Oh Papa Laali–Epi 10

அத்தியாயம் 10

சிங்கப்பூரில் உள்ள அழகிய பூங்காக்களில் சைனிஸ் கார்டனும் ஒன்று. 1975ல் இந்த இடம் நிறுவப்பட்டது. சங் டைனஸ்டி காலத்தில் உள்ளது போல இங்கிருக்கும் கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிகப்பு, வெள்ளை, தங்க நிறம் கொண்ட கட்டிடத்தை பிரியா படத்தில் வரும் ‘ஏ பாடல் ஒன்று’ பாட்டில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

 

சூர்யவர்மனுக்கும் வான்மதிக்கும் ஆர்.ஓ.எம் (ரெஜிஸ்ட்ரேஷன் ஆப் மேரேஜ்) மிக சிம்பிளாக நடந்தது. இவனது குடும்பம், மிக நெருங்கிய நண்பர்கள், அவளது அப்பா, அவரோடு சேர்ந்து வாழும் அந்த சீனப்பெண் என மிக சிலரே வந்திருந்தார்கள்.

கொஞ்ச காலம் காதலித்துப் பின் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தக் கையோடு அவளது அப்பாவைப் பார்க்க அழைத்துப் போயிருந்தாள் வான்மதி. போகும் போதே,

“வர்மன்! அப்பாவுக்கு என்னை அவ்வளவா பிடிக்காது. நான் அவருக்கு வேண்டாத மகள். அவங்க டிவோர்சுக்கு அப்புறம் என்னை நல்லாத்தான் பார்த்துகிட்டாரு. தென், யூ க்நோ, பேப்பருல கூட படிச்சிருப்பீங்க! ஹீ இஸ் ஹேவிங் அ ரிலேஷன்ஷிப் வித் ஹிஸ் வொர்க்கர்! அவ வந்ததுகப்புறம் என்னை புறக்கணிக்க ஆரம்பிச்சுட்டார். என்னை சுத்தி நான் கேட்டத செய்ய ஆட்கள் இருந்தாங்க, ஆனா அன்ப காட்ட அவர் மட்டும் இல்ல! நானும் அவர குறை சொல்லல! பதினைந்து வயசு வரைக்கும் என் கூட இருந்தாரே! அதுக்கு அப்புறம் மக வளந்துட்டா, நம்ம லைப்ப பார்த்துக்கலாம்னு நெனைச்சிருப்பார்!” என தன் அப்பாவை பற்றி ஓரளவு நல்லபடியே பேசினாள்.

இவனுக்குத்தான் கேட்டவுடனே அவரைப் பிடிக்காமல் போய்விட்டது. பதினைந்து வயது என்பது, பெற்றவரின் அரவணைப்பை எதிர்ப்பார்க்கும் வயது. உடல் வளர்ச்சியில், ஹார்மோன்களின் மாற்றத்தில் பெரியவர்களின் ஆலோசனையையும், அன்பையும் நாடும் வயது. அப்பொழுது மகளைத் தனித்து விட்டுவிட்டாரே என தன் மதிக்காக கோபம் வந்தது.

“டிவோர்ஸ்கு அப்புறம் அம்மா என்ன செய்யறாங்க மதி? அவங்கள பத்தி நீ பேசனதே இல்லையேம்மா”

“அம்மா..ஹ்ம்ம் அம்மா வந்து கொஞ்சம் சீக்கா இருந்தாக வர்மன். நர்சிங் ஹோம்ல வச்சி அப்பா செலவு செஞ்சு பார்த்துக்கிட்டார். டூ இயர்ஸ் பேக், ஷீ பாஸ்ட் அவே! அதப்பத்தி பேசனா எனக்கு ரொம்ப டிஸ்டர்பா இருக்கும். சோ பேச வேணாமே வர்மன்!” என கண்களின் ஓரம் கண்ணீர் கட்டி நிற்க, கெஞ்சுவது போல பேசியவளை கஸ்டப்படுத்த அவனுக்கு என்ன காண்டுவெறியா! அந்தப் பேச்சை அதோடு விட்டுத்தள்ளினான் சூர்யா.  

திருமண விஷயமாக வந்தவர்களை அன்பாகவே வரவேற்றார் சோமன். எந்த வித பந்தாவும் இல்லாமல் பழகினார் அவர்.

“வானு சொன்னா உங்கள லவ் பண்ணறதா! நான் ரொம்ப ஓபென் மைண்டேட். அவங்கவங்க வாழ்க்கையை அவங்களுக்குப் பிடிச்ச வழியில வாழறதுல எந்தத் தப்பும் இல்லைன்னு நினைக்கறவன். என் ஏர்லைனோட ஏகபோக வாரிசா வானு இருப்பான்னு தான் இவளுக்கு ஆசையா வான்மதின்னு பேர் வச்சேன். வானத்தையும் நிலவையும் சேர்த்து என் மக ஆட்சி செய்வான்னு கனவு கண்டேன்.” என பெருமூச்சு விட்டவரை,

“அப்பா, லெட்ஸ் ஈட். அப்புறம் பேசலாம்” என அவரின் பேச்சை நிறுத்தியவளின் கண்கள் மட்டும் என்னவோ அவரை யாசித்தது.

“ஹ்ம்ம்! வாங்க சூர்யா! லெட்ஸ் ஈட்”

சாப்பிட்டு முடித்தவர்கள், ஸ்வீமிங் பூல் அருகே வந்து அமர்ந்தார்கள்.

“வானு பேபி! கேன் யூ மிக்ஸ் அப்பா அ ட்ரிங்க்?” என சோமன் கேட்க, மனமேயில்லாமல் அவருக்கு பிடித்த வோட்காவை எடுத்து வர உள்ளே போனாள் வான்மதி. அவள் உருவம் மறைந்ததும் இவர் அவசரமாக,

“சூர்யா!” என அழைத்தார்.

“சொல்லுங்க சார்”

“என் மக அவள பத்தி எல்லாத்தையும் சொன்னாளா?”

“ஆமா சொன்னா! ரீசண்டா ஹாஸ்பிடலைஸ் ஆகியிருந்தது வரை சொன்னா!”

ஒரு வருடத்திற்கு முன் லோ ப்ளட் பிரஷரால் மயக்கமாகி கீழே விழுந்ததில் கையில் காயமாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது வரை சொல்லியிருந்தாள் வான்மதி.

“ஹ்ம்ம் அப்படினா சரி! ஆனாலும் பெத்த தகப்பனா இத நான் சொல்லித்தான் ஆகனும். வானு வோண்ட் மேக் அ பெர்பெக்ட் வைப் சூர்யா”

அவர் சொல்லி முடிக்க பட்டென எழுந்துக் கொண்டான் சூர்யா. அவர்கள் காதலை பரிமாறி, டேட்டிங் போய், ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக் கொண்ட இந்த ஆறு மாதங்களில் அவளிடம் உயிராகி போயிருந்தான் சூர்யவர்மன். குழந்தை மனம் அவளுக்கு. இவனுக்கென்று பார்த்து பார்த்து எல்லாம் செய்வாள். பணக்காரி எனும் பந்தா அறவே இல்லாமல், மதுரா வெளியே செல்ல நேரும் போது ரோஹியை பேபிசிட் செய்வாள். அந்த நேரங்களில் இவர்களின் சின்ன வீட்டின் கிச்சனில் இருந்து பாத்ரூம் வரை ஸ்க்ரப் செய்து பளபளவென ஆக்கிவிட்டுப் போவாள். காலையில் போன் செய்து கொஞ்சி இவனை எழுப்பி விடுவது முதல், இரவில் இவனைத் பாட சொல்லி கெஞ்சுவது வரை அவனின் இருபத்தி நான்கு மணி நேரமும் அவனை பற்றிப் படர்ந்திருந்தாள் வான்மதி. ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை என தான் சீக்கிரம் திருமணம் முடிக்க முடிவெடுத்து சோமனை சந்திக்க வந்திருந்தார்கள்.

“சார், என் மதிய பத்தி இப்படிலாம் பேசாதீங்க! அவளைத் தவிர வேற யாராலும் எனக்கு பெர்பெக்ட் வைப்பா இருக்க முடியாது! அவளுக்குத்தான் நான் பொருத்தமே இல்ல. சோ, ப்ளீஸ்! இதுக்கு மேல ஒரு வார்த்தை அவளப் பத்தி தப்பா பேசாதிங்க! பெத்த தகப்பனா இருந்தாலும், என்னால தாங்க முடியலை.” என இவன் படபடவென பேச, அவன் பின்னால் கண்ணில் நீருடன் வந்து நின்றிருந்தாள் வான்மதி. அதற்கு பிறகு அவர்கள் அங்கு நிற்கவில்லை, கிளம்பி வந்துவிட்டார்கள்.

திருமண பரிசாக பத்து லட்சம் டாலரை அவள் அக்கவுண்டுக்கு போட்டு விட்ட சோமன், அதோடு மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷனுக்குத்தான் வந்தார். ரிஜிஸ்டர் முடித்த கையோடு மாரியம்மன் கோயிலில் தாலி கட்டி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள் இருவரும். சோமனின் வியாபார நண்பர்கள், சூர்யாவுடன் எண்டேர்டெயிண்ட்மேண்ட் ஃபீல்டில் உள்ளவர்கள் என அனைவருக்கும் கிராண்டாக ஒரு டின்னர் மெண்டரின் ஹோட்டலில் கொடுக்கப்பட்டது.

வான்மதியின் உயர்மட்ட நிலை கருதி மணமக்களை அவளின் கொண்டேவிலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டாள் மதுரா. தங்கள் பிள்ளைகள் இருவரும் எப்பொழுது, ஒற்றுமையாக சேர்ந்து இருக்க வேண்டும் என தான் இந்த ப்ளாட்டை வாங்கி இருந்தனர் சூர்யாவின் பெற்றோர். தம்பிக்காக அவனையே விட்டுக் கொடுக்க முடிவெடுத்தாள் மதுரா. ஆனால் வான்மதியோ, சொந்தங்களுடன் தாம் வாழ்ந்து மகிழ்ந்தது இல்லையென சொல்லி இவர்களுடனே தங்கிக் கொள்கிறேன் என அடம் பிடித்தாள். மனைவி தன் மனம் அறிந்து நடந்துக் கொள்கிறாளே என ஏக சந்தோஷம் சூர்யாவுக்கு.

விருந்து முடிந்த அன்று அவர்களுக்காக அந்த வீட்டை ஒதுக்கி கொடுத்து விட்டு மதுராவும் ரகுவும் பையனுடன் ரகுவின் மாமா வீட்டில் தங்கிக் கொண்டார்கள். தன் ஆசை மனைவியை மெண்டரின் ஹோட்டலில் இருந்து நேராக தங்கள் பெற்றவர்கள் வாழ்ந்து தங்களை ஈன்றெடுத்த ப்ளாட்டுக்கு கூட்டி வந்தான் சூர்யவர்மன்.

“வெல்கம் மை ஏஞ்சல்! வலது காலை எடுத்து வச்சு வாம்மா!” என குனிந்து வணங்கி அவளை உள்ளே அழைத்துக் கொண்டான்.

காரில் வரும் போதே, நெர்வசாக இருந்தாள் வான்மதி. போட்டிருந்த லெஹெங்காவை நீவி விடுவதும், கைப்பையைத் திறந்து மூடுவதும், இவனைப் பார்த்து உதட்டைக் கஸ்டப்பட்டு இழுத்து வைத்து புன்னகைப்பதுமாக இருந்தாள். அவள் கையை இறுக பற்றிக் கொண்டு மெல்ல தட்டிக் கொடுத்தப்படியே வந்தான் சூர்யா. அவளின் கார் ட்ரைவர் முன்னே எதையும் பேச விருப்பப்படவில்லை அவன்.

அவளை ஹாலில் அமர வைத்தவன், கிச்சனுக்கு சென்று சூடாக மைலோ(சாக்லேட் பானம்) கலக்கி எடுத்து வந்தான்.

“என்னடாம்மா ஒரே நெர்வசா இருக்க! ஒரு வருஷமா என் பின்னால சுத்திருக்க! ஆறு மாசமா சேர்ந்து வேற சுத்திருக்கோம்! அப்பூறம் என்ன பயம்? இந்தா மைலோ குடிச்சிட்டு நல்ல பிள்ளையா இங்கயே உட்கார்ந்திருப்பியாம்! நான் நம்ம ரூம க்ளீன் பண்ணிட்டு வருவேனாம்”

“இல்ல வர்மன்! நான் க்ளீன் பண்ணுறேனே!”

“மூச்! நகரக் கூடாது” என அவளை மிரட்டி உட்கார வைத்தவன், அரை மணி நேரம் கழித்து வெள்ளை வேட்டி அணிந்து, வெள்ளை ஜிப்பா போட்டுக் கொண்டு ரூமில் இருந்து வெளி வந்தான். அவனையே பார்த்திருந்தவள் அருகில் வந்து, அலேக்காக அவளை அள்ளிக் கொண்டான். அவன் செயலில் இவள் கிளுக்கி சிரிக்க, கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் இழுத்தவன்,

“மயக்கறடி மாயக்காரி!” என வழிந்தான்.

புன்னகைத்தவள்,

“இந்த வெள்ளை வேட்டி சட்டையில நீங்களும் ஜோரா இருக்கீங்க வர்மன்”

“யாரு நான் தானே? இருப்பேன், இருப்பேன்! மைலோ முழுசா குடிச்சு முடிச்சியாம்மா” என ரூம் வாசலில் அவளைக் கையில் ஏந்திக் கொண்டே கேட்டான்.

“முடிச்சுட்டேன்”

“பால் குடுக்காம ஏன் மைலோ குடுத்தேன் சொல்லு பார்ப்போம்”

“ஹ்ம்ம் தெரியலியே வர்மன்”

“மைலோ எனர்ஜி ட்ரிங்க்டா செல்லம்! இந்த குண்டுப்பையன தாங்க உனக்கு எனர்ஜி வேணுமே! அதுக்குத்தான் அதை கலக்கிக் குடுத்தேன்” என சொன்னவன் குனிந்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

வெட்கத்துடன் புன்னகைத்தவள்,

“உள்ள போகலாமே வர்மன்!” என சிணுங்கினாள்.

ரூம் கதவைத் திறந்து அவளை இறக்கி விட்டான். அந்த குட்டி அறையை அவன் அலங்கரித்திருந்ததைப் பார்த்து வாயைப் பிளந்து நின்றாள் பெண். குட்டி குட்டியான வாசனை மெழுகுவர்த்திகள் கலர் கலராய் ரூம் முழுக்க கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. கட்டில் முழுக்க ரோஜா இதழ்களைத் தூவி வைத்திருந்தான் சூர்யா.  

புன்னகையுடன் கட்டிலை நெருங்கியவள், கீழே விழுந்திருந்த சிற்சில இதழ்களைப் பொருக்கி மீண்டும் கட்டிலில் போட்டாள். அவள் ரோஜா இதழ்களை கட்டிலில் போட, இவன் அந்த ரோஜா மகளையே அள்ளி கட்டிலில் போட்டான். கட்டிலில் மல்லாக்க விழுந்தவள், கலகலத்து சிரித்தாள்.

அவள் அருகில் தொப்பென விழுந்தவன் தனது காந்தக் குரலில்,

“ஏனோ ஏனோ உடல் வேகுதடி

ஏனோ ஏனோ உயிர் நோகுதடி

ஏனோ ஏனோ பறி போகுதடி

யே யே யே வைக்காதே மை மை

வசியக்காரி வசியக்காரி

வளைச்சிப் போட்டு போறாயே!” என அவளது மை தடவிய விழிகளைப் பார்த்துப் பாடினான்.

வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம் பதித்து,

“வசியம் பண்ணது நீங்கதான் வர்மன். உங்க குரலால என்னை எப்பவோ வசியம் பண்ணிட்டீங்க! ஐ லவ் யூ வர்மன்” என சொல்லி அவன் இருதயம் இருக்கும் வலப்பக்க நெஞ்சில் குட்டி குட்டி முத்தங்கள் இட்டாள்.

அவள் அழகாய் காதல் காவியத்தை ஆரம்பித்து வைக்க, இவன் மெது மெதுவாய் காதலை காமமாக்கி, காமத்தை கவிதையாக்கினான். சூரியனின் ஒளிக் கொண்டு ஒளிரும் நிலவு போல, இந்த சூர்யாவின் காதல் கண்டு மலர்ந்து விகசித்தாள் வான்மதி.

நடு ஜாமத்தில் எழுந்து மனைவியைத் தேடியவனுக்கு தட்டுப்பட்டது அவளின் தலையணை மட்டுமே. விளக்கைப் போட்டவனுக்கு ஒரே ஆச்சரியம். படுக்கை அறை சுத்தமாக இருந்தது. ரோஜா இதழ்களோ, வாசனை மெழுகுவர்த்திகளோ இருந்த சுவடே இல்லை.

“மதிம்மா!” என அழைத்துக் கொண்டே ரூமை விட்டு வெளியே வந்தான் சூர்யா. அவளோ கிச்சனில் இருந்தாள்.

“என்னம்மா செய்யற இங்க? பசிக்குதா?”

“இல்ல வர்மன். தூங்க முடியல. அதான் ஸ்டவ்லாம் ஆப் பண்ணியிருக்கா, ஜன்னல்லாம் சாத்தி இருக்கான்னு செக் செய்ய வந்தேன்.”

அருகே போய் அவளை அணைத்துக் கொண்டவன்,

“நைட் எவ்ளோ வேலை செஞ்சிருக்கோம்! அசந்து தூங்காம இது என்ன தேவையில்லாத செக்கிங்! வா, வா! வந்துப் படு” என தங்களது அறைக்கு அழைத்துப் போனான்.

தூக்கம் வரவில்லை என சொன்னவளை நெஞ்சில் போட்டு, எப்பொழுதும் போனில் அவள் பாட சொல்லும் ஓ பாப்பா லாலியைப் பாடி, கொஞ்சமாக சில்மிஷமும் செய்து தன் மனைவியை உறங்க வைத்தான் சூர்யவர்மன்.

பாடுவான்…..