ஆட்டம்-18

ஆட்டம்-18

‘பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி’

என்ற வைரமுத்துவின் வரிகளில் வழிந்த பெருந்தாபம் எத்தகையது என்று அபிமன்யுவின் உள்ளம் அதிர்வுடன் சிலிர்க்க, ஆறடி வலுவான உடலில் சிகைகூட அசையாது, உறுதியான கிரேக்க சிலை போல நின்றிருந்தவனின் நெற்றியில் ஓரமாய் வழிந்த வியர்வை துளி, ஒற்றை கோடாய் வழிந்து வந்து, அவனின் கன்னத்தை பயத்தோடு கடந்து, அவனின் தாடையில் வந்து விழவா வேண்டாமா என்று ஆடிக் கொண்டு நிற்க, அதுவும் அவனின் பெண்ணவளை கவனித்ததோ என்னவோ!

அங்கு புடவை கொசுவத்தை ஒரு வழியாக சரியாக எடுத்து, அதை பிடித்து அசைத்து, கீழ் வரை சரிபார்க்க, மங்கையவளின் மையல் செயலில், அவளின் புடவை மடிப்புகளின் அசைவுகளில் ஆடவணின் மனமும் மத்தளமிட்டு அசைந்தாட, பாவையவளின் செயலில் அரண்டு போன வியர்வைத் துளியோ அலறிப் போய் அவனின் தாடையில் இருந்து திண்ணிய மார்பில் விழ,

அதில் உயிர்த்தெழுந்தவனின் உள்ளம் பட்டென விழித்துக் கொள்ள, அவனின் இதழோரங்கள் நளினமாய் புன்னகையை கொடுக்க, அவனவளோ, தன்னை தன்னவனின் விழிகள் ஒவ்வொரு இடமாக மைமல் விழிகள் கொண்டு விழுங்கிக் கொண்டிருப்பதை அறியாது பின்னூக்கை இறுதியாக கொசுவத்திற்கு குத்தி முடித்தது.

செம்பஞ்சு கன்னங்கள் புன்னகையில் மிளிர, தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தவள், முன்னும் பின்னும் திரும்பி தனது அழகை கர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, ஆவல் மிக, ஆர்வம் தெறிக்க, சிறு வயதில் இருந்தே புதைந்து இருக்கும் குறும்புத்தனம், அவனை அவளிடம் விளையாடிப் பார்க்க போட்டி போட்டுக் கொண்டு எழ, அடி மேல் அடி வைத்து அவன் கண்ணாடியின் அருகே நடந்து செல்ல, காரிகையவளின் இதயம் காரணமின்றி அவனின் ஒவ்வொரு அடிக்கும் நின்று நின்று துடித்தது.

சன் ஷேட் ஸ்கீரினின் அருகே வந்து நின்றவனுக்கு அவளுக்கு இரண்டே அடிகள் தான் இடைவெளி இருந்தன. இருவருக்கும் இடையே கண்ணாடித் தடுப்பு.

கழுத்தில் அவன் அணிந்திருந்த ரோடியமும் பல்லாடியமும் ஆன வேங்கை சங்கிலி கூட, அபிமன்யுவின் உடலில் பரவும் உஷ்ணம் தாங்காது மனதுக்குள் அலறித் தவிக்க, ஒரு கரத்தை கண்ணாடியில் முழுவதுமாக நீட்டி வைத்து, ஒரு கரத்தை இடையில் கொடுத்து, தாடையை சிறிது உயர்த்தி, அவளையே விழிகளால் கபளீகரம் செய்ய, கண்ணாடியில் பதிந்திருத்த அவனின் கரத்தில் இருந்த கட்டை விரல் மட்டும், அருகில் இருந்த பட்டனை அழுத்த, கடகடவென்று சுருண்டு ஸ்க்ரீன் மேலே ஓடிக்கொள்ள, திடீரென்று நடந்த தாக்குதலில் எதிரே நின்றிருந்தவளின் மென்னுடல், அதிர்ச்சியின் உச்சானியைத் தொட்டதில் விதிர் விதிர்த்துப் போனது.

அபிமன்யுவின் உத்ராவாய் அவனின் விழிகளுக்குள் சிக்கி, அவனின் புவியீர்ப்பு விசை கொண்ட விழிகளுக்குள் அவள் அனுமதியின்றே இழுக்கப்பட்டுச் சென்றாள்.

ஆடவணின் எதிர்பாராத செயலில், அவள் மிரண்டு போய் மருண்ட விழிகளுடன், இதழ்கள் கடுகுக் கணக்காய் பிளந்து அவனை ஸ்தம்பித்து பார்க்க, அப்போது தான் அவன் நின்றிருந்த கோலமும், அவனின் அகன்ற தோள்களும், பலம் பொருந்திர புஜங்களும், இறுகிய தசை கொண்ட மார்புகளும், அதில் ஆங்காங்கே பனியாய் கிடந்த வியர்வைத் துளிகளும், அவனுக்கு பின்னே தெரிந்த உடற்பயிற்சி உபகரணங்களும் என அனைத்தையும் அரை விநாடியில் பார்த்துவிட்டவளுக்கு, அவன் அனைத்தையும் பார்த்திருப்பானோ என்று நெற்றிப் பொட்டில் அடிக்க, அவன் வதனத்தை தவிப்பும், திகிலுமாக பார்த்தாள்.

ஆணவம், ஆளுமை, அதிகாரம், கர்வம் அனைத்தையும் ஒருங்கே வைத்து, எதிரிகளை தன் ஒரே வீழி வீச்சில் வீழ்த்திவிடுபவனின் ரசனை சொட்டும் பார்வையிலும், இனம் புரியாத அடக்கப்பட்டிருக்கும் சிரிப்பிலும், அவனின் இதழ்களில் ஒட்டாமல், விழிகளில் ஒட்டியிருக்க, உத்ராவின் உமைகொண்ட உள்ளம், ஜண்டா மேளங்கள் போன்று கொட்டித் துடிக்க, ஒவ்வொரு அடியாய் பின்னே எடுத்து வைத்தவள், அங்கிருந்து விருட்டென்று ஓடினாள்.

அவளின் ஓட்டத்தில், அவளின் திகைப்பு அச்சம், வெட்கம், சிறு நாணம், அனைத்தும் கலந்து வெளிப்பட்ட முக பாவனைகளில், அவள் சட்டென்று சென்றதில், அபிமன்யுவின் இதழ்கள் தாளரமாக விரிந்து கொண்டன. அந்த கணம் நீரஜா, விஜயவர்தன், ரஞ்சனி, விக்ரம் யாரின் முகமும் அவனின் புத்திக்கு எட்டவில்லை. அதையும் இதையும் வீணாய் அவன் குழப்பிக் கொள்ளவும் எண்ணவில்லை.

பின்னே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வந்த உத்ரா, இடித்து நின்றது என்னவோ சிம்மவர்ம பூபதியின் மேல்தான்.

“பாத்துடா” என்று விழப்போனவளின் தோளை பிடித்து நிற்க வைத்தவர்,

“ஆமா இங்க இருந்து என்ன ஓடி வர்ற?” கேட்கும் போதே அவர் அவளுக்கு பின் பார்வையை செலுத்த, அபிமன்யு சன் ஷேட் ஸ்கீரினை மீண்டும் கீழே இறக்குவதின் நிழல் எதிரில் விழ, நிழல் மட்டும் பெரியவரின் விழிகளுக்கு விழ, அவருக்கு ஏதோ புரிவதுபோல இருந்தாலும், உத்ராவின் படபடப்பை உணர்ந்தவர்,

“உள்ள உனக்காக உன் அத்தை எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” அவள் கரம் பிடித்து அழைத்துச் செல்ல, பெண்ணவளின் உள்கரம் சில்லிட்டு இருந்ததை அவரால் உணர முடிந்தது. அவளிடம் கேட்டால் பதில் வராது என்று தெரியும். அதனால் அமைதியாக கவனிக்க முடிவு செய்தார்.

உள்ளே கணவருடன் நுழைந்த உத்ராவை கண்ட இமையரசி, அவளை வந்து அணைத்துக் கொண்டார். சொல்லப் போனால் அன்புத் தொல்லை தான் அவர்.

அழகி கொண்டு வந்த கின்னத்தை கையில் எடுத்த இமையரசி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் உத்ராமா” என்று அவளுக்கு இனிப்பை ஊட்டிவிட்டார்.

ரசமலாய் அது. நன்றாக பொன் நிற நீரில் ஊறி, பாதாமும் பிஸ்தாவும் உடைத்து போட்டு, குங்குமப் பூ தூவி, தங்க உருண்டை போல இருந்த ரசமலாயை ஒரு வாய் வைத்தால் நாவு அடங்குமா?

“தேங்க்யூ” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டவள் மீண்டும், ‘ஆ’ காட்ட, அவளின் கன்னத்தை பிடித்து, செல்லமாக கிள்ளிய அழகி, வாழ்த்துக்களை தெரிவிக்க, சிம்மவர்ம பூபதியையும், இமையரசியையும் இணையாக நிற்க வைத்தவள், இருவரிடமும் விழுந்து வணங்க, அப்போது விடுவிடுவென்று படிகளில் இறங்கி வந்தார் அரிமா பூபதி.

அவரிடம் உத்ரா அவ்வளவாக உரையாடியது இல்லை. அவரும் அதே போல் தான். ஆனால், அவர் பெரியவர்களின் மேலிருந்த கோபத்தை அவளிடம் காட்டியது இல்லை. ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். கீழே வரும்பொழுதே உத்ரா தனது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குவதை கண்ட அரிமா பூபதியின் புருவங்கள் யோசனையில் சுருங்க, “இன்னிக்கு உத்ராவோட பர்த்டே” என்றார் அழகி.

அவரின் விழிகள் கணவரிடம் எதையோ உணர்த்த, உத்ராவிடம் திரும்பியவர், சிறு புன்னகையுடன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று வாழ்த்த, “தேங்க்ஸ் சித்தப்பா.. ம்கூம் மாமா” என்று தடுமாறினாள்.

அதில் வாய்விட்டே சிரித்தவர், “மாமா” என்று முறையை சரியாக சொல்லிவிட்டு கோயிலுக்கு கிளம்பினார்.

“பெரியம்மா பசிக்குது” சமையல் கட்டில் இருந்து வந்தாள் திலோத்தமை.

“நீ எனக்கு முன்னாடி வந்த வேகத்தை பாத்து.. நான் ஒரு ட்ரம் காலி பண்ணியிருப்பேன்னு நினைச்சேன்” உத்ரா கேலி செய்ய, “போடி” என்றவள் உள்ளே சென்று பலகாரத் தட்டுடன் அமர்ந்து கொண்டாள்.

சுமார் ஒரு மணி நேரம் சிம்மவர்ம பூபதியுடன் சிரிப்பும், கேலியுமாக உத்ரா பேசிக் கொண்டிருக்க, அழகி, “உத்ரா சாப்பிட வா” என்றழைக்க, அவள் அவரையும் அழைக்க,

“நான் காலைல இந்த அரசி ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவேன்” அவர் கூறி, மனைவியை பார்த்து கண்சிமிட்ட, அவரின் தோளில் செல்லமாய் அடி போட்டவர்,

“இவருக்கு இப்படி தான் இருபது வயசு பையன்னு நினைப்பு” என்று கூறி உத்ராவை சாப்பிட அழைத்துச் செல்ல, திலோத்தமைக்கு எதிரே அமர்ந்தவள், “மெதுவா மெதுவா” என்று கலாய்க்க, “அபி அண்ணா” என்று உத்ராவிற்கு பின்னே பார்த்தபடி திலோத்தமை பயத்துடன் எழ, அவளுக்கு முன் வாரிச் சுருட்டிக் கொண்டு, அச்சத்தோடு பதைபதைப்புடன் எழுந்த உத்ரா, பின்னே பார்க்க அங்கு யாருமே இல்லை.

சிம்மவர்ம பூபதிதான் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.

திலோத்தமையின் விளையாட்டு!

அவள் திரும்பி திலோத்தமையை முறைத்தபடி அமர, “வெவ்வெவ்வே” என்று பழிப்புக் காட்டியவள் ஏதோ சொல்ல வர, அதற்குள் அங்கு வந்த இமையரசி, தட்டில் பணியாரம், அதற்கு நான்கு வகை சட்னி, மினி இடியாப்பம் அதற்கு தேங்காய் பால் தனியாக ஒரு கிண்ணத்தில், என்று வைத்துவிட்டு உள்ளே செல்ல,

“அந்த பயம் இருக்கணும்டி என் அண்ணன் மேல” என்று காலரை தூக்கிவிட்டபடி திலோ கூற, அவளை முறைத்த உத்ரா,

“உன் அண்ணன் பெரிய ஹிட்லரு.. அவர பாத்து படையே பயப்பட்டு நிக்குது.. போவியா.. நீ உன் அண்ணனை பாத்து பயப்படுடி.. நான் ஏன்டி..” அவள் கடுப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தட்டை கையில் எடுத்த திலோத்தமை திருட்டு முழி முழித்துக் கொண்டு, தட்டுடன் சமையலறைக்குள்ஓடி மறைந்தாள்.

“இவ ஒருத்தி அடுத்த செட் பணியாரத்தை பாட்டி சுடறதுக்குள்ள தட்டோட ஓடுற” பணியாரத்தை போட்டுக் கொண்டே வாய்விட்டே முணுமுணுத்த உத்ராவின் அருகே அபிமன்யு அமர, திரும்பிப் பார்க்காமலேயே மனம் அடித்துக் கொள்ள, தன் அருகே அமர்ந்தது அபிமன்யு என்று உணர்ந்து பீதியடைந்தவள், சலாரென எழ முயற்சிக்க, அவளால் முயற்சிக்க மட்டும்தான் முடிந்தது.

அவளை எழவிடாது அவளின் புடவையை அழுத்தியிருந்தது அவனின் ஜியோர்ஜியா ஷூ. (Girogia shoe)

எழுந்தால் அவள் சிரமப்பட்டு கட்டியிருந்த கொசுவம் வெளியே வந்துவிடும் நிலை. அப்படியே அமர்ந்துவிட்டாள். உள்ளுக்குள் கண்ட மேனிக்கு திட்டியவளுக்கு அதை வாயில் உதிர்த்திட தைரியமில்லை.

அதற்குள் அங்கு வந்த இமையரசி, “அட அபி வந்துட்டியா?” இமைகள் மின்ன கேட்டவர் பின் உள்ளே பார்த்து,

“அதுனால தான் நீ உள்ள பூனை மாதிரி ஓடி வந்தியா?” திலோவிடம் நக்கலாய் கேட்டவர், பேரனுக்கு பரிமாற, அப்போது தான் அபிமன்யு உத்ராவின் அருகில் அமர்ந்திருப்பதை அவர் கவனித்தார்.

இத்தனை பேர் அமரக் கூடிய டைனிங் டேபிளில் பேரன் உத்ராவின் அருகே அமர்ந்திருப்பது அவருக்கு எதையோ கூற, இருவரின் வதனத்தையும் அவனுக்கு பரிமாறியபடியே உற்று கவனித்தார். அபிமன்யு வழக்கம் போல இயல்பாக சாப்பிடத் தொடங்க, உத்ரா சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டிருந்தாள். அவளால் சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை.

பேரனிடம் கேட்கவும் முடியாது! அவனின் முன் உத்ராவிடமும் கேட்க முடியாது!

அவர் பரிமாறிவிட்டு உள்ளே சென்றுவிட, உத்ராவோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “விடுங்க” என்றாள் புடவையை இழுக்க முயன்றபடியே.

அவனோ அசையவில்லை. பணியாரத்தை பிட்டு வாயில் வைத்துக் கொண்டிருந்தான். அவள் இலேசாக குனிந்து, புடவையை இழுக்க முயன்றபடி அவனிடம் போராட, அவளின் இதமான சுவாசக்காற்று டேபிளில் வைத்திருந்த அபிமன்யுவின் இடது கரத்தை பதம் பார்க்க, ஆழிப்பேரலையாய் அவனின் உள்ளம் எழத் துவங்கியது.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாதவள், “விடுங்க.. இல்லைனா நான் அத்தையை கூப்பிடுவேன்” என்றாள் தனது அஞ்சன விழியை வைத்து முறைத்துக் கொண்டு மிரட்டும் தொணியில்.

அதற்கும் அவனிடம் பதிலில்லை! இறுமாப்பாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தான்!

“யாராவாது பாத்திருவாங்க விடுங்க.. என்னை தான் தப்பா நினைப்பாங்க.. பயமா இருக்கு.. விடுங்க” அவள் குரலில் திகல் விரவ கூறவும் தான் அவன் வாயைத் திறந்தான்.

அதாவது அவள் வாயில் இருந்து, ‘பயம்’ என்ற வார்த்தை உதிர்ந்த பின்.

“அப்ப பயம் இருக்கு?” அவன் அவளை பார்க்காது இடியாப்பத்தை வாயில் வைக்க, “ப்ச்” என்று சலித்தவளின் செய்கை அவனுக்கு வெம்மையை உள்ளுக்குள் விதைக்க, அவளைத் திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான்.

அவனின் அனல் பார்வையில் வார்த்தைகள் தொண்டையில் சிக்க, திக்கித் திணறியவள், “இருக்கு” என்றாள் ஈனஸ்வரத்தில், மீண்டும் புடவையை இழுத்துக் கொள்ள முயற்சித்தபடியே.

தன்னை நோக்கி தாழ்ந்திருந்த அவளின் வதனத்திற்கு அருகே தன் வதனத்தை கொண்டு சென்றவனின் மூச்சுக்காற்று அவளின் நெற்றியில் பட,

அவளின் முன்னுச்சியில் புரண்டிருந்த ஓரிரண்டு சிகைகள் அவனின் உஷ்ணத்தில் அசைய, அதை உணர்ந்தவள், “இப்படியே நீங்க கால் வச்சிருந்தா என்னாகும் தெரியுமா?” தலை நிமிராது வினவ,

“என்னாகும்?” என்றான் மேலும் அவன் மூச்சுக்காற்று அவளின் மேல் படர்ந்து வீச.

“புடவை வந்திடும்” என்றாள் பட்டுக் கன்னங்களில் அவளை மீறியும் செம்மை படர்ந்து நுனி நாசிக்கு சிவப்பு ஏறிக்கொள்ள.

“வந்தா?” மீண்டும் ஒற்றை வரியில் கேட்டு, பெண்ணவளின் மேல் வந்த அவளின் வாசனையும், அதனுடன் கலந்த பெர்ம்யூமின் நறுமணமும் அவனை மேலும் விளையாடத் தூண்டியது.

அவனின் கேள்வியில் அவனை தடாலென நிமிர்ந்து பார்த்தவள், “வந்தாவா? அவ்வளவு தான். அப்புறம் மறுபடியும் கட்டணும்” அவள் முடிக்கவில்லை அவனின் இதழோரங்கள் விஷமத்தில் வெடித்துத் துடித்தது. அவன் எதிர்பார்த்த பதில் இதுதான் அல்லவா! அப்போது தானே அவனால் தான் நினைத்ததை சொல்ல முடியும்.

“எப்படி? என் ஜிம் க்ளாஸ் (glass) முன்னாடி நின்னு கட்டுனியே அப்படியா?” அவன் கேட்டவுடன் ஏற்கனவே உணர்ச்சியின் சுழற்சியில் சுழண்டு கொண்டு இருந்தவளுக்கு, பேயறைந்தது போல வதனம் வெளிரிப் போய், அவளின் பன்னீர் திராட்சை விழிகள் அங்கும் இங்கும் பார்த்தபடி உருள, அவளின் மனம் அதி நிச்சயமாய் சொன்னது அவன் இவள் புடவை சரி செய்ததை பார்த்துவிட்டான் என்று.

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்து கொள்ள, இளம் பெண்ணவளை தூக்கி வாரி விழுங்கி கொண்டிருந்தான், அந்த சாம்ராஜ்யத்தின் சொந்தக்காரனான அவளின் அபிமன்யு.

பெண்ணவளோ, விழிகளை சுருக்கி, புருவங்கள் ஓர் இடத்தில் நிற்காது, அதரங்கள் துடிக்க, “ப்ளீஸ்!!!” சின்னக் குரலில் சொல்லிக் கொண்டிருக்க, அச்சூழலை கலைக்கவோ இல்லை உத்ராவை காப்பாற்றவோ அங்கு வந்தாள் நறுமுகை.

சட்டென இருவரும் விலகிக் கொள்ள, அபிமன்யு எதுவும் நடவாதது போல சாப்பிட தொடர்ந்தாலும், அவன் உத்ராவின் புடவையின் மேல் வைத்திருந்த தன் காலை விலக்கிக் கொள்ளவில்லை. உத்ராவோ நறுமுகை பார்த்துவிட்டாலா இல்லையா என்று அச்சத்தில் சாப்பிடக் கூட இயலாது அமர்ந்திருக்க, நறுமுகையின் விழிகளில் இருந்து எதுவும் தப்பவில்லை.

இருவரும் தங்கள் வதனங்களை அருகருகே வைத்து அமர்ந்திருந்ததையும் பார்த்துவிட்டாள். ஏன் விலகியதையும் கூட.

அடுத்து அவளின் விழிகள் அபிமன்யுவின் கால்கள் உத்ராவின் புடவையை பிடித்திருப்பதைக் கண்டுவிட, கிண்டலாய் புன்னகைத்தவள், உதட்டை குவித்து, சன்னமாய் விசிலடித்து, ‘ஓஹ்.. ஹோஓஓஓஓ கதை இந்த ரூட்டுக்கு மாறிடுச்சா?’ என்று நினைத்தவள்,

இருவரின் எதிரே வேண்டுமென்றே சென்றமர, உத்ராவோ நறுமுகையை பார்த்து, “ஹிஹிஹி” என்று சிரித்து வைத்தாள் சமாளிக்கும் பொருட்டு.

“ரொம்ப அழகா புடவை கட்டியிருக்க உத்ரா” நறுமுகை ராகமாய் இழுத்து, தானே பரிமாறிக் கொண்டே கூற, அப்போது தான் தண்ணீரை எடுத்துக் குடித்துக் கொண்டிருந்த உத்ராவிற்கு புரையேறிவிட்டது.

அவள் தலையைத் தட்டிக் கொண்டே நறுமுகையை பார்க்க, அவளோ இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி என்னவென்று வினவ, அருகில் இருந்தவனோ தனக்கும் அதற்கும் துளியும் சம்மந்தம் இல்லை எனும் ரீதியில் சாப்பிட்டு முடிக்க,

“என்ன உத்ரா அப்படியே வச்சிருக்க?” அங்கு வந்த இமையரசி கேட்க, உத்ராவின் புடவையில் இருந்து காலை எடுத்த விடாக்கண்டன், எழுந்துகொள்ள, அப்போதுதான் உத்ராவிற்கு, ‘அப்பாடாஆஅஅ போய்யாஆஅஅ’ என்றிருந்தது.

“சும்மா” என்று இமையரசியின் தாடையை பிடித்து கொஞ்சியவள், நறுமுகையின் பார்வையை சந்திக்காது உண்ண, அவளின் மனதில் சற்று முன் நடந்த அனைத்தும் படமாய் ஓட,

பேதையவளுக்கு ஆடவணின் செயலில் கொத்துக் கொத்தாய் வெட்கப் பூக்கள் தலை முதல் பாதம் வரை பூத்து, கொள்ளை அழகுடன் அமர்ந்து இதழுக்கிடையில் சிரிப்புடன் உண்ண, அவளின் குழைவான உள்ளத்து உணர்வை உணர்ந்த சூர்யக் கதிர்களும் மதி மயங்கி போய் பூமிக்கு அன்று வெம்மையை குறைவாகவே அனுப்ப எண்ணியது.