VVP-3A

அத்தியாயம்-3(1)

மந்தகாச மஞ்சள்(1):

காஃபி குடித்துக்கொண்டிருந்த ஆதவன் மற்றும் மங்கையிடம், மிதுலா “சரி நான் கேக்கணும்ன்னு இருந்தேன். உங்கள யாரு என்னப்பாக்க ரெக்கமண்ட் பண்ணது?” சாதாரணமாக தான் கேட்டாள். ஆனால் இருவருக்கும் ஒரே சமயம் புரையேறியது.

“அது…  NGO’ல சொன்னாங்க மேடம்” என்றான் ஆதவன் தட்டுத்தடுமாறி. ஒருவழியாக இருவரும் குடித்துமுடிக்க…

“மேடம். உங்களுக்கு சக்தி ஸார் பத்தி தெரியுமில்லையா? அவரப்பத்தி சொல்லுங்களேன்” மங்கை ஆர்வமாக கேட்டாள்.

ஏதோ பொறிதட்டியது மிதுலாவிற்கு. அனால் வெளிக்காட்டாமல், “ஹ்ம்ம் சொல்றேன்” என்றாள் மர்மமான புன்னகையுடன்.

அந்த மர்ம புன்னகைக்கு பொருள் என்ன? மனதில் மிதுலா என்ன நினைத்தாள்? என்பது கடைசியில் பார்க்கலாம்.

இப்போது அவள், தான் இழந்துவிட்டதாக எண்ணிய ஆத்மார்த்தமான, அழகான உறவுகளை பற்றிய பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.

———————

“நான் பொய் சொல்றேன்னு அவளோ திடமா எப்படி சொல்ற சக்தி?” கேட்டாள் மிதுலா அதே புன்னகையுடன்.

“ஏன்னா நீ ஊர்ல இருந்து மறஞ்சு போனது சின்ன வயசுல. அந்த வயசுல கண்டிப்பா காதல் கத்திரிக்காலாம் வந்துருக்காது. நீ கவுதம் கிட்ட ஒருத்தன நம்பி ஓடிப்போனேன்னு சொன்னது பொய்” என்றான் சலிப்புடன்.

புன்னகை காணாமல் போனது அவள் முகத்தில். “ஹ்ம்ம். பரவால்ல. ஊர்ல உன்னமாதிரி எல்லாரும் நினச்சா சந்தோஷம்” என்றாள் வருத்தத்துடன்.

“அதெல்லாம் இருக்கட்டும். என்ன ஆச்சு மிது. இது என்ன வாழ்க்கை? நீ எப்படி இருந்தன்னு எனக்கு இன்னமும் என் கண் முன்னாடி ஓடுது” என்றான் சிரியவயதில் சின்ன பெண்ணான மிதுலாவின் முகத்தை மனதில் நினைத்து.

இருவரும் ஒருசேர குழந்தை பருவர்த்திக்கு சென்றனர்.

“மங்களம் ஆண்ட்டி இந்த குட்டி பையன் ச்சுச்சு போய்ட்டான்” என்று தூக்கி போடப்பட்டிருந்த போனிடெல்லுடன், முழங்கால் வரை ஃபிராக் போட்டு, பனிரெண்டு, பதிமூன்று வயதுமிக்க மிதுலா அங்கிருந்த காப்பாளரிடம் சொல்லிவிட்டு, அந்த சிறுவனிடம் “டெர்டி பாய். இங்கேயா பிஸ்(Piss) பண்ணுவ?” என்று செல்லமாக திட்டினாள்.

அங்கு வந்த மங்களம் “அட குட்டி பயலே” என்று அந்த சிறுவனை அழைத்துச்சென்று சுத்தம் செய்துவிட்டு கூட்டிவந்தார். அதற்குள் மிதுலா  வேறு குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தாள்.

அது அரசாங்கம் நடத்தும் அங்கன்வாடி. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நகராட்சி. அந்த அங்கன்வாடியில் மங்களம் வேலைப்பார்ப்பவர்.

பெரிதாக அரசாங்கம் அதிகம் உதவாவிட்டாலும், அந்த ஊரின் மதிப்புமிக்கவர் என்று சொல்லப்படும் தமிழ் செல்வன்  உதவி வந்தார். அவர் அங்குள்ள அரசு பள்ளியின் முதல்வர்.

பாண்டிச்சேரி என்றாலே சரக்கு மட்டும் சிலபேருக்கு ஞாபகம் வரலாம். ஆனால் அங்கு ஃபிரென்ச் மக்களும் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி ஃபிரென்ச் இன்ஸ்டிட்யூட்டில் படித்த ஜூலியும், தமிழ் செல்வனும் காதல் வயப்பட்டு, அந்த பந்தம் திருமணத்தில் முடிந்தது.

அவர்கள் காதலின் பிரதிபலிப்பே மிதுலா. தகப்பனின் இந்திய நிறத்தையும், தாயின் மேற்கத்திய அழகு மற்றும் கண்களையும் கொண்டிருந்தாள்.

அவளின் பெற்றோருக்கு அவள் செல்ல இளவரசி. அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். ஒரு சிறு கீறல் அவளுக்கு விழுந்தாலும் இருவரும் பதறுவர். அவளுக்கு வலிக்கவே இல்லையென்றாலும் இருவரும் நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு தாங்குவார்கள்.

அவளுக்கு பிடிக்காதது ஒரு நாளும் நடக்காது. சமையலிலும் கூட. தெரியாமல் ஏதாவது இருந்தால் கூட தாண்டவம் ஆடுவாள்.

மிதுலா படிப்பில் சுட்டி. வீட்டில் இருப்பதை விட, வெளியில் சுற்றுவதையே அதிகம் விரும்புவாள். குழைந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். அதனாலேயே அங்கன்வாடியிலேயே இருப்பாள். அதுவும் தந்தை உதவும் அங்கன்வாடி என்பதால் பள்ளி முடிந்ததும் அவள் நேராக செல்வது அங்கேதான்.

குழந்தையை சுத்தம் செய்துவிட்டு மங்களமும் மிதுலாவுடன் சேர்ந்துகொண்டு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது “அம்மா நான் டியூஷன்க்கு கிளம்பறேன்” தாய் மங்களமிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப அங்கே வந்தான் சக்திவேல். அங்கே மிதுலாவை பார்த்தவன்

“ஏய் மிது. சஷ்டி கவசம் போனவாரம் சொல்லிக்கொடுத்தவரை மனப்பாடம் பண்ணினயா” என்று கேட்க, அவளோ முகம் சுளித்துக்கொண்டு “அத மனப்படம் பண்ணி நான் என்ன பண்ணப்போறேன் சக்தி” என்றாள் சலிப்புடன்.

அந்த நேரம் அங்கே வந்த தமிழ் செல்வன் “மிது என்னதிது. அவன் பிளஸ் டூ படிக்கிறான். அண்ணான்னு கூப்பிட மாட்டயா?” என்றார் கொஞ்சமே கொஞ்சம் மிரட்டலுடன். அதை கேட்ட மிதுவின் முகத்தில் கோவம், அத்துடன் கண்களும் கலங்கியது.

அதை பார்த்த சக்திவேல் “ஸர் பரவால்ல. சின்ன பொண்ணுதானே. இருக்கட்டும்” என்றான் புன்னகை முகத்துடன்.

அவரோ “இந்த மாதிரி உனக்கு கோவம் அதிகம் வர்றதால தான் அவன்கிட்ட உனக்கு கவசம் சொல்லிகுடுக்க சொன்னேன். இந்த வயசுல இவளோ கோவம் கூடாதும்மா” என்றார் கனிவாக.

டியூஷனுக்கு நேரமாக “ஸார் நான் கிளம்பறேன். சின்ன சந்தேகம் இருக்கு. நாளைக்கு ஸ்கூல்ல வந்து கேட்டுக்கறேன்” என்றவன் அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு “வரேன் ம்மா. வரேன் மிது” என்று சிறுபிள்ளையை பார்த்து சிரிப்பதுபோல் சிரித்துவிட்டு கிளம்பினான்.

தமிழ் செல்வன் பள்ளியில் தான் சக்திவேல் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

சிலசமயம் மிதுலாவிற்கு அவனை, அவனின் பொறுமையை மிகவும் பிடிக்கும். அதே சமயம் ஞானப்பழம் போல் இருப்பது வேடிக்கையாக இருக்கும். தந்தை அவனிடம் காட்டும் உரிமையை பார்க்கும்போது பொறாமை கலந்த கோவம் வரும்.

தவறாக ஆங்கிலம் அவன் பேசும்போது, அவனுக்கு ஆசிரியை ஆனாள். அதே சமயம் நல்லொழுக்கம் பற்றி சொல்லும்போது அவன் ஆசனாவான்.

இப்படியாக போய்க்கொண்டிருந்த அவள் வாழ்க்கை, திசைமாறி போகப்போகிறது என்று தெரியாமல் தந்தையுடன் வீட்டிற்கு கிளம்பினாள் மிதுலா!

ஜூலியின் பெற்றோர் மற்றும் அவர்களுடைய ஃபிரான்ஸில் வசிக்கும் உறவினர்கள் ஒரு NGO நடத்தி வந்தனர். 

அதில் அடித்தட்டு மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்துகொடுத்தார்கள். அதற்கான நிதி பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தே வந்தது.

அந்த NGO’வில் வேலைப்பார்த்த மேலாளர் பணம் கையாடல் செய்ததால், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அவரின் மகளுக்கு நடக்க விருந்த திருமணம் அதனால் தடைபட, மிகுந்த வேதனையில் இருந்தார்.

திருமணம் நின்று விட்டதால், அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ய, அவர் இன்னமும் உடைந்து போனார். அவரின் மனதில் ‘இதற்கு காரணம் ஜூலியின் பெற்றோர்கள்’ என்று மனதில் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக்கொண்டிருந்தார்.

அதே நேரம் சக்திவேல் நன்றாக படித்து பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தான். அனால் மேற்கொண்டு படிக்க முடியாத காரணத்தால், தமிழ் செல்வனிடம், அந்த NGO’வில் ஏதாவது வேலை இருந்தால் சேர்த்துவிடச்சொன்னான்.

ஆனாள் அவரோ, அவன் மதிப்பெண்களை பார்த்துவிட்டு, NGO’வில், அவன் மேல் படிப்புக்கு உதவுமாறு கேட்டார். தமிழ் செல்வன் மற்றும் ஜூலியின் சிபாரிசால் அவனுக்கு நல்ல கல்லூரியிலே படிக்க உதவி செய்தனர்.

“சக்தி… இப்போ சஷ்டி கவசம் தலைகீழா கூட சொல்லுவேன். எல்லாம் உங்கள் அருள்” என்று மிதுலா கிண்டலடிக்க, அவள் தலையை குட்டியவன் ” தினமும் ஒழுங்கா காலைல சொல்லு… நான் நாளை மறுநாள் சென்னை போறேன். ” என்றான் சக்திவேல்.

“சரி சரி. சொல்றேன். நானும் சீக்கரம் படிச்சு முடுச்சு, ஹையர் ஸ்டடீஸ் ஃபிரான்ஸ்ல போய் படிப்பேனே” என்றாள் பதிலுக்கு முகத்தை குறுக்கி சிரித்துக்கொண்டு. “ஹ்ம்ம் ஆண்ட்டி உன்ன விட்டுட்டாலும்” கிண்டலாக சொன்னான்.

அதுவே இருவரும் சந்தித்த கடைசி சந்திப்பு…

*********

“எங்க போன மிது. என்ன ஆச்சு உனக்கு. உன்கிட்ட நான் சென்னை போறேன்னு சொன்ன நாள் தான் உன்ன கடைசியா பாத்தது. அடுத்தநாள் உன்ன காணம்ன்னு செய்தி கேட்டவுடனே பதறிட்டேன். எவ்வளவோ உன்ன தேடினோம்” என்று அந்த பாரம் சற்றும் குறையாமல் கேட்டான் சக்தி.

அவனுக்கு காஃபி கலக்கிக்கொண்டு வந்து கொடுக்க, இருவரும் தரையில் சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்தனர்.

அவன் மனதில் அப்போதும், ‘அவள் வீட்டில் எப்படி இருந்தாள்’ என்ற நியாபகமே முன்னின்றது. அவள் பதில் ஏதும் சொல்லாமல் சுவற்றில் சாய்ந்து எங்கோ வெறித்து கொண்டிருந்தாள் காஃபி கூட குடிக்காமல்.

“மிது” என்ற மறுபடியும் அவன் அழுத்தமாக அழைக்க, அவனை பார்த்தாள்.

அவன் கண்கள் ‘என்ன நடந்தது. ஏன் இந்த நிலைமை உனக்கு’ என்று மட்டுமே அவளிடம் கேட்டது.

“உன்கிட்ட பேசின அடுத்தநாள் ஸ்கூல் முடுஞ்சு அங்கன்வாடி போயிட்டு இருந்தேன். அப்போ ஒரு கார் முன்னாடி வந்து நின்னது. அதுல இருந்து NGO’ல வேல பாத்த மேனேஜர் அங்கிள் வந்தாரு”

“பாட்டிக்கு ரொம்ப உடம்பு முடியாம பாண்டிச்சேரில அட்மிட் பண்ணிருக்காங்கன்னு சொன்னாரு. அன்னைக்கு அப்பாகூட ஸ்கூலுக்கு வரல. ஏதோ பிரச்சனை போலன்னு அவர்கூட போனேன். எல்லாமே அதோட முடுஞ்சது” என்றாள் உணர்ச்சியற்ற முகத்துடன்.

“என்னது அவரா?” என்றான் கிட்டத்தட்ட அறையே அதிரும் குரலுடன். ‘என்ன ஆச்சு’ என்பது போல் அவனை அவள் பார்க்க “நீ காணாம போய் ரெண்டே நாள்ல அவங்க குடும்பமே தற்கொலை பண்ணிட்டாங்க” என்றான் அதிர்ச்சியுடன்.

அதை கேட்டவுடன் அவள் சிரித்தாளா, இல்லை வருத்தினாளா, இல்லை கோவப்பட்டாளா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. உதடு மட்டும் சிரிப்பது போல் தெரிந்தது.

“நான் உள்ள ஏறின கொஞ்ச நேரத்துல அவர் ஏதோ துணிய மூக்குல வெச்சாரு. அவளோ தான் தெரிந்தது. அதுக்கப்பறம், ஏதோ ஒரு ரூம்ல அடைச்சு வெச்சாங்க. எந்த ஊருன்னு தெரில”

“என்னைப்போலவே மூணு பொண்ணுங்க இருந்தாங்க. அப்பறம் எங்க எல்லாத்தையும் ஒரு லாரில எங்கயோ கூட்டிட்டு போனாங்க” என்று சொல்லும்போது அவள் கண்களில் கண்ணீர் தேங்கியது. அனால் அதை அவள் விழவிடவில்லை.

அவனுக்கு புரிந்தது எதற்காக அழைத்துச்சென்றிருப்பார்கள் என்று.

அவன் இதயம் வெகுவாகத்துடித்தது. அதை விட ‘அவள் என்னென்ன அனுபவித்திருப்பாளோ’ என்ற எண்ணம் அவனை சித்ரவதை செய்தது. அவளை தற்போது பார்க்க மனது இன்னமும் பாரமானது.

“அப்போலிருந்து இன்னைக்கு வரை அல்மோஸ்ட் என்னோட வாழ்க்கையே நான்கு சுவர்குள்ள தான்” என்று சக்திவேலிடம் சொல்லும்போது அவள் கண்கள் மூட கோடாக கண்ணீர் வெளியேறியது!!!

———————

இக்கதையை கேட்டுக்கொண்டிருந்த மங்கை கிட்டத்தட்ட அழுதே விட்டாள். ஆதவனோ கண்கள் கலங்கி மிதுலாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.