YALOVIYAM 9.2

YALOVIYAM 9.2


யாழோவியம்


அத்தியாயம் – 9

யாழோவியம் அத்தியாயம் – 9 தொடர்கிறது…

அமர்ந்திருந்தவன், அப்படியே தலையணையில் சாய்ந்து கொண்டான். ‘ஏன் திடிர்னு இப்படிக் கேட்கணும்? ரெண்டு நாளுக்கு முன்னாடி நல்லா பேசினவ, இன்னைக்கு ஏன் இப்படிப் பேசணும்? என்ன நடந்திருக்கும்?” என யோசித்துக் கொண்டே உறக்கத்திற்குச் சென்றான்.

அடுத்த நாள்

அடுத்த நாளிலிருந்து, ‘இந்த முறைகேட்டிற்கு அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?’ என்ற எதிர்பார்ப்புடன் மாறன், சசி அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிச்சமாக இருந்தது.

பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்…

மாணவர் நலனில் அக்கறை கொண்ட ஒரு பேராசிரியர் தொடுத்த பொதுநல வழக்கு விசாரணை-க்கு வந்திருந்தது. நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

அன்றைய விசாரணையின் முடிவில், தமிழக அரசிடம் யாழ்மாறன் கொடுத்த அறிக்கையைச் சுட்டிக் காட்டி, ‘நுழைவுத் தேர்வு முறைகேடு வழக்கில், இன்னும் ஏன் விசாரணை குழு அமைக்கவில்லை?’ என தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, ‘கால அவகாசம் வேண்டும்’ என அரசு தரப்பு வழக்கறிஞர் சொன்னதும், நீதிமன்றம் ஒரு வார கால அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்திவைத்து.

அதே நேரத்தில் இந்த விடயம் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாகவும், ஊடங்களின் விவாதப் பொருளாகவும் மாறியது.

ஆனால், சசியும் மாறனும்தான் ‘எப்படியெல்லாம் டிலே பண்றாங்க?!’ என்று உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தனர். இருந்தும், அவர்கள் பொறுப்பில் ஒரு மாவட்டம் இருப்பதால், அந்தப் பணிகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.

பதினைந்து நாட்கள் கழிந்திருந்த நிலையில்…

மீண்டும் அதே கேள்வியை நீதிமன்றம் அரசின் முன் வைத்தது. ஆனால் இந்த முறை அரசு தரப்பு தந்த விளக்கத்தில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை.

எனவே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இது பற்றி விசாரிக்க இரண்டு அதிகாரிகளை நியமித்து, அவர்களின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டது.

அதற்குமேல் தாமதப்படுத்த முடியாது என்பதால், ‘ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் [special investigation team]’ என்ற விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

அந்தக் குழுவில் நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், பணி ஓய்வு அடைந்த ஒரு ஐபிஎஸ் அலுவலகர், மூன்று ஆய்வாளர்கள், நான்கு துணை ஆய்வாளர்கள் மற்றும் மூன்று தலைமை காவலர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

கூடுதலாக வழக்கு சம்பந்தமான கைதுகள் செய்வதற்கென ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் [special task force]’ என்ற காவல் துறை சிறப்புப் பிரிவையும் அமைத்திருந்தது.

இப்படி ஒரு அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து தலைப்புச் செய்தி, முக்கியச் செய்தி, அண்மைச் செய்தி, தற்போதைய செய்தி, பிளாஷ் நியூஸ், பிரேக்கிங் நியூஸ் என எல்லா பிரிவுகளிலும் இதுதான் இடம் பெற்றது.

மதிய வேளைக்கு மேல் விசாரணை குழுவில் இடம்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி குழுவின் சார்பில் ஊடங்களைச் சந்திக்க முடிவெடுத்தனர். இதற்கான ஏற்பாடு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலே நடந்தது.

ஒரு நீண்ட மேசையில் பல ஊடங்களின் பெயரைத் தாங்கியிருந்த ‘மைக்’ வைக்கப்பட்டிருந்தது. மேலும், பத்திரிகைகள் மற்றும் ஊடங்களின் சார்பில் செய்தி சேகரிக்க வந்த நபர்கள் நின்றனர்.

எல்லாம் சீராக அமைக்கப்பட்டு முடிந்ததும், அந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மற்றும் நீதிபதியும் வந்து அமர்ந்தனர்.

இருவரும் நேர்மையான அதிகாரிகளுக்கே உண்டான நிமிர்வுடன், யாருக்கும் பயமில்லை என்ற தைரியத்துடன் அமர்ந்திருந்தனர். பணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்தான், ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த தோரணை தவறு செய்வோரை பயங்கொள்ளச் செய்யும்படியாக இருந்தது.

முறைகேடு பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டாலும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், ‘இதுகுறித்து இப்ப எதுவும் சொல்ல முடியாது’ என்று முடித்துக் கொண்டார்.

உடனே, “இந்த டீம்-ல நீங்க இருக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்ற பொதுவானக் கேள்விக்குத் தாவியது ஊர் ஊடகம்.

“ரெண்டவது முறையா ஒரு விசாரணைக்கு லீட் பண்றேன். நேர்மையான முறையில் விசாரணை நடக்கும்” – ஐபிஎஸ் அதிகாரி.

“சார்! ஏதாவது டைம் கொடுத்திருக்காங்களா?” – ஊடகம்.

“40 டேய்ஸ் -ல இந்த ஸ்கேம் பத்தின ஃபுல் ரிப்போர்ட் கவர்ன்மென்ட்-கிட்ட சப்மிட் பண்ணனும்” – ஓய்வு பெற்ற நீதிபதி அலெக்ஸ்.

“சார்! உங்க பையன் கலெக்டர் யாழ்மாறன்-தான் இந்த கேஸை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருகிறார். அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” – ஊடகம்.

பொறுப்பையும் மீறி பெருமையுடன் ஐபிஎஸ் அதிகாரி புன்னகை புரிந்தார். பின், “அவர் அவரோட கடமையைச் சரியா செஞ்சிட்டார். நான் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியா செய்யணும்” என்றார்.

மேலும், “பட் ஒரு அப்பாவா ‘விசில் ப்ளோவர் [whistle blower*]  ஆஃப் திஸ் ஸ்கேம்’ யாழ்மாறன் அப்படிங்கிறதுல எனக்குப் பெருமைதான்” என விசாரணைக் குழுவில் இருந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், யாழ்மாறனின் தந்தையுமான தியாகு சொன்னார்.

அடுத்தடுத்த கேள்விகள் கேட்கப்பட்டாலும், எதற்கும் பதில் சொல்லாமல் பேட்டியை முடித்துக் கொண்டனர்.

ஊடங்களில் திரும்பத் திரும்ப இதே செய்தியும், தியாகுவின் பேட்டியும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. மேலும் அன்றைய இரவே அதைப் பற்றிய விவாதங்களும் இருந்தது.

இந்தச் செய்தி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான எதிர்வினையை உருவாக்கி இருந்தது.

மாவட்ட ஆட்சியர் பங்களா, செங்கல்பட்டு

திலோவும் மாறனும் இரவு உணவை எடுத்துக் கொண்டே செய்தியையும் தியாகுவின் பேட்டியையும் பார்த்தனர். தியாகு இன்னும் சென்னையிலிருந்து வரவில்லை.

நீதிமன்ற அறிவிப்பிற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவரிடம் வழக்கு பற்றி, விசாரணைக் குழு பற்றி விரிவாகச் சொல்லப்பட்டு, சென்னை புறப்பட்டுச் சென்றிருந்தார்.

“இப்போ டென்ஷன் எல்லாம் போயிடுச்சா?” என்று மகனின் முகத்தைப் பார்த்து திலோ கேட்டார்.

“100%. இனிமே அப்பா பார்த்துப்பாரு. நானும் சசியும் பயங்கிற ஹேப்பியா இருக்கோம்” என்று சிரித்தான்.

“அது உன் முகத்திலயே தெரியுது! பட், அப்பா வீட்ல இருக்கிற டைம் குறைஞ்சிடும். பொட்டிக்-லருந்து வந்தா எனக்கு போரடிக்கும்”

“அதான் நான் இருக்கேன்ல-ம்மா” என்று சொன்னதும், “நீ ரொம்ப பிஸி மாறன்” என்று சிரித்துக் கொண்டார்.

“அப்பா பார்த்துப்பாங்க-ன்னு நினைச்சிதான், நான் என் வேலையைப் பார்த்தேன். இப்பவும் அப்படி இருக்க மாட்டேன்” என்றதும், “ஸோ கைன்டு ஆஃப் யூ” என்று மேலும் சிரித்தார்.

இதேபோல் அம்மாவும் மகனும் பேச்சும் சிரிப்புமாக சாப்பிட்டு முடித்தனர்.

இதே நேரத்தில் சென்னை விமான நிலையத்தில்…

கட்சி விழாவிற்கென்று கன்னியாகுமரி சென்றுவிட்டு ராகவனும், லிங்கமும் சென்னை வந்தடைந்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர்களைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, பொதுவானக் கேள்விகள் கேட்டனர்.

பின் கேட்க நினைத்த ‘விசாரணைக் குழு’ பற்றிய கேள்வி கேட்டு மைக்கை ராகவன் முன் நீட்டியதும், “நானும் நியூஸ் பார்த்தேன். இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்” என்று சொன்னார்.

லிங்கத்தை நோக்கி மைக் நீட்டப்பட்டதும், “முறைகேடு நடந்திருக்குன்னு சொல்றாங்க. முறையான விசாரணை நடக்கிறது நல்லதுதான்” என்றார்.

அதன்பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லவிட்டு, இருவரும் கிளம்பினார்கள்.

இதே நேரத்தில் ராஜாவின் வீட்டில்…

வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான். எந்த ஒரு விளக்குகளும் எரியவில்லை. பெரிய டிவியில் இரவு நேர செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சம்தான், அந்த அறையின் இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது.

விசாரணைக் குழு பற்றிய செய்தி வந்ததும், கூர்ந்து கவனித்தான். அந்தச் செய்தி முடிந்ததும், சுவரில் மாட்டப்பட்டிருந்த ஜெகதீஷின் புகைப்படத்தைப் பார்த்தான். 

பார்த்ததும், இரு இமைகளையும் இறுக்கமாக மூடி சோஃபாவின் பின்புறம் சாய்ந்து கொண்டு, ‘பொறுமையா… அமைதியா இருக்கணும்’ என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டான்.

இதே நாளில் உயர் கல்வித்துறை அமைச்சர் ராகினி வீட்டில்…

செய்தியைப் பார்த்துக் கொதித்துப் போயி, பின்புறமாக கைகளைக் கோர்த்துக் கொண்டவாறு அலுவலக அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.

லெதர் செருப்பு கதறும் வண்ணம் அவருடைய நடை அழுத்தமாக இருந்தது. கண்களில் அப்படி ஒரு சினம் இருந்தது. அதுவும் தியாகு, ‘விசில் ப்ளோவர் ஆஃப் திஸ் ஸ்கேம்’ என யாழ்மாறனை சொன்னது, அவன் மீதான கோபத்தை நூறு மடங்கு அதிகப்படுத்தியிருந்தது.

எப்படிச் சொன்னாலும் கேட்காமல், அவனால்தானே இந்த விடயம் இன்று விஸ்வருபம் எடுத்திருக்கிறது என எண்ணும் போதே கைப்பேசி அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்ற ராகினி, “ஹலோ” என்றதும், “நியூஸ் பார்த்தீங்களா?” என்று கேட்டது அழைத்த ஆண்குரல்.

“ம்ம்! பார்த்தேன். பார்த்திட்டு என்ன செய்யன்னு தெரியாம இருக்கேன்”

“முறையான விசாரணை வேணும்னு கேட்டதும், நமக்கு ஃபேவரா நடந்துகிற ஆளுங்களை போட்டு ஒரு கமிஷன் அமைச்சிருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. என்ன செஞ்சிட முடியும்னு அலட்சியமா இருந்தது, தப்பா போயிடுச்சி!” என்று அந்த ஆண்குரல் பேசியது.

ராகினி அமைதியாக இருந்தார்.

“ப்ச்! அந்த ரெண்டு பேரும் கேஸ் பத்தின ஒவ்வொரு விஷயத்தையும் தோண்டி எடுக்காம விடமாட்டாங்க. ஏன்னா ரெண்டு பேரோட ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் அப்படி” என்றது அந்த ஆண்குரல்.

“ச்சே! எல்லாம் அந்த கலெக்டராலதான். இப்போ என்ன பண்ண?”

“பொறுமையா இருங்க. இப்போ ஏதாவது செஞ்சா அது தப்பாயிடும்”

“அப்போ எதுவும் பண்ண வேண்டாமா? அந்த கலெக்டரை எதுவுமே பண்ண முடியாதா?”

“இப்போ வேண்டாம்னு சொல்றேன். ஆனா நம்ம மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்னு சொல்லி, கேஸை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கான்-ல… அவனுக்கு ஏதாவது பெருசா பண்ணனும்” என, அந்த ஆண்குரல் பழிவாங்கும் வெறியுடன் சொல்லி, அதன் பின்னரும் சற்று நேரம் பேசிவிட்டுதான் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

பத்து நாட்கள் கடந்திருந்தது…

லிங்கத்தின் வீடு, சுடரின் அறையில்…

கடிகாரம் இரவு 11:57 என்று காட்டியது. மெத்தை மேல் கைப்பேசியை வைத்திருந்தாள். கால்களை மடித்து, கன்னத்தில் கைவைத்து அமர்ந்து கடிகாரத்தைப் பார்ப்பதும், கைப்பேசியைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

கடிகாரம் பன்னிரண்டு என்று காட்டிவிட்டால் சுடரின் பிறந்தநாள். எல்லா வருடமும் இந்த நேரத்தில், முதலில் யார் அழைத்து வாழ்த்துச் சொல்வார்கள்? ராஜாவா? மாறனா? என்ற கேள்வியுடன் காத்திருப்பாள்.

ஆனால் இன்று ராஜா அழைப்பிற்காகக் காத்திருந்தாள். அவள் பிறந்தநாள் அன்று என்ன கேட்டாலும், ராஜா முடியாதென்று சொல்ல மாட்டான். ஆதலால் அவனிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்ற முடிவுடன் இருந்தாள்.


Whistle Blower  : ஒரு தவறை/தவறான செயலை முதலில் வெளிக்கொண்டு வருபவர். 

கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் பெயர்கள் கற்பனையே. மற்றொரு விடயம் பின்னொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Leave a Reply

error: Content is protected !!