ஆழி சூழ் நித்திலமே 10(ஆ)

வெள்ளியன்று இரவே ஸ்டேஷனில் பாரியை நையப் புடைத்திருந்தான் நாதன். எத்தனை நாட்களாக உள்ளே வைத்திருந்த வஞ்சமெல்லாம் பாரியின் மேல் இறக்கியிருந்தான். அவ்வளவு அடியையும் அசையாமல் வாங்கிக் கொண்ட பாரியைப் பார்க்கையில் ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. 

“என்னடா அடிவாங்கறதுக்கே பொறந்தவனாட்டம் அமைதியா அடிவாங்கற.  நீ திமிருவ துள்ளுவ,  உன் துள்ளலையும் திமிறலயும் அடக்கி உன் கதைய லாக்கப்லயே முடிக்கலாம்னு நினைச்சேன். இப்படி புத்தனாட்டம் நிக்கற.”

வாயே திறக்காமல் அமைதியாய் இருந்தவனைப் பார்த்துக் கடுப்பாகிப் போனான் நாதன். 

“சார் விடுங்க சார், படக்கூடாத இடத்துல பட்டு செத்துகித்துப் போயிட்டான்னா மீடியால உங்களை கிழிச்சித் தொங்க விட்ருவானுங்க ஜாக்கிரதை.” கான்ஸ்டபிள் ஒருவர் நாட்டுநடப்பை எடுத்துக்கூறினார். 

அதுமட்டுமல்ல திங்களன்று பாரியை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது அடித்திருப்பது ஊர்ஜிதமானால் தனக்குதான் பிரச்சனை என்பதை உணர்ந்திருந்தவன் அதற்குப் பிறகு சற்று அடக்கி வாசித்தான். 

இருந்தாலும், எங்கே போய்விடப் போகிறான் இந்த பாரி. கேஸை நித்திலா வாபஸ் வாங்காதவரை குறைந்தபட்ச கடுங்காவல் தண்டனையாவது அவனுக்கு வாங்கிக் கொடுத்துவிடலாம் என்றெண்ணிக் கொண்டான். 

தற்பொழுது நாதனுக்கு பாரியைவிட நித்திலாதான் முக்கியமாய் தெரிந்தாள். அவளுக்காகத்தான், அதுவும் பாரியென்பதால்தான் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்தது.  இல்லையென்றால் இருதரப்பையும் வரவைத்து பேசி அதில் தான் எவ்வளவு ஆதாயம் பார்க்கலாம் என்றே தோன்றும் அவனுக்கு. 

 கேஸ் கொடுக்க நித்திலா வந்தபோதே அவளுடைய அழகான தோற்றம் அவன் பார்வையை மாற்றியிருந்தது. அதிலும் அவள் புகார் கொடுத்தது பாரியின் பேரில் என்றதும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போலானது அவனுக்கு.

 வெகுநாட்களாக உள்ளே தூக்கிப் போட தருணம் பார்த்திருந்த பாரியையும் உள்ளே போட்டாயிற்று, நித்திலாவிடமும் நல்ல பெயரை சம்பாதித்தாயிற்று. 

அன்று அழுகையில் சிவந்த முகத்தோடு மீண்டும் மீண்டும் நன்றி சொன்ன அந்தப் பெண்ணை மறக்கவே முடியாமல் போனது அவனுக்கு. 

எத்தனையோ பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய அவனின் பார்வை நித்திலாவின் மேல் படிந்தது அவளது துரதிர்ஷ்டம்தான். ஆனால், வஞ்சகமான நாதனை நம்பிக்கொண்டு பாரியின் மேல் துவேஷத்தோடு  இருப்பவள் உண்மையை எப்போது புரிந்து கொள்வாளோ?

திங்களன்று காலையில் கோர்ட்டுக்கு அழைத்து வந்த பாரியை நாதன் அடித்திருப்பதைப் பார்த்து கோபமாகப் பேசப்போன வக்கீலையும் வெற்றியையும் அடக்கிய பாரி, 

“வுடு வெற்றி, ரொம்ப நாளா எம்மேல வச்சிக்கின வஞ்சத்த தீர்த்துக்கினான். இத்தோட முடிஞ்சாச் சரி. நீ கம்முன்னு இரு.”

பாரிக்கு உண்மையில் நாதன் அடித்ததெல்லாம் அவனைப் பெரிதாய் பாதிக்கவில்லை, உடல்வலிகூடப் பெரிதாய் தோன்றவில்லை. மனம்தான் மிகவும் நொந்து போயிருந்தது.

தன்னுடைய கோபம் ஒரு உயிரைப் பறித்துவிட்டதே, ஒரு குடும்பம் தன்னால் நிர்கதியாய் நிற்கிறதே என்பதே அவன் மனதை மிகவும் நோகடித்திருந்தது. 

அதிலும் நித்திலாவின் முகத்தை கண்ணீரோடு கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. கண்களில் கண்ணீரோடு அவளை நேரில் பார்த்தால் தான் சுத்தமாய் உடைந்து போவோம் என்றேத் தோன்றியது. அவளது துன்பத்துக்குத் தான் காரணமாகிப் போனோமே என்பதே நெஞ்சை அறுக்க, நாதனின் அடியெல்லாம் ஒரு பொருட்டாகவேத் தோன்றவில்லை. 

பரசுராமனைப் பற்றி பள்ளியில் புகார் கொடுத்து விசாரித்திருக்க வேண்டும், அதை விட்டு தானே போய் சண்டையிட்டது பெரும்தவறு என்றும் உணர்ந்திருந்தான். ஆனால் அது காலங்கடந்த ஞானோதயம் அல்லவா. 

திங்களன்று பாரியை கோர்ட்டில் ஒப்படைத்ததும் வெற்றி ஏற்பாடு செய்திருந்த வக்கீல் உடனடியாக ஜாமீன் எடுக்க… பாரியை அவனது வீட்டுக்கு அழைத்து வந்தான் வெற்றி. 

********

குப்பத்தில்…

 வெள்ளியன்று இரவே, தனது ஆசிரியர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டு அதிர்ந்து போன செல்விக்கு அவரை அடித்தது பாரிதான் என்பதும் அதற்காக அவனை அரெஸ்ட் செய்ததையும், கேள்விப்பட்டதும் நடுநடுங்க வைத்திருந்தது. 

தான் செய்து வைத்த அபத்தத்தின் அளவைப் புரிந்து கொண்டவளுக்கு, பயத்தில் உடல்நடுங்கி ஜூரம் வந்து அனத்தத் துவங்கியிருந்தாள். செல்வியின் உடல்நிலையைப் பார்த்து பயந்து போன தேவாவும் ராணியும் அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். 

அவர்களுக்கு, பாரி செல்வியின் பள்ளிக்குச் சென்று பிரச்சனை செய்தது தங்கள் வீட்டுப் பெண்ணுக்காகத்தான் என்பது புரிந்தாலும், காய்ச்சலில் விழுந்த செல்வியிடம் விபரம் எதையும் கேட்க முடியாமல் தவித்துப் போயினர். 

பாரி நேராகப் போய் அடித்திருக்கிறான் என்பதால் அது நிச்சயம் சாதாரணப் பிரச்சனையாய் இருக்காது. ஆகவே, வேறு யாரிடமும் எதுவும் விசாரிக்கவும் முடியாமல் தவித்தபடி இருந்தனர். 

இரண்டு நாட்கள் கடுமையான ஜூரத்திலும், பயத்திலும் அனத்தியபடி கிடந்த செல்விக்கு திங்களன்று காலையில்தான் சற்று உடம்பு தேறியிருந்தது. 

பாரி இன்னும் ஜெயிலில்தான் இருக்கிறான் என்பதை தன் தாய் மற்றும் அண்ணன் பேசுவதை வைத்துத் தெரிந்து கொண்டவளுக்கு தன் தவறை எண்ணிக் கண்கள் கலங்கியது. 

நடந்த உண்மையைச் சொல்லி பாரியண்ணனை வெளியே கொண்டுவர வேண்டும் என்றெண்ணியபடி, அழுதுகொண்டே மெதுவாக  தன்தாயிடம் விபரத்தைக் கூறினாள். 

செல்வி கூறியதைக் கேட்ட ராணி அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள். 

“செல்வி, மெய்யாலுந்தான் சொல்றியா புள்ள?”

“நெசந்தாம்மா. நானு வேணுக்குன்னு பண்ணல யம்மா. இப்புடி சொன்னா ஸ்கோலுக்குப் போ வேணாம்னு சொல்லுவீங்கன்னு நெனைச்சி சொல்லிப்புட்டேன். பாரியண்ணன் போயி சார அடிக்கும்னு நெனைச்சே பாக்கல யம்மா.” 

தேம்பியவாறு கூறியவளைப் பார்த்து அளவிலாக் கோபம் பெருகினாலும் காய்ச்சல் வந்து அரை உயிராய் கிடந்தவளை என்னவென்று அடிக்க…. 

“எம்மாம் பெரிய வேலையப் பண்ணி வச்சிருக்க புள்ள! கப்சா வுடற விஷயமாடி இது? அசால்ட்டா உங்க சாரு மேல தப்பு சொல்லிப்புட்ட? ஐய்யோ! இத்த நானு யாருக்கிட்டன்னு சொல்லுவேன்?” ராணி வெடித்து அழ…

“யம்மா, நானு தெரியாம பண்ணிப்புட்டே யம்மா.” அழுதபடி தாயின் கைகளைப் பிடிக்க வர,  அவளது கையை உதறிய ராணி,

“தெரியாம பண்ணிப்புட்டியா? எம்மாந் தெகிரியம்டி உனக்கு… படிக்கற புள்ளைக்கு இம்புட்டு தில்லு ஆவாதுடி? நீ பண்ணி வச்சினுக்கிற வேலையால ஒரு உசுரு போச்சே. அப்படி இன்னாடி இந்த ஃபோனும் விளையாட்டும் உன் புத்திய ராங்காக்குது?” 

ஆத்திரத்தில் விளாசியவள் ஃபோனை விட்டெறிந்து உடைத்தாள். அந்த அலைபேசி சில்லு சில்லாய் சிதறி ராணியின் கோபத்தின் அளவைக் காட்டியது. அப்போது அங்கே வந்த தேவா தங்கையின் அழுகையையும் தாயின் ஆங்காரத்தையும் பார்த்து என்னவென்று கேட்க… நடந்த விபரம் அறிந்ததும் அதிர்ந்து போனான். 

பாரி சிறுவயதிலிருந்து பழகியவன். படியளக்கும் முதலாளி. ஏதேனும் சிறு பிரச்சினை என்றாலும் தனக்காக முன்னிற்பவன். எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக நல்லவன். அவனுக்கு இப்படி ஒரு துன்பம் வர தாங்கள் காரணமாகிவிட்டோமே என்று குமைந்து போனது மனது. 

தங்கையை வெகுவாகக் கடிந்து கொண்டவன், அவளது பைத்தியக்காரத்தனமான செயலை என்னவென்று வெளியே சொல்வது என்று நொந்தே போனான். 

ஆனாலும் பாரி அநியாயமாக தங்களால் தண்டனை அனுபவிக்கக்கூடாது என்று கருதியதால், பாரியிடம் மட்டுமாவது இதைச் சொல்லியே ஆகவேண்டும், அதன்பிறகு அவன் என்ன சொல்கிறானோ அதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தவர்கள் மருத்துவமனையிலிருந்து நேராகப் பாரியின் வீட்டுக்கு வந்தனர். 

*****

அப்பொழுதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தனர் பாரியும் வெற்றியும். பாரியைப் பார்த்ததும் அழுகையோடு ஒப்பாரி ஒன்றை ஆயா ஆரம்பிக்க, கடுப்பானவன்

“இந்தா வாயமூடு ஆயா. இப்ப இன்னா ஆச்சின்னு கூவிக்கினுக்கற நீ. எனக்கு ஒன்னியும் ஆவல. முழுசாதான் வந்துக்கறேன்.”

“ஏன் பேச மாட்ட?  ஊர் சண்டை வலிச்சிக்கினு வராதன்னு சொன்னா கேக்கறியா நீ. உன்னைய ஜெயிலுக்குள்ள போட்டாங்கன்னு நாங்க இங்க அழுதுக்கினு கிடக்கறோம். உனக்கு ஏத்தமாக்கிது.” ஆயா நொடித்துக்கொள்ள… 

“ஆயா, சும்மா இரு. ஏற்கனவே மாமா நொந்து போயி வந்துக்குது. நீ வேற ஏன் இம்சையக் கூட்டுற.” ஆயாவை அடக்கிய கயல், 

கன்றிச் சிவந்திருந்த பாரியின் உடலை கண்களால் ஆராய்ந்து கொண்டே, “ரொம்ப அடிச்சுப்புட்டாங்களா மாமா?” பேசும் போதே முனுக்கென கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ள, அவளது சிவந்த முகமும் வீங்கிய கண்களும் விடாமல் அழுதிருக்கிறாள் என்பதைக் காட்டியது.  அவளது அழுத முகம் வெற்றி பாரி இருவருக்குமே வேதனையைத் தர, 

“அதெல்லாம் ஏதுமில்ல கயலு. எந்தப் பிரச்சினையும் நாஞ்சமாளிச்சிக்குவேன். நீயெதுக்கு அழுவுற? முதல்ல வெற்றிக்கு எதனா சாப்பிடக்குடு. எனக்கும் பசிக்குது. சாப்புட எடுத்து வை கயலு.”

எதைச் சொன்னால் இலகுவாக கயலை மாற்ற முடியுமோ அதைச் சொல்லவும், கண்களைத் துடைத்துக் கொண்டவள், 

“அட,  அன்னிக்கே காலையில எதுவும் துன்னாம நீ வெடுக்குன்னு வண்டியெடுத்துனுப் போகவுமே எனக்கு சுருக்குன்னுச்சி. அப்பறமேட்டுக்குதான் என்னென்னமோ ஆகிப்போச்சி. 

மூனு நாளா நீ சரியாகூட சாப்பிட்டிருக்க மாட்டல்ல. சூடா தண்ணி வச்சிருக்கேன். நீ முதல்ல குளிச்சிட்டு வா மாமா. நான் சாப்புட எடுத்து வைக்கிறேன். நீங்களும் குந்துங்க வேலுமாமா.” என்றபடி பரபரப்போடு சமையலறைக்குள் சென்றவளை தடுத்த வெற்றி. 

“நாங்க சாப்புடறது இருக்கட்டும். நீ சாப்பிட்டியா?” கனிவோடு கேட்டவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், 

“அதுக்குதான் ரதியக்காவ இங்க அனுப்பி வுட்டீங்களே. அவங்களான்ட ஏமாத்த முடியுமா? நான் சாப்டேன் மாமா. இன்னிக்கு காலையில நான் சாப்பிடவும்தான் அவுங்க கிளம்பிப் போனாங்க.”

பாரி குளித்துவிட்டு வந்ததும் இருவருக்கும் உணவு எடுத்து வைத்து உண்ண வைத்தவள், டீ தயாரித்துக் கொண்டிருக்க, சரியாக தேவாவும் ராணியும் செல்வியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். 

இரண்டு நாட்கள் இடைவெளியிலேயே சோர்ந்து துவண்டு போயிருந்த செல்வியைப் பார்த்த பாரி, 

“ஏன் செல்வி? இன்னாப் பண்ணுது மேலுக்கு. நடந்ததுலாம் பார்த்து பயந்துக்கினியா? நீ எத்தயும் மனசுல வச்சிக்காத புள்ள. இந்தப் பிரச்சனைலாம் அண்ணன் பார்த்துக்குவேன். நீ நல்லா படிக்கனும். அதான் எனக்கு வேணும் சரியா.”

பாரி பேசப் பேச வெடித்து அழுதவள் ஓடிவந்து அவன் காலடியில் விழுந்திருந்தாள். “என்னைய மன்னிச்சிரு பாரிண்ணா…” 

காலைப் பிடித்துக்கொண்டு கதறியவளை அதிர்ச்சியோடும் கேள்வியோடும் பார்க்க, ராணியும் அழுதுகொண்டே செல்வி கூறிய அனைத்தையும் கூற, அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து போயிருந்தனர். 

தன் தங்கை செய்த தவறை எண்ணி குற்றவுணர்ச்சியில் தேவா நிற்க, எதிர்பாராத இந்த திருப்பத்தில் என்ன செய்வது என்றே புரியாத நிலையில் நின்றான் வெற்றி. 

ஏற்கனவே தன்னால் ஒரு உயிர் போய்விட்டதே என்று நொந்து போயிருந்த பாரி, இப்போது பரசுராமனின் மீது எந்தத் தவறுமே இல்லை, நடந்த சம்பவம் முழுக்க முழுக்க தன்னுடைய அவசரத்தாலும் கோபத்தாலும் மட்டுமே என்று புரிந்ததும் அயர்ந்து போயிருந்தான். 

சாகலாம் என்று கடலிலே விழுந்தவன் கை நிறைய முத்துக்களோடு கரை சேர்ந்ததும் உண்டு. முத்தெடுக்க மூழ்கியவன் செத்துப் போவதும் உண்டு. 

நோக்கம் வேண்டுமானால் நம்முடையதாய் இருக்கலாம். ஆனால் ஆக்கம்! அவனன்றி வேறேது! இதில் பாரி மட்டும் விதிவிலக்கா என்ன? 

—ஆழி சூழும்.