UYIRODU VILAIYADU 13

(இருண்ட வலை/dark web என்பது தேடு பொறிகளுக்குத்/ search engine தெரியாத, இணையத்தின்/internet ஒரு பகுதியாகும். மேலும் அணுக டோர்/tor எனப்படும், ‘அநாமதேய உலாவியைப்’ பயன்படுத்த வேண்டும்.

Tor நெட்வொர்க்கை உள்ளிடவும், the. onion திசைவி, குறியாக்கம் பல அடுக்குகளைத் தகவல்களைக் காக்கும்.

டெர்பியம் ஆய்வக  தகவலின் படி சட்டவிரோதமாக, குண்டூசியிலிருந்து, ராக்கெட் லாஞ்சர் வரை இங்கே ஆன்லைன் ஆர்டர் கொடுத்து வாங்க முடிய கூடிய கள்ளச்சந்தை.  

டார்க் வெப் என்று  வகைப்படுத்தக்கூடிய 2,723 வலைத்தளங்களில், 1,547 – 57 சதவீதம் – மருந்துகள் (423 தளங்கள்), சட்டவிரோத ஆபாச படங்கள் (122) மற்றும் ஹேக்கிங் (96) உள்ளிட்ட சட்டவிரோதப் பொருள்களை விற்கின்றன.

இதிலொன்று, ‘சில்க் ரோடு’ எனப்படும் டார்க் வெப் தளம். அதிநவீன மற்றும் விரிவான குற்றவியல் சந்தையாக உருவெடுத்து, கறுப்பு சந்தை பஜாராகச் செயல்பட்டு வருகிறது.அங்குச் சட்டவிரோத பொருட்கள், சேவைகள், கிட்டத்தட்ட அனைத்து வகை சட்டவிரோத மருந்துகள், ஆயுதங்கள் வாங்கப்பட்டு  விற்கப்படுகிறது.

‘தி ஆர்மரி/ the armory’ என்ற தளம்  2012 ஆம் ஆண்டில் ஆயுதங்களை (முதன்மையாகத் துப்பாக்கிகள்) ஆன்லைன்னில் விற்றது.)

அத்தியாயம் 13

பால்கன் 8X  என்ற விமானத்தில் இந்தியாவை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்த பல்தேவும், விக்ரமும், சத்ருவுடன் வீடியோ அழைப்பில் கனெக்ட் ஆகியிருந்தார்கள்.

சத்ரு இவர்களுடன் பேச ஆரம்பிப்பதற்குள், வேறு ஏதோ ஒரு விஷயத்தைச் சத்ருவின் ஆளொருவன் பகிர்ந்து கொள்ள வர, வீடியோ அழைப்பில் பல்தேவும், விக்ரமும் காத்திருந்தார்கள்.

‘மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்!

மனித மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்!

வெளிச்சத்தில இருக்கிறவன் தாண்டா 

இருட்ட பாத்து பயப்படுவான்.

நான் இருட்டிலேயே வாழுறவன்

I’m Not Bad

Just Evil

எவனா இருந்தால் என்ன!

எமனாய் இருந்தால் என்ன!

சிவனா இருந்தாலும்,

உனக்குச் சமமாய் அமைவேன் நான்.

பணமா இருந்தா என்ன!

நீ பிணமாய் இருந்தா என்ன!

நான் உயிரோடு இருந்திடுவே,

எவனையும் உணவாய் உண்பேன் நான்.

சூதாய் இருந்தால் என்ன!

அது தீதாய் இருந்தால் என்ன!

யாதாய்  இருந்தாலும் எனக்கு

தோதாய் அமைதிடுமே!

பூலோகம் அதை வென்று,

அதல பாதளம் வரை சென்று,

கோலாகலமாக எந்தன்  ஆட்சி புரிந்திடுவேன்…’ என்ற  வரிகள் இவனுக்காகவே எழுதப்பட்டதோ என்று நினைக்கும் வண்ணம், மனிதன் உருவில் இருக்கும் மிருகம் சத்ருஜித்.  

சத்ருஜித்!.

ஐந்தடி ஆறு அங்குல உயரத்தில், நடமாடும் ராட்சசன். வயது முப்பத்திற்குள் இருக்கலாம்.

ஏழு எட்டு மொழிகள் பேசத் தெரியும். ஏட்டுக்கல்வி கிடையாது என்றாலும், மனிதர்களை அவர்களின் பலவீனங்களைப் படிக்கச் தெரிந்தவன். நிழல் உலகத்தின் நெளிவு சுளிவுகளை, எந்த மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்ற சூட்சுமம் அறிந்தவன்.

சட்டென்று பார்க்க  ஹிந்தி  சினிமா நடிகர், ‘ராகுல் போஸ்’ சாயலில் இருப்பவன்.

வீடியோ அழைப்பில் பல்தேவும், விக்ரமும் காத்திருக்க, வேறு யாரிடமோ கோபத்தில் இரைந்து கொண்டிருந்த சத்ருஜித்தை கண்ட விக்ரம், அவன் கவனம் இப்போதைக்கு தங்கள் பக்கம் திரும்பப் போவதில்லை என்று கண்டு, அழைப்பை மியூட் செய்து , “சத்ருஜித் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அங்கிள்?…” என்றான் விக்ரம்.  

பல்தேவின் விழிகள் வீடியோவில் தெரிந்த சத்ருஜித்  உருவத்தைப் பார்த்தவாறே, 

“சத்ருஜித்!… தன் சத்ரு / எதிரிகளுக்கே ஜித்தனாய் இருப்பவன் என்று பெயர். நேரில் முகத்தைப் பார்த்தாய் என்றால், ஏதோ சினிமா பட ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவுக்கு அழகாய் தான் இருப்பான். பேச ஆரம்பித்தால் கல்லும் கரையும் வண்ணம் இருக்கும் இவன் பேச்சு. மொத்தத்தில், ‘crowd pleaser’ என்று சொல்வார்களே அதை போன்றவன். 

விளையாட்டின் மேல் அதிக மோகம் உண்டு. சர்வதேச கிரிக்கெட், குதிரை பந்தயங்கள், கார் ரேஸ்கள், குத்து சண்டை, நடக்கும் இடங்களில் இவனைக் காண முடியும். அங்குச் சூதாட்டம் ஆடுவதிலும் கில்லாடி.  

விளையாட்டையும் சூதாட்ட களமாய் மாற்றி, அதில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கெட்டிக்காரன். இவன் எந்த விளையாட்டுகளில் எல்லாம் இடம் பெறுகிறானோ, அங்கு ‘மேட்ச் பிக்சிங்’ இருக்கிறது என்று நிச்சயமாய் நம்பலாம்.  மற்ற நிழல் உலக தொழில்மூலம் கிடைக்கும் பணம் இங்கே வெள்ளையாக்கப்படுகிறது.   

இன்னொரு ஆர்வம் சினிமாவின் மீது. இவனுடைய பினாமி கம்பெனி, இந்திய திரைப்பட துறையில் பிரபலமான  ‘மை லார்ட்’  தயாரிப்பு நிறுவனம்.

கடவுள்மேல் பக்தியெல்லாம் இல்லை. ‘நானே  கடவுள்!…’ என்று ஸ்டேட்மென்ட் விடுவது.‘மை லார்ட்’ என்று சினிமா, டிவி தொடர் எடுக்க வருபவர்கள் இவனைப் போற்றி புகழ, இவனே, ‘மனிதர்களின்  கடவுள்’ என்று சொல்லிக் கொள்ள இப்படியொரு பெயர் தயாரிப்பு நிறுவனத்திற்கு.

மாடல், சினிமா நடிகைகள் ஒரு படத்தில், விளம்பரத்தில் ஒப்பந்தம் ஆக வேண்டும் என்றால் இவன் சொல்லும் சமயம் எல்லாம், இவன் கெஸ்ட் அவுசுக்கு வந்தால் தான் முடியும்.‘இந்திய சினிமாவின் சக்ரவர்த்தி’ என்றும், ஷோபிஸ்/ showbiz துறையில் பல ஆர்வமுள்ள நடிகர்களை அறிமுகம் செய்து வைத்ததும் சத்ருவின், ‘மை லார்ட்’ தயாரிப்பு நிறுவனம் தான். பலருக்கும் காட்பாதர்.

மிக மட்டமான புத்தகம் ஒன்று வெளிவர வேண்டும் என்றாலோ, மூன்றாம் தரப் புத்தகத்திற்கு எல்லாம் அவார்ட் கொடுக்கப்படுகிறது என்றால், அதன் பின்னனியில் இருப்பவன் இவன் தான்.

இவனால் சினிமா துறையிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட கதாநாயகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், கவிஞ்சர்கள், எழுத்தாளர்கள் லிஸ்ட் மிக நீளம். மிகப் பெரிய ஈகோயிஸ்ட். 

‘இவன் வாக்கே சினிமா துறையில் வேதம்’ என்பதால், இவன் கறுப்பு பக்கத்தில் இடம் பெரும் எல்லோரின் வாழ்வும் முழுவதுமாய் அழியும்  வரை ஓய மாட்டான்.  சினிமா துறையின், ‘bully/டார்ச்சர் செய்பவன், கொடுமைபடுத்துபவன்’ என்று அடைமொழி உள்ளவன். 

இவனால் கொல்லப்பட்ட இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இவனின் ஹிட்லிஸ்டில் உள்ள நடிகை, நடிகையர் அநேகம்.    

ஒரு பாடல் எவ்வாறு இயற்றப்பட வேண்டும் என்பதிலிருந்து, எந்தக் கதாநாயகி எந்த நடிகனுடன் நடிக்க வேண்டும், ஆடை எந்த அளவுக்குக் குறைய வேண்டும் என்பதில் கூடச் சத்ருவின் தலையீடு இருக்கும்.

திரைப்பட விருது வழங்கும் விழாவையே கேலி கூத்தாக்கியவன் இவன் தான். அட்டர் பிளாப் படத்திற்கு, அதில் நடித்தவர்களுக்கு எல்லாம் விருது வழங்கிக், ‘கலையைக் கொலை’ செய்பவன்.

கதாநாயகிகளுடன், மாடல்களுடன்   அதிகளவு காதலில் விழுந்து கொண்டே இருப்பது இவன் ஒருவனாகத் தான் இருப்பான்.

‘ஒருத்தி மேல் வந்தால் அது காதல் இல்லை… உலகத்தில் உள்ள பெண்கள் அனைவைரையும் காதலிப்பதே என் காதல்… அது யாரின்  மகளாக, மனைவியாக இருந்தாலும் அக்கறை இல்லை.’  என்பது இவன் தத்துவம்.

ஒரே நாளில் ஆயிரத்து ஐநூறு முறைக்கு மேல்  அழைப்பு விடுத்து ஸ்டாகிங்/stalking  செய்வது எல்லாம் இவன் ஹாபி. அழைப்பைத் துண்டித்தாலோ, எடுக்காமல் விட்டாலோ, பிளாக்/block லிஸ்டில் சேர்ந்தாலோ, காவல் துறையிடம் புகார் அளித்தாலோ, நடு ராத்திரி என்று கூடப் பார்க்காமல் வீட்டிற்கே சென்று  விடுவான். இல்லையென்றால் கடத்தி விடுவான். அதோடு அந்தப் பெண்ணின் வாழ்வு முடிந்து விடும் என்பதால், கணக்கில் அடங்காப் பெண்கள், இவன் அழைப்பை ஏற்றுகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி கொண்டு இருக்கிறார்கள்.   

அந்த அழைப்பு எப்படி பட்டதாக, எதற்காக என்றாலும் கூட, ‘இவன் ஆணையை நிறைவேற்ற வேண்டியது அவர்கள் கடமை’ என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து விடும் சைக்கோ. எந்தப் பெண்ணைப் பிடித்து விட்டாலும் உடனே காதல் பொங்கி விடும். ‘I just can’t help myself. I fall in love frequently.’ என்பது இவனின் மிகப் பிரபலமான செய்தித்தாள்களில் வந்த ஸ்டேட்மென்ட்.”  என்ற பல்தேவை இடை மறித்த விக்ரம்,

“வேணாம் அங்கிள்…ஏதாவது பச்சையாய் சொல்லிட போறேன்!… இவன் செய்யும் கண்ட கர்மத்திற்கு எல்லாம் காதல் என்று பெயர் சொல்லி அதன் புனிதத்தையே கொச்சைப்படுத்தாதீர்கள் அங்கிள். இது வெறும் லஸ்ட். பெண்ணை ஸ்டாக் செய்து, துன்புறுத்திக் காதலிப்பது, ‘என்னுடன் படுக்க வா’ என்று டார்ச்சர் செய்வது தான் காதலா?…” என்றான் விக்ரம் கடுப்புடன்.

“அதைத் தைரியமாய் போய் அவனிடம் சொல்லேன் விக்ரம். பிஸ்டலில் உள்ள ஒட்டுமொத்த தோட்டாவையும் உன்மேல் இறக்கிட்டு, அதன் பிறகு, ‘என் காதலை லஸ்ட் என்று சொல்ல நீ யார்?…’  என்று உன் பிணத்திடம் கேட்பான். அவனுக்கு எல்லா பெண்களின் மேல் வருவதும் உன்னதமான, தெய்விகமான காதல் தானாம்.  உலகின் மிகச் சிறந்த, ‘ஐடியல் காதலன்’ அவன் மட்டும் தானாம். அவன் அப்படி தான் சொல்றான். பெண்களைக் காதலிப்பதில் அவன் தான் காதல் உலக சக்ரவர்த்தியாம்.” என்றார் பல்தேவ், விக்ரமிற்கு மேல் கடுப்புடன்.

இதற்கு எப்படி ரியாக்ட் ஆவது என்று கூடத் தெரியாமல், விழித்தான் விக்ரம். விக்ரம் ரியாக்ஷனை பார்த்த பல்தேவ் முகத்தில் புன்னகை விரிந்தது.

“இவன் செய்யறதுக்கு எல்லாம் ரியாக்ட் ஆக ஆரம்பித்தே உனக்குப் பைத்தியம் பிடிச்சுடும். கூல் விக்ரம்.” என்றார் பல்தேவ்.

“சாத்தான் வேதம் ஓதுகிறது  என்பது இது தானா அங்கிள்?… நீங்கச் செய்யாததையா அந்தச் சத்ரு செய்துட்டு இருக்கான்?…” என்றான் நக்கலாக.

“ஓதுவது சாத்தான் என்றாலும், ஓதப்படுவது வேதம் தானே?… நிச்சயமா என்னால் சொல்லச்  முடியும் இவன் அளவுக்கு எல்லாம் நான் இறங்கியதே இல்லை தான். நான் நல்லவன் இல்லை தான் விக்கி. ஆனால், இவனைப் போல் சைக்கோ சத்தியமாய் நான் இல்லை. 

இந்தியாவுக்கு தானே போகப் போறோம். என்னைப் போல் புலி கூட்டத்தின் வாலை நீயும் பிடித்து விட்டாய் விக்ரம்.  பிடித்துக் கொண்டு இருக்கவும் முடியாது. புலி வாலினை நீ விட்டால் உயிரோடு இருக்கவும் முடியாது. போகப் போக உனக்கே, அந்தச் சத்ரு பற்றித் தெரிய வரும். அப்போ உனக்கே புரியும்.” என்றார் பல்தேவ் பெருமூச்சை விட்டு.

“இவ்வளவு தானா இல்லை இன்னமும் இருக்கா சார்வாலோட கேடுகெட்ட சரித்திரம்?…” என்றான் விக்ரம் எரிச்சலுடன்.

“கடந்த ரெண்டு வருடத்தில் இந்தியாவில் xxx மாநிலத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து, இந்திய ராணுவ வீரர்கள்மேல்  xxx அங்கே தாக்குதல் நினைவுக்கு இருக்கா?…” என்றார் பல்தேவ்.

“ஹ்ம்ம்! …  இருநூறு போது மக்கள் இறந்து போனார்களே!…. ராணுவ வீரர்கள் சென்ற வண்டிகளின் மேல்  தற்கொலை படை தாக்குதல், கன்னிவெடி தாக்குதல் அதையா சொல்றீங்க?…” என்றான் விக்ரம் திகைப்புடன்.

காதால் கேட்பதை ஜீரணிக்க முடியாதவனாய் அமர்ந்திருந்தான் விக்ரம் என்று தான் சொல்ல வேண்டுமோ!.

“அதே தான். அந்தத் தாக்குதலின் பின்னனியில் சத்ரு தான் இருக்கிறான்.” என்ற பல்தேவை இடைமறித்த விக்ரம், திகைப்பு நீங்காதவனாய்,

“அங்கிள்!… நீங்கச் சீரியஸ்ஸா தான் சொல்றீங்களா? இவனுங்க ரியல் எஸ்டேட் மாபியா, ஆள்கடத்தல், போதை மருந்து இதில் மட்டும் தானே இருக்காங்க என்று நினைத்தேன். அந்த ஆன்லைன் துப்பாக்கி வர்த்தகம் கூட இப்போ ஆரம்பித்தது தானே!…” என்றான்.

“ஆன்லைன் வர்த்தகம் இப்போ தான் கொண்டு வந்திருக்கான் விக்ரம். ஆனால், ஆயுத கடத்தல், ஆட்கடத்தல் தான் இந்தக் குழுவில் முக்கிய வருமானம்.  மாபியாவில் பல வகை இருக்கு விக்ரம்.

போதை மருந்து மாபியா, ஹியூமன் ட்ராபிக்கிங் ரிங், பாலியல் தொழில், நீல பட மாபியா, மெடிக்கல் மாபியா, ஆயுத வர்த்தக மாபியா, ரியல் எஸ்டேட், ransom ரிங், கனிம வள கடத்தல், சுரங்க தொழில், மீடியா, சைபர் கிரைம் என்று இதில் எல்லாம் வருமானத்தை ஈட்ட முடியுமோ அதில் எல்லாவற்றிலும் ஈடுபடுவார்கள். diversing the source என்ற பதம் கேள்விப்பட்டது இல்லையா நீ?…” என்றார் பல்தேவ். 

“அதுக்குன்னு தீவிரவாதிங்க கூடச் சேர்ந்துட்டு, பொது மக்களை, ராணுவத்தை கொல்வதெல்லாம் எப்படி அங்கிள்?”என்றான் விக்ரம்.  

“எப்படின்னா!… இப்படி தான். மனிதமே இல்லாதவனுங்ககளுக்கு பொதுமக்கள் என்ன, பாதுகாப்பு துறையாய் இருந்தால் என்ன?… ஓஹ்!… நீ பைனான்ஸ்  பக்கம் மட்டுமே இதுவரை இருந்தவன் இல்லையா!… இதுவரை நீ  வெள்ளையாய் மாற்றிய பணம் எல்லாம் மேலே சொன்ன, ஏதாவது ஒரு நிழல் உலக தொழிலிலிருந்து தான் வந்தது.     

எத்தனை அப்பாவி பொதுமக்கள் இறக்கிறார்கள், எத்தனை குடும்பங்கள் சிதைத்து போகிறது என்பதெல்லாம் இவனுக்கு முக்கியமே இல்லை. ஜாதி, மதம் என்ற முகமூடியின் பின் ஒளிந்து கொண்டு, தங்கள் வெறியை தீர்த்துக் கொள்ளும் சில கேடுகெட்ட ஜென்மங்களுக்கு, உலகில் உள்ள பல சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு ஆயுத சப்ளை செய்யும் புரோக்கர் இவன். 

பணம் மட்டுமே இவன் மதம்.

 ‘தன்னை மிஞ்சிக் கூட வேறு யாருக்கும் எதுவும் இருக்க கூடாது’ என்பது தான் இவன் சமயம். 

‘தான்’ என்பது மட்டுமே இவன் கொள்கை.

இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத குண்டு வெடிப்புகளுக்குப் பின், உள்ள ஆயுதங்களை வழங்கியதில் இவனும், இவன் தந்தையும் தான் இருக்கிறார்கள். இந்தியாவிற்குள் சத்தமே இல்லாமல் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும், ஆயுத விற்பனை, ஆயுத கடத்தல், குண்டுவெடிப்பிற்கு பின் இருப்பவர்கள் இந்தக் குழுவினர் தான்.

வீச்சரிவா, வேல்கம்பு, கல்லு கொண்டு போராடியவர்களை அப்டேட் செய்வது போல் அவர்கள் கையில் ஆயுதங்களைக் கொண்டு சேர்த்த வேலை  செய்வது, துப்பாக்கி, ஆயுத கலாச்சாரத்தில் இந்தியாவை உலகில் ரெண்டாம் நிலையில் வைத்திருப்பது, கொத்து கொத்தாய் இந்திய ராணுவத்தினர் அங்கங்கே கன்னி வெடி, தூப்பாக்கி சூட்டில் இறக்க காரணம் கூட இவர்கள் ரெண்டு பேரும் தான்.

அந்த மாடல் கம்பெனி ஆள் ஒருவன் கிட்டே அத்தனை ஏ.கே   47 இருந்ததற்கும், அதை வைத்து மத கலவரம் உண்டாக்க முயன்ற சிலருக்கு பின்னால் இருந்தது இந்தச் சைக்கோ தான்” என்றார் பல்தேவ். 

தினம் தினம் செய்திகளில்  கேள்விப்பட்டு, பரிதாபத்துடன் ஒரு கணம் வருந்திக் கடந்த செய்திகள் தான் இவை.

எங்கோ கலவரத்தில், குண்டுவெடிப்பில் அப்பாவி பொது மக்கள்,  தாக்குதலில் ராணுவ வீரர்கள் இறப்பதின் பின் உள்ள ஆயுத கலாச்சாரம் என்பது பொது மக்கள், ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று கடந்து போகும் விஷயம் தான் என்றாலும், இந்த அரக்கன் பள்ளிகளையும், கல்லூரிகளையும், பொது இடங்களையும் தன் வேட்டை தளமாக மாற்ற வெகுநாள் ஆகாது என்பதே நிதர்சனம்.    

யாரோ, எங்கோ பாதிக்கப்படும்போது இவை வெறும் செய்தியாகக் கடக்க முடிந்த விக்ரமால், தான் எந்தக் குழுவின் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொண்டிருக்கிறோமோ, அந்தப் பணம் கறுப்பு நிற பணம் அல்ல. சிகப்பு நிற பணம்.

பலர் ரத்தத்தில் குளித்த பணம்.

பல குடும்பங்களைச் சத்தம் இல்லாமல் சிதைத்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ‘ஆயுதம் என்ற அரக்கனின் கோர பசிக்கு’ கிடைத்த பணம் என்பது தெரிந்ததும், தலை சுற்றி போனது.

கிணறு வெட்ட ஒற்றை பூதம் அல்ல, பூத படையே கிளம்பி கொண்டிருந்தது.

வெகுநேரம் கேள்வி பட்ட செய்தியின் தாக்கம் குறையாதவனாய் அமர்ந்திருந்த விக்ரம், 

“இதைத் தடுக்க நீங்க எதுவும் செய்யலையா அங்கிள்?…” என்றான் விக்ரம் 

“நானா?…” என்றார் பல்தேவ் திகைப்புடன்.

“ஆமா அங்கிள் நீங்களே தான். இது தீவிரவாதம் அங்கிள். தாதா, ரவுடியாய் இருப்பது வேறு. இப்படி தீவிரவாதிகளுக்குத் துணை போவது என்பது வேறு அங்கிள்.” என்றான் விக்ரம்.

வாய் விட்டு நகைத்த பல்தேவ், “ரொம்ப சினிமா பார்ப்பாயா விக்ரம்? சின்னக் குழந்தை மாதிரி பேசிட்டு இருக்கே!…

முதல் விஷயம் இந்த மாபியா குழுவில் நான் ஒரு அங்கம் அவ்வளவு தான். நானே இந்தக் குழு கிடையாது. நூற்றுக்கணக்கான, ‘replaceable partடில்’ நானும் ஒருவன் அவ்வளவு தான். இந்தப் பல்தேவ் போனால், இன்னொரு சங்கரதேவ் வருவான். என்னால் லாபம் இருக்கும் வரை, இவர்களுக்கு நானும், எனக்கு இவர்களும் வேண்டும் அவ்வளவு தான். தேவையில்லையென்றால் அழிச்சுட்டு போயிட்டே இருப்பாங்க.

ரெண்டாவது இது எல்லாம் சத்ருஜித், ஜோக்ராஜ் நேரடி கண்காணிப்பில், அவனுடைய நம்பிக்கையான ஆட்களைக் கொண்டு நடப்பது. ஒரு டிரக் டிரைவர்ராக இந்தக் குழுவில் இருக்கிறாய் என்றால், அந்த வண்டியில் இருப்பது பூவா, போதை பொருளா, உயிருள்ள மனிதர்களா இல்லை உயிரை எடுக்கப் போகும் ஆயுதங்களா என்பதெல்லாம் தெரியாது. complete blanket of operations.

சரி டிரக் கதவைத் திறந்து பார்க்கிறேன் என்று ஹீரோ வேலை எல்லாம் செய்ய முடியாது. பக்கா பக்கா  finger vein, palm print, face recognition, iris scanner, voice command, ear acoustics என்று ஆறுகட்ட பாதுகாப்பு biometric பாதுக்காப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்.

விற்கும் சத்ருஜித், வாங்குபவனின் biometrics மட்டுமே ஏற்றுக்கொள்வது மாதிரி செக்யூரிட்டி செட்டிங் இருக்கும்.  இன்னும் அட்வான்ஸ் பாதுகாப்பில், ரத்த மாதிரி கூடக் கேட்கும். gps ட்ராக்கிங்,  cctv கேமரா என்று ஆயிரம் இருக்கு இதில்.

முன், பின் பாதுக்காப்பு படை அந்த வண்டியில் இருப்பவர்களுக்கே தெரியாமல் தொடரும். ஏதாவது பிரச்சனை என்றால் டிரக் வெடிக்க வைக்கப்படும்.

மூன்றாவது அந்தச் சத்ருவும், ஜோக்ராஜூம் செய்யப் போறதை எல்லாம் என்னிடம் பகிர்ந்துட்டு, என்னுடைய பர்மிசன் வாங்கிட்டு இதையெல்லாம் செய்வதில்லை. இதுபோல் தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு, ‘grapevine  rumor, underworld chatter’  என்று சொல்வார்கள்.  இதன் மூலம் வதந்திகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவுகின்றன. அதன் மூலமாக வந்து சேரும் தகவல்கள் தான் இவை. 

இதற்குச் சௌர்ஸ், ஆதாரம், சாட்சி எல்லாம் இருக்காது. சில சமயம் போலியான தகவல்களைச் சில குறிப்பிட்ட ஆட்கள்மூலம் பகிர்ந்து, குழுவில் இருக்கும் ஆட்காட்டியை இனம் காணவோ, பொய்யான பிம்பத்தை உருவாக்கவோ பயன்படும். 

ஐந்தாவது நானும் ஒரு கிரிமினல் . நானும் பல குற்றங்கள் செய்து இருக்கிறேன்.  You scratch my back and  I’ll  scratch  yours   என்பதை நீ கேள்விப்பட்டதில்லையா ?… 

இவர்களுக்கு எதிராக நான் திரும்பினால், ஒட்டுமொத்த குழுவும் எனக்கு எதிராகத் திரும்பி விடும். இவர்கள் கறுப்பு பக்கத்தை நான் வெளி சொன்னால், என் குற்றங்களை இவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

தவிர ஏற்கனவே இந்தக் குழு இன்டெலிஜென்ஸ் துறை கண்காணிப்பில் தான் இருக்கிறது. சோ நான் எதையும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை விக்ரம்.” என்றார் பல்தேவ்.

‘இவர்  சொல்வதும் உண்மை தான். பல குழுவில் ஒவ்வொரு வேலைக்கும் என்று தனித்தனி ஆட்கள் இருப்பார்கள். ஒட்டுமொத்த குழுவில் என்ன நடக்கிறது என்பது அந்தத் தலைவனைத் தவிர பிறர் அறிய மாட்டார்கள் தான்.  இதுபோல் பொய்யான தகவல்களும் பரப்பப்படும்.

தொன்னூறு சதவீதம் தாக்குதலை யார் செய்தார்களோ அந்தக் குழுவே, ‘நாங்கள் தான் செய்தோம்’ என்று அறிக்கையும் விடுவார்கள். இந்தக் குழுக்கள் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற தகவல் ஏற்கனவே ஒவ்வொரு நாட்டின் இன்டெலிஜென்ஸ் துறையிடம் இருக்கும்.

ஒரு சம்பவம் நடப்பதற்கு முன் தகவல் சொன்னால், அதனால் அது நடக்காமல் தடுக்கலாம். நடந்து முடிந்த ஒன்றுக்கு, பொறுப்பு ஒரு குழு ஏற்றப் பிறகு, அந்தக் குழுவின் பின்னால் இருப்பவரைப் பற்றித் தகவல் தெரிந்த பிறகு, எந்தச் சாட்சியும், ஆதாரமும் இல்லாமல்  கைகாட்டுவதால் மட்டும் என்ன பயன்?’ என்று எண்ணி பார்த்த விக்ரம்,            

“ஜோக்ராஜ் இப்போ குழுவில் ஆக்ட்டிவ்வாக இல்லையா என்ன ?” என்றான் விக்ரம். 

“ஆக்ட்டிவ்வாக இல்லையா!… ரொம்பவே ஆக்ட்டிவாகத் தான் இருக்கிறார். ஆனால், என்னவொன்று அவர் ஆக்ட்டிவாக இருப்பது குழுவில் இல்லை. படுக்கையறையில்.” என்ற பல்தேவ் வார்த்தையைக் கேட்டு, விக்ரம் முகம் அஷ்டகோணலாய் போனது.  

“கடந்த பத்து வருடங்களாய் ஜோக்ராஜ் இந்தக் குழுவைச் சரியாகக் கவனிப்பதில்லை. மது, மாது, போதை என்றே இருப்பதால், சத்ருஜித் வைத்தது தான் சட்டமாய் இருக்கிறது. ஆனால், எதைச் செய்வதாக இருந்தாலும் அந்தக் கிழத்தின் அனுமதிக்காகக் காத்திருப்பது சத்ருஜித்தை கோபப்படுத்தி உள்ளது. அப்பாவுக்கும் மகனுக்குமே மோதல். Internel politics.

அது அமெரிக்காவில் சார்லி விஷயத்தில் ஜோக்ராஜ் செய்து வைத்த  குளறுபடியில் பிளவு அதிகமாகி இருப்பதாய் கேள்வி.” என்று பேசிக் கொண்டே இருந்தவர், சட்டென்று அமைதியானார்.

பல்தேவ் ஒரு கண்ணைக் கணினி திரையின் மேலேயே வைத்திருந்ததால், சத்ரு வந்ததும் உடனே அமைதியாகி விட்டார்.

பல்தேவும், விக்ரமும்  ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருப்பதை கண்டால், ‘உங்களுக்குள் பேச யார் அனுமதி கொடுத்தது?’ என்று அதற்கு வேறு காய்ந்து எடுப்பான்.  

நாற்காலியில் பொத்தென்று சத்ரு அமர்ந்து, லேப்டாப்பை தன்னை நோக்கி நகர்த்த, அவனுக்குப் பின்னால் விரிந்த காட்சியைக் கண்டு பல்தேவும், விக்ரமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சத்ருஜித்துக்கு பின்புறம், பாக்சிங் ப்ராக்டிஸ் செய்யும் பைக்குப் பதில், அங்கே தொங்கி கொண்டிருந்தான் பரணி.

அப்பொழுது தான் பொரித்து எடுத்த பூரியினை போல், முகம் வாங்கிய அடிகளால் உப்பி போயிருக்க, பரணியின் பெற்றோர், அவன் மனைவி இப்பொழுது அவனைப் பார்த்தால் கூட அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு, அவன் முக அமைப்பை முழுவதுமாய் மாற்றி, பரணியை   நார், நார் நாராக்கி தொங்க விட்டிருந்தான் சத்ருஜித்.  

முகம் முழுக்க பரணியின் ரத்தம் தொளித்து இருக்க, ஏற்க்கனவே அரக்கனாய் இருக்கும் சத்ருஜித், நிஜ அரக்கன் போலிருந்தான்.

ஒரு மனிதனின் உடலில் எத்தனை எலும்புகளை உடைக்க முடியுமோ, அத்தனையும் உடைத்து, ரத்த ஆறு ஓட வைத்திருந்தான்.

ஒரு பக்கம் பரணி ரத்த வெள்ளத்தில் நடுங்கி கொண்டு இருக்க, சத்ருஜித் கோபத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பல்தேவும், விக்ரமும்.பல்தேவ் கையில் வழக்கம்போல் ஹவானா சுருட்டு புகைந்து கொண்டிருக்க, விக்ரம் கையில் வைன் கிளாஸ் இருந்தது.

 சத்ருஜித்தின் இந்தக் கோபம் அடங்கச் சில பல மணி நேரமாய் காத்து இருக்கிறார்கள் இருவரும். அந்தக் கோபம் அப்போதைக்கு அடங்குவதாகத் தெரியவில்லை. 

அதற்கு மேல் அடித்து, பரணியின் உயிர் போய் விட்டால், அடித்து விளையாட வேறு ஆள் கொண்டு வர வேண்டுமே என்பதால், தெளிய வைத்து, தெளிய வைத்து அடித்துக் கொண்டிருக்கிறான்  என்பது பல்தேவிற்கும், விக்ரமிற்கும் புரிந்து போனது.  

பரணியை துவைத்து எடுத்தது போதாது என்று தன் வீட்டினையும் நாசம் செய்திருந்தான். சத்ருஜித் கோபம், அவன் இருந்த அறையின் மீதும் திரும்பியிருக்க,  சூறாவளி சேதப்படுத்திய அறைபோல் காட்சி அளித்தது அந்த அறை. அந்த அறையில் இருந்த நாற்காலி, பொருட்கள், அடுக்கி வைக்கப்பட்ருந்த மது பாட்டில்கள், கட்டில் மேஜை எல்லாம் துவம்சம் செய்யப்பட்டிருந்தது.

தரையில் ஒரு டைல்ஸ் மிஞ்சவில்லை. சுவர் எல்லாம் ஒரு கார் உள்ளே வரும் அளவுக்கு அடித்தே உடைக்கப்பட்டு பாதி சுவர் காணாமல் போயிருந்தது.

 

கடந்த நான்கு மணி நேரத்தில், ஆறு ரூம்களுக்கு மேலே உடைத்து தள்ளி விட்டான் சத்ருஜித். அப்பொழுதும் அவன் கோபம் அடங்கவில்லை.

தொடர்ந்து தோல்வி. தோல்விமேல் தோல்வி. தோல்வியே கண்டிராதவனை தோற்கடித்து கொண்டிருந்தான் தேஜ்.

அதற்கு மேல் உடைக்க எதுவும் இல்லையோ, நான்கு மணி நேரமாய் அடித்து உடைத்த பிறகு சோர்வு வந்ததால் நிறுத்தினானோ, அவன் பார்வைக்கு பணிந்து, உடையாமல் இருந்த ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டார்கள் அவன் ஆட்கள்.

கையில் மது கிண்ணத்துடன், அரை குறை ஆடையுடன் வந்த பெண்ணை இழுத்து தன் மடி மேல் அமரச் செய்தவன், அந்தப் பெண்ணிடம் தன் கோபத்தை காண்பிக்க, விக்ரம் அந்த அழைப்பைத் துண்டித்தான்.

“ஏன் விக்ரம்… அதுக்கும் அவன் ஏதாவது கத்துவான்.”  என்றார் பல்தேவ் பெருமூச்சுடன்.

“அவன் அந்தரங்கத்தை பார்த்தாலும், இங்கே என்ன நீல படமா ஓட்டிக் காண்பிக்கிறேன் என்று எகிறுவான். அதுக்கு இதுவே மேல். என் கண்ணு நல்லா இருக்கணும் என்று நினைக்கிறேன் அங்கிள். கண்ட கருமத்தை எல்லாம் பார்த்து உங்க கண்ணை வேண்டும் என்றால் கெடுத்துகோங்கோ. என்னால் முடியாது. நான் வேண்டும் என்றால் கொஞ்ச தூரத்தில் நிற்கிறேன்…” என்றான் விக்ரம்.

“எனக்கு மட்டும் என்ன தலையெழுத்தா என்ன!… அவனே திரும்பவும் வீடியோ காலில் வரட்டும். பாவம் அவன் கையில் சிக்கிய அந்தப் பெண். உயிரோடு இருப்பாளா என்பதே சந்தேகம் தான்.” என்றார் பல்தேவ் விட்டேத்தியாக.

விமானத்தின் ஒரு புறம் பல்தேவ்வும், விக்ரமும் சத்ருஜித்துடன் பேசக் காத்திருக்க ஆரம்பித்த அந்த நொடியில்,   அதே விமானத்தில் இருந்த இன்னொரு உருவமொன்று  யார் கவனத்தையும் கவராமல், மெல்ல நடந்து கழிவறைக்குள் புகுந்தது.    

அந்த உருவம் விக்ரம் மடியில் வந்தமர்ந்து, அவனுக்கு முத்தம் கொடுத்து, தன் நம்பரையும் கொடுத்த விமான பணிப்பெண்ணான அதே பார்பி பொம்மை தான்.

கதவை மூடித் தாளிட்டவள், அங்கிருந்த வாஷ்பேசின் மேல் ஏறி நின்று,   அங்கிருந்த வென்டிலேஷன் தடுப்பை திறந்து அதிலிருந்த பை ஒன்றை வெளியே எடுத்தாள்.

அந்தப் பைக்குள் இருந்தது மிகச் சிறிய லேப்டாப் ஒன்றும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த SATELLITE PHONE ஒன்றும். அதை எடுத்து ஆன் செய்தவளுக்கு, வெளியே விக்ரம் கணினியில் உள்ள வீடியோ அழைப்பு அவள் கணினியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.   

‘அழகி’ என்று விக்ரமால் அழைக்கப்பட்ட அந்தப் பார்பி பொம்மை தான், ‘அழகிய ஆபத்து’ என்று நிரூபித்துக்கொண்டிருந்தாள்.

அன்று ரோமாபுரி சாம்ராஜ்யம் ரத்த குளமாய் மாறியதற்கு, இன்று நேபாள மன்னனின் அரச குடும்பம் அழிவுக்கும் காரணம் இதே அழகிகள் தான்.

ஆதி மனிதன் ஆதம் தொடங்கி, இந்த நொடிவரை உலகில் பல மரணங்களுக்குக் காரணம் அழகிகள் தான்.

சாக்ரடீஸ் குடிச்ச விஷமான, ‘ஹெம்லாக்’ கை விட மிகக் கொடிய விஷம் ஒரு ஆணின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெண்ணின் அழகு தான். இந்த அழகென்ற விஷம் தாக்கியதால், தாக்கத்தை ஏற்படுத்திய பெண்ணிற்கான மூண்ட போர்கள் ஏராளம்.

அந்த விமானத்திற்குள்ளும்  ஒரு போரினை தான், அந்த அழகி செய்துகொண்டிருந்தாள் யாருக்கும் தெரியாமல். விக்ரம் லேப்டாப்பில் உள்ள வீடியோ அழைப்பு, அவள் கையில் இருந்த லேப்டாப்பிற்க்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்க, அதன் மூலம் வேறு இடங்களுக்கும் நேரிடை ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்தது.

இதற்காகத் தான் விக்ரமோடு ஒட்டி, உரசி , இழைந்து இவள் உறவாடியதோ!   

அழகோடு சேர்ந்த பெண்மையானது ஆக்கச் சக்தியும் அது தான். அழிவு சக்தியும் அது தான்.  ஒரு மனிதனின் ஆதியும் பெண்மை தான், அவன் தீய  வழி செல்லும் போது, அவனைத் தீயாய், அந்தமாக்கி விடுவதும் பெண்மை தான்.  

யாரின் ஆயுதம் இந்த அழகு பதுமை? 

checkmate!  

இதைப் பற்றி அறியாத பல்தேவ், விக்ரம் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.   

“பரணியை உயிரோடு விடுவானா?” என்றான் விக்ரம் வெகுநேரத்திற்கு பிறகு.

“சான்ஸ் ரொம்ப கம்மி விக்ரம். அவன் ஒருவித சைக்கோ. மனநலம் பாதிக்கப்பட்டவனை விட இவன் மிக மோசமானவன். நமக்கெல்லாம் இன்னும் கொஞ்சமாவது மனிதம் மிஞ்சி இருக்கிறது. கொலையைக் கூட மற்றவர்களுக்கு வலிக்காத மாதிரி ஒரே புல்லட்டில் கொடுத்து விடுவோம். சத்ரு இருக்கிறானே!… தோ ஒரு மனிதனை எந்த அளவுக்குப் பிசிக்கலா டார்ச்சர் செய்ய முடியுமோ அது அத்தனையும் செய்து இருக்கான்.”என்றார் பல்தேவ் பெருமூச்சுடன்.   

“உங்களை விடவா?…” என்றான் விக்ரம் நக்கலாக.

“இவனும், இவங்க அப்பாவும் சைக்கோ தனத்திற்கு யூனிவர்சிட்டி. நான் எல்லாம் இன்னும் ஏபிசி கூடத் தெரியாதவன் என்று சொல்லலாம். அப்பனையும் மிஞ்சிய பிள்ளையாய் பிறந்து இருக்கான். மனிதம், இரக்கம், கருணை என்பதெல்லாம் துளி கூட இல்லாதவன்.” என்ற பல்தேவ் குரலில் லேசான நடுக்கம் ஓடியது.

‘பல்தேவ் என்ற  பேய்யையே பயமுறுத்தும் அந்த அரக்கர்கள் இருவரும் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள்.’ என்பது தான் விக்ரம் மனதில் ஓடியது. அதற்கான ஆதாரம் மீண்டும் வீடியோ அழைப்பு வரும் போதே கிடைக்கும் என்று விக்ரம் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

 ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வீடியோ அழைப்பிற்குள் வந்தான் சத்ருஜித். 

அழைப்பை ஏற்றப் பல்தேவ், விக்ரம் ஒரு நொடி கண்ணால் காண்பதை நம்ப முடியாதவர்களாக ஸ்தம்பித்து இருக்கையின் நுனிக்கே வந்தார்கள்.  

சத்ருஜித்தின் ஷூ  கால் ஒரு பெண்ணின் குரல் வளை மேல் அழுத்திக் கொண்டிருந்தது. அவன் காலடியிலிருந்து விடுபட அந்தப் பெண் போராடி கொண்டிருந்தாள்.   

அதைக் கண்டு விக்ரமின் உடல் விறைக்க, அவன் கை முஷ்டி இறுக, அவனைக் கையை டேபிளுக்கு அடியில் அழுத்திக் கொடுத்தார் பல்தேவ்.

கோபத்துடன் பல்தேவை விக்ரம் பார்க்க, டேபிளுக்கு அடியில் இருந்த அவரின் இன்னொரு கைமுஷ்டி விக்ரமை விட இறுகி இருந்ததை கண்டவன், பல்தேவ் ப்ரமப்ரயத்தனம் செய்து தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.

அந்தப் பெண் எதையோ பேச, சத்ருஜித் அந்தப் பெண்ணை நோக்கிக் குனிந்த சமயம், அழைப்பை மியூட் போட்டு விட்டு, “அங்கிள்!…” என்று கோபத்துடன் ஆரம்பித்தவனை தலையசைப்பால் நிறுத்திய பல்தேவ், சத்ருஜித் கவனம் இங்கில்லை என்பதை கண்டு,

“ரியாக்ட் ஆகாதே!… நாம் அந்தப் பெண்ணிற்காக எதையாவது சொன்னோம் என்றால், அந்தப் பெண்ணை இன்னும் வதைப்பான். இப்பொழுது நாம் செய்வது எதுவும் இல்லை விக்ரம். இது நம்மை நடுங்க வைக்க, நம்முள் பயத்தை வரவழைக்க அவன் எடுக்கும் ஒரு நடவடிக்கை. 

அவனை எதிர்த்து நிற்கக் கூடாது என்ற மறைமுக எச்சரிக்கை. மீறுபவர்களுக்கு, பரணி மாதிரி அவனுக்குத் தோல்வியைக் கொண்டு வரும் நம் குழு ஆட்களின் வீட்டு   பெண்களுக்கும் இதே கதிதான் என்று சொல்லாமல் சொல்கிறான். இது ஒரு மாதிரியான மைண்ட் கேம். ரியாக்ட் ஆகாதே!… அந்தப் பெண் துடிப்பதை பார்க்காதே!…. அவனே அலுத்து போய் விட்டு விடுவான். நாம் ரியாக்ட் ஆனால் இன்னும் தொடர்வான்.” என்றார் பல்தேவ் கோபத்துடன். 

“உங்களுக்கு எப்படி தெரியும்?…”என்றான் விக்ரம் கோபம் இன்னும் அடங்காமல்.

“தெரியும்… ரொம்பவே நன்றாகவே தெரியும்…” என்று நீண்ட பெருமூச்சை விட்டவர், 

“உன்னைப் போல் ரியாக்ட்  ஆகி, உணர்ச்சி வசப்பட்டதன் விளைவு, இன்று அந்தப் பெண் உயிரோடு இல்லை. இது மாதிரி அவன் நடப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கிறாயா?…  நான் நல்லவன் இல்லை தான். ஆனால், இதுபோல் உயிரை வதைக்கும் அளவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவன் இல்லை. ரியாக்ட் ஆகாதே விக்ரம்… அந்தப் பெண்மேல் உன் பார்வை பதிக்காதே!… உன் மனிதம் அந்தப் பெண்ணைக் கொன்று விடும்.” என்ற பல்தேவ் குரலில் எச்சரிக்கை மிக அதிகமாகவே இருந்தது.

அதை லைவ் ரிலேவாகப் விமானத்தின் பாத்ரூமிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விமான பணிப்பெண், அதற்கு மேல் தாங்க முடியாமல் குமட்டி கொண்டு வர, வாஷ்பேஸினில் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.   

அதே போல் இது எல்லாவற்றையும் சென்னையில் ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து லைவ் ரிலேவாகப் பார்த்துக் கொண்டிருந்த தேஜ் கண்கள் கோபத்தில் சிவந்தது.

கை  இறுக்கத்தின் விளைவாகக் கைகள் முஷ்டிகள்  வெளுக்க, அவன் அணிந்திருந்த சட்டையையும் மீறிக் கைப்புஜங்கள் புடைக்க ஆரம்பித்தது.

‘bloood shot eyes’ என்று சொல்லப்படும் கோபத்தில் கண்கள் நிஜமாய் சிவந்து, அதிலிருந்து கண்ணீர் வழிய, உடல் உள்ளே பற்றி எரியும் தீயில் நடுங்க அமர்ந்திருந்தான் தேஜ்.

அடுத்த நொடி டாஷ்போர்டின் மிகுந்த விசையுடன் கை முஷ்டி சென்று மோதியது.

காரை ஒட்டிக் கொண்டிருந்த இன்னொருவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அடுத்த முறை டாஷ்போர்டின் மீது தேஜ்ஜின் கை மோதுவதற்குள் தடுத்து நிறுத்தினான் தன் கையால்.    

“தேஜ்!… ரிலாக்ஸ்… எங்களுக்கும் அந்தச் சத்ருவையும், அந்த ஜோக்ராஜ்ஜையும் கண்டம் துண்டமாய் வெட்டிப் போடத் தான் உள்ளே தவிக்குது. கையில் கிடைக்கும்போது அவனைக் கவனித்து கொள்வோம். இப்போ ரிலாக்ஸ் மேன்… இப்படி அவனுங்க செய்யும் எல்லாத்துக்கும் கோப பட்டுட்டே இருந்தால், நம் இதயம் தான் பலவீனமாகும். கோபம் அறிவினை மழுங்கடித்து விடும். இப்படி கோப பட்டு உடம்பை கெடுத்து கொண்டால் எல்லாம் சரியாகும் என்று சொல்லு. நானும் கோபப்படறேன்… ரிலாக்ஸ்…” என்றான் அருகில் இருந்தவன்.

அருகில் இருந்தவன் பேசப் பேச, தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தேஜ், அங்கே நடப்பதை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தான் .  

அவனின் கோபம் காலம் காலமாய் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் லட்சம் எரிமலைகளின் குமுறல். வெடிக்க தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கோபமே அவனை இயக்கும் ஆத்ம சக்தி.

குமுறும் எரிமலையின் வெப்பத்திற்கே சத்ருஜித், ஜோக்ராஜ் குழு ஆட்டம் கண்டிருந்தது. ஐம்பது வருட நிழல் உலா சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தின் ஒவ்வொரு செங்கற்களாய், பலர் பல கால கட்டத்தில் உடைத்து கொண்டிருந்தார்கள் என்றாலும், தேஜ் என்பவனின் செயல்கள் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்க ஆரம்பித்திருந்தது.

‘உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்டாய்…’ என்பது போல் தந்தையும், மகனும் ஒருவருக்கொருவர் குழியைத் தோண்டி கொண்டு கொண்டு அவர்களாவே பள்ளத்தில் இறங்கி கொண்டிருந்தனர். அவர்கள் வெளியேறும் எல்லா வழியையும் அடைத்து, உதவ நீளும் கரங்களைத் தடுத்து கொண்டிருந்தான் தேஜ்.           

“ஒருத்தனை கூட உயிரோடு விடமாட்டேன்… விடமாட்டேன்…விடவே மாட்டேன்…” என்ற தேஜின் கர்ஜனை அந்தக் கார் முழுவதும் எதிரொலித்தது.

தேஜ் சென்னையின் இன்னொரு புறம் காருக்குள் குமுறி கொண்டிருக்க, பல்தேவ் சொன்னது சரியென்பதை நிரூபித்துக்கொண்டிருந்தான் சத்ரு. பல்தேவ், விக்ரமிடம் எவ்வித   ரியாக்ஷன் இல்லாததை கண்ட சத்ருஜித், கையசைக்க, அவன் ஆட்களில் ஒருவன், அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினான். 

அர்த்தம் பொதிந்த பார்வையொன்றை விக்ரம் மேல் வீசினார் பல்தேவ்.

“எப்படி இது நடந்தது?” என்றான் அவன் இன்னும் கோபம் தனியாதவனாக.

என்னவென்று பதில் சொல்வார் பல்தேவ் 

“பாய்!…” என்று இழுத்தார் பல்தேவ்.

“கோபப்பட மாட்டேன் சொல்லு பல்தேவ்.” என்றான் சத்ரு.

“பாய்!..  உங்களுக்கே தெரியும்.உங்க அப்பா தான் தமிழக பொறுப்பை எல்லாம் பரணியிடம் கொடுக்கச் சொல்லிட்டு, எங்களை அமெரிக்கா பக்கம் டேமேஜ் கண்ட்ரோல் செய்ய அனுப்பியது.

கிட்டத்தட்ட நான்கு வருடமாய் தமிழக தொழில்கள் பற்றிய எந்த விவரமும் பரணி எங்களிடம் சொன்னது இல்லை. நாங்க உங்க கிட்டே எத்தனையோ முறை கெஞ்சினோம் பாய். பரணிக்கு இந்தத் தொழிலின் நெளிவு, சுளிவு எல்லாம் தெரியாது என்று…” என்றார் பல்தேவ் தயக்கத்துடன்.

“அந்தக் கிழவன் வர வர லூசா மாறிட்டு இருக்கு.” என்றான் சத்ரு தன தாடையை தடவிய படி.

“மாமா வேலை பார்ப்பவனுக்கு எல்லாம், அவன் செய்யும் மாமா வேலை சிறப்பாக இருக்கிறது என்று ஒட்டுமொத்த தமிழக பொறுப்பைக் கொடுத்தால்…” என்று பல்தேவ் புலம்பியது சத்ரு காதில் விழவே செய்தது.

“எதிரியை என்றுமே அண்டர்எஸ்டிமேட் செய்யக் கூடாது பாய். அமெரிக்காவிலும் பீட்டர் இதையே விஷயத்திலும் இதையே தான் செய்தார் என்பது உங்களுக்கே தெரியும். நம்ப கூடாதவனை நம்பினார்.

 எல்லாம் இழந்து, கடைசி நொடியில், ‘முழுகும் கப்பலைக் காப்பாற்று’ என்று இங்கே இருந்து எங்களை அங்கே அனுப்பி விட்டு, இங்கே இதில் ஓட்டை விழ வைத்து விட்டார்.

உங்க அப்பா, சார்லி மனைவியைப், பீட்டரை வைத்துத் தூக்கி இருக்க கூடாது. அந்தப் பெண் இத்தாலி நாட்டின் மிகப் பெரிய மாபியா குழு தலைவனின் மகள். 

உங்களுக்கே தெரியும் இத்தாலியில் தற்போது செயல்பட்டு வரும்  ஐந்து பெரிய  மாஃபியா அமைப்புகள், சிசிலியின், ‘கோசா நோஸ்ட்ரா’, என்ட்ராங்கெட்டா (ஐரோப்பாவின் மிகப்பெரிய கோகோயின் கடத்தல்காரர்கள்)  நேபிள்ஸின், ‘கமோரா’, ரோமின், ‘பண்டா டெல்லா மாக்லியானா’, மாலா டெல் ப்ரெண்டா, பண்டா டெல்லா கோமாசினா, மிலனின், ‘துராடெல்லோ’ க்ரூ. இவங்க அத்தனை பேருக்கும்  செல்லப் பெண்  சார்லி மனைவி. 

அந்தப் பெண்ணைப் பீட்டர் வைத்துக் கடத்தியதும் இல்லாமல்,  அந்தப் பெண்ணின் இறப்பிற்கு காரணமாகவும் ஆகி விட்டார் உங்க அப்பா.  இப்போ அந்தக் கத்தி நம் மேல் பாயத் தயாராய் இருக்கிறது. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு உங்கள் மேலும், உங்க அப்பா மேலும் சார்லிக்கு சந்தேகம் வராமல்  பார்த்துக் கொண்டேன்.

ஆனால், உங்க அப்பா அதை எல்லாம் உடைப்பது மாதிரி இதன் பின்னால் இருப்பவனோடு நட்பில் இருக்கும் விஷயம் சார்லி காதுக்குப் போய் இருக்கு. இத்தனை நாள் நாம செய்த டேமேஜ் கன்ட்ரோல் எல்லாம் வீண்.” என்றார் பல்தேவ் கடுப்புடன்.    

‘பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை இது இல்லாத மனிதன் உலகில் யாரும் இல்லை.    

பெண்ணாசை, மண்ணாசையால் விளைந்தது பாரதம்

பெண்ணாசையால் விளைந்தது ராமாயணம் 

பொன்னாசையால்  உலகில் நேர்ந்து கொண்டிருப்பது பல போர்கள், படையெடுப்புகள், முற்றுகைகள்.    

சலனம், சபலம், காமம், குரோதம், பேராசை  என்று எல்லாம் சேர்ந்த தலைமை, வலுவான சாம்ராஜ்யங்களையே வேரோடு சாய்த்து இருக்கிறது என்பதை வரலாறு எத்தனை முறை திரும்பத் திரும்பப் பாடமாய் மண்டையில் அடித்துச் சொல்வது போல்  சொன்னாலும், மனித அறிவு, அழிவு பாதையில் செல்வதை நிறுத்துவதில்லை.

‘மதிக்கெட்ட மனதிற்கு கடிவாளம் இடாவிடில் அது அடிப்பட்டு மிதிப்பட்டு விதிவயப்படும்’ என்பதற்கு அந்தக் குழு அழிந்து கொண்டிருப்பதே சான்று.

பெண்ணாசையால் இந்த மாபியா குழு  முற்றிலும் சிதைய, சிதைக்கப்பட ஆரம்பித்திருந்தது.   

அழிவுக்கான அஸ்திவாரத்தை பல வருடங்களுக்கு முன்பிருந்தே ஜோக்ராஜ், சத்ருஜித் போட்டு இருக்க, இனி அந்தக் கோட்டையைத் தகர்க்க பல பக்கத்திலிருந்து பல ஆயுதங்கள் குறி வைக்க ஆரம்பித்து விட்டது. 

  ஆட்டம் தொடரும். 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!