ஆழி சூழ் நித்திலமே 21(1)

IMG-20200530-WA0010-5ba3aed3

ஆழி சூழ் நித்திலமே 21(1)

20

 

வாழ்க்கையும் ரயில் பயணம் போலதான். நிறைய நிறுத்தங்கள், நிறைய வழிதட மாற்றங்கள், விதவிதமான மனிதர்களோடு தொடரும் பயணங்கள், சில நேரங்களில் விபத்துகளும் கூட…

அனைத்தையும் ரசித்தபடி தொடர்வதுதான் வாழ்க்கை. பாதியில் நிறுத்தவோ இறங்கவோ முடியாத… கூடாத… பயணம் அது.

நித்திலா தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையில் பொருந்திப் போக முயன்றாள். அதற்கு கயல் பெரிதும் உதவியாய் இருந்தாள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அவளின் அன்றைய அழுகையும் கண்ணீரும் ஆயாவையும் வெகுவாய் அசைத்திருந்தது. இருவருக்கும் திருமணம் முடிந்த சூழலை புரிந்து கொண்டவர் புது பேத்தியையும் தங்கமாய் தாங்கிக் கொண்டார்.

முதல் நாளே இவர்களது உணவின் காரம் தாங்காமல் அவள் அவதியுற, அவளுக்கென பார்த்துப் பார்த்து சமைப்பதில் துவங்கி, அவளுடைய வசதிகள் எதுவும் குறையாமல் பார்த்துக் கொள்வது வரை மூவருமே அவளைத் தாங்கினர் என்றுதான் சொல்ல வேண்டும்.

லேசான காரம்கூட தாங்காமல் நித்திலாவுக்கு முகமும் உதடுகளும் சிவந்துவிட,

 “ஆயா, இன்னாத்துக்கு இம்மாம் காரமா சட்னி அரைச்சினுக்கற நீ? பாரு அவுங்களுக்கு மூஞ்சி எப்புடி செவந்து போச்சுன்னு” தைய்யா தக்காவன குதித்தவனை முறைத்தபடியே சர்க்கரையை எடுத்து வந்து நித்திலாவின் வாயில் போட்டவர்,

“அத்தத் தொட்டுக்கினுத்தான பத்து இட்லிய முழுங்குன நீயு? மொளவு தூக்கலா போட்டு மீன் குழம்பு வைய்யுன்னு இனி சொல்லு, வாயில மொளகாயத் தேய்க்கிறேன்.”

ஆயாவின் பேச்சில் அவ்வளவு வாய் காந்தலிலும் நித்திலாவுக்கு சிரிப்பு வர, “நீங்கலாம் எப்பவும் போல சாப்பிடுங்க பாட்டி. எனக்குதான் காரம் அலர்ஜி. நான் சர்க்கரை கூட தொட்டு சாப்பிட்டுக்குவேன். எங்க வீட்ல தேங்காய் சட்னிக்குக்கூட நான் சர்க்கரை கலந்துதான் சாப்பிடுவேன்” என்க,

 அதன்பிறகு எந்த நேரமும் வீட்டில் இனிப்பு வகைகள் தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக்  கொள்வான் பாரி.

“ஸ்வீட்ஸும் கேக்கும் ஐஸ்க்ரீமும் வாங்கி குடுத்தா எங்கக்கா சொத்தே எழுதி வைப்பா மாமா” என்று நிகிலேஷ் கூறியதன் விளைவு பாரி வீட்டு ஃபிரிட்ஜ் இனிப்பு வகைகளாலும் ஐஸ்க்ரீமாலும் நிறைந்தது.

மற்றவர்களை விட கயலோடு பழகுவது நித்திலாவுக்கு எளிதாய் இருக்க, இயல்பாய் இருவரது பிணைப்பும் இறுகியது.

இப்போதெல்லாம் இளம் பெண்களுக்கு திருமணத்திற்கு முன் சமையல் கற்றுத் தர வேண்டுமென்று அவசியமில்லை. யூடியூப்பைத் திறந்தால் ஆயிரம் சேனல்கள். உலகின் எந்த நாட்டு உணவாகினும் அதன் செய்முறைகள் கொட்டிக் கிடக்கின்றன.

அடிப்படை சமையல் அறிவும் ஆர்வமும் இருந்தால் போதுமானது. கயலுக்கு நித்திலா யூடியுப்பை அறிமுகப்படுத்த, அதிலிருந்து நித்திலாவுக்கும் கயலுக்கும் புதுப்புது உணவுவகைகளை சமைத்துப் பார்ப்பதே பொழுதுபோக்காய் போனது.

அவர்களது உணவுமுறை இவளுக்கு ஒவ்வாமல் போக, இவளது உணவுமுறைக்கு அவர்கள் மெல்ல மெல்ல மாற முயன்றனர்.

எவ்வளவுக்கெவ்வளவு பாரி கடின உழைப்பாளியோ அந்தளவுக்கு வீட்டில் சுகவாசி. அவனை அப்படி பழக்கி வைத்திருந்தாள் கயல். உண்ணும் தட்டைக்கூட எடுத்துப் போடவிடாமல் சேவகம் செய்து அவள் அவனை பழக்கி வைத்திருக்க,

பாரியோ நித்திலா காலையில் குளிக்கத் தேவையான தண்ணீரை எடுத்து வைப்பதில் துவங்கி, இரவு அவளது படுக்கையைத் தட்டி விரிப்பது வரை இயல்பாய் செய்ய கயல்தான் அதிசயித்துப் போவாள்.

“என் மாமாவுக்கு இந்த வேலையெல்லாம் செய்யத் தெரியும்னே எனக்கு இப்பதான் தெரியுதுக்கா. உங்க மேல எம்புட்டு இஷ்டம்! எப்புடி செய்யுது பாருங்களேன்!” என்று அதிசயிக்க, நித்திலாவுக்கோ கடுப்பாய் வரும்.

 ‘இவனென்ன இதையெல்லாம் செய்து என்னை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கிறானா?’ மனதுள் பொருமியவள் அதையே அவனிடம் கேள்வியாக்கினாள்.

இரண்டு கைகளிலும் இரண்டு குடத்தில் தண்ணீரைத் தூக்கி வந்து பின்கட்டில் இருந்த பாத்ரூமினுள் வைத்தவனைப் பார்த்தவள் வெகு கடுப்பாக,

“எதுக்கு இப்ப இவ்வளவு சீன் போடுற? இதையெல்லாம் நானே செஞ்சுக்க மாட்டேனா? என்ன என்னை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றியா?”

“இம்ப்ரஸ்னா…?” அவளது கோபத்தை பொருட்படுத்தாமல் வார்த்தைக்கு அவன் அர்த்தம் கேட்க மேலும் கடுப்பானவள்,

“இந்த வேலையெல்லாம் எனக்கு செய்து கொடுத்தா நான் மயங்கிடுவேனா? அப்படியே உன் மேல ஆசை வந்திடுமா? என்ன பழைய சினிமாலாம் பார்த்துட்டு இப்படி ட்ரை பண்றியா? ரொம்ப கேவலமா இருக்கு இந்த ஐடியா.

இனிமே உன்னோட வேலைய மட்டும் நீ பாரு. எனக்கு எதுவும் நீ செய்ய வேணாம்.” அவனிடம் காய்ந்து வைக்க,

“ஏங்க உங்கப்பா உங்களுக்கு பார்த்து பார்த்து எல்லாமே செய்வாரே, அவரென்ன உங்களை இம்ப்ரஸ் பண்றதுக்கா செஞ்சாரு?”

“எங்கப்பாவும் நீயும் ஒன்னா?”

“சத்தியமா இல்லிங்க. உங்கப்பா போல என்னியால பார்த்துக்க முடியுமானு தெரியலீங்க. அவருகூட சந்தோஷமா நிம்மதியா இருந்த உங்களுக்கு கஷ்டமெல்லாம் வந்ததே என்னாலதான?”

“…”

“நடந்த எதையுமே என்னால மாத்த முடியாதுதாங்க. ஆனா உங்களுக்கு இதெல்லாம் செய்யறது ஏதோ ஒருவிதத்துல என் மனசுக்கு ஆறுதலா இருக்குங்க.”

“ஆனா, எனக்கு ரொம்ப கடுப்பாகுது. இனிமே செய்யாத” கத்தரியாய் வந்தது வார்த்தைகள்.

“நானு கடலுக்கு போனாக்கா  பத்து பதினைஞ்சு நாளுகூட வூட்டாண்ட வரமாட்டேன்ங்க. அப்பலாம் நீங்கதானங்க செஞ்சுக்குவீங்க.

இப்ப வூட்ல சும்மாதான குந்திக்கினுக்கீறேன் அதான் நான் செஞ்சுதரேன்.”

“…”

   “அதுவுமில்லாம உங்க வூட்ல குழாய திருகினா நல்ல தண்ணி வரும். இங்க அப்புடியில்ல வூட்டு வாசலாண்ட போயி புடிக்கனும்.

 குடமெல்லாம் தூக்கி உங்களுக்கு பழக்கமிருக்கோ இல்லியோ? இதெல்லாம் நீங்க பழகிக்கிற வரைக்கும் நான் செய்யறேனேங்க.” என்றபடி குடத்தோடு அவன் நகர,

‘உண்மைதான் தெருக்குழாயில் பெண்களோடு போட்டியிட்டு சண்டை போட்டு தண்ணீர் பிடிக்கும் அளவுக்கு தனக்கு சாமர்த்தியம் பத்தாதுதான்’ எண்ணிக்கொண்டவள் அவனது பதிலில் சற்று அமைதியானாள்.

எப்போதுமே கடலை வேடிக்கை பார்ப்பது அவளுக்குப் பிடித்தமான ஒன்று. அவளது வீட்டில் பால்கனி ஊஞ்சல்தான் அவளது ஆஸ்தான இடம். அங்கே அமர்ந்து கையில் ஹார்லிக்ஸோடு கடலை வேடிக்கை பார்ப்பது அவளைப் பொறுத்தவரை சொர்க்கம்.

அவளது வீட்டைவிட இங்கே கடல் வெகு அருகாமையில் இருக்க, அந்த ஒருவிஷயமே அவளுக்கு அந்த வீடு மனதுக்கு சற்று நெருக்கத்தை தந்தது.

சிலபல அடிகள் எடுத்து வைத்தாலே கடலில் கால் நனைத்து விடலாம். வாசலில் வந்து நின்றாலே கடல் காற்று அள்ளிக்கொண்டு போகும்.

போதாக்குறைக்கு வீட்டின் வராண்டாவில் வாசலைப் பார்த்தவாறு கூடை ஊஞ்சல் ஒன்றையும் வாங்கி பாரி மாட்டி வைக்க,

‘எனக்கு ஊஞ்சல் பிடிக்கும்னு இவனுக்கெப்படித் தெரியும்’ என்று யோசனையாய் பார்த்துக் கொண்டாலும் அவளுக்கு வெகுவாய் பிடித்த இடமாகிப் போனது அது.

காலையிலேயே கயல் போட்டுத் தரும் காபியோடு, அந்த ஊஞ்சலில் அமர்ந்து கடலை ரசித்தவாறு, ஆயாவின் இட்லி வியாபாரத்தையும் அங்கே வந்து போகும் மக்களின் உரையாடல்களையும் பார்ப்பதும் கேட்பதும் நித்திலாவின் பொழுதுபோக்காய் போனது.

இதுநாள்வரை தூரத்தில் பார்த்து ரசித்திருந்த நித்திலாவை, தற்போது அவளது கவனத்தை ஈர்த்துவிடாதபடிக்கு அருகே பார்த்து ரசிப்பது பாரியின் வழக்கமாய் போனது.

சிறுசிறு விஷயங்களுக்குக் கூட சண்டையிட்டு வாக்குவாதம் செய்யும் அம்மீனவ மக்கள், பெரிய பிரச்சனைகளில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையாய் இருப்பது ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

ஒருவருக்கொருவர் உறவு முறையிட்டு அழைப்பதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் உதவியாய் இருப்பதும் என அவர்களது பிணைப்பு  அவளை வெகுவாய் ரசிக்கவும் வைத்தது.

தன் தந்தையின் உடன் பிறந்த சகோதரியே தங்களுக்குக் கெடுதலை நினைத்திருக்க, ரத்த சம்பந்தமே இல்லாத இவர்கள் பாரிக்காக உயிரையே தரும் அளவுக்கு பிரியமாய் இருப்பதும், அவர்களுக்கு ஏதேனும் சிறு பிரச்சினை என்றாலும் இவன் வரிந்து கட்டிக்கொண்டு செல்வதும் வியப்பாய்தான் இருந்தது அவளுக்கு.

அம்மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய என்று எண்ணிக் கொள்வாள். எவ்வளவு உழைத்தாலும் படிப்பறிவு குறைவாய் இருப்பதாலேயே இவர்களின் முன்னேற்றம் குறைவாய் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டாள்.

அடுத்த நாள் மாலையில் வெற்றியும் வீட்டுக்கு வந்திருக்க, நித்திலாவோடு சற்று சகஜமாகப் பேசியவன் முன்தினம் விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதிற்காக வருத்தம் தெரிவித்திருந்தான்.

வெற்றியோடு பேசாமல் முறுக்கிக் கொண்டு திரிந்த பாரியைக் கண்டு கொள்ளாமல் நித்திலா மற்றும் கயலோடு நன்கு பேசிக் கொண்டிருந்தவன்,

 “பாரி, கோச்சிக்கிட்டு இருக்கியா? கோச்சுக்கோ கோச்சுக்கோ…” என கலாய்த்தும் வைக்க, புன்னகையைப் பூசிக்கொண்ட நித்திலாவின் முகம் நிறைவை அளித்தது வெற்றிக்கு.

நினைத்த மாத்திரத்தில் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட முடியும் தூரமும், ஒரு ஃபோன் போட்டதும் உடனே வந்து நிற்கும் தம்பியும் என இருக்க, அவர்களைப் பிரிந்து வந்த ஏக்கம் எதுவும் பெரிதாய் அவளைத் தாக்காததால், சற்று இயல்பாக அந்த வீட்டில் பொருந்திப் போக முயன்றாள்.

 பாக்கியலஷ்மியும் இடையில் ஒருமுறை மகளைப் பார்க்க பாரியின் வீட்டுக்கு வந்தவருக்கு, நித்திலாவை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்ளும் சொந்தங்கள் வாய்த்ததில் பெரும் நிறைவு. அது அவரது உடல்நிலையிலும் பிரதிபலிக்க வெகுவாய் தேறியிருந்தார்.

பாரியும் அவளுக்கானத் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வானே ஒழிய, அவளைப் பார்வையில் தொடர்வதைத் தவிர்த்து அநாவசியமாய் அவளிடம் பேச முயல்வதோ வழிவதோ உரிமையை நிலைநாட்டுவதோ என்று இல்லாததால் அவளால் இயல்பாய் இருக்க முடிந்தது.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு விடுமுறை தினங்கள் முடிவுக்கு வர, ஓரிரு தினங்களில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று நித்திலா கூறவும், அன்றே அவளுக்காக தங்கத்தில் தாலிக்கொடி வாங்கி வந்தவன்,

“இத்த போட்டுக்கோங்கங்க, காலேஜ்க்கு போறப்ப கழுத்துல வெறும் மஞ்ச கயித்தோட போவ முடியாதுல்ல.” என்றபடி நீட்ட…

கயலோ, “இன்னா மாமா கையில நீட்டுற? கழுத்துல போட்டுவுடு மாமா. நாளும் நல்ல நாளாக்கீது. நாங்கலாம் உன் கண்ணாலத்தைப் பாக்கவே இல்ல. இப்பயாச்சும் பாக்கறோமே.”

என்றபடி இருவரையும் சாமி மாடத்தின் முன் அழைத்துச் சென்று நிற்க வைத்து அந்த தாலிச்செயினை அவன் கையால் நித்திலாவின் கழுத்தில் போடச் செய்ய, ஆயாவுக்கும்  மனம் ஆனந்தமாய் இருந்தது.

“நல்லாயிருன்னு சொல்லு ஆயா” என்றபடி பாரி ஆயாவின் கால்களில் விழ அந்த முதியவளின் உள்ளம் நிறைந்தே போனது. உடன் நித்திலாவும் கால்களில் விழ,

“நல்லாயிரும்மா… நல்லாயிருய்யா… நூறாயுசு நல்லாயிருக்கனும்” வாழ்த்தி அணைத்துக் கொண்டவருக்கு கண்ணில் ஆனந்தக் கண்ணீர் மழைதான்.

இதே போல தன் பேத்தி கயலுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டால் போதும் என்ற வேண்டுதலைத் தவிர வேறில்லை அவருக்கு.

சாடைமாடையாக கயலிடம் பேசிப் பார்த்தவருக்கு கயலின் மௌனமே பதிலாகக் கிடைக்க, பாரியிடமும் சொல்லியிருந்தார்.

“இருபது வயசு முடியட்டுமேன்னு யோசிச்சேன் ஆயா. நீ கயலாண்ட கேட்டுக்கினு சொல்லு நான் உடனே மாப்ள பாக்க ஆரம்பிக்கிறேன்” என்று பாரி கூறியிருக்க,

 பேத்தியின் மனநிலையை அறிய நித்திலாவைத்தான் நாடினார்.

“ரெண்டு பேரும் ஒன்னுமன்னா பழகுறிங்க. எம்பேத்திகிட்ட கண்ணாலத்துக்கு சம்மதமான்னு கேட்டு சொல்லும்மா. நான் கேட்டா வாயவே தொறக்க மாட்டேங்குது. அது ஒத்துக்கிச்சின்னா மாப்ள பார்க்கலாம்.” 

எதிர்பார்ப்பை கண்களில் தேக்கி கேட்டவரிடம், “நான் கேக்கறேன் பாட்டி. கயலுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணலாம். நீங்க கவலைப்படாதீங்க”

  ஆசுவாசப்படுத்தியவள்,  அன்றே கடற்கரையில் காலார நடந்தபடி கயலிடம் பேச்சைத் துவக்கியிருந்தாள்.

Leave a Reply

error: Content is protected !!