அனல் பார்வை 26🔥

ei473SS41317-771f5198

அனல் பார்வை 26🔥

மூவரும் ஒவ்வொரு  சிந்தனையில் அந்த விசாலமான அறையில் அமர்ந்திருக்க, இரண்டு காவலர்கள் சூழ தடாலடியாக அறைக்குள் நுழைந்தான் அக்னி. தன்னவனை கண்டதும் உற்சாகமானவள், “மஹி…” என்றழைத்தவாறு அவனை நோக்கி வர, தங்கள் தலைவனின் அருகில் வந்தவளை இரண்டே எட்டில் நிறுத்தியவர்கள் அவளை நோக்கி ஈட்டியை குறி வைத்தவாறு முறைத்துக் கொண்டு நிற்க, தன்னவனை அதிர்ந்து நோக்கினாள் அருவி.

அந்த காவலர்களை முறைத்த அக்னி, அவர்களை வெளியே செல்லுமாறு கண்களால் காட்ட, அவர்கள் சென்ற அடுத்தநொடி, “எதுக்கு இங்க வந்தீங்க?” என்று இறுகிய குரலில் கேட்டான்.

“மஹி, என் மேல கோபமா இருக்கியா? ஏன் டா இப்படி என்னை விட்டு விலகிப் போற? என்னால முடியல.” என்று அருவி தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டே போக, அக்னியோ அவள் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

“எதுக்கு இங்க வந்தீங்கன்னு கேட்டேன். மனோவா அ பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். நான் மட்டும் ‘ராகு தான் என்னை காப்பாத்தினான்’னு சொல்லலன்னா இப்போ நீங்க மூனு பேரும் சிறைக்குள்ள இருந்திருப்பீங்க. இது என்ன உங்க நகரத்து சிறை மாதிரி நினைச்சிடீங்களா? கிட்டதட்ட உயிரோட கொன்னுருவாங்க.

இப்போ அவங்க உங்கள அனுமதிச்சாலும் அவங்கள பொருத்தவரைக்கும் நீங்க வெளியாளுங்க தான். ஒரு சின்ன தப்பு பண்ணாலும் அதை பெரிது பண்ண தான் பார்ப்பாங்க. அதுவும் சாகுற வரைக்கும் இங்கேயே உங்களால இருக்க முடியுமா என்ன? ரொம்ப பெரிய தப்பு பண்ணிடீங்க.” என்ற அக்னியின் வார்த்தைகளில் அத்தனை கோபம்!

தாரக்கோ எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, ராகவ்வோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு, “ஆகு…” என்று அழுத்தமாக அழைத்தான்.

அக்னியோ  ராகவ்வின் அழைப்பை கண்டுக்காது, “மொதல்ல இங்கயிருந்து கிளம்புங்க. யாருக்கும் தெரியாம நகரத்தை விட்டு வெளியேற நான் ஏற்பாட்டை பண்றேன். நீங்க இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து தான்.” என்று சொல்லி முடிக்கவில்லை, “ஷட் அப் ஆகு!” என்ற ராகவ்விவ் கத்தலில் கண்களை அழுந்த மூடித் திறந்தான் அவன்.

ஆனாலும், தன் நண்பனின் புறம் பார்வையை திருப்பாது, “சொல்றதை மட்டும் கேளுங்க! இல்லைன்னா, விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.” என்று காட்டமாக உரைத்துவிட்டு தாரக்கின் புறம் திரும்பிய அக்னி, “இதை பத்தி ஆராய்ச்சி பண்ற உனக்கு இதோட ஆபத்து தெரியாம இருக்காது. நான் சொல்றதை கேட்டு இவங்கள அழைச்சிட்டு போயிரு! அவ்வளவு தான்.” என்று இறுகிய குரலில் சொல்லி வெளியே செல்ல எத்தனிக்க, அவன் பேசுவதையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அருவி அவன் வெளியே செல்வதை உணர்ந்து ஓடிச்சென்று தன்னவனை வழிமறித்தவாறு வந்து நின்றுக் கொண்டாள்.

“நீ என்னை உன்னை விட்டு எப்படி போக சொல்லலாம் மஹி? ப்ளீஸ் என் கூட வந்துரு! நீ எனக்கு வேணும் டா. நாம நமக்கான வாழ்க்கைய வாழலாம். எனக்கு நீ மட்டும் போதும்.” என்று அவள் கண்ணீர் குளம் கட்டிய விழிகளுடன் பேசிக்கொண்டே போக, “போதும் தீ!” என்ற அக்னியின் கர்ஜனையில் இரு கைகளாலும் வாயைப் பொத்தி அவனை மிரட்சியாக நோக்கினாள் அருவி.

ராகவ்வோ இறுகிய முகமாக தன் நண்பனையே கூர்மையாக பார்த்தவாறு நின்றிருக்க, தலையை அழுந்த கோதி தன்னை நிதானப்படுத்தியவன் அருவிக்கு பதில் கொடுக்காது தாரக்கின் புறம் திரும்பி, “இன்னும் மூனு நாள்ல சடங்கு ஆரம்பிக்க போகுது. சடங்கு முடிஞ்சதும் என்னோட மக்களுக்கு தலைவனா பதவி ஏத்துக்கனும். இந்த நகரத்துக்கு நான் தேவை!” என்று அழுத்தமாக உரைத்து, “உன் அக்காக்கிட்ட சொல்லு! எனக்கு என்னோட மக்கள் தான் முக்கியம். உங்க மேல சின்ன சந்தேகம் வந்தாலும் உங்கள கொன்னுட்டு தான் என்கிட்ட சொல்லுவாங்க. புரியும்னு நினைக்கிறேன்.” என்றுவிட்டு விறுவிறுவென சென்றான்.

அருவியோ ஓவென்று அழுக ஆரம்பிக்க, தாரக் தான் அக்னியின் மிரட்டலில் உண்டான பயத்தால் எச்சிலை விழுங்கிக் கொண்டான்.

“டேய் சாகு! என்ன டா உன் ஃப்ரென்டு? என்கிட்ட எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சி பழகியிருக்கான். குழந்தைய கொடுத்துட்டு அவன் பாட்டுக்கு என்னை விட்டுட்டு போனான். ஏகப்பட்ட ப்ளான் போட்டு அவன என் பக்கத்துல கொண்டு வந்தா… மறுபடியும் என்னை விட்டு இங்க வந்து உட்கார்ந்துகிட்டு வர முடியாதுன்னு என்னை திட்டிட்டு போறான். இடியட்! என்ன டா நினைச்சிக்கிட்டு இருக்கான் அவன்?” என்று தன்னவனை திட்டியவாறு அவள் அழ,

நெற்றியை நீவி விட்டவாறு அவளை சலிப்பாக பார்த்த ராகவ், “ஆகு எதையும் யோசிக்காம பேச மாட்டான். இப்போ கூட உனக்காக தான் பேசிட்டு போயிருக்கான். ஆனா ஒன்னு ராங்கி, நீ அவன வேலைக்காரனா நடத்துனது மட்டும் இந்த ஊர்ல இருக்குற யாருக்காச்சும் தெரிஞ்சது…” என்று இழுத்து, “கூடவே, நீ பொய் சொல்லி தான் அவன வேலைக்கார வச்சேன்னு ஆகுக்கு தெரிஞ்சது… செத்தான் சிவனான்டி!” என்று சொல்லி சிரிக்க,

திருதிருவென விழித்தவள் பின் கோபமாக, “என் மஹி இல்லாம நான் இங்க இருந்து வர மாட்டேன்.” என்று சபதம் எடுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள்.

“க்கும்! அப்போ நாம இங்கயிருந்து போக போறதில்லை.” என்று சலிப்பாக சொன்னவாறு ராகவ் தொப்பென்று மெத்தையில் அமர, ஒரு திட்டத்தை தீட்டியவாறு தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் தாரக்.

இங்கு அருவியோ கழிவறையில் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் தன் மார்பிலிருந்த தன்னவனின் டாட்டூ முகத்தை கண்கள் கலங்க பார்த்தவாறு நின்றிருக்க, தன் அறைக்கு வந்த அக்னிக்கோ நிலைக்கொள்ளவே முடியவில்லை.

‘ஏன் ஜானு என்னை தேடி வந்த? என்னால என் நகரத்தை விட்டு வர முடியாது. ஒரு தலைவனா மறுபடியும் என் கடமையில நான் தவற கூடாது. கூடவே, உன் கனவு கலையவும் நான் அனுமதிக்க மாட்டேன். இது உனக்கான இடம் இல்லை ஜானு. உன் இடத்துக்கு போயிரு! என் முன்னால இருந்து போயிரு!’ என்று மானசீகமாக தன்னவளுடன் பேசியவன் அன்று அவள் சொன்ன, “எவ்வளவு உயரத்துக்கு போனாலும் நீ இல்லாத வாழ்க்கை வெறுமை டா. நடைப் பொணம் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருக்கேன்.” என்ற வலி நிறைந்த வார்த்தைகளை மறந்து தான் போனான்.

இரவு தன் அறையில் தூங்க முயற்சித்த ராகவ்விற்கு தூக்கம் வந்தால் தானே! அக்னி அவன் பார்வையை தவிர்த்து நடந்துக் கொண்ட முறையில் உச்சகட்ட கோபத்தில் இருந்தவனுக்கு தன் நண்பர்களின் வாழ்க்கையை நினைத்து அத்தனை வேதனையாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அறையிலிருந்து கதவிடுக்கின் வழியே தலையை மட்டும் வெளியே போட்டு எட்டிப் பார்த்தவன், மெதுவாக அறையிலிருந்து வெளியேறி ஒவ்வொன்றையும் ஆராய்ந்தவாறு அந்த வராண்டாவில் பதுங்கி பதுங்கி நடந்துச் சென்றான்.

அவனுக்கோ மின்னும் தங்கத்திலான ஒவ்வொரு பொருட்களையும் பார்த்து அத்தனை ஆச்சரியம்! ‘இந்த நகரத்தை நம்மாளுங்க கண்டுபிடிக்கனும்னு நினைக்கிறதுல தப்பேயில்லை.’ என்று கேலியாக நினைத்தவாறு சென்றுக் கொண்டிருந்தவன் சட்டென கேட்ட சலசலப்பு சத்தத்தில் ஓடிச்சென்று ஒரு தூணிற்கு பின்னால் மறைந்து நின்று எட்டிப்பார்த்தான்.

திடீரென அவன் முதுகுப்புறத்தில் ஏதோ அழுத்தியதில் திடுக்கிட்டவனுக்கு பயத்தில் முகம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. “ஆத்தீ! நான் இல்லை. சும்மா காத்து வாங்க தான்…” என்று பதறிக்கொண்டு சொன்னவாறு திரும்பிய ராகவ், தன் முன் நின்றிருந்த பெண்ணை பார்த்து, “வாவ்!” என்று இதழ்களை அசைத்தான்.

அவளோ தன் கையிலிருந்த ஈட்டியின் முனையை அவனின் இடது பக்க மார்பில் அழுத்தி, “இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று ஸ்பானியன் மொழியில் கர்ஜனையாக கேட்டாள். அவளை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் தானாக விரிய, ஏனோ ‘இவள் தான் தன்னவள்’ என்று எங்கிருந்தோ ஒரு அசரீரியின் குரல் வேறு கேட்பது போன்ற பிரம்மை அவனுக்கு!

அவளின் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கும் தோரணை, திராவிட நிறமாக இருந்தாலும் கலையான முகம், அவளின் வித்தியாசமான ஆடை என்பவை அவனை அவள் பக்கம் ஈர்ப்பது போன்ற உணர்வு!

அவளை விழிகளால் விழுங்கியவாறு பார்த்துக்கொண்டு ஒரு கையை நீட்டி, “ஹாய், ஐ அம் ராகவ்.” என்று சொல்ல வந்தவன், அவள் முறைத்த முறைப்பில் பேச்சை நிறுத்தி இரு கைகளை மேலே உயர்த்தி புன்னகைக்க, அவள் தான் அவனின் புன்னகையை வித்தியாசமாக பார்த்தாள்.

அவனோ அவளைப் பார்த்தவாறே தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு வரும் போது தனக்கென கொண்டு வந்த லொலிபொப்பை வெளியே எடுக்க, அவளோ அவன் ஏதோ ஆயுதம் எடுப்பதாக நினைத்து அவன் மார்பில் அழுத்தியிருந்த ஈட்டியில் மேலும் அழுத்தத்தை கூட்டினாள்.

ஈட்டியை இறுகப்பற்றியவாறு அவனை அவள் முறைக்க, “நோ… நோ… இதை நீ சாப்பிடுவியா? என்னோட ஃபேவரிட்.” என்று ஸ்பானியன் மொழியில் சொன்னவாறு அவளிடம் லொலிபொப்பை நீட்டினான் அவன். அவனை மேலிருந்து கீழ் விசித்திரமாக பார்த்தவள், அவனின் மார்பில் அழுத்தியிருந்த ஈட்டியை எடுக்காது மற்ற கையினால் அவன் நீட்டிய லொலிபொப்பை ஆர்வமாக எடுத்து சுவைத்துப் பார்த்தாள்.

அடுத்தநொடி அவளுடைய கண்கள் சாரசர் போல் விரிய, அவன் மார்பில் அழுத்தியிருந்த ஈட்டியையும் எடுத்திருந்தாள். ராகவ்வோ அவளையே ரசனையாக பார்த்தவாறு, “பிடிச்சிருக்கா?” என்று கேட்க, கண்களை மூடி லொலிபொப்பின் இனிப்பை சுவைத்தவள், புன்னகையுடன் தலையாட்டியவாறு தூணில் சாய்ந்து நின்று ரசித்து சாப்பிட, அவனோ அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன் பேரென்ன?” என்று ராகவ் கேட்க, சட்டென கேட்ட, “ராகு!” என்ற அக்னியின் குரலில் அதிர்ந்த அந்த பெண்ணோ அங்கிருந்து ஓடி விட, ராகவ்விற்கு தான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

‘ச்சே!’ என்று சலித்தவாறு திரும்பி தன் பின்னால் நின்றிருந்தவனை பார்த்த ராகவ், “கரடி! கரடி!” என்று திட்டியவாறு விறுவிறுவென தன் அறையை நோக்கி செல்ல, “ராகு நில்லு! நான் உன்கிட்ட பேசனும்.” என்று கத்தியவாறு அவன் பின்னாலே ஓடினான் அக்னி.

ராகவ்வோ அவனின் அழைப்பை காதில் வாங்காது வேகமாக செல்ல, ஓடிச்சென்று அவனை அங்கிருந்த ஒரு அறைக்குள் அக்னி இழுத்து நிறுத்திய அடுத்தகணம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் ராகவ். முதலில் கன்னத்தை பொத்தியவாறு, “ஏன் ராகு?!” என்று அதிர்ந்து பார்த்த அக்னி, பதிலுக்கு ராகவ்வின் முகத்தில் குத்த, தன் மூக்கிலிருந்து வந்த இரத்தத்தை தொட்டு பார்த்து அதிர்ந்தவன், “அடிங்க! என்னையே திருப்பி அடிக்கிற அளவுக்கு வந்துட்டியா? உன்னை…” என்றவாறு அக்னியின் மேல் பாய்ந்தான்.

இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்க, அந்த அறையே அல்லோலப்பட்டது தான் மிச்சம். அடித்து முடித்து களைத்துப் போய் இருவரும் தரையில் படுத்திருக்க, ராகவ்வை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த அக்னி, “உனக்கு உடம்பு குணமாயிருச்சா ராகு? இப்போ நல்லா இருக்கல்ல? உனக்கு குணமாக ரொம்ப நாளாகும்னு தீ சொன்னா.” என்று சந்தேகமாக கேட்க,

‘அந்த ராங்கிய…’ என்று உள்ளுக்குள் அருவியை வறுத்தவன், “அது வந்து.. அது… ஆமா ஆகு, இப்போ நான் நல்லா இருக்கேன். நீ என்னை விட்டு போனதும் என்ன மாயமோ? மந்திரமோ? தெரியல. உன்னை தேடி வர்றதுக்காகவே என் உடம்பு சரியாகிருச்சி. ஹிஹிஹி…” என்று சொல்லிவிட்டு அசடுவழிய, அவனை கண்களை சுருக்கி சந்தேகமாக பார்த்த அக்னி, “இது நம்புற மாதிரி இல்லையே…” என்று அழுத்தமாக சொன்னான்.

‘சோதீக்காதீங்க டா!’ என்று அவன் பார்வையில் பதறி உள்ளுக்குள் புலம்பியவன், “அதை விடு ஆகு! நான் இத்தனை நாள் உன்கிட்ட கேக்கனும்னு நினைச்சேன். மூனு வருஷத்துக்கு முன்னாடியே நீ தலைவனாகியிருக்கனும். ஆனா, மிஸ்டர்.ஆதிகேஷவன் கூடவே நீயும் வந்த. அப்போ நான் கேக்கும் போதும் எதுவுமே சொல்லல்ல. என்ட், நீ ஏன் ஆரம்பத்துல உன் நகரத்தை விட்டு வந்த? அய்யோ! ஏகப்பட்ட கேள்வி மண்டைக்குள்ள! தலையே சுத்துது. என்ன நடந்துச்சின்னு இப்போவாச்சும் சொல்லு டா!” என்று கேட்க, சலிப்பாக இருபக்கமும் தலையாட்டியவன் நடந்ததை சொல்ல தொடங்கினான்.

“ராகு, நான் சின்ன வயசுல இருக்கும் போதே தீயோட அப்பா இங்க மாட்டிக்கிட்டாரு. அவர்கிட்ட தான் நான் நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன். மொழி கூட… அப்போ, அடிக்கடி அவர் பிறந்து வளர்ந்த உங்க நகரத்தை பத்தி சொல்வாரு. அதை கேக்கும் போது எனக்குள்ள ஒரு ஆர்வம்.

ஒருவேள, இந்த உலகத்தை பத்தி நான் இன்னும் முழுசா தெரியாம இருக்கேனோன்னு தோணிச்சி. வெளியுலகத்தை பார்க்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா, திடீர்னு என்னோட அப்பா அதாவது இதுக்கு முன்னாடி இருந்த மனோவா நகரத்தோட தலைவர் இறந்துட்டாரு. நான் பதவிய ஏத்துக்க வேண்டிய கட்டாயம்!

பட், நான் அப்போ அதுக்கு தயாரா இல்லை. அதான், நகரத்துல இருந்து யாருக்கும் தெரியாம வெளியுலகத்தை பார்க்க வந்தேன். ஆனா, அந்த நதிக்கரையில மயங்கி விழுந்துட்டேன். அப்போ தான் நீ என்னை பார்த்த. அப்றம் தீ தான் ஐயாவோட பொண்ணுன்னு தெரிஞ்சதும் அவங்க சொன்னபடி நான் பதவி ஏத்துக்கிட்டு அவர அனுப்பி விட்டுரலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள எனக்கொரு தகவல் வந்திச்சி.” என்று அக்னி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதை குறுக்கிட்டான் ராகவ்.

“நான் நினைக்கிறது சரின்னா… உங்க ரகசியம் தெரிஞ்ச அவர கொல்ல யோசிச்சிருப்பாங்க. ரைட்?” என்று அவன் கேட்க, அவனை மெச்சுதலாக நோக்கிய அக்னி, “ஆமா ராகு, இந்த நகரத்துக்குள்ள வர்றவங்க வெளில செல்ல அனுமதி கிடையாது. போறதுன்னா பொணமா தான் போகனும். இத்தனை வருஷமா இங்கயிருந்து எங்க நகரத்தோட மொத்த ரகசியமும் அறிஞ்ச ஒருத்தரை உயிரோட அனுப்ப அவங்க தயாரா இல்லை. என் முன்னாடி அவர வெளில அனுப்ப சம்மதிச்சிட்டு எனக்கே தெரியாம கொல்ல திட்டம் போட்டாங்க. அதான், தகவல் கிடைச்சதும் எதுவும் யோசிக்காம அவரை இங்கயிருந்து அழைச்சிட்டு வந்தேன். கூடவே, நானும் வந்துட்டேன்.” என்று சொல்லி முடித்தான்.

“சரி… இப்போ சார் என்ன பண்றதா உத்தேசம்? இந்த மக்களுக்கு தலைவனாக போற! அப்போ அரு?” என்று ராகவ் சற்று காட்டமாக கேட்க, “இது தான் எனக்கான இடம். என்னால இங்கயிருந்து வர முடியாது. அவளை கூட்டிட்டு போயிரு ராகு!” என்ற அக்னியின் பதிலில் எழுந்து அமர்ந்தவன் நெற்றியை நீவி விட்டவாறு, “அப்போ இனி நம்ம வீட்டுக்கு போக முடியாதா?” என்று கேட்டான்.

அதில் மென்மையாக சிரித்த அக்னி, “நீ உன்னோட வீட்டுக்கு போறதுக்கு நான் உதவி பண்றேன். இது உங்களுக்கான இடம் இல்லை. இங்க உங்களால இருக்கவும் முடியாது. என் ஜானுவ காதல காரணமா வச்சி இந்த கூண்டுக்குள்ள அடைக்க நான் விரும்பல. ஆரம்பத்துல எனக்காக அவள் இருக்க சம்மதிச்சாலும் ஒருகட்டதுக்கு மேல உங்க உலகத்து கேளிக்கைகள விட்டு அவளால இருக்க முடியாது. அதுமட்டுமில்ல, என் ஜானுவோட கனவு எனக்கு ரொம்ப முக்கியம்.” என்று வலி நிறைந்த குரலுடன் சொல்ல,

ஏதோ யோசித்த ராகவ், “அருவ என்னால சமாளிக்க முடியாது. ஆனா, நீ எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு! மூனு நாள்ல சடங்குன்னு சொன்னியே… அது என்ன சடங்கு?” என்று புரியாமல் கேட்டான்.

அக்னியும் எங்கோ வெறித்தபடி நடக்கப் போகும் சடங்கை பற்றி சொல்ல, அதிர்ந்தவன்,  “வாட்?! சுத்த ஃபூலிஷ் ஆ இருக்கு. நோ ஆகு, நீ இதை பண்ண கூடாது! முட்டாள் மாதிரி நடந்துக்காத!” என்று ஒருவித பதட்டத்துடன் திட்ட ஆரம்பித்தான்.

“ஒரு தலைவனா பொறுப்பேத்துக்க முன்னாடி நான் இதை பண்ணி தான் ஆகனும்.” என்று அக்னி அழுத்தமாக சொல்ல, தன் நண்பனை ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைத்தவன், “ஆமா… மாமாகிட்ட என்னை பத்தி என்ன சொன்ன? காரி துப்பாத குறை தான். அசிங்க அசிங்கமா திட்டுறாரு.” என்று காட்டமாக கேட்டான்.

அதில் திருதிருவென விழித்த அக்னி, “அது… அது வந்து… நீ ஒரு பொண்ணு கூட அதான் டேட்டிங்னு ஒன்னு சொல்லுவியே… அதுக்கு போயிட்ட அதுவும் என்னை விட்டுட்டு. அப்படின்னு சொன்னேன். ஹிஹிஹி…” என்று சொல்லி அசடுவழிய, “வாய திறந்தாலே பொய்யு!” என்று சத்தமாக சொன்னவாறு அவனை உக்கிரமாக முறைத்தான் ராகவ்.

அக்னியோ பேச்சை மாற்றும் பொருட்டு, “அதை விடு ராகு! நீ ஆலாகிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்த?” என்று கேட்க, ராகவ்வோ, “ஆலா?” என்று கேள்வியாக புருவத்தை உயர்த்தினான்.

“அதான் நான் வரும் போது ஒரு பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தியே… அவ தான் ஆலா.” என்று அக்னி சொல்ல, தன்னவள் பெயரை தெரிந்துக் கொண்ட சந்தோஷத்தில், “ஆலா… வாட் அ வியர்ட் நேம்?!” என்று ரசனையாக சொல்லிக்கொண்டான் அவன்.

அவனின் பாவனையில் ‘என்னாச்சு இவனுக்கு?’ என்று நினைத்தவாறு தன் நண்பனை மேலிருந்து கீழ் விசித்திரமாக பார்த்த அக்னி, “புரிஞ்சி போச்சு! இங்கயிருந்து போறதுக்குள்ள எங்க ஊரு பொண்ணுக்கிட்ட வெட்டு குத்து வாங்கிட்டு தான் போக போற.” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்த ராகவ், “உண்மையான காதல் தோற்காது.” என்று வசனத்தை வேறு அடித்து விட்டான்.

அதில் அதிர்ந்து விழித்த அக்னி, “அப்போ முடிவே பண்ணிட்டியா?” என்று கேட்க, சட்டை கோலரை ஸ்டைலாக தூக்கி விட்டு ஒற்றை கண்ணை சிமிட்டி புன்னகைத்தவன், “உங்க ஊரு வருங்கால மருமகன இப்படி தான் மரியாதையில்லாம பேசுவியா? மரியாதை… மரியாதை…” என்று கேலியாக சொல்ல,

“அது சரி!” என்று வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்ட அக்னி, “உயிரோட வீட்டுக்கு போய் சேர வாழ்த்துக்கள்!” என்று சொல்லி சிரிக்க, கண்களை உருட்டி அவனை முறைத்தான் ராகவ்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!