ஆழி சூழ் நித்திலமே 8 (அ)

      8

 

 

விடிந்து வெகு நேரமாகியிருந்தது. வீசும் காற்றில் சூரியனின் வெம்மைகூட ஏறியிருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே வெளிச்சம் முகத்தில் அடித்த போதும் கூட கண்களைத் திறக்காமல் படுத்துக் கிடந்தான் பாரி. புயல் காற்றில் பிரித்து வைக்கப்பட்ட பொறி மூட்டையைப் போல இலக்கின்றி அலைபாய்ந்தது மனம். 

தூக்கம் இல்லை. இரவு முழுக்க ஒரு நொடி கூட கண் மூடவில்லை. கண்களை மூடினாலே நிழல் ஓவியமாய் தவிப்போடு  இருளில் நின்றிருந்த நித்திலாவின் பிம்பம் உள்ளுக்குள்  தோன்றி அவன் மூளையை ஆக்ரமித்தது. 

அதுவும் முன்தினம் இரவு மெல்லிய நிலவொளியில் தேவதையாய் அவள் நின்றிருந்தது மனதில் கல்வெட்டாய் பதிந்து போயிருந்தது. அன்று வெற்றியிடம் அவளைப் பார்க்க மாட்டேன் என்று உறுதி கொடுத்த பிறகு நேற்றுதான் அவள் முகம் பார்த்திருந்தான். 

அதுவுமே அவள் தனிமையில் அங்கே நின்று இருந்ததால் உடன் நிற்கவும் முடியாமல் விட்டுப் போகவும் முடியாமல் தவிப்போடு அங்கே நின்றிருந்தான். யாரோ ஒரு பெண் நிற்கிறாள் கடந்து போவோம் என்று அவனால் எண்ணக்கூட முடியவில்லை. 

அது ஒன்றும் ஆபத்தான பாதை கிடையாது. தினமும் அவள் சென்று போகும் வழிதான். தனிமையில் நின்றதால்தான் அவளிடம் அத்தனை பதட்டமும் பயமும் இருந்தது. அந்த நிலையில் அவளை விட்டு நகரக்கூட மனம் வரவில்லை. 

அன்று வெற்றி அவ்வளவு கடுமையாகப் பேசியது முழுக்க முழுக்க தன்னுடைய நலனுக்காகத்தான் என்பது அவனுக்கு புரியத்தான் செய்தது. வெற்றியின் பேச்சுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் மீதான  உணர்வுகளுக்கு எதிர்காலமே இல்லை என்பதும், அந்தப் பெண்ணின் மீதான தனது உணர்வுகளை வளர விடுவது தனக்கோ அந்தப் பெண்ணுக்கோ நல்லதில்லை என்பதும் அவனுக்குப் புரிந்துதான் இருந்தது.

அவளை பார்க்கக்கூடாது என்பதில்கூட அவன் மிகவும் உறுதியாய்தான் இருந்தான். ஆனால், நிதர்சனம் வேறு. அவள் வீட்டின் பாதையில் செல்லும் போது அலைபாயும் கண்களை என்ன முயன்றும் அவனால் கட்டுப்படுத்த முடியாததில் வெளியே எங்குமே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிப் போனான்.

வெற்றியிடம் அன்று அவள் எதிரே வந்தால்கூட பார்க்க மாட்டேன் என்று சொன்னதையெல்லாம் தன்னால் கடைபிடிக்க முடியாது என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்து போனதில் தன்னை வெகு பலகீனமாக உணர்ந்தான். 

அது அவனை மிகவும் பாதித்திருந்தது. முயன்று வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினாலும் மீண்டும் மீண்டும் அவளின் நினைவுகளுக்கே ஓடி வரும் மனதை என்ன செய்வது என்றே புரியவில்லை. 

மிகுந்த கோபமும் எரிச்சலுமாய் அனைவரிடமும் காய்ந்து கொண்டிருந்தவன் எப்பொழுதும் முகம் திருப்பியிராத கயலிடம்கூட இரண்டொரு முறை எரிந்து விழுந்திருந்தான். 

ஏன் எதற்கு என்றே புரியாத பாரியின் இந்த பரிணாமம் அவனைச் சுற்றியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. 

“இப்ப இன்னாத்துக்கு சமைஞ்ச புள்ள கணக்கா வூட்டுக்குள்ளவே குந்திக்கினு இருக்க நீனு. கடலுக்குப் போயி பத்து நாளாவுது. மூஞ்சிய இம்மாம் நீளத்துக்குத் தூக்கி வச்சிக்கினு வூட்டையே அடகாத்துக்கினுக்கீற. சரியே இல்லியே. என்னாச்சு பாரி?” அதட்டிய ஆயாவுக்கு அவனின் மௌனமே பதிலாய் கிடைத்தது. 

எவ்வளவு நாள் வீட்டில் அடைய முடியும்? வேலைகள் இருக்கிறதே அவளை வெளியே பார்க்க முடியாது என்று உறுதியாக தெரிந்த வேளைகளில் மட்டுமே வெளியே சென்றான். அப்படியும் நேற்றிரவு எதிர்பாராமல் அவளைச் சந்தித்தது வெகுவாய் முடக்கிப் போட்டிருந்தது அவனை. 

இத்தனை நாட்களாய் அவள் முகம் பார்க்காமல் இருந்தது ஒருவகை சித்ரவதை என்றால், நேற்று அவளது மதிமுகம் பார்த்ததிலிருந்து வேறுவகையான சித்ரவதை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மனதை அடக்க முடியா சித்ரவதை. 

இப்பொழுதே இந்த நொடியே அவள் அருகே வேண்டும் என்று அலறும் மனதின் குரல் அவனை விதிர்விதிர்க்கச் செய்திருந்தது…  காதல் ஒரு மீள முடியாத போதை என்பதை நன்றாய் புரிந்து கொண்டான்.

அதிலும் இத்தனை நாளாய் பார்க்காமல் முயன்று தவிர்த்த முகம் நேற்றிரவில் இருந்து சட்டமாய் உள்ளே பதிந்து உணர்வுகளைத் தூண்டி பேயாட்டம் போட்டது. இனி அவளை பார்க்காமல் ஒதுங்கி இருப்பது சாத்தியமில்லை என்பதும், தன் நெஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து இருப்பவள் அவள்தானென்றும் தெளிவாய் உணர்ந்து கொண்டான். 

 ஆனால் எதிர்காலமே இல்லாத, கொஞ்சம் கூட நிறைவேற சாத்தியமே இல்லாத காதல் தனக்கு ஏன் வந்தது என்ற வேதனை மனதை வெகுவாய் இறுக்கியது. 

எவ்வளவு வசதியிருந்தாலும் ஒரு மீனவனான தனக்கு அவளை பெண் கொடுக்க மாட்டார்கள் என்ற உண்மையை கசப்பாய் விழுங்கிக் கொண்டான். பெண் கொடுப்பது என்ன, தன்னை சமமான மனிதனாய் பார்ப்பது கூட கடினம் என்றும் புரிந்தது. 

கொள்ளை அழகோடு, நன்கு படித்து, அருமையான குடும்பத்தில் நல்ல குணங்களோடு வளர்க்கப்பட்ட பெண்ணுக்குத் தான் துளிகூட பொருத்தமில்லை.  ஒருவேளை நூறில் ஒரு வாய்ப்பாக அவளைத் திருமணம் செய்தாலும் அது தனக்கு வேண்டுமானால் பேரதிர்ஷ்டமாக இருக்கலாம், ஆனால் அவளுக்கு…? 

அவளைவிட்டு தான் ஒதுங்கிப் போவதுதான் அவளுக்கு நல்லது. அவளை இனி பார்க்கக்கூடாது என்றால் ஒன்று அவள் இந்த ஏரியாவை விட்டுப் போக வேண்டும். இல்லையா தான் வேறிடம் போக வேண்டும். உறுதியாக முடிவெடுத்தான். 

பிறந்தது முதல் இத்தனை வருடங்களாக வாழ்ந்த குப்பத்தை விட்டுப் போக வேண்டும் என்று எண்ணுவதே கடினமாக இருந்தாலும் இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எண்ணிக் கொண்டான்… 

பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெகுதூரமாக அவள் தன் பார்வையில் பட்டுவிடாத தூரத்துக்கு, அவளுக்கு எந்தவகையிலும் தொந்தரவு தராத தூரத்துக்கு தன்னால் போக முடியும். ஆனால் மிகநெருக்கமாய் மனதுக்கு உள்ளே சட்டமாய் அமர்ந்து கண்சிமிட்டுபவளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் என்றே தோன்றவில்லை. 

அவளை மறந்தால் அதன்பின் தான் ஒன்றுமே இல்லாத கூடுதான் என்பதையும் உணர்ந்தவனுக்கு கண்ணோரங்கள் லேசாய்க் கசிந்தன.  இவ்வளவு அழுத்தமாய் அந்தப் பெண் தன் மனதில் இருக்கிறாள் என்பதையே இன்றுதான் தெளிவாய் உணர்ந்தான். 

கயல்விழியிடம் பேச வேண்டிய கட்டாயத்தையும் தெளிவாய் உணர்ந்து கொண்டான். இனியும் தாமதம் செய்வது தேவையில்லாத அனர்த்தங்களை ஏற்படுத்திவிடும்.

 சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த பெண் கயல் . அவள் வாழ்க்கை நலமோடு இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.  தான் சொல்வதை கயல்விழி கண்டிப்பாக கேட்பாள் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. 

இவற்றையெல்லாம் எண்ணிக் கொண்டே இரவெல்லாம் விழித்திருந்து மனதை உழப்பியது மிகுந்த சோர்வைக் கொடுத்திருந்தது அவனுக்கு. வெற்றி வேறு காலையிலேயே ஃபோன் செய்து நுங்கம்பாக்கம் வரச் சொல்லியிருந்தான். 

வெகு நாட்களாகவே இருவரும் சேர்ந்து துவங்க திட்டமிட்டிருந்த பதப்படுத்தப்பட்ட மீன் உணவு ஏற்றுமதிக்கான அனுமதி வாங்க இன்று செல்வதாய் இருந்தது. அதற்கான ஆவணங்களைச் சரிபார்த்து எடுத்து வைத்தவனுக்கு கிளம்பிச் செல்லக்கூட எரிச்சலாய் இருந்தது. 

கண்மூடி அமைதியாகப் படுத்திருந்தவனை கயல்விழியின் குரல்தான் எழுப்பியது. 

“மாமா, இந்த செல்வி புள்ளய வந்து கொஞ்சம் இன்னான்னு கேளு மாமா.”

“ப்ச்” என்ற சலிப்போடு கண்களைத் திறந்தவன், “ஏன் கயலு? என்னாவாம் செல்விக்கு?”

“நேத்தே புடுச்சி அவளோட ஒரே பேஜாராக்கிது மாமா. ஸ்கோலுக்குப் போ மாட்டேன்னு ஜூட்டு வுட்டுக்கினு ரவுசு பண்ணிக்கினுக்கிறா. அம்மாம் அடமாக்குறா. அவ அண்ணே போட்டு அடிச்சி செவுளப் பிச்சிடுச்சி, ஆனாலும் அடங்குவனாங்குறா.”

“ஸ்கோலுக்கு போ மாட்டேன்னுச்சா? ஏனாம்? இன்னாவாம் அதுக்கு?” எழுந்தவன் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தான். 

“நேத்தே புடுச்சி ரவுண்டு கட்டினு கேட்டுனுக்கறோம் ஒன்னியும் வாயே தெறக்கல. அம்மாம் அடிச்சும் கம்முனு நின்னுக்குறா.” பேசிக்கொண்டே தேவாவின் வீட்டை அடைந்திருந்தனர் இருவரும். 

காலை வேளை குப்பத்துப் பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பி சென்று கொண்டிருக்க, தேவாவின் வீட்டிலோ தேவாவும் அவன் தாய் ராணியும் அவ்வளவு வற்புறுத்தியும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடமாக நின்றிருந்தாள் செல்வி. 

தேவாவும் அவனது அம்மாவும் அடித்ததில் அழுகையில் விசும்பியபடி இருந்தவளை பார்க்கவே பாவமாய் இருந்தது பாரிக்கு. அவ்வளவு நேரமாக அவளோடு போராடிவிட்டு, வீட்டினுள் மிகக் கடுப்போடு நின்றிருந்த தேவாவைப் பார்த்த பாரி,

“இன்னாடா தேவா, ஏன் செல்வி ஸ்கோலுக்குப் போ மாட்டேங்குது? எதுக்குடா புள்ளய போட்டு இப்புடி அடிச்சுக்கற நீயு?”

“வா பாரிண்ணா. நீயே இன்னான்னு கேளு. இதுக்கோசரம் எம்மாம் பாடுபடறேன் நானு. வெயிலுன்னும் மழையின்னும் பாராம நாஸ்தா துன்னாம ஒழைக்கறது இதுக்கான்டிதான. இது நல்லா படிச்சி காலேஜூக்குலாம் போவும்னு நா எம்மாங் கனா கண்டுக்கினுக்கிறேன். இதுக்கு எம்மாம் தெனாவட்டு இருந்தா ஸ்கோலுக்குப் போ மாட்டேன்னு ரவுசு பண்ணிக்கினுக்குது.” 

என்றபடி மீண்டும் செல்வியை அடிக்கப் பாய்ந்தான் தேவா. ஏற்கனவே அவனது அம்மாவிடமும் அவனிடமும் வாங்கிய அடியில் அவளது முகமே வீங்கியிருந்தது. கண்ணீர் முட்டிய கண்களோடு வீம்பாய் நின்றிருந்தாள் செல்வி. 

அடிக்கப் பாய்ந்தவனின் கையைப் பிடித்த பாரி, “டேய் குயந்தப் புள்ளடா அது. அதுக்கு இன்னா கஷ்டம் எதுக்கு ஸ்கோலுக்குப் போ மாட்டேங்குதுன்னு அதுகிட்ட விசாரிடா. சும்மா புள்ளய போட்டு அடிச்சினுக்கிற.”

“அய்யே நேத்தே புடுச்சி கேட்டுக்கினுக்கிறேன் பாரி. வாயே தொறக்க மாட்டேங்கா. திமிரெடுத்த கழுத படிக்கனும்னா அம்மாம் கஷ்டமாக்கிது அவளுக்கு.” அங்கலாய்த்தாள் செல்வியின் தாய் ராணி. 

“இன்னா அத்த இப்புடி சொல்ற. அந்தப் புள்ள எம்மாம் சூப்பரா படிக்கும். பத்தாவதுல எம்புட்டு நல்ல மார்க்கு வாங்கி தலைவரு கையால பரிசெல்லாம் வாங்குனுச்சி அத்தப் போயி இப்புடி அடிச்சிக்கிறீங்கோ. 

அதுக்கு ஸ்கோலுக்குப் போவ ஏன் புடிக்கல?  எதுக்குப் போ மாட்டேங்குதுன்னு பக்கத்துல உக்காத்தி வச்சி கேட்டாத்தான அது சொல்லும். அத்த வுட்டுட்டு அடிச்சா சொல்லுமா?” 

தேவாவிடமும் அவனது தாய் ராணியிடமும் கடிந்து கொண்ட பாரி, செல்வியின் தலையைத் தடவியவாறு, 

“இன்னாத்துக்கு செல்வி ஸ்கூலுக்குப் போ மாட்டேங்குற? நல்லா படிக்கற புள்ளதான நீயு. இம்மாம் நாளா அழவா ஸ்கோலுக்குப் போயிக்கினுதான இருந்த. இப்ப இன்னாம்மே ஆச்சி?”

“…”

குரலில் மென்மையைத் தேக்கி கேட்ட பாரிக்கும் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து அமைதியாய் நின்றிருந்தாள் செல்வி. அவளது அடம் சிறுபிள்ளைத் தனமாக தோன்றியதில் மெல்ல விசாரித்தான். 

“யாருன்னா ஸ்கோல்ல திட்டுனாங்களா செல்வி? வாத்திமாருங்க யாரும் அடிச்சாங்களா?”

“…”

“கூடப் படிக்குற தோஸ்த்துப் புள்ளைங்களோட சண்டை புடிச்சிக்கினியா?”

“…”

“படிக்க கஷ்டமாக்கிதா? டியூஷன் வேணா எங்கனாச்சும் இஸ்த்துக்கினு போயி சேர்த்து வுடவா?”

“…” என்ன கேட்டும் வாயவே திறக்காமல் அழுத்தமாய் நின்றவளைப் பார்த்து அனைவருக்குமே எரிச்சலாய் வந்தது. 

“மாமா கேக்குதுல்ல,  இப்புடி நின்னுக்குனா என்னா அர்த்தம் செல்வி. எதனா வாயத் தொறந்து சொன்னாதான புரியும்.” கயலும் கெஞ்ச, 

“நேத்தே புடுச்சி இதெல்லாம் நானும் கேட்டுக்கினுதான் இருக்கேன் பாரிண்ணா. வாயே தொறக்க மாட்டேங்கா.” வெகுண்டான் தேவா. 

“இம்மாம் பேரு கேக்கறோமில்ல. வாயத் தொறந்து பேசேன்டி.” 

“என்னைய எதுவும் கேக்காதீங்க. நான் இனிமேட்டுக்கு ஸ்கூலுக்குப் போ மாட்டேன். போ மாட்டேன்.” ஆங்காரமாய் கத்தியவளுக்கு பட் பட்டென்று அடி கிடைத்தது ராணியிடமிருந்து. இருவரையும் பிரித்து அமர வைக்கவே சிரமமாய் போனது பாரிக்கும் கயலுக்கும். 

“இந்தா அத்த! புள்ள மேல கைய வைக்காதேங்கறேனுல்ல. நானு பொறுமையா கேக்கறேன். நீ கம்முன்னு இரு.”

ராணியை அடக்கியவன், அடிவாங்கி விசும்பியபடி இருந்த செல்வியை தோளோடு அணைத்துக் கொண்டு வெளியே கூட்டி வந்து அங்கே இருந்த திண்ணையில் அமர வைத்தான். அவளருகே அமர்ந்தவன், பொறுமையாக எவ்வளவு நேரம் கேட்டும் வாயைத் திறக்க வைக்கவே அவனால் முடியவில்லை. 

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். பொறுமையே பறந்துவிடும் போலிருந்தது அவனுக்கு. எரிச்சலோடு தலையை அழுந்தக் கோதிக் கொண்டான். ஏற்கனவே இருந்த மண்டைக் குடைச்சலோடு செல்வியின் அடமும் சேர்ந்து மிகக் கடுப்பாக்கியது அவனை

பொதுவாகவே செல்வியை அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதிலிருந்து அவன் பார்த்து வளர்ந்த குழந்தை அவள்.  அதிலும் நன்கு படிக்கக்கூடிய பெண் என்று அவள் மீது பிரியமும் அதிகம். 

அவள் பள்ளிக்கே செல்ல மாட்டேன் என்று இவ்வளவு அடமாகக் கூறுவது மிகவும் விசித்திரமாய் இருந்தது அவனுக்கு. ஏதோ சொல்ல முடியாத பிரச்சனை அவளுக்கு இருப்பதை உணர்ந்து கொண்டான். 

அனைவரையும் அவரவர் வேலையைப் பார்க்கச் சொல்லி, தள்ளி போகச் சொன்னவன் செல்வியிடம் தன்மையாக, 

“சரி, நீ இனி ஸ்கோலுக்குப் போவே வேணாம். உங்க ஆத்தாகிட்டயும் உங்கண்ணங்கிட்டயும் நான் பேசிக்கறேன். ஆனா ஏன் ஸ்கோலுக்குப் போ மாட்டேங்குற? எனக்குக் காரணத்தை சொல்லு. நியாயமா இருந்தா நானே வேணான்னு வுட்டுர்றேன் உன்னிய.”