ஆழி சூழ் நித்திலமே 6(ஆ)

ஆழி சூழ் நித்திலமே 6(ஆ)

எதைஎதையோ யோசித்து மனம் ஒரு நிலைக்கு வந்திருந்த போது வலை இழுக்கப் பட்டு போட்டின் மேல் பகுதியில் மீன்கள் குவிக்கப்பட்டிருந்தது. சிறிதும் பெரிதுமாய்த் துள்ளிய மீன்களை வகை பிரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். 

அவ்வளவுதான்… கரைக்குத் திரும்ப வேண்டியதுதான். இம்முறை கடலுக்குள் வந்ததில் மீன்பாடு நன்றாகவே இருந்தது. படகும் கரைக்குத் திரும்பும் திசையை நோக்கி மெல்ல நகரத் துவங்கியது. 

சுடச்சுட டீ எடுத்து வந்து பாரியிடம் நீட்டினான் தேவா. தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டவன், வெற்றிக்காக மற்றொன்றை எடுத்துக் கொண்டு வெற்றி நின்றிருந்த இடத்துக்கு வந்தான். 

“வெற்றி… இந்தா எடுத்துக்கோ.”

பாரியை கடுப்போடு முறைத்தவன் திரும்பிக் கொள்ள, “அடப் புடிடா. என்னை அந்த காய்ச்சு காய்ச்சி எடுத்துப்புட்டு நீ முறுக்கிக்கினு நிக்கற. புடி…” 

அவனது கைகளில் டீ கிளாஸைத் திணித்தவன், ஆரஞ்சுப் பந்தாய் சிவந்து கடலுக்குள் மூழ்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தான். வெற்றியின் பார்வையும் அதே திசையில்தான் இருந்தது. 

“வெற்றி…”

“…”

“வெற்றி… ம்ப்ச், பேசுடா.”

“…”

“நீ சொல்லி இம்மானாளும் நான் எத்தையாவது கேக்காம இருந்திருக்கேனா? நான் பண்ணது தப்புதான். புரியுது. இனி பண்ண மாட்டேன். போதுமா? பேசுடா…”

“…”

“டேய் கயல நான் குறைச்சுலாம் நினைச்சதே இல்லடா. அது என் அம்மா மாதிரிடா. என்னிக்கும் கயலு மனசு கஷ்டப்படற மாதிரி எதுவுமே செய்ய மாட்டேன்டா. என்னை முழுசா நம்பு வெற்றி.”

பாரியின் வார்த்தையில் திரும்பி அவனை ஆழ்ந்து பார்த்தான் வெற்றி.

“இன்னும் இன்னாடா வேணும் உனக்கு? மூஞ்சிய முழ நீளத்துக்குத் தூக்கி வச்சினுக்கிற? அந்தப் பொண்ணே நேர்ல வந்து என் எதுக்க நின்னாக்கூட நான் அத்த பாக்க மாட்டேன் போதுமா? நம்புடா…”

“நம்பறேன்”

வெற்றி உரைத்த அந்த நேரத்தில் சரியாக பாரியின் படகில் இருந்த வாக்கி டாக்கியில் தொடர்பு கொண்டான் சக மீனவனான தாமஸ். அவன் சொன்ன செய்தியைக் கேட்டுக் கொண்டு வந்து பாரியிடம்  சொன்னான் தேவா. 

“பாரிண்ணா தாமஸ் படகு எதுத்தாப்ல வந்துக்கினுகீதாம். அது படகுகிட்ட நம்ம படக நிறுத்த சொல்லுச்சி.”

“எதுக்கான்டா?”

“தெர்ல ண்ணா. தாமஸ்ஸூ படக நிறுத்த சொன்னுச்சி. வேற ஒன்னியும் சொல்லல.”

தாமஸ் பாரியின் குப்பத்தைச் சேர்ந்தவன்தான். பாரியைப் போலவே விசைப் படகு வைத்து மீன் பிடிப்பவன். பாரிக்கு நல்ல நண்பனும்கூட. 

சற்று நேரத்திலே தாமஸ்ஸின் படகு எதிர்ப்படவும் அவனது படகை ஒட்டி நிறுத்தப்பட்டது பாரியின் படகு. சக மீனவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அருகாமையில் இருக்கும் படகுக்கு வாக்கி டாக்கி மூலமாக தொடர்பு கொண்டு உதவி கேட்பது வழக்கம்தான், ஆகையால் படகை நிறுத்தியிருந்தான் பாரி. 

“என்னா தாமஸ்ஸூ? ஏதும் பிரச்சனையா?”

“அதெல்லாம் ஏதுமில்ல பாரி. எந்தம்பி சவரிகூட படிக்கற தோஸ்த்துப் புள்ளைங்க நாலைஞ்சு கடலுக்கு மீன்பிடிக்கறதப் பாக்க வரேன்னு படகுல நேத்து ஏறுனுச்சிங்க. அதான் இப்ப கரைக்குப் போற படகுல திருப்பி அனுப்பி வுடலாம்னு உன் படக நிறுத்த சொன்னேன். 

இந்த புள்ளைங்கள பத்ரமா கூட்டிக்கினுப் போயி கரையில வுட்ரு பாரி.”

“அதுக்கென்னா வரச் சொல்லு தாமஸ்ஸூ.”

என்றவன் இரு படகுகளையும் இணைக்கும் விதமாக பலகை ஒன்றை எடுத்துப் போட்டான். அந்த படகில் நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய் பலகையில் ஏறி இந்தப் படகுக்கு வர இறுதியாய் ஏறிய நிகிலேஷைப் பார்த்த பாரியின் முகம் தன்னிச்சையாக மலர்ந்தது. 

கடலின் ஆழத்தைப் பார்த்து பயந்து சற்று தடுமாறிப் பலகையில் நடந்த நிகிலேஷை விரைவாக அதே பலகையில் ஏறிச் சென்று கைபிடித்து அழைத்து வந்து தனது படகில் இறக்கிய பாரியை கொலை வெறியோடு முறைத்துக் கொண்டிருந்தான் வெற்றி. 

‘இந்தப் பாரிப்பய சும்மா இருந்தாலும் இதுங்க சும்மா இருக்காதுங்க போலவே. தம்பி மட்டும்தானா அக்காளும் வந்திருக்காளா?’ என்றெண்ணியபடி தாமஸ்ஸின் படகைத் துழாவியது வெற்றியின் கண்கள். 

நிகிலேஷ் படகில் வந்து இறங்கவும் இரு படகுகளுக்கு இடையே இருந்த பலகை நீக்கப் பட்டதும், தாமஸின் படகு சென்றுவிட பாரியின் படகு தனது வழியே பயணத்தைத் துவக்கியது. 

வெற்றியின் பார்வை இமைக்காமல் தன்னைத் துளைப்பதைப் பார்த்தவன் அவனருகே சென்று, 

“டேய், இப்ப நான் இன்னாப் பண்ணேன்னு என்னைய மொறைக்குற நீயி?”

பாரியின் கேள்விக்கு நிகிலேஷைத் தொட்டு மீண்டது பாரியின் விழிகள். 

“டேய், அவனா வந்து படகுல ஏறுனா நான் இன்னாடாப் பண்ணுவேன். அவன் அக்காவத்தான பாக்கக்கூடாதுன்னு சொன்ன நீயி, தம்பியவுமாடா பாக்கக்கூடாது?”

அழுவது போன்ற பாரியின் பாவனையில் வெற்றி சத்தமாகச் சிரித்துவிட,  “இப்புடியே சிரிச்சிக்கினே இரு வெற்றி. உன்னை மீறியெல்லாம் நான் எதுவுமே செய்ய மாட்டேன்டா” என்றபடி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான் பாரி. அதன்பிறகு இலகுவானார்கள் நண்பர்கள் இருவரும். 

தாமஸின் தம்பி சவரிமுத்து அவனது நண்பர்களுக்கு பாரியையும் மற்றவர்களையும் அறிமுகப்படுத்தி வைக்க, தான் அந்தப் பலகையில் தடுமாறிய போது தாமதிக்காமல் வந்து கைகொடுத்து பத்திரமாய் அழைத்து வந்த பாரியை நிகிலேஷூக்கு மிகவும் பிடித்துப் போனது. பாரியோடு நன்கு பேசத் துவங்கியிருந்தான். 

“நீங்க எங்க வீட்டுக்கு பின்னாடிதான இருக்கீங்க. உங்களைப் பார்த்திருக்கேன் நான்.”

நிகிலேஷின் கேள்விக்கு ஆமோதித்தவன், அனைவருக்கும் டீ கொடுத்து உபசரிக்கச் சொல்லிவிட்டு வலையை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு உதவ ஆரம்பித்தான். 

அந்த மாணவர்களின் கவனமும் அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த மீன்களின் புறம் சென்றது. அதை தங்களது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள், அந்த மீன்களின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். 

படகில் காணும் ஒவ்வொன்றுமே அவர்களது ஆர்வத்துக்குத் தீனியாக இருக்க,  அவை பற்றிய அவர்களது கேள்விகளுக்கு பாரியும் வெற்றியும் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது படகின் ஒரத்தில் வந்தமர்ந்தன சில கடல் பறவைகள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் நிகிலேஷ். 

“நாடி… லெஸ்ஸர் நாடிதான இது?”

“ம்ம்… ஆமா. ஆலான்னு சொல்லுவோம் நாங்க.” வெற்றி பதில் கொடுத்தான். 

“யெஸ். ஆனா, ஆலா வகையில இது கொஞ்சம் ரேர்ண்ணா.”

   “ம்ம், ஆமா. சாம்பல் தலை ஆலா. இது வெளிநாட்ல இருந்து இந்தியாவுக்கு வலசையா வர்ற பறவை. ஆனா நம்ப பழவேற்காடு முகத்துவாரத்துல பார்க்க முடியும் பா.”

“அப்படியா? பேர்ட் வாட்ச்சர்ஸ் (பறவைகளைப் பார்ப்பவர்கள்) க்கு இந்த வகை ஆலாவப் பார்க்கறது ரொம்பவே கஷ்டம்னு சொல்லுவாங்கண்ணா. எங்க அக்காவுக்கு இதை ஃபோட்டோ எடுத்து அனுப்பறேன். ரொம்ப நாளா இதைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தா அவ.” என்றபடி பல்வேறு கோணங்களில் புகைப்படங்களைக் க்ளிக்கியவன் உடனடியாக நித்திலாவுக்கு அனுப்பி வைத்தான்.

 

அங்கே நிகிலேஷின் வீட்டில் கடுப்பாக அமர்ந்திருந்தாள் நித்திலா. நிகிலேஷ்க்கு மட்டும் கடலுக்குப் போக பர்மிஷன் கொடுத்திருந்தார் அவளது தந்தை. தானும் அவனோடு போகிறேன் என்று கேட்டவளுக்கு மென்மையாகவே மறுப்பு கூறியிருந்தார். 

“தனியா அவ்வளவு தூரம் அனுப்ப முடியாதுடா. உனக்கு போட்ல நாள் முழுக்க பயணம் பண்ணனும் அவ்வளவுதான,  அப்பா இந்த வருஷம் கேரளா படகு வீட்டுக்கு டூர் கூட்டிட்டு போறேன். உன் விருப்பப்படி எத்தனை நாள் வேணும்னாலும் அதுல தங்கலாம். சரியாடா நிலாம்மா?”

என்றவரிடம் அடம்பிடிக்கத் தோன்றவில்லை. சரி என்று தலையாட்டியிருந்தாள். ஆனால், நேற்று படகில் ஏறியதில் இருந்து தொடர்ச்சியாக நிகிலேஷ் அனுப்பியிருந்த புகைப்படங்கள் வெகுவாக கடுப்பாக்கியிருந்தது அவளை. 

இரவின் ஆதிக்கத்தில் நீலக்கடல் கரும்பட்டு போர்த்தியிருக்க,  இழையோடிய வெள்ளி ஜரிகையாக பளபளத்த நிலவின் ஒளி, தூரத்தில் தம் கூட்டுக்குப் போகும் ஆர்வத்தில் படபடத்துப் பறக்கும் பறவைகள்,  மிதக்கும் ஓடத்தின் மீதேறி வலையை விசிறியடிக்கும் ஒற்றை மீனவன், என அவன் அனுப்பியிருந்த ஒவ்வொரு புகைப்படமும் அவளது ஏக்கத்தைத் தூண்டியபடி இருந்தது. 

“தடியன், என்னை வெறுப்பேத்தனும்னே ஃபோட்டோவா எடுத்து அனுப்புறான்ம்மா” என்று அவளது அம்மாவிடம்கூட சினுங்கியிருந்தாள். 

அதிலும் காலையில் தகதகக்கும் நெருப்புப் பந்தாய் கடலில் இருந்து எழும் சூரியனின் புகைப்படம் அவளை ஏக்கத்தின் உச்சியில் வைத்திருந்தது. இப்போதே நேரில் அவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் போல் ஒரு தவிப்பு. 

‘வாய்ப்பிருந்தும் தவற விட்டுவிட்டேனோ? கொஞ்சம் அடம் பிடித்திருந்தால் அப்பா அனுப்பியிருப்பாரோ? மறுபடி போகும் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’  என்றெண்ணிக் கொண்டவள் அதன்பின் தம்பி வரிசையாக அனுப்பிய புகைப்படங்களை வெகு ஆர்வமாகப் பார்க்கத் துவங்கியிருந்தாள். 

மாலையில் பாக்கிய லஷ்மி பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்க, தனியே வீட்டிலிருந்தவள், தன்னுடைய ஆஸ்தான பால்கனி ஊஞ்சலில் தஞ்சமடைந்திருந்தாள். ஒரு கையில் ஹார்லிக்ஸூம் மறு கையில் அலைபேசியுமாக தூரத்து கடலை ரசித்தபடி அமர்ந்திருந்தாள். 

மனம் தம்பியைத்தான் எண்ணியபடி இருந்தது. ‘இந்நேரம் அவனிருந்தால் பொழுதுகள் கலகலப்பாக போகும். மதியத்துக்கு மேல் அவனிடம் இருந்து எந்த புகைப்படமும் வரவில்லை. அவனுக்கு அழைப்போமா? என்றெண்ணியபடி இருந்தவளின் கவனத்தைக் கலைத்தது வரிசையாக வந்த மெஸேஜ் டோன்கள். 

அலைபேசியை உயிர்ப்பித்துப் பார்த்தவளின் விழிகள் விரிந்தன. வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பறவை. லெஸ்ஸர் நாடி… தம்பிக்கு வெகு அருகில். 

பொதுவாகவே நித்திலாவுக்கு விலங்குகள் பறவைகள் பற்றி அறிந்து கொள்வதிலும் பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம். அதற்காகவே பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதும் பொறியியல் மருத்துவம் என்று போகாமல் விலங்கியல் எடுத்துப் படிக்கவே ஆசைப்பட்டாள்.

பரசுராமனும் அவளது ஆசையை எதிர்க்கவில்லை. வருடம் ஒருமுறை இயற்கை சூழலில் பறவைகளை விலங்குகளை பார்க்க ரசிக்க என்றே சுற்றுலாவும் அழைத்துச் செல்வார். பட்ஜெட் சுற்றுலாவுக்கு இடங்களைத் தேர்வு செய்வது அக்காவும் தம்பியும்தான். 

அப்படிப் போன இடங்களில் எல்லாம் நேரில் பார்த்த பறவையினங்களை குறித்து வைப்பது அக்காவுக்கும் தம்பிக்கும் பொழுதுபோக்கு. அப்படி வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பறவை இந்த லெஸ்ஸர் நாடி.. 

 துள்ளலோடு உடனே அவனுக்கு கானொளி அழைப்பில் அழைத்தாள். 

நிகிலேஷூமே நித்திலா உடனடியாக வீடியோகாலில் வருவாள் என்று எதிர்பார்த்திருந்ததால் அழைப்பை ஏற்றவன் அவள் அந்தப் பறவையை பார்ப்பதற்கு ஏதுவாக அலைபேசியைத் தூக்கிப் பிடித்தான். 

அலைபேசியின் மறுபுறம் துள்ளிக் குதித்த நித்திலாவின் உற்சாகம் நிகிலேஷையும் தொற்றிக் கொண்டது. 

“நித்தி நீ பார்க்கனும்னு சொன்ன பேர்டு தான இது.”

“டேய், இன்னும் கிட்ட போ. தெளிவா பார்க்கனும். அது கிட்ட போடா.”

“இன்னும் கிட்ட போனா பறந்துடும் நித்தி.”

“அதெல்லாம் பறக்காது. நீ கிட்ட போய் தெளிவா காட்டு. 

நித்திலாவின் ஆர்வம் தனக்கும் தொற்றிக் கொண்டதில் பறவையை அலைபேசி வழியாக பார்த்துக் கொண்டே பின்னோக்கி நகர்ந்து கொண்டே பறவைகளுக்கு வெகு அருகில் படகின் விளிம்புக்குச் சென்றிருந்தவன், “தெரியுதா நித்தி? இப்ப தெரியுதா?” என்று கேட்டபடி நகர்ந்தான். 

மற்றவர்கள் வேறு கவனத்தில் இருந்தாலும் பாரியின் கவனம் நிகிலேஷிடம்தான். என்னதான் அவளை இனி பார்க்க மாட்டேன் என்று வெற்றியிடம் கூறியிருந்தாலும், தன் தமக்கையோடு நிகிலேஷ் பேச ஆரம்பிக்கவுமே அவனது புலன்கள் தனிச்சையாக அதை கவனிக்கத் துவங்கியிருந்தது. 

‘எதுக்கு இவ்வளவு ஓரமா நகர்ந்து போறான் இந்தப் பையன்’ என்றெண்ணியபடி அவனைத் தடுக்கும் முன் அங்கே கீழே கிடந்த கயிறு இடறி தண்ணீருக்குள் தவறி விழுந்திருந்தான் நிகிலேஷ். நிகிலேஷ் விழுந்த மறு நொடி, “வெற்றி படகை நிறுத்தச் சொல்லு” என்று பதற்றத்தோடு கத்தியபடி கடலுக்குள் பாய்ந்திருந்தான் பாரி. 

—-ஆழி சூழும். 

 

Leave a Reply

error: Content is protected !!