TholilSaayaVaa18

epinum

மாயா தயங்கியபடி தந்தையைப் பார்க்க அவரும் புன்னகையுடன் ஆம் என்று தலையசைத்தார்.

“நிஜமாவா? விளையாடலையே?”

“இதுல விளையாட என்ன இருக்கு மா? நாங்க பலதடவ யோசிச்சு, பேசி தான் இந்த முடிவுக்கு வந்தோம். இப்போ உங்க ரெண்டு பேரோட முடிவுக்காகத்தான் நாங்க காத்துட்டு இருக்கோம்” 

செய்வதறியாது பைரவின் மீது பார்வையை திருப்பியவள், கண்களால் ஏதோ சொல்ல, அதை புரிந்துகொண்டவன்,

“எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க முடியுமா. நானும் மாயாவும் கொஞ்சம் பேசணும்” என்று கேட்டான்.

பெரியவர்களை முந்திக்கொண்டு மாதவன், “தாராளமா பேசி முடிவெடுங்க, ஆனா சரின்னு மட்டும் சொல்லுங்க!” என்று சொல்ல, பெற்றோர்கள் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.

மாயாவின் அறையில் ஜன்னல் கம்பியை பிடித்தபடி வெளியே வெறித்திருந்த பைரவ், வாணியின் திடீர் அதிரடி தாக்குதலில் குழம்பியிருந்தான்.

சில நிமிடங்கள் நீடித்த அமைதியை கலைத்தது, மழைமேகத்தை துளைத்துக்கொண்டு வந்த இடியும் மின்னலும்.

“மாயா”

“ம்ம்”

“உனக்கு என்ன தோணுது?”

“சாப்பிடலாம் பசிக்குது” சலனமே இல்லாமல் வந்த பதிலில் சிரித்தபடி திரும்பியவன்,

“இப்போ போய் சாப்பிட கேட்டா பிச்சுடுவாங்க. சீரியஸா பதில் சொல்லுடா என்ன பண்ணலாம்?”

“எனக்கு தெரியல… ஓகே சொல்லலாம்னு தான் தோணுது. குழப்பமாவும் இருக்கு. உனக்கு என்ன தோணுது?” அவள் திருப்பி அவனிடமே கேட்க, மறுபடி ஜன்னல் வழியே வெளியே சில நொடிகள் வெறித்தவன், நிதானமாகவே பேசத்துவங்கினான்.

“மாயா… கல்யாணம் பெரிய விஷயம்”

“…!”

“பெரிய கமிட்மென்ட்…!”

“…!”

“நாம தத்துபித்துன்னு முடிவெடுக்க முடியாது…”

மாயாவிடமிருந்து பதில் வராமல் போகவே அவளிடம் திரும்ப,
அவள் அறை முழுதும் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தாள்.

புருவம் சுருக்கி, “என்ன பண்றே?” என்று கேட்க,

அவளோ, “பசிக்குதுன்னு சொன்னேன்ல அதான்… இங்க எங்கயோ ஒரு சாக்லேட்ட பார்த்த ஞாபகம்…”

மேஜையின் டிராயரை குடைந்தபடி பதில் தந்தவளை, சத்தியமாக என்ன செய்வதென்று பைரவிற்கு விளங்கவில்லை.

“நான் நம்ம வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருக்கேன் மாயா” அவன் கண்டிப்பான குரலை அவள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

“ஹையா!” என்று சந்தோஷமாக கத்தியவள், தான் எடுத்த சாக்லேட்டை இரண்டாக உடைத்து அவனுக்கு பாதி தந்து விட்டு, “என் சாக்லேட்டையே தரேன், வாழ்க்கையை தர மாட்டேனா?” என்று புருவங்களை உயர்த்தினாள்.

பைரவின் முகத்திலிருந்த கடுகடுப்பை உணர்ந்து விளையாட்டை கைவிட்டு,
“சரி சரி முறைக்காத” மெதுவாக சாக்லேட்டை வாயிலிட்டு ரசித்து சுவைத்தபடி,

“யாரையோ புதுசா புரிஞ்சுகிட்டு வாழறதுக்கு ஏற்கனவே புரிஞ்சுகிட்ட உன் கூட வாழறது கொஞ்சம் ஈஸியா இருக்கலாம். இதுக்காகவே ஓகே சொல்லலாம்…” மெல்லிய புன்னகையுடன் சொல்லிவிட்டு தோளை குலுக்கிக் கொண்டாள்.

“அதுக்காக கல்யாணம் செஞ்சுக்க முடியுமா?”

“முடியாதா?” சாக்லேட்டை கடித்தபடி கேட்கவளை, பார்த்து புருவங்கள் விரிய,

“இதெல்லாம் மட்டும் போதுமாடா சம்மதம் சொல்ல?” மறுபடி நொந்தபடி கேட்டான்.

“அப்போ என்ன வேணுமாம்?” என்றவள், தன் சாக்லேட்டை தின்று முடித்து அவன் கையில் மீதமிருந்த சாக்லேட்டை பார்த்தபடி, “உனக்கு வேணுமா?” என்று கேட்க,

“நாம பொறுமையா பேசி தான் ஒரு முடிவுக்கு வரணும் மாயா” பைரவ் திருமணம் பற்றி சொல்ல,

“அவ்ளோ நேரம் தாங்காது” என்றாள் இவள்.

“வாட்?”

“சாக்கலேட் உருகிடுமில்ல” உதட்டை கடித்தபடி சொன்னவளை கொலைவெறியோடு பார்த்தவன், அவள் கையில் சாக்லேட்டை கொடுத்து விட்டு,

“இந்தா புடி. தின்னுட்டே இரு! நான் போயி கல்யாணத்துல எங்களுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடறேன்” கோபமாக அவளை தாண்டி சென்றவன் கையை பதறி இழுத்தாள்.

“ஏன் கோவப்படறே? இப்போ என்ன சீரியசா பேசணும் அவ்ளோதானே? ஒரு நிமிஷம் தின்னுட்டு வரேன், பேசுவோம் சரியா?”

“என்னமோ பண்ணு” அலுத்தபடி அமர்ந்துகொள்ள, நிதானமாகவே சாப்பிட்டு முடித்தாள்.

“எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாஸ்” கண்களை இறுக்க மூடி கொண்டவள்,

“பட் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீயும் எல்லாரையும் மாதிரி சீரியஸ் புருஷனா மாறிடுவியோன்னு…” முடிக்காமல் முகம் வாடினாள்.

“உன்னால எப்போவும் போல என்கூட ஜாலியா பேசிக்கிட்டு பழகிட்டு இருக்க முடியுமா?” அவள் கேட்டு முடிக்கும் முன்பே, பேச துவங்கிய பைரவ்,

“கண்டிப்பா நான் மாறமாட்டேன் ஆனா சில மாறுதல்கள் இருக்கும் மாயா. அதை உன்னால ஏத்துக்க முடியுமா?”

“புரியல!”

“நீயும் நானும் பிரெண்ட்ஸா இருக்கவரை நீ எப்படி இருந்தாலும் நான் ஏத்துப்பேன். கல்யாணம்னு ஆனா நீ கொஞ்சம் விளையாட்டு தனத்தை குறைச்சுக்கிட்டு பொறுப்பான மனைவியா, மருமகளா, அம்மாவா இருக்கணும்! உனக்கு அது முடியுமா?” அவன் விளக்க முயன்றான்.

“ஏன் பாஸ் பயமுடுத்தறே?” அவள் முகத்தில் தெரிந்த மிரட்சியில்,

“எதார்த்தத்தை சொன்னேன்டா. உன்னால முடியுமான்னு யோசி, உன்முடிவை வச்சுதான் நான் என்முடிவை சொல்லுவேன்” மென்மையாகவே அவன் சொன்னான்.

“எதுக்கு என்ன கோர்த்துவிடற? நீ மொதல்ல முடிவ சொன்னா என்ன?” அவள் முகத்தை சுருக்க,

“இதுவரை நாம எப்படி பழகினோம்னு நமக்கு தெரியும். ஆனா நம்ம பிரென்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துபோகவேண்டிய சூழ்நிலை அதுக்கு உன் மனசு தயாரா இருக்கான்னு எனக்கு தெரியணும் மாயா”.

“நான் என்ன சொன்னாலும் உனக்கு ஓகேவா?”

“நீ எந்த முடிவெடுத்தாலும் உனக்குள்ள இருக்க பிரெண்டை என்னிக்குமே நான் இழக்க விரும்பல மாயா. அதுல நான் தெளிவா இருக்கேன்” தன் மனஓட்டத்தை தீர்கமாகவே தெரியப்படுத்தினான் பைரவ்.

“எனக்கும் அதுதான் வேணும்! பட்…” அவள் தயங்க,

அவள் கையை மென்மையாக பற்றிகொண்டவன், அவள் முகத்திலிருந்த பயத்தை கண்டுகொண்டு, மென்மையான குரலில் “என்ன பயம்?” கனிவுடன் கேட்டவனை சிலநொடிகள் பார்த்தவள்,

“இப்போ வாணிமா என்கிட்ட ரொம்ப அன்பா இருக்காங்க… கல்யாணத்துக்கு அப்புறம் எப்போவும் போல என்கிட்ட பிரெண்ட்லியா, பாசமா இருப்பாங்களா? இல்ல கண்டிப்பான மாமியாரா…” தயங்கி நிறுத்தினாள்.

“உனக்கு என்ன தோணுது?” புன்னகையுடன் கேட்டவனை பார்த்து பதிலுக்கு புன்னகையை உதிர்த்தவள், மெல்லிய குரலில், “மாற மாட்டாங்கன்னு நினைக்கிறேன்… இருந்தாலும் கொஞ்சம் பயம்.”

“உண்மைய சொல்லப்போனா எனக்கும் இதே தயக்கம் இருக்கு, இப்ப ஆன்ட்டி, அங்கிள் ஃப்ரீயா பழகறாங்க. மாதவன் பிரெண்ட்லியா இருக்கான். பின்னாடி மாப்பிள்ளைன்னு ஒரு ஒதுக்கம் வருமோனு எனக்கும் ஒரு ஓரத்துல யோசனை.”

“அப்படிலாம் மாறாமாட்டாங்க! அதுவும் மாதவன் மாறவேமாட்டான். நான் கேரண்டி!” கட்டைவிரலை உயர்த்தி காட்டினாள்.

“ஹ்ம்ம் அப்படினா சந்தோஷம்தான். ஆனா நீ நினைக்கிற மாதிரி சுலபமானது இல்ல இது… கல்யாணம் ஆனா கண்டிப்பா நாம பழகற விதம் மாறும்…

பிரெண்ட்ஸ்ன்னா நீயும் நானும்தான், கல்யாணம்னா ரெண்டு குடும்பம் சேரும், அவங்க கூட சேர்ந்து சொந்தபந்தங்களும். அவங்களையும் அனுசரிச்சு போகணும்” பைரவ் நிதர்சனத்தை விளக்க,

“அவங்கள தெரிஞ்சு நடந்துக்க நீ ஹெல்ப் பண்ண மாட்டியா பாஸ்? என் கும்பலை சமாளிக்க நான் ஹெல்ப் பண்ணுவேன் உன்னமாதிரி மிரட்ட மாட்டேன்” என்று மாயா சிணுங்கினாள்.

“நான் எங்கடா மிரட்டினேன்? சொன்னேன் அவ்ளோதான்! கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்! மாட்டேன்னு எப்போ சொன்னேன்?” என்று முறைத்தவனை பதிலுக்கு முறைத்தவள்,

“இப்போ இதெல்லாம் பேசி என்ன ஆகபோது? சட்டுபுட்டுனு முடிவை சொன்னோமா சாப்பிட்டோமான்னு இல்லாம!”

மாயா விளையாட்டாய் இதை எடுத்துக்கொள்வது அவனுக்கு எரிச்சலூட்டியது, “ஒழுங்கா யோசிச்சு உன் முடிவ சொல்லு. இல்ல வேணாம்னு சொல்லிடுவோம்!” கடிந்துகொண்டான்.

“உனக்கு புடிக்கலைனா வேணாம்னு சொல்லிடு! எதுக்கு சும்மா சிடு சிடுன்னு…” பதிலுக்கு கடிந்துகொண்டவள்,

“வாங்க பழக்கலாம்னுலாம்ன்னு வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணோமோ, வாழ்ந்தோமான்னு இல்லாம. எவ்ளோநேரம் தான் அரைச்ச மாவையே அரைப்பே?” என்று சலித்தபடி, தன் அறை கதவை திறந்து வாயிலில் ஒருபுறம் சாய்ந்து நின்று கொண்டாள்.

“பாரு பாஸ், நீ ஓவரா யோசிக்காத. எனக்கு இவ்ளோலாம் யோசிக்க முடியல, பசி வேற காத அடைகுது.”

கட்டிலிலிருந்து எழுந்து வந்த பைரவ் வாயிலின் மறுபுறம் சாய்த்து நின்றுகொண்டான்.

“இப்போ என்னதான்டா முடிவா சொல்றே? கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“பண்ணிக்கலாம்! பண்ணிக்கலாம்!” உற்சாகமாக சொன்னவள்,

“உனக்கு ஓகேவா?” ஆவலுடன் அவனை கேட்க, அவனோ அவளை பாராது புன்னகையுடன் முன்னே நடக்க துவங்கினான்.

இதை எதிர்பார்க்காத மாயா “பதிலே சொல்லாம போறியே! நில்லு… ஹே… பைரவ்!
நில்லுன்னு சொல்றேன்ல அடேய் நெட்டகொக்கு… நில்லுடா CEO… ப்ளீஸ் பாஸ்! ஏதாவது சொல்லிட்டுப்போ…” மிரட்டலும் கெஞ்சலுமாய் மாயா, பைரவை பின் தொடர்ந்தாள்.

தங்கள் இருவரின் சம்மதத்திற்காக குடும்பத்தினர் பதற்றத்துடன் இருப்பார்களென்று நினைத்த மாயா குடும்பத்தினர் யாரும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டு இன்னும் கடுப்பாகி போனாள்.

கீதா, வாணி சமையலறையிலிருந்து சமைத்த உணவுகளை மேஜையில் அடிக்கி கொண்டிருந்தனர். கிருஷ்ணன் டிவியில் மூழ்கியிருக்க, மாதவனோ மொபைலில் எதோ கேம் விளையாடி கொண்டிருந்தான்.

பைரவோ எதார்த்தமாக, கிருஷ்ணனின் அருகில் அமர்ந்துகொள்ள, மாயாவால் அவனின் பாரா முகத்தை தாங்க முடியவில்லை.

“பைரவ்!” அவள் குரலில் அதிர்ந்து திரும்பியது மாதவனும் கிருஷ்ணனும் தான். பைரவ் கண்டுகொள்வதாய் இல்லை.

“ஏண்டி கத்தறே?” மாதவன் முறைக்க,

“ஓவரா சீன போடறான். நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொன்னேன் ஆனா இவன் ஒண்ணுமே சொல்லாம வந்துட்டான்!”

“நிஜமாவே உனக்கு சம்மதம் தான மா?” கிருஷ்ணன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி மாயாவையும் ஏனோ தொற்றிக்கொண்டது.

“எனக்கு ஓகே தான் பா” உற்சாகமாக சொன்னவள், போலியான அலுப்புடன் பைரவை ஓரக்கண்ணில் பார்த்தபடி,

“என்ன பாஸுக்கு இஷ்டம் இல்ல போல இருக்கு” வம்பிழுக்க,

மாதவனோ, “நல்ல வேளை நான் கூட எங்க பைரவ் ஓகே சொல்லி உன் வலைல விழுந்துடுவானோன்னு பயந்துட்டேன். வெல்டன்!” என்றவன் பைரவிற்கு ஹை ஃபை கொடுத்து சிரிக்க,

“அப்போ உனக்கு இஷ்டம் இல்ல அதானே? சரி போ எனக்கும் வேணாம்!” படபடத்தவள்,

சோஃபா மேல் ஏறி நின்று, “எல்லாரும் இங்க பாருங்க! எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமுன்னு சொல்லிட்டேன். ஆனா பைரவுக்கு இதுல இஷ்டமில்லைன்னு தெரியுறதால… நானும் இப்போ இந்த கல்யாணம் வேண்டா…”

அவள் பேச துவங்கும்பொழுது சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த பைரவ், அவள் வேண்டாமென்று சொல்லவரும்பொழுதே, பதறி எழுந்து,

“எனக்கு சம்மதம் இல்லைன்னு யார் சொன்னா?” கேட்டான்.

“அவனுக்கு ஹய்ஃபை கொடுத்த? பிளஸ் வேணும்னும் சொல்லலையே!”

“நான் ஏதோ விளையாட்டா… அதுக்காக இஷ்டம் இல்லனு சொல்லுவியா?”

“அப்போ இருக்கோ?”

“இருக்கு! இருக்கு!”

“என்னடா இருக்கு?” நடக்கும் கூத்தை மௌனமாக சிரித்தபடி பார்த்திருந்த வாணி போலியான மிரட்டலுடன் பைரவை கேட்க,

“உடம்பு ஃபுல்லா கொழுப்பு இருக்குதாம் வாணி மா” மாயா கடுப்படித்தாள்.

“என்னடி பேச்சு இது?” கடிந்து கொண்ட கீதா, “சாரி கேளு மொதல்ல” மாயாவை மிரட்ட,

“விடுங்கப்பா பசங்கதானே” மாயாவிற்கு பரிந்துகொண்டு வந்த வாணி, “சரி என்னதான் சொல்றீங்க ஃபைனலா?” பிள்ளைகளின் சம்மதத்தை மறுமுறை கேட்க,

கிருஷ்ணன், “நீங்க ரெண்டுபேரும் மனப்பூர்வமா சரின்னு சொன்னா தான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும். எங்களுக்காக சொல்ல வேண்டாம். மனசுல படறதை தயக்கமில்லாம சொல்லுங்க.”

மாதவன் முகமெங்கும் சிரிப்புடன், “ஆமா நீங்க சரி சொன்னா கல்யாணத்துக்கான வேலைய பாப்போம், இல்லன்னு சொன்னா மேரேஜுக்கான வேலையை பாப்போம், சைலண்டா இருந்தா மௌனம் சம்மதம்னு வெட்டிங்க்கான ஏற்பாட்டுல இறங்குவோம்! என்னப்பா நான் சொல்றது?” சொல்லவும் அனைவரின் முகத்திலும் சந்தோச சிரிப்பு பரவியது.

“எனக்கு 100% ஓகே!” என்ற பைரவ், மாயாவிடம் “உனக்கு?” அவள் கண்களை நேராக பார்த்து கேட்க,

“நான் தான் ஓகே சொல்லிட்டேனே!” என்றவள்,

“உங்க எல்லாருக்கும் நிஜமாவே ஓகே வா? எதுக்காக இப்படி பிளான் பண்ணீங்க? எனக்கென்னமோ இன்னும் கொஞ்சம் டவுட்டாவே இருக்கு” பொதுவாக கேட்டாள்.

“அதான் காரணம் ஏற்கனவே சொன்னோமே! நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா தான் சந்தோஷமா இருப்பீங்கன்னு எங்க எல்லாருக்கும் தோணிகிட்டே இருக்கு. எங்களுக்கு உங்க சந்தோஷம் தானே முக்கியம்” மகளின் சிகையை வருடியபடி சொன்ன கிருஷ்ணன்,

“நாங்களா எப்படி இந்த பேச்சை எடுக்கறதுன்னு தயங்கி யோச்சுட்டு இருந்தப்போ பைரவ் அம்மா கேட்கவும் சம்மதம் சொல்லிட்டோம். உங்க ரெண்டு பேர் மனசை தெரிஞ்சுக்க காத்திருந்தோம்.”

“சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாப்போம்!” என்ற கீதா, வாணியிடம் “பைரவ் ஜாதகம் இருந்தா அனுப்புங்களேன் ஜோசியர்கிட்ட பேச ஏதுவா இருக்கும்”

வாணியோ புன்னகையுடன்,”நான் ஏற்கனவே ஜாதகத்தை மெயில் பண்ணிட்டேன்” என்றார்.

“வாணிமா செம்ம ஸ்பீட் நீங்க” பாராட்டிய மாதவன், கிருஷ்ணனிடம், “அப்போ ஜோசியர் கிட்ட பேச அப்பாயின்மெண்ட் போடவா பா?” உற்சாகமாக கேட்க,

“அதுக்கு முன்னாடி உன் தங்கைக்கு சோறு போடு! பசிக்குதுன்னு ஒரு மணிநேரம் கத்தறேன். ஒருத்தரும் கண்டுக்கல” கோவமாக கைகளை கட்டிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டாள் மாயா.

மகளின் செய்கையில் நெளிந்தபடி வாணியை பார்த்த கீதா “பசி பொறுக்க மாட்டா அதான்…”

அவர் தயக்கத்தை உணர்ந்தவர், புன்னகையுடன் “அதுனால என்னப்பா இதெல்லாம் சொல்லனுமா?”

“பெரியவன் அளவுக்கு செல்லம் கொடுக்காம தான் வளர்தோம், இருந்தாலும் அவ வால்தனம் குறைஞ்ச பாடில்ல. அதுனால தான் எங்களுக்கு தயக்கமா இருந்தது உங்ககிட்ட கல்யாணத்தை பத்தி பேச…” மேலும் கீதா தாயாக பேச,

“இதெல்லாம் இல்லாம அப்பறம் என்ன இருக்கு. குழந்தைகளுக்கு அழகே வால்தனம் தானே” வாணி சமாதானம் சொன்னார்.

“வாணிமா நீங்க சொல்றது குழந்தைக்குத்தான் பொருந்தும்” டைனிங் டேபிளில் இருந்த வடையை எடுத்த மாதவன், “இவளைமாதிரி கோட்டானுக்கு இல்ல” என்று சிரிக்க,

“அவளை அப்படி சொல்லாதேன்னு சொன்னேன்ல?” கடிந்துகொண்ட கீதா, அனைவரையும் சாப்பிட அழைக்க, பேச்சும் கிண்டலும் கல்யாணத்திற்கான சில பேச்சுக்களுமென, அன்று முழுவதும் அங்கேயே கழித்த வாணி, பைரவ் இரவு உணவிற்கு பின்பே வீடு திரும்பினர்.

இரவு தன் அறையில் கண்களைமூடி ரிக்லைனர் சேரில் அமர்ந்திருந்த பைரவ் அன்று நடந்ததை மீண்டும் மீண்டும் அசைப்போட்டு கொண்டிருந்தான்.

நேற்றுவரை மாயாவை மணக்கும் எண்ணம் கனவிலும் வந்ததில்லை. இன்றோ பெரியவர்கள் கேட்டவுடனே ஏனோ உடனே சம்மதம் சொல்ல மனம் துடித்ததும், மாயாவின் பதில் வரும் வரை தன்னிடமிருந்த சொல்லத்தெரியாத பதற்றமும் எதிர்பார்ப்பும் புதியதாய் தோன்றியது.

மொபைல் சினுங்க, மாயாதான் அழைத்துக் கொண்டிருந்தாள், முகத்தில் மெல்லிய புன்னகை இழையோட, “சொல்லுடா தூங்கலையா?”

“தூக்கமா? இவ்ளோ நேரம் எல்லாருமா சேர்ந்து காது ஜவ்வு கிழிய கிழிய அட்வைஸ் பண்ணி என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க!”

“எதுக்கு அட்வைஸ்?”

“கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிப்போச்சுல்ல. இனிமே இப்படிதான் நடந்துக்கணும், அப்படிதான் பேசணும், பழகனும்னு… முடியலடா சாமி! சாப்பிட்டதெல்லாம் செரிச்சுப்போச்சு”

“என்னடா நீ? இதுக்கெல்லாம் பீல் பண்ணலாமா?” அக்கறையாக கேட்டவன், குரலில் குறும்புடன், “கவலைப்படாத இனிமே இப்படி இருக்காது.”

“அப்போ ஸ்டாப் பண்ணிடுவாங்களா?” ஆர்வமாக கேட்டவள்,

அவனின், “ச்சே ச்சே இதே பழகிடும்னு சொன்னேன்” என்ற பதிலில் கடுப்பாகி போக,

“இப்போதான் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க இனிமேதான் நிறைய நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க. என்ஜாய்!” என்று சொல்லி பைரவ் சிரிக்கவும்,

“என்னது ஸ்டார்டிங்கே இப்படியா?” மலைத்தவள், ஏதோ யோசனையாய் “பாஸ் ஒன்னு கேக்கவா?”

“கேளுடா” சேரிலிருந்து எழுந்தவன் படுக்கையில் படுத்துகொண்டான்.

“பைரவ் இந்த கல்யாணம் நிஜமாவே உனக்கு ஓகே தானா? இல்ல எனக்காக ஓகே சொன்னியா?” ஏனோ இப்பொழுதும் அவள் மனம் நம்ப மறுத்தது.

அவளின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராதவன், எந்த உணர்ச்சியுமின்றி “ஏன் உனக்கு என்ன தோணுது?” என்று கேட்க,

மாயாவோ, “நீ தான் சொல்லேன்” கோவமாக கெஞ்சினாள்.

“இதுலலாம் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன் மாயா! நான் நல்லா யோசிச்சுதான் ஓகே சொன்னேன்…” சில நொடிகள் மௌனமானவன், “நீ எனக்காக சொன்னியா?” அவன் குரலில் ஆதங்கம்.

“அந்துக்கேமி சந்தேகம்? உனக்காக தான் சொன்னேன்!” சிறிதும் யோசிக்காமல் பதில் வர, அதிர்ந்தான்.

“வாட்? அப்போ நீ எனக்காக ஓகே சொன்னியா? பிடிக்காம எதுக்கு இப்போ கல்யாணத்துக்கு தலையை ஆட்டின?” படபடவென பொரிந்து தள்ளினான்.

“தோ டா! பிடிக்கலைன்னு நான் எப்போ பாஸ் சொன்னேன்?”

பைரவால் அவள் குரலில் தெரிந்த உணர்வை புரிந்துகொள்ள இயலவில்லை. அழைப்பை துண்டித்தவன் மாயாவிற்கு வீடியோ கால் செய்தான்.

இரவு உடையில், முகத்தில் எதையோ பூசிக்கொண்டு திரு திருவென விழித்துக்கொண்டு அழைப்பை ஏற்றவளை கண்டவன், படபடப்பை மறந்து சிரிக்க துவங்கினான்.

“அர்த்த ராத்திரி என்னடா இது வேஷம்?”

“சிரிச்சே பிச்சுடுவேன் ஆமா! ஃபேஸ் பேக் போட்ருக்கேன், கீத்ஸ் உபயம். இனிமே ஒழுங்கா ஸ்கின்னை பாத்துக்கோன்னு அப்பி விட்ருக்காங்க.”

“அதுக்குன்னு நடுராத்திரியா? உனக்கே இது டூ மச்சா இல்ல?”

அவன் கிண்டலில் கடுப்பானவள், “இதை கேக்கத்தான் கால் பண்ணியா?” என்று முறைக்க,

“இல்லைடா உன் கொண்டையும், இந்த வேஷமும் எல்லாத்துக்கும் மேல உன் திருட்டு முழியும் காண கண்கோடி வேணும்!” மீண்டும் சிரிக்க துவங்கியவன் அவள் முறைப்பை கண்டுகொள்ளவில்லை.

“நான் கட் பண்றேன் போ” கோவமாக அழைப்பை துண்டிக்க எத்தனித்தவளை,

“சும்மா விளையாடினேன்டா…” சில பல நிமிடங்களுக்கு பிறகு ஒருவழியாக சமாதானம் செய்தவன், “மாயா…”

“ம்ம்”

“நிஜம்மா என்னை பிடிச்சுதான் ஓகே சொன்னியா?” அவள் பதிலுக்காக காத்திருந்தவன் அவள் முகத்தையே கூர்ந்து நோக்க, அவளோ அலட்டி கொள்ளாமல்,

“பிடிச்சுதான் சொன்னேன். உன்ன பிடிக்காம இருக்குமா? ரொம்ப ரொம்ப பிடிச்சு சொன்னேன். லவ் இல்ல ஆனா பிடிக்கும். போதுமா இன்னும் சந்தேகமா?”

எனோ நிம்மதியாக உணர்ந்தவன் மகிழ்ச்சியுடன். “தேங்க்ஸ்டா… இருந்தாலும் நீ பாக்க மஞ்சகலர் பாண்டா மாதிரி தான் இருக்க” மறுபடி கேலி செய்ய,

“நீ ரொம்ப அழகோ?” அவள் முறைக்க,

“அதுல என்ன சந்தேகம்?” புருவம் உயர்த்தியவன், தலையை கோதிக்கொண்டு, “என் ரேஞ் தெரியல ஆழாக்கு உனக்கு!”

“ஹலோ அதை நாங்க சொல்லணும்!”

“அதுக்கெல்லாம் பெரியமனசு வேணும், அது உனக்கில்ல” அவளை வம்பிழுப்பது இன்று இன்னும் பிடித்துபோய்விட, அவன் மேலும் மேலும் கேலி செய்ய, பொறுமை இழந்தவள் கத்த துவங்கினாள்.

“வேணாம் பாஸ்…இப்ப அங்க வந்தேன்…. அப்படியே உன்ன…”

அவள் மிரட்டலைகளை ரசித்தவாறே பைரவ் மேலும் மேலும் அவளை சீண்டி விளையாட,
அவர்கள் செல்ல சண்டை மீண்டும் களைகட்ட துவங்கியது.

****