VVP-6B

அத்தியாயம்-6(2)

காழ்ப்பின் கருமை(4):

அவளையே பதட்டத்துடன் பார்த்திருந்தான் சக்தி.

நானும், அக்காவும் பெங்களூரு வந்தோம். எங்க போறது என்ன செய்யறதுன்னு தெரில. ஸ்டேஷன்லயே ரெண்டு நாள் இருந்தோம். பகல் நேரத்துல ஏதாச்சும் வீடு கிடைக்குதான்னு தேடினோம். ஒன்னும் தேறல. ஸ்டேஷன்ல சில பேர் எங்களை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க

அப்பறம் அங்க இருந்த ஆட்டோக்காரன்ட்ட அக்கா மலிவு வாடகை வீட்டை காட்டச்சொன்னாங்க. எங்கள ஏற இறங்க பார்த்துட்டு ஒரு ஏரியாக்கு கூட்டிட்டுப்போனான்

அக்காவோட நர்சிங் சர்டிஃபிகேட்லாம் கிளம்பரப்ப எடுத்துக்கல. அதுனால ஆட்டோக்காரன்கிட்டயே வேல ஏதாச்சும் பாத்துகுடுக்க சொன்னாங்க

ஒரு வழியா ஒரு சின்ன வீட்டுக்கு போய்ட்டோம். ஏனோ தெரில சக்தி என்னால யாரையுமே சாதாரணமா பாக்க முடில. வெளியுலகத்தை ஃபேஸ் பண்ண முடில. ஆம்பளைங்கள பாத்தாலே, எங்க அவன் கூட இருந்திருப்பேனோன்னு ஒரு எண்ணத்துலயே இருந்தேன்

அக்கா அத புருஞ்சுட்டு அவங்களே வேலைக்கு போனாங்க. ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ல 8 வீட்டுக்கு வீட்டு வேல செஞ்சாங்க. முன் அனுபவம் தேவையில்லாத வேலையில்லயா. அதான்

நான் பசங்கள பாத்துட்டு வீட்ல இருந்தேன். அப்போ தான் அக்கா உடம்பு ரொம்ப பலகீனம் ஆச்சு. முன்னாடியே வீக்’கா தான் இருந்தாங்க. பட் ரொம்ப வீக் ஆகிட்டாங்க ஒரு ரெண்டு மாசத்துல

ஹாஸ்பிடல் போனாங்க. அங்க தான் எங்களுக்கு ஒரு பெரிய இடியே காத்துட்டு இருந்துச்சு…” நாமும் அவனுடன் சேர்ந்து என்ன நடந்தது என்று பார்ப்போம்…

———————

ஹாஸ்பிடலுக்கு சென்ற கிறிஸ்டி, மருத்துவரை பார்த்துவிட்டு பரிசோதனைக்காக ரத்தம் கொடுத்துவிட்டு காத்திருக்க, அவளின் முறை வந்தது மருத்துவரைப் பார்க்க.

அந்த மருத்துவப் பெண்மணி கிறிஸ்டியை பார்த்ததும், அவளின் நிலை நன்றாக புரிந்தது. அவளிடம் சாதாரணமாகப் பேச்சைத் துவங்கியவர், பின்பு

“உன் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் இப்போதான் பாத்தேன். உனக்கு வேற யாரும் இல்லன்னு சொன்னதால உன்கிட்டயே சொல்லவேண்டிய நிலை. பதட்டப்படாம கேளு. உனக்கு HIV பாசிட்டிவ்ன்னு வந்துருக்கு”

அதைக்கேட்டு அதிர்ந்த கிறிஸ்டி எதுவும் சொல்லாமல் பீதியுடன் இருக்க “அதுவும் ஆல்மோசட் லாஸ்ட் ஸ்டேஜ். நீ முன்னாடியே ஏன் செக்கப் போகல?”

அவள் சொல்லவா முடியும் அவள் இரண்டு மாதங்கள் முன் எப்படி இருந்தாள் என்று. பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.

சில நிமிடம் மௌனத்திற்கு பிறகு மருத்துவரே “உன் பசங்கள கூட்டிட்டு வந்து டெஸ்ட் எடுத்துரு” என்று சொன்னதுதான் தாமதம், இதயத்துடிப்பு நின்று துடித்தது. அமைதியாக வீட்டிற்கு வந்தாள்.

குழந்தைகள் மிதுலாவுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். சோர்ந்துபோன கிறிஸ்டியை பார்த்ததும் மிதுலா விசாரிக்க, ஹாஸ்பிடலில் நடந்ததை முழுக்க சொன்னாள். அதே அதிர்ச்சி தான் மிதுலாவிற்கும்.

அவளுக்கும் எய்ட்ஸ் பற்றி தெரிந்திருந்தது. ஆணுறையின் அவசியத்தை பற்றி ஒரு முறை கிறிஸ்டியே அவளுக்கு சொல்லியிருந்தாள். அதுதான் மிதுலாவிற்கு இன்னமும் வருத்தமாக இருந்தது. நொறுங்கிப்போனாள்.

தான் இருக்கும் நிலையில், மிதுலாவை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாகிப்போனது கிறிஸ்டிக்கு.

பிள்ளைகளை கூட்டிக்கொண்டு, மிதுலாவிற்கும் சேர்த்து பரிசோதனை நடந்தது. மிதுலா வேண்டாத தெய்வமில்லை. குழந்தைகளுக்கு இருக்க கூடாது என்று. தன்னை பற்றி துளியும் யோசிக்கவில்லை. முன்னே விளையாடும் குழந்தைகளே கண்ணில் பட்டனர்.

அவர்களின் ரிசல்ட் வர, மூவருக்கும் நெகடிவ் என வந்தது. கிறிஸ்ட்டிக்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. ஆனால் மிதுலா கிறிஸ்டியை நினைத்து மிகவும் வருந்தினாள்.

“அக்கா, வருண் குடுத்த பணம் இருக்கு. லட்ச ரூபாய் கிட்ட இருக்கும்லக்கா. அதைவெச்சு உங்களுக்கு டிரீட்மென்ட் பாக்கலாம். உங்களுக்கு ஒன்னும் இல்ல” என்று வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு மிதுலா சமாதானப்படுத்த, கிறிஸ்டி ஏதோ யோசனையில் இருந்தாள்.

அன்றிரவு கிறிஸ்டி, “மிதுலா… நான் சொல்றத கேளு. தேவையில்லாம பணத்தை வேஸ்ட் பண்ணாத. நீ இருக்கப்ப எனக்கென்ன கவலை. என் பசங்கள நீ பாத்துக்க மாட்ட? இன்னும் கொஞ்ச நாள்தான் எனக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க” என்று சொல்லிமுடிக்குமுன்

“அக்கா, நான் வருணுக்கு போன் பண்ணட்டுமா? கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவான்”

“என்ன பேசற நீ? இவளோ தூரம் பண்ணதே பெருசு. அதுவும் இல்லாம கைல பணம் குடுத்து அனுப்பி வெச்சுருக்கார். இதுக்கு மேல உதவி கேட்டா நல்லா இருக்காது. கேட்கவும் கூடாது”

மிதுலாவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தூக்கம் துளியும் வரவில்லை. இருவரும் பேசிக்கொள்ளவும் இல்லை. விடியும் நேரம் நெருங்க, மிதுலா குளிக்கச்சென்றாள்.

குளித்து முடித்து வந்தவள், கிறிஸ்டியைத் தேட, அவள் அங்கே இல்லை. ஏதோ பயம் உள்ளுக்குள் பரவியது அவளுக்கு.

குழந்தைகள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். பெரிய வீடு இல்லை என்றாலும் இரண்டு முறை தேடிவிட்டு கீழே சென்றாள் ஏதாவது வாங்க இறங்கியிருப்பாளோ என்று.

இவள் இறங்கி வருவதை பார்த்ததும், அந்த வீட்டின் உரிமையாளர் இவளிடம் ஓடிவருவது தெரிய, புரியாமல் ‘எதற்கு என்று யோசிக்குமுன், அதை அவரே சொன்னார்.

மிதுலா அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டாள்.

“ஏன்மா… எந்திரி… என்ன ஆச்சு அந்த பொண்ணுக்கு? ஆம்புலன்ஸ் கூப்பிட்டிருக்கோம். எப்போ கிணத்துக்குள்ள விழுந்துச்சுன்னு தெரில. அப்போவே யோசிச்சேன். இந்தமாதிரி தனியா இருக்க பொண்ணுங்கள குடித்தனம் வைக்கறோமேனு” என்று தலையில் அடித்துக்கொண்டு அவர் செல்ல, என்ன செய்வது என்று தெரியாமல், புரியாமல் ஸ்தம்பித்துப்போனாள் மிதுலா.

ஒரு முடிவாக, குழந்தைகளுக்கு தெரியாமல் கிறிஸ்டியின் உடலை மருத்துவனைக்கே தந்துவிட்டாள்.

அடுத்து என்ன என்பது பெரிய கேள்வியாக இருந்தது. தான் இனி வீட்டில் இருக்க முடியாது. குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் போக, ‘வருணை அழைக்கலாமா?’ என்று போனை தேடினாள்.

எங்கும் கிடைக்கவில்லை. வீடு முழுக்க அலசிவிட்டாள். எங்குமே இல்லை. கிறிஸ்டியின் வேலையாக இருக்கும் என நினைத்தவள், சோர்ந்து போனாள்.

இருப்பினும் வாழ்ந்தாகவேண்டுமே குழந்தைகளுக்காக இனி… முடிவெடுத்தாள். வெளியுலகை பார்த்தாகவேண்டும் என.

“அண்ணா அக்கா வேல பாத்த இடத்துக்கு என்ன கூட்டிட்டு போக முடிமா? நான் இனி அங்க வேல பாக்கறேன்” என்று அவர்களுக்கு உதவிய ஆட்டோக்காரனிடம் கேட்டாள் மிதுலா.

அங்கே சென்றவுடன், அங்கிருப்பவர்களிடம் தெரிந்துகொண்டு, கிறிஸ்டி வேலை செய்த வீட்டிற்கெல்லாம் சென்று தான் இனி வரப்போவதாக சொன்னாள்.

வீட்டின் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை சேர்ப்பதற்கான வேலைகளை முடித்தாள்.

அடுத்த நாளில் இருந்து அந்த எட்டு வீட்டிற்கும் மிதுலா வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.

அதில் பாதி குடும்பம் தனிக்குடித்தனமே. வேலைக்கு செல்லும் கணவன் மனைவி. காலையில் ஏழுமணிக்கு வேலை ஆரம்பிக்கும். முதல் இரண்டு வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச்செல்பவள், மற்ற வீட்டிற்கு தனியே செல்வதை வழக்கமாக்கிக்கொண்டாள்.

அனைத்தும் நன்றாக போய்க்கொண்டிருந்தது ஒரு வாரத்திற்கு. முதலில் செல்லும் குடும்பம் ஒரு அழகான கணவன் மனைவி வாழும் குடும்பம். மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கும் கணவன்.

இரவு, நேரம் கழித்து வரும் மனைவிக்காக காலையில் காஃபி போட்டுக்கொண்டு பக்கத்தில் ஆசையாக உட்கார்ந்திருக்கும் கணவன். மிதுலா பாத்திரங்கள் கழுவியபின், காலை சமையலை அவனே பார்த்துக்கொள்வான்.

காலை கணவன் மனைவியின் ஊடல், கண்ணில் பட்டால் கூட, அதை பாராமல் வீட்டு வேலையில் மூழ்கிவிடுவாள் மிதுலா. மனதில் ஒரு மூலையில் ‘நமக்கு இப்படியெல்லாம் குடித்தனம் அமையாதில்ல என்ற வருத்தமும் வரும்.

கண்கள் கலங்கும். மனது ஏங்கும். யாரும் பார்த்திரா வண்ணம் கண்களை துடைத்துக்கொள்வாள். தனக்கு வாழ்க்கை முடிந்தது என்பதையே ஆணி அடித்தாற்போல் தனக்கு தானே சொல்லிக்கொள்வாள்.

இன்னொரு வீட்டில் கணவன், மனைவி மற்றும் வீட்டில் ஒரு பெரியவர். மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருக்க, தாயும் மகனும் மட்டுமே. அங்கும் வேலை நன்றாகவே நடந்துகொண்டிருந்தது. ஆனால் விடுமா மிதுலாவின் விதி.

அன்று அங்கு வேலைக்கு சென்றபோது, அந்த பெரியவர் வீட்டில் இல்லை. அவரின் மகனே இருந்தான்.

மிதுலா தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதால் யார் இருக்கிறார்கள் யார் தன்னை பார்க்கிறார்கள் என்றெல்லாம் பார்த்ததில்லை. ஒருவேளை பார்த்திருந்தால், அந்த வீட்டின் ஆண் தன்னை தவறான எண்ணத்தோடு பார்ப்பது தெரிந்திருக்குமோ?

அவள் அன்று சமையல் அறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருக்க, திடீரென இரு கைகள் அவளின் வெற்றிடையை சுற்றி வலைத்ததை உணர்ந்த மிதுலாவிக்கு சப்தநாடியும் அடங்கியது.

அந்த அரக்கனிடம் தன்னை விடுவிக்க முயற்சி செய்தாள். ஆனால் அவனோ எல்லைகளை மீறிக்கொண்டிருந்தான்.

“இவளோ அழகா இருக்கயே எதுக்கு வீட்டு வேல செய்யணும். வேற ஏதாச்சும் பண்ணலாம்ல” என விரசமாக பேச, கூசியது மிதுலாவிற்கு அந்த பேச்சு.

எவ்வளவோ முயன்றும் அவன் கைகள் அவளிடம் அத்துமீற, கழுவ வைத்திருந்த திரவத்தை, பின்னல் நெருங்கி நின்றுகொண்டிருந்தவன் கண்களில் தெளித்தாள்.

அவன் தடுமாற, அவனிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியில் வரும் வேளையில் அந்த வீட்டின் பெரியவர் உள்ளே நுழைந்தார்.

அவருக்கு புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று. மிதுலா அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அந்த பெண்மணி மகனைப் பார்த்து, தலையில் அடித்துக்கொண்டு, “அவ வெளிய போய் நீ பண்ணினதை சொன்னா என்ன செய்வ?” என கடுகடுத்தவர், குரூரமாக யோசிக்க ஆரம்பித்தார் மகனைக் காப்பாற்ற.

மாலை நடைப்பயிற்சி செய்யும் போது, தன் வயதுள்ளவர்களிடம் மிதுலாவின் நடத்தையைப் பற்றி தவறாக பரப்ப ஆரம்பித்தார்.

அவளின் அதீத அழகு மற்றும் அவள் பார்க்கும் வேலை என சம்மந்தம் இல்லாமல் முடிச்சிட, அது காற்றுப்போல் பரவியது. மிதுலாவின் காது பட பேச ஆரம்பித்தனர். கூனிக்குறுகிப்போனாள். மனதிர்களையே வெறுக்க ஆரம்பித்தாள்.

தன் அழகை வர்ணிப்பவர்களை கொலைவெறியோடு பார்த்தாள். தன் அழகை முற்றிலுமாக வெறுத்தாள்.

இந்த அழகு தானே இதற்கு காரணம். அதை அழித்துவிட்டால்?’

எப்படி என்று யோசித்தவளுக்கு ஞாபகம் வந்தது “ஆசிட்”. அதை வாங்கியும் வந்தாள்!!

———————

மிதுலா அனைத்தையும் சொல்ல, கேட்டுக்கொண்டிருந்த சக்தி, பதறிப்போய் “மிது” என்று கத்திவிட்டான்!

சக்தியைப் பார்த்து வெற்றுப்புன்னகையை உதிர்த்தவள் “என் மூஞ்சி இன்னமும் நல்லா தானே இருக்கு சக்தி?”

அவள் ‘இப்போது நன்றாக இருக்கிறேன் தானே’ என சொன்னாலும், அவனைப் பதைபதைக்க வைத்தது ‘அன்று என்ன ஆகியிருக்குமோ’ என்ற எண்ணம்!