அழகியே 6

அழகு 06
 
காரிலிருந்து இறங்கிய வருண் சற்று நேரம் அப்படியே அசையாமல் நின்றிருந்தான். எதிரிலிருந்த காரிலிருந்து விஷாகா இறங்குவார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
‘இவர் எங்கே இங்கே?’ மனதில் சட்டென்று கேள்வி எழ சரவணனை திரும்பிப் பார்த்தான்.
 
“சரவணன், நான் இங்கத் தங்கி இருக்கிறது இவங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
 
“நாந்தான் சொன்னேன் சார்.”
 
“எப்போ? ஏன்?” வருணின் நெற்றி சுருங்கியது.
 
“நேத்து நாம அங்க போயிருந்தப்பவே அந்தப் பொண்ணு நீங்க எங்கத் தங்கி இருக்கீங்கன்னு விசாரிச்சுது சார்.”
 
“இது எப்போ? நான் பார்க்கும் போது அந்தப் பொண்ணு எதுவும் உங்கக்கிட்டப் பேசலையே?”
 
“நீங்க உள்ளப் போனதும் அந்தப் பொண்ணு மாடி பால்கனிக்கு வந்திச்சு.”
 
“ஓ…” அதனால்தான் தான் உள்ளே போனபோது அவளைப் பார்க்க முடியவில்லையா?!
 
“ஃபோன் நம்பரை வாங்கினாங்க, இன்னைக்குக் காலையில கூட கூப்பிட்டாங்க சார்.”
 
“நீங்க எதையுமே எங்கிட்டச் சொல்லலையே சரவணன்.”
 
“தப்பா எடுத்துக்காதீங்க சார், இவங்களால உங்களுக்கு ஏதாவது நன்மை நடக்கும்னு என்னோட உள்மனசு உறுதியா சொல்லுது.” சரவணன் இதைச் சொன்னபோது வருணின் கண்கள் சில நொடி மின்னியது.
 
சட்டென்று அந்த முக பாவத்தை மாற்றிக் கொண்டவன் சரவணனை கூர்ந்துப் பார்த்தான்.
 
“இவங்களால என்னப் பண்ண முடியும்?”
 
“அது தெரியலை சார், ஆனா ஏதோ பண்ண முடியும்னு தோணுது.”
இவர்களின் சம்பாஷனையைக் குலைப்பது போல இவர்களை நோக்கி நடந்து வந்தார் விஷாகா. மயூரி காரை விட்டு இறங்கவில்லை, அப்படியே அமர்ந்திருந்தாள்.
 
நடந்துவரும் தன் மாமியை அப்படியே பார்த்திருந்தான் வருண். தன் அப்பாவே நடந்து வருவது போல இருந்தது. இந்தப் பெண்மணிக்குத் தன் பெற்றோர் நியாயம் செய்யவில்லை என்றே தோன்றியது இளையவனுக்கு.
 
“வருண்…” கண்ணீரோடு வந்தது குரல். இதற்கு மேல் அவர் தாங்க மாட்டார் என்று புரிந்த வருண்,
 
“இங்க வெச்சு எதுவும் பேச வேணாம், உள்ளே போகலாம்.” என்றான். பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட விஷாகா தலையை மட்டும் ஆட்டினார், சம்மதம் என்பது போல.
 
காரை பார்க்கிங்கை விட்டு இருவரும் லிஃப்ட்டை நோக்கி நடந்தார்கள். அந்த ப்ளாக் ஆடியை கடக்கும் போது வருணின் நடை லேசாக நிதானித்தது.
 
ஆனால் அப்போதும் பெண் காரை விட்டு இறங்காததால் வருண் வேகமாக லிஃப்ட்டிற்குள் போய்விட்டான். அவனோடு கூட நடந்த விஷாகாவும் மகளை அழைக்கவில்லை.
 
ரிசப்ஷனில் கீயை வாங்கிக்கொண்டு இருவரும் வருணின் அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அறைக்கதவை மூடிவிட்டு என்னப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான் வருண்.
 
“உட்காருங்க…” வெறும் உபசரிப்பு வார்த்தை அது. உணர்ச்சிகள் முழுதாக துடைக்கப்பட்டிருந்தது.
 
“வருண்…” ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் குவியலாக தன் பெயரை அந்தப் பெண் உச்சரித்த போது வருணுக்கு என்னவோ செய்தது.
 
“வருண்…” கதறி அழுத விஷாகா ஓடி வந்து தன் அண்ணன் மகனைக் கட்டி அணைத்துக் கொண்டார். வருண் திகைத்துப் போனான்!
 
“உங்களுக்கெல்லாம் நான் என்னடா பண்ணினேன்? ஏன் எல்லாருமா என்னைத் தள்ளி வெச்சீங்க?” தன்னை இறுகக் கட்டிக்கொண்டு அந்தப் பெண் கதறித்தீர்த்த போது வருணுக்கு பேச நா எழவில்லை.
 
“கடைசி வரைக்கும் என்னோட அண்ணனை நான் பார்க்கவே இல்லையே வருண்! இனி பார்க்கவும் முடியாதே வருண்! நான் என்னப் பண்ணுவேன்?!” நிற்கவே திராணி அற்றுப் போய் சோர்ந்து அழுதவரைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் வருண். அந்தத் தொடுகை அவரைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். பேச்சு இப்போது நிதானமாக வந்தது.
 
“எனக்கு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்ச அண்ணா!” என்றார் விரக்தியோடு.
 
“அந்த நன்றி யாருக்கும் இருக்கிற மாதிரி தெரியலையே!” வருண் முதல் முதலாக பேசினான்.
 
இப்போது விஷாகா சட்டென்று வருணை விட்டு விலகியவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வருண் பிரமித்துப் போனான்!
 
“இத்தனை நாளும் எங்கடா போயிருந்த நீ? அப்பா, அம்மாக்குத்தான் அறிவு கெட்டுப் போச்சுன்னா உனக்கு எங்கப் போச்சு அறிவு? உங்கப்பாக்கு இங்க எல்லாம் இருக்குன்னு தெரியுமில்லை? ஏன் வரலை நீ? இதெல்லாம் என்னோடதுன்னு இவங்க கழுத்தை ஏன் இவ்வளவு நாளும் நெரிக்கலை
நீ?” ஏதோ பேய் பிடித்தவர் போல ஆவேசமாக பேசினார் விஷாகா.
 
“இப்பக்கூட… இந்த வீட்டுக்காகத்தான் வந்திருக்க இல்லை வருண்? இல்லைன்னா… என்னைப் பார்க்க நீ வந்திருக்கவே மாட்டே இல்லை வருண்?” குரல் நலிந்து போக அந்தப் பெண்மணி மீண்டும் கதறினார்.
 
அதுதான் உண்மை என்பதால் வருண் எதையும் மறுக்கவில்லை. இல்லை என்பது போல இடம் வலமாக தலையை மட்டும் ஆட்டினான்.
 
அங்கிருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்தார் விஷாகா. அதுதான் உண்மை என்று தெரிந்த போதும், அதை உரியவனே நேரடியாக ஒப்புக்கொண்டது வருத்தமாக இருந்திருக்கும் போலும்!
 
“தெரியும்… எனக்குத் தெரியும் வருண்.” அவரின் ஓய்ந்த தோற்றம் வருணை லேசாக அசைத்தது. கட்டிலில் அவரின் அருகே அமர்ந்து கொண்டான்.
 
“சாரி.” அவன் ஒற்றை வார்த்தையில் அவர் முகம் பிரகாசித்தது. வலது கையால் அவன் கன்னத்தை வருடிக் கொடுத்தார்.
 
“அண்ணா மாதிரியே இருக்கே…” சொல்லிவிட்டு லேசாக சிரித்தார்.
 
“அம்மா எப்பிடி இருக்காங்க வருண்? என்னோட கல்யாணத்துக்கு வந்தப்போ உனக்கு ரெண்டு வயசு, அப்பவும் நீ எங்கிட்ட வரவே இல்லைத் தெரியுமா?” மீண்டும் கலங்கியது அவர் குரல்.
 
“அதுக்கும் சேர்த்து இப்ப சாரி சொல்லணுமா?” அவரைச் சிரிக்க வைக்க ஆசைப்பட்ட வருண் கேலியில் இறங்கினான். அது நன்றாகவே வேலை செய்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தார் விஷாகா.
 
“அப்போ கொழுகொழுன்னு வெள்ளைக்கார பிள்ளை மாதிரி இருந்தே, கல்யாணத்துக்கு வந்திருந்த என்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் என்னோட அண்ணா பையன்,  அண்ணா பையன்னு பெருமையா காட்டினேன்.”
 
“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை.”
 
“புரியலை…”
 
“இப்பவும் தாராளமா உங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்னைக் காட்டிப் பெருமைப் பட்டுக்கலாம், நல்லாத்தானே இருக்கேன்?”
 
“நீ நல்லாத்தான் இருக்கே, அதுக்காக நான் இன்னொரு வாட்டி கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”
 
“தப்பேயில்லை, தாராளமா பண்ணிக்கலாம்… ஆனா இந்தத் தடவைப் பண்ணும் போது எங்க அப்பா பேச்சை ஞாபகம் வெச்சு ஒரு நல்ல மனுஷனைக் கட்டிக்கோங்க.” 
இப்போது அந்த அறையில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது.
 
வருணின் பேச்சில் இருந்த நியாயம் விஷாகாவை சுட்டிருக்கும் போலும். தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
 
“உண்மைதான், எங்கண்ணா பேச்சை நான் கேட்கலைத்தான்… நான் யாருக்கு விசுவாசமா இருக்கிறது வருண்? அம்மாக்கா? அண்ணனுக்கா?” இதற்குப் பதில் தெரியாமல் தோளைக் குலுக்கினான் வருண்.
 
“ஆனா கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனை ஃப்ரெண்ட்ஸும் என்னைக் கேலி பண்ணினாங்க.” சட்டென்று வேறு பேசி சிரித்தார் விஷாகா.
 
“எதுக்கு?”
 
“சட்டுன்னு ஒரு பொண்ணைப் பெத்து உன்னோட அண்ணன் பையனுக்குக் கட்டிக்கொடுன்னு சொன்னாங்க.”
 
“…………….”
 
“எனக்குப் பொண்ணு பொறந்திச்சு… ஆனா அண்ணனும் வரலை… அண்ணன் பையனும் வரலை.” மீண்டும் அந்தக் குரல் தேய்ந்தது.
 
“எதுக்கு? உங்கப் பொண்ணைக் கட்டிக்கிறதுக்கா?” கேலி பேசிய மருமகனின் முகவாய்கட்டையை ஆசையாக பிடித்துக் கெஞ்சினார் விஷாகா.
 
“வருண்… எம் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”
 
“என்னது?!” வருண் கட்டிலில் இருந்து எழுந்து நின்றே விட்டான்.
 
“ஏன்டா? மாட்டியா?” சிறு குழந்தைப் போல கேட்டவரை விசித்திரமாக பார்த்தான் வருண்.
 
“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறே?”
 
“நீங்க என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா?” 
 
“பேச்சுல கூட தள்ளித்தான் நிக்குறே இல்லை வருண்… இவ்வளவு நேரத்துக்கு உன்னோட வாயில இருந்து மாமின்னு ஒரு வார்த்தை வரலை தெரியுமா?” மீண்டும் அந்தக் குரல் கண்ணீரைத் தெத்தெடுத்துக் கொள்ள வருணுக்கு சங்கடமாக இருந்தது.
 
“இல்லை… அப்பிடியில்லை… கூப்பிடக்கூடாதுன்னு நினைக்கலை…”
 
“புரியுது… நாந்தான் உங்களையெல்லாம் நினைச்சுக்கிட்டே வாழ்ந்திருக்கேன், நீங்க யாரும் என்னை நினைக்கவே இல்லை.” 
 
“…………..”
 
“இப்பக்கூட அப்பாவோட சொத்துக்காக வந்திருக்கே.”
 
“அப்பா ஆசைப்பட்ட சொத்துக்காக.” பேச்சைத் திருத்தினான் வருண்.
 
“ஆங்… ஆசைப்பட்ட… இந்த மாமி மேலயும் உங்கப்பா நிறைய பாசம் வெச்சிருந்தாரு வருண்.”
 
“அதை எங்கப்பா சொல்லிப் பெருமைப் பட்டுக்கிற மாதிரி என்னோட மாமி நடந்துக்கலையே!”
 
“நியாயந்தான்…” கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் விஷாகா.
 
“நாந்தான் நிறைய ஆசைப்பட்டுட்டேன்… கனவுலேயே வாழ்ந்திருக்கேன்… என்னோட அண்ணா, அண்ணா குடும்பம்னு…” ஏதோ சொல்ல ஆரம்பித்தவர் சட்டென்று நிறுத்தினார்.
 
“அம்மாவைப் பத்தி சொல்லு வருண், எப்பிடி இருக்காங்க? இப்போ அங்க டைம் என்ன? பேச முடியுமா?” 
வருண் தனது ஃபோனை எடுத்தவன் அம்மாவை அழைத்தான். சட்டென்று லைனுக்கு வந்தார் ராகினி.
 
“வருண்…” மருமகனின் கையிலிருந்த ஃபோனை வாங்கிக் கொண்டார் விஷாகா. அதன்பிறகு அந்த ரூமில் சிறிது நேரம் அழுகை, சிரிப்பு, கண்ணீர், ஆனந்தம் என பல உணர்ச்சிகள் நர்த்தனம் ஆடின.
 
வருண் அந்த அறையோடு இருந்த பால்கனிக்கு வந்துவிட்டான். பேசுவதற்கே தான் முதலில் தயங்கிய அந்தப் பெண்மணியின் அருகாமை அவனுக்குப் பிடித்திருந்தது.
 
அந்த உறவு, அதன் உரிமைக் கலந்த அன்பு, என்னைத் தள்ளி வைக்காதே என்ற கனிவான கோரல்… எல்லாமே அவனுக்குக் கொஞ்சம் இனிக்கத்தான் செய்தது.
 
தன் அப்பா அழகான இந்த உறவை ஏன் தள்ளி வைத்தார்?! இவர் இல்லாவிட்டாலும், இவர் கூட இருப்பவர்கள் தன் தாயைக் காயப்படுத்தக் கூடும் என்று நினைத்திருப்பார் போலும்.
 
ஏதேதோ சிந்தித்தபடி திரும்பியவன் ஹோட்டலுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த அந்த கல் இருக்கையில் சரவணன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான், கூடவே அந்தப் பெண்!
 
அத்தையின் மகள். சரவணனுக்கு அருகே அமர்ந்து ஏதோ தீவிரமாக அவனோடு விவாதித்துக் கொண்டிருந்தாள். 
 
‘அப்படி எதை இவ்வளவு தீவிரமாக இருவரும் விவாதிக்கிறார்கள்?! எதற்காக நான் இருக்கும் இடத்தை இந்தப் பெண் சரவணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்?’ 
 
“வருண்.” விஷாகா அழைக்கவும் உள்ளே வந்தான் வருண். அவனிடம் ஃபோனை நீட்டினார் பெரியவர்.
 
“பேசி முடிச்சாச்சா?”
 
“ம்… முடிஞ்சுது, அம்மா அவங்களோட நம்பர் குடுத்தாங்க, இனி அடிக்கடி பேசுவோம்.” எதையோ சாதித்து விட்டது போல விஷாகா சொல்ல வருண் சிரித்தான்.
 
“வருண்.”
 
“ம்…”
 
“என்ன… என்னப் பண்ணப் போறே?”
 
“எதைக் கேட்குறீங்க?”
 
“வீ… வீடு…” இப்போது மூத்தவர் தடுமாற இளையவன் அறையிலிருந்த நாற்காலியில் நிதானமாக அமர்ந்தான். சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தாற் போல பேச ஆரம்பித்தான்.
 
“நாம ரெண்டு பேரும் எந்த ஒளிவு மறைவும் இல்லாம பேசலாமா மாமி?” தன் சொந்தத்தோடு முதன்முறையாக கைகோர்த்தான் வருண்.
 
“சொல்லுடா ராஜா.”
 
“லாயர் கிட்டத்தான் இப்போ போய்ட்டு வந்தேன்.”
 
“தெரியும்.”
 
“எப்பிடி?”
 
“சரவணன் சொன்னார்.”
 
“எதுக்கு சரவணனை ஃபாலோ பண்ணுறீங்க?”
 
“உன்னை ஃபாலோ பண்ண தைரியம் இருக்கலை, அதனால அவரை வச்சு உன்னை நெருங்கினோம்.”
 
“நெருங்கினோம்னா… யாரு, நீங்களும் உங்க பொண்ணுமா?”
 
“ஆமா… நேத்து உன்னைப் பார்த்த ஷாக்ல எனக்கு படபடப்பாகிப்போச்சு… கையும் ஓடலை, காலும் ஓடலை… ஆனா எம் பொண்ணு புத்திசாலித்தனமா சரவணன் கிட்ட அவரோட நம்பரை வாங்கிட்டா.”
 
“எதுக்கு?”
 
“எனக்கு உன்னைப் பார்க்கணும் வருண்… உங்கிட்டப் பேசணும், ஆசைத் தீர அழணும்… அதுக்குக் கூட நேத்து அந்த வீட்டுல அனுமதி கிடைக்கலைப் பார்த்தியா?”
 
“…………”
 
“மயூரிக்கிட்ட அடிக்கடி உங்களையெல்லாம் பத்திப் பேசுவேன், நீ எப்பவாவது ஒருநாள் கண்டிப்பா வருவேன்னு நான் நிச்சயமா நம்பினேன்.”
 
“………….”
 
“நான் எதிர்பார்த்த மாதிரியே நீ வந்தே… எனக்காக இல்லைன்னாலும் நீ வந்து எம்முன்னால நின்னதே எனக்குப் போதுமா இருந்துது.”
 
“சாரி ம்மா.”
 
“பரவாயில்லைன்னு சொல்ல மாட்டேன்… சரி, நீ லாயரை மீட் பண்ணினது என்ன ஆச்சு?”
 
“வீடு உங்கம்மா பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கிறதால பெருசா என்னால எதுவுமே பண்ண முடியலை.”
 
“அதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தானே இந்த ஆட்டம் போடுறாங்க.”
 
“அப்பா பணம் அனுப்பினதுக்கான எவிடன்ஸ், அது இதுன்னு எதைக் காட்டினாலும்… எனக்கு அந்த வீட்டுல ஷெயார்தான் கிடைக்குமாம்.”
 
“ஓ…”
 
“அதுல எனக்கு உடன்பாடில்லை மாமி.”
 
“என்ன பண்ணப்போறே வருண்?”
 
“அந்த வீடு எங்கைக்கு வர நான் எது வேணும்னாலும் பண்ணுவேன்!” அந்த ஆங்காரமான குரலில் விஷாகா திடுக்கிட்டுத்தான் போனார். 
 
“வருண்… அவசரப் படாதே!”
 
“இல்லை… இனி எந்த அவசரமும் படப்போறது இல்லை, நிறுத்தி நிதானமாத்தான் காய் நகர்த்துவேன்.”
 
“……………”
 
“ஆனா அடி பலமா இருக்கும், அவங்க மேல விழுற அந்த அடியால
உங்களுக்கும் வலிக்கும்.”
 
“நான் உனக்காக அந்த வலியைத் தாங்கிக்குறேன்.”
 
“பேச்சு மாறமாட்டீங்களே.”
 
“இல்லை… மாறமாட்டேன், என்னோட பயம் எல்லாம் ஒன்னே ஒன்னுதான்.”
 
“என்னது?”
 
“அவங்களைக் காயப்படுத்துறதா நினைச்சு உன்னோட எதிர்காலத்தை
நீ பாழடிச்சிரக் கூடாது.”
 
“நான் அந்ந அளவுக்கு முட்டாள் இல்லை மாமி.”
 
“ஆமா… உங்கம்மா இப்பதான் சொன்னாங்க, என்னோட மருமகன் பெரிய ஆஃபீஸராமே?! அதுவும் ஷிப் ல?! எப்பக் கல்யாணம் பண்ணப்போறே வருண்?”
 
“யாரை? உங்கப் பொண்ணையா?!” பயந்தவன் போல கேட்டுவிட்டு வருண் சிரிக்க விஷாகா அவனைச் செல்லமாக அடித்தார்.
 
“கேலி பண்ணாத வருண், யாரு கண்டா? உன்னோட தலையில மயூரின்னுதான் எழுதி இருக்கோ என்னமோ?”
 
“யாரு… அந்த அழககோனோட பொண்ணா?”
 
“இல்லைடா… இந்த விஷாகாவோட பொண்ணு.”
 
“அதை வேணும்னா கொஞ்சம் கன்ஸிடர் பண்ணலாம்.”
 
“பண்ணு பண்ணு, நான் ரொம்பவே சந்தோஷப்படுவேன், வயசு ஏறிக்கிட்டே போகுது, சட்டுன்னு கல்யாணம் பண்ணு வருண்.”
 
“கேப்டன் ஆகணும் மாமி, அது என்னோட கனவு.”
 
“அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது.”
 
“அது ஆக… இது விடாதே!”
 
“அதெல்லாம் விடும், நீ சும்மா காரணம் சொல்லாதே… நான் கிளம்பட்டுமா?”
 
“ம்…”
 
“ரெண்டு நாள்ல கிளம்பிடுவியாமே… இனி எப்போ வருவே வருண்?”
 
“கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சுட்டு திரும்பவும் வருவேன்.” இளையவனின் உறுதியான குரல் விஷாகாவிற்கு பீதியைக் கிளப்பியது. இருந்தாலும் எதுவும் பேசாது விடைபெற்றுக் கொண்டார்.
 
தன் அண்ணனின் வாரிசு தவறு செய்யாது என்று உறுதியாக நம்பினார் விஷாகா. ஆனால் அது அத்தனையையும் தவிடு பொடி ஆக்கினான் வருண்!
 
***
 
ஆறு மாதங்கள் கடந்து போயிருந்தன.
 
மயூரி மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். வீடு, வேலை என்று அவள் வாழ்க்கை இலகு போல ஓடிக் கொண்டிருந்தாலும் மெல்லிய ரீங்காரம் போல வருணின் நினைவுகள் அவளை இம்சித்துக் கொண்டிருந்தன.
 
அம்மாவிடம் இரண்டொரு முறைப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்.
 
ஆனால், பதில் என்னவோ பூச்சியம்தான். விஷாகா வருணை பற்றி எதுவுமே பேசவில்லை.
ஒருவேளை… அம்மாவிற்கே அவனைப் பற்றி எதுவும் தெரியாதோ?! யோசித்து யோசித்து மண்டைக் குழம்பிப் போனது பெண்ணுக்கு.
 
அன்றைக்கும் புயல் போல வந்தான்! கதவைத் திறந்த மயூரி அடைந்த ஆச்சரியத்தின் அளவை அத்தனை சுலபத்தில் கணக்கிட்டிட முடியாது. 
உறைந்து போனாள் பெண்! அதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அவன் கடிதம் கிடைத்திருந்தது.
கையெழுத்தைப் பத்திரப்படுத்தி அதைத் தினமும் ரசித்திருந்தவளுக்கு…
 
கையெழுத்துக்குச் சொந்தக்காரனே அவள் முன்னால் வந்து நின்றபோது…
அப்பப்பா! மூச்சு நின்று போனது! அவளே சற்று உயரம்தான். அவளை விட வளர்ந்து நிற்கிறானே! 
 
‘அவங்கம்மா தீனி, உரம்னு போட்டு வளர்த்திருப்பாங்க போல!’ இப்படித்தான் நினைக்கத் தோன்றியது. 
 
அவனைப் பற்றி நினைப்பதே இந்த ஆறு மாதங்களில் அவள் வாடிக்கையாகி போயிருந்தது. அவள் அழைத்த போதெல்லாம் மறுக்காமல் ஓடி வந்து கனவில் தரிசனம் கொடுத்தது அந்த முகம்.
 
கட்டுமஸ்தாக இருந்தான். பளீரென்ற நிறம். குளிர்நாட்டில் பிறந்து வளர்ந்த மலர்ச்சி அந்த முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
 
அவ்வப்போது நெற்றியில் துளிர்த்த வியர்வையை நாசூக்காக அவன் துடைத்துக் கொண்ட அழகை மயூரி கவனிக்கத் தவறவில்லை.
 
இரண்டொரு முறைதான் அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்தக் கண்களில் காந்தம் இருக்கும் போலும். அவன் அவளைப் பார்த்த போதெல்லாம் மயூரியின் நாக்கு பேச்சென்பதையே மறந்து போனது.
 
இதுவரை தனதென நினைத்திருந்த அந்த வீடு இனி தனதில்லை என்று நினைத்த போது மயூரிக்கு முதலில் வருத்தமாகத்தான் இருந்தது.
ஆனாலும்… மாமன் மகன் என்று வந்து நின்றவனைப் பார்த்த போது அந்த வருத்தம் காணாமலேயே போயிருந்தது.
 
இவனுக்கு வீட்டை மாத்திரமல்ல… சிந்தனை சிலநேரம் தறிகெட்டுப் போகும் போது திடுக்கிட்டுப் போவாள் பெண்.
 
‘கனவு கண்ட அம்மாவைப் பழித்துவிட்டு இப்போது நான் செய்வது என்ன? இதுவெல்லாம் நடக்கின்ற காரியமா? தன் ஆச்சியைக் கூட அவன் மன்னித்து விடலாம், ஆனால் அப்பா? அவர் பேசியதை அவன் மன்னிப்பானா?’
 
இப்போதெல்லாம் இனம்புரியாத ஒரு சோகம் அவளைச் சூழ்ந்து கொள்கிறது. அடிக்கடி கண்ணீர் வருகிறது. அந்த ப்ளாக் ஆடியால் கூட அவளை மகிழ்விக்க இயலவில்லை.
இதுவெல்லாம் போதாதென்று அந்த டாக்டர் வேறு அடிக்கடி தொல்லை செய்கிறான். ஒருநாள் வீட்டிற்குக் கூட வந்தான்.
 
“உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு மயூரி.” என்று வழிந்து கொண்டு.
 
“சாரி… இது எங்க வீடு இல்லை, என்னோட மாமா பையன் வீடு.” சட்டென்று சொல்லி விட்டாள் மயூரி.
 
“ஓ… ஆச்சி உங்க வீடுன்னு சொன்னாங்களே?”
 
“இப்போ நான் இல்லைன்னு சொல்றேனே டாக்டர்.” கறாராக வந்தது பதில். ஆனால் அது எதையும் அவன் புரிந்து கொள்ளவில்லை.
 
“ஓகே, நோ ப்ராப்ளம்.” வீட்டைப் பற்றிய பேச்சை அப்போது விட்டாலும் அவளை விட மறுத்தான் டாக்டர். ஆச்சியும் அப்பாவும் டாக்டர் விஷயத்தில் மும்முரமாக இருக்கவே மயூரி திணறிப் போனாள்.
 
“எதுக்காக இப்போ இந்த டாக்டரை நீ வேணாம்னு சொல்றே?” இதுவரை ஆச்சிதான் சத்தம் போட்டார். இப்போது அப்பாவும் ஆரம்பித்திருந்தார். 
 
கடிதத்தில் இருந்த முகவரியை வைத்து வருணை நெருங்கலாம். அம்மாவிடம் அவர்கள் ஃபோன் நம்பர் இருந்தது. கேட்டால் நிச்சயம் சந்தோஷமாக கொடுப்பார்.
 
ஆனால்… என்ன பேசுவது? எதை விளக்குவது? மயூரி தவித்துப் போனாள்! நாட்களைக் கடத்துவது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது!
 
அன்றைக்கும் பணி நேரம் முடிந்து லிஃப்ட்டில் ஏறிய போது அவன் நினைவும் அவளுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஏதோ தோன்ற சரவணனை அழைத்தாள்.
 
“சொல்லுங்க மேடம்.”
 
“எப்பிடி இருக்கீங்க சரவணன்?”
 
“நல்லா இருக்கேன் மேடம், வீட்டுல அம்மா சௌக்கியமா?”
 
“ம்… நல்லா இருக்காங்க, உங்க சார் எப்பிடி இருக்காரு?” 
 
“அவருக்கென்ன… நல்லா இருக்காரு, பத்து நாள் முன்னாடி கூட பேசினாரு மேடம்.”
 
“ஓ…” மயூரிக்கு சட்டென்று கண்கள் குளமாகியது. எல்லோரிடமும் பேசுகிறான்.
 
“சார் இப்போ கொஞ்சம் பிஸி மேடம், இல்லைன்னா வாரத்துல ரெண்டு, மூனு தரம் கூப்பிடுவாங்க.”
 
“அப்பிடியா?” 
 
“உடம்புக்கு முடியலையா மேடம்? ஏன் வாய்ஸ் டல்லடிக்குது?”
 
“அதெல்லாம் இல்லை சரவணன், இப்பதான் வீட்டுக்குக் கிளம்புறேன், கொஞ்சம் டயர்டா இருக்கு.”
 
“சரி சரி, அடுத்த வாட்டி சார் கூப்பிடும்போது மேடம் அவரைப் பத்தி விசாரிச்சீங்கன்னு சொல்லவா?”
 
“நீங்க சொன்னாலும் அவருக்கு எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கப் போகுதா என்ன?” அந்தக் குரலில் தெரிந்த சலிப்பு சரவணனுக்கு எதையோ சொன்னது.
 
‘இந்த மனுஷன் எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறார்? வீடு ஈசியா கைக்கு வந்து சேரும் போல இருக்கே!’ மயூரியின் குரல் சொன்ன சேதி சரவணனை இப்படித்தான் சிந்திக்க வைத்தது.
 
“என்ன மேடம் இப்பிடிச் சொல்லிட்டீங்க? இவ்வளவு அழகான மாமி பொண்ணை யாராவது மறந்து போவாங்களா?” லேசாக பேச்சுக் கொடுத்தான்.
 
“அடப்போங்க சரவணன், நீங்க வேற கேலிப் பண்ணிக்கிட்டு.”
 
“சார்கிட்ட நீங்க பேசினீங்கன்னு சொல்லவா வேணாமா மேடம்?”
 
“வேணாம் சரவணன்.”
 
“ஏன் மேடம்?”
 
“ஞாபகம் இருந்திருந்தா அவங்களே உங்கக்கிட்ட கேட்டிருப்பாங்க இல்லை.” சரவணனுக்கு தன் சந்தேகம் இப்போது உறுதியானது.
 
“ஓகே சரவணன், நான் இன்னொரு நாள் கூப்பிடுறேன்.”
 
“ஓகே மேடம், பை.”
 
“பை.” ஃபோனை ஹேன்ட் பேக்கில் போட்டவள் காரை நோக்கி நடந்தாள். காரை திறந்து உள்ளே ஏறிய போது ஏதோ வித்தியாசமாக இருந்தது மயூரிக்கு. 
 
இது மனிதனுக்கே உரித்தான இயல்பு. தான் மட்டுமே பாவிக்கும் பொருளை இன்னொருவர் கையாண்டிருந்தால் அவர்கள் மூளை அதைச் சட்டென்று கண்டுபிடிக்கும்.
மயூரிக்கும் இப்போது அப்படித்தான் ஏதோ தோன்றியது. காரிற்குள் யாரோ இன்று வந்திருக்கிறார்கள். செக்யூரிட்டியை தாண்டி யாரும் உள்ளே வர முடியாதே?!
 
பின்னே திரும்பி பின் இருக்கைகளை ஆராய்ந்தாள். ஒரு வித்தியாசமும் தோன்றவில்லை. அதேநொடி அவள் நாசி சட்டென்று எதையோ வித்தியாசமாக உணர்ந்தது.
 
ஃபோன் திடீரென்று அடிக்க அதிர்ந்து போய் பார்த்தாள். புதிய நம்பர், யாராக இருக்கும்?! அவசரமாக அழைப்பை இணைத்து காதுக்குக் கொடுத்தாள்.
 
“ஹாய் மேடம்! வீ ஆர் காலிங் ஃப்ரொம்…” ஏதோவொரு தொலைபேசி நிறுவனத்திலிருந்து வந்த அழைப்பு. சுவாசத்தை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் மயூரி. 
 
பெக்கேஜ்கள் பற்றி ஏதேதோ விளக்கங்கள் தந்து அவள் அபிப்பிராயத்தைக் கேட்டார் மனிதர். சிரிப்பைப் பதிலாக தந்து தனது விருப்பமின்மையைத் தெரிவித்து முடிப்பதற்குள்… இரண்டு நிமிடங்கள் கடந்திருந்தன.
 
ஃபோனை அணைத்து வைத்த மயூரிக்கு தலையை என்னவோ செய்தது. நாசிக்குள் ஏதோ கசப்பாக உணர்ந்தவள் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்.
 
தலை லேசாக சுழல்வது போல இருந்தது. காரை இப்போது எடுப்பது உசிதமில்லை என்று புரிந்தவள் செக்யூரிட்டியை அழைக்கத் திரும்பினாள்.
 
எப்போதும் நிற்கும் மனிதர் இன்று அங்கில்லை. புதிதாக ஒரு இளைஞன் நின்றிருந்தான். செக்யூரிட்டியை அழைக்கும் முன்பாகவே மயூரியின் கண்கள் சொருகியது. 
 
‘எதுவோ சரியில்லையே!’ எண்ணியபடியே நினைவிழந்து சீட்டில் சரிந்தாள் மயூர ப்ரதாயினி!
சோத்துல பங்கு கேட்டா… இலையைப் போடு இலையை…
சொத்துல பங்கு கேட்டா… தலையைப் போடு தலையை…