அலைகடல்-32.1

அலைகடல்-32.1
அர்ஜுனிடம் இருந்து உடனடியாக தன்னை கொல்ல நினைத்தவர்களை விசாரித்து குழந்தையை வீட்டில் விடவும் வேண்டும். எப்படி எப்படி என்று யோசித்த ஆரவ்விற்கு தானாகவே வாய்ப்பை வழங்கினான் அர்ஜுன்.
செக்யூரிட்டி ஆரவ்வை அழைத்து அர்ஜுன் வீட்டிற்கு வெளியே காத்திருப்பதாகக் கூற, “நல்ல செக் பண்ணி அனுப்புங்க… முக்கியமா போன் வாங்கிருங்க. கேமரா எதாவது இருக்கான்னு செக் பண்ணுங்க” என்றுவிட்டு வைத்தவன் இன்னமும் சில வேலைகளை முடித்து அலுவலக அறையிலே அவனிற்காக காத்திருக்க, கண்கள் சிவக்க, வேர்த்து விறுவிறுக்க வந்து சேர்ந்தான் அவன்.
உள்ளே நின்ற பாதுகாவலரை கண்ணசைத்து வெளியேற சொன்னவன் அவர் வெளியேறியதும், “வாங்க சார் வாங்க… நானே உங்களை பார்க்க நினைச்சேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. கம் கம் சிட்” என்று உபசரிப்பாய் வரவேற்றவனை கொலைவெறியோடு முறைத்தவன்
“சோ நான் சந்தேகப்பட்டது சரிதான் இல்லையா? தமிழ்நாடு முழுக்க கண்காணிக்குற சாப்ட்வேர் என் பையனை இவ்ளோ நேரம் ஆகியும் கண்டே பிடிக்கல. அது ஏன்னு இப்போ புரியுது” என
“அட வா மேன். வந்து உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ஆரவ் சாவகாசமாய்.
“இங்க ஒன்னும் உட்கார்ந்து பேச வரல, என் பையன எங்கே வச்சிருக்க… நான்தான் உன் வழில இப்போ வரதில்லையே பின்ன நீ எதுக்காக வர” என்றான் ஆவேசமாய்.
என்ன சொன்ன நீ என் வழில வரதில்லையா. சரிதான் நேரா வராம மாமனார் பின்னாடி ஒளிஞ்சி வந்தா என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சிட்டியா அர்ஜுன்” என்று நேரத்தை வீணாக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வர, ஒரு நிமிடம் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கியது அவ்வறை.
அர்ஜுன் வந்ததை அறிந்து பூங்குழலி வேகமாக உள்ளே நுழைய, அந்த சத்தத்தில் இருவரும் அவளைத் திரும்பி பார்த்தனர்.
‘இவள் ஏன் இங்கு வருகிறாள்?’ என்ற எண்ணத்தில் இருவரும் அவளைப் பார்க்க, ஆரவ்வை கண்டு, ‘என்னதிது இன்னமும் குழந்தையைக் கொடுக்கவில்லையா?’ என்று முறைத்தாள் அவள்.
அர்ஜுன் முன் அவளை வெளியே போகச் சொல்ல முடியாமல், “வா பூங்குழலி… வந்து உட்காரு” என்றவாறு எழுந்தவன், “சொல்லு அர்ஜுன் இதுக்கு பின்னாடி யாரு இருக்கான்னு எனக்கு முழுசா தெரியனும். உன் மாமனார்க்கு அவ்வளவு தைரியம் இல்லையே” என
“தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு அபியை கடத்தின?” என்று பொறுமையின்றி எகிறினான்.
“ஷ்… யாருன்னு உண்மையைச் சொன்னா சீக்கிரம் உன் பையனைப் பார்க்கலாம். அண்ட் ரொம்ப நேரம் இங்கிருந்து, நீ வந்த விஷயத்தை வெளிய தெரியவிட்டு, வேற கேம் எதுவும் ப்ளே பண்ணலாம்ன்னு நினைக்காத” என்றவன் பேச்சோடு பேச்சாக பூங்குழலியை இழுத்து வந்து அவன் நாற்காலியில் அமரவைத்தவன் அவளின் பின்னே கையூன்றி நின்றுக்கொண்டான்.
அர்ஜுன் முன் சண்டையிட பூங்குழலிக்கும் மனமில்லாததால் பல்லைக் கடித்து அமர வேண்டிய நிலைமை.
“மீத்தேன் திட்டதுக்கு நீ ஒத்துவரலைன்னுதான் இந்த கொலை முயற்சி. ஆனா எனக்கும் மாமாக்கும் எல்லாம் நடந்த பிறகுதான் தெரியவந்தது” என்றவன் சிறிது தயங்கி,
“ஒடிசா கம்பெனி இந்திய கம்பெனி இல்ல அமெரிக்க கம்பெனியோட கிளை. மத்த ரெண்டும்தான் நம்ம நாட்டோடது. அதுல ஒன்னு என் மாமாவோடது இன்னொன்னு பிரதமர் நண்பருடையது. அமெரிக்க கம்பெனி எப்படியாவது இதை செயல்படுத்தியே ஆகணும்ன்னு உறுதியா இருக்காங்க. அவங்க குடுத்த பிரஷர் தாங்காம அவங்க கிட்ட பணம் வாங்கிய பி எம் அண்ட் அவங்க நண்பர் கம்பெனி திணற, ஒடிசா கம்பெனி ஹெட்தான் உன்னை கொன்னுடலாம்ன்னு சொல்லி எல்லாம் பண்ணினது. இவ்வளவுதான் எனக்கு தெரியும்… எல்லாத்தையும் சொல்லிட்டேன் பையன எங்க வச்சிருக்க?” என்றான் கோபம் பதட்டம் அனைத்தையும் விழுங்கியவாறு.
“பி எம் இதுக்கு உடந்தையா?” என்று தெளிவாக மீண்டும் ஒருமுறை கேட்டான் ஆரவ்.
அதில் எரிச்சல் மிக, “ஆமா… நீ வேணாம் சொன்ன ஆயிரம் கோடியும் அவரே வாங்கி வச்சிகிட்டாரு சோ அவருக்கு மிரட்டல் வரவும் இந்த முடிவுக்கு வந்துட்டாருன்னு கேள்விபட்டேன் போதுமா?” என்று கடிக்க,
“ஹ்ம்ம்… நீ கிளம்பு” என்றான் யோசனையுடன்.
“ஆரவ்…” என்ற அர்ஜுனிடம்
“உன் பையன் வீட்டுக்கு போய் இத்தோட அஞ்சு நிமிஷம் ஆகிருக்கும்” என்று வாட்சை பார்த்தவாறு சொல்ல
உண்மையா பொய்யா என்று தடுமாறினாலும் போன் செய்தால் தெரிந்துவிடுமே என்ற எண்ணத்தில் வேகமாக வெளியேறினான் அர்ஜுன்.
நடந்த சம்பாஷணையில் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தது என்னவோ பூங்குழலிதான்.
‘மீத்தேன் திட்டத்தை ஏன் இவன் மறுத்தான் என்று தெரியவில்லை. அதற்கு எதற்கு ஆயிரம் கோடி விளையாடுகிறது தெரியவில்லை. இவன் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு வந்தும் எப்படி சிறிதும் அதிர்ச்சியின்றி இயல்பாக இருக்கிறான்? நடிக்கிறானோ?’ என்ற எண்ணத்தில் அமர்ந்திருந்தே பின்னால் நின்றவனை அண்ணாந்து பார்க்க,
தன் சிந்தனையை ஒதுக்கி வைத்து அவள் பார்ப்பதை உணர்ந்து என்னவென புருவம் உயர்த்தினான் ஆரவ். அது அவளின் கருத்தில் நிலைக்காமல் செல்ல, உயரமான நாற்காலி என்பதால் நெஞ்சளவு வந்த பூங்குழலி முகத்தில் யோசிக்காமல் சட்டென்று நெற்றியோடு நெற்றி முட்டி அவளை நிதர்சனத்திற்கு கொண்டு வர, பதறிப்போய் எழுந்தாள் அவள்.
அவள் திட்ட வாய்திறக்கும் முன்பே, “ஏதோ வந்துட்டாளேன்னு அவன் முன்னாடி வெளிய துரத்தாம உட்கார விட்டால் அப்படியே உட்கார்ந்திருக்குறதா?” என்றவாறு எதுவும் நடக்காததுபோல் அவன் நாற்காலியில் அமர,
“அதுக்கு வாயால சொன்னா போதாதா? மாடு மாதிரி முட்டணுமா” என்றாள் இவள்.
“முட்டினேனா… ஒரு நிமிஷம் இங்க வா. ஒரு முட்டு முட்டினா கொம்பு முளைக்கும்ன்னு கேள்விபட்டிருக்கேன் இன்னொன்னு முட்டிக்குவோம்”
எழுந்தவனைக் கண்டு எங்கே மீண்டும் முட்டிவிடுவானோ என்றெண்ணி இரண்டடி பின்னால் வைத்தவள், “லூசு…” என்று சத்தமாக திட்டிவிட்டு செல்ல,
அவள் திட்டியதில் கோபம் கொள்ளாமல் கடகடவென சிரித்தவன், அவளைப்போலவே, “லூசு…” என்று சொல்லிப் பார்த்து பூவை முட்டிய தன் நெற்றியை பூப்போல வருடிவிட்டான்.
அறைக்குள் சென்ற பூங்குழலியோ முதல் வேலையாக மீத்தேன் திட்டத்தைப் பற்றி செல்பேசியில் தேட, “பூமா சாப்பிட வரலையா நீ…” என்றவாறு வந்து சேர்ந்தான் இளையவன்.
“வரேன் வரேன் நீ போய் சாப்பிடு…” தலையைத் திருப்பாமல் மொத்தமாக வந்து குவிந்த செய்தியில் ஒன்றை அழுத்த,
“இதுவா… இதான் முடிஞ்சி போச்சே? எதுக்கு தேடுற பூமா?” என்றான் அதுவரை இவள் செய்வதை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன்.
“எங்க முடிஞ்சது… விட்ட குறை தொட்ட குறையால்ல மறுபடியும் வந்திருக்கு” என்று முணுமுணுத்தவள் பின், “உனக்கு இதை பத்தி தெரியுமா என்ன?” என்று வினவ
“இதைப்பத்தி தெரியுமாவா? குழந்தை கிட்ட கேட்டா கூட சொல்லிரும்… ஸ்கூல்ல மிஸ் இது தமிழ்நாட்டுக்கு வந்தா என்னலாம் நடக்கும்ன்னு வீடியோவா போட்டே காமிச்சாங்க” என்றவனின் குரலில் அவன் அந்த நாளிற்கே சென்றுவிட்டது தெரிந்தது.
“ஸ்கூல்ல எதுக்குடா இதை சொன்னாங்க? என்ன வீடியோ?” என்று கேட்க,
“அப்போதானே ஈசியா எல்லாருக்கும் தெரியவைக்க முடியும். பிள்ளைங்க வீட்டுல போய் சொன்னா பெரியவங்க கிட்ட சொல்ற வேலையும் நேரமும் மிச்சம்தானே? அந்த வீடியோ நெட்லயே இருக்கும் குடு” என்றவன் தேடிக்கொண்டே தனக்குத் தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
“இது நூறு வருஷ ப்ராஜெக்ட் பூமா… அதுவும் மீத்தேன் எடுக்குறோம் என்பதெல்லாம் சும்மா. அவங்க உண்மையான நோக்கம் நிலக்கரிதான். அதை எடுக்கணும்ன்னா முதல மீத்தேன வெளிய எடுக்கணும் இல்லன்னா வெடிச்சி தீ பரவும் சோ முப்பது வருஷம் பூமில இருக்குற மொத்த மீத்தேனை உறிஞ்சி அடுத்த எழுபது வருஷம் நிலக்கரி எடுப்பாங்க… அப்புறம் என்ன தமிழ்நாடே கரிநாடா போயிரும். கிட்டதட்ட ரெண்டு லட்சம் ஏக்கர்ல்ல ஆயிரத்திற்கும் அதிகமா பைப் போட்டு எடுப்பான்… நிலத்தடி தண்ணியே விஷம் ஆகிரும்… இந்தோ டெமோ காமிக்குறாங்க பாரேன்” என
அவன் சொன்னதை கற்பனையில் கண்டே விதிர்விதிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள் பூங்குழலி.
“எப்படிடா இவ்ளோ ஈசியா சொல்ற?” என்று நெஞ்சில் கைவைத்து கேட்க,
“முதல எனக்கும் செம ஷாக்தான் பூமா… அப்புறம் அண்ணா எல்லாருக்கும் புரியவச்சி மக்களோட எதிர்ப்பை ஸ்ட்ராங்கா பதிவு பண்ணவும் கம்பெனி, சென்ட்ரல் கவர்ன்மன்ட் எல்லாம் அலறி அடிச்சி ஓடுனாங்க பாரு” என்றவாறு அதை நினைத்துச் சிரிக்க, ஓடியவர்கள் இப்போது உயிருக்கே உலை வைத்த உண்மையை அறிந்தவளோ சிரிக்க முடியாமல் நெஞ்சில் பாரத்துடன் அமர்ந்திருந்தாள்.
உண்டு வந்து படுத்தவள், உறக்கம் எட்டாமல் செல்ல, படுக்கையில் புரண்டு புரண்டு அதை பாடாய்படுத்திக் கொண்டிருந்தாள் பூங்குழலி.
சொந்த நாட்டையே குழி தோண்டிப் புதைக்க இத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை அவள். வெளியே இருந்து வரும் எதிரிகளை உள்ளே விடாமல் நாங்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்தால்… என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்! நினைக்க நினைக்க நெஞ்சு கொதித்தது அவளுக்கு.
அன்றுதான் அவளிற்கு தெரிந்தது. நாட்டை காக்கும் தனக்கு சிறிதும் சளைத்தவன் இல்லை ஆர்வ் என்பது. வெளியே இருக்கும் எதிரிகளை ராணுவம், கப்பற்படை, விமானப்படை என்னும் முப்படையும் பந்தாடுகிறதென்றால் உள்ளேயே செல்லரிக்கும் எதிரிகளை ஆரவ் போன்றவர்கள் பந்தாடுகிறார்கள்.
அவன் பதவிக்கு வந்த விதம் வேண்டுமானால் தப்பாக இருக்கலாம். ஆனால் பதவியை தப்பாக உபயோகிக்கவில்லை. தாயிற்காக என்றதிலேயே அவன் செய்ததை மறக்க எண்ணியவள், இப்போது நாட்டை சுடுகாடாகாமல் தடுத்ததில் அவனின் முந்தைய தவறுகளை மன்னித்தும் விட்டாள் மனப்பூர்வமாக.
இருந்தாலும் இன்னமும் அவனது காதலையோ, அவனுடனான வாழ்க்கையையோ கிஞ்சித்தும் நினைத்துப்பார்க்க தோன்றவில்லை.
அத்தோடு இன்று அவன் குழந்தையைக் கடத்தியதும் நினைவு வர, ‘இப்படியா ஒருவன் நல்லவனாகவும் இல்லாமல் கெட்டவனாகவும் இல்லாமல் தலையை பிய்த்துக்கொள்ள வைப்பான்?’ என்றெண்ணினாள் அவள்.
அந்த எண்ணத்தில் திடுமென அமுதன் தன் தலையில் முட்டியது கண்முன் தோன்ற, இன்னமும் அவனது நெற்றி வெப்பம் அங்கே ஓட்டிக்கொண்டிருப்பது போல் பிரமை எழ, பரபரவென்று நெற்றியை தேய்த்து விட்டு கண்களை இறுக மூடி தூங்க முயற்சித்து வெற்றியும் கண்டாள் பூங்குழலி.