Saaral 1
Saaral 1
சாரல் 1
நிலவுமகள் தன் ஆதிக்கத்தை முழுவதுமாக பரப்பி கொண்டிருந்தாள்… நகர்புறங்களை போன்ற பரபரப்பு இல்லாமல் அந்த கிராமத்து இரவு நேரம் அமைதியாக இருந்தது. ஆங்காங்கே பறவைகளின் சத்தம் மட்டும் மெலிதாக கேட்க, குளுமையான காற்று அத்தனை இதம் சேர்த்தது.. சிலுசிலுவென்று அடித்த காற்று அந்த கிராமத்தில் இருந்த அனைத்து வீடுகளிலும் பாரபட்சம் பாராமல் ஜன்னல் வழியாக புகுந்து அனைவரையும் அமைதியாக தூங்க வைக்க முயன்றது.
ஜன்னல் வழியாக வந்த காற்றும் சரி, அறையினுள் கமழ்ந்த மல்லிகையின் வாசமும் சரி, இரண்டுமே அவனை எரிச்சல் தான் படுத்தியதே தவிர சாந்தப்படுத்தவில்லை. அவனை விட மிச்சமாக கோப மூச்சுகளை விட்டு அவனை முறைத்தவாறு நின்றாள் அவனது முறைப்பெண்..
அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த புத்தம் புது தாலி அவளை முறைப்பெண் போஸ்டில் இருந்து பெண்டாட்டி போஸ்டிற்கு ப்ரொமோஷன் கொடுத்திருக்க, அந்த புதுத்தாலியிடம் இருந்த மினுமினுப்பு அவளிடம் இல்லை.
எரிமலை இரண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பது போல் இருக்க, பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவன் அவளை உக்கிரமாக முறைத்தான்.
‘’நீ நிறுத்தி இருக்கனும்டி’, ஒருவழியாக மெளனத்தை உடைத்தெறிந்தான் துவாரகேஷ்…
“நான் ஏன் நிறுத்தணும், நீ நிறுத்தி இருக்கணும்” அத்தனை நேரம் அவனை உறுத்து விழித்துக் கொண்டிருந்த மகி என்கிற மகிழா இப்போது அலட்சியமாக பதில் அளித்தாள்.
“என்னடி திமிரா??” கண்கள் இரண்டும் கோவை பழமாக சிவக்க, தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று முறைத்தவனைக் கண்டு யாராக இருந்தாலும் பயம் கொண்டிருப்பர் ஆனால் அவனை கண்டு பயப்படுபவள் அவள் இல்லையே…
“ஆமாம் டா திமிர் தான், எல்லாரும் சொல்லும் போது நல்லவன் மாதிரி தாலியை கட்டிட்டு இப்போ என்கிட்ட வந்து சண்டை போடுறியா?” காலையில் இருந்து கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவனின் பக்கம் அவள் காண்பிக்க, அவனோ சீறும் புலியாக இருந்தான்.
“நான் தாலி கட்டும் போது உன்னை யாரு டி வாங்கிக்க சொன்னது? இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு எழும்பி போயிருக்க வேண்டியது தானே… எதுவும் தெரியாத பாப்பா மாதிரி இருந்து தாலியை வாங்கிக்கிட்ட..” விட்டால் அவளை அடித்து விடுபவனை போல் பேசியவனை கண்டு அவளுக்கு மெலிதாக நடுக்கம் ஏற்ப்பட்டாலும் மகி அதை காண்பிக்கவில்லை.. அவளது அமைதியையெல்லாம் கண்டுகொள்ளாதவன்,
“எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை, அதுவும் உன்னை மாதிரி ஒருத்தி எனக்கு மனைவியா வருவதா.. சீ..ச்சீய்.” என்றான் அவளை காயப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.
அவனது வார்த்தைகள் அவளை சரியாக தாக்கியது.. அதை விட அவன் முகத்தில் இருந்த பாவனை… தன்னை அருவெறுப்பாக பார்ப்பது போன்ற அந்த பாவனை தான் அவளை காயப்படுத்தியது.
தன்னை காயப்படுத்தியவனை தானும் காயப்படுத்திவிட வேண்டும் என்ற வெறி மேலெழும்ப,
“‘ஹலோ இங்க யாரும் உன்னை கல்யாணம் செஞ்சிக்கணும்னு அழலை, நானும் வேற வழி இல்லாமல் தான் நீ கட்டின தாலியை வாங்கிக்கிட்டேன்” என்றாள்.
“அவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்காக என்னோட தாலியை வாங்கிக்கணும். முடியாதுனு சொல்லியிருக்க வேண்டியது தானே.. நானும் தப்பிச்சிருப்பேன்” தான் அவளை நிராகரிக்கலாம் ஆனால் அவள் தன்னை எப்படி நிராகரிக்கலாம் என்ற கோபம் ஒரு புறம் தலைதூக்க, தனக்கும் அவள் தேவையில்லை என்பதை ஆணித்தரமாக காட்டிவிட எண்ணினான் துவாரகேஷ்..
“பாட்டியோட ஆசைன்னு சொன்னதும் என்னால எதுவும் சொல்ல முடியல ஆனா நீ சொன்ன தான் இங்க எல்லாரும் கேட்பாங்களே.. நீ சொல்லிருக்க வேண்டியது தானே”
“என்னது நான் சொல்றதை கேக்குறாங்களா? நடிக்காதடி மூணு வருஷத்துக்கு முன்னாடி இங்க இருந்து சண்டை போட்டு ஓடி போனது மறந்துடுச்சா?” கல்யாணத்திற்காக கோபப்படுகிறானா அல்லது மனதில் இருந்ததை எல்லாம கேட்க சந்தர்ப்பம் அமைந்ததால் கோபப்படுகிறானா என கேட்ட அவனுக்கும் புரியவில்லை..
“ஓடி போனேனா?? இங்க பாரு நான் படிக்க போனேன்.. சும்மா வாயில வந்தது எல்லாம் சொல்லாதே.”
“படிக்க போனவ எதுக்குடி மூணு வருஷம் இந்த பக்கம் வராமல் இருந்த? ஒருவேளை அந்த ராக்கி உன்கூட வந்துட்டதுனால எதுக்கு இங்க வரணும் னு இருந்துட்டியா?”
தன் உயிர் தோழனை பற்றி தவறாக கூறியதும் மகிக்கு கோபம் வர . “இங்க பாரு துவாரகேஷ்.. என்னை பத்தி மட்டும் பேசு தேவை இல்லாம ராக்கியை பத்தி பேசாதே”. என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ராக்கி மேல் அவள் வைத்திருக்கும் பாசம் அவனை கடுப்பேற்றியது, அவனுக்கு மட்டும் சக்தி இருந்தால் இப்போதே அந்த ராக்கியின் முன் தோன்றி அவனை துவம்சம் செய்துவிடுவான். ஆனால் இருக்கும் சூழ்நிலை தடுக்க அந்த கோபத்தை மகி மீதே காண்பித்தான்.
“அவனை சொன்னதும் உனக்கு உடனே கோபம் வருதா?.” என்றவன் அவளை நக்கலாக பார்த்து, “இன்னைக்கா இது நடக்குது 5 வருஷமா இது தான் நடக்குது. உனக்கு அவனை அவ்வளவு பிடிக்கும்ன எதுக்காக டி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே அவனையே கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே”.
“ச்சீ நட்புக்கு அர்த்தம் தெரியாதவன் டா நீ. அவன் என்னோட ப்ரென்ட். அவனை பத்தி இன்னொருக்க பேசாதே”.
“பேசுவேன் டி…. என்னடி பண்ணுவ?”
“இன்னொருக்கா அவனை பத்தி பேசினா நானும் உன் லவ்வர் ரேகாவை பத்தி பேசுவேன்”’, தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அவன் கண்களை பார்த்து மகி கூற, துவாரகேஷ் கொந்தளித்துவிட்டான்.
“என்னடி.. என்ன சொன்ன?? உனக்கு அந்த ராக்கி கூட கல்யாணம் ஆகலைன்னு என்ன வேணும்னாலும் பேசுவியா? தேவை இல்லாம அவளை பத்தி பேசாதே..”
“நீ ராக்கி பத்தி பேசினா நானும் அந்த ரேகாவை பத்தி பேசுவேன்”
மீண்டும் மீண்டும் மகி ராக்கிக்கு ஆதரவாக பேசுவது துவாரகேஷிற்கு எரிச்சலை ஏற்படுத்த அதற்கு மேல் அவளிடம் சண்டையை வளர்க்க விரும்பாமல் அவளின் எதிர்புறம் திரும்பி நின்றுக் கொண்டான்.. மூன்று நாட்களுக்குள் தன் வாழ்வில் நடந்துவிட்ட மாற்றங்களை எண்ணி தன்னை தானே நொந்துக் கொண்டான். எதாவது செய்து இதை தடுத்திருக்க வேண்டும் என மனம் ஆயிரமாவது முறையாக அவனை திட்ட, ஒன்றும் புரியாமல் ஜன்னல் அருகே சென்று, வெளியில் தெரிந்த நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் துவாரகேஷ்.
அடுத்து தன் வாழ்க்கை என்னவாகுமோ என்று புரியாமல் நின்று கொண்டிருந்த மகிக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை பேசி ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொண்டே வாழ்க்கை நரகமாகி விடுமோ என பயமாக வேறு இருந்தது அவளுக்கு. அவன் நிற்கும் திசை பக்கம் கூட நிற்க விரும்பாதவள் கட்டிலில் சென்று அமர்ந்துக் கொண்டாள். மனமோ கடந்த நாட்களை எண்ணியது.
துவாரகேஷின் தந்தையும் மகிழாவின் அன்னையும் உடன் பிறந்தவர்கள். மகியின் பத்தாவது வயதில் மகியின் தந்தை இறந்துவிட, அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை துவாரகேஷின் வீடு என்றாகி போனது. பணத்திற்கு எந்த குறையும் இல்லை.. தன் மகளுக்கும் மனைவிக்கும் போதுமான அளவு சேர்த்து வைத்துவிட்டே சென்றிருந்தார் மகியின் தந்தை.
தன் தங்கை தனியாக கஷ்டப்பட கூடாது என்பதற்காக தான் துவாரகேஷின் தந்தை அவர்களை தன்னோடு அழைத்து வந்தது. அதோடு அப்பா இல்லாத குறை தெரியாமல் மகியை பார்த்துக்கொண்டார் துவாரகேஷின் தந்தை சிவசந்திரன்.
துவாரகேஷும் முதலில் அன்பாகவே நடந்து கொள்வான் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் அடித்துக்கொள்ள துவங்க, மகி தன் கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்று விட்டாள். இப்பொழுது இறுதி வருடத்தில் இருக்கிறாள். இந்த 3 வருடத்தில் ஒருமுறை கூட அவள் ஊர் பக்கம் வந்ததில்லை. அவளது அம்மா அல்லது துவாரகேஷின் பெற்றோர் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். அவர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் ஊர் பக்கம் வர மாட்டேன் என பிடிவாதமாக இருந்துவிட்டாள். தந்தை இல்லாத பிள்ளையை ஒரு அளவிற்கு மேல் யாராலும் அதட்டவும் முடியவில்லை.
துவாரகேஷும் படிப்பை முடித்தவிட்டு அரசு தேர்வுகளை எழுதி, அரசு வங்கி ஒன்றில் க்ளர்க்காக சேர்ந்துவிட்டான். முதலில் திருச்சியில் அவனுக்கு போஸ்டிங் கிடைக்க, இரண்டு வருடம் அங்கே தான் இருந்தான். அதன்பின் வேலையில் உயர் பதவியும் இடமாற்றமும் கிடைத்துவிட கடந்த ஒரு வருடமாக சென்னையில் உள்ள அரசு வங்கி ஒன்றில் மேனேஜராக இருக்கிறான்.
மூன்று வருடம் ஊருக்கு வராத மகியும், பாட்டியின் உடல் நிலை சரியில்லாததால் பாட்டியை பார்க்க வர, அதே நேரம் துவாரகேஷும் பாட்டியை காண வர, இருவரையும் கோழி அமுக்குவதை போல் அமுக்கி திருமணத்தை முடித்துவிட்டனர். முதலில் இருவருமே மறுத்தார்கள் ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாட்டியை காரணம் காண்பித்து கோயிலில் வைத்து எளிமையாக திருமணத்தை நடத்தி விட்டனர்.
அதற்கு தான் இருவரும் அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
“ச்சை இனி என் ப்ரென்ட்ஸ் கிட்ட என்னனு சொல்வேன், பாட்டியை பார்க்க போயிட்டு கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துட்டேன்னு எப்படி சொல்வேன், எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க “ இது தான் இப்போது இருக்கும் மிக பெரிய கவலை போன்று மகி புலம்ப, துவாரகேஷிற்கோ எதை கொண்டு இவளை அடிக்கலாம் என்ற அளவுக்கு பற்றி கொண்டு வந்தது.
“ஏண்டி இங்க ஒருத்தன் வாழ்க்கையே போய்டுச்சுன்னு வருத்தத்துல இருக்கேன், உனக்கு இப்போ உன் ப்ரெண்ட்ஸ் என்ன நினைப்பாங்கனு தான் கவலையா??” கோபம் தாளாமல் எகிறினான் அவன்.
“என்னோட வாழ்க்கையும் சேர்த்து தான் நாசமா போய்டுச்சு, சும்மா சும்மா நீ மட்டும் தான் கஷ்டப்படுற மாதிரி புலம்பாத” அவனை முறைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“சரி இரண்டுபேரோட வாழ்க்கையும் நாசமா போய்டுச்சு, இனி என்ன பண்றது” அடி வைத்துக் கொண்டே இருந்தால் இது முடிவுக்கு வராது என எண்ணியவனாக அவளிடமே என்ன செய்யலாம் என துவாரகேஷ் கேட்க,
“என்ன பண்றதுனு என்னை கேட்டா?? நீ போய் இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலைனு உன் அப்பாகிட்ட சொல்லிடு அப்புறம் அவங்களே நம்மளை பிரிச்சிடுவாங்க” தோளை குலுக்கியவாறு மகி அசால்ட்டாக கூற, சற்று பொறுமையாக பேசலாம் என நினைத்தவன் அந்த நினைப்பை குப்பையில் போட்டிருந்தான்.
“எப்படி? எப்படி? நான் போய் என் அப்பா கிட்ட சொல்லனுமா?? எல்லாரும் என்னை தப்பா நினைப்பாங்க நீ மட்டும் நல்லவன்னு பெயர் வாங்கிடுவ அதுதானே உன்னோட திட்டம்” அவளின் திட்டத்தை சரியாக கணித்து அவன் கூற, மகி விழித்தாள்.
கண்டுபிடித்து விட்டானே என்று நினைத்தாலும் தன் கெத்தை விட்டு கொடுக்காமல் ஆமாம் என அவள் தலையை உருட்ட, அவளது பாவனையில் துவாரகேஷின் உள்ளம் ஒரு நிமிடம் உருகித்தான் போனது.
“இங்க பாருடி என்னால அப்படியெல்லாம் போய் சொல்ல முடியாது. நீ தான் என் அப்பாவோட செல்ல மருமக அதனால நீயே போய் சொல்லு, அதோட அந்த ராக்கிய லவ் பண்றதையும் சொல்லிடு. என் அப்பாவும் உடனே உங்களை சேர்த்து வச்சிடுவாங்க”
மறுபடியும் ராக்கியை பத்தி பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவனை வெறித்தாள் மகி.
ஏற்கனவே துவாரகேஷின் பேச்சில் உள்ளே எரிந்து கொணடிருந்தவள் அவன் இவ்வாறு கூறியதும் மீண்டும் ரேகாவின் பேச்சை துவங்கினாள்.
இருவரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள இறுதியில் கோபத்தின் உச்சியில் ”இன்னும் ஒரு வருஷத்துல உனக்கு டிவோர்ஸ் தரேண்டி” என்று சொல்லிவிட்டான் துவாரகேஷ். அவனுக்கு அப்படி எதுவும் எண்ணம் இல்லை என்றாலும் கோபத்தில் சொல்லி விட்டான்.
கோபப்பட்டாலும் எந்த நிலையிலும் தன்னை விடமாட்டான். இந்த திருமணத்திற்கு மதிப்பு கொடுப்பான் என்று மனதின் ஒரு மூலையில் இருந்த நம்பிக்கையும் அற்று போனது மகிக்கு. மனது வலித்தாலும் இவனிடம் இறங்கி செல்வதா என்று நினைத்தவள்,
“ நீ என்னடா எனக்கு டிவோர்ஸ் கொடுக்கிற நான் தரேன் டா டிவோர்ஸ் அடுத்த வருஷம் நீ எனக்கு டிவோர்ஸ் கொடுக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடி நான் தரேன் டா உனக்கு”. எதோ ரோட்டுக்கடை அல்வாவை நான் முதலில் வாங்குகிறேனா அல்லது நீ முதலில் வாங்குகிறாயா என்பது போல் இருவரும் சபதம் எடுத்துக் கொள்ள, அவர்களின் வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த நிலவு மகளுக்கு சிரிப்பே வந்தது..
“உன்னை பார்க்க பார்க்க எனக்கு கோபம் வருது டி நான் போய் தூங்குறேன், ஹ்ம்ம் வாழ்க்கையே போச்சு இனி தூக்கம் வருமோ என்னமோ” சண்டையை வளர்க்க விரும்பாமல் கட்டிலில் சென்று அமர்ந்தான் துவாரகேஷ்.
அவன் சென்று கட்டிலில் அமரவும், கட்டிலில் இருந்தவள் எழும்பி நின்று, “ஏன் டா இங்கே வர்ற?? கீழே படுத்து தூங்கு டா” என்றாள்.
“ஓஹ் நான் கீழே தூங்கணும் ஆனா மேடம் மட்டும் மேலே படுத்து தூங்குவிங்களோ… நடக்காது டி.. இது என்னோட ரூம். நான் இங்க தான் தூங்குவேன் நீ வேணும்னா உன்னோட ரூமுக்கு போய் தூங்கு”, தன் கால்களை நன்றாக நீட்டி படுத்தவன் கண்களை மூடிக்கொண்டான்.
சரியான இம்சை என மனதில் துவாரகேஷை திட்டிக்கொண்டு, காலை உதைத்தவாறே சென்று அவன் அருகில் படுத்துக்கொண்டாள் மகிழா.
எதிர் திசையை பார்த்தவாறு இருவரும் படுத்துக்கொண்டாலும் இருவரின் எண்ணமும் ஒரே விஷயத்தை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தது ஆனால் வேறு வேறு திசையில்.
‘இவளை விட்டு ரொம்ப தூரம் போகணும்னு நினைச்சாலும் கடவுள் ஏன் இவளோட என்னை கோர்த்து விட்டார்னு தெரியலையே, இவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு அந்த ராக்கிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.’ ராக்கியின் முகத்தை மனக்கண்ணில் கொண்டு வந்தவன், தனக்கு தானே சிரித்துக் கொண்டான்.
‘ஹா ஹா அவனோட முகம் எப்படி போகும்? அதை நேர்ல பார்க்க வேற ஆசையா இருக்கே. ஹ்ம்ம் ஆனாலும் இவள் சரியான கேடி இவள் கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா தான் இருக்கனும்’.
துவாரகேஷின் மனமோ இப்படி நினைக்க மகியோ, ‘இவன் கூட கல்யாணம் முடிஞ்சது மட்டும் என் ப்ரெண்ட்ஸ்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்?? அது கூட சமாளிச்சிக்கலாம் ஆனா இவனை எப்படி சமாளிக்கிறது, இவன் எப்படி என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டான்?? இவன் அந்த ரேகாவை லவ் பண்றதா சொன்னானே, எங்க கல்யாணம் நடந்தது அந்த ரேகாவுக்கு தெரிஞ்சா ஒன்னும் இல்லையா இவனுக்கு, ஹ்ம்ம் எப்படியும் ஒரு வருஷத்துல டிவோர்ஸ் தந்துடுவான் ஆனாலும் இப்போ எங்க கல்யாணம் நடந்தது தெரிஞ்சா அந்த ரேகா என்ன ஆட்டம் ஆடுவாளோ, ஹா ஹா டீ ரேகா உன் துவாரகேஷ் உனக்கு இல்லை டி. எனக்கு டிவோர்ஸ் தந்த அப்புறம் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டாலும் நீ ரெண்டாவது தான். அதுக்காக எல்லாம் உன்னை சும்மா விட மாட்டேன் டா துவா, உன்னை நான் பண்ற டார்ச்சர்ல நீ ஓடி போகணும் டா’.
மனதுக்குள் பழி வாங்கும் படலத்தை உருவாக்கி கொண்டனர் மகியும் துவாரகேஷும், இருவருமே ஒரே சமயத்தில் திரும்பி படுக்க பார்வைகள் இரண்டும் மோதிக்கொண்டது. சூரியனை விட கடுமையாக இருவரின் பார்வையும் மற்றவரை சுட்டெரித்தது.
“உன்னை சும்மா விட மாட்டேண்டா”
“உன்னை சும்மா விட மாட்டேண்டி”
மனதில் நினைத்துக்கொண்டே இருவரும் மறுபடியும் எதிர்திசையில் திரும்பிப் படுத்துக் கொண்டனர்.
சாரல் அடிக்கும்…………..