YALOVIYAM 5.2

YALOVIYAM 5.2


யாழோவியம்


அத்தியாயம் – 5

காதல் ஓவியம், அத்தியாயம் – 4

நீளமான கல்லூரி நடைகூடம்.

அதன் ஒருபக்கம் வகுப்பறைகள். ஒவ்வொரு வகுப்பறை வெளிபுறச் சுவரிலும் சுற்றறிக்கை மற்றும் சில துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்த பொது அறிவுப்பு பலகை  இருந்தது.

மற்றொரு பக்கம் வரிசையாகத் தூண்கள் இருந்தன.

அந்தத் தூண்களில் ஒன்றின் மேல் மாறன் சாய்ந்து நின்றிருந்தான். கையில் திறந்து வைக்கப்பட்ட புத்தகம் இருந்தது. அவனைச் சுற்றி, அவனது தோழன் மற்றும் அவன் வகுப்பு மாணவிகள் சிலர் இருந்தனர்.

சுற்றி நின்றவர்கள் கவனமாகக் கவனிக்க… புத்தகத்தை வாசித்து வாசித்து அவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான்.

தற்செயலாக அந்தப் பக்கம் வந்த சுடர், மாறன் நிற்பதைப் பார்த்ததும், கை உயர்த்தி அசைத்து, அவனது கவனம் ஈர்க்கப் பார்த்தாள். ஆனால், அவன் கவனிக்கவில்லை.

‘ச்சே’ என்று குனிந்து கொண்டாள். ஆனால், அடுத்த நொடியே ‘பேர் சொல்லிக் கூப்பிடலாமே!?’ என யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் சுற்றி நின்றவர்கள் தெரிந்ததும், ‘எப்படி எல்லோர் முன்னிலும்?’ என்று வாய் மூடிக் கொண்டாள்.

‘சரி! காத்திருந்து பேசலாம்?’ என்று முடிவெடுத்ததும், ஓடிச்சென்று ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டு மாறனைப் பார்த்தாள்.

கருத்தாகக் கைகளை அசைத்துப் பாடம் சொல்லிக் கொடுப்பவனை, சுடரின் கண்கள் படம் எடுக்கத் தொடங்கின. அவன் கைவிரல்கள் போய் வரும் திசைக்கெல்லாம் அவள் விழிகளும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தன.

சில சமயம் மாறன் சிரித்துப் பேசியதில், தன்னிடம்தான்… தன் எதிரில் நின்றுதான் பேசுகிறான் என்பது போல் சிரித்துக் கொண்டாள்.

பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு, அவன் அருகில் நிற்கும் மாணவிகளைப் பார்க்கையில் பொறாமை உணர்வு பொங்கி வந்தது.

அவனைப் பார்ப்பதை விட்டுவிட்டு, சட்டென வேறு பக்கம் திரும்பி நின்றாள். அலைந்து திரிந்து வந்தது போல் மூச்சுக்காற்றுகள் வந்து போயின.

‘தான் ஏன் இப்படிப் பொறாமைப் படுகிறோம்?’ என யோசித்தாள். சற்றுத் தொலைவில் நிற்பவனிடம், மனம் தொலைந்து விட்டதைக் கண்டுபிடித்தாள். சில்லென்று உணர்ந்தாள். சில்லு சில்லாய் ஆனாள். சிலாகித்துக் கொண்டாள். சிக்கித் தவிக்கத் தயாரானாள்.

மீண்டும் தூணின் மறைவிலிருந்து எட்டிப் பார்க்கையில், மாணவிகள் சென்றிருந்தனர். அதீத அன்பினால் உருவானக் கோபத்துடன் மாறனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

யாழோவியம் அத்தியாயம் – 5 தொடர்கிறது

மெத்தையில் பொத்தென்று தலை சாய்த்தவள், அதற்கு அடுத்து தான் செய்த செயலை நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்கையில், “சுடர்” என்று லதாவின் குரல் கேட்டது.

பட்டென்று எழுந்தமர்ந்தாள். அதே வேகத்தில், “ம்மா” என்றழைத்து, கட்டிலில் இருந்து இறங்கினாள். அதே நேரத்தில், லதாவும் அவளருகில் வந்திருந்தார்.

“என்னம்மா என்ன வேணும்?”

“ராஜா-க்கு ஃபோன் பண்ணேன். எடுக்கவே மாட்டிக்கிறான்” என்று ஒருவித சோர்வுடன் சொன்னார்.

“ப்ச்! நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கிறீங்க?” என்று கண்டிக்கும் தொனியில் கேட்டாலும், “இந்நேரம் வீட்லதான் இருப்பாங்க. இருங்க, நான் ட்ரை பண்றேன்” என்று, தன் கைப்பேசியிலிருந்து ராஜாவிற்கு அழைத்தாள்.

முழு ‘ரிங்’ போன பிறகும் அழைப்பு ஏற்கப்படவில்லை. சுடர் முகம் ஒருமாதிரி ஆயிற்று. வெகு சில நாட்கள் தவிர, இதுவரை அவளது அழைப்பை ராஜா ஏற்காமல் இருந்ததேயில்லை.

அந்த வெகு சிலநாட்களும், ‘கட்சி வேலையாக வெளியே செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்ற நாட்களாகவே இருக்கும்.

‘இன்று ஏன் இப்படி?’ என்ற கேள்வி, ‘அம்மாகூட சரியா பேசணும்-னு சொன்னதுக்கு கோபமோ?’ என்ற குழப்பம், ‘அம்மாகிட்ட நடந்துக்கிற மாதிரிதான் இனிமே என்கிட்டயும் நடந்துப்பாங்களோ?’ என்ற பயம்… இப்படிபட்ட உணர்வுகளின் கலவையாகத்தான் சுடர் நின்றாள்.

மகளின் முகத்தைப் பார்த்தே அழைப்பின் நிலை புரிந்ததும், “ஏன் இப்படி இருக்கானே தெரியலை?!” என்று வாட்டத்துடன் சொல்லி, ஒரு ஆயாச பெருமூச்சோடு கட்டிலில் சென்று அமர்ந்தார்.

பின், “சுடர்! அப்பா ஏதோ முக்கியமான நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்காரு. அதனால நான் இங்க கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்” என தலையணையில் தலை சாய்த்தார்.

அழுகை, கவலை என்பதெல்லாம் போய், ஒரு விரக்தியான குரலில், “பேசவே மாட்டிக்கிறான்” என்று தொடங்கி, புலம்பிக் கொண்டே இருந்தார்.

அதைக் கேட்டுக் கொண்டே… அறைக் கதவை அடைக்க, கணினியை எடுத்து வைக்க… திரைசீலைகள் இழுத்துவிட… என சுடர் உறங்குவதற்கான ஏற்பாட்டில் இருந்தாள்.

எல்லாம் முடித்து தூங்க வருகையில், “ஏதோ என்கிட்டருந்து மறைக்கிறான்… அதான்… என் முகத்தைப் பார்த்தே பேச மாட்டிக்கிறான்… ‘அம்மா-ன்னு’ கூட கூப்பிட மாட்டிக்கிறான்… என்னவா இருக்கும்…?” என்ற மனச்சோர்வு நிறைந்த அம்மாவின் புலம்பலைக் கேட்டதும், சுடர் புருவ மத்தியில் மீண்டும் வலி எடுக்க ஆரம்பித்தது.

தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் வீடு

நேரம் இரவு பதினொன்றைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. வீட்டு உறுப்பினர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கல்வித் துறை அமைச்சர் ராகினி உறங்கவில்லை. அவர்மட்டும் தனியறையில் இருந்தார்.

தூக்கிப் போடப்பட்டிருந்த கொண்டை, உயர்தர வாயில் சேலை, லெதர் செருப்பு இப்படித்தான் இருந்தார். இப்படித்தான் எப்பொழுதும் இருப்பார்.

அறையின் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒரே ஒரு விளக்கு மட்டும் எரியவிட்டிருந்தார். அந்த ஒற்றை விளக்கும், அவர் பதவிப்பிரமாணம் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மீது இருந்தது.

அந்த அறையின் ஒற்றைச் சோஃபாவில் அமர்ந்து கொண்டு, கால் மீது கால் போட்டுக் கொண்டு, அந்தப் புகைப்படத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு காவல்நிலையத்தில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடியே இருந்தார். அதன்பின்னரான, ஆட்சியர் யாழ்மாறனின் உத்தரவுகளையும் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.

‘என்ன செய்ய?’ என யோசித்தவர், பிரத்யேக கைப்பேசி எடுத்து, ஒருவருக்கு அழைத்தார். மறுமுனையில் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு, “ஹலோ” என்றொரு ஆண்குரல் பேசியது

அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் அமைச்சர் என்பதைப் பறைசாற்றும் அழுத்தம் நிறைந்த குரலில், “ஸ்டேட் நியூஸ் பாலோவ் பண்றீங்களா?” என்று கேட்டார்.

“பண்ணாம இருப்பேனா? எல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்” என்று அடிக்குரலில் அத்தனை ஆத்திரங்களுடன் அந்த ஆண்குரல் ஒலித்தது.

“இந்த செங்கல்பட்டு நியூஸ்தான் ரொம்ப குடைச்சல் கொடுக்குது” என்று எரிச்சலின் உச்சத்தில் ஏறி உட்கார்ந்து, ராகினி பேசினார்.

“ரெண்டாவது தடவை போஸ்ட் மார்ட்டம் நடத்த விட்ருக்க கூடாது. ஏன் விட்டீங்க?” என ஆளுங்கட்சி அமைச்சரையே கேள்வி கேட்கும் ஆளுமையில் ஆண்குரல் வெளிப்பட்டது.

“அதுக்கு டிஎஸ்பி ஒத்துக்கலை. எவ்வளவோ பிரஷ்ஷர் போட்டுப் பார்த்தும், ஒன்னும் முடியலை. ‘டிஎம் (District Magistrate) ஆர்டர் இஸ்யூ பண்ணப்புறம் என்ன செய்ய முடியும்?’-ன்னு கேட்கிறான்”

“ஈரோடு-ல செஞ்ச மாதிரி, எவிடென்ஸ் சரியா இல்லைன்னு ரிலீஸ் பண்ண முடிஞ்சிருந்தா, அந்தப் பையனை கொன்றுக்கவே வேண்டாம். இந்தப் பிரச்சனையே வந்திருக்காது?” என, குற்றஉணர்வே இல்லாமல் ஆண்குரல் பேசியது.

“கரெக்ட்தான்! ஆனா சப்-இன்ஸ்பெக்டர் கேட்டதும், உண்மையை அப்படியே உளறிருக்கான். அப்புறம் எப்படி அவனை விட முடியும்? அவனும் உயிரை விட்டு, நம்ம உயிரையும் வாங்குறான்” என, ஒரு உயிர் போயிருக்கிறது என்ற வருத்தமே இல்லாமல் ராகினியின் வார்த்தைகள் வந்தன.

“அட்லீஸ்ட் சூசைட்-ன்னு சொல்லி, கேஸ் கிளோஸ் பண்ண முடிஞ்சிருந்தா, நாம இப்போ நிம்மதியா இருந்திருக்கலாம்” என்று இரக்கமே இல்லாமல் அந்த ஆண்குரல் ஒலித்தது.

“நானும் ட்ரை பண்ணேன். பட் முடியலை. எல்லாம் அந்த கலெக்டர் பண்ற வேலை” என்று கோபப்பட்டவர், “அட்லீஸ்ட் இன்ஸ்பெக்டர் மேல ஆக்ஷன் எடுத்தப்புறமாவது கேஸ் முடியுதான்னு பார்க்கலாம்” என்ற ராகினியின் குரலில், ‘எப்படியும் தப்பித்து விடலாம்’ என்ற திமிர் தெரிந்தது.

“எனக்கென்னமோ அந்த கலெக்டர் இதை இப்படியே விடுவான்னு தோணலை” என்று அந்த ஆண்குரல் ஆட்சியர் மாறனைப் புரிந்து பேசியது.

“அந்த கலெக்டர் பெரிய பிரச்சனைதான். பேசாம… இனிமே இப்படி ஆர்டர் போட முடியாத மாதிரி, அவன்கிட்ட இருக்கிற டிஎம் போஸ்ட்ட எடுத்திடலாமா?” என்று, செங்கல்பட்டு ஆட்சியர் மாறன் மீது ஏதோ பெரும் பகை இருப்பது போன்று ராகினி கேட்டார்.

“இப்போ அது வேண்டாம். ப்ராப்பர் இன்வெஸ்டிகேஷன் நடந்தா, கண்டிப்பா மாட்டுவோம். அதனால நான் சொல்ற மாதிரி செய்ங்க” என, அந்த ஆண்குரல் தெளிவாக வழிகாட்டியதும், “சரி” என்று ராகினி அழைப்பைத் துண்டித்தார்.

நுழைவுத் தேர்வு சம்பந்தமாகப் பதியப்பட்ட வழக்கு… விசாரணையில் மாணவன் வாக்குமூலம்… அதை மறைக்க நடத்தப்பட்ட மாணவனின் மரணம்… அதை மூடி மறைக்க முடியாமல் போனது… என்று அனைத்தையும் நினைத்துப் பார்த்தவருக்கு, இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலைக்குள் தங்களைத் தள்ளியிருக்கும் யாழ்மாறன் மீது கோபத்தீ கனன்று கொண்டு வந்தது.

இருந்தும் அதை அப்படியே உள்ளுக்குள் வைத்துக் கொண்டு… காலதாமதம் செய்யாமல், ஆளுங்கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதிலிருந்து வெளிவர அந்த ஆண்குரல் சொன்னதைச் செய்ய வேண்டும் என்று எழுந்து சென்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!