YALOVIYAM 9.1

YALOVIYAM 9.1


யாழோவியம்


அத்தியாயம் – 9

மாவட்ட ஆட்சியர் பங்களா, செங்கல்பட்டு

அனைத்து மாவட்ட ஆட்சியர் சந்திப்பு இருந்ததால், அடுத்த நாளும் மாறன் சென்னையில் இருந்துவிட்டு, இன்றுதான் செங்கல்பட்டு வந்தான். இரண்டு நாட்களின் பணிகள் இருக்கும் என்பதால், வந்ததும் ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டான்.

அன்றைய பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, மாறன் வீடு வரும் பொழுதே ஒன்பது மணியாயிற்று. கொஞ்சம் இளைப்பாறி வந்து, திலோ-தியாகுவுடன் இரவு உணவை எடுத்துக் கொள்ளத் தொடங்கினான். உண்ணும் பொழுதே, முதல்வருடனான சந்திப்பு பற்றி அப்பாவிடம் பேசினான்.

“நம்பிக்கையே இல்லை-ப்பா. அடுத்த நாள் கலெக்டர் மீட்டிங்-ல சிஎம் இதைப்பத்தி பேசவேயில்லை” என்று சோர்வாகச் சொன்னான்.

“டோன்ட் லூஸ் யுவர் ஹோப் மாறன்” என்று, அவனது தோளில் தட்டி உற்சாகப்படுத்தினர்.

“ம்ம்ம்” என்றவன், “பட் நானே எக்ஸ்பெக்ட் பண்ணாதது. இந்த ஸ்கேம் பத்தி சரியான விசாரணை வேணும்னு, இன்னைக்கு ஒரு ப்ரொபஸர் ஹை கோர்ட்-ல பொதுநல வழக்கு போட்டதுதான்” என்றான்.

“நானும் நியூஸ் பார்த்தேன். நீ மீடியா-கிட்ட சொன்னதோட பலனா இருக்கலாம். அதான் சொல்றேன். நம்பிக்கையா இரு-ன்னு”

“பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு” என்றவன், “ஆனா இதுல சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தண்டணை வாங்கிக் கொடுக்காம விடக் கூடாதுப்பா” என்று வயதிற்கான வேகத்துடன் சொன்னதும், “ரிலாக்ஸ் மாறன்” என அவனை அமைதிப்படுத்தினார்.

மேலும், “இதெல்லாம்…” என்று பேச்சைத் தொடரும் போது, “எனஃப் தியாகு” என திலோ இடையிட்டதும், தியாகு பேச்சை நிறுத்திவிட்டார்.

அம்மாவின் பக்கம் திரும்பி, “என்னம்மா?” என கேட்டதற்கு, “ரெண்டு நாளா வேலைன்னு இருந்திட்ட. இப்போ வந்தும் அஃபிஸியலா மட்டும் பேசற. இட்ஸ் அன்ஃபேர் மாறன்” என்று குறைபட்டுக் கொண்டார்.

“ம்மா!” என்று அழுத்திச் சொல்லிக் கொண்டே, திலோவின் அருகில் வந்து அமர்ந்து, “இப்ப நீங்க பேசுங்க. நான் கேட்கிறேன்” என்று சொன்னான்.

“இங்க வேண்டாம். பேசிக்கிட்டே ஒரு வாக் போகலாம்” என ஆசைபட்டுக் கேட்டதும், “அவ்வளவுதான? கெட் அப்” என்று திலோவை எழுப்பினான்.

அவர் எழுந்து கொண்டதும், “அப்பா நீங்க?” என்று கேட்டதற்கு, “நீங்க போங்க.  நான் வரலை” என்றவர், “திலோ, அவன் டயர்டா தெரியறான். ஸோ, ரொம்ப நேரம் நடக்க வேண்டாம்” என்றார்.

‘சரி’ என்று சொல்லி, திலோ மகனுடன் வீட்டைச் சுற்றி நடக்க கிளம்பினார்.

இரண்டு நாட்கள் வீட்டில், பொட்டிக்கில் நடந்தது அனைத்தையும் திலோ மகனிடம் சொன்னார். பத்து மணி வரை பேசிவிட்டு, இருவரும் வீட்டிற்குள் வந்த நேரம் தியாகு தூங்கியிருந்தார். அம்மாவிடம், ‘குட் நைட்’ சொல்லி, மாறன் தன் அறைக்கு வந்தான்.

மாறனின் அறை

அறைக்குள் வந்ததும் உடல் சோர்வு அழுத்தியதில் ‘அக்கடா’ என மெத்தையில் அமர்ந்தான். சுடரிடம் பேச ஆசையாக இருந்தது. ஆனால் கண்களில் தூக்கம் சொக்கியது. கைப்பேசியை எடுத்தான். பின், நேரத்தைப் பார்த்தான். 10:10 எனக் காட்டியது.

‘ரெண்டு வார்த்தைப் பேசிட்டுத் தூங்கலாம்’ என்று நினைத்து, அழைத்தான். ஒரு நொடிக்கும் குறைவான கால அளவில் அழைப்பை ஏற்று , “மாறா” என்றாள்.

“நீ இன்னும் தூங்கலையா?” என்று தூக்க கலக்கத்தில் கேட்டான்.

“ம்கூம் தூங்கலை. பேசி ரெண்டு நாளாச்சு இல்லையா? அதான் உன் ஃபோன்-க்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்”

படு சோம்பலுடன், “நல்ல டயர்ட் சுடர். நாளைக்குப் பேசலாமா?” என்றான்.

“அப்போ சீக்கிரமா ஃபோன் பண்ணியிருக்கலாமே?”

அதீத அசதியில் தலையணையில் சாய்ந்து கொண்டு, “அம்மா கூட பேசிக்கிட்டு இருந்தேன்” என்றான்.

அவனுடைய நிலைமை புரிந்திருந்தாலும், இரண்டு நாட்கள் ஏற்பட்ட மன உளைச்சலில், “மாறா! எனக்கு உன்னை உடனே பார்க்கணும்” என்றாள்.

“உனக்குத்தான் வீடு தெரியுமே?! பேசாம கார் எடுத்திட்டு வந்து பார்த்திட்டுப் போ” என்று கண்கள் சொருகிப் போய் சொன்னான்.

“பார்த்திட்டுப் போகலாம் மாட்டேன். அப்படியே உன்கூடவே இருந்திடுவேன்”

அவளின் நிலைமை தெரியாததால், “உனக்கு விளையாடுறதுக்கு நேரமே கிடைக்கலையா? தூக்கம் வருது சுடர். காலை-ல பேசவா?” என்று கேட்டதும், “சரி! ஒன்னே ஒன்னு கேட்கிறேன். அதுக்குப் பதில் சொல்லிட்டுத் தூங்கிடு” என்றாள்.

“தயவு செஞ்சி அதைக் கேளு” என்று அவசரப்படுத்தினான்.

மிகுந்த தயக்கத்துடன், “மாறா… என்ன நடந்தாலும்… இந்த லவ் சரியா வராதுன்னு… விட்டுட மாட்டியே…? காலேஜ்-ல பேசாம இருந்தியே… அந்த மாதிரி பேசாம போயிட மாட்டியே” என்று ராஜாவின் நடவடிக்கைகள், அவன் வீட்டில் கிடைத்த கோப்பை மனதில் வைத்துக் கொண்டு கேட்டாள்.

அந்தக் கேள்வியில் அவனது தூக்கம் தூரே போய், “சுடர்! என்னாச்சு? எதுக்கு இப்போ இந்த மாதிரி கேட்கிற?” என சோர்வு சென்ற இடம் தெரியாத குரலில் கேட்டான்.

“சும்மாதான் மாறா! வேற ஒன்னுமில்லை”

‘இவளுக்கு என்னாச்சு?’ என்று புரியாமல் எழுந்து அமர்ந்தவன், “சும்மாலாம் கிடையாது. ஏதோ நடந்திருக்கு. இல்லைன்னா நீ இப்படிப் பேச மாட்ட” என்றான்.

‘எதுவும் நடக்கலை’ என சொல்ல வாய் வந்தாலும், “என்னமோ கேட்கணும்னு தோணிச்சு. அதான் கேட்டேன்” என்று மட்டும் சொன்னாள்.

‘ஏன் இப்படிக் கேட்கிறான்னு தெரியலையே?’ என்று குழம்பியவன், “சுடர்! பாண்டிச்சேரி பீச்-ல சொன்னது நியாபகம் இருக்கா?” என காதலியையும் காதலையும் வழி நடத்தும் குரலில் கேட்டதும், “இருக்கு மாறா” என நிம்மதியுடன் சொன்னாள்.

“அப்புறம் எதுக்கு சுடர் தேவையில்லாத கேள்வி?” என்று கஷ்டப்படும் குரலில் கேட்டான்.

“சரி! இனிமே கேட்கலை. குட் நைட்” என்று பேச்சை முடிக்க நினைக்கையில், “சுடர் ப்ளீஸ்! கொஞ்சம் நேரம் பேசிட்டுத் தூங்கு” என்றான்.

“உன் வாய்ஸே சொல்லுது, நீ டயர்டா இருக்கேன்-னு. தூங்கு மாறா”

“நீயும் தூங்கணும். முழிச்சிருந்து, எதையும் போட்டுக் குழப்பிக்க கூடாது. அன்ட் வேலை அதிகம். அதான் மீட் பண்ண முடியலை. நீ வேற எதுவும் நினைச்சிக்காத. சீக்கிரம் மீட் பண்ணலாம். சரியா?” என்று அவளைச் சரிசெய்யப் பார்த்தான்.

“ம்ம்ம்”

“வேறு எதுவும் இல்லையே?”

முழுதாக எதுவும் தெரியாமல் ராஜாவைப் பற்றி யாரிடமும் சொல்லப் பிடிக்காததால், “இல்லை மாறா. எனக்குத் தூக்கம் வருது. பை” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவளிடம், “சுடர் ஒரு நிமிஷம்” என்றான்.

‘என்ன சொல்லப் போகிறான்?’ என அமைதியாக இருந்தவளிடம், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என, அவளுக்கென்ற தனிப்பட்ட குரலில் சொல்லி, கைப்பேசியை வைத்தான்.

அவ்வளவு உறக்கமும் மாறனுக்கு உரு தெரியாமல் ஓடிப்போயிருந்தது. ‘இந்த லவ் சரியா வராதுன்னு பேசாம இருந்திட மாட்டியே?’ என்று சுடர் கேட்டதே மீண்டும் மீண்டும் காதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவள் இப்படிக் கேட்பதற்குக் காரணம் தான்தானே என்ற உண்மை உள்ளத்தைச் சுட்டது. உடனே அப்படி ஒரு முடிவெடுக்க காரணமான கல்லூரி நாளை நோக்கி, மனம் வருந்திச் சென்றது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 8

மாறனைப் பார்த்துப் பேசி, அன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. ‘இன்றாவது பார்க்க முடியுமா?’ என்ற பரிதவிப்புடன் மாறன் வகுப்பு இருக்கும் கட்டிடத்தை நோக்கி வந்தாள்.

உணவு இடைவேளை என்பதால் மாணாக்கர்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடே நடந்து வந்து, மாறன் வகுப்பு இருந்த நடைகூடத்தில் வந்து நின்றாள். கண்களால் சுற்றித் தேடவும்… வகுப்பிற்குள்ளே பார்க்கவும்… என்று காத்திருந்தாள்

ஒரு கட்டத்தில் அடுத்த பாடவேளை-க்கு நேரமாவது தெரிந்ததும், ‘சரி கிளம்பிவிடலாம்’ என்று திரும்புகையில், கண் எட்டும் தூரத்தில் மாறனும் ஆஷிக்கும் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அதே நேரத்தில் மாறனும் சுடரைப் பார்த்ததால், ஆஷிக்கை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்து அவள் முன்னே வந்து நின்றான்.

‘அவள், தன்னைத் தேடுகிறாள்’ என்பதை அறிந்ததும், உடலில் பள்ளம் விழும் வண்ணம் அவன் உள்ளம் குதித்துக் கொண்டிருந்தது. அந்தக் குஷியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு புன்னகையுடன் நின்றான்.

அவன் செயல் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆனால் ரசிக்கும் நிலையில் சுடர் இல்லை என்பதால், “எங்க போன? சொல்லிட்டுப் போகணும்-ங்கிற பேசிக் நாலேட்ஜ் தெரியாதா?” என, முதன் முதலாக அவனிடம் பேசும் பேச்சை அப்படித்தான் ஆரம்பித்தாள்.

அதைக் கேட்ட ஆஷிக், “என்ன இப்படிக் கேட்கிற?” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினான். ‘நானே என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன். இவன் ஏன் ஓவரா ரியாக்ட் பண்றான்?’ என்பது போல் மாறன் நண்பனைப் பார்த்தான்.

ஆஷிக் அப்படிக் கேட்டதும், ‘ஐயோ! அதிகமா பேசிட்டோமோ?’ என நினைத்த சுடர், “எங்கே போன?” என சாதாரணமாகக் கேட்டதும், “அவனுக்கு பீவர்” என்று ஆஷிக் சொன்னான்.

உடனே மாறனின் கண்களைப் பார்த்து, ‘அப்படியா?’ என விழி வழி அவனின் வலி அறிய கேட்டதும், ‘ஆமாம்’ என்று கண் மூடித் திறந்தான்.

“இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டு, அவன் நெற்றி அருகே கையைக் கொண்டு போகையில், “இப்ப சரியாயிடுச்சி சுடர்” என ஆஷிக் சொன்னதும், சுடர் சட்டென கையை இறக்கிக் கொண்டாள்.

‘ஏன் இப்படி?’ என்ற ரீதியில் மாறன் நண்பனை முறைத்துப் பார்த்தான்.

ஆஷிக் சிரித்துக் கொண்டே , “சரி! பேசிட்டு வா” என்று சொல்லி, வகுப்பறைக்குள் போனதும்…  சற்று நேரத்திற்கு ஒன்ஸ் அகைன் ‘அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினான்’ என்ற மொமென்ட்தான்!

அந்த மொமென்ட் முடிந்ததும், “சுடர்! என்னைத் தேடுனியா?” என மாறன் அன்புடன் கேட்டதற்கு, “பின்ன தேட மாட்டாங்களா?” என்று அடிக்கும் குரலில் கேட்டாள்.

“ப்ச்! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு” என்று அரட்டியதும், “ம்ம் ரொம்பத் தேடுனேன்” என்று அடங்கிப் போன குரலில் சொன்னாள்.

“ஏன்?” என்ற ஒற்றைக் கேள்வி கேட்டதும், “ஈவினிங் பவுன்டர் ஸ்டேச்சு-கிட்ட வா, அப்ப சொல்றேன்” என ‘ஓராயிரம் ஆசைகள் உன்னுடன் பேச இருக்கிறது’ என்பது போல் பேசினாள்.

“ஏன்-ன்னு எனக்கே தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்”

“அப்போ வர மாட்டியா?”

“அதெல்லாம் வருவேன்” என்று சொல்லும் பொழுதே, “ஏய் சுடர்! இங்க வந்து நிக்கிற? உங்க அப்பா வந்திருக்காங்க. வா” என மூச்சிரைக்க வந்து சுடரின் வகுப்புப் பெண் சொன்னாள்.

“நீ போ. நான் வர்றேன்” என்று சுடர் சொன்னதும், “சரி! சீக்கிரமா வா” என்று, அந்தப் பெண் சென்றுவிட்டாள். இப்போது சுடர் மாறனைப் பார்த்ததும், “சரி போ! ஈவினிங் மீட் பண்ணலாம்” என்றான்.

“அப்பாவைப் பார்க்க நீயும் வர்றியா?” என்று கேட்டதற்கு, “கிளாஸுக்கு டைம் ஆகிடுச்சு சுடர்” என்று மறுத்தான்.

“கொஞ்ச நேரம்தான? வா” என்று வற்புறுத்தியதும், “பட் கிளாஸ கட் பண்றது இதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்” என்று சொல்லி, அவளுடன் கிளம்பினான்.

கல்லூரியின் இன்னொரு பக்கத்தில்…

ஆளுங்கட்சியின் அமைச்சர் என்பதால் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு சிறு வரவேற்பு கிடைத்தது. அதன்பின், கல்லூரி வளாகத்தின் பார்வையாளர் பகுதியில் சுடரின் அப்பாவாக லிங்கம் காத்திருந்தார். அவருடன் கட்சி ஆட்களும் இருந்தனர்.

மாறனுடன் சுடர் அங்கே வந்ததும், “அதான் எங்க-ப்பா” என்று லிங்கத்தைச் சுட்டிக் காட்டியவள், “இங்கேயே நில்லு. நான் போய் பேசிட்டு வர்றேன்” என்று அப்பாவைப் பார்க்கும் ஆவலில் சென்றுவிட்டாள்.

அவள் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்த மாறன், அங்கே கரை வேஷ்டியுடன் நிற்கும் சுடரின் அப்பா மற்றும் கட்சி பேட்ஜ் குத்திக் கொண்டு நிற்கும் ஆட்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

இதற்கு நேர்மாறான மனநிலையில் சுடர் தன் அப்பாவிடம் பேச ஆரம்பித்தாள். “அம்மா வரலையா-ப்பா?” என்று கேட்டதும், “நாளைக்கு ராஜா கூட வர்றதா சொல்லிட்டா?” என்றார்.

“ஓ! அம்மா-பையன் சேர்ந்துக்கிட்டு உங்களைத் தனியா விட்டாங்களா-ப்பா?”

“அப்படி இல்லை சுடர். அப்பா-க்கு நாளைக்கு கோயம்புத்தூர்-ல ஒரு கட்சி மீட்டிங் இருக்கு. இன்னைக்கு சாயங்காலம் கிளம்பனும். அதான் இப்பவே உன்னைப் பார்த்திடலாம்னு வந்துட்டேன்”

சிரித்துக் கொண்டே, “எங்க கிஃப்ட்?” என்றதும், “இதோ” என்று ஒரு பரிசைக் கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார்.

“தேங்க்ஸ்-ப்பா” என்று சொல்லி, வாங்கிக் கொண்டாள். “இது நாங்கெல்லாம் சேர்ந்து உனக்கு கொடுக்கிற கிஃப்ட்” என ஒரு பெரிய பரிசை கட்சி ஆட்கள் கொடுத்தார்கள்.

“தேங்க்யூ ஸோ மச்” என்று சொல்லி, அவர்களின் பரிசை வாங்கிக் கொண்ட பின்னும் அவர்களது பேச்சுத் தொடர்ந்தது.

கொஞ்சம் தள்ளி நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாறன்… அங்கே வந்த சுடரின் வகுப்புத் தோழியிடம், “அவர் யாரு?” என்று கேட்டான்.

“சுடர் அப்பா! தமிழ்நாடு மினிஸ்டர்” என்றவள், ஒரு கட்சிப் பேரைச் சொல்லி, “அதுல பெரிய ஆளு” என்று சொல்லி சுடரை நோக்கிச் சென்றாள்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை, தன் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஏனென்றால் அவர்களின் விருப்பம், எதிர்பார்ப்பு அப்படி!?

உடனே, ‘என் விருப்பம்?’ என்ற கேள்வி உள்ளத்தில் உதித்தது.

ஆனால் அதற்கு, தான் படிக்கப் போகும் படிப்பு… பார்க்கப் போகும் வேலை… சுடரின் குடும்பப் பிண்ணனி… கட்சி ஆட்களுடன் அவளது பழக்கம்… இப்படி எதுவுமே ஒன்றுக்கொன்று ஒத்து வராது என்ற பதில்தான் மூளைக்கு எட்டியது.

சுடர் தன் எதிர்காலம் என்றால், என்னதான் நடுநிலையாக இருந்தாலும், தன் மீது ஒரு குறிப்பிட்ட கட்சியின் சாயம் விழுமல்லவா? என்ற கேள்வி வந்தது. அதற்குப் பதிலில்லாமல் போனது.

உடனே, சற்று தூரத்தில் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பவளைப் பார்த்தான். இன்றுதான் தன்னிடம் பேசவே ஆரம்பித்தாள். அதற்குள் இப்படியா? என்று கஷ்டமாக இருந்தது. இருந்தும், தன் நிலையை அவளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தான். 


Leave a Reply

error: Content is protected !!