Kandeepanin Kanavu-5

                      காண்டீபனின் கனவு 5

 

தாத்தா ஊருக்குக் கிளம்பத் தயாரானார். காலையில் குளித்துவிட்டு நீலக்கல் பூஜையை முடித்துக் கொண்டு, முருகன் கொடுத்த மூன்று இட்டிலியை சாம்பாரில் நனைத்து மெதுவாக ரசித்து உண்டார்.

“உன் சாம்பார் மட்டும் ஆறிப் போனாலும் மணக்குது முருகா!” பாராட்டிக் கொண்டே சாப்பிட,

முருகனுக்கு அதை ரசிக்கும் மனநிலை இல்லை. தன் இடுப்பில் இருந்த கைபேசியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தான். யாரேனும் போன் செய்தால் வரும் வைப்ரேஷன் தெரிகிறதா என்று உணர்ந்துகொள்ள!

‘தாத்தா தன்னிடம் ஏதோ சொல்றதாகச் சொன்னாரே, அதை எப்போ சொல்வாரு?’ அது வேறு ஒருபுறம் மூளையில் இடித்தது. இருந்தாலும் தானாகச் சென்று விஷயத்தை கேட்கும் அளவிற்கு அவனுக்கு தைரியம் வரவில்லை.

“ஐயா கார் வர சொல்லன்னுமாங்க?” வாயை லேசாக மூடிக் கொண்டே கேட்டான்.

“அதெல்லாம் வேணாம். நான் நம்ம ஊருக்கு வர பஸ்சிலேயே போறேன். நம்ம ஆளுங்க கிட்ட பேசிக்கிட்டே டவுன் வர போனாதான் நிம்மதி.” மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் உண்டுவிட்டு எழுந்தார்.

‘எப்போ சொல்லுவாரு? இந்தா..ஊருக்கும் கிளம்பியாச்சு. ஒரு வேளை மறந்துட்டாரோ? கடவுளே இப்போ நான் எப்படிக் கேட்பேன்?’ என்னவென்று தெரிந்து கொள்ளவிட்டால் அவனுக்கு மூளையே வெடித்துவிடும் போல ஆனது.

செம்பு நிறைய ஆற்று நீரை பருகியவர், “முருகா என்கூட வா” என்றார்.

‘அப்பாடா .. விஷயத்த தெரிஞ்சுக்கப் போறோம்’ என்ற சந்தோஷத்தில் சென்றான்.

அவருடையை அறையில் ஒரு பீரோ கட்டில் தவிற, அனாவசிய சாமான்கள் எதுவும் இல்லை. பீரோவிலும் இரண்டு மாற்றுத் துணி மட்டுமே வைத்திருப்பார்.

‘இங்க என்ன இருக்கு?’ என்று யோசித்துக் கொண்டே சென்றான்.

பீரோவைத் திறந்து காட்டி, அதன் ஒரு அடுக்கை மேலே தூக்கினார்.

அதில் ஒரு லெட்டர் மட்டும் வைத்திருந்தார். அதை அதன் இடத்தை விட்டு எடுக்காமல் முருகனை அழைத்துக் காட்டினார்.

“முருகா! ஒரு வேளை நான் போனதுக்கு அப்பறம் என் பேரன் வந்தா, அவன்கிட்ட இதை காட்டி எடுத்துக்கச் சொல்லு.” என்றார்.

“சரிங்கையா” இடத்தை மட்டும் பார்த்துக் கொண்டான்.

கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தவர். நேராக பூஜையறைக்குச் சென்று நீலக் கல்லை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அந்த வீட்டின் வாசலைக் கடக்கும் முன்னர் கல்லின் அதிர்வை உணர்ந்தார். ஒரு நொடி அப்படியே நிற்க,

தன்னுடைய கைப்பேசி எங்கே என்று தேடினார். அவரது சட்டைப் பையில் இருக்க அதை எடுத்துப் பார்த்தார். எந்த போனும் வரவில்லை.

எப்போதும் செல்போன் சிக்னல் எதாவது இடையே பாய்ந்தால், அந்தக் கல் அதிர்வைக் காட்டும். ஏனெனில் அந்தக் கல்லிடம் காந்த விசை இருந்தது. இப்போது இவருக்கு போன் வராவிட்டால் எப்படி கல் அதிர்வைக் காட்டும் என யோசித்தவர், உடனே முருகனை திரும்பிப் பார்த்தார்.

“உனக்கு போன் வருதா முருகா?” சாதாரணமாகத் தான் கேட்டார்.

ஆனால் முருகனுக்கு அள்ளு விட்டது. இவரிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது என பயந்தான்.

உடனே அவனது இடுப்பில் இருந்த செல்போனை தொட, அது அப்போது வைப்ரேட் ஆகிக் கொண்டிருந்தது. அவனிடம் போன் இருப்பதை அவன் தொட்டுப் பார்த்ததிலேயே தெரிந்து கொண்டார்.

அவனும் போன் வைத்திருக்கக் கூடாதா? அல்லது அதற்கு அழைப்பு எதுவும் வரக் கூடாதா! இது சாதாரண விஷயம். அதனால் நீலக்கல் அதிர்வை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டார்.

எப்படியும் தன்னிடம் போன் இருப்பதைத் தெரிந்து கொண்டார் என்று அவனும் உண்மையைச் சொல்ல வாய் திறந்தான்.

அதற்குள் அவரே, “சரி வீட்டைப் பார்த்துக்க.” என்று கிளம்பிவிட்டார்.

 

வழியில் தென்படும் நபர்களை அழைத்துப் பேசிக் கொண்டே பஸ் ஸ்டாப் வரை வந்து நின்றார். அங்கே இருந்த டீ கடைக்காரன்,

“சாமி அதுக்குள்ள கிளம்பியாச்சா? டீ ஏதும் சாப்பிடறீங்களா?” பழக்கத்தில் கேட்க,

“இல்லபா இப்போ தான் சாப்பிட்டேன். வந்து வருஷமாச்சு. அதான் கிளம்பிட்டேன். கடை எல்லாம் நல்லா போகுதா.” இயல்பாக அவனிடம் பதில் தந்தார்.

“ ஏதோ வரவும் செலவும் சரியா போகுதுங்க. அப்பறம் நம்ம முருகன் இப்போலாம் ஒரு வியாபாரி மாதிரி அடிகடி போன்லையே இருக்காப்புல” ஊர் விஷயம் பேசுவதாக நினைத்து முருகனை இழுத்து விட்டான்.

“அப்படியா? அவனுக்கும் சொந்த பந்தம் இருக்குமில்ல. பேசட்டும்.” சிரித்துக் கொண்டே அவன் மீதுள்ள நம்பிக்கையில் தாத்தா சொல்ல,

“அட இல்லீங்க. யாரையோ சார் சார்ன்னு பேசிட்டு, எம்புட்டு தருவீங்கன்னு பேரம் பேசறான். நம்ம கடைல தான் டீ குடிசுகிட்டே பேசராப்ல”.

தாத்தாவிற்கு லேசாக ஏதோ உறுத்த யோசித்தார்.

அதற்குள் டவுனுக்கு செல்லும் பஸ் வந்துவிட, டீ கடைக்காரனிடம் விடை பெற்றுச் சென்றார்.

முருகனைப் பற்றி பெரிதாக பிறகு யோசிக்காவிட்டாலும், அந்த விஷயம் மனதில் இருந்தது.

முருகனுக்கு போன் வந்ததை அவன் மறந்தே போனான். தாத்தா சென்று ஒரு இரண்டு மணி நேரம் கழித்து பயத்திலிருந்து வெளியே வந்தவன் கட கட வென தண்ணீரைக் குடித்து பயத்தை விழுங்கினான்.

பிறகு தனது செல்போனை எடுத்துப் பார்க்க, ஐந்து மிஸ்ட் கால்கள் இருந்தன, எல்லாம் ஒரே எண்ணிலிருந்து வந்தவை தான். ரமணா என்று காட்டியது.

அவசரமாக  அந்த எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டான்.

“ஹாலோ..சார். இப்போ எதுக்கு சார் போன் பண்ணீங்க? சாயந்திரம் தான பண்ணச் சொன்னேன். பெரியவரு ஊருக்கு கிளம்பிட்டு இருந்தாரு. நீங்க சரியா போன் பண்ணவும், அவர் என்கிட்டே போன் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாரு.” அவசரமாக பேசினான் முருகன்.

“போன் எல்லாரும் தான் வெச்சிருக்காங்க. அதுக்கு ஏன் பயப்படற?” சரி நான் இப்போ வரட்டுமா?” ரமணா கேட்க,

“யாருக்கும் தெரியாம வாங்க. ஊருக்குள்ள எல்லாரும் அவர் மேல மரியாதை வெச்சிருக்காங்க. ஒருத்தன் போட்டுக் கொடுத்தாலும் நான் செத்தேன். நான் வீட்டு வாசல்ல காத்திருக்கேன்.” அவரை வரச் சொல்லி அழைத்தான்.

முருகன் சொல்லிவிட்டானே தவிற, அவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது.

இப்படி ஒரு காரியத்தை அவன் இது வரையில் செய்ததில்லை. அந்த வீட்டிற்கும் பெரியவருக்கும் விசுவாசமாகத் தான் இருந்தான். ரமணாவை சந்திக்கும் வரை.

தொல்பொருள் ஆய்வகத்தில் பணிபுரியும் இவர் ஒரு முறை பக்கத்தில் இருக்கும் டவுனுக்கு தன் நண்பரைக் காண வந்திருந்தார். அப்போது முருகன் டவுனில் இருந்த கோவிலுக்குச் சென்றிருந்தான். நண்பனோடு கோவிலுக்கு வந்தார் ரமணா.

வரிசையில் நின்றிருந்த அவரின் பின்னால் முருகன் வந்து நின்றான். கோவிலில் கூட்டம் என்பதால் மெல்ல நகர்ந்தது வரிசை.

“பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்ன இந்த ஊர் பக்கத்துல தான் மன்னர்கள் அவங்க குலதெய்வத்தை ஏதோ சில காரணங்களுக்காக மறச்சுவெச்சாங்களாம். ஆனா எந்த ஊருன்னு சரியா தெரியல சிவநேசா.. அதைப் பத்தி தெரிஞ்சா எனக்கு கண்டிப்பா நீ தகவல் தரனும் அதைத் தான் நான் ரொம்ப நாளா தேடறேன்.” தனது நண்பரிடம் கேட்டார் அவர்.

“இதோ பாரு ரமணா. எனக்குத் தெரிஞ்சு இங்க சுத்தி இருக்கற கிராமமெல்லாம் நான் போயிருக்கேன். ஆனா நீ சொல்ற மாதிரி வரலாறை நான் இது வரை இங்கே கேள்விப் படல. அதுனால உனக்கு கிடச்ச தகவல் தப்பா இருக்கலாம்.” சிவநேசன் இவ்வாறு சொல்ல,

“இல்ல சிவா.. அவங்க அத பத்தி வெளிய சொல்லிருக்க மாட்டாங்க.ராஜா காலத்துலையே அவங்க பரம்பரை மட்டும் தான் அதை வணங்கிட்டு வந்ததாகவும், வெளியில யாருக்கும் அது தெரியாதுன்னும் சொல்லிருக்காங்க. அப்படி இருக்கும் போது இப்போ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல ஆகுது, அதுனால அவங்க இத வெளிய சொல்ல வாய்ப்பில்ல. அப்படி இல்லன்னா அந்தப் பரம்பரையே அதப் பத்தி மறந்திருந்தா கூட ஆச்சரியமில்ல. ஆனா அது கண்டிப்பா இங்க தான் எங்கயோ இருக்கணும். யாரவது தகவல் தந்தா கூட அவங்களுக்கு காசு தரோம்னு சொல்லிப் பார்க்கலாமா.” ரமணா விஷயத்தை கூறினார்.

பின்னால் இருந்த முருகன் இவற்றைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். ரமணா கூறிய போதே அவனுக்கு தான் காவல் காக்கும் வீட்டின் நினைவு வந்துவிட்டது. ஆனால் அதை வெளியே சொல்லும் எண்ணமில்லை. கடைசியாக அவர் கூறிய காசு என்கிற வார்த்தையில் சற்று தடுமாறினான். சற்றும் தாமதிக்காமல்,

“எம்புட்டு தருவீக?” என்றான்.

“என்ன பா?” ரமணா ஒன்றும் தெரியாதது போல காட்டிக் கொண்டார்.

“ நீங்க பேசுனது என் காதுலையும் விழுந்துச்சு. நீங்க தேடற அந்தக் கோவில் இருக்கற இடம் எனக்குத் தெரியும்.  பக்கத்து ஊர் தான். நீங்க எவ்வளோ தருவீங்கன்னு சொன்னா நான் சொல்றேன்.” என்றான் திமிருடன்.

“உன்ன நாங்க எப்படி நம்பறது. இது வரை அப்படி எதுவும் கேள்விப் பட்டதே இல்லையே!” சிவநேசன் குறுக்கிட,

“நீங்க இப்போ ஒன்னும் தர வேண்டாம். ஊருக்கு வந்து பாருங்க. உங்களுக்கு நம்பிக்கை வந்த அப்பறம் எனக்குக் கொடுத்தா போதும்.” திடமாகக் கூறினான்.

சிவநேசனும் ரமணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தபின், “சரி உன்னோட போன் நம்பர் கொடு நான் போன் பண்ணிட்டு வரேன்.” என்றார் ரமணா.

தன்னிடம் போன் இல்லை என்றதும் அவனுக்கு ஒரு பேசிக் மாடல் போன் வாங்கிக் கொடுத்தார் ரமணா.

நிலவரம் பார்த்து போன் செய்வதாகக் கூறி அங்கிருந்து சென்றவன், ஒரு வருடம் அங்கு தாத்தா வந்து தங்குவார் என் எதிர்ப்பார்க்கவில்லை.

அதுவரை ரமணாவும் காத்திருந்தார். இப்போது தான் அங்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

ரமணா மனதிற்குள் பல திட்டங்களும் கணக்குகளும் போட்டு வந்தார். இந்த ஒரு வருடத்தில் அந்த குலதெய்வத்தைப் பற்றி மேலும் சில தகவல் கிடைக்குமா என்று பார்த்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

‘மறைத்து வைக்கும் அளவிற்கு அது என்ன தெய்வம்? தங்கம் வைடூரியம் போன்றவற்றால் செய்திருக்கும் என எதிர்ப்பார்த்தார். ராஜா காலத்தில் வைத்திருந்த தெய்வமாயிற்றே! அப்படித் தான் இருக்கும்’ என்பது அவரது கணிப்பு.

ஒரு பழைய அம்பாசிடரில் ஊருக்குள் நுழைந்தார் ரமணா. முருகனுக்கு போன் செய்து வழி கேட்க, அவன் ‘கெழகால மேற்கால’ என்று குழப்பினான்.

ரமணாவிற்கு புரியாமல் போக அங்கிருந்த டீ கடையில் முருகனைப் பற்றி விசாரித்துக் கொண்டு சென்றார்.

கரடு முரடான பாதையில் அந்தக் கார் சென்று கொண்டிருக்க, எதிரே ஒரு காளை தறிகெட்டு ஓடி வந்தது. அதனிடமிருந்து தப்பிக்க வண்டியை ஒரு புறமாகத் திருப்ப நினைத்து வளைக்க அது பள்ளத்தில் விழுந்தது. காரிலிருந்து ரமணா உருண்டு போனார்.

அங்கிருந்த ஒரு  கல்லில் அடிபட்டு பின் தட்டுத் தடுமாறி எழுந்து வர காரும் பஞ்சராகி நின்றது.

‘சகுனமே சரியில்லையே’ என்றபடி முருகனுக்குப் போன் செய்தார். அவன் ஓடி வந்து பார்த்து அவரை கைத்தாங்கலாக கூட்டிச் சென்றான்.

அப்போது தான் இன்னொரு அசம்பாவிதம் அவர்களுக்காக காத்திருந்தது.

அவர்கள் பெரியவீடிருந்த அந்தத் தெருவிற்குள் நுழைய, அப்போது வானம் இருட்டிக் கொண்டு வந்தது.

“என்ன இது. திடீரின்னு மழைய கூட்டுது.” முருகன் ஆச்சரியமாகப் பார்க்க,

ரமணாவோ அந்தத் தெருவில் இருக்கும் வீடுகளின் அழகைப் பார்த்துக் கொண்டு வந்தார். அங்கிருக்கும் அனைத்து வீடுகளும் சற்று பெரிதாகவே இருந்தது.

“எந்த வீடு?” என்று ரமணா கேட்டதும், சட்டென இடி இடித்தது.

மின்னல் ஒன்று பளிச்சென்று அந்த இடத்தை இரண்டு நொடி பிரகசமாக்கியது. இருவரும் நிலை தடுமாறினார்.

முருகனுக்கு எதுவோ மனதை உறுத்தியது. தன்னை யாரோ கண்காணிப்பது போன்ற பிரம்மை அவனுக்குள் தோன்றியது.

“முருகா..எந்த வீடு?” தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவரிடம் அதிகமாக, ஆனால் அதற்குள் அடுத்த இடி நேரே இவர்களை நோக்கி வந்தது.

“அதோ…..” முருகன் சொல்ல வாய் திறக்கவும் அந்த இடி அவன் தலையிலேயே விழுந்து அவனை அப்போதே கறிக் கட்டையாக்கியது.

“ஆ….” என இருவரும் அலற, முருகன் உயிர் போனது. ரமணாவோ கண் பார்வை இழந்தார்.

“ஐயோ…கடவுளே…கண் எரியுதே…! யாரவது வாங்க..” கீழே விழுந்து துடித்தார். மழை கொட்ட ஆரம்பித்தது. இடியும் மின்னலும் பலமாக இருக்க, அந்த சத்தத்தில் இவரது குரல் யாரையும் எட்டவில்லை.

அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை மெல்ல தன் கோபத்தை குறைத்துக் கொண்டது. ரமணா மயங்கி இருந்தார். மெல்ல வெளியே வந்தவர்கள் முருகனின் நிலை கண்டு பரிதாபப் பட்டனர்.

“நல்லா தான் இருந்தான். இவனுக்கு இப்படி ஒரு நிலைமை வர வேண்டாம்.” என்று பேசிக் கொண்டனர்.

கூட இருந்த ரமணாவிடம் உயிர் இருப்பது தெரிந்து உடனே அம்புலன்சை வர வைத்தனர்.

 

“ஐயாவுக்கு தகவல் சொல்லுங்க” ஒருவர் சொல்ல, உடனே தகவல் அறிந்த அவர், அவன் என்ன தவறு செய்தான் என யோசிக்கலானார்.