YALOVIYAM 10.2


யாழோவியம்


அத்தியாயம் – 10

அடுத்து ஒரு பதினைந்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…

அரசு அமைத்த விசாரணைக் குழு தனது முதற்கட்ட அறிக்கையைத் தயாரித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் சமர்பித்திருந்தது. அதன் சாராம்சம்…

நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேட்டில், முதலாவது ஆள்மாறாட்டம். அதாவது கல்வியில் பின்தங்கிய மாணவர் ஒருவருக்குப் பதிலாக, திறமையான மற்றொரு மாணவர் தேர்வு எழுதுவது.

இரண்டாவது ‘பார்த்து எழுதுவது[copy]’. அதாவது தேர்வு அறையில் பார்த்து எழுதுவதற்கு உதவுவது. கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பார்த்து எழுத, அவர்கள் அருகில் திறமிக்க மாணவர்கள் ‘டம்மி கேன்டிடேட்’ என்ற பெயரில் உட்கார வைக்கப்படுகிறார்கள்.

இது போன்று செயல்களில் திறமிக்க மாணவர்கள் மற்றும் வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்காக இவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் திறமையை வைத்து ₹25000 – ₹50000 வரை கொடுக்கப்படுகிறது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பதிலாக தேர்வு எழுதும் இவர்கள் ‘பெய்டு பிராக்சி [paid proxy]’ என்று சொல்லப்படுகிறார்கள்.

இது போன்று தேர்வு எழுதுவதற்காக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் ₹1,50,000 – ₹4,00,000 வரை மதிப்பிலான பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

இங்கே ஆள்மாறாட்டம் செய்யும் பொழுது, தேர்வு எழுதும் அறையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நுழைவுச் சீட்டில் [hall ticket] தேர்வெழுதுபவரின் புகைப்படம் ஆள்மாறாட்டம் செய்யும் ‘பெய்டு ப்ரோக்ஸியின்’ புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஆதலால் தேர்வு மேற்பார்வை செய்பவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரத்தில் சில தேர்வு அறை மேற்பார்வையளர்கள் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் சில மேற்பார்வையளர்கள் ‘பார்த்து எழுதும்’ மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களைக் கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். மேலும் அந்த மாணவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு ஒரு சான்று செங்கல்பட்டு சம்பவம்.

ஆனால் இப்படிப் பதிவு செய்யப்படும் வழக்குகள் மீது முறையான விசாரணை நடைபெறவில்லை. சில காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் உண்மையைச் சொல்லும் பட்சத்தில், செங்கல்பட்டு காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் போன்று நிகழ்ந்திருக்கின்றன.

இந்த நுழைவுத் தேர்வு முறைகேடு ஆறு வருடமாக நடந்து வருகிறது. மொத்தமாக 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது நடவடிக்கையும் நடந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் 17 பேர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள். சிலர் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள். மற்றும் சிலர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இங்கே கல்வியில் பின்தங்கிய மாணவர்களும் ‘பெய்டு ப்ராக்சி’-யும் இடைத்தரகர் மூலமாக இணைக்கப் படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்.

முறைப்படுத்தப்பட்ட இந்த முறைகேட்டின் தலைவன் மூலமாக

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற இடைத்தரகர்கள் ஒருங்கிணைந்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

மாவட்ட இடைத்தரகர்கள் சிலரிடம் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இவர்களை ஒருங்கிணைக்கும் தலைவன், அதாவது ‘ராக்கெட் லீடர் ஆஃப் திஸ் ஸ்கேம் [ rocket leader]’ என சொல்லப்படும் நபர் தலைமறைவாயிருக்கார்.

அவரைத் தேடும் பணியில் ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்’ காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தினால் இன்னும் பல தகவல்கள் வெளிவரும்.

இதுவே முதற்கட்ட அறிக்கையின் சாராம்சமாகும். இதனைச் சமர்ப்பித்துவிட்டு வந்த அலெக்ஸையும் தியாகுவையும் ஊடக நபர்கள் சுற்றிக் கொண்டார்கள்.

இடைப்பட்ட காலத்தில் செய்தி ஊடங்களில் வழக்கு பற்றி தீவிரமாகப் பேசப்பட்டதன் வெளிப்பாடாக முன்பை விட அதிக எண்ணிக்கையில் மைக்-கள் இருந்தன.

“சார் வேற யாருக்கெல்லாம் இந்த ஸ்கேம்-ல தொடர்பு உண்டு?” – ஊடகம்.

“இப்போதான் விசாரணை ஸ்டார்ட் ஆகியிருக்கு. ஸோ அடுத்தடுத்த விசாரணைகள்-ல தெரிய வரும்” என்று சொல்லிக் கொண்டே, அலெக்ஸ் ஊடக நபர்களைக் கடந்து சென்றார்.

“சார்! இதுல சம்மந்தப் பட்டவங்களுக்கு தண்டனை என்னவா இருக்கும்?” – ஊடகம்.

“ரிப்போர்ட் கொடுக்கிறது மட்டும்தான் எங்க வேலை. ஜட்ஜ்மென்ட் கோர்ட்-தான் சொல்லணும்” என்று தியாகு காரில் ஏறிக்கொண்டார்.

‘ராக்கெட் லீடர்தான் முக்கிய குற்றவாளியா?’ ‘ராக்கெட் லீடர் எப்போ பிடிபடுவான்?’ ‘டம்மி கேண்டிடேட்-க்கு எப்படி ஹால் டிக்கெட் கிடைச்சது?’ என அடுத்தடுத்து கேள்விகள் எழுந்தாலும், பதில்கள் ஏதும் சொல்லாமல் அலெக்ஸும் தன் காரில் ஏறினார்.

இந்த அறிக்கை சமர்ப்பித்த பின்பு, இந்த முறைகேடு வழக்கு அடிக்கடி ஊடங்களின் விவாதப்பொருளாக மாறியிருந்தது. பொதுமக்களிடமும் இதுபற்றிய பேச்சுக்கள் இருந்தது.

இதற்கு அடுத்த நாள் நீதிமன்ற தரப்பிலிருந்து, ‘இதுபோல் பெய்டு பிராக்சி பயன்படுத்தி தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல் வேண்டும்’ என விசாரணைக் குழுவிடம் கோரிக்கை வைத்தது.

மேலும், ‘அப்படித் தேர்வு எழுதிய மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தால் பாதியிலே படிப்பு நிறுத்தப்படும். வேலை செய்து கொண்டிருந்தால், அவர்களது படிப்பிற்கான சான்றிதழ் மற்றும் வேலை பறிக்கப்படும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

அடுத்து ஒரு பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…

அமைச்சர் ராகினி அவரின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். நேரம் 8:30 என்று சுவர்க் கடிகாரம் காட்டியது. சூழல் நாற்காலியில் கண்மூடிச் சாய்ந்து, கால் மேல் கால் தூக்கிப் போட்டபடி சுற்றிக் கொண்டே இருந்தார்.

எப்படி முயற்சி செய்தும் விசாரணைக் குழுவின் விசாரணையைத் தடுக்க முடியவில்லை. ஆளுங்கட்சியின் அமைச்சர் என்ற அரசியல் பலத்தை வைத்திருந்தும் இப்படிக் ஏதும் செய்ய முடியாமல் நிற்பதை நினைத்தால் ‘ச்சே!’ என்று இருந்தது.

ஊடங்களின் விவாதங்களில் நுழைவுத் தேர்வு முறைகேடு பற்றி நிறைய விவாதித்தார்கள். யூடியூப் காணொளிகளில், வாட்ஸ்அப் பார்வேர்டுகளில்… சுருக்கமாக சமூக வலைத்தளங்களில் இது பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதைத் தொடரவிடாமல் பார்த்துக் கொண்டார். இருந்த போதிலும் நிம்மதியாக மூச்சுவிட முடியாமல் யாரோ கழுத்தை நெறிப்பது போல் இருந்தது.

அக்கணம் அறைக் கதவை தட்டிவிட்டு உதவியாளர் ஒருவர் உள்ளே வந்து, ஏதோ சொன்னதும், ‘வரச் சொல்’ என சைகை செய்தார். சில நொடிகளில் ராகினி முன் அவரது பினாமிகளில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

“என்ன சொல்லுங்க?” என்று ராகினி அசதியாய் கேட்க, “இந்த வீடியோ பாருங்க” என்று பினாமி கைப்பேசியை நீட்டியதும், அதை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தார்.

‘வணக்கம்! மதி நியூஸ் சேனலுக்காக நான் உங்கள் மதி’ என்று ஆரம்பித்த காணொளியைக் காணக் காண ராகினியின் முகம் கடுங்கோபம் கொண்டதாக மாறியது.

“இந்த எவிடென்ஸ் எப்படி இந்தப் பையனுக்குக் கிடைச்சது. முதல இவன் யாரு? இவ்வளவு தைரியமா பேசியிருக்கான்” என இருந்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்க்கும் குரலில் கேட்டார்.

“யாருன்னு தெரியலை. ஆனா இது நம்மளை பத்தின ரெண்டாவது வீடியோ”

“அவனைப் போய் அடிச்சிக் கொல்லாம, என்கிட்ட வந்து கவுன்ட் சொல்லிக்கிட்டு இருக்க? வீடியோ பார்க்கச் சொல்ற?” என்று கத்தினார்.

“மேம்! நீங்க டென்ஷன் ஆகாதீங்க. ஆள் அனுப்பியாச்சு. எவிடென்ஸ் சோர்ஸ் எங்கன்னு கேட்கச் சொல்லியிருக்கேன். நாங்க பார்த்துகிறோம்” என்று சமாதானப்படுத்தினார்.

இதே நேரத்தில் மதி வீட்டில்…

பெரிய வீடெல்லாம் இல்லை. இரண்டு சிறு அறைகள் கொண்ட வீடுதான். அங்கிருந்த மடிக்கணினி உட்பட அனைத்துப் பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

உள்ளறையின் ஒரு மூலையில், உடலில் அங்கங்கே ரத்த காயங்கள் இருக்க, சில இடங்களில் ரத்தம் வடிய, பயத்துல நடுங்கியபடி மதி ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.

சுற்றிலும் நான்கு குண்டர்கள் நின்று, “உண்மையைச் சொல்லு, உனக்கு யார் இதைக் கொடுத்தா?” என்று ‘யாரென்று?’ தெரிந்து கொள்ளும் வெறியுடன் கேட்டனர்.

மீண்டும், “நானே…” என்று ஆரம்பித்ததும், குண்டர்கள் தங்கள் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார்கள். வலியைப் பொறுத்துக் கொண்டு, வாயைத் திறக்காமல் தாக்குப்பிடித்தான்.

இப்படித்தான் வெகுநேரமாக தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆனால், எவ்வளவுதான் அடி தாங்க முடியும். அதிலும் நான்கு பேர் சேர்ந்து கொண்டு ஒருவனை அடித்தால், எப்படித் தாங்க முடியும்? எப்படித் தடுக்க முடியும்?

இதில் ‘உயிரை எடுத்துவிடுவார்களோ?’ என்ற பயம் வேறு இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் வலி தாங்க முடியாமல், “சொல்லிடுறேன். சொல்றேன்” என்று கை எடுத்துக் கும்பிட்டவன், “சுடர் அக்காதான் கொடுத்தாங்க. அவங்கதான் எல்லாம் எடிட் பண்ணிக் கொடுத்தாங்க” என்று உண்மையைச் சொல்லிவிட்டான்.

“அது யாரு?” என்று உலுக்கிக் கேட்டதும், “எக்ஸ் மினிஸ்டர் லிங்கத்தோட பொண்ணு” என சொன்ன பின்தான் அடிப்பதை நிறுத்தினார்கள்.

அந்த விடயம் அப்படியே ஒவ்வொரு நிலை அடியாட்களைக் கடந்து பினாமியிடம் வந்தது. அவனும் ராகினியிடம் சொன்னான்.

“அதெப்படி? அந்தப் பொண்ணுக்கு கிடைச்சது” என பினாமி குழம்பும் பொழுதே, ராகினி பொறுமையாக யோசித்துப் பேசினார்.

“தலைவரும் பெரிசா சப்போர்ட் பண்ண தயங்கிறாரு. அவருக்குக் கட்சிப் பேரு முக்கியம். அவர் நினைக்கிறதுல தப்பில்லை. என்னை நான்தான் காப்பாத்திக்கணும்” என்று தன் நிலையைச் சரியாகப் புரிந்து பேசினார்.

பினாமி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்படி என்னைக் காப்பாத்த முடியலைன்னா, அட்லீஸ்ட் நான் இப்படி நிக்கிறதுக்கு காரணமானவங்களை பழி வாங்கணும்” என்று சொல்லும் பொழுது யாழ்மாறன் முகம்தான் கண்முன்னே வந்தது.

“அங்கே கேட்கலையா?” என்று பினாமி, அந்த ஆண்குரலைச் சுட்டிக் காட்டினான்.

“அப்புறமா சொல்லிக்கிறேன். இப்ப நான் சொல்ற மாதிரி செய்ங்க” என்று அதிகார தோரணையில் சொன்னார்.

“சொல்லுங்க மேம்” என்று பினாமி பணிந்தார்.

“முதல அந்தச் சேனல்-காரனை ரெண்டு விடீயோவையும் டெலீட் பண்ணச் சொல்லுங்க. அப்புறம், ‘இதை எதையும் வெளியே சொன்னா, உயிரோட விடமாட்டோம்-னு’ மிரட்டி விட்ருங்க”  

“சரி மேம்”

“அப்புறம் அந்த அமைச்சர் பொண்ண…” என்றதும், “எதுக்கு அதெல்லாம்? அமைச்சர் பொண்ண ஏதாவது பண்ணா நாம மாட்டிப்போம்” என்றார்.

“இதெல்லாம் ஆரம்பித்திலயே அடக்கி வைக்கணும். இப்படியே விட்டா, அப்புறம் ஒவ்வொருத்தரா பேசிக்கிட்டு இருப்பாங்க” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.

“சரி! என்ன பண்ணனும்னு சொல்லுங்க?”

“சொல்றேன். ஆனா, இன்னைக்கு வேண்டாம். கொஞ்ச நாள் கழிச்சி நான் சொல்ற மாதிரி பண்ணுங்க” என்று சுடரை, ‘என்ன செய்ய வேண்டும்?’ என பினாமியிடம் சொல்லி முடித்தார்.

சில நாட்கள் கழித்து…

சென்னை பாண்டிச்சேரி நெடுஞ்சாலை!

தோழியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறாள். நேரம் மதியம் 2:20 என்று காரிலிருந்த கடிகாரம் காட்டியது.

சாப்பிட்டு ஓய்வெடுக்கும் வேளை என்பதால், சாலையில் பெரிதாக வாகனப் போக்குவரத்து இல்லை. காரை ஓட்டியபடி பாடல்கள் கேட்டு வந்தவளுக்கு மதியிடமிருந்து அழைப்பு வந்தது.

பாடலை நிறுத்திவிட்டு, அழைப்பை ஏற்று, “சொல்லு மதி. எப்படி இருக்க?” என்றாள்.

“அக்கா” என்று சோர்வுடன் அவன் அழைத்ததும், “ஏய்! என்னாச்சு மதி?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

“க்கா! என்ட்ரன்ஸ் எக்ஸாம் பத்தி யூடூயூப் சேனல்-ல போட்ட வீடியோவைப் பார்த்திட்டு வந்து நாலஞ்சி பேரு அடிச்சாங்க” என்று வலியின் தாக்கம் இன்றும் குறையாத குரலில் சொன்னான்.

“இது எப்போ மதி? நீ ஏன் அப்பவே சொல்லலை? இப்போ நீ எப்படி இருக்க?” என்று படபடப்புடன் கேள்விகளை அடுக்கினாள்.

“கொஞ்ச நாள் முன்னாடி. அப்போ முடியலை-க்கா. ஈரோடு-ல இருக்க பயந்திட்டு, எங்க ஊருக்கு வந்துட்டேன். இப்ப பரவால்ல-க்கா” என்று காயங்களின்

மேலும் அன்று நடந்ததிச் சொல்லி, “உங்களை கேர்ஃபுல்லா இருக்கச் சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்” என்றான்.

“ம்ம் சரி மதி. நான் பார்த்துக்கிறேன்” என்றவள், “ஆனா இதை இப்படியே விட வேண்டாம். நீ கிளம்பி வா போலீஸ் கம்பளைன்ட் கொடுக்கலாம்” என்றாள்.

“வேண்டாம்-க்கா. இப்படியே இது முடியட்டும். என்னால இதுக்கு மேல முடியாது. ப்ளீஸ்-கா யார்கிட்டயும் எதுவும் சொல்லிடாதீங்க” என்று பயத்துடன் கெஞ்சினான்.

“பயப்பிடாத மதி நான்…” என்கையிலே, “அக்கா ப்ளீஸ். உங்களுக்கு ஈஸியா இருக்கும். பட் எனக்கு போலீஸ் ஸ்டேஷன் அலையறதெல்லாம் கஷ்டம். வீட்ல விடமாட்டாங்க. இதுக்கே ரொம்பப் பயந்து போய் இருக்காங்க” என்று அவன் நிலைமையைச் சொன்னான்.

அதைப் புரிந்து கொண்டவள், “சரி மதி, இப்போ வேண்டாம். உனக்குச் சரியாகட்டும், அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லி, பேச்சை முடித்தாள்.

“வச்சிடுறேன்-க்கா” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.

கைப்பேசியை வைத்துவிட்டு மதி சொல்லியதை அசைபோட்டுக் கொண்டே காரை ஓட்டியவளுக்கு, தீடீரென்று சாலையில் வேறுபாடு தெரிந்தது.

வெகு நேரமாக முன்னே ஒரு கார் சென்று கொண்டிருப்பதையும், பின்னே ஒரு கார் வந்து கொண்டிருப்பதையும் கவனித்தாள். மேலும் கானல் நீர் தெரிந்த சாலையில் பெரிதாக வாகனப் போக்குவரத்து இல்லை என்பதையும் உணர்ந்தாள்.

பின் தொடர்ந்து வரும் காரை கண்ணாடி வழியே பார்த்தாள். சட்டென ஏதோ நெருடல் தோன்றியதும், முன் செல்லும் காரை கடந்து செல்ல நினைத்து வேகத்தை அதிகப்படுத்தினாள்.

ஆனால், அதற்கு முன்னே சென்று கொண்டிருந்த கார் விடவில்லை. ‘என்ன நடக்கிறது?’ என்று யோசிக்கும் பொழுதே, ‘கவனமா இரு’ என்று மாறன்-லிங்கம்-மதி சொன்னது நியாபகத்திற்கு வந்து, ‘ஏதோ நடக்கப் போகிறது?’ என மனம் அடித்துக் கொண்டது.

ஏதோ மாட்டிக் கொண்டது போல் உணர்வு வந்ததும், சுடருக்கு உள்ளுக்குள் பயம் வர ஆரம்பித்தது.


Dears,

கதையில் வரும் சம்பவங்களும், பெயர்களும் கற்பனையே. after this epsiode நீங்க கொஞ்சம் guess பண்ணியிருப்பீங்க. இருந்தாலும் 12th episode-ல நான் share பண்ண நினைச்சதை உங்ககிட்ட share பண்ணிக்கிறேன்.

Disclaimer : 

எந்த ஒரு சமுதாயமும் ( I meant மாணவர்களோ, அரசியல்வாதிகளோ) ஒட்டுமொத்தமாகத் தவறாகச் சித்தரிக்கப்படவில்லை. அதிலிருக்கும் விதிவிலக்குகள் பற்றியே பேசப்பட்டிருக்கிறது.