் கொண்ட கணவனிடம், “ஒரு போட்டியை விட்டு வைக்கல போல… சூப்பர்” மனம் திறந்து பாராட்டிய மனையாளின் முகத்தில் எதையோ தேடி ஏமாந்து போனான்.

கடைசியாக ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு இருவரும் வெளியே வர, ஒருபக்கம் அறையில் நின்றிருந்த குழலியின் மீது பார்வையைப் படரவிட்டு, “அண்ணி சவாலில் தொத்துதான் போக போறாங்க. அவ இன்னும் மரம் மாதிரி நிக்கிறதை பாருங்க” என்றான் வேந்தன்.

தன் மனைவியின் திறமையைக் கண்முன்னே கண்டவன் என்ற காரணத்தால், “நீ உங்க அண்ணியை சாதாரணமாக எடை போட்டுட்டு இருக்கிற. என் மனைவியின் நம்பிக்கை என்னைக்கும் வீண் போகாதுல” அழுத்தமாக கூறிவிட்டு அடுத்த வேலையைத் தொடர்ந்தான்.

“நீனு அண்ணியை விட்டுக் கொடுக்காமல் பேசறேன்னு புரியுது” என்ற வேந்தனும், அடுத்து நடக்க போகின்ற மீட்டிங்கில் பேச வேண்டியதை குறிப்பெடுக்க தொடங்கினான்.

இரு ஆண்களின் பேச்சும் காதில் விழுகவே ஒரு முடிவுடன் இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்த கார்குழலி சிஸ்டத்தை இயக்கி வேலையைத் தொடர, அதை அதிர்ச்சியுடன் நோக்கினான் மேகவேந்தன்.

அவள் வேலை செய்வதை வியப்புடன் நோக்கிய செழியனோ, “ஏட்டி இந்த குழலி பொண்ணு படிச்ச பிள்ளன்னு நினைக்கேன், அது உண்மையா?” குறும்புடன் விசாரிக்க, அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள் மகிழ்வதனி.

ஒரு மணிநேரம் கழித்து அறையைவிட்டு வெளியே வந்தவள், “என்னங்க வேலையை முடிச்சிட்டேன்!” கணவனிடம் கூற, வேந்தன் வேகமாக எழுந்து சென்று சிஸ்டத்தின் முன்பு அமர்ந்தான்.

கட்சிதமாக வேலையை முடித்த கார்குழலியைக் குழப்பத்துடன் ஏறிட்ட வேந்தனைப் பார்த்து சிரித்தவள், “ஆளைப் பார்த்து எடை போடக்கூடாது பாஸ்!” தோழியின் தோளில் கைபோட்டு நக்கலாக சிரித்தாள் வதனி.

அவன் காரணம் புரியாமல் குழம்பிட, “வயக்காட்டில் ஏர் ஓட்டியவளுக்கு சிஸ்டத்தில் என்ன செய்ய தெரியும்னு தப்புக்கணக்கு போட்டுட்டீய… இப்படி எல்லாம் பிரச்சனையில் இவ சிக்குவான்னு தெரிஞ்சே, அவளை வற்புறுத்தி எம்.பி.ஏ. படிக்க வச்சேன். அவளும் நானும் யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்” உண்மையைப் போட்டு உடைக்க, அவன் அதிர்ச்சியுடன் மனைவியைப் பார்த்தான்.

அந்த நியூஸ் கேட்டதும் டக்கென்று எழுந்து கார்குழலி அருகே வந்த செழியனோ, “சூப்பர் மா! என்ன வேலை செய்தாலும், பெண்களுக்கு படிப்பு முக்கியம். அதை புரிஞ்சிகிட்டு படிச்சிருக்கிற வாழ்த்துக்கள்” அவளது கையைப் பிடித்து குலுக்கினான்.

“தேங்க்ஸ்” என்றவள் தொடர்ந்து, “இதுக்கு எல்லாம் காரணம் வதனிதான். விவசாயமே போதும்னு இருந்த என்னைய கட்டாயப்படுத்தி படிக்க வச்சா… இன்னும் சொல்லப்போனால் புகுந்த வீட்டில் என்னன்னா பிரச்சனை வரும்னு அவ கணித்த அனைத்தும்  இன்னைக்கு உண்மையாகிட்டு இருக்கு” சொல்லும்போது கணவனின் மீது அவளின் பார்வை படிந்து மீண்டது.

“இனி நீ வயலுக்கு போய் வேலை பார்க்கலாம். உன்னை யாராலும் தடுக்க முடியாது. செண்பகம் பாட்டி ஏதாவது பேசினால், உன் புருஷனே பேசி சமாளிச்சு விடுவார்” சந்தோசமாக கூறிய மகிழ்வதனி கணவனுடன் அங்கிருந்து நகர, கார்குழலி சாப்பாடு எடுத்து வைக்க சென்றாள்.

தான் சவாலில் தோற்றத்தை சொல்லிக் காட்டாமல், தன் மனைவியின் வெற்றியை மட்டுமே பறைசாற்றிவிட்டு நகர்ந்த அண்ணியின் மீது அவனுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் குழலியைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோமோ என்ற சந்தேகமும் அவன் நெஞ்சினில் எழுந்தது.

மறுநாளில் இருந்து கார்குழலி விவசாயம் செய்ய கிளம்ப, அதை தடுக்க நினைத்த பாட்டியிடம் விசயத்தைப் பக்குவமாகக் கூறிய அவளை அனுப்பி வைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!