YALOVIYAM 8.2

YALOVIYAM 8.2


யாழோவியம்


அத்தியாயம் – 8

ராஜா வீடு

தாம்பரத்திலிருந்து கிளம்பி ராஜாவின் கார் போர்டிகோவில் வந்து நின்றதும், ஒரு பக்கத்திலிருந்து தினா இறங்கினான்.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து ராஜா இறங்கி வீட்டின் படிக்கட்டுகளில் ஏறும் பொழுதே, “நான் இப்படியே கிளம்புறேன்-ண்ணே” என்று தினா சொல்லிக் கொண்டு நின்றான்.

“வா தினா. வந்து சாப்பிட்டு போ” என்று ராஜா உரிமையாகச் சொன்னதும், இருவரும் சேர்ந்தே வீட்டிற்குள் சென்றனர்.

முன்னறை, வரவேற்பறையைக் கடந்து சாப்பாட்டு மேசைக்கு வந்த பொழுது, லதா அமர்ந்திருப்பதைக் கண்டு ராஜா தயங்கி நின்றான்.

தினாதான், “வாங்கம்மா! எப்படி இருக்கீங்க? சுடர் வரலையா?” என்று கேட்டு அருகில் வந்து நின்றான்.

லதா பதில் சொல்லாமல் ராஜாவைப் பார்த்துக் கொண்டே இருந்ததும், “அக்கா வந்து, கொஞ்ச நேரம் இருந்தாங்க. என்ன ஆச்சோ திடிர்னு கிளம்பிப் போயிட்டாங்க” என்று ஒரு வேலைக்காரப் பெண் கூறிச் சென்றார்.

சமைத்த பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்த மற்றொரு பெண், “கேட்ட டீ கூட குடிக்காம வேக வேகமா போயிடுச்சி” என்று சொன்னார்.

கைப்பேசியில் சுடர் கேட்டது… இங்கே அவள் நடந்து கொண்ட விதம்… என ஆராய்ந்து கொண்டு நின்ற ராஜாவிடம், “சாப்பிட வா. உனக்காகத்தான்… உனக்குப் பிடிச்சதை சமைச்சிருக்கேன்” என்று லதா சொன்னார்.

“ம்ம்ம்” என்று மட்டும் சொன்ன ராஜா, “தினா! நீ சாப்பிடு. நான் கொஞ்ச நேரத்தில வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

போகிறவனையே பார்த்துக் கொண்டிருந்த லதாவிடம், “அம்மா! இப்போ அண்ணே வந்திரும்” என்று ஆறுதலாகச் சொன்ன தினா, தனக்குச் சாப்பாடு போட்டு உண்ண ஆரம்பித்தான்.

ராஜாவின் அறை

அறைக்குள் நுழைந்தவன் ஒருசில நிமிடங்கள் எதுவும் செய்யத் தோன்றாமல் நின்றான். பின் பார்வை அவனறியாமல் கட்டிலின் கீழ் பொருத்தப்பட்டிருந்த இழுப்பறைக்குச் சென்றது.

கருவிழிகள் கொஞ்சமும் அசையாமல், மெதுவாக நடந்து கட்டிலின் அருகே சென்று, நின்ற நிலையிலேயே குனிந்து இழுப்பறையை இழுத்தான்.

இதற்கு முன் அடுக்கி வைத்திருந்தது போல் கோப்புகள் இல்லை என்று தெரிந்ததும், திடுக்கிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான். இருந்தும் தினா கொண்டு வந்த கோப்பைத் தேடினான். சிறிது நிமிடங்களில் ‘சுடர் அதை எடுத்துச் சென்றுவிட்டாள்’ என்று புரிந்தது!

அப்படி ஒரு கோபம் ராஜாவின் முகத்தில் தெரிந்தது. அந்தக் கோபத்தில், ‘ஏன் சுடர் இப்படிப் பண்ண?’ என்று முணுமுணுத்து, கட்டில் பக்க மேசையிலிருந்து பொருட்களையெல்லாம் தள்ளிவிட்டான்.

மேலும் மேலும் சில பல கண்ணாடிப் பொருட்களையெல்லாம் தள்ளிவிட்டு உடைத்துக் கொண்டிருந்தான்.

ராஜா அறைக்கு வெளியே…

தினா சாப்பிட்டுக் கொண்டிருந்தான். லதாவின் எண்ணமெல்லாம் ராஜாவிடம் இருக்க, ‘பேச வேண்டுமே‘ என்ற கடமைக்கு தினாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் ராஜா தள்ளிவிட்ட பொருட்கள் சுவர்களில் முட்டி மோதிக் கீழே விழும் சத்தம் கேட்டது. லதா பதற்றத்துடன் எழுந்து கொள்ளவும், “ம்மா! அண்ணே கோபத்தில இருக்கு போல. நீங்க உட்காருங்க” என்றான்.

உட்காராமல் நின்ற லதா, ‘இவனுக்கு என்னாச்சு?’ என்ற கவலையில் ராஜா அறையை நோக்கிப் போகையில், “தொந்தரவு பண்ண வேண்டாம்-ம்மா! அண்ணனே வெளிய வரட்டும்” என்று தினா தடுத்துவிட்டான்.

‘என்ன செய்வதென்று?’ தெரியாமல் அப்படியே அமர்ந்தார். ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து, “ம்மா! நான் சாப்பிட்டேன். கிளம்புறேன்” என்று தினா சொன்னதும், ‘சரி’ என சம்மதித்து தலையாட்டினார்.

“உங்களை வீட்ல கொண்டு போய் விடட்டு-ம்மா?” என கேட்டுப் பார்த்ததற்கு, ‘வேண்டாம்’ என்று மறுத்ததும், தினா கிளம்பிவிட்டான்.

நேரம் கடந்தது. வேலையாட்கள் வந்து, “நீங்க சாப்பிடறீங்களா-ம்மா?” என்று கேட்டுப் பார்த்தனர். அதற்கு, ‘வேண்டாம்’ என தலையசைத்தார். பின், “எங்க சாப்பாட்டு நேரம். நாங்க சாப்பிடப் போறோம்-மா” என்றனர். ‘சரி’ என்றார்.

அந்த பெரிய வரவேற்பு அறையில், அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அடிக்கடி, ராஜா அறைக் கதவு திறக்குமா? என்று திரும்பிப் பார்த்தபடியே இருந்தார்.

இதற்கிடையே லிங்கம் கைப்பேசியில் அழைத்து, ‘திருச்சிக்குப் போகணும் லதா. உன்னை கூப்பிட ஆள் அனுப்பியிருக்கேன்’ என்று சொல்லியிருந்தார்.

வெகு நேரத்திற்குப் பின் ராஜா அறையிலிருந்து வெளிவந்தான். அடுத்த நிமிடமே, “என்னாச்சு ராஜா? என்ன சத்தம்?” என்று பதற்றமாகக் கேட்டதற்கு, ‘ஒன்னுமில்லை’ என்று தலையாட்டினான்.

பின், யாருமில்லாத அறையைச் சுற்றிப் பார்த்தவனிடம், “எல்லாரும் சாப்பிடப் போயிருங்காங்க” என்று அவன் பார்வைக்குப் பதில் சொன்னார்.

பின் அவரே, “நேரமாயிடுச்சே! சாப்பிடுறியா? பசிக்கப் போகுது” என கேட்டதற்கு, ‘வேண்டாம்’ என்று மறுத்து தலையசைத்து, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

அதன்பின் இரண்டொரு நிமிடங்கள் நிசப்தமே நிலவியது.

கண்ணாடிப் பொருட்களைத் தட்டிவிட்டதால், அவன் கையில் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளைப் பார்த்தவருக்கு வலியுடன் கூடிய பெருமூச்சொன்று வெளிவந்தது. அலமாரியிலிருந்து முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவனருகில் அமர்ந்தார்.

அசையாமல் இருந்தான். மிக லேசாக ரத்தம் கசிந்திருந்த இடங்களைப் பஞ்சு கொண்டு துடைத்தார். பின், அதற்கு மருந்திட்டார். அதில் ஒரு சிறு எரிச்சல் உணர்ந்து கையைச் சுருக்கியவனிடம், “வலிக்குதா” என கேட்டுப் பார்த்தார். அப்படியே அசையாமல் இருந்தான்.

அதன்பிறகு அவரும் அமைதியாக அமர்ந்திருந்தார். இரண்டு வயதிலிருந்து அவர்தான் வளர்த்திருக்கிறார். அவன் பேச ஆரம்பித்ததும் அவரிடம்தான். அதிகமாகப் பேசி இருப்பது அவரிடம்தான்.

எந்தச் சூழ்நிலையிலும் அவனிடமிருந்து இப்படியொரு அமைதி வருமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. மனம் கேட்காமல், “ராஜா… நீ ஏன்…” என்கின்ற போதே, “அம்மா! டிரைவர் வந்துட்டாரு” என்று ஒரு வேலையாள் வந்து சொன்னார்.

உடனே, “இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கவா ராஜா?” என கேட்டுப் பார்த்ததற்கு, ‘வேண்டாம்’ என்று மறுத்து தலையசைத்தான். “சுடர் அப்பா வண்டி அனுப்பியிருக்காரு. அம்மா கிளம்பட்டுமா?” என கேட்டதும், ‘சரி’ என சம்மதித்தான்.

அவர் சென்றபின்பும், வெகு நேரம் அப்படியே தனியாக அமர்ந்திருந்தான்.

இதேநாளில் சென்னையின் மற்றொரு பகுதியில் 

தலைமைச் செயலகம்

மாநிலத்தின் செயல்களை, செயலகங்களை ஒருங்கிணைக்கும் தலைமைச் செயலகத்திற்கு, சசியும் மாறனும் வந்திருந்தனர்.

முதலமைச்சருடனான சந்திப்பிற்காகத் தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு மாறன் பேசியதில், இன்று மூன்று மணியளவில் சந்திப்பிற்கான நேரத்தை ஒதுங்கியிருந்தார். அதற்காகத்தான் தலைமைச் செயலகம் வந்து சசியும் மாறனும் காத்துக் கொண்டிருந்தனர்.

மூன்று மணியாகி ஒரு பத்து நிமிடங்கள் கடந்திருந்த நிலையில், ஒருவர் வந்து சசி-மாறன் இருவரையும் முதலமைச்சர் அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றார்.

முதலமைச்சர் அலுவலக அறை

முதல்வர் இருக்கையில், ஐம்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது முன்னே அரைவட்ட வடிவ மேசை இருந்தது. அதில் ‘சீஃப் மினிஸ்டர்’ மற்றும் ‘முதலமைச்சர்’ என எழுதியிருந்த பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. வேறெதுவும் இல்லை.

சசி-மாறன் உள்ளே நுழைந்ததும், லேசான தலையசைப்பு செய்து முதல்வர் வரவேற்றார். அவர்கள் இருவரும் ‘குட் ஈவினிங் சார்’ என்று சொல்லி, மேசையின் முன்னே இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்.

இவர்களுடன் அந்த அறையில் முதலமைச்சரின் நேரடி உதவியாளரும், தலமைச் செயலாளரும், சென்னை மாகாணத்தின் காவல்துறை ஆணையரும் இருந்தனர்.

வழக்கைப் பற்றி மாறன் தலைமைச் செயலாளரிடம் விரிவாகச் சொல்லியிருந்தான். அவர் அதை முதலமைச்சரிடம் சொன்னதும், இந்தச் சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

முதலமைச்சரின் உதவியாளர், மாறன்-சசி தயார் செய்த அறிக்கையைக் கொண்டு வந்து மேசையில் வைத்தார்.

அதைத் திறந்து பார்த்தபடியே, “டிஸ்ட்ரிக்ட் ஆக்ட்டிவிட்டிஸ் எப்படி போய்கிட்டு இருக்கு?” என்று மாறனை நோக்கிப் பொதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“நல்லா போய்க்கிட்டிருக்கு” என்று சொன்னதும், “சொல்லுங்க, என்ன ப்ராபளம் இந்த என்ட்ரன்ஸ் டெஸ்ட்-ல?” என்று விடயத்திற்கு வந்தார்.

“என்ட்ரன்ஸ் எக்ஸாம்-ல நிறைய பிராடு நடக்குது. அதைப் பத்தின டீடெயில்ஸ்” என்று சமர்ப்பித்த அறிக்கையைச் சுட்டிக் காட்டி, “இதுல இருக்கு” என்றான்.

“சீஃப் செக்ரட்ரி சொன்னாரு. செங்கல்பட்டு ஸ்டுடென்ட் டெத் பத்தி நானும் நியூஸ்-ல பார்த்தேன். நீங்க பர்தர் இன்வெஸ்டிகேஷனுக்கு ஆர்டர் இஸ்யூ பண்ணீங்கள?” என மாறனைப் பார்த்துக் கேட்டதும், “ஆமா சார்” என்றான்.

“நீங்க பாலோவ் பண்றீங்கள?” என சசியைப் பார்த்துக் கேட்டார்.

“யெஸ் சார்! எஸ்ஐ-கிட்ட விசாரிச்சிருந்தா, நிறைய உண்மைகள் தெரிய வந்திருக்கும். பட் அவரோட ட்ரான்ஸ்பரால அது முடியலை” என்று, வழக்கிற்கு முட்டுக்கட்டையாக இருந்ததைக் குறிப்பிட்டான்.

முதல்வர் கொஞ்சம் அமைதியானார். பின் அந்த இளைஞர்கள் இருவரையும் பார்த்தார். பின், சென்னை காவல் ஆணையரைப் பார்த்தார்.

அந்தப் பார்வைக் கேட்ட கேள்வி தெரிந்ததால், “செங்கல்பட்டு டிஐஜி இப்படி எதுவும் சொல்லலை” என முதல்வரைப் பார்த்துச் சொன்ன ஆணையர், “நீங்க அப்பவே சொல்லியிருக்கலாமே?!” என்று சசியிடம் கேட்டார்.

மாறனைத் தவிர அறையிலிருந்த அனைவரும் சசியைப் பார்த்தனர். ‘ஏன், டிஐஜி-க்கோ, டிஜிபி-க்கோ இது தெரியாதா?’ என எண்ணம் வந்ததும், சசி அமைதியாக இருந்தான்.

அதை அறிந்த மாறன், “இப்ப பெர்மிஷன் கொடுத்தாலும் எஸ்ஐ-கிட்ட விசாரிக்கலாம்” என்று துணிந்து பேசியதும், அனைவரின் பார்வையும் மாறனின் மீது வந்தது.

உடனே, “சார்! இது செங்கல்பட்டு-ல மட்டும் நடக்கலை. அக்ராஸ் தி தமிழ்நாடு நடந்திருக்கு… நடந்துக்கிட்டிருக்கு. ஸோ முறையான விசாரணை வேணும்” என்று மாறன் உடைத்துப் பேசினான். கூடவே சில விவரங்களையும் சொன்னான்.

“ம்ம் புரியுது” என்று முதல்வர் சொல்லி, “எஜூகேஷனல் மினிஸ்ட்டர வர சொல்லியிருந்தேன்” என தலைமைச் செயலாளரைப் பார்த்ததும், “மேடம் பிஏ-கிட்ட கேட்டேன். வந்துக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னாரு” என்றார்.

லேசாகத் தலையசைத்த முதலமைச்சர், “உங்க டிஸ்ட்ரிக்ட்-ல நீங்க இன்வெஸ்டிகேஷனை கன்டினியூ பண்ணுங்க” என்று சசியைப் பார்த்துச் சொன்னார்.

‘அது மட்டும் போதாது என்றுதானே இங்கு வந்தோம்’ என உள்ளுக்குள் கொதித்தாலும், “ஓகே சார்” என்று ஒப்புக் கொண்டான் சசி.

சென்னை காவல் ஆணையரைப் பார்த்து, “எல்லா டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஸ்டேஷன்-லயும் ப்ராப்பர் இன்வெஸ்டிகேஷன் பண்ணச் சொல்லுங்க” என்று சொன்னதும், அவரும் “சரி சார்” என்றார்.

‘இத்தனை வருடங்கள் நடந்திராதது, இனிமேல் நடக்குமா? இல்லை, நடக்க விடுவார்களா?’ என்ற ரீதியில் சசியும் மாறனும் அமர்ந்திருந்தார்கள்.

மேலும் முதல்வர், புன்னகையுடன் மாறனைப் பார்த்து, “குட் ஒர்க்! நாளைக்கு கலெக்டர்ஸ் மீட்ல பார்க்கலாம்” என்றார்.

‘இவ்வளவுதானா, வேறு ஒன்றுமில்லையா?’ என்று நினைத்தவன், “சார்! விசாரணை பத்தி…’ என்று கேட்டதற்கு, “எஜூகேஷனல் டிபார்ட்மென்ட்-கிட்ட பேசிட்டு, முடிவெடுக்கலாம்” என்று சொல்லி முடித்தார்.

அதன்பின், ‘சந்திப்பு முடிவடைந்தது’ என்பது போல தனது உதவியாளரைப் பார்த்ததும், மேசையில் இருந்த அறிக்கை அடங்கிய கோப்பை அவர் எடுத்துக் கொண்டார்.

மாறனுக்கு ‘நீ இனிமேல் இதில் தலையிடாதே!’ என சொல்வது போல் இருந்தது. அவனுடைய அதிகார எல்லைக்குள் செய்ய வேண்டியதைச் செய்தாயிற்று என்பதால், முறைப்படி விடைபெற்று சசியுடன் கிளம்பி வெளியே வந்தான்.

முதலமைச்சர் அறையின் வெளியே

வெளியே வந்த சசிக்கும் மாறனுக்கும், ‘இவர்களிடமிருந்து முறையான விசாரணை நடப்பதற்கான உத்தரவு வருமா?’ என்ற சந்தேகம் எழுந்தது. இந்தச் சந்திப்பே ஏதோ ஒரு கண்துடைப்பாகத்தான் தெரிந்தது.

சசியுடன் சேர்ந்து நடந்து கொண்டே, “இவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை” என்று மாறன் பொருமினான்.

அவனுடன் நடந்து சசி, “அடுத்து என்ன செய்யலாம்-னு யோசி” என்றதும், “இதுக்கு மேல என்ன செய்ய சசி?” என இயலாமையுடன் கேட்டான்.

மேலும், “எந்த ஸ்டேஷன்-லயும் இன்வெஸ்டிகேஷன் ப்ராப்பரா நடக்க விடமாட்டிக்கிறாங்க. சிஎம்-மும் சரியா இன்ட்ரெஸ்ட் காட்டலை. என்ன பண்ண?” என்று பொருமினான்.

“எனக்கும் தெரிஞ்சது. பட் இன்னைக்கு ஏன் எஜூகேஷனல் மினிஸ்டர் வரலை?” என்று சசி சந்தேகிக்கும் போதே, எதிரே காசி வந்து, “சார்! ப்ரெஸ்-ஸ மீட் பண்ணப் போறீங்களா?” என்று மாறனிடம் கேட்டார்.

கொஞ்சம் யோசித்த பின், ‘ஆமாம்’ என்று அவன் தலையசைத்ததும், காசி சென்றுவிட்டார்.

“வா! பிரஸ்-ஸ மீட் பண்ணிட்டு வந்திடலாம்” என்று மாறன் சொன்னவுடன், “சீஎம்-தான் எஜூகேஷனல் டிபார்ட்மென்ட்-கிட்ட இதைப் பத்தி பேசறேன்னு சொன்னாரு-ல?! அதுக்கு முன்னாடி இதெதுக்கு மாறன்??” என்றான்

“அவங்ககிட்டருந்து பேர்(FAIR) டெசிஷன் வரும்னு நம்புறியா சசி?”

“நம்பலை. பட், இது வேண்டாம்னு தோணுது. அவங்களைக் கோபப்பட வைக்கும்”

“ஏன், இப்போ அவங்களுக்கு நம்ம மேல கோபம் இல்லையா?”

“இருக்கு. ஆனா இது வேற. இதுவரைக்கும் எனக்கும் உனக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை, எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டப் போற”

“சசி! நம்மளை வேற போஸ்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்றதுக்கு முன்னாடி, என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யலாமே! தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சப்பறம் விட்டுட்டுப் போக முடியலை. அட்லீஸ்ட் கேஸை நெக்ஸ்ட் லெவெலுக்கு புஷ் பண்ணி விடுவோமே?

வேற யாரைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். நாம எதுக்காக வந்தோம்னு சொல்லலாம்” என மாறன் கெஞ்சியதும், அதற்குமேல் சசி யோசிக்கவில்லை.

இருவரும் சேர்ந்து ஊடகத்தினரைச் சந்தித்தனர். சில கேள்விகள், சில பதில்கள் என்று ரீதியில், அந்தச் சந்திப்பு சென்றது. கடைசியில் ‘எதற்காக முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு?’ என்று கேள்வி வந்தது. 

“செங்கல்பட்டு விசாரணையில, இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம்-ல முறைகேடு நடந்துக்கிட்டு இருக்கிறது தெரிய வந்தது. அதைப் பத்தி டீடெயில் ரிப்போர்ட் முதலமைச்சர்-கிட்ட சப்மிட் பண்ணி, சரியான முறையில விசாரணை நடக்க கேட்டிருக்கோம்” என பதில் சொல்லி, மாறன் சந்திப்பை நிறைவு செய்தான்.

அனைத்து ஊடங்களிலும், இந்தச் செய்தி இரவு நேர முக்கிய செய்தியாக ஒளிபரப்பபட்டது. மேலும் அடுத்தநாள், ‘நுழைவுத் தேர்வில் முறைகேடு’ என்று பெரிய எழுத்துக்கள் கொண்ட முதல் பக்கச் செய்தியாகப் பத்திரிக்கைகளில் இடம்பெற்றது.

ஒவ்வொரு நாளும் அதிகாரத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டே போனான் யாழ்மாறன்


கதையில் வரும் சம்பவங்களும், பெயர்களும் கற்பனையே. மற்றொரு விடயம் பின்னொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

and last episode காதல் ஓவியம் அத்தியாயம் எண் மாறியிருக்கும். sorry for that. 

Leave a Reply

error: Content is protected !!