Vaanavil – 20

images - 2020-10-09T133036.288-62e77bda

அத்தியாயம் – 2௦0

அந்த காட்சியை அறையிலிருந்து கவனித்த மகிழ்வதனி மனம் அமைதிபெற, மற்றொரு பக்கம் தந்தையைப் பற்றிய கவலைத் தலை தூக்கியது. அதனால் அலுவலக வேலைகளில் கவனத்தை செலுத்த முடியவில்லை என்று உணர்ந்தவள், அதற்கு மாற்றுவழி என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடி அமர்ந்திருந்தாள்.

காலையில் இருந்து மனையாளின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தை உணர்ந்து, “என்ன மேடம் ஆபீஸ் போகாமல் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க?” கண்ணாடி முன்பு தலைவாரிக் கொண்டிருந்த செழியன் கேட்க, சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“என்னாச்சு?” என்றபடி அவளது அருகே சென்று அமர,

“அம்மாவை மாதிரி அப்பாவும் என்னைய தனியாகத் தவிக்க விட்டுட்டுப் போகிடுவாரோன்னு பயமா இருக்கு” அதைச் சொல்லும்போது, அவளது முகத்தில் இருந்த கலக்கத்தைக் கண்டான்.

தன்னவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, “இங்கே பாரு! உங்க அப்பாவுக்கு எதுவுமே ஆகாதுடி! அவரோட செல்ல மகளுக்காகவே அவர் சீக்கிரமே கோமாவில் இருந்து மீண்டுவிடுவார். அத்துடன், நமக்கு பிறக்கப் போற குழந்தையையும், உன்னை மாதிரி அறிவாக வளர்க்கத்தான் போறாரு!” கண்ணில் கனவுகள் மின்ன கூறிய கணவனை இமைக்காமல் நோக்கினாள்.

அவன் முகத்திற்கு நேராக சொடக்குப் போட, “நீங்க என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இதெல்லாம் நிகழ்ந்து இருக்காது. எங்க அப்பா, அம்மாவுடன் நானும் நிம்மதியாக காலத்தைக் கடத்தி இருப்பேனே… ஒவ்வொரு நாள் விடியும்போது சந்திக்க வேண்டிய பிரச்சனைகளை நினைத்தால் தலையே சுத்துது” என்றாள்.

திடீரென்று வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களை அவள் மனம் ஏற்க மறுப்பதை உணர்ந்து, “எவ்வளவு நாள்தான் மேடம் கற்பனையில் வாழ முடியும்?” செல்லமாக அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

தன்னவளின் முகத்தை இரு கரங்களால் ஏந்தி, “நீ தேவை இல்லாத விஷயத்தை யோசித்து, மனசைப் போட்டு குழப்பி வச்சிருக்கிற வதனி! மத்தவங்க பேச்சைக் கேட்டு கழிவிரக்கத்தால் உன்னை நான் காதலிக்கல, அதே எண்ணத்துடன் உன் கழுத்தில் தாலியும் கட்டவும் இல்ல” தீர்க்கமாக விழிகளைப் பார்த்து சொன்னபோதும், அவளது முகம் தெளிவின்றிக் காணப்பட்டது.

தாயின் இழப்பும், தந்தையின் நிலையும் அவளை நிம்மதியிழக்க வைத்துருப்பது உணர்ந்து, “நீயாக சேர்ந்து வாழலாம்னு சொல்லும் வரை, நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். மூணாவது மனுசன்போல  விலகி நிற்காமல், ஒரு நண்பனாக நினைத்து பேசு வதனி” இதமாகக் கூறி அவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.

ஏனோ அவனது இந்த அணுகுமுறை பிடித்தபோதும், கற்பனைப் பிம்பத்தை விரும்பிய மனது நிதர்சனத்தை ஏற்க மறுத்தது. குறிப்பாக தன் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே, செழியனின் சந்திப்பு தான் என ஆழமாக நம்பினாள்.

அந்தநொடி கற்பனை பிம்பத்தின் மீது வைத்திருந்த காதலின் அளவு அதிகமாக இருக்க, அவனுடைய சுயநலத்திற்காக தன்னைப் பகடைக்காயாக மாற்றி விளையாடுகிறான்.

அத்துடன் பாட்டி பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வர, “நீங்க என்ன விளக்கம் சொன்னாலும், அதை என்னால் ஏத்துக்க முடியாது. ஊரார் பேசிய பேச்சுகளைக் கடந்து வந்தபோது வலிக்கல. ஆனால்…” என்றவள் கண்களில் கண்ணீர் பெருகிட, அதைப் பார்த்து அவனுக்கும் வலித்தது.

அவளது மனதைத் திசை திருப்ப எண்ணி, “இப்போ இருக்கும் குழப்பமான மனநிலையில் தொழிலில் கவனத்தைத் திருப்பினால், அது இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். உனக்கு நம்பகமானவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, கொஞ்சநாள் நிம்மதியாக இருக்க முயற்சி செய்” அறிவுரை சொன்னதோடு விலகிச் சென்றவனை வலியுடன் நோக்கினாள்.

கணவன் சொன்ன விஷயத்தை சிந்தித்த மகிழ்வதனி, ‘இந்த கம்பெனி பொறுப்பை சரவணாவிடம் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் உதயமாக, அவளும் அதற்கான பணிகளில் ஈடுபடத் துவங்கினாள்.

மற்றொரு பக்கம் அறைக்குள் நடைப்பயின்ற வேந்தனின் மனம் முழுவதும் கார்குழலியை மட்டுமே சுற்றி வந்தது. முதல் முதலாக அவளை சந்தித்த  நாளில் தொடங்கி, அடுத்தடுத்து நிகழ்ந்த அனைத்தையும் சிந்தித்துப் பார்த்தான்.

ஏனோ மணிவண்ணன் இறப்பிற்கு கார்குழலி மட்டுமே காரணம் என்ற கருத்தை அவன் மனம் ஏற்க மறுத்தது. தான் தருகின்ற துன்பத்தை மனதார ஏற்றுக்கொண்டு அமைதியாக வலம் வரும் மனையாளின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைத்தது.

அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு, நடுநிலைமையில் நின்று யோசிக்கும்போது ஏதோ தவறாக இருப்பதுபோல தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்ற சிந்தனையுடன் எழுந்தவன், நேராக மணிவண்ணனின் அறையை நோக்கிச் சென்றான்.

தமையனின் இறப்பிற்கு பிறகும், அந்த அறையில் இருந்த பொருட்கள் அப்படியே பராமரிக்கப்பட்டு இருந்தது. தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாகப் படுத்திருந்த தாயைப் பார்த்துவிட்டு நிமிரும்போது, அலைமாரி மேலிருந்த காகிதம் காற்றில் படபடத்தபடி வந்து அவன் காலடியில் விழுந்தது.

சட்டென்று அதைக் குனிந்து கையில் எடுத்துப் பார்க்க, அது ஏதோ கடிதம்போல தோன்றவே அதைத் திறந்து படிக்கத் தொடங்கினான்.

“அன்புள்ள வேந்தனுக்கு,

உன் உயிருக்கு உயிரான அண்ணன் எழுதும் கடைசிக் கடிதம். இந்த கடிதத்தை படிக்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். என்னுடைய முழு பலமும், பலவீனமும் நீ மட்டும்தான் கண்ணா. இளஞ்செழியன் கூட அவனுக்குத் தேவையானதைத் தனித்து செய்வான், ஆனால் நீ மட்டும் சின்ன பையன்போல என்னை மட்டும் சார்ந்து இருப்பாய்.

முதல் முறையாக உன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து, எனக்கு அந்த பெண்ணைக் கட்டி வை அண்ணா என்றாய்.  மற்றவர்கள் என்னைத் தவறாக பேசுவதை, என்றுமே நான் பெரிதாக நினைத்தே இல்லை. பணம் இருப்பவர்களின் மீது கதை கட்டிவிட ஒரு கூட்டமே திரிந்து கொண்டு இருப்பதை உணர்ந்து அமைதியாக இருப்பேன்.

ஆனால் அன்று சூழ்நிலை வேறு விதமான அமைந்துவிட்டது. உன்னைத் திருமணம் செய்ய சம்மதம் சொல்ல வந்த இடமும், சூழ்நிலையும் என்னைத் தவறானவனாகக் காட்டிவிட்டது. அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும் முடியாத நிலையில், எந்தவிதமான தவறும் செய்யாமல் குற்றவாளியாக நின்றேன்.

கடைசியில், அந்த பெண் உன்னைத் திருமணம் செய்ய சம்மதிக்கல. அந்த விஷயத்தை உன்னிடம் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. இதுவரை நீ கேட்டு இல்லன்னு நான் மறுத்ததே இல்லையே!

உனக்கு பிடித்த பெண்ணை நீ திருமணம் செய்யணும், நான் இருக்கும் வரை கார்குழலி சம்மதிக்க மாட்டாள். என்னைப் பொம்பள பொறுக்கியாக நினைப்பவள், உன்னையும் வெறுத்து ஒதுக்குவதை என்னால் ஏத்துக்கொள்ள முடியல.

நான் இறந்துவிட்டால், இப்படியொரு முடிவெடுக்க காரணம் தான் என்ற எண்ணத்தில் அவள் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வாள். நீ விருப்பபட்ட வாழ்க்கையை உனக்கு அமைத்துத் தர எனக்கு வேற வழி தெரியல. அதனால் தான் இப்படியொரு விபரீதமான முடிவை எடுக்கிறேன். யார் தடுத்தாலும், நீ கார்குழலியை மட்டும்தான் கல்யாணம் செய்துக்கணும். நீங்க இருவரும் நீண்டநாள் சந்தோசமாக வாழணும்.  

இப்படிக்கு

அன்பு அண்ணன்

மணிவண்ணன்.

அந்த கடிதத்தை படித்து முடித்ததும், அண்ணன் செய்தது முட்டாள்தனமான விஷயம் என்றே தோன்றியது. இங்கே உட்கார்ந்து பேசினால் தீர்வு கிடைக்காத பிரச்சனைகளே கிடையாது. அதைப் புரிந்துகொள்ளாமல் இப்படியொரு விபரீதமான முடிவை எடுத்ததை நினைத்து அவனுக்கு கோபமாக வந்தது.

‘அன்னைக்கு என்ன நடந்தது என்று ஓரளவுக்குப் புரிந்தாலும், இன்னும் இதில் தெளிவு தேவைப்படுகிறதே’ நெற்றியை வருடி சிந்திக்கும்போது மகிழ்வதனியின் முகம் சட்டென்று மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

அந்த கடிதத்தைக் கையில் எடுத்துகொண்டு நேராக அண்ணியைத் தேடிச் செல்ல, “டாக்டர் நிஜமாவா சொல்றீங்க? என்னால் இதை நம்பவே முடியல. இதோ நான் சீக்கிரம் கிளம்பி வர்றேன்” என பேசியபடி அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர, அறையின் வாசலில் வேந்தன் நிற்க கண்டு கேள்வியாக புருவம் தூக்கினாள்.

அதே சமயம் ஆபீஸ் கிளம்ப தயாராகி வந்த செழியனும் தம்பியை சிந்தனையுடன் நோக்கிட, “அண்ணி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என தயக்கத்துடன் கூற, அவனின் முகத்தை வைத்தே மனதைப் படித்துவிட்டு சரியென்று தலையசைத்தாள்.

அங்கிருந்த சோபாவில் அவனை அமர சொல்லிவிட்டு, “என்ன விஷயம்?” என்றாள் மகிழ்வதனி.

“அண்ணா இறப்பிற்கு முதல்நாள் என்ன நடந்தது அண்ணி?” வேந்தன் நேரடியாக விஷயத்திற்கு வர, தம்பியின் கையில் இருந்த கடிதத்தை வாங்கிப் படித்தான் செழியன்.

அவன் முகம் இறுகிப் போவதைக் கவனித்த மகிழ்வதனி, “கார்குழலி மீது எந்த தவறும் இருக்காதுன்னு நினைக்கிறீங்களா?” என கேட்க, மேலும் கீழுமாக தலையசைத்து அவள் கருத்தை ஏற்றுக்கொள்ள, ஒரு பெருமூச்சுடன் அன்று நடந்ததை சொல்ல தொடங்கினாள்.

 இருவரும் மோட்டர் ரூமில் இருந்து வெளியே வருவதைக் கண்டு திகைத்து விழித்த கார்குழலி, தன் தோழியை சட்டென்று திரும்பிப் பார்த்தாள். இப்படியொரு சூழலில் அவளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என எதிர்பார்க்காத காரணத்தால் அதிர்ச்சியில் சிலநொடி அசைவற்றுப் போனான் மணிவண்ணன்.

“நீ வீடுக்குப் போ” வேல்விழியை அனுப்பிவிட்டு, இரு பெண்களின் அருகே வந்தான்.

அவன் ஏதோ சொல்ல வரும் முன்பே கையமர்த்தி தடுத்த கார்குழலி, “உங்களை ஊரே தவறானவர்னு சொன்னபோது நான் நம்பவே இல்ல. இன்று என் கண்முன்னால் பார்த்துவிட்டேன், போதும் சாமி இதுக்குமேல் நீங்க எந்த விளக்கமும் கொடுத்து நியாயப்படுத்த வேண்டாம்” தன் மனதில் தோன்றிய விஷயத்தை பட்டென்று கூறினாள்.

மகிழ்வதனி அவளைத் தடுக்க வர, “என்னைத் தவறாக புரிஞ்சிகிட்டு பேசறம்மா. நான் அப்படிப்பட்டவன் கிடையாது. அதுமட்டும் இல்லாமல்  என் கடைசி தம்பிக்கு தான் உன்னைய கல்யாணம் செய்து வைக்கத்தான் சம்மதம் கேக்கேன்” என கூற, அவளின் உதடுகளில் கசந்த புன்னகைத் தோன்றி மறைந்தது.

“எந்த நம்பிக்கையில் சம்மதம் சொல்லணும், அண்ணனே இப்படி என்றால், தம்பி மட்டும் ஸ்ரீராமனாக இருப்பானா?” என்ற கேள்வி அவரை வெகுவாகப் பாதிக்க, சட்டென்று முகம் இருள் சூழ்ந்தது.

“பெத்தவங்க இல்லாமல் சின்னத்தில் இருந்து கஷ்டப்பட்டு என் குடும்பத்தைக் கவனிச்சிட்டு இருக்குதேன். இனியும் இப்படியே இருந்துடுதேன், அதனால் கண்ணாலம் பற்றி இனி மகிழ்வதனி அப்பா – அம்மாவிடம் பேசதீய…” கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டு, வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

“ஏட்டி நில்லு” மகிழ்வதனி குரல்கூட அவளின் காதில் விழவில்லை.

அதே நேரம் தன் கண்முன்னே சிலையாகி நின்றிருந்த மணிவண்ணனைப் பார்க்க, “இல்லம்மா அந்த பொண்ணு நினைக்கிற மாதிரி நான் தப்பானவன் கிடையாது. இங்கன என்ன நடந்ததுன்னா…” என தொடங்கி, சற்றுமுன் நடந்த அனைத்தையும் கூறினான்.

அத்துடன், “ஒரு பெண்ணுடன் தப்பு செய்ய நினைக்கிறவன், எதுக்கு உங்களை இங்கன வர சொல்லணும்?” அவளிடம் நியாயம் கேட்க, அவள் பதில் சொல்லாமல் நின்றாள்.

அதற்குள் தன் தோழியைத் தேடி வந்த கார்குழலி, “நீனு இங்கன நின்னுட்டு இருக்கிற, வா பிள்ள கிளம்பலாம்” என்றழைக்க, சட்டென்று சுதாரித்தான்.

இரண்டே எட்டில் அவளை நெருங்கி, “என் தம்பி எதை கேட்டும் இல்லன்னு நான் சொன்னதே இல்லம்மா. இப்போ அவன் உன்னை விரும்புதேன்னு சொல்லுதான். அவனுக்காக சம்மதம் சொல்லு, கட்டாயம் அவன் உன்னை நல்லபடியா பாத்துக்கிடுவான்” நேரடியாக கார்குழலியிடம் கூற, அவளது பார்வை உஷ்ணமாக தோழியின் மீது படிந்தது.

“நான் தப்பானவன்னு தானே அவனை வேணாம்னு சொல்லுதே… உயிரைக் கொடுத்துக் கூட அதை இல்லன்னு நிரூபிக்க என்னால முடியும். அப்படி நான் செய்துட்ட, நீனு என் தம்பியை கண்ணாலம் கட்டிகிடுதியா சொல்லு”  பார்வையிலேயே தான் சொன்னதை செய்வேன் பார்வையால் அவளுக்கு உணர்த்தினான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்குத் தூக்கிவாரிப் போட, “நீங்க என்ன முட்டாளா? உங்கப்பக்கம் நியாயமே இருந்தாலும், அதை சொல்லி புரிய வைக்க இது சரியான சமயம் கிடையாது” இருவருக்கும் இடையே புகுந்து கூறினாள்.

அதில் தன்னிலைக்கு மீண்ட கார்குழலியும், “உங்க தம்பி ஆசையாகக் கேட்டதும் வாங்கித் தருவதற்கு நான் ஒண்ணும் கடையில விக்கும் பொம்மை இல்ல. எனக்கும் உணர்வுகள் இருக்குங்க, என் பக்கம் இருந்து கொஞ்சம் யோசிங்க” இடைவெளிவிட, மணிவண்ணன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.

“ஒவ்வொருத்தரும் உயிரைக் கொடுத்துதான் உண்மையை நிரூபிக்கணும்னு முடிவெடுத்தா, உலகமே சுடுகாடாக போயிடும். உங்களுக்கு உங்க தம்பி முக்கியம், எனக்கு என்ற வாழ்க்கை முக்கியம். நான் கண்ணில் பாத்தது பொய்யாக கூட இருக்கட்டும், அதை யோசிக்க எனக்கு டைம் கொடுங்க” குழப்பத்துடன் கூறிய கார்குழலி இலக்கின்றி வானத்தை வெறிக்க, அந்த பார்வை வெறுமையாக இருந்தது.

இருவரின் மன உணர்வுகளையும் புரிந்துகொண்ட மகிழ்வதனி, “அவ சொல்வதும் சரிதானே! நீங்க இறந்துவிட்டால் எல்லாம் முடிஞ்சிடும்னு நினைப்பா? அதுக்குப் பொறவுதான் உண்மையான நரகம் எப்படின்னு தெரியும். பிளீஸ் அவசரபட்டு எந்த முடிவும் எடுக்கதிய. அவள நான் சம்மதிக்க வைக்குதேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்க” என்றவளின் முன்பு கையை நீட்டினான் நம்பினான்.

அவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “என்னைய பத்தி ஊரே தப்ப சொன்னாலும், அதை நம்பாமல் நடு நிலையில் நின்னு யோசிக்கும் உன்னைய நான் நம்புதேன். இவிய இருவருக்கும் கண்ணாலம் செய்து வைக்குதேன்னு எனக்கு வாக்கு கொடுங்க” என்றான் மணிவண்ணன் தீர்க்கமான பார்வையுடன்.

அவர் சொன்ன வார்த்தைகள் மனதை வெகுவாக பாதிக்க, “நான் அவளை சந்திக்க வைக்குதேன்”  மகிழ்வதனி அவரின் கையில் வைத்து சத்தியம் செய்ய, கார்குழலி குழப்பத்துடன் இருவரையும் நோக்கினாள்.

“நான் உங்களைத் தவறா புரிஞ்சிட்டேன் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. ஏற்கனவே அப்பா – அம்மாவை இழந்து நான் அனுப்பவிக்கும் கஷ்டம் போதும், உங்க பங்குக்கு நீங்களும் என் நிம்மதியை கெடுக்காதீய!” தன் தோழியை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து செல்வதைக் கண்ட மணிவண்ணனுக்கு அந்த நம்பிக்கை வர மறுத்தது.

தான் இல்லாமல் போனாலும், வாக்கு கொடுத்த மகிழ்வதனி அதை நிறைவேற்றுவாள் என்று நம்பினான். அவள் நடந்ததைச் சொல்லி முடிக்க, அறையெங்கும் அமைதி நிலவியது.