ஆழி சூழ் நித்திலமே 6 ( அ)

முத்து 6

 

மெல்லிய கடல் பறவைகளின் கூச்சலில் கண்திறந்தான் வெற்றி. பாரியோடு பேசிக் கொண்டிருந்தவன் அப்படியே சரிந்து அந்தப் பலகையில் கண்ணயர்ந்திருந்தான். 

மீன்களை வகை பிரித்துப் போட்டிருந்த மீனவர்களும் அங்கங்கே படுத்துச் சுருண்டிருந்தனர். வளைத்துக் கட்டிய வலையில் பெருமளவில் மீன்கள் சிக்கியிருப்பது ஆங்காங்கே தூரத்தில் துள்ளிய சில மீன்களைப் பார்க்கையில் தெரிந்தது. 

துள்ளிய மீன்களைக் கொத்திப் போக கடல் பறவைகள் வட்டமிட்டபடி இருந்தன. வலையை இழுக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான் வெற்றி. 

பாரி எங்கே என்று எண்ணியபடி திரும்பியவன் கண்டது மந்தகாசம் பொங்கும் முகத்துடன் படகின் விளிம்பில் இருந்த கம்பத்தில் சாய்ந்து அமர்ந்தபடி தான் தந்த அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த பாரியைதான்.

‘இவ்வளவு நேரமாகவா அந்த அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இப்படியெல்லாம் ஓரிடத்தில் அமர்பவன் இல்லையே இவன்’ என்றெண்ணியபடி பாரியின் அருகே சென்ற வெற்றி கண்டது அலைபேசியில் ஒடிக் கொண்டிருந்த நித்திலாவின் வீடியோக்கள்தான்.

துணுக்குற்றவன், “பாரி…” என்றழைத்த அழைப்பில் சற்று கடுமையிருந்தது. ‘இவனை மனதில் எண்ணிக் கொண்டு கயல் மருகிக் கொண்டிருக்க,  இவன் செல்லும் பாதை சரியில்லையே!’ ஏக கடுப்பாயிருந்தது வெற்றிக்கு. 

சிறு வயதில் இருந்து பாரியை அறிந்தவன் வெற்றி.  பெண்களிடம் சாதாரணமாகக் கூட பேசிப் பழகியிராதவன் பாரி. அழகிய பெண்களைக் கண்டதும் வரும் வயதுக்குரிய குறும்புகளோ ஆர்வப் பார்வைகளோ கூட பாரியிடம் இதுவரை பார்த்ததில்லை. 

அப்படியிருக்க நித்திலாவின் மீதான பாரியின் இந்த ஆர்வம், சாதாரண ஒன்றாய்த் தோன்றவில்லை வெற்றிக்கு. அன்றே நிலா, அகல்விளக்கு என்று உளறிச் சென்ற பாரியின் வார்த்தைக்கான பொருளை யோசித்த போது அது தந்த பதில் ஏதும் அத்தனை உவப்பாய் இல்லை மனதுக்கு. 

ஆனால் அதை அவ்வளவு தூரம் சீரியஸ்ஸாக எடுக்கவும் தோன்றவில்லை. ஏதோ சிறு ஈர்ப்பு. நண்பன் உளறிவிட்டுப் போகிறான் என்றே எண்ணியிருந்தான்.  

ஆனால், இன்று… இந்தப் பெண்ணின் முகத்தை அலைபேசியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது மலர்ந்திருந்த பாரியின் முகம் வேறு கதை சொன்னது. 

‘மனதில் வேறொருத்தியை நினைத்துக் கொண்டு கயலைக் கட்டுவானா இவன்?’ எண்ண எண்ண கடுப்பாய் வந்தது வெற்றிக்கு. ‘கேட்க யாருமில்லை என்று நினைத்தானா கயலுக்கு? நானிருக்கிறேன். கயலுக்கு ஏதேனும் பிரச்சனை இவனால் வருமென்றால் இவனை எதிர்க்கவும் தயங்க மாட்டேன்’ மனதில் எண்ணிக் கொண்டவன் பாரியின் கையிலிருந்த அலைபேசியை பறித்திருந்தான். 

வெடுக்கென பிடுங்கப்பட்ட அலைபேசியும் நண்பனின் கடுமையான பாரியென்ற அழைப்பும் மேகத்தில் மிதந்து கொண்டிருந்த பாரியை தரையிறக்கியிருந்தது. கோபமான முகத்தோடு நின்றிருந்த வெற்றியைக் கண்டவன், 

“என்னாச்சு வெற்றி?”

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க பாரி?” அவ்வளவு கோபம் மண்டியிருந்தது வெற்றியின் வார்த்தையில். அதில் துணுக்குற்றவன் தடுமாற்றத்தோடு, 

“சு… சும்மா பொழுது போகல. அ… அதான்…

“சும்மா பொழுதுபோக்குக்கு பார்க்கற மாதிரி தெரியலயே. என்ன செய்யற நீ? நீ செய்யறது சரியா தப்பான்னுகூட புரியலையா உனக்கு?”

வெற்றியின் கோபத்துக்கான காரணம் புரியதான் செய்தது பாரிக்கு. நண்பனின் முகம் காண முடியாமல் கடலைப் பார்த்து திரும்பி நின்றவன் சற்று உள்ளடங்கிப் போன குரலில், 

“சரி தப்பு இதுல எங்கேர்ந்து வந்துச்சி வெற்றி? நேருக்கு நேரா அந்தப் பொண்ணோட முகத்த நிமிர்ந்து கூட பார்த்ததில்ல நானு. அந்தப் பொண்ணோட பேரு கூட எனக்குத் தெரியாதுடா.”

“அப்ப இவ்வளவு நேரமா இந்த வீடியோவலாம் பார்த்துக்கிட்டு இருந்ததுக்கு என்னடா அர்த்தம்?”

“அழகா ஆடறாங்க பாடறாங்க. எவ்வளவோ பேர் வீடியோ அதுல இருக்கு. அத்தப் பாக்கறதுல என்னடா தப்பு?” சமாளிப்பான பாரியின் பதில் மேலும் கோபப்படுத்தியது வெற்றியை. 

“சமாளிக்காத பாரி. இந்தப் பொண்ணுங்கறதாலதான் இவ்வளவு நேரம் இந்த வீடியோலாம் பார்த்திருக்க நீ. இதே வேற யாராவதாயிருந்தா தூக்கி போட்டுட்டு வேற வேலைய பார்க்கப் போயிருப்ப. உன்னை நல்லாத் தெரிஞ்சவன்டா நானு. என்கிட்ட பொய் சொல்லாத.”

“…”

பதில் சொல்லாத பாரியின் மௌனம் அவன் மனதை தெளிவாய் உரைக்க, 

“நீயாடா இப்படி? பொண்ணுங்கள பார்க்கற பார்வைகூட தப்பா இருக்கக்கூடாதுன்னு சொல்லுவியேடா.”

“டேய், அந்தப் பொண்ண நான் தப்பாலாம் பார்க்கலடா. அதும் மொகத்தை தூரத்துல இருந்து பார்த்தாலே அன்னைக்கு முழுக்க மனசுல ஒரு நிம்மதி கிடைக்குதுடா. ஒரு நாள் பார்க்காட்டாலும் எதையோ இழந்த மாதிரியே இருக்கு. இப்பலாம் அந்தப் புள்ளய பார்க்காம என்னால இருக்க முடியல வெற்றி.”

 “என்னடா பேசற? அந்தப் பொண்ணுலாம் நம்ப குடும்பத்துக்கு செட் ஆகுமா? இதெல்லாம் சரிவரும்னு நினைக்கிறியா நீ.”

“அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் ஏணி வச்சாகூட எட்டாதுன்னு எனக்குத் தெரியும் வெற்றி. அந்தபொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கனும். என்னால அந்தப் பொண்ணுக்கு எந்த விதத்துலயும் தொந்தரவு இருக்காதுடா.  என்னை நம்பு வெற்றி. எம்மனசுல இருக்கறது என்னோடயே போயிடும்.”

“அப்ப கயல்விழி? அவளப்பத்தி நீ யோசிக்கவே இல்லையா?”

“…”

“அந்தப்புள்ள உம்மேல எம்புட்டு ஆசை வச்சிருக்குன்னு உனக்குத் தெரியாதா? வேற ஒருத்திய மனசுக்குள்ள வச்சிகிட்டு கயல கட்டுவியா நீ? இது ரொம்ப தப்பு பாரி. நீ தப்பு பண்ற. கயலு பாவம்டா. இதெல்லாம் நீ கயலுக்குச் செய்யற துரோகம்.” 

கோபம் கட்டுக்கடங்காமல் சென்றதில் வெடித்த வெற்றி நண்பனின் முகம் காணக்கூடப் பிரியப்படாமல் விலகிப் போனான். 

வெற்றியின் வார்த்தை வெகுவாக காயப்படுத்தியது பாரியை. அவனுக்குமே நண்பனின் கோபத்துக்கான நியாயம் புரிந்ததுதான்.  முதன் முதலில் நித்திலாவைப் பார்த்தபோது அவளது அழகான முகமும் கண்களும் உள்ளுக்குள் ஈர்ப்பை ஏற்படுத்த முதலில் அதைச் சாதாரணமாகக் கடந்திருந்தான். 

ஆனால் அடுத்ததடுத்து அவளைப் பார்க்க நேர்ந்த தருணங்களில் அவன் வசம் அவனில்லை. அதுதான் உண்மை.  இத்தனை வயதுகளில் எவ்வளவோ பெண்களைப் பார்த்த போதெல்லாம் வராத ஈர்ப்பு,  கூடவே வளர்ந்த கயல் மீது ஒருநாளும் வந்திராத ஈர்ப்பு  அந்தப் பெண்ணிடம் தோன்றுவதில் ஆச்சர்யப்பட்டுதான் போனான். 

ஆனால் அழகான பெண்ணைப் பார்த்ததால் தன் மனம் அலைபாய்கிறது போலும் என்றெண்ணியவனின் தலையில் ஓங்கியடித்துச் சொன்னது, அவளைப் பார்க்காத நாட்களில் அவன் உணர்ந்த வெறுமை, “அடேய் மடையா! இது வெறும் ஈர்ப்பில்லை. அதைத் தாண்டிய ஒன்று” என்று. 

அவளைப் பார்க்க வேண்டும் என்று அவனாக எந்த முயற்சியுமே செய்வதில்லைதான். ஆனால் எங்காவது அவள் முகம் தென்படுகிறதா என்று தன்னை மீறி அலைபாயும் கண்களையும் கட்டுப்படுத்துவதில்லை அவன். அவனால் அது முடிவதும் இல்லை. 

அவளது வீடு இருக்கும் அப்பார்ட்மெண்ட்டை கடக்கும் போது அனிச்சை செயல் போல உயர்ந்து மூன்றாவது மாடி பால்கனியைக் காணும் கண்களை என்ன செய்ய? அங்கே அவளது மதிமுகம் காணக் கிடைக்காவிட்டால் அன்று நாள் முழுவதுமே சுணங்கிப் போகும் மனதை என்ன செய்ய? 

அதுவும் கடலுக்குப் போகும் போது அவளைப் பார்க்க முடியாவிட்டால் எவ்வளவு மீன்பாடு கிடைத்தாலும் அது அவனை மகிழ்ச்சிப் படுத்தியதில்லை. மாறாக எதையோ இழந்துவிட்ட தவிப்புதான் எஞ்சியிருக்கும். 

அவளது கவனத்தை கவர வேண்டும் என்று இதுவரை அவன் எண்ணியதில்லை. இப்படி ஒருவன் அவள் முகம் காண தவமிருக்கிறான் என்பதுகூட அவளுக்குத் தெரியாது.  அப்படியே தெரிந்திருந்தாலும் இவனைத் திரும்பியும் பார்த்திருக்க மாட்டாள் அவள் என்பது உண்மைதானென்றாலும் இவனும் எந்த முயற்சியுமே செய்ததில்லை. 

இன்னும் கேட்டால் அவளது பெயர் கூட அவனுக்குத் தெரியாது. முயன்றிருந்தால் எளிதாக தெரிந்திருக்கும்தான், ஆனால் அதற்குக்கூட அவன் முயன்றதில்லை. அவள் எட்டாக்கனி என்பதில் அவன் தெளிவாய்த்தான் இருந்தான். தனது பார்வைகூட அவளைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதிலும் அவன் தெளிவாய்த்தான் இருந்தான். 

ஆனால், நித்திலாவைப் பற்றி இவ்வளவு யோசித்தவன் கயலைப் பற்றி யோசிக்காது போனான். நித்திலா கனவு கயல்தான் நிஜம் என்று புரிந்தவனுக்கு, அந்த நிஜத்துக்கு தான் நியாயம் செய்யவில்லை என்பது புரியவில்லை. கயல் இப்போது என் மனதில் இல்லை என்று சப்பைகட்டு கட்டிக்கொண்டான். 

ஆனால் இப்போது வெற்றி கூறிய கயலுக்கு நீ துரோகம் செய்கிறாய் என்ற வார்த்தை நெஞ்சை அறுத்தது. தன்னிலையை நண்பனுக்குப் புரிய வைத்துவிடும் முனைப்போடு வெற்றியை நெருங்கியவன்,

“துரோகமெல்லாம் பெரிய வார்த்தை வெற்றி. ஒருநாளும் கயலுக்கு நான் அதைச் செய்ய மாட்டேன். இப்ப கயலு எம்மனசுக்குள்ளயும் இல்ல. என் வாழ்க்கைக்குள்ளயும் இல்லயேடா.

 ஒருவேளை… கயலுதான் என் வாழ்க்கைங்கற நிலைக்கு நான் வந்தா…, அன்னைக்கு எம்மனச கண்டிப்பா சுத்தமாத்தான் வெச்சுக்கினுருப்பேன் வெற்றி.” 

பாரியின் விளக்கம் மேலும் கடுப்பேற்றியது வெற்றியை. கயல் அவ்வளவு சாதாரணமாகப் போய்விட்டாளா இவனுக்கு? போகிற போக்கில் போனால் போகுதென்று வாழ்க்கை கொடுப்பானா கயலுக்கு? அப்படியானால் கயல் இவன் மீது வைத்திருக்கும் அளவில்லா நேசத்துக்கான மதிப்பு, இவனைப் பொருத்தவரை ஒன்றுமேயில்லையா? நினைக்க நினைக்க கடுப்பாயிருந்தது வெற்றிக்கு. 

“பாரி, என்ன பேசறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா? ஒருவேளை கயலு உன் வாழ்க்கையில வந்தாவா…? என்னடாப் பேசற நீ?  போனாப் போகுதுன்னு நீ கட்டிக்கற அளவுக்கா கயலு சாதாரணமாப் போயிட்டா? 

நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்கற பொண்ணுடா அவ. அதை மறந்துடாத. அப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும். 

எப்பவுமே கையில இருக்கற வைரத்தோட அருமை உன்ன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தெரியாதுடா. எங்கயோ தூரத்துல இருக்கற கை சேரவே சேராத நட்சத்திரத்தைதான் அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருப்பீங்க. போடாங்…”

“…”

“துரோகம்னா என்னன்னு நெனைச்ச? உடம்பால கெட்டுப் போறதுன்னா? அதுக்குக்கூட சில நேரத்துல விதிவிலக்கு இருக்கு. ஆனா மனசுல ஒரு பொண்ணை நினைச்சுக்கிட்டு இன்னோரு பொண்ணுகூட வாழறது கேவலம். அந்தக் கேவலத்தை கயலுக்குச் செய்யாத.”

“…”

“கொஞ்சம்கூட எதிர்பார்ப்பே இல்லாத பாசத்தை உம்மேல வச்சிருக்கால்ல. அதான் அவளோட பாசம் உனக்கு மதிப்பாத் தெரியல போல. யாரு எவன்னே சம்பந்தமில்லாத அந்தப் பொண்ணப் பத்தி அவ்வளவு யோசிச்ச நீ கயலப் பத்தி யோசிக்கல இல்ல. இத உன்கிட்ட நான் எதிர்பார்க்கவே இல்ல பாரி. போடா…”

வெறுப்போடு வார்த்தைகளை உமிழ்ந்தவன் நகர்ந்துவிட்டான். பாரியோடு பேசக்கூடப் பிடிக்கவில்லை. விட்டால் கன்னம் கன்னமாக அறைந்து தள்ளும் வெறி கூட வந்தது. கயல்விழியை தேவதையாய் தான் எண்ணிக் கொண்டிருக்க,  எவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறான். 

என்றைக்கு கயல் மனதில் பாரிதான் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டானோ அன்றிலிருந்து அவளை நினைப்பதுகூடப் பாவம் என்று தான் விலகியிருக்க, பாரியின் மனதில் வேறொரு பெண். 

இப்படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும் விதியை நினைக்கையில் வெறுப்பாய் வந்தது. விலகி வந்து படகின் ஓரத்தில் அமர்ந்து கொண்டான். 

படுத்திருந்த மீனவர்களும் எழுந்து வலையை இழுப்பதற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தனர். கிணற்றில் நீர் இறைக்கும் ராட்டினம் போன்ற அமைப்புடைய பெரிய இரண்டு உருளைகளில் மோட்டார் வைத்து கடலுக்குள் வீசியிருந்த கயிறு இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

இழுபட்ட கயிறு உருளையில் அழகாக சுற்றிக் கொண்டிருந்தது. கயிறு இழுபட இழுபட வலை நெருங்கி வந்து கொண்டிருந்தது. நெருக்கத்தில் வந்ததும் வலை மேலே இழுக்கப்பட்டது. பெரிய அளவிலான வலையை மோட்டார் வைத்துதான் இழுக்க முடியும். சிறிய அளவிலான வலையாய் இருந்தால் கைகளால் இழுப்பர். 

பாரியை எதிர்பார்க்காமல் மீனவர்கள் வலையை இழுத்துக் கொண்டிருந்தனர். எதையுமே கவனிக்கும் நிலையின்றி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான் பாரி. 

அவன் நிலை படுமோசமாய் இருந்தது. வெற்றி கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையாய் விளாசியதில் மொத்தமாய் நிலைகுலைந்திருந்தான். கயலை என்றும் குறைவாகவெல்லாம் நினைத்தவன் இல்லை பாரி. இன்னும் கேட்டால் தன் அன்னையைப் போல அவள் என்றுதான் எண்ணிக் கொள்வான். 

ஆனால் காதல் என்ற உணர்வு அவள் மீது ஒருநாளும் தோன்றவில்லையே! அவன் என்ன செய்வான்? கயலுக்குள் இருக்கும் தன்மீதான நேசம் அவனுக்குமே தெரியும்தான். ஆனால் அதைக் கண்டுகொண்டதாகக்கூட அவன் காட்டிக்கொண்டதில்லை. அவளுமே வெளிப்படையாய் எதையும் வெளிப்படுத்தியதும் இல்லை.

கயல்விழி காதலைக் கொட்டி அவனுக்குச் செய்யும் ஒவ்வொன்றிலும் அவன் காதலைவிடத் தாய்மையைத்தான் கண்டான். அவளுக்குத் துரோகம் செய்கிறேனா நான்? உள்ளுக்குள் மருகிக் கொண்டது உள்ளம். தான் செய்வது எப்பேர்ப்பட்ட தவறு என்பதை வெற்றியின் கோபம் மண்டையில் அடித்துப் புரிய வைத்தது. 

என்றுமே கைசேரவே முடியாத கனவுக்காக, கையில் இருக்கும் நிஜத்தை தவற விடுகிறேனா? என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? சுய அலசலில் ஈடுபட்டது மனம். 

கயலைக் கட்டுகிறேனோ இல்லையோ, ஆனால் வேறொரு பெண்ணை மனதால் நினைப்பது கூடப் பாவம் என்றவரை அவனது அறிவுக்குப் புரிந்தது.

அலைபாயும் மனதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொண்டான். இனி நித்திலாவின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை என்று உள்ளுக்குள் உறுதியெடுத்துக் கொண்டான்.