அலைகடல்-30

IMG-20201101-WA0016-1a0987cc

அலைகடல்-30

 

அத்தியாயம் – 30

அடுத்த நாள் முன்தினம் அழுத வேந்தன் எவ்வாறு இருக்கிறான் என்று மறைந்திருந்து பார்த்ததோடு சரி… அவன் நன்றாகவே இருக்கவும் அதன்பின் பூங்குழலி எவரையும் கண்டுக்கொள்ளவில்லை.

முன்பு இருந்தாலே அதே நிலைக்கு திரும்பியிருந்தாள். என்ன ஒரு வித்தியாசம் என்றால் அப்போது அலட்டல் இன்றி நிர்மலமாக இருக்கும் மனம் இப்போது அனைத்து உணர்ச்சிகளுக்கும் இடையில் சிக்கித் தவித்தது. ஆனால் அனைத்தும் மனதோடுதான். வெளிப்பார்வைக்கு அதே திமிர்த்தனம் மீண்டு வந்தாற்போல் இருந்தாள்.

இடையில் இத்தனை நாள் இருந்த பூங்குழலி கனவோ என்றெண்ணும்படி மாயமாய் மறைந்தும் போனாள்.

நெருங்க முடியவில்லை யாராலும். வெளியே குற்றவாளியைத் தேடும் அழுத்தத்தோடு வீட்டில் பூங்குழலியின் தீடீர் மாற்றமும் அழுத்த தொடங்கியது ஆரவிற்கு.

வேந்தன் இன்னமும் தமக்கை மீது கோபத்துடன் சுற்றிக்கொண்டிருந்தான். இளம் பருவத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அவனிற்கு பாசம் அதிகம் இருந்தாலும் கூடுதலாக வேகமும் கோபமும் கூட அதற்கு சமமாக இருந்தது.

பொதுவாக சொன்னால் கேட்டுக்கொள்பவன் என்பதால் எங்குமே பெரிதாக திட்டோ, அடியோ வாங்கியதும் இல்லை. அதனால் அந்நிகழ்வு ஒருமாதிரி மனவருத்தத்தை கொடுத்து பூங்குழலியிடம் இருந்து விலக்கி வைத்தது.

அதை அறிந்தாலும் அதை களைய பூங்குழலி முயற்சிக்கவில்லை. அவளுக்கு என்னவென்றால் எப்படியும் தான் ஆரவ்வுடன் வாழப்போவதில்லை. குட்டாவையும் ஆரவ்வை மீறி தன்னுடன் வைத்திருக்க முடியாது. என் மீது இப்போது குட்டாவிற்கு கோபம் என்றால் தான் இனி நடந்துக்கொள்வதில் அது வெறுப்புக்கு செல்லும். நல்லதுதானே என்றெண்ணினாள். மறந்தும் ஆரவ் தன்னை வெறுப்பான் என்று அவளால் நினைக்கமுடியவில்லை.

அவ்வளவு எளிதாக அவன் காதலை எடைபோடவில்லை அவள். முயற்சிப்பான்… மூச்சிருக்கும் வரைக்கும் முயற்சிப்பான் அதற்கு முன் தெளிவாக பேசி விட வேண்டும். அவனுடன் சேர்ந்து வாழ தன்னால் என்றுமே முடியாது என்பதை அவனிடம் கூறிவிட்டே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றெண்ணி குற்றவாளியை கண்டுபிடிக்கும் நாளுக்காக காத்திருந்தாள் அவள்.

ஆம்… இப்போதே கூறினால் தனக்குதான் தெரிந்துவிட்டதே என்று வெளிப்படையாக அவன் நடந்துக்கொள்ள ஆரம்பித்தால் அவனை சமாளிக்க தன்னால் முடியாது என்பதும் தெரியும்.

இதுவே குற்றவாளியை கண்டுபிடித்த பின் என்றால், சொல்லிய கையோடு விடுமுறையை ரத்து செய்து இங்கிருந்து கிளம்பியும் விடலாம்.

அன்பை உதாசீனம் செய்வதை காட்டிலும் பெரிய தண்டனை இந்த உலகத்தில் இல்லை என்று தெரிந்ததால் அவனை பழிவாங்க முடியாமல் சென்றதில் பூங்குழலி தேர்ந்தெடுத்த கடைசி ஆயுதம் இது.

நல்லவனோ கெட்டவனோ அதுவெல்லாம் இரண்டாம்பட்சம். எனக்கு இவனை பிடிக்கவில்லை. இவனுடன் வாழ்வது கனவிலும் நடக்காத ஒன்று. அப்படியிருக்க பிரிந்து செல்வதில் தனக்கொன்றும் இல்லை என்று நினைத்தாள்.

‘ஆரவ்வின் அதீத நம்பிக்கைக்கு சரியான அடியாக இது இருக்கவேண்டும். தோல்வி அடையாதவனா நீ இருக்கலாம்… உன் முதல் தோல்வி நானாகதான் இருக்கணும்’

அவள் கூறியதில் ஒன்று மட்டும் உண்மை… ஆரவ்வின் முதல் தோல்வி அவள்தான். அவளிடம் விரும்பியே தோற்றவனை தோற்கடிக்க கங்கனம் கட்டிக்கொண்டிருந்தாள் பூங்குழலி.

ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள். தூய அன்பை தெரிந்தே உதாசீனம் செய்வதெல்லாம் அன்பால் உருவான இதயத்தால் எளிதில் முடியாது. அதற்கெல்லாம் கடும் நெஞ்சழுத்தமும், பிறர் துன்பத்தில் வருந்தாத குணமும் மொத்தத்தில் உணர்ச்சியற்ற கல்நெஞ்சமாக இருக்க வேண்டும்! அது அவளுக்கு இருக்கிறதா என்று இனிமேல்தான் அவளுக்கே தெரியவரும்.

காவல்துறையில் சரணடைந்த பாதுகாவலனையும் மெக்கானிக்கையும் ஆரவ் ஆட்கள் நையப்புடைக்க, மெக்கானிக் மட்டுமே வலி தாங்காமல் தனக்கு தெரிந்ததைக் கூறினான். பெரிதாக தகவல் கிடைக்கவில்லை என்றாலும் நுனி கிடைத்துவிட்டதே. ஆனால் மற்றொருவனோ தான் பெற்ற பயிற்சியின் காரணமாக வாயே திறக்கவில்லை.

இதை அடுத்தநாள் ரித்தேஷ் ஆரவ்விடம் கூறிக்கொண்டிருக்க, அவன் வந்ததை அறிந்து அங்கு வந்த பூங்குழலி,

“மிஸ்டர் ரித்தேஷ்… இனிமேல் கேஸ் சம்மந்தமா என்கிட்டயும் நீங்க தனியா ரிப்போர்ட் பண்ணுங்க. எனக்கும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணும்” என்றாள்.

ரித்தேஷ் ஆரவ்வைப் பார்க்க, அவனோ இவனை கிளம்பும்படி சைகை செய்தான்.

அதில் அவன் கிளம்ப, “என்ன… எனக்கு தெரியக்கூடாதா நான் கேட்டுட்டே இருக்கேன் மதிக்காம அவங்களை கிளம்ப சொன்னா என்ன அர்த்தம்?” என்று எரிச்சலோடு வினவ,

“அது உனக்கு தேவையில்லை என்று அர்த்தம்” என்றான் ஆரவ் அமர்த்தலாய்.

அதில் முறைத்தவளை, “உனக்கு என்ன தெரியணும்… குற்றவாளியை என்றால் அது இன்னும் எங்களுக்கே தெரியாது கொஞ்சம் கொஞ்சமா எங்க வழில கண்டுபிடிச்சிட்டு இருக்கோம்… அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. இதே உனக்கு கேஸ்தான் முடிக்கணும் அப்படின்னா இப்போவே என்னால என் ஆளுங்க ஒருத்தனை அவன்தான் முன்பகை காரணமா பண்ணியதா சொல்ல சொல்லி சரணடைய வைக்க முடியும். சொல்லு நான் என்ன பண்ணட்டும்?” என்றான் பேனாவை சுழட்டியபடி.

“இதென்ன இப்படி… அப்போ பாம் வச்சவனை என்ன பண்ணுவீங்க?” என்று சந்தேகமாய் கேட்டவளை

“அது என் இஷ்டம். இதுவும் உனக்கு தேவையில்லாதது… ஒருவேளை குற்றவாளியை உரிய நேரத்துல கண்டுபிடிக்க முடியலை என்றாலும் இந்த கேஸ்ல இருந்து உன்னை வெளிய எடுக்க என்னால முடியும் சோ என்னோட வேலைல நீ குறுக்கிடாத பூங்குழலி” என்றவனை என்னவென்று புரியாத பாவனையில் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

இவ்வாறு இரு நாட்கள் சென்றிருக்க, அன்று பூங்குழலி காலையில் இருந்து கீழிறங்கி வரவேயில்லை.

மணி பத்து தாண்டியிருக்க, அன்று மதியம்தான் மாஸ்டர் வரச் சொல்லியிருந்தால் வீட்டில் படம் பார்த்துக்கொண்டிருந்தான் வேந்தன்.

சமையல் வேலை செய்பவர் இரண்டொரு முறை மாடியை எட்டி பார்த்துவிட்டு செல்ல, என்னவென கேட்டவனிடம் இன்னமும் பூங்குழலி கீழே சாப்பிட வரவில்லை என்று கூற,

“பூமா எப்போதும் எங்களுக்கு முன்னாடியே சாப்பிட்டு முடிச்சிருவாளே… என்னன்னு போய் பாருங்க” என்றான் இவன்.

மற்றைய நேரமென்றால் அவனே சென்றிருப்பான்… இப்போதுதான் சண்டையாகிற்றே!

“இல்லப்பா… இனி யாரும் சுத்தம் செய்றதுக்கு தவிர மேலே போக கூடாதுன்னு சார் சொல்லிட்டார். நீயே போய் என்னன்னு பாரேன்” என்றார் அவர்.

‘எதற்கு அண்ணா இப்படி சொல்லிருக்காங்க… ஒருவேளை அவ ரூம் மாறுனது தெரியக்கூடாது என்றா? இருக்கும் இருக்கும்… பேசாம அண்ணன்கிட்டயே சொல்லுவோமா?’ என்றெண்ணியவன் பின் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து அவனே சென்றான்.

மேலே வந்தவன் அழைக்க தயங்கி கதவைத் தட்ட, “கதவு திறந்துதான் இருக்கு” என்று மெல்லிய குரலில் பதில் வந்தது.

உள்ள வந்தவன் இன்னமும் படுக்கையில் இழுத்து போர்த்தி படுத்திருந்தவள் அருகில் நெருங்கும் போதே அனல் அடித்தது.

அதில் தயக்கம் சட்டென்று விலக, “பூமா காய்ச்சல் அடிக்குதா?” என்றவாறு நெற்றியை தொட்டு பார்த்தான் இளையவன். எல்லாம் தெரிந்தாலும் கண்ணை திறக்க முடியவில்லை அவளால்.

அறை மாறி வந்தவள், ஹீட்டர் இல்லாததால சாதாரண நீரிலே தலைக்கு ஊற்ற, கப்பலிலும் சரி, இங்கு வந்த பின்பும் சரி சூடான நீரிலே குளித்து பழகிய உடல் தண்ணீர் மாற்றத்தால் தன் வேலையைக் காட்டியிருந்தது.அதற்கு மேல் தாமதிக்காமல் வேந்தன் ஆரவ்விற்கு தகவல் சொல்ல, அவனின் கையெழுத்திற்காகக் காத்திருந்த கோப்பை எல்லாம் வீட்டிற்கு கொண்டு வருமாறு வினோத்திடம் கூறி கையோடு டாக்டர் அனிதாவை அழைத்து வந்தான்.

பூங்குழலியை பரிசோதித்து மாத்திரை மருந்தை கொடுத்தவள், காய்ச்சலுக்கான காரணத்தையும் பேசியே தெரிந்து ஆரவ்விடம் கூறி அதிகம் பேசாமல் வெளியேறினாள்.

அறை மாறி வந்திருக்கும் காரணமும் அவர்களுக்கு இடையே இருக்கும் பனிப்போரையும் தெரிந்தவளாகிற்றே!

இனி இவர்களின் வாழ்க்கை அந்த ஆண்டவன் விட்ட வழி என்ற முடிவிற்கே வந்துவிட்டாள் அனிதா.

ஆரவ்விற்கு அவளின் வீம்பால் இழுத்துவிட்ட காய்ச்சலை நினைத்து கோபம் உண்டானாலும் அவள் இங்கு வந்தபின் அவளது வசதியை குறித்து யோசிக்கத்தவறிய தன்னையும் நொந்துக்கொண்டான். மனம் முழுதும் குற்ற உணர்ச்சியாகப் போய்விட்டது.

அதுவும் கட்டிய மனைவிக்கு காய்ச்சல் என்பது மற்றவர் மூலம் தெரியவருவதெல்லாம் கொடுமையின் உச்சம். ஆனால் கணவனாக நான் என்று இருந்தேன்… இல்லை இல்லை இருக்கவிட்டாள் இவள். தாலி கட்டியதோடு அதற்கு மேல் ஒரு அடியும் முன்னேறி செல்ல விடாமல் கைகட்டி நிற்க வைத்துவிட்டாளே.

தாலி கட்டியவனெல்லாம் கணவனாகி விடமுடியுமா என்ன? மனதைத் தொட வேண்டும் என்று உச்சியில் அடித்து அந்நொடி புரியவைத்தாள் அவன் மனையாள்.

வேந்தனை அனுப்பி வைத்து வினோத் கொண்டு வந்து கொடுத்த கோப்புகளை பூங்குழலி அறையில் உள்ள மேசையில் வைத்தான் அவன்.

அதன் பின் அவளுக்கான கஞ்சி, மிளகு பால் சகிதம் அவளை எழுப்பி அமர வைத்து ஊட்ட போக, அவள் தடுத்து தானே வாங்கினாள்.

தடுமாறி என்றாலும் பிடிவாதமாக தானே உண்டு குடித்து முடித்தவள் அவன் கொடுத்த மாத்திரையை விழுங்கி படுக்க, போர்வையை நன்றாக கழுத்து வரை போர்த்திவிட்டு சென்று அமர்ந்தான் அவன்.

இடையிடையே அவளை கவனித்தவாறு வேலையை முடித்தவன் ஆழ்ந்து உறங்கும் அவளை பார்த்தவாறு, “பிடிவாதம் பிடிவாதம் பிடிவாதம். தலைமுடி நுனில இருந்து கால் நகம் வரைக்கும் ஒவ்வொரு அணுவிலும் பிடிவாதம். இதுல என்ன இருக்குன்னு எனக்கு பிடிச்சி தொலைச்சதுன்னு இன்னும் புரியலடி எனக்கு” என்று முணுமுணுத்தான் ஆரவ்.

ஆரவ்வின் கவனிப்பில் கொஞ்சம் கொஞ்சமாய் காய்ச்சல் குறைந்து இரவில் லேசான காய்ச்சலுடன் உடல் அயர்வும் இருக்க, நாளெல்லாம் தூங்கியதில் கொட்ட கொட்ட விழித்திருந்தாள் பூங்குழலி.

ஆரவ் விட்டு விலக முடிவெடுக்கும் போதெல்லாம் அவன் நெருங்கி வரும் தாத்பர்யம் புரியாமல் அவன் இன்று முழுதும் எதுவும் பேசாமல் அமைதியாய் தன்னை பார்த்துக்கொண்டதை நினைத்துக் கொண்டிருந்தாள்.

எண்ணத்தின் நாயகனே அவள் தூங்கியிருப்பாள் என்றெண்ணி உள்ளே வர, அவனை கண்டதும் எதற்கு இந்நேரம் வருகிறான் என்று நினைத்தவாறு அவனை விரட்ட எத்தனிக்க, ஏனோ அன்று அவனிடம் கடுமை காட்ட முடியவில்லை அவளால்.

நெருங்கி வருபவனைக் கண்டு அசையாமல் கண்களை மூடி உறங்குவது போல் அவள் பாசாங்கு செய்ய, நெற்றியில் படிந்தது அவனின் கதகதப்பான உள்ளங்கை.

முதல் ஸ்பரிசம்… கோபம் இல்லாமல் அவள் அவளாக இருக்கையில் உணரும் ஸ்பரிசம். மூச்சடக்கி கண்களை இன்னமும் இறுக மூடினாள் பூங்குழலி.

முதலிலேயே விரட்டி விட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

“இன்னும் காய்ச்சல் முழுதா போகலை” என்று ஆரவ் அவனுக்கே சொன்னது இவளிற்கு கேட்டது.

தாய், தந்தைக்கு பிறகு தன் உடல்நிலை குறித்து கவலைப்படும் ஜீவனைக் கண்டு கண்கள் கலங்கும் போல் தோன்ற, அழுகையை முயன்று அடக்கினாள் அவள்.

நெற்றியை விட்டு உடனடியாக எல்லாம் அவன் கையெடுக்கவில்லை, முழுதாய் ஐந்து நிமிடம் சுகமாய் வருடிவிட்டவன் வெளியே இருந்த அவளின் கைகளை போர்வைக்குள் நுழைத்து சரியாக விரித்துவிட்டு செல்ல, செல்லும் அவனையே அந்த இருட்டிலும் இமைக்காமல் பார்த்திருந்தாள் பூங்குழலி.

பிடிக்காது பிடிக்காது என்றவனின் பரிவு மட்டும் அவளையும் மீறி பிடிக்க ஆரம்பித்தது ஆர்பாட்டமாய்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

 

 

Leave a Reply

error: Content is protected !!