YALOVIYAM 8.1

YALOVIYAM 8.1


யாழோவியம்


அத்தியாயம் – 8

லிங்கம் வீடு, சுடர் அறை

ஒரு நாள் கழிந்திருந்தது.

அன்றைய நாள் சுடருக்கு மிகச் சாதாரணமாக ஆரம்பித்திருந்தது. சாவகாசமாக எழுந்து, குளித்து, காலை உணவை முடித்து வந்தவள் எண்ணத்தில், இரண்டு சம்பவங்கள் வந்து விழுந்தன.

ஒன்று! நுழைவுத் தேர்வு செய்திகளைத் திருத்தியமைக்கையில், லதா  கூப்பிட்டதும், கீழே போய்விட்டு வரும் பொழுது, கணினித் திரையின் பக்கம் மாறி இருந்தது.

அன்று அறையில் இருந்தது ராஜா மட்டும்தான்.

மற்றொன்று! தினா, ‘பேப்பர்ஸ்’ என சொல்லி ராஜா-விடம் கொடுத்த கோப்பு என்னவாக இருக்கும்? கட்சி சம்பந்தமான கோப்பு என்றால் ராஜா ஏன் அதைப் பத்திரப்படுத்த வேண்டும்?

அந்த கோப்புக்குள் ‘என்ன இருக்கும்?’ என அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. அதற்கும் நுழைவுத் தேர்வு பற்றிய செய்திகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ? என்ற கேள்வி வந்தது.

உடனே கைப்பேசி எடுத்து ராஜாவிற்கு அழைத்தாள். சுடரின் கைப்பேசி வழியே, “சொல்லு சுடர்” என்ற குரல் கேட்டதும், “ராஜாண்ணா எங்க இருக்க?” என்று கேட்டாள்.

“தாம்பரத்தில இருக்கேன். வீட்டுக்கு வர்றதுக்கு ஒரு த்ரீ அவர்ஸ் ஆகும்”

“ம்ம் சரி” என்று சொன்னதும், “என்ன சுடர்? பார்க்கணுமா?” என கேட்டதற்கு, “வேண்டாம் ராஜாண்ணா! சும்மாதான் கால் பண்ணேன்” என்று மறுத்துவிட்டாள்.

“சரி! வச்சிடுறேன். வேலை இருக்கு” என்று அழைப்பைத் துண்டித்தான்.

கைப்பேசியை வைத்து பத்து நிமிடங்கள் ஆன பின்பும் ‘அது என்ன பேப்பர்ஸ்?’ என்ற கேள்விக்குள்ளே சுழன்று கொண்டிருந்தாள். பேசாமல் ராஜாண்ணா வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது.

அடுத்த கணமே எழுந்தவள், வேறு உடை மாற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

கடகடவென மாடிப்படிகளில் இறங்கி வரும் மகளைப் பார்த்த லதா, “எங்க கிளம்பிட்ட?” என்று கேட்டதற்கு, “ராஜாண்ணா வீட்டுக்கு-ம்மா” என்று சொல்லும் பொழுது, கீழே இறங்கி வந்திருந்தாள்.

“நான் போயிட்டு, டூ அவர்ஸ்-ல வந்திடுறேன்” என சுடர் சொன்னதும், “நானும் வரட்டுமா?!” என்று லதா கேட்டார்.

அவள் ஏதோ நினைவில் அமைதியாக நிற்கவும், “வர்றேனே சுடர்?!  ராஜாக்கு சமைச்சிக் கொடுத்து ரொம்ப நாளாச்சு” என்று ஏக்கமாகக் கேட்டதும், “சரி வாங்க” என்று கூட்டிச் சென்றாள்.

ராஜா வீடு

வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து, காரை போர்டிகோவில் கொண்டு வந்து சுடர் நிறுத்தினாள். லதா இறங்குவதைக் கண்டதும், தோட்ட வேலை செய்து கொண்டிருந்த சிலர் வந்து, “எப்படி இருக்கீங்க-ம்மா?” என்று கேட்டனர்.

“நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடியே லதா கார் கதவை அடைத்தார்.

“நல்லா இருக்கோம்-மா! ரொம்ப நாளாச்சு நீங்க வந்து” என்றும்… “சுடர் கூட அன்னைக்கு வந்திச்சு. நீங்கதான் வரலை” என்றும்… சொல்லிக் கொண்டே அவருடன் வீட்டின் படிக்கட்டுகளில் ஏறினார்கள்.

அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், “ராஜா எங்க?” என லதா ஆர்வத்துடன் கேட்டதும், “அண்ணே இங்க இல்லை-யேம்மா. வெளியே போயிருக்காங்க” என்று சொன்னார்கள்.

உடனே லதா திரும்பிச் சுடரைப் பார்த்ததும், “ம்மா! ராஜாண்ணா த்ரீ அவர்ஸ்-ல வந்துருவாங்க. நீங்க சமைக்க ஆரம்பிங்க” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

தோட்ட வேலையாட்களைப் பார்த்து, “நீங்க போய் வேலையைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு, லதாவும் வீட்டின் உள்ளே சென்று சமயலறைக்குள் நுழைந்தார்.

அங்கிருந்த பெண்கள், “வாங்க-ம்மா!” என்று வரவேற்றனர். “குடிக்க எதுவும் வேணுமா?” என்று கேட்டனர். பின் நலன் விசாரித்தனர்.

“ஒன்னும் வேண்டாம். சமையல் முடிஞ்சிடுச்சா?” என்றதும், “இப்போதான் ஆரம்பிக்கப் போறோம்-ம்மா” என்றனர்.

“என்னென்ன காய்கறி இருக்கு?” என்று கேட்டதற்கு, “பசங்க இருகாங்க-ம்மா. எதுனாலும் வாங்கிக்கலாம்” என்று சொல்லி, சமையலில் அவருக்கு உதவ ஆரம்பித்தனர்.

எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கிப் போனதும்… சுடர், அன்று ராஜா கோப்பினை வைத்த அலமாரிக் கதவைத் திறந்தாள்.

சட்சட்டென்று ஒவ்வொரு இழுப்பறையாகத் திறந்து பார்த்தாள். எதனுள்ளும் எதுவும் இல்லை. ‘பிளேஸ் சேஞ் பண்ணிட்டாங்களா?’ என யோசித்துக் கொண்டே நடந்தவள், ராஜா அறையின் முன்னர் வந்து நின்றாள்.

‘ஒருவேளை இங்க இருக்குமோ?’ எனச் சந்தேகம் வந்து அறைக் கதவைத் திறக்கபோகையில், “சுடர்” என்ற ஓர் அழைப்பு கேட்டு, பட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

“ஏதும் குடிக்க வேணுமா?” என்று இலகுவாகக் கேட்ட பெண்ணிடம், “டீ கொண்டு வாங்க” என சொல்லி அவரை அனுப்பிவிட்டு, ராஜா அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

நுழைந்ததுமே தெரியும்படி மாட்டியிருந்த பெரிய அளவிலான ராஜா-கவிதா புகைப்படத்தைப் பார்த்ததும், அப்படியே நின்றுவிட்டாள். விபத்து நிகழ்ந்த பின்னரான தருணங்கள் எல்லாம் கண்முன்னே வந்து போனது.

சட்டென, ‘எதுக்கு அந்த பைல் பார்க்கணும்? ராஜாண்ணா-வைச் சந்தேகப்படுறியா?’ என்று மனசாட்சி கேள்விகள் கேட்டு, அவளை முன்னே செல்லவிடாமல் உறுத்தியது.

ஆனால் அதே நேரத்தில் ராஜா நடந்து கொள்ளும் விதங்கள், அவனிடம் தெரியும் மாற்றங்கள் என எல்லாம் சேர்ந்து ‘முன்னே செல்’ என்று உந்தித் தள்ளியது.

‘ரிலாக்ஸ் சுடர்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அறைக்குள் சென்று தேட ஆரம்பித்தாள்.

சிறிய அலமாரிகள், வார்டுரோப்கள் என தேடிக் கொண்டிருக்கையில் ஒருவர் வந்து, “அக்கா டீ” என்று தேநீர் கோப்பையை வைத்துவிட்டுச் சென்றார்.

கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்ளும் விதமாக, தேநீரை குடித்தவளின் கண்களில் கட்டிலின் இழுப்பறை தென்பட்டது.

கோப்பையை வைத்துவிட்டுச் சென்று, அதனைத் திறந்து பார்த்தாள். நிறைய கோப்புகள் இருந்தன. அன்று தினா கொண்டு வந்த கோப்பின் நிறத்தை நியாபகப்படுத்திப் பார்த்தாள்.

அது நீல நிறத்தில் சிவப்பு வர்ண கோடுகள் போடப்பட்டிருந்த கோப்பு என்ற நியாபகம் வந்ததும், அதை எடுப்பதற்காக மற்ற கோப்புகளை வெளியே எடுத்துப் போட்டாள்.

எட்டிற்குமேல் கோப்புகளை எடுத்ததுமே, அவள் தேடும் கோப்பு கிடைத்தது. நன்றாக அமர்ந்து கொண்டு அந்தக் கோப்பிற்குள் இருந்த தாள்களை ஒவ்வொன்றாக எடுத்துக் பார்த்தவளுக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

அருகிலிருந்த கட்டிலில் தலை சாய்த்துக் கொண்டு ‘என்ன செய்ய?’ என்று புரியாமல் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால், இதெல்லாம் சற்று நேரம்தான். அதன்பின் படித்த படிப்பிற்கான மூளை வேலை செய்தது.

பரப்பிப் போடப்பட்டிருந்த தாள்களையெல்லாம் படபடவென எடுத்து, அதே கோப்புக்குள் அடுக்கி வைத்தாள். மற்ற கோப்புகளை, அதது இருந்த இடத்திலே அடுக்கி வைத்தாள்.

பின், தேவையான கோப்பை எடுத்துக் கொண்டு, அவசர அவசரமாக ராஜா வீட்டிலிருந்து கிளம்பினாள். அந்த அவசரத்தில், தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டாள்.

லிங்கம் வீடு

அத்தனை வேகமாக கார் ஓட்டி வந்தவள், வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டு கதவை அடைத்த பிறகே ஆசுவாசமாக மூச்சு விட முடிந்தது.

கணினி முன்பு சென்று அமர்ந்ததும், கருவிழிகள் இங்கும் அங்கும் செல்ல ஓரிரு நிமிடங்கள் குழம்பிக் கொண்டிருந்தாள். பின் கண்களை மூடி ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்து, கைப்பேசியில் மதியை அழைத்தாள்.

“ஹலோ அக்கா!” என்றதுமே, “நான் சொல்றதை கவனமா கேளு மதி” என்று ஆரம்பித்தாள்.

“சொல்லுங்க-க்கா!”

“ஒரு நியூஸ் இருக்கு. என்ட்ரன்ஸ் எக்ஸாம் பத்தி ஃபர்ஸ்ட் ஒரு நியூஸ் போட்டோம்-ல அதோட கன்டினியூஷன் இது” என்றதும், “ஆனா அந்த நியூஸ் அப்லோட் பண்றப்போ பார்ட்-1-ன்னு போடலையே?” என்றான்.

“அதெல்லாம் தேவையில்லை மதி. நான் சொல்ற மாதிரி செய்” என்று கட்டளை போல் சொன்னதும், “சரி-க்கா” என ஒத்துக் கொண்டான்.

“என்ட்ரன்ஸ் எக்ஸாம்-ல… காப்பி பண்ண ஹெல்ப் பண்றது, ஆள்மாறாட்டம்-ன்னு ரெண்டு விதமான தப்பு சொல்லியிருந்தோம்-ல, அதுக்கு சில எவிடென்ஸ் இருக்கு”

“எப்படிக்கா கிடைச்சது?” என்று ஆச்சரியப்பட்டவன், “எந்தெந்த இயர்-க்கு இருக்கு-க்கா?” என்று கேட்டான்.

“எனக்கு இந்த இயர்-க்கு மட்டும்தான் கிடைச்சது. மத்த இயர்ஸ்க்கும் நான் ட்ரை பண்றேன்”

“ம்ம் சரி-க்கா” என்றவன், “பட், இந்த நியூஸ் போட்டா பிரச்சனை எதுவும் வருமா?” என்று தயக்கம், பயம் நிறைந்த குரலில் கேட்டான்.

“சான்ஸ் இருக்கு. ஸோ, நீ சேஃபா இரு. நான் நியூஸ் எடிட் பண்ணித் தர்றேன். நீ பேசி, அப்லோட் பண்ணிடு. தென், நம்ம பிரண்ட்ஸ் சர்க்கிள்-ல இதை ஷேர் பண்ணுவோம்” என்று சொன்னதும், “சரி-க்கா” என ஒப்புக் கொண்டான்.

“என்கிட்ட இருக்கிற எவிடென்ஸ் காப்பி வந்து வாங்கிக்கிறியா?” என்று கேட்டதற்கு, “எங்க-ன்னு சொல்லுங்க-க்கா?” என்றதும், சென்னையில் ஓர் இடத்தைச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தாள்.

பேசி முடித்ததும், ‘ஏன் ராஜாண்ணா இதை மறைச்சி வைக்கணும்?’ என்ற கேள்வியில், தலை விண்விண்ணென்று வலித்தது.

அந்த நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்டதும், ‘யாராக இருக்கும்?’ என்று எழுந்து செல்லும் பொழுதே, கதவு தட்டப்படும் சத்தத்துடன் “சுடர்” என்ற லிங்கத்தின் அழைப்பும் கேட்டது.

கதவைத் திறந்து, “என்னப்பா?” என்றதும், “சாப்பிட வந்தேன் சுடர். அம்மா எங்க?” என லிங்கத்தின் கேள்வியில்தான், லதாவை ராஜா வீட்டிலிருந்து அழைத்து வராதது நியாபகத்தில் வந்தது.

“ராஜாண்ணா வீட்ல இருக்காங்க-ப்பா” என்றாள்.

“என்ன திடிர்னு? ராஜா வரச் சொல்லியிருந்தானா?”

“இல்லை-ப்பா. நானும் அம்மாவும் சும்மாதான் போனோம். அவசரமா வந்ததுல அம்மாவைக் கூட்டிட்டு வர மறந்துட்டேன்” என்றவள், “நீங்க போய் கூட்டிட்டு வரமுடியுமா?” என்று கேட்டாள்.

“அப்பா இப்போ திருச்சி கிளம்பனும். அதான் வீட்டுக்கு வந்தேன்” என்றவர், “இரு, நான் பசங்க-கிட்ட சொல்றேன்” என்று, கீழே நின்று கட்சி ஆள் ஒருவரிடம் விடயத்தைச் சொல்லிவிட்டு, மீண்டும் சுடர் முன் வந்து நின்றார்.

மகளின் சோர்வான முகத்தைப் பார்த்தவர், “ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று கேட்டார்.

ராஜா வீட்டில் கிடைத்த ஆதாரங்களைச் செய்தியாக வெளியிடுவதைத் தவிர, வேறு யாரிடமும் பேச விருப்பமில்லாதால், “ராஜாண்ணா ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியுமா?” என்று வேறொரு கேள்வி கேட்டாள்.

“எப்படி?”

“அம்மா-கூட பேசாம”

‘தெரியாது’ என்று தலையசைத்தவர், “நான் கேட்டுப் பார்க்கவான்னு உங்க அம்மா-கிட்ட கேட்டேன். அவ, சுடரைக் கேட்கச் சொல்லயிருக்கேன்னு சொன்னா. நீ கேட்டியா?” என்றார்.

“கேட்டேன். ஆனா ராஜாண்ணா சரியா பதில் சொல்லலை”

“அதான் இப்படி இருக்கிறியா?” என்று கேட்டதற்கு, அமைதியாக நின்றாள்.

உடனே, மாடியிலிருந்தே கீழே வேலை செய்தவர்களிடம், “ஒரு டீ கொண்டு வாங்க” என்று சொல்லிவிட்டு திரும்புவதற்குள்… கதவருகிலிருந்த சுடர் உள்ளே சென்று, மெத்தையில் அமர்ந்திருந்தாள். லிங்கமும் மகளருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

இன்னும் முகம் சரியில்லாமல் இருந்த மகளிடம், “அவனும் படிச்ச படிப்ப வேஸ்ட் ஆக்கிக்கிட்டு இருக்கான். நீயும் இப்படி இருந்தா, எங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லு?” என்று கேட்டார்.

“ஐயோ அப்பா! நான் வேலை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்” என்று வேகமாகச் சொன்னவள், “இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் நியூஸ் தெரியுமா-ப்பா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்! பேப்பர்-ல பார்த்தேன். அதுக்கென்ன?”

“ஜூனியர் ஒருத்தனோட யூடூயூப் சேனலுக்கு, அதைப் பத்தின நியூஸ் எடிட் செஞ்சிக் கொடுத்தேன். இன்னமும் இருக்கு” என சொல்லும் பொழுது, ஒருவர் தேனீர் கொண்டு வந்து, சுடரிடம் தந்துவிட்டுப் போனார்.

தேனீர் அருத்திக் கொண்டிருந்தவளிடம், “சுடர், படிச்ச படிப்பிக்கான வேலை செய்ற. சந்தோஷமா இருக்கு. அப்படியே சேனல் ஸ்டார்ட் பண்றதைப் பத்தியும் யோசி” என ஆசையுடன் சொன்னார்.

பின், “டயர்டா தெரியற. கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்திட்டு, வேலையே கன்டினியூ பண்ணு” என்று அக்கறையுடன் சொல்லி எழுந்து கொண்டதும், தேநீர் கோப்பையை வைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

அவள் தூங்கட்டும் என்று கிளம்பப் போனவருக்கு, இந்த வழக்கு சம்பந்தமாக மாணவன் மரணம் பற்றிய செய்தி நியாபகம் வந்ததும், மீண்டும் மகள் அருகில் வந்து நின்றார்.

கண்மூடி இருந்தவளிடம், “உனக்குப் பிடிச்சதைச் செய். ஆனா கவனமா செய்யணும். சரியா சுடர்?” என்றவரிடம், “சரி-ப்பா! நீங்க போங்க! உங்களுக்கு டைம் ஆகப் போகுது” என்றதும், லிங்கம் கிளம்பினார்.

சற்று நேரம் படுத்திருந்தவளுக்கு மனச்சோர்வாய் இருந்தது. மாறனிடம் பேசினால் மனம் இலகுவாகும் என்று தோன்றியது. ஆனால் அவன்தான் இரண்டு நாட்கள் பேச முடியாது என்று சொல்லிவிட்டானே?

‘பேசணும்-னு நினைக்கிறப்ப பேச முடியாது’ என்று முணுமுணுத்தவள், ‘இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே இவன் இப்படித்தான்’ என்றவளுக்கு கல்லூரி கால நாள் ஒன்று கண்முன் தெரிந்தது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 7

அன்று இரண்டாவது நாளாக அவனைப் பார்க்க இயலவில்லை. இதுவரை மாறனைப் பார்த்த பொழுதெல்லாம் பார்வையாலே பேசினவளுக்கு, இன்று பார்க்காத பொழுது, வார்த்தைகளைத் கொட்டித் தீர்க்க வேண்டுமென்ற ஆவல் வந்திருந்தது.

தேடினாள். இறுதி ஆண்டு கட்டிடம் முழுவதும் அவனைத் தேடினாள். கடைசியில் தேடித் திரிந்த அசதியில், மனம் வாடிப் போய்தான் அன்றைய நாளும் முடிவடைந்தது.

யாழோவியம் அத்தியாயம் – 8 தொடர்கிறது

இன்றும் அவனுடன் பேச வேண்டும் என்று நாடிய மனது அலைப்புற்று, அசதி வந்ததில், அப்படியே சுடர் கண் அயர்ந்துவிட்டாள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!