ஆழி சூழ் நித்திலமே 3 (அ)

 

                   ஆழி …3

 

 

 

திருவான்மியூர் கடற்கரைக் குப்பம்…  வேம்புலி அம்மன் கோயில் தெரு… ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்ட சற்று பழைய கட்டிடம் ஒன்று மீனவர் சங்கக் கட்டிடமாய் இருந்தது. 

நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் மகேந்திரன் அமர்ந்திருக்க,  அவரோடு அவர் வயதை ஒத்த சிலரும் அமர்ந்திருந்தனர். 

அவர்களுக்கு இடது புறமாக முகத்தில் கடுப்பும் கண்களில் அலட்சியமும் வழிய சூசையை பார்த்தபடி அமர்ந்திருந்தான் பாரி.  அவனருகே அவனுக்குத் துணையாய் இருப்பதைபோல இருபுறமும் ஞானவேலும் வெற்றிவேலும் அமர்ந்திருக்க,   அவர்களுக்கு எதிர்புறமாய் கண்களில் கொலைவெறியோடு பாரியை முறைத்தபடி சூசை அமர்ந்திருந்தான். 

மீனவர்களில் பல்வேறு சங்கங்கள் உண்டு. விசைப்படகு, கட்டுமரம்,  துடுப்புப்படகு ஆகியவற்றை  வைத்து சிறிய அளவிலான வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள்,  பெரிய அளவு படகு வைத்து மடிவலை உபயோகித்து மீன் பிடிப்பவர்கள் என்று அவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து சங்கங்கள் உண்டு. 

இதில் டேவிட் சிறிய அளவிலான விசைப்படகு வைத்திருப்பவன்.  ஆனால்,  சூசையோ பெரிய அளவு இயந்திரப் படகு வைத்து மீன் பிடிப்பவன். இருவருமே வெவ்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள். சூசையிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்த டேவிட்டால் திருப்பித் தர முடியாததால் வந்து தகராறு செய்து கொண்டிருந்தான் சூசை. 

மீனவர்களைப் பொறுத்தவரை உழைத்தால் மட்டுமே அவர்களுக்கு உணவு. உழைக்க முடியாத சூழலில் கடன் வாங்கியோ இருப்பதை அடமானம் வைத்தோதான் பிழைப்பை ஓட்டுவர். கந்துவட்டிக் கொடுமை இவர்களிடையே வெகு அதிகம்.

சூசையிடம் அவசரத்துக்கு டேவிட் கடன் வாங்கியிருக்க, கராறாக வசூலிக்க வந்த இடத்தில் பிரச்சனையாகி அடிதடியாகியிருந்தது. 

பஞ்சாயத்து கூடியிருக்க,  சமாதானம் பேச  அனைத்து  மீனவர் சங்க நிர்வாகிகளும் அங்கே குழுமியிருந்தனர்.  மகேந்திரன்  தமிழ்நாடு மீனவர் சங்கத் தலைவராய் இருப்பதால் அவரிடம் அந்த பஞ்சாயத்து வந்திருந்தது. கசகசவென்று ஆளாளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க,  அந்த இடமே சத்தமாய் இருந்தது. 

“எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க. ஆளாளாளுக்குப் பேசினா நாங்க எதுக்கு இங்க வந்திருக்கோம்.”  மகேந்திரனின் அரட்டலான குரலில் கூட்டம் சற்று அமைதியாக.  சூசையைப் பார்த்தவர்,

“என்ன பிரச்சனையா இருந்தாலும் நீ சங்கத்து மூலமா தீர்த்திருக்கனும். அதைவிட்டு அடிதடியில இறங்குனது தப்பு. அதுவுமில்லாம இதுவரைக்கும் நம்ம பிரச்சனையில போலீசு நுழைஞ்சதில்ல,  ஆனா நீ நம்ம ஆளு மேலயே போலீஸ்ல புகார் குடுத்திருக்க. இதுக்கு என்ன விளக்கம் குடுக்கப் போற சூசை.”

“நான் பண்ணது ராங்குன்னா… என்னை பாரி அடிச்சது ராங்கில்லையாமா?  என்னாய்யா நியாயம் இத்து?  குடுத்த காசை வசூல் பண்ண போன இடத்துல வோணும்னே நடுவால பூந்து ராங்கா என்னைய அட்ச்சது அவந்தான். அதான் அவம் பேர்ல பிராது குடுத்தேன்.” திமிராக வந்தன வார்த்தைகள். 

“என்னா சூசை…யாராண்ட பேசற யோசன பண்ணி பேசு. ஐயாட்ட  மருவாதையா இருக்கனும். உம்பாட்டுக்குப் பேசாத.”  வயதானவர் ஒருவர் கண்டிக்க,  சற்று அமைதியானான்.  சங்கத்துப் பெரியவர்களைப் பகைத்துக் கொண்டால் தொழில் செய்வதே சிரமமாகிப் போகும் என்று தெரியும் அவனுக்கு. 

“நேத்தைக்கு என்னா நடந்துச்சின்னு தெளிவா சொல்லு பாரி.” என்று ஒருவர் பாரியை கேட்க,  சூசையை முறைத்தபடி முந்தின நாள் நிகழ்ந்த நிகழ்வுகளைக் கூறத் துவங்கினான். 

டேவிட்டை யாரோ அடிக்கிறார்கள் என்று கேட்டதும் விரைந்து பாரி டேவிட்டின் வீட்டை அடைந்திருந்த போது, டேவிட்டின் இரு குழந்தைகளும் வெளியே நின்று அழுது கொண்டிருக்க,  சிறிய அளவிலான சரக்கு வண்டியில் வீட்டின் சாமான்கள் ஏற்றப்படுவதை கையாலாகாத்தனத்தோடு பார்த்திருந்தான் டேவிட். அருகே அவன் மனைவி அழுகையோடு நின்றிருந்தாள். 

“இன்னாடா… இன்னா பிரச்சனை இப்போ? என்னா சூசை யாரு இடத்துக்கு வந்து யாராண்ட பிரச்சனை பண்ணிக்கினுக்கீற நீ”

“தோடா… வந்துட்டாரு நாட்டாமை. தோபாரு பாரி இத்து உனக்குத் தேவையில்லாத ஆணி. அத்த நான் புடுங்கிக்கிறேன். நீ ஒத்து அப்பால.”

“எங்குப்பத்துக்குள்ள வந்து எங்கிட்டேவா? ஆணியப் புடுங்கறதா வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீ பிரச்சனையச் சொல்லு.”

    “அவன் என்னாண்ட கை நீட்டி துட்டு வாங்கிக்கிறான். அசலும் வர்ல வட்டியும் வர்ல. குடுத்த டைம் முடிஞ்சி போச்சி. அதான் பொருளுங்களை ஏத்திக்கினுக்கீறேன். அதுக்கு இன்னா இப்ப?”

எந்த பிரச்சனை என்றாலும் முன்னிற்கும் பாரியைக் கண்டால் கடுப்பு சூசைக்கு. எரிச்சலாகவே பதிலிருத்தான். 

“ஏன் டேவிட்டு? எதுக்கு பணத்தை அவனுக்குத் திருப்பிக் குடுக்கல?  காச வாங்குனா ஒழுங்கா திருப்ப வேணாமா நீயி.”

“இல்ல பாரி, புள்ளைக்கு உடம்பு முடியலன்னு தனியார் ஆசுபத்திரியில சேர்த்தேன்ல,  அப்பதான்  சூசையாண்ட  துட்டு வாங்குனேன். 

புள்ள கூடவே அலைஞ்சிக்கினு வைத்தியம் பார்த்துக்கினு கடலுக்குப் போ முடியல பாரி. வட்டிக்காசக் குடுக்கலன்னு வந்து வலையவும் தூக்கினு போயிட்டான். ரெண்டு மாசமா கடலுக்குப் போக தடையாவும் பூடுச்சி.  என்னால எதுவும் செய்ய முடியல பாரி. இன்னும் ரெண்டு மூணு மாசம் டைம் குடுத்துப்புட்டா எப்டினாச்சும் திருப்பிப் புடுவேன்.”

விட்டால் அழுது விடும் மனநிலையோடு இருந்தவன் பாரி கேட்கவும் கடகடவென ஒப்பித்தான். வலை இருந்தாலாவது ஆழ்கடலுக்குச் செல்லாவிட்டாலும் துடுப்புப் படகை எடுத்துச் சென்று கரையோரம் மீன் பிடிக்கலாம்.  வலையையும் பிடுங்கிக் கொண்டு பணத்தை எடுத்து வை என்றால் என்ன செய்வது. 

ரேஷனில் கொடுக்கும் இலவச அரிசி மட்டும் இல்லை என்றால் பிள்ளைகளின் பசி தீர்க்கக்கூட வழியில்லை. பணக்காரர்களுக்கு வரவேண்டிய நோயெல்லாம் ஏழைகளுக்கு வந்தால் வைத்தியம் பார்க்க முடிகிறதா? அதற்காக பிள்ளை எப்படியோ போகட்டும் என்று விடத்தான் முடிகிறதா?

 கடனை உடனை வாங்கியாவது பிள்ளையைக் காப்பாற்றத்தான் துடிக்கிறது மனம். பிள்ளை கொஞ்சம் தேறி வந்ததும் கடலுக்குச் செல்லலாம் என்று நினைக்கையில் அரசின் மீன்பிடி தடை காலம் துவங்கிவிட சுத்தமாய் முடங்கிப் போனான் டேவிட். 

டேவிட்டின் நிலை பரிதாபத்திற்குரியதாய் இருக்க, சூசையை ஏறிட்ட பாரி, 

“அதான் இவ்ளோ சொல்றான்ல. அத்த வுடு சூசை. பணத்தைக் குடுத்துப் புடுவான். எங்க போய்டப் போறான். இதே குப்பத்துலதான இருப்பான்.  வலையவும் நீ வாங்கி வச்சிக்கினா அவன் பொழைப்பு எப்டி ஓடும் சொல்லு?”

“அத்தல்லாம் அவனுக்கு நெறையா தபா டைம் குடுத்தாச்சி. அவன் பணத்தைத் திருப்பித் தர்றா மாதிரி தெரியல. உன் வேலய மட்டும் நீ பாரு. இதுல தலையிடாத. நீயா அவனுக்கு பத்தி பணம் குடுக்கப் போற?”

எவ்வளவு நேரம் வாதிட்டும் சூசை தன் பிடியிலிருந்து இறங்காததால் கடுப்பானவன், “இப்ப என்னா? உனக்குப் பணம்தான வேணும்? நான் குடுக்கறேன்.” என்றவன் டேவிட்டிடம் திரும்பி, “எம்மாந் தரனும்டா இவனுக்கு?”

“லட்ச ரூவா வாங்கியிருந்தேன் பாரி. ஆறு மாசத்துக்கு அரை லட்சம் வட்டி போட்ருக்கான்.”

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ஜெட் வட்டி என்று வட்டிக்கு விடுபவர்கள் கூறும் வட்டிக் கணக்கை கேட்டால் நமக்கு மயக்கமே வந்துவிடும். இம்மாதிரி ஆட்களிடம் மாட்டாமலிருப்பது நல்லது. அப்படியே அவசரத்துக்கு வாங்கியிருந்தாலும் அசலோடு பணத்தைக் கொடுத்து தலை முழுகுவது மிகவும் நல்லது. 

அவசரத் தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்கும் என்பதே மக்கள் சூசையைப் போன்றவர்களின் வலையில் விழக் காரணம். கந்து வட்டிக் கொடுமை தாளாமல் அழிந்து போன குடும்பங்கள் கணக்கிலடங்காதவை. 

மிகுந்த எரிச்சலோடு சூசையைப் பார்த்தவன், அருகே இருந்த குடிசையில் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்த தேவாவின் தங்கை செல்வியை அழைத்தான். 

“இந்தா செல்வி… ஜரூரா ஊட்டாண்ட ஓடிப் போயி கயலு அக்காகிட்ட நான் பணம் வாங்கியாறச் சொன்னேன்னு சொல்லிக்கினு வாங்கியா.”  ஏவியவுடன் சரிண்ணே என்றபடி சிட்டாய் பறந்திருந்தாள். 

காலையில் வந்ததும் பாரி கொடுத்திருந்த பணத்தை சாமி மாடத்தில் வைத்திருந்த கயல், செல்வி வந்து கேட்டதும் மறுபேச்சின்றி எடுத்துக் கொடுத்தாள். 

இந்தமட்டும் பஞ்சாயத்து பணத்தைக் கொடுத்து முடித்தால் தேவலை என்று இருந்தது அவளுக்கு. சிறு குப்பம்தானே! அங்கே டேவிட் வீட்டில் நடப்பவை உடனுக்குடன் அவளுக்குத் தெரிந்தபடிதான் இருந்தது. 

எங்கே மாமன் அடிதடியில் இறங்கி விடுவானோ என்று உள்ளூர பதைபதைப்புடன் இருந்தவள், செல்வி வந்து பணத்தைக் கேட்டதும் எடுத்துக் கொடுத்திருந்தாள். 

செல்வி கொண்டு வந்து கொடுத்த பணத்தில் சரியாக ஒன்றரை லட்சத்தை எண்ணி எடுத்தவன் டேவிட்டிடம் கொடுத்து கடனை பைசல் பண்ணச் சொன்னான். டேவிட் கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்த பத்திரங்களையும் சரிபார்த்து வாங்கிக் கொண்டான். 

பணத்தை வாங்கிக் கொண்ட சூசை தனது ஆட்களுடன் கிளம்பப் பார்க்க,

 “இந்தா நில்லு சூசை. துட்டு வாங்குனதும் நடையக் கட்டுனா எப்படி? டேவிட்டு வூட்ல இருந்து அள்ளிப் போட்ட ஜாமானெல்லாம் கொண்டு போயி உள்ளாற வச்சிட்டு, அவனான்ட  அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுக்கினு அப்பாலிக்கா கிளம்பு.”

“ஏது? யாராண்ட இன்னாப் பேசற? நானு மன்னிப்பா? போடாங்…”  என்றபடி கிளம்ப முற்பட்டவனின் குறுக்கே வலது கையை நீட்டியவன், “மன்னிப்புக் கேக்காம இங்கேருந்து ஒரு அடி நவுர முடியாது நீயி.” இடது கையால் மீசையை முறுக்கியபடிக் கூற, 

“டேய் பாரி, தோபாரு வீணாண பிரச்சனை பண்ணிக்கினுக்கற நீ. இப்ப நான் என்ன அவம் பொண்டாட்டி கையப் புடிச்சா இழுத்தேன் மன்னிப்பு கேட்க சொல்ற.”

சூசை வார்த்தைகளை முடிக்கும் முன், “ஓ… உனக்கு அம்மாந் தகிரியம் இருக்கோ. பொம்பளப் புள்ள மேல கை வச்சிட்டு இந்தக் குப்பத்தைத் தாண்டி உசிரோடப் போயிடுவியோ நீ.” என்றபடி பளிச் பளிச்சென்று அறைந்திருந்தான் பாரி.

சூசையின் பேச்சு அங்கிருந்த அனைவருக்குமே கோபத்தை ஏற்படுத்தியிருக்க,  அனைவரும் சூசையையும் அவனது ஆட்களையும் எதிர்த்து ஒன்று கூடியிருந்தனர்.  வேறு வழியின்றி டேவிட்டின் வீட்டிலிருந்து வெளியே வீசியிருந்த பொருட்களை தனது ஆட்களை ஏவி உள்ளே எடுத்து வைத்தவன் டேவிட்டிடமும் மன்னிப்பு கேட்டிருந்தான். 

பாரி அறைந்த அறையில் உதடுகள் கிழிந்து இரத்தம் வழிய நின்றிருந்தவனுக்கு மனம் ஆறவேயில்லை. ‘காகாசுக்குப் பொறாத பயகிட்ட என்னைய மன்னிப்புக் கேக்க வச்சதுமில்லாம,  என்னைய கைநீட்டி அடிச்சுப்புட்டானே’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டவன்,

 “எம்மேல கை வச்சிட்டல்ல,  உன்னை என்ன பண்றேன்னு பாரு.” அடிபட்ட புலியாய் உருமியபடி சென்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டான். 

புகாரை விசாரிக்க வேண்டும் என்று பாரியை அழைத்துப் போக போலீஸ் வந்த போது அந்த குப்பமே தடுத்து நின்றது. உடனடியாக பாரியை கைது செய்ய போலீஸ் வந்த தகவல் ஞானவேலுக்கும் வெற்றி வேலுக்கும் சொல்லப்பட… 

  அடுத்த அரைமணி நேரத்தில் உள்ளூர் தாதா ஒருவனாலும், அந்த ஏரியா எம்எல்ஏவாலும் சூசை எச்சரிக்கப்பட,  வேறு வழியின்றி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியிருந்தான் சூசை. அடுத்த நாள் காலையிலேயே மீனவர் சங்க கட்டிடத்தில் பஞ்சாயத்து கூடி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

பாரி சொல்லி முடித்ததும் அவர்களுக்குள்ளே நிறைய சலசலப்புகள் இருந்தன. சிலருக்கு பாரி செய்தது சரி என்று தோன்றினாலும் அடித்தது தவறு என்று பேசினர். சிலரோ சூசை போன்ற ஆட்களுக்கு அப்படி கொடுத்தால்தான் அடங்குவர் என்றும் வாதிட்டனர். 

அனைத்தையும் பொறுமையாக கேட்ட மகேந்திரன் பேசத் துவங்கினார். 

“பாரி அடிச்சது தப்புதான். நான் ஒத்துக்கறேன். ஆனா, யாராயிருந்தாலும் வீட்டுப் பொம்பளைங்களைத் தப்பாப் பேசினா கோபம் வரும். நியாயமா டேவிட் கொடுத்திருக்க வேண்டிய அடி அது. 

டேவிட்கிட்ட சூசை நடந்துக்கிட்டது சுத்தமா சரியில்ல. நம்ம ஆளுங்க நமக்குள்ளவே உதவி செஞ்சுக்காம இப்படி வசக்க நினைச்சா எப்படி?  வலையப் புடுங்கி நீ வச்சுக்கிட்டா அவன் எப்படிடா தொழில் செய்வான்? எப்படிடா சாப்புடுவான்?

வட்டிக்கு விடறது உன் தொழில்னா அதை நியாயமா செய்யி. அதை விட்டு அநியாய வட்டி போடறதும், கொடுக்க முடியலைன்னா மிரட்டி பொருளுங்களைப் பிடுங்கறதும் சரியா? 

சூசை, நீயும் மீன்பிடி தொழில்தான் செய்யற. மீனவர் சங்கத்துல உறுப்பினராவும் இருக்க. போன தடவை ஓக்கி புயல் வந்தப்ப உன்னோட படகும் அதுல போன ஆளுங்களும் காணாம போனப்ப யாரு உனக்கு உதவி செய்ய வந்தது.  யாரு உன் படகை கண்டுபிடிச்சு கொடுத்தது?”

மௌனமாய் தலைகுனிந்தவன், “பாரி” என்று முனக.