VNE51(4)

VNE51(4)

“இல்ல ஷ்யாம்… அது என்னன்னா…” என்று அவள் விளக்க முயல, அவன், அதே புன்னகையோடு,

“வேண்டாம் மஹா… எனக்கு தெரியக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட… அது எனக்கு தெரியாமையே இருக்கட்டும்…” என்று கூறினாலும் அதில் தெறித்த விசாரத்தை அவனால் மறைக்க முடியவில்லை, முயலவுமில்லை.

அவளது செயலால் தான் காயம் பட்டு இருக்கிறோம் என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

அவன் கூறியதையே நினைத்துக் கொண்டு சங்கீதத்தில் அவனது முகத்தை தன்னையும் மீறி ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தவளை கலைத்தது சுற்றியிருந்தவர்களின் ஆரவாரம், டிஜேவின் தெறிக்கும் இசையை மீறி! சிம்மாசனம் போன்ற ஆசனத்தில் இருவருமாக அமர்ந்திருக்க, கடற்காற்று முகத்தை மோதியது. கொண்டாட்டம் தூள் பறந்து கொண்டிருந்தது.

“மஹாக்கா… ஒரு பாட்டு பாடு…” வைஷாலி கொளுத்திப் போட,

“ஆமாக்கா மாமாவுக்கு பிடிச்ச பாட்டு பாடு…” என்றாள் இன்னொரு கசின், யாமினி.

“எஸ்… பாடு…” என்று அனைவரும் சேர்ந்து கொண்டு கத்த, வைஷாலி காம்பியரிங் செய்து கொண்டிருந்த பெண்ணின் கைகளிலிருந்து மைக்கை பிடிங்கிக் கொண்டு வந்து மஹாவின் கையில் கொடுத்தாள்.

மஹாவின் வகுப்புத் தோழன், “மாமா… உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்க…” என்று கத்த,

“ஆமா சொல்லுங்க…” என்று மீதமிருக்கும் இளைய பட்டாளமும் கத்தியது.

சிரிப்போடு மைக்கை கையில் வாங்கியவன், “மதுரமே ஓகே வா?” என்று சுற்றியிருந்தவர்களை பார்த்து கேட்க, நண்பர்கள் பட்டாளமும் கசின்ஸ் பட்டாளமும், “ஓஓஹோஓஓஓ….” என்று கத்தியது.

அவனாக பாட்டு பாட சொன்னால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் அவளிடம் எதுவும் தேறாது ஆனால் இப்போது என்ன செய்ய போகிறாய்? என்ற குறும்பான கேள்வியோடு அவளை பார்த்து,

“என்ன மேடம் ஓகே வா?” என்று மைக்கில் கேட்க, அவனை கீழ்பார்வையாக முறைத்தாள்.

“ஏன் தெலுங்கு தேறாதா?” என்று அவளை பார்த்து கிண்டலாக கேள்வி கேட்டவன், “பசங்களா இந்த பொண்ணுக்கு தெலுங்கு தெரியாதாம்…” என்று சுற்றியிருந்த கசின்சை பார்த்து போட்டுக் கொடுக்க,

“அண்ணா… தெலுங்கே தெரியலைன்னா எப்படி குடும்பம் நடத்துவீங்க? சோ பொண்ணு ரிஜக்டட்…” ஷ்யாமுடைய கசின் ஒருவன் தெலுங்கில் கொளுத்திப் போட,

“ஏன்? மாமாவுக்கு தான் தமிழ் நல்லா தெரியும்ல… அப்புறம் எதுக்கு தெலுங்கு?” வைஷாலி விடுவேனா என்று களமிறங்க,

“புருஷனோட லாங்குவேஜ் கூட தெரியாம ஒரு கல்யாணப் பொண்ணா?” என்று அவனும் சரிக்கு சரியாக நிற்க,

“லாங்குவேஜ் தெரிஞ்சாத்தான் லவ் பண்ணனுமா? அப்படீன்னா எங்களுக்கு உங்க மாப்பிள்ளை வேண்டாம்…” என்று இந்த பக்கமாக விளையாட்டுக்கு வம்புக்கு நிற்க,

“அக்கா பாடிடு…. இல்லைன்னா இதை சாக்கா வெச்சே மாமாவ வானப்ரஸ்தம் வாங்க வெச்சுடுவாங்க போல இருக்கே…” கூட்டத்தில் அவனை கவனித்தபடி வைஷாலி குறும்பாக கூற,

“ஓகே ஓகே… அண்ணி இப்ப பாட போறாங்க… சைலன்ஸ்…” என்றவன், அனைவரையும் அமைதிபடுத்தினான், சிரித்துக் கொண்டே!

அனைத்தையும் கார்த்திக்கும் பிருந்தாவும் பார்த்து சிரித்தபடி இருந்தனர். ஒருவரை ஒருவர் கண்களால் மென்று தின்றபடி!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த அழகான லெஹாங்காவில் தேவதையாக ஷ்யாம் அருகில் அமர்ந்திருந்தவள், மைக்கை வாங்கி, குரலை செருமிக் கொண்டாள்.

ஷ்யாமை மேல் பார்வையாக பார்த்தவள், மதுரமே பாடலின் ஹம்மிங்கை ஆரம்பிக்க, கூட்டம் மொத்தமும் நிசப்தமானது! டிஜே அந்த பாடலின் கரோகேவை ஒலிக்க விட, ஆர்பாட்டமாக ஆரம்பித்த பாடல், அமைதியான நதியாக தவழ ஆரம்பித்தது.

மதுரமே ஈக்ஷணமே ஓ செல்லி

மதுரமே ஈக்ஷணமே

மதுரமே வீக்ஷணமே ஓ செல்லி

மதுரமே வீக்ஷணமே

மதுரமே லாலசையே

மதுரம் லாலநயே

மதுரமே லாஹிரிலே

மதுரம் லாலிதமே

மதுபவனம் வீச்சி மதுபவனம் வீச்சி

பருவமே மைமரசிந்திலே….

அவள் புறம் மொத்தமாக திரும்பி அமர்ந்தவன், அவளது குரலோடு, அவளையும் ரசிக்க ஆரம்பித்து, தலகுப்பாவில் அவள் பாடலை கேட்டபோது இருந்த மனநிலைக்கு அப்போது சென்றிருந்தான். பாடிக்கொண்டே அவன் புறம் திரும்பியவள், காந்தமென ஈர்த்த அவனது விழிகளில் தொலைந்து போனாள். அதன் பின் வேறு எங்கேயும் அவளும் பார்க்கவில்லை, அவனும் பார்க்கவில்லை. அவளது குரலில் கரைந்து உருகி மயங்கி கண் மூடினான், சுற்றி இருந்தவர்களையும் மறந்து!

அவனது அந்த மயக்கம் அடுத்த நாள் வரைக்குமே நீடிக்க, வானகரம் ஸ்ரீவாரி விஐபிகளின் கூட்டத்தால் திணறியது. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று சிவப்பு சைரன் வைத்த கார்களின் அணிவகுப்பு ஒருபுறம் என்றால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படத் துரையின் முக்கியஸ்தர்கள், நடிகர்கள் என களை கட்டியது.

சேனல்களின் முற்றுகை, போலீஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் செக்கியுரிட்டி அதிகாரிகளின் பாதுகாப்பு என மண்டபம் திணறியது.

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

சிவப்பு நிற காஞ்சிப் பட்டில், முழு அலங்கார பூஷிதையாக அருகே வந்தமர்ந்த மகாவை திரும்பிப் பார்த்தான். திருமண மனையில் இருவருமாக அமர்ந்து இருக்க, ஒரு பக்கம் சமுதாய பெரியவர்கள் இருவர் அவர்களது சமுதாய வழக்கப்படி செய்முறைகளை செய்ய, உடனிருந்த குருக்கள், மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.

நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவள் பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருப்பது வெளிப்படையாக தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரை வேறு!

மெல்லிய புன்னகையோடு கங்கணம் கட்டியிருந்த கைகளால் அவளது கையை பற்றியவன், “ரிலாக்ஸ் மஹா…” என்று மென்மையாக கூற, நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர்!

இனி இது ஒருவழி பாதை!

தைரியமாக அந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்தாயிற்று… இனி திரும்பவே முடியாது… நல்லதோ கெட்டதோ, அது இனி இவனுடன் மட்டும் தான் என்று எண்ணும் போதே வயிற்றில் பயப்பந்து உருண்டது. அவளது பயம் கண்களில் தெரிய, அவளது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

இனி வாழ்க்கை எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது… இவனுக்கு தான் சலிக்காமல் இருப்போமா என்றும் சொல்ல முடியாது… பழைய வாழ்க்கையின் எச்சங்கள் மீண்டுமாய் பூதாகரமாகுமா? தெரியாது… இப்போதைக்கு பாதை தெரிகிறது… பயணம் இவனுடன்… கடைசி வரை பயணிக்க முடியுமா என்பதை சொல்ல முடியாத நிலை தான்… ஆனாலும் பயணத்தை துவக்கியாக வேண்டும்.

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவள் பாடிய திருப்பாவை, நினைவுக்கு வந்தது. ஏழ் பிறவிக்கும் பற்றாவானா? மெல்லிய புன்னகை… கசப்பாக மலர்ந்தாள்… தனக்கு மட்டுமா என்று நினைத்துக் கொண்டு!

“அண்ணா… அப்புறமா உங்க ரொமான்ஸ கண்டினியு பண்ணுங்க… இப்போதைக்கு கொஞ்சம் தாலியை மட்டும் கட்டுங்க…” பிருந்தா கிண்டலாக கூற, சுய உணர்வுக்கு வந்தவன், சிரித்துக் கொண்டே அவளது கையை விட்டான்.

“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்ற யாரோ சப்தமாக கூற, அவனிடம் இரு பெற்றோர்களும் கொடுத்த தாலியை கையில் ஏந்தினான், கண்களை மூடி மனதார, ‘இனி ஏழு பிறவிக்கும் பிரிவென்பதே கூடாது…’ என்று நினைத்துக் கொண்டு!

அவனது கண்களிலும் மெல்லிய கண்ணீர் படலம்… எத்தனை இடர்களை கடந்து வந்து, திருமணத்தில் இணையும் இந்த தருணம், அவனுக்கும் உணர்ச்சி பூர்வமாய்!

மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

அவளது கழுத்தில் பொன் தாலியை கட்டியவன், அவளது முகத்தைப் பார்த்தான். அவளும் அவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள், கண்களில் கண்ணீர்! கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல தோன்றியது… தாங்கள் இருப்பது ஆயிரம் பேர் முன்னிலையில் என்பதை நினைவுக்கு கொண்டு வந்தவன், அவளது கண்களிலிருந்த கண்ணீரை சுண்டி விட்டான்.

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்
விண்ணை மேகம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
உனை நான் பிரியேனே!

சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சந்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்
உனை நான் பிரியேனே!

 

 

Leave a Reply

error: Content is protected !!