VVP-11A

அத்தியாயம்-11(1)

பசுமையின் புத்துணர்ச்சி(3):

மிதுலா தந்த பதிலில் குழம்பிய மங்கைக்கு, ஆவல் இன்னமும் அதிகமாக,  என்ன நடந்துச்சு சொல்லுங்க மேடம்?” என கேட்க, புன்னகையுடன் தொடர்ந்தாள் மிதுலா.

———————

இருவரும் சில மணிநேரங்கள் அங்கே செலவிட்டுவிட்டு, வீடு திரும்பினார்.

உள்ளே வந்தவுடனே, ஒரு கவரை மிதுலாவிடம் நீட்டினான். அதில் பத்தாம் வகுப்பின் விண்ணப்பத்தாலும், அதற்கான பாடபுத்தகங்களும் இருந்தது.

மொதல்ல செகண்டரி முடுச்சு செர்டிபிகேட் வாங்கிடலாம். அப்பறம் பிளஸ் டூக்கு ஈசி சப்ஜெக்ட்ஸ் எடுத்து, ஆன் டிமாண்ட் எக்ஸாம் (On Demand Exam), NIOS (National Institute of Open schooling) வழியா எழுதிடலாம்” அனைத்தையும் அவளுக்கு விளக்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இத முடிக்கத்தான் வெளிய போனயா சக்தி?” அவள் கேட்க, “ஹ்ம்ம்… ஆமா மிது. சீக்கரம் எல்லாத்தையும் முடுச்சிடலாம். என்ன ஒன்னு….” என்று அவளை குறும்பாக பார்த்தவன் “லேங்வெஜ்… இங்கிலிஷ் உனக்கு பிரச்சனை இல்லை. தமிழ் தான் தகராறு…” என இழுத்து

அத எப்படி பாஸ்(pass) பண்ண வைக்கறதுன்னு தான் யோசனையே… தமிழ் செல்வன் ஸார்க்கு தமிழ் சுத்தமா வராத பொண்ணு… ரொம்ப கஷ்டம்” சலித்துக்கொள்வதுபோல் சொல்லி சிரித்தான்.

“ஹலோ… அது அப்போ... இப்போ பின்னி பெடலெடுப்பேன்… சென்டம் எடுக்கறேனா இல்லையான்னு பாரு” என்று சவால் விட்டாள் அவனின் கேலிப் பேச்சை பார்த்து .

தமிழ்ல சென்டம் எடுக்க முடியாதும்மா… மொதல்ல பாஸ் பண்ணுவியான்னு பாரு” என மறுபடியும் அவளை சீண்ட, “நான் சவால் விடறேன் சக்தி” அவன் முன் சொடுக்கிட்டவள் “உன்னைவிட ஒரு மார்க் அதிகமா தமிழ்ல எடுத்துகாட்டல…” என நிறுத்தி

என் அப்பா பேர மாத்திடுவேன்…” என சொல்லி கண்ணடித்தவள் “பின்னே அவர் பாட்டுக்கு தமிழ் செல்வன்னு பேரு வெச்சுக்கிட்டு… அதுனால என்ன டார்ச்சர் பண்ணா நான் என்ன செய்ய… அந்த வல்லினம் மெல்லினம் இடையினம்…. ஐய்யோஅப்பா கண்ணு முன்னாடி குச்சி வெச்சுட்டு நிக்கறமாதிரி தெரிதே” என சவாலோடு ஆரம்பித்து சலிப்புடன் முடிக்க, பலமாக சிரித்தான் சக்தி.

விடு விடு… என்னைவிட ஒரு மார்க் அதிகமா எடுக்கறேன்னு பில்டப்லாம் பண்ணாம இரு…  நான் பாஸ் பண்றதுக்கு எது தேவயோ சொல்லித்தறேன்” என்றான் தோள்களைக் குலுக்கிக்கொண்டு.

தலையில் அடித்துக்கொண்டவள், “என் தலையெழுத்து… என்னமோ செய்என்றாள் கடுப்புடன்

மாதங்கள் அழகாகக் கடந்தன

காலையில் அவளை டேகேர்’ரில் விட்டுவிட்டு அவன் அலுவலகம் செல்வான். மதியம் அவளை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டு, படிக்க சொல்லிவிட்டு மறுபடியும் அலுவலகம் செல்வான்.

வாரம் ஒரு முறை அவளுக்கு மருத்துவரிடம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டது. மனதளவிலும் ஓரளவுக்கு தேறினாள். குழந்தைகளுடன் குழந்தையாய், தனிமையை முற்றிலும் மறந்தாள்.

அதுமட்டுமில்லாமல் சக்தி, எடுத்தவுடன் சகவயது ஆட்களுடன் அவளை பழகவிடாமல், குழந்தைகளுடன் முதலில் பழகவிட்டதால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அவளால் சுமுகமாக சக்தியைத் தவிர மற்றவர்களுடன் பழக முடிந்தது.

சக்தியின் மனதில் அவள் முழுமையாக சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டாள். அவளுடன் இருக்கும் தருணங்களை முற்றிலுமாக உள்வாங்கிக்கொண்டான். கூடவே அவளை ரசிக்கவும் தவறவில்லை.

அவளின் கண்கள்… கண்களை ஏந்திய அந்த அழகிய முகம்… முகத்தில் புரளும் கூந்தல்… பெரும்பாடுபட்டு அவளை சம்மதிக்கவைத்து அவளுக்கு எற்றாற்போல் அவன் எடுத்துத்தந்த உடைகள்… அதில் தெரியும் அவளின் நளினம்…

அவளை சீண்டும்போது, வரும் கோவம்… பாடம் படிக்கும்போது, வரும் சலிப்பு... குழந்தைகளுடன் விளையாடும்போது, வரும் குறும்பு… அனைத்தையும் ரசித்தான்அனைத்தும் அவளறியாமல் நடந்தது.

நாட்கள் செல்ல, ஒருநாள் மிகுந்த சந்தோஷத்துடன் வந்தான். வந்தவன் அவளுக்கு இனிப்பு பெட்டியை நீட்ட, “என்ன பாஸ்(pass) ஆய்ட்டேனா” பெருமூச்சுவிட்டுக்கொண்டு அவள் எடுத்துக்கொள்ள “தமிழ்ல எவளோ தெரியுமா?” விழிகள் விரித்து அவன் கேட்க, யோசனையுடன் அவள் பார்த்தாள்.

அவன் மதிப்பெண்ணை சொன்னவுடன் அவளால் நம்ப முடியாமல், வாய் மேல் கைவைத்துக்கொள்ள, “அப்பவும் என்னைவிட பத்து மார்க் கம்மிதான்” என்றான் பெருமையாக.

உன்னோட டீச்சர் யாரு…? என் அப்பாவாச்சே. எனக்கு வாச்ச டீச்சர்க்கு அப்பா அளவுக்கு திறமை இல்ல போல” அவளும் போலியாக சலித்துக்கொண்டு நகைக்க, அவனும் நன்றாக சிரித்தான்.

உன் அப்பாவோட ஸ்டூடென்ட் படிப்புல செம்ம ஸ்மார்ட். அதுதான் அவளோ மார்க். என் ஸ்டூடென்ட் என்னை மாதிரி இல்லையே. வாய் பேசறதுல தான் ஸ்மார்ட். இவளோ மார்க் எடுக்க வெச்சதுக்கே… எனக்கு நல்லாசிரியர் விருது குடுக்கணும்” என்றான் அவளைப் போல் அவனும் போலியாக சலித்துக்கொண்டு.

போடாங்…க” என்று சொல்லவந்தவள் சட்டென நிறுத்தி, சொல்லவந்ததை நினைத்து நாக்கை கடித்துக்கொள்ள, அதை பார்த்தவன் முற்றிலும் விழுந்தான் அவளின் முகபாவனையில். ஏதோ ஒரு மாற்றம் … மனதிலும் உடலிலும்…!

பின் வந்த நாட்களில் அவளை பனிரெண்டாம் வகுப்பிற்கு தயார் செய்தான். இதற்கு நடுவில் அவ்வப்போது பாண்டிச்சேரிக்கும் சென்று வந்தனர். மிதுலாவின் மனநிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

கிறிஸ்டியின் பிள்ளைகளை அவர்கள் NGOவின் வழியாக கொடைக்கானலில் இருந்த ஒரு பெரிய பள்ளியில் சேர்த்தனர். அவளின் தேர்வுகளும் முடிந்திருந்தது.

இருவரும் அடுத்தவரின் துணையில் தனிமையை மறந்தனர்.

அப்படி இருக்கையில் ஒருநாள் மிதுலா அவனிடம் “சக்தி… லண்டன் யூனிவர்சிட்டில ஏர்லி சைல்ட்ஹூட் எடுகேஷன் கோர்ஸ் பாத்தேன். டிப்ளமோ கோர்ஸ். ட்வெல்வ் மன்த்ஸ் கோர்ஸ்” என்றவுடன் அவன் முகம் முற்றிலும் மாறியது.

அதை கண்டுகொண்டவள், அவனிடம் விசாரிக்க, எதுவும் சொல்லாமல் தலைவலிக்கிறது என்று சென்றுவிட்டான். மிதுலாவிற்கு புரியவில்லை அவனின் இந்த செயல். அவளும் அப்போது எதுவும் கேட்க வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

அவன் வீட்டிற்கு சென்றவன், ‘ என்னவிட்டுட்டு போக எப்படி தோணும் அவளுக்கு? என் மனச கொஞ்சம் கூட புருஞ்சுக்கலயா? ஒருவேளை என்னமாதிரி அவளுக்கு தோனவேஇல்லையா? இவளைவிட்டு போகமுடியாதுன்னு யு எஸ்கூட போகாம இவளோடவே இருக்கேனே. ஆனா இவள்?’ மனது வலித்தது.

போய் அவகிட்ட சொல்லிடலாமா? அவளை பிடிச்சுருக்குன்னு? ஒருவேளை கோவப்பட்டு என்னை விட்டுட்டு போயிட்டான்னா? இது எதுவும் வேணாம்ன்னு பழைய வாழ்க்கையே போதும்ன்னு சொல்லிட்டா? ஐயோ… அவளை இந்த மாதிரி பாக்க எவளோ ஆசைப்பட்டேன். எல்லாம் பாழாகிவிடுமே” இதுவரை இல்லாத மனப்போராட்டம் அவனுள்.

மனது அவள் தான் தன் உலகம் என்றது. தன் தாயின் பிரிவைப் போல, இந்தப் பிரிவு தன்னை மிகவும் காயப்படுத்துமோ என்று எண்ணினாலும், சட்டென மற்றொன்றும் தோன்றியது.

அவளாக இதுவரை இது செய்யவேண்டும்… இப்படி செய்யவேண்டும் என்று கேட்கவில்லை. அனைத்தையும் நானே பார்த்துக்கொண்டேன். முதல் முறையாக அவள் கேட்கிறாள். இதைக்கூட செய்யவில்லை என்றால்?”

முடிவெடுத்தான்… எழுந்து சென்று அவள் வீட்டின் கதவை தட்டிக்கொண்டு உள்ளே செல்ல, அவளோ படுக்கையில் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள்.

மிது…” என்றழைத்துக்கொண்டு அவள் அருகில் உட்கார்ந்தவன் “எந்த யூனிவர்சிட்டி? எப்போ அப்ளை பண்ணலாம்” என்று அவளை பார்த்துக்கேட்க

“ஒன்னும் வேணாம். நீ தான் பதிலே சொல்லாம போனயே. இப்போ என்னவாம்” முகத்தை திருப்பிக்கொண்டாள்.

சரி. சாரி. நாளைக்கே என்ன ப்ரோஸஸ்’ன்னு பாத்து வேலைய ஆரம்பிச்சுடலாம்”

எதுக்கு அப்படி பேசப் பேச பாதிலயேப் போன…?” சண்டையிட அவள் கேட்க

அவனோ, அவள் தன்னை விட்டு செல்கிறாள். அவளுக்கு தன்னைப்போல் தோன்றவில்லையே என்ற வருத்தத்தில் “ப்ச்…  நீ இல்லாம நான் எப்படி தனியா இருப்பேன்? அதுதான். வேற ஒன்னுமில்ல” என்றவன், இதற்கு மேல் இருந்தால் ஏதாவது உளறிவிடுவோம் என்றெண்ணி சென்றுவிட்டான்.

ஆனால் மிதுலாவின் மனதிலோ “ஆமால… சக்தியை விட்டுட்டு எப்படி போவேன்…? எப்படி என்னால் முடியும்?” புதிதாக இப்போது தான் கேள்விகள் முளைத்தது அவளுக்குள்.

இரவு முழுவதும் தூக்கம் வராமல் “ஏன் சக்தியை பிரிந்து செல்லவேண்டும் என்பது இவ்வளவு கஷ்டமாக உள்ளது? தான் எப்படி வாழ்நாள் முழுவதும் அவனுடன் இருக்க முடியும்? அவனுக்கென வாழ்க்கை இருக்காதா? அதில் தான் எப்படி இருக்க முடியும்?”

ஒருவேளை தன்னையுமறியாமல் அவனை?” தன்னையே குலுக்கிக்கொண்டாள். “வாய்ப்பில்லை. அது நடக்கவும் கூடாது. அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்”

ஒருவேளை அவனுக்கும் தன்னை போல் தோன்றுகிறதோ? அதனாலேயே பிரிவதை பற்றி வருந்துகிறானோ? ச்சச்ச… இருக்காது… அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்காது… ஒருவேளை இருந்துவிட்டால்?” மனது அடித்துக்கொண்டது.

இதற்கு முன் நடந்த விஷயங்களையெல்லாம் நினைத்துப்பார்த்தாள். அவன் நடந்துகொண்டதில் தெரிந்த வித்யாசம் நன்றாகவே புரிந்தது.

அவன் பார்வையில் தெரிந்த மாறுதல், அவன் சொன்ன சில வசனங்கள், அவ்வப்போது வரும் தயக்கம், என அனைத்தையும் யோசிக்கும்போது நன்றாகவே புரிந்தது.

“வேண்டாம். தன்னை பற்றி தெரிந்தும் அவனின் வாழ்க்கையை சீரழிக்கக்கூடாது” மனம் அதன் போக்கில் யோசித்துக்கொண்டிருந்தது.

பழைய ஞாபகங்களால் உறங்கமுடியாமல் இருந்தவள், இப்போது அவனால் தூங்கமுடியாமல் யோசித்துக்கொண்டேயிருந்தாள்!!

———————

மேடம்… அவரும் உங்க கிட்ட சொல்லல. நீங்களும் சொல்லல. போங்க மேடம்…” வருத்தத்துடன் சொன்ன மங்கையைப் பார்த்து எப்பொழுதும் போல் சிரித்தாள் மிதுலா!!