VVO-22

VVO-22

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 22

 

அலைபேசியை எடுத்து சைலண்ட் மோடில் போட்டவன், சற்று நேரம் அதனையே கையில் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான்.  மொபைல் ஹோம் ஸ்கீரின் வால்பேப்பேரில் அதிதீயும், முகிலும் இருந்தனர். அதனைச் சற்றுநேரம் பார்த்தவன், டேபிளின்மீது வைத்துவிட்டு, ரம்யாவை நோக்கினான்.

நந்தாவிற்குள் இருந்த மனம் விழிப்போடு தன்னை மீட்டுக் கொள்ள முயன்றது.

சாமான்யனாக அதுவரை எதிரில் இருந்தவளின் பேச்சைக் கேட்டு, குதூகலித்து, சந்தோசித்து, ஆர்ப்பரிக்கும் உள்ளத்தோடு ஆழ்மனதிற்குள் ஆழ்ந்து போயிருந்தவன், தற்போது குடும்பஸ்தனாக நடப்பிற்கு தன்னை மீட்டு வந்தான்.

எதிர்பார்த்திராத சில நிகழ்வுகள் நம்மை எங்கெங்கோ கொண்டு செல்லும் என்பதுவும் அவனுக்குப் புரிந்தது. எதிர்கொள்ளும் விசயம் துன்பமாக இருந்தாலும் சரி, இன்பமாக இருந்தாலும் சரி.

சில நிதர்சனங்களை தனது சிந்தனைக்குள் ஓடவிட்டான்.  அலசினான்.

அதிதீயே அனைத்தும் என்றிருந்தவனை சற்றே அசைத்துப் பார்த்த, கடந்துபோன நிமிடங்கள் அவனைக் கேலி செய்து சிரித்தது.

யோசித்தபோது, தான் சித்தனோ, புத்தனோ அல்லவே! என்பதும் அறிவுக்கு விளங்கியது!

சமாதானம் செய்து கொண்டான். அது சாக்கு என்பதும் புரிந்தே இருந்தது!

அதிதீயின் இடம் தனக்குள் எத்தகையது என்பதை யோசித்தவனுக்கு, அதற்கான விடையும் கிடைத்தது.

வானம் எல்லையற்றது.  பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திற்கும் அது சொந்தம்.  இரவு பகல் என மாறிமாறி வந்தாலும் அதன் மூலநிலை மாறுவதில்லை. சூரியனின் தயவினால் அது பலவண்ண உடை தரித்தாலும் நிறந்தரமல்லவே! அவையனைத்தும் பிறரால் வழங்கப்படும் அதன் அங்கீகாரம்!

அதுபோல, தனது வாழ்வின் வானம் அதிதீ.

அதிதீ எனும் வானம் தந்த மாற்றமே தனது இன்றைய நிலை என்பதையும் நினைவு கூர்ந்தான்.

காலங்கள் மாறினாலும், செம்மையாக அவளோடு ஒருமித்து, இறுதிவரை இணக்கமாக வாழ்வதே தனக்கு விதிக்கப்பட்டது என்பதும் தெளிவாகப் புரிந்தது.

அந்த வானத்தை மையமாகக் கொண்டு தான் இயங்கினால், தனது வளர்ச்சி இன்னும் அற்புதமாக அமையும் என்கிற பூரண நம்பிக்கை எப்பொழுதுமே இருந்தது.

தற்போதும் அதில் மாற்றுக் கருத்திற்கு எதுவுமில்லை என ஆணித்தரமாக நம்பினான்.

ஆனால் தனக்கு முன் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்…! ரம்யாவை ஒரு கணம் யோசிக்க! இது கலைந்து போகும் மேகம்!

கருமை படர்ந்த நீர்த் துளிகளை உள்ளடக்கிய மேகமானாலும் சரி, வெண்மையான எதையும் தனக்குள் வைத்துக் கொள்ளாத மேகமானாலும், பூமிக்கும் அதற்கான பந்தம் என்னவோ சில காலம் மட்டும்.

இதிலிருந்து வெளிவரும் நீர்த்துளி தந்த மாற்றங்களை தான் ஏற்கனவே உணர்ந்தாகிவிட்டது.

அதற்குமேல் அதனால் தன்னை துளிர்க்கச் செய்யவே, மாற்றியமைக்கவோ இயலாது என்பதும் விளங்கியது.

இதுபோல பாசிங் கிளவுட்ஸ் இன்னும் வரலாம்.  ஆனால் அவை வந்து சென்றதற்கான தடயங்கள் தன்னிடம் நிரந்தரமாக இருக்காது என்பதையும் உணர்ந்தான்.

அதனால் தனக்குள் எழுந்த தடுமாற்றங்கள் இயல்பே!

வெளியில் போகும் இடங்களில் ஏதேச்சையாக சந்திக்கும் பெண்களைக் காணும்போது கடப்பதுபோல, ரம்யாவை இனி இயல்பாகக் கடக்க இயலாது.

ரம்யா நிச்சயமாக தனக்குள் சபலத்தை உண்டு செய்யவில்லை.  ஆனால் வார்த்தைகளைக் கொட்டி சலனப்படுத்தி, சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தாள்.

தானறியாது செய்த செயலின் விளைவாய், எதிர்பார்ப்போடு எந்த தயக்கமுமின்றி முன்னே அமர்ந்திருக்கிறாள்.

அதற்காக அவளுக்கு தன்னாலான நியாயம் செய்ய இயலாது.  அது மனுதர்மமில்லை.

இடையிடையே தனக்குள் கேட்ட அசரீரி குரல் தற்போதும் நந்தாவை எச்சரித்தவாறே இருந்தது.

விரைவில் அவளை அங்கிருந்து அப்புறப்படுத்திவிடு என்று!

விழிப்புநிலையில் இருந்தபோதும், இடையிடையே எழும் சந்தோச உணர்வலைகளையும் உணர்ந்தான்.

அது ஏனென்றும் புரிந்தது.  அது தான் ஒரு ஆண்மகன் என்பதால் உண்டாகும் மனநிலை.  அதனால் அதனை ஒதுக்கி பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவன், நடப்பிற்கு வந்தான்.

தள்ளிப்போடக்கூடிய விசயமல்ல என்பதும் புரிந்தது.

ஆகையினால் இன்றே இதற்கு தீர்வு கண்டுவிட எண்ணி, எத்தனை நேரமானாலும் சரி பேசிவிடலாம் எனத் துவங்கினான்.

“அதிதீயைத் தெரியுமா உங்களுக்கு?”, என்ற நந்தாவின் கேள்விக்கு தெரியும் என ஒப்புக் கொண்டாள் ரம்யா.

சில கேள்விகளை முன்வைத்தான்.

“அப்ப… எல்லாம் தெரிஞ்சேதான் என்னைப் பாக்க வந்துருக்கீங்க?”

“ம்”, என தலையை அசைத்தாள்.

“அப்ப அதிதீ, என்னோட மகன்… அவங்க நிலை!”

“அவங்களை உங்களால விட்டுக் கொடுக்க முடியாதுன்னு எனக்கும் தெரியும்.  அது உங்க விருப்பம்போல என்ன வேணா செய்துக்கலாம்!”, என தோள் குலுக்கி சாதாரணமாகச் சொன்னவளை, ‘இப்டியும் பொண்ணு இருக்குமா’, என்பதுபோல பார்த்தவனின் பார்வையை பெண் உணர்ந்து கொள்ளவில்லை.

கேள்விகள் தொடர்ந்தன.  அங்கிருந்து அனைத்திற்கும் பதிலும் சளைக்காமல் வந்தது.

“இதேபோல இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ ஆனபின்ன, வேற யாராவது ஐ மீன்… இப்ப நீங்க வந்து கேட்ட மாதிரி… என்னை அப்ரோச் பண்ணா?”, என நந்தா வினவ, அதை எதிர்பார்த்திராதவள்

“அது எப்படி?”, என திகைப்போடு ஆரம்பித்து, தனது செயல் புரிய அதற்குமேல் என்ன பேசலாம் என தனக்குள் முட்டி முயன்று

“அதையெல்லாம் எங்களால அக்சப்ட் பண்ண முடியாது!”, என அதிதீக்கும் சேர்த்தே பதில் சொன்னவளை நோக்கிச் கோணல் சிரிப்பொன்றை உதிர்த்தான் நந்தா.

“அது என்னங்க நியாயம்!  இப்ப அதிதீ அக்சப்ட் பண்ணனும்னுகூட நீங்க யோசிக்கல! நீங்களா எல்லா முடிவும் எடுத்துட்டு வந்து பேசறீங்க!  அடுத்து அதேபோலன்னு நான் கேட்டா.. மறுத்துப் பேசுறீங்க.  நான் அந்த விசயத்தை உங்க நாலேட்ஜ்கே கொண்டு வராம என்னோட ஒப்பீனியன்ல அந்த நீயூ ஒன்ட்ட,, சரினு சொல்லிட்டா”, என்றவனை

“அப்டியொரு நிலை நிச்சயமா வரவிடமாட்டோம்”, என தீர்க்கமாக உரைத்தவளை

“அப்ப இந்த நிலை வர அதிதீதான் காரணம்னு சொல்றீங்களா?”

“இல்ல… அப்டியெப்டி சொல்ல முடியும்”, என்றவளை

“சரி.  நீங்க இப்ப வந்து இப்டிக் கேட்டதை தெரிஞ்சு அதிதீ எதாவது ரியாக்ட் பண்ணுவால்ல.  அப்ப என்ன பண்ணுவீங்க?”

“நீங்க சரினு சொல்லிட்டா, நம்மளை யாரு வந்து என்ன பேச முடியும்!”, என திமிராகப் பதில் கூறினாள்.

“இதுக்கு உங்க பேரண்ட்ஸ் ஒத்துப்பாங்களா?”

“கண்டிப்பா!  நான் எது கேட்டாலும் மறுக்க மாட்டாங்க!”, உறுதியாகக் கூறினாள் ரம்யா. இதுபோல இன்னும் கேள்விகள் நீள, பதிலும் எந்த நெருடலும் இன்றிக் கூறினாள்.

ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தவள், தற்போது நல்ல முடிவு வரும் என்கிற நம்பிக்கையோடு ரம்யா இருந்தாள்.

வேலை பார்ப்பது முதல், அவளது படிப்பு அனைத்தையும் கூறியிருந்தாலும், அதில் எழுந்த சில சந்தேகங்களைக் கேட்டறிந்து கொண்டான்.

அனைத்தையும் கேட்டு சற்று நேரம் அமைதி காத்தவன், “ஓரளவுக்கு எங்களைத் தெரிஞ்சேதான் இங்க வந்துருக்கீங்க. இப்டிக் கேட்டது, உங்களுக்கு சரினுபடுதுங்கறதும், நான் கேட்டதுக்கு எல்லாம் நீங்க சொன்ன பதிலை வச்சிப் பாக்கும்போதும், இதைப் பத்தி நல்லா யோசிச்சு,  ஒரு முடிவோடதான் வந்துருக்கீங்கனு எனக்கும் புரியுது.

இதுல இன்னொரு விசயமும் நான் சொல்லித்தான் ஆகணும்.  ஆம்பிளைதான.. நாமளே வாலண்டியரா போயி கேக்கும்போது மறுக்கவா போறான் அப்டினு ஆணித்தரமான நம்பிக்கையோட வந்திருக்கீங்க!..”

இடையில் மறுத்துப் பேசிட வந்தவளை இடைமறித்து

“….நீங்க பேசும்போது நான் குறுக்க வந்து பேசாம எப்டி அமைதியா கேட்டேனோ, அதேமாதிரி இப்ப நான் பேசுறத கேளுங்க முதல்ல…!” என திடக்குரலில் கூறியவன்

“நீங்க வளர்ந்த விதம் எப்டி வேணா இருந்திட்டுப் போகட்டும்!

ஆனா, எனக்கு உங்களை இங்க உக்கார வச்சுப் பேசக்கூட பிரியம் இல்லை!

அப்ப ஏண்டா இவ்ளோ நேரம் நல்லவன் வேசம் கட்டுனனு நீங்க நினைச்சாலும் சரி! இத்தனை கேள்வி எதுக்குக் கேட்டனு நீங்க யோசிச்சாலும் சரி…! அதெல்லாம் கேட்டாதான் நல்ல ஒரு முடிவுக்கு நான் வரமுடியுங்கறதுக்காக கேட்டேன். உங்க நோக்கம் உங்களுக்கு எப்டி இருந்தாலும், அதப்பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்ல!

ரோட்டுல ஒரு இடத்தில நின்னு கண்ணுக்கு தெரியறதை, தனக்கு சந்தோசம் தரக்கூடியதை, தனக்கு சொந்தமானதைப் பாக்கறதுக்குக்கூட இனி யோசிச்சு செய்யணும்னு, நீங்க பேசினதை வச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன்!

வயசு வித்தியாசம் இல்லாம கண்டதும் எப்டி ஒரு முடிவுக்கு வறீங்கனு கேட்டா, ராமனையும், டெண்டுல்கரையும் எக்சாம்பிளா சொல்றீங்க!

சில விசயங்கள் உங்ககிட்ட என்னால ஃபிராங்கா பேச முடியாது.  அதுனால அந்த டாபிக் இங்க எடுக்க விரும்பல” என்றவன்,

“உங்களுக்காக என்னால எந்த உதவியும் இந்த விசயத்துல செய்ய முடியாது. ஆனா நீங்க எனக்கு பெரிய உதவி பண்ணணும்”, என நிறுத்தியவன்

“இன்னொரு முறை இதைப்பத்தி, மேற்கொண்டு பேசும் ஒரு எண்ணத்தோடயோ, இல்லை சும்மாகூட இந்தப் பக்கம் வந்திர வேணாம்.  இதுவே உங்களை நான் பாக்கறது முதலும், கடைசியாவும் இருக்கட்டும்!”, என்றதும்

இந்த முடிவை எதிர்பார்த்திராதவள், “கன்சிடர் பண்ணுங்க நந்தா!  உங்களை உங்க மிஸ்ஸஸ்ஸை விட நான் நல்லா பாத்துப்பேன்!”, என்றிட

“ஷட்அப்…! எங்களைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”, என்கிற நந்தாவின் கேள்வியில் இருந்த அன்னியோன்யத்தோட கலந்த திட வார்த்தை ரம்யாவை வெறுப்புக்குள்ளாக்கியது.

“ம்ஹ்ம்…பாத்துக்க ஆள் வேணுனு டெய்லி பேப்பர்ல ஆட் குடுக்கறாங்க!  அதுல எதாவது தேறுதானு போயிப் பாருங்க!  முதல்ல இங்கேயிருந்து கிளம்புங்க!”, என கையை கதவை நோக்கிக் காட்டினான்.

இத்தனை நேரம் தன்மையாக தன்னிடம் பேசியவன், சட்டென மாறியது! ரம்யா உண்மையில் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.

ஏமாற்றம் என்பதைவிட, என்னை எப்படி வேண்டாம் என்பான் என்கிற உயர்வு மனப்பான்மை ரம்யாவிற்கு வந்திட, எழுந்து நின்றபடியே நந்தாவைப் பார்த்தவள், “எவ்வளவு டீசன்ட்டா வந்து கேட்டேன்.  நீங்க என்னடான்னா தலையப்பிடிச்சு வெளிய தள்ளாத குறையா விரட்டுறீங்க.  நானா வந்து கேட்டதால என்னை தப்பா எடை போட்டுடீங்க.  இதை நினைச்சு பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க!”, என்க

“அது என் கவலை.  உங்க டீசன்ட் அப்ரோச்சை வேற எங்க வேணா போயி காமிங்க. எனக்குத் தேவையில்ல! அப்புறம் சின்ன சஜஜன்.., தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு போயி வீட்ல பாக்கற மாப்பிள்ளையக் கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிற வழியப் பாருங்க!”, என பற்களைக் கடித்தபடியே கைகளை மேலே தூக்கிக் கும்பிட்டு செல்லும் வழியை மீண்டும் காண்பித்தான்.

கடுமையைக் காட்டினாலேயொழிய மீண்டும் இப்பெண் தன்னை நாடும் என்பதை உணர்ந்தவன், அதனைக் குரலில் கவசமாக அணிந்து கொண்டிருந்தான்.

“ஒரு லேடிக்கிட்ட எப்டி பிகேவ் பண்றதுன்னு பேசிக் மேனர்ஸ் கூடத் தெரியாம காட்டுமிராண்டி மாதிரி பிகேவ் பண்றீங்க!”, என்றபடியே திரும்பிப் பேசியவாறு ரம்யா நகர

“என்னைப்பத்தி நீங்க எதுவும் தெரிஞ்சிக்காம இவ்ளோ தூரம் தனியா வந்து என்னை மீட் பண்ணதே தப்புங்கறேன்.  உங்களை யாரு இப்ப சர்ட்டிஃபை பண்ணச் சொன்ன! அதல்லாம் பாத்துக்க எம்பொண்டாட்டி இருக்கா! சீக்கிரமா கிளம்புங்க!”, என்ற நந்தாவின் குரலில் அவமானமாக உணர்ந்தவள் டோரை ஓபன் செய்து வெளியே செல்லவும்,

அதுவரை எழுந்து நின்றிருந்தவன், அப்படியே சேரில் அக்கடா என தலையை தனது இருகைகளால் தாங்கியபடி அமர்ந்து விட்டான்.

வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது.

பணமும், நல்ல உறவும் இருந்தால் மட்டும் எளிதாகக் கடந்திட முடியாத வாழ்க்கையை எண்ணி, யோசனையும் வந்தது.

அதிதீயோடு சண்டையென நேரில் சந்திக்காமல், அங்கும் இங்கும் நின்றபடியே பழைய நினைவில் நின்று பார்த்தது, எத்தனை பெரிய இக்கட்டில் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது என்பதும் புரியவர தலை வலிக்கும் உணர்வு.

தானாகவே நெற்றிப் பொட்டை நீவியபடியே கண்களை மூடி இருந்தான்.

ஆனாலும் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

மனவிரிவு, விளக்கம், விழிப்புநிலை, கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல்களில் ஈடுபாடு போன்றவற்றை தான் வளர்த்துக் கொண்டால் மட்டுமே, மகிழ்ச்சியும், நிறைவும் ஒருங்கேசேர, அமைதியோடு வாழ முடியும் என்கிற எண்ணமும் திண்ணமாக வந்தது.

கண்ணை மூடி எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தான் என்பதே தெரியவில்லை.

ஆனால் அவனுக்குள் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் தற்போது பேசுவதுபோல கேட்க, மனம் அதிலேயே லயித்திருந்தது.

‘தம்பி, நாம ஆம்பிளைங்க!  ஆயிரம் இடத்துக்கு போவோம்.  வருவோம். பொண்ணுங்களை பாத்தா, அவங்களைப் பத்தி பேசினா ஒரு ஆம்பிளையோட மனசும், உடம்பும் என்னமாதிரி ஆகும்னு உனக்கு நான் சொல்லித் தெரியனும்னு இல்லை. 

உன்னோட வயசிலனு இல்லை எல்லா வயசிலயும் ஒரே மாதிரித்தான் ஆம்பளை இருப்பான்.

அப்டித் தோணுறது ஒன்னும் தப்பில்லை என்றதும், அதுவரை நேராக முகம் பார்க்க முடியாமல் தரை பார்த்தபடி கேட்டிருந்தவன் நிமிர்ந்திட, என்னடா இதையெல்லாம் நம்மகிட்ட எதுக்கு இப்ப வந்து சொல்றாருனு பாக்குறியா!  விசயம் இருக்கு!

காலங்காலமா  நம்ம பாட்டன், முப்பாட்டன் வகுத்துக் குடுத்த வழியில போறவனுக்கு வாழ்க்கையில எந்தக் குறையும், ஏன் ஒரு சின்ன கறையும் உண்டாகாது.

ஆனா ரொம்பப் பயலுக பொண்ணுககூட சேந்திருக்கறதை பெருமையா சொல்லிக்கிட்டுத் திரியறானுவ.

காசு பணம் இருந்தா அப்டித் திரியணுமா?

தலையை மறுத்து ஆட்டியவர், எல்லாம் ரத்தத்திமிரு!

விலங்காத பயலுக!  வெட்டியா வீரவசனம் பேசித் திரிஞ்சிட்டுப் போயிருவானுக!  அடுத்தடுத்து வர சந்ததி எதையெடுத்தாலும் தடை, சஞ்சலம், சங்கடம்னு திணறிருவாங்க.

எதனால, ஏன்னு திரியாம படாதபாடுபட்டு மீளவே முடியாம வாழ்க்கையவே வெறுத்துறுங்க அதுங்க!

இப்ப விசயத்துக்கு வரேன் என்றதும் பழையபடி குனிந்து கொண்டான் நந்தா.

கண்டிப்பா உன்னோட வயசுல பொண்ணுங்களைப் பாத்ததும், மனசுல ஒரு மாற்றம் தோணணும். அப்படித் தோணலைன்னாத்தான் தப்பு என்றதும், குனிந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தவன், மீண்டும் விலுக்கென நிமிர்ந்து நோக்க, நந்தாவை நோக்கி புன்னகைத்தவர்,

தோணுச்சுன்னா நாம ஆம்பிளைக்குரிய அம்சத்தோட உடம்பு, மனசு ரெண்டும் ஆரோக்யமா இருக்கோம்னு சந்தோசப்பட்டுக்கலாம்.  தோணலைன்னா ஏதோ பிரச்சனைங்கறதும் தெரிஞ்சிக்கணும், அதை அப்டியே விட்ராம சரி செய்துக்கணும் என நந்தாவைப் பார்த்துச் சிரித்தவர்,

நந்தாவின் கேள்வியோடு தொக்கி நின்ற முகம் பார்த்து,

எல்லாமே இருக்கும் என எதிரில் அமர்ந்திருந்தவனிடம் தலையை ஆட்டி ஆமோதித்தார்.

தொழிலுக்குனு, வேலைக்குனு ஆம்பிளை வெளிய போகும்போது, நாள் கணக்குலனு இல்ல.. வருசக் கணக்குலகூட சுரதத்தை அறிய முடியாத நிலை உண்டாகலாம். 

இப்போ நான் என்ன சொல்றேனு உனக்கு ரொம்பத் தெளிவா புரியாமக்கூட இருக்கும்.  ஆனா அதது அந்தந்த சந்தர்ப்பத்தில, காலம் கூடி வரும்போது புரிய வரும்.

எங்க விட்டேன் என யோசித்தவர், ம்ஹ்ம்.. அதே நேரத்தில நமக்காக ஒருத்தி காத்திட்டு இருந்தாலும் சரி, இல்லை நாம ஒண்டிக்கட்டையா இருந்தாலும் சரி அவசரப்பட்டு, உடம்பும், மனசும் கேக்குதுன்னு யோசிக்காம, வாய்ப்பு அமைஞ்சதுன்னு அறிவை இழந்து, உயிரையும் இழந்து போயிறக் கூடாது என்றிட,

‘உசிரு போகுமா?’, எனும்படியாக அதிர்ந்து நோக்க

அதனைக் காணாமல் தனது பேச்சில் தொய்வில்லாது தொடர்ந்திருந்தார்.

வாய்ப்பு கிடைச்சும், யாரொருத்தன் தன்னோட நிலையில விழிப்போட இருக்கானோ அவந்தான்யா மனுசன்.

கற்புங்கறது பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல.  ஆம்பிளைகளுக்குந்தான்!

நந்தாவின் முகபாவத்தைக் கண்ணுற்று, என்ன முழிக்கிற? என விழித்தபடி நின்றிருந்தவனைப் பார்த்து என்னவெனக் கேட்டவர், ‘இதனால உசிரு எப்டிப் போகும்’, என்ற நந்தாவின் கேள்வியில் தொடர்ந்தார்.

உடனேயெல்லாம் செத்துப் போகமாட்டோம்.  இறைக்க, இறைக்க ஊருற ஊத்துத்தண்ணீ இல்லப்பு அது. அனுபோகம் பண்ண ஒரு கால இடைவெளி வேணும். நிறைய மக்களுக்கு அது வித்தா, இல்லை மஜ்ஜையானே தெரியாம வாழுறானுக. அது நம்ம ஆயுச நிர்ணயிக்கக்கூடிய ஜீவாமிர்தம்.  அதோட வீரியம், அளவு இதெல்லாம்தான் நம்ம உசிரோட அளவை, திணிவை, வாழ்நாளை, வம்சாவழியை, வெற்றியை, நல்ல வாழ்க்கையை, எதிர்காலத்தை இப்டி எல்லாத்தையும் பூரணமா நிர்ணயிக்குது.  அதத்தான் நான் அப்டிச் சொன்னேன்.

அதை மதிச்சு, எப்படி, எங்க தேவையோ அப்ப முறையா பயன்படுத்தனுமே தவிர, போற வார எடத்துல இறைச்சிட்டு வர, அது ஒன்னும் பதறு(முளைக்கும் திறனற்ற விதை நெல்) கிடையாதுப்பு.

இன்னொன்னு நம்மளை தப்பான நோக்கத்துல வந்து நெருங்க நினைக்கிற பொண்ணு, ஆபத்துனு வந்து உதவிக்கு நிக்கிற பொண்ணு, அறியாமையில இருக்கற பொண்ணு, அகம்பாவத்துல இருக்கற பொண்ணு, சுயநினைவு இழந்து திரியற பொண்ணுனு, யாரையும் பாழ் பண்ணிறக்கூடாது.

அவங்களை காபந்து பண்ணி, பத்திரமா அவங்ககிட்ட இருந்து விலகி வரணுமே தவிர, வாய்ப்பு கிடைச்சதுனு நெருங்கிட்டா, அது நம்ம வம்சா வழியையே வேரறுத்துரும்.

அதனால, கட்டுனவளைத்தவிர யாரையும் வேற எண்ணத்துல பாக்கக்கூடாது, அவளைத்தவிர வேற யாருகூடனாலும் சுரதத்தை அறியனும்னு நாடக்கூடாது.

இதை நான் எதுக்குச் சொல்றேன்னு எடுத்துக்கற வயசு உனக்கு வந்திருச்சுயா.

கலவிங்கறது ஒரு பெரிய விசயமே இல்லை.

பசிக்கற மாதிரி அது உணர்வு.  அவ்ளோதான்.  அதை அடக்கக் கூடாது. அதுக்குத்தான்  காலத்தில ஏத்த துணையை கல்யாணம் பண்ணிக்கிட்டு முறையா வாழ்ந்திக்கிட வேண்டியதுதான்.

அந்தக் கலையை நமக்குன்னு வரவக்கிட்டத்தான் நிரூபிக்கணுமே தவிர, காமாசோமானு வாழ ஆசைப்படக் கூடாது.

எவனொருத்தன், பணங்காசு திமிருலயும், உடம்பு திமிருலயும் தெரியறானோ, அவனும்சரி, அடுத்து வரக்கூடிய அவனோட வம்சா வழியுஞ்சரி ஒன்னுமேயில்லாமப் போயிரும்.

முறையா எல்லாம் நடக்கும்.  அதுவரை பொறுமை அவசியம்.

அப்ப ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறாங்களேனு சந்தேகத்தை நந்தா இயம்பிட,

அது அந்தப் பொண்ணுக்கு, புருசனோட குடித்தனம் பண்ண முடியாதநிலை, குழந்தைப் பேறு இல்லைனு அவளா முன்வந்து வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுனு புருசங்கிட்டச் சொன்னா செய்துக்கிடலாம்!’, என கூறியதையும் மனக்கண்ணில் தற்போது நினைவு கூர்ந்தான் நந்தா.

முனியாண்டியின் தந்தை, பால்ய பருவத்திலிருந்து தனக்கு அரும்பு மீசை தோன்றத் துவங்கியபோது, தன்னை அழைத்து மேற்கூறிய விசயத்தைத் தன்னிடம் கூறியபோது, ‘இதை எதுக்கு இப்ப எங்கிட்ட சொல்றாரு இந்தக் கிழவன்!’, என்றே நந்தாவிற்குத் தோன்றியது.

ஆனால் தற்போது அவ்வார்த்தைகள் நினைவில் தோன்றிட, காரணமில்லாமல், காரியங்கள் எதுவுமில்லை என்பதும் தெளிவாகியிருந்தது.

அனைத்து ஆண்களுக்கும் இதுபோல நடப்புகளை எடுத்துக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்திட ஏதுவான உறவுகள் இருக்கிறதோ என்னவோ?

ஆனாலும் நெறிப்படுத்த தவறிய வழியில் வந்தவர்கள் வழி மாறிப் பயணிப்பதும் இந்த மண்ணில்தான் என்பதும் நினைவில் வந்து போனது.

பசியெனும் உணர்வு வந்திட, நேரம் பார்த்தான். அத்தோடு வீட்டிற்கு கிளம்ப எண்ணி எழ, அதேநேரம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளைக் கண்டான்.

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

error: Content is protected !!