YALOVIYAM 5.1

YALOVIYAM 5.1


யாழோவியம்


அத்தியாயம் – 5

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்

காவல் நிலையத்தில் இறந்த மாணவனின் மறு உடற்கூறாய்வு அறிக்கை வந்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றிய செய்திகள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வர ஆரம்பித்திருந்தன. ஆனால் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.

சில இயக்கங்கள் மட்டும் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தன. இருந்தாலும் பொதுமக்களிடம் பரவலாக இந்தச் செய்தி சென்று சேரவில்லை.

இந்த நிலையில் இது குறித்துப் பேசுவதற்காக, ஆட்சியர் அலுவலக கூட்டம் நடக்கும் அறையில் மாறன் மற்றும் சசி அமர்ந்திருந்தனர்.

உடற்கூறாய்வு நகலை வைத்துக் கொண்டு, “சொல்லு சசி. அன்னைக்கு சூசைட்-ன்னு சொன்ன?! இன்னைக்கு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேற மாதிரி இருக்கு” என்று மாறன் ஆரம்பித்தான்.

ஆம்! அன்று சிறைக் கம்பிகளில் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்ததாக வந்த உடற்கூறாய்வு அறிக்கை, இன்று பின்னந்தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்து இறந்து போயிருப்பதாகக் கூறுகிறது.

ஆதலால்தான் சசி பதிலில்லாமல் இருந்தான். அப்படி இருந்தவனை, “இதுக்கு என்ன சொல்லப் போற?” என்று கேட்டான்.

“மாறன்! ஃபர்ஸ்ட் போஸ்ட் மார்ட்டம் பண்ண டாக்டர்ஸ் இதுக்கு ரீசன் இருக்கு-ன்னு சொல்றாங்க”

“என்ன ரீசன்?”

“ஃபர்ஸ்ட் போஸ்ட் மார்ட்டம், ஸ்டுடென்ட் இறந்தவுடனே நடந்திருக்கு. ஸோ, ஸ்வெல் (வீக்கம்) தெரியலை. இது 24 அவர்ஸ்-க்கு அப்புறம் நடந்ததால, தெரிய வந்திருக்கு-ன்னு சொல்றாங்க”

“இதை நீ நம்புறீயா?”

‘கண்டிப்பாக மாட்டேன்’ என்பது போல் மறுத்து தலையசைத்ததும், “அப்புறம் நான் மட்டும் எப்படி நம்புவேன்?” என்று மாறன் கேட்டான்.

சசி அமைதியாக இருந்தான்.

“ஓகே லீவ் தட்! எப்படி அடிபட்டது-ன்னு தெரியுமா?”

“விசாரிக்கிறதுக்காக போலீஸ் அடிச்சிருக்காங்க. அப்போ வந்த காயம்-ன்னுதான் ஸ்டேஷன் ரைட்டர் சொல்றாரு”

“இதை ஏன் அன்னைக்கே அவர் சொல்லலை?”

“ஃபர்ஸ்ட் கேஸ் இந்த மாதிரி ஆங்கிள்-ல போகலையே? செகன்ட் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்து, ஸ்டேஷன்-ல கேட்டப்போ… அவர் இதைச் சொன்னாரு”

“சரி! அந்த ஸ்டுடென்ட்-ட அரெஸ்ட் பண்ணது யாரு?”

“சப் இன்ஸ்பெக்டர். ஆனா இன்சிடென்ட் நடந்த நேரத்தில ஸ்டேஷன்-ல இருந்தது இன்ஸ்பெக்டர். அவரும் நைட் டூட்டி பார்த்த கான்ஸ்டபிளும் விசாரிக்கும் போது அடிச்சிருக்காங்க. இது ரைட்டர் சொன்னது”

“என்ட்ரன்ஸ் எக்ஸாம்-ல காப்பி பண்றதுக்கு ஹெல்ப் பண்ணவனை, ஏன் அடிச்சி விசாரிக்கணும்?!” என்று மாறனுக்குச் சந்தேகப்படத் தோன்றியது.

“நடந்தது இன்ஸ்பெக்டரோட கேர்லெஸ்-ன்னு நினைச்சாலும், அது அப்படியில்லைன்னு சொல்ற மாதிரி மேல இருந்து ப்ரெஸ்ஸர் வருது” என்று தன்னுடைய சந்தேகத்தை சசி முன்னெடுத்து வைத்தான்.

“இது எப்போ?”

“நீ செகன்ட் போஸ்ட் மார்ட்டம்-க்கு ஆர்டர் இஸ்யூ பண்ண பார்த்தியா? அப்ப வந்தது. ‘கேஸ் கிளோஸ் பண்ணனும்னு’ சொன்னாங்க. பட், ‘டிஎம் ஆர்டர் நான் எதுவும் செய்ய முடியாதுன்னு’ சொல்லிட்டேன்”

“யாருன்னு தெரியுமா சசி? நீ ஏன் என்கிட்ட சொல்லலை?”

“டிபார்ட்மென்ட்-லயே சிலபேர். பட் இதெல்லாம் பழகிடுச்சு. அதெல்லாம் பார்த்தா, எதுவும் பண்ண முடியாது. நீ கேஸ் பத்தி பேசு”

“அந்தப் பையனோட அம்மா சொன்னாங்க, அவன் இன்ஜினீரியங் முடிச்ச பையன்னு. அப்புறம் ஏன் திரும்பவும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதணும்? முதல எப்படி எழுத முடியும்? கேஸ் இங்க வேறயா சசி?” என்று வழக்கை வேறொரு கோணத்தில் இருந்து மாறன் பார்த்தான்.

‘ஏற்கனவே பொறியியல் படிப்பு முடித்தவன், எதற்காக மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்?’ என்ற சந்தேகம் சசிக்கு இருந்தாலும், “டிஐஜி கூட ஈவினிங் மீட்டிங் இருக்கு. அந்தப் பையன் பேமிலி, இன்ஸ்பெக்டர் மேல ஆக்சன் எடுத்தா-தான் பாடியை வாங்குவோம்னு சொல்றாங்க. ஸோ, நான் இதை முதல சரி பண்ணனும் மாறன்” என்று தன் கடமைகளைச் சொன்னான்.

‘புரியுது’ என்பது போல் மாறன் தலையை அசைத்தாலும், “அப்போ கேஸ் ப்ரோசீட் பண்ண மாட்டிங்களா?” என்று கேட்டான்.

“அந்தப் பையன் இப்போ உயிரோட இல்லை. யார்கிட்ட விசாரிக்க? பட், இன்ஸ்பெக்டர் மேல என்கொய்ரி இருக்கும்”

“எனக்கு ஒரு டவுட் சசி. அரெஸ்ட் பண்ணது சப் இன்ஸ்பெக்டர். அப்போ அவர் அந்தப் பையனை விசாரிச்சிருப்பார்-ல?”

“விசாரிச்சிருக்கலாம்” என்று உறுதியில்லாமல் சொன்னாலும், “அப்புறம் ஏன் இன்ஸ்பெக்டர் விசாரிக்கணும்?” என்ற வலுவான சந்தேகம் சசிக்கு வந்தது.

“ஒருவேளை சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறப்போ, அந்தப் பையன் ஏதாவது உண்மையைச் சொல்லியிருந்தா? அந்த உண்மை வெளிய வரக் கூடாதுன்னு, இப்படி பண்ணியிருந்தா?” என்று சந்தேகித்த மாறன், “இதை அப்படியே விட முடியாது சசி” என்று உறுதியாகச் சொன்னான்.

“சரி என்ன பண்ண?”

“இன்ஸ்பெக்டர் சஸ்பென்ஷன், என்கொய்ரி-ன்னு நடந்தாலும், இங்க எக்ஸாம் ஹால்-லதான் ஏதோ பிரச்சனை-னு தோணுது. அதைப் பத்தின விசாரணை வேணும். நீ என்ன நினைக்கிற?”

“நீ சொல்றது கரெக்ட்தான்” என்று சொன்னதோடு சசி விட்டுவிட்டான்.

சில நொடிகள் யோசித்த மாறன், “ஹால் சூப்பர்வைசர் ஏன் டேரக்ட்டா போலீஸ்-க்கு இன்பாஃர்ம் பண்ணனும்?” என்றொரு கேள்வி கேட்டான்.

“இது யூஸ்வல்தான். கேஸ் ஆஃப் சீட்டிங் அன்டர் செக்ஷன் 420-ல எப்ஐஆர் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு” என்று பேசும் போதே, “மாறன்! சூப்பர்வைசர்-க்கு ஏதோ தெரிஞ்சிருக்கு-ன்னு சொல்ல வர்றியா?” என பதில் கேள்வி கேட்டு , நெற்றி முடிச்சுகளுடன் சசி இருந்தான்.

“சூப்பர்வைசர்-க்கு ஏதும் உண்மை தெரியுமா? சப் இன்ஸ்பெக்டர்-கிட்ட அந்தப் பையன் ஏதாவது சொல்லயிருப்பானா? விசாரிக்கிறது ஓகே. பட், அடிச்சி விசாரிக்கிற அளவுக்கு காப்பி பண்றது அவ்ளோ பெரிய க்ரைமா?

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்ஜினியரிங் முடிச்ச பையன் ஏன் திரும்ப என்ட்ரன்ஸ் எழுதணும்-ங்கிறது புரியவே இல்லை” என்று சொல்லி கொஞ்சம் இடைவெளிவிட்ட மாறன்… கடைசியில், “சசி! சீட்டிங் கேஸ் கிளோஸ் பண்ண வேண்டாம். பர்தர் இன்வெஸ்டிகேஷனுக்கு ஆர்டர் இஸ்யூ பண்றேன்” என்றான்.

“தட்ஸ் பைன்! அப்போ ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர், ஹால் சூப்பர்வைசர் ரெண்டு பேரையும் விசாரணைக்குள்ள கொண்டு வரலாம்”

“அப்ப, என்ன பிரச்சனைன்னு தெரிய வர்றதுக்கு சான்ஸ் இருக்கு!” என்று மாறன் நம்பிக்கையாகச் சொன்னதும், சசி எழுந்து கொண்டு, “கிளம்புறேன் மாறன். நீ ஆர்டர் இஸ்யூ பண்ணு. பார்க்கலாம்” என்றான்.

மாறனும் எழுந்து, “ம்ம்ம், சரி! பட், எதுனாலும் கேர்ஃபுல்லா பண்ணு சசி” என்று சொல்லி, அவனை வழியனுப்பி வைத்தான்.

அவன் சென்றதும், மாறன் அதற்கடுத்து இருந்த வேலைகளில் கவனத்தைச் செலுத்தினான்.

செங்கல்பட்டு ஆட்சியார் பங்களா, இரவு நேரம்

தனக்கான அரசு வாகனத்தில் வந்து இறங்கியவன், சில கோப்புகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லப் போகையில், “மாறன்! அப்பா இங்கே இருக்கேன்” என்று சொன்னதும், திரும்பிப் பார்த்தான்.

சுற்றுச் சுவருக்குள் போட்டிருந்த மூங்கில் நாற்காலியில் தியாகு இருந்தார். அங்கே வந்தவன், எதிரே கிடந்த நாற்காலியில் அயர்வுடன் அமர்ந்தான்.

பின், “என்ன-ப்பா இங்கே உட்கார்ந்திருக்கீங்க? அம்மா இன்னும் வரலையா?” என்று கேட்டான்.

“வந்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னா” என்றவர், ” ஏன் ஒரு மாதிரி இருக்க! அந்த இன்ஜினீரியங் ஸ்டுடென்ட் டெத் கேஸ்?” என்று கேட்டார்.

“ம்ம்ம். ஸ்டேஷன் போலீஸ், டாக்டர்ஸ் இன்ப்ளுயன்ஸ் ஆகிருக்காங்க. அதான் ஃபர்ஸ்ட் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தப்பா வந்திருக்கு”

தன் அனுபவத்தில், “இதெல்லாம் நடக்கிறதுதான் மாறன்” என்றார்.

“பர்தர் இன்வெஸ்டிகேஷன் பண்ணச் சொல்லணும். சசிதான் பார்க்கிறான். அவனுக்கும் டிபார்ட்மென்ட்-ல ப்ரெஷ்ஷர் இருக்கு போல” என்று இமைகள் மூடிக் கொண்டு இருகிப் போய்ச் சொன்னான்.

“இதுவும் நடக்கும்” என எழுந்தவர், “கம் ஆன்! கெட் அப். ஒரு வாக் போகலாம்” என்று, அவனை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

“இப்போ வேண்டாம்-ப்பா” என்று மறுத்துவிட்டான்.

“ஷட்டில்??” என்று அவனுக்குப் பிடித்ததைக் கேட்டதும், “யெஸ்! ரொம்ப நாளாச்சு” என சோர்வு நீங்கிய குரலில் சொல்லி, எழுந்து கொண்டான்.

மேலும், “நீங்க இருங்க! நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு, எல்லாம் எடுத்திட்டு வர்றேன்” என்று வீட்டின் உள்ளே ஓடினான்.

சற்று நேரத்தில் வேறு உடையை மாற்றி மாறன் வெளியே வரும் பொழுது, தியாகுவும் திலோவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ம்மா! நீங்க எப்போ வந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே, வலையைக் கட்ட ஆரம்பித்தான்.

“டூ மினிட்ஸ் முன்னாடிதான்” என்றவர், “விளையாடிட்டு இருங்க. ரெப்பிரஷ் பண்ணிட்டு வர்றேன்” என திலோ உள்ளே சென்றார்.

அரை மணிநேரம் வியர்க்க விறுவிறுக்க தியாகுவும், மாறனும் விளையாடிக் கொண்டிருக்கையில்… திலோ கணவரின் பக்கம் வந்து, “தியாகு! நானும்” என கேட்டதும்… ‘ஷட்டில் பேட்டை’ அவர் கையில் கொடுத்துவிட்டு, தியாகு ஒதுங்கி நின்றார்.

விளையாடிக் கொண்டே, “ம்மா! டூ த்ரீ சர்வீஸ்-தான். டயர்டா இருக்கு” என்றதும், “ஓகே” என்று திலோ விளையாட ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, “நான் உள்ளே போறேன்” என்று மாறன் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும், கணவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “தியாகு! மாறன் ஏன் ஒரு மாதிரி இருக்கான்?” என்று கேட்டார்.

“நத்திங் மச்! ஒர்க் டென்சன். அவ்வளவுதான். ஹேண்டில் பண்ணிடுவான்” என்றதும், “உங்களை மாதிரியே” என்று புன்னகைத்து, திலோ கணவரின் தோளில் சாய்ந்தார். அதன் பின்பும், இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

லிங்கம் வீடு

சுடரின் அறை

சேகரித்த தகவல்களைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். வெகுநேரம் குனிந்தே இருந்ததால் கழுத்து வலித்தது. கண்கள் ஓய்வைத் தேடின.

தளர்விற்காக இருக்கையில் சாய்ந்து கண்மூடியவளுக்குள், ‘இவ்வளவு பெரிய நியூஸ்! ஏன் யாருமே பேச மாட்டிக்கிறாங்க?’ என ஆரம்பித்து நிறைய வினாக்கள் வந்து விழுந்தன.  

அந்தக் கேள்விகளால் புருவ மத்தியில் ஒரு வலி உண்டானது. உடனே தலையை உலுக்கி, ‘ரிலாக்ஸ் சுடர். நியூஸ் கொடுக்கிறது மட்டும்தான் உன் வேலை. அதை ஒழுங்கா பண்ணு’ என்று தனக்குள்ளே சொல்லும் பொழுது, கைப்பேசி அழைப்பு வந்தது.

திரையில் தெரிந்த ‘மாறா’ என்ற பெயரைப் பார்த்தவள், ‘ரிலாக்ஸ் பண்ண சரியான ஆளு’ என நினைத்து, “ஹலோ யாரு?” என்றாள், அழைப்பவனை அலைக்கழிக்கும் எண்ணத்துடன்!

அன்றைய பொழுதின் அலுப்புத் தீர அக்கடா என்று படுத்திருந்தவன், “யாரா?” என்று எகிறிக் கொண்டு வந்தான்.

“ஹை! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!!’ என எண்ணும் பொழுதே, “இந்த நேரத்தில நான் கால் பண்ணுவேன்-ன்னு தெரியாதா?” என்ற கேள்வி கேட்டான்

‘காதலனுடன் பேசுகின்றோம்’ என்ற கொண்டாட்டம் முகத்தில் தெரிய, “ஓ! நீதானா?” என சாதாரணமானக் குரலில் கேட்டாள்.

‘என்னது நீதானா-வா??’ என்பது போல் எழுந்து அமர்ந்தவன், “என்ன பண்ற சுடர்?” என்றான்.

“ஒரு இம்பார்ட்டன்ட் ஒர்க்! டிஸ்டர்ப் பண்ற மாதிரி உன்னோட இன்கம்மிங் கால்” என, அவன் அழைப்பை இடைஞ்சல் என்று காட்டிக் கொண்டாள்.

முட்டி மோதிக் கொண்டு வந்த கோபத்தில், “இம்பார்ட்டன்ட் ஒர்க்-னா எதுக்கு கால் அட்டென் பண்ற?” என்று சிடுசிடுத்தான்.

அந்தச் சிடுசிடுப்பை கிடுகிடுவென உயர்த்தும் வகையில், எங்கேயோ பார்த்துக் கொண்டு விசைப்பலகையின் மேல் வேகமாகத் தட்டச்சு செய்தாள்.

அந்தச் சத்தம் கேட்டதும், “ஹலோ! நான் பேசறதைக் கவனிக்கிறியா? இல்லையா?” என்று எரிச்சலடைந்தான்.

அவன் பேச்சை ரசித்தபடியே, “ஆங்! என்ன சொன்ன?” எனக் கேட்டு, ‘உன் பேச்சை கவனிக்கவில்லை’ என்று பாசாங்கு செய்தாள்.

‘நிஜமாவே இம்பார்ட்டன்ட் ஒர்க்-கா?’ என குழம்பியவன், “என்ன ஒர்க் சுடர்?” என்று கரிசனமாகக் கேட்டான்.

அந்தக் கரிசனத்தில் கனிந்தொழுகினாலும், “ஒரு யூடுயூப் சேனலுக்கு நியூஸ் எடிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்?” என்று, ‘ஏதோ பதிலளிக்க வேண்டும்?’ என்ற கணக்கிற்குச் சொன்னது போல் சொன்னாள்.

‘இதற்கு மேல் என்ன செய்ய?’ என்ற இயலாமையில், “ஓகே! குட் நைட்” என்று முடிக்கப் பார்த்தான்.

“குட் நைட் மட்டும் சொல்றதுன்னா, டெக்ஸ்ட் பண்ணியிருக்கலாமே மாறா? எதுக்கு கால் பண்ணி என்னோட டைம் வேஸ்ட் பண்ற?”

“வாட்! கலெக்டர் நானே டைம் ஒதுக்கிறப்போ, உனக்கென்ன?” என்று ஒரு வேகத்தில் கேட்டுவிட்டான்.

“ஆங்! ஆங்! ஆங் என்னது?”

‘அய்யயோ! இதுக்கு வேற சண்டை போடுவாளே’ என நினைத்தவன், “லவ்வர் ஃபோன் பண்றப்போ, டைம் வேஸ்ட்-ன்னு சொல்வாங்களா?” என்று சமாதானமாகக் கேட்டான்.

‘மாறா நீ பேசறது அழகு!’ என்று ஆனந்தம் கொண்டாலும், “ம்ம்ம்! இது கொஞ்சம் பெட்டர்” என்று அக்கப்போர் செய்தாள்.

‘ரொம்ப ஓவரா போறாளே?! இவளை இப்படியே விடவா?’ என புகைந்தவன், “ஓகே! இன்னைக்கு நான் சீக்கிரமா தூங்கணும். ஸோ… குட் நைட்” என்றான்.

கொஞ்சம் யோசித்தவள், “ஏன் சீக்கிரமா தூங்கணும்?” என்று கேட்டாள்.

‘உன்னை அலைக்கழிப்பது, இப்பொழுது என் முறை’ என நினைத்தவன், “நாளைக்கு எனக்கொரு இம்பார்ட்டன்ட் ப்ரோக்ராம் இருக்கு சுடர்” என்றான்.

இலகுவாக படுத்திருந்தவள், “ப்ரோக்ராமா? என்ன ப்ரோக்ராம்?” என்று எழுந்து அமர்ந்து கேட்டாள்.

‘அப்படிக் கேளு’ எனத் துள்ளியவன், “ஒரு காலேஜ்-ல சீஃப் கெஸ்ட்-டா கூப்பிட்டிருக்காங்க” என எளிதாகச் சொல்லி, மீண்டும் தலையணையில் தலை சாய்த்துக் கொண்டான்.

‘காலேஜ்ஆஆ??’ என்று கருவிழிகளை உருட்டி யோசித்தவள், “என்ன காலேஜ் மாறா?” என்று கனிவுடன் கேட்டாள்.

“ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ். செங்கல்பட்லருந்து தாம்பிரம் போற வழியில…” என விலாசம் சொல்லப் போகையில், “மாறா! நான் அதைக் கேட்கலைன்னு உனக்கே தெரியும்” என்று கடுகடுத்தாள்.

“வேற எதைக் கேட்கிற சுடர்? எனக்குப் புரியலையே!”

‘ஆஆ!’ என்று அடக்கப்பட்ட ஆத்திரத்தில் ஒரு முறை கண்மூடித் திறந்து, “விமன்ஸ் காலேஜ்-ஆ?” என்று அமைதியான குரலில் கேட்டாள்.

“ஆமாங்க மேடம்” என்று கேலியாகச் சொன்னதும், “அதுக்கு எதுக்கு சீக்கிரம் தூங்கணும் மாறா?” என்று கீழ்க்குரலில் கத்தினாள்.

“அப்போதான் பேஸ் டல்லா தெரியாது” என்றதும், முகத்தைச் சுருக்கிக், ‘ஏன் இப்படிப் பண்ற?’ என்பது போல் அலுத்துக் கொண்டாள்.

“அப்புறம் சுடர்! என்ன டிரஸ் போட்டு போகலாம்? ஏதாவது ஐடியா கொடு??” என வெறுப்பேற்றினான்.

‘ரொம்ப முக்கியம்! சொல்ல மாட்டேன் போ’ என்பது போல் அமைதியாக இருந்தாள்.

“பார்மல்ஸ் போட்டுப் போகட்டுமா? இல்லை, உன் அண்ணன் மாதிரி வேஷ்டி சட்டைன்னு கலக்கலாமா?” என கேட்டவன், “சுடர்! நீ என்ன சொல்றியோ அதான்” என்று வேறு சொன்னான்.

“இப்போ எதுக்கு ராஜாண்ணா-வ இழுக்கிற?”

“அவனைப் பத்தி நல்லவிதமா-தான சொன்னேன். அதுவும் தப்பா??” எனக் கேட்டதும், ‘என்ன பேச?’ என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள்.

“சரி விடு. நீ ஏதோ இம்பார்ட்டன்ட் ஒர்க்-ன்னு சொன்னியே அதையே பாரு” என்று பேச்சை முடிக்கையில், “மாறா ஃபோன் வைக்காத” என அனலடிக்கும் குரலில் சொன்னாள்.

“ஏன்-ம்மா?” என்று அனுசரணையாகக் கேட்டான்.

“இன்னைக்கு ரொம்ப நேரம் பேசணும்”

“வெரி சாரி! ஏர்லி டு பெட் அன்ட் ஏர்லி டு ரைஸ் மேக்ஸ் எ மென் ஹெல்த்தி, வெல்த்தி அன்ட் வைஸ்”

உண்டான கோபத்தில், “என்னடா என்னை வெறுப்பேத்தி பார்க்கிறியா?” என்று கத்தினாள்.

‘ஐயோ இதெல்லாம் பக்கத்தில இருந்து கேட்கணும்’ என்று குதூகலமாக நினைத்தாலும், “என்னது டா-வா?” என்று ஆட்சேபிக்கும் குரலில் கேட்டதும், “மாறா” என்று ஏகத்துக்கும் குழைந்து அழைத்துப் பார்த்தாள்.

“நீ எப்படிக் கூப்பிட்டாலும்… குட் நைட்-தான்” என்றவன், “ஆனா ஒன்னு சுடர்?!” என்று நிறுத்தியதும், “என்ன?” என்று கேட்டாள்.

அதுவரை கேலி செய்யும் குரலில் பேசியவன், “காலேஜ் படிக்கிறப்போ எப்படி இருந்தியோ, அப்படியே இருக்க! மாறவேயில்லை” என அவளைக் காலி செய்யும் குரலில் பேசினான்.

ஒரு அமைதி. அந்த அமைதியில் அலைபேசி அலைவரிசையின் கம்பிகளில் அமர்ந்து இரு சிட்டுக்களின் அமைதியான அன்பின் பரிமாற்றங்கள் நடந்தன.

“என்ன பேச்சே காணோம்? பேசு சுடர்! எவ்வளவுனாலும் பேசு!! மார்னிங் வரைக்கும் தூங்காம கேட்க ரெடி” என்று காலாவதி ஆகிப்போகாத தன் காதலைக் காட்டும் குரலில் பேசினான்.

“நீ பேசு மாறா. லைஃப் ஃபுல்லா கேட்கிறேன்” என்று காலம் முழுமைக்குமான காதலைக் கொட்டும் குரலில் சொன்னாள்.

அவளின் பேச்சைக் கேட்டதும் எழுந்த ஆவலில், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்றான்.

“ம்ம்ம்! குட் நைட்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

கைப்பேசியை வைத்ததும் சுடரின் மனம், ‘மாறவேயில்லை’ என மாறன் சொல்லக் காரணமான கல்லூரி நாட்களில் நடந்த நிகழ்வை நோக்கிச் சென்றது.


Leave a Reply

error: Content is protected !!