இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 2

“என்ன பாப்பா இது, இப்படிதான் நின்னு வாயாடுவியா? அவங்க ஏதாவது சொன்னா நீ பேசாம வரவேண்டியது தானே?” வழி நெடுகிலும் வைஷ்ணவியை கடிந்தபடியே அழைத்துக் கொண்டு சென்றார் மாறன்.

“ப்பா… அவனுங்க ரொம்ப பேசுறான்க அப்படியே விட்டு வர சொல்லுறியா?”

“நமக்கு எதுக்கு பாப்பா வம்பு, அதுதான் தம்பி வந்துட்டாங்களே அவங்க பாத்துப்பாங்க, நீ இனி அவங்களைப் பார்த்தாலும் வம்பு பண்ணக்கூடாது”

“யாரு அவனா?”

“ஆமா, பாப்பா அவங்க பாத்துப்பாங்க?”

‘இங்கு நடந்ததை அப்பாவிடம் ஸ்ரீ கூறும் முன் அவனிடம் பேசவேண்டும்’ இவள் நினைத்துக் கொண்டிருக்க,

“அங்க என்ன நடந்தது பாப்பா?” என்று கேட்டிருந்தார் மாறன்.

“ஒண்ணும் இல்லப்பா, அது என் கூட படிச்ச பசங்க, சும்மா பேசினதுல ஓவரா பேசிட்டாங்க வேற ஒண்ணும் இல்ல”

“பிரச்சனை ஒண்ணும் இல்லையே?”

“அதெல்லாம் இல்லப்பா, அப்படி இருந்தாலும் நான் பாத்துக்கிறேன்”

“யாருகிட்டையும் சண்டை போடாத?”

“சரிப்பா போடல, இங்க நடந்ததை அம்மாகிட்ட சொல்லாதீங்க?”

“தம்பி சொன்னா நான் என்னம்மா பண்ணுறது?”

“நான் எது சொன்னாலும் தலையை மட்டும் ஆட்டுங்க”

“அதுதானே வருஷம் ஃபுல்லா பண்ணிட்டு இருக்கேன்”  

“ப்பா”

“சரி… சரி” இருவரும் பேசியபடியே வீட்டை அடைந்திருக்க அவர்களுக்காய் வாசலில் காத்திருந்தாள் கோதைநாயகி.

“என்னடி, நீயும் அப்பாவும் வாறீங்க, வசந்த் எங்கே?”  

‘அவன் வரலியா? யப்பா’ ஆசுவாசப்பட்டவள், “அவன் விளையாட போயிருப்பான்மா” என்றபடியே கோவில் குங்குமம் அவரிடமும், தங்கை வைஷாலியிடமும் கொடுக்க, எடுத்து நெற்றியில் வைத்தபடியே வீட்டின் உள்ளே செல்ல,

மாறன் மீண்டும் வயலை நோக்கி நடந்தார். அவரைப் பார்த்து சிலபல வேலைகளை கூறிய ஸ்ரீ வீட்டை நோக்கி வந்திருந்தான்.

************************

 வீட்டுக்கு வந்த ஸ்ரீ ஐந்து வீடு தள்ளியிருந்த வைஷ்ணவி வீட்டைத்தான் பார்த்தான். எப்பொழுதும் போல் அங்கு வாசலில் யாருமே இல்லை. அவள் வீட்டில் யாரும் அனாவசியமாக வெளியே வருவது கிடையாது. அது அவனுமே அறிந்திருந்தான்.

ஆனாலும், ‘அங்கு நடந்ததைப் பற்றி அவள் ஏதாவது கேட்பாளா?’ என எண்ணிப் பார்க்கத் தோன்றியது.

அதை பற்றியெல்லாம் அவள் கவலைப்பட்டதாய் அவனுக்கு தெரியவில்லை. அவள்தான் வெளியில் இல்லையே.

ஸ்ரீயை கண்டதும் வீட்டு ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த அவன் தங்கை ஸ்ரீஷிவானி அவனுக்கு காஃபி எடுத்து வர கிட்சன் செல்ல,

அவளைக் கண்டும் காணாத ஸ்ரீ, தாத்தா அறையை நோக்கி நடந்தான்.

ஏதோ கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீகரண். இவனை கண்டதும் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி வைத்தவர்,

“என்னப்பா?” அவனை நோக்கி திரும்பினார்.

“ஐயா, இதுல நாலு லட்சம் இருக்குது, அரிசி மூட்டை பணம், கணக்கு நம்ம ஆடிட்டர் வந்து சொல்லுவார்”

“என்னப்பா, இதெல்லாம் நீயே வச்சிக்க கூடாதா?”

“இல்லங்கய்யா, கணக்கு வழக்கு எல்லாம் எப்பவும் நீங்க பாக்குறதுதான் நல்லது”

“நீ இன்னும் மாறவே இல்லை ஸ்ரீ, பழசை மறக்கவும் இல்லை”

உடனே வேறு பேச்சுக்கு தாவிவிட்டான் ஸ்ரீ. மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசியிருந்துவிட்டு வெளியே வரவும்,

அவன் முன்னே காஃபி கப்பை நீட்டியபடி அவனையே பார்த்திருந்தாள் ஷிவானி.

 அவள் நீட்டிய காஃபியையும், அவளையும் ஒரு பொருட்டாக மதிக்காதவன் அவனே கிட்சனுக்கு சென்று தனக்கான காஃபியை கலந்து தன்னறைக்கு சென்றான்.

செல்லும் அவனையே விழிகளில் நீர் வழிய பார்த்திருந்தாள்.

ஷிவானி இப்பொழுதுதான் மூன்றாம் வருடம் மருத்துவம் முடித்திருக்கிறாள். .

மூன்று வருடங்களுக்கு முன் அறியாமல் செய்த தவறுக்கு இப்பொழுது தண்டனை அனுபவிக்கிறாள்.

சரியாக சொல்லவேண்டும் என்றால், அது அறியாமல் செய்த தவறு அல்ல, தெரிந்தே செய்த தவறு என்றுக் கூறலாம்.

மூன்று வருடங்களுக்கு முன்…

அப்பொழுது இவள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இவளின் ஒவ்வொரு நடையிலும், உடையிலும் அவளது பணத்திமிர் நிறையவே இருக்கும்.

அதே திமிரை சில நேரம் ஸ்ரீயிடமும் காட்டுவாள்.

‘சிறுபெண் அதனால் தான் இப்படி இருக்கிறாள்’ இவனும் அவளைக் கண்டுக் கொள்வதில்லை.

ஆனால் அவள் மேல் அதிக பாசம் அவனுக்கு!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பரீட்சைகள் நடந்துக் கொண்டிருந்த நேரம் அது,

“டேய் ஸ்ரீ, உன்னோட தங்கச்சி இங்க கோவில்ல நிக்குறாடா? கூடவே ஒரு பையனும் நிக்குறான், அவங்களோட நடவடிக்கை ஒண்ணுமே சரியாபடலை நீ சீக்கிரம் வரியா?” என்றழைத்தான் அவனது நண்பன் சிவா.

சிவா அவனது நண்பன் மட்டுமல்ல, அவனது அரிசி ஆலையின் மேனேஜராகவும் இருக்கிறான்.   

தன் அம்மாவுடன் கோவிலுக்கு வந்திருக்க, இங்கு ஷிவானியை காண, அவளின் செயல் ஒன்றும் சரியாகப் படவில்லை அவனுக்கு.  அதுதான் உடனே ஸ்ரீயை அழைத்துக் கூறினான்.

அவர் கவனிக்காத வண்ணம், ஒரு கண்ணை இவள் மேல் வைத்திருந்தான் சிவா.

ஸ்ரீக்காக எதையும் செய்வான் சிவா. அவனது தங்கையை காப்பதும் அவன் கடமைதானே அதனால்தான் அவளையே பார்வையால் தொடர்ந்துக் கொண்டு வந்தான்.

அவசரம், அவசரமாக ஸ்ரீ கோவிலுக்கு வந்திருக்க அவன் கண்ட காட்சி அவனை அதிர செய்தது.

பதினெட்டு வயது நிரம்பாத ஷிவானி திருமணத்திற்க்கு தயாராகி இருந்தாள்.

சுடிதார் அணிந்தபடி, கழுத்தில் மாலை சகிதம் அவள் நிற்க, அதைப் பார்த்தவனுக்கு அப்படி ஒரு கோபம் பெருகியது.

“என்னடி பண்ணுற?” அவள் முன் உறுமலுடன் நின்றான்.

அவள், அவனை இங்கு எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் கண்டுக் கொள்ளவே இல்லை.

“நீங்க வாங்க” அவளது காதலனை கையை பிடித்துக் கொண்டு முன்னே நடந்தாள்.

 அவனைப் பார்த்ததும் தெரிந்தது ‘இவனில் எதுவோ சரியில்லை’ என்று.

கிட்டதட்ட எட்டு வருடங்களை ஜெயிலில் கழித்திருக்கிறான் அவனுக்கு மனிதர்களை எடைப் போடத் தெரியாதா என்ன? 

நிதானமாக ஊன்றி கவனித்திருந்தால் நன்கு தெரிந்திருப்பான் இவனில் எதுவோ சரியில்லை அல்ல, இவனே சரியில்லை என்று!

“ஏய்… என்னடி நான் பேச… பேச… போயிட்டே இருக்க?” அவளின் முன் போய் நிற்க,

“நீ யாரு? நான் ஏன் உன்கிட்ட பேசணும்? உன் கூட எனக்கு பேசவிருப்பம் இல்லன்னு அர்த்தம். நீ என்ன என் கூட பொறந்தவனா? பெருசா பேசவந்துட்டான்”

“இந்த நேரம் என்ன பேசுற நீ? எதுனாலும் வீட்டில போய் பேசலாம் வா ஷிவானி” வந்த கோபத்தை அடக்கி அமைதியாக அழைத்தான்.

“நான் ஏன் உன் கூட வரணும், என் வீட்டுக்கு வர எனக்கு தெரியும்? அதிலும் நீ சொல்லி நான் வீட்டுக்கு வரணுமா? வர முடியாது போடா” முகத்தில் அடித்ததுப் போல் பேசினாள்.

அவளின் காதலனோ அப்படி ஒரு பயத்தில் உறைந்து நின்றிருந்தான். ஸ்ரீ நின்ற தோரணையும், அவனது தோற்றத்தையும் பார்த்து தன்னைப்போல அவனுக்கு பயம் வந்திருந்தது.

அவளுக்கு இப்படி ஒரு அண்ணன் இருப்பதே அவனுக்கு தெரியாது, பெரிய பணக்கார பெண். இவள் மட்டுமே வாரிசு, வயசான தாத்தா மட்டுமே உண்டு என்பது மட்டுமே அவள் அவனிடம் கூறியிருந்தாள்.

இப்பொழுது இவன் இப்படி வந்து நிற்கவும் பயந்துவிட்டான்.

ஸ்ரீயை அவள் அண்ணனாக இதுவரை மதித்ததே இல்லை. அதனால்தான் அவனிடமும் கூறவில்லை. 

“ஷிவானி, தாத்தாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தபடுவாங்க வயசான காலத்துல இப்படிதான் படுத்துவியா?”

“அது என் தாத்தா, அவரை பாத்துக்க எனக்கு தெரியும், நீ யாரு அவங்களைப் பத்தி கவலைப்பட, நீயே ஒரு அனாதை அண்டி வந்த நீ அவரைப் பத்தி கவலைப்படுறியா? எல்லாம் எங்க சொத்துக்காகதான இப்படி நடிக்கிற? இனி நீ ஒண்ணும் நடிக்க வேண்டாம் எல்லாம் இவர்” அவள் அருகில் நின்றிருந்த அவளது காதலன் சுமனை காட்டி, “இவர் பாத்துப்பார்… நீ ஒண்ணும் இனி நடிக்க வேண்டாம்” என்றாள் கோபமாக.

இப்பொழுது ஸ்ரீயின் பார்வை அந்த சுமனை நோக்கி கோபமாக திரும்பியது.

“இல்ல… இல்ல… இதெல்லாம் எனக்கு தெரியவே செய்யாது?” உளறினான் அந்த சுமன்.

“நீ ஏன் அவங்களை முறைக்குற?”

“இதெல்லாம் தெரியாமதான் இவ பின்னாடி சுத்துறியா?”

“நாங்க ஒண்ணும் சும்மா சுத்தல, நாங்க லவ் பண்ணுறோம், இப்போ கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கோம்” என்று கூறி சற்று யோசித்தவள், “ஆமா, இதெல்லாம் நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும்?” அவளே கேட்பதுப் போல் அவளுக்கு அவளே கூறிக் கொண்டாள்.

இத்தனை நேரம் பொறுமையாக இருந்த ஸ்ரீயால் அதற்கு மேல் இருக்க முடியவில்லை, “நான் யார்னு, உனக்கு இப்போ புரியவைக்குறேன்” என்றவன், வேகமாய் அவள் கன்னத்தில் அறைந்திருந்தான்.

அதற்குள் சிவாவும் வந்திருக்க, “டேய் மச்சான் பொறுமையா இருடா” என,

“எவ்ளோ நேரம் தான் பொறுமையா இருக்குறதுடா? இவா என்னடா சொல்லுறது, நான் சொல்லுறேன் இவ எனக்கு தங்கச்‌சியே இல்லை, அதை அவளே சொன்ன பிறகு எனக்கு என்னடா வந்தது? ஆனா, அந்த பெரிய மனுஷன் என்னை நம்பி இவளை ஒப்படைச்சிருக்கார். இப்போ அவளை அமைதியா கார்ல ஏற சொல்லு,

அந்த பெரிய மனுஷன் முன்ன கொண்டு இவளை விட்டுட்டு போறேன், அதுக்கு பிறகு இவ என்ன பண்ணினாலும் எனக்கு பிரச்சனை இல்லை” முகம் இறுகி நின்றிருந்தான்.

அவனது தோற்றம் அந்த சுமனுக்கு பயத்தை தர, “நீ வீட்டுக்கு கிளம்பு ஷிவானி, எதுனாலும் பிறகு பாத்துக்கலாம்” எனக் கூற,

‘எதிர்த்து வருபவன் எவனாய் இருந்தாலும் அடித்து வீழ்த்தி காதலியை கைபிடிக்க வேண்டாமா? என்னடா காதலன் நீ’ ஸ்ரீ நினைத்து ஷிவானியை பார்க்க,

 ‘இவனை நம்பியா நீ வந்த?’ என்பதாய் ஸ்ரீயின் பார்வை ஏளனமாய் அவளைப் பார்த்து கேட்டது.

ஸ்ரீயிடம், எதிர்த்து பேசாமல் பயந்து நின்ற சுமன் தோற்றம் அவளில் வர, அமைதியாக காரில் ஏறிக் கொண்டாள்.

‘நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிப்போம் ஷிவானி, யாரு குறுக்க வந்தாலும் நான் உன்னை விடமாட்டேன், நீ இல்லன்னா எனக்கு இந்த உலகமே இல்லை’ என்பதுப் போல் பேசியிருந்த அதே சுமன்தான் இன்று ஸ்ரீயின் முன் பயந்து நின்றிருந்தான்.

சுமனை முறைத்துவிட்டு காரை கிளப்பிக் கொண்டு வீட்டை நோக்கி சென்றான் ஸ்ரீ.

அவனின் பின்னே பைக்கை செலுத்தியபடி சென்றான் சிவா.

இன்னும் கோபம் அடங்க மறுத்தது ஸ்ரீக்கு. ‘என்ன வயது என்று இவள் அந்த காதலை தூக்கிக் கொண்டு அவன் பின்னே சென்றாள்’ இன்னும் அவனால் நம்பமுடியவில்லை.

ஆனால், உண்மைதான் என்று கூறியதுப் போல் காரின் பின்சீட்டில் அவள்!

அப்படி ஒரு கோபம் வர, காரை வேகமாய் செலுத்தினான்.

க்ரீச்… என்ற சத்தத்துடன் வீட்டின் முன்னே கார் நிற்க, தயங்கியபடியே இறங்கினாள்.

வீட்டுக்கு வர, தயக்கமாக இருந்தது. போகும் போது இல்லாத தயக்கம் வரும்பொழுது வந்திருந்தது.

கார் எழுப்பிய ஓசையில் ஸ்ரீ கரணும் வெளியே வந்திருந்தார்.

காரை விட்டு இறங்காத ஸ்ரீயின் முகத்தை பார்க்க, அப்படி ஒரு கோபத்தில் இருந்தது அவனது முகம்.

இவளைப் பார்க்க, “சாரி… தாத்தா” அவரை அணைத்துக் கொண்டாள்.

நடப்பது… நடந்தது எதுவும் அறியாத அவரோ, பேத்தியின் தலையை வருடியபடி, ‘இவன் ஏன் உள்ளே வராமல் இருக்கிறான்?’ என்பதாய் ஸ்ரீயை பார்த்திருந்தார்.

அதற்குள் சிவா வந்திருக்க, விருட்டென்று சென்று விட்டான் ஸ்ரீ.

புரியாமல் பார்த்திருந்தவர், சிவா தயங்கி… தயங்கி.. நிற்பதைக் கண்டு “என்ன சிவா?” என்க,

சிவா இப்பொழுது ஷிவானியை முறைத்தான். யார் முகத்தையும் பார்க்காதவள் அறைக்குள் முடங்க,

நடந்ததை சுருக்கமாக கூறினான். அவன் கூறி முடிக்கவும், அமைதியாக கேட்டிருந்தவர் எதுவும் கூறாமல் தன்னறைக்கு சென்றார்.    

அவருக்கு, அவளிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அமைதியாக அறைக்கு சென்றிருந்தார். ‘ஏன் இப்படி?’ என்ற எண்ணம் மட்டுமே அவரிடம்.

அதிலும் ஸ்ரீயை, இவள் பேசியது அவரிடம் கூறவேயில்லை.

அடுத்த இரண்டு நாட்கள் ஸ்ரீ வீட்டுக்கு வரவேயில்லை.  ஷிவானி பேசியது அவனை மிகவும் கோபப்படுத்தியது.

ஏன் என்று தெரியாமலே அவனுக்கு வீட்டுக்கு செல்ல மனதே இல்லை.

இத்தனை நாள் ‘இது தன் வீடு… இது என் தங்கை’ என இவன் எண்ணி இருக்க ஒரே நாளில் ‘நீ ஒரு அனாதை’ என்று முகத்தில் அடிப்பதுப் போல் உரைத்துவிட்டாள்.

அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவேயில்லை. எப்பொழுதும் அடுத்தவர் அவனைப் பார்த்து ஏளனம் செய்வது போல் அவன் இருந்ததே இல்லை.

ஒருநாளும் யாரிடமும் அவன் கையேந்தியதும் இல்லை. அது அவனுக்கு பிடிக்கவும் செய்யாது. அவனுக்கு மட்டுமல்ல அவன் பரம்பரைக்கே பிடிக்காது.

இது அவன் ரத்தத்தில் ஊறிய ஒன்று. எதற்க்கும் அவன் யாரிடமும் நின்ற நிலை வந்ததில்லை. அப்படிபட்டவனை இவள் ‘அண்டி வாழ்பவன்’ என்று கூறியது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘அப்படியா தான் இருக்கிறோம்?’ மனம் தன்னைப்போல யோசனைக்கு சென்றது.

எதற்கும் யாரிடமும் இப்படி அண்டி வாழக்கூடாது என்றுதான் சிறுவர்சீர்திருத்தப் பள்ளியில் கூட பல வேலைகளை செய்தான்.

சரியாக சொல்லவேண்டும் என்றால் அவனது பதினாறாவது வயதில் ஒரு சரக்கு லாரிக்கு துணையாக ஒருவர் அவனை அழைத்துச்‌ சென்றார். 

சட்டம் தெரிந்த அவர்களுக்கு அதில் உள்ள ஓட்டைகளும் தெரிய, சரியான நேரம் சரியான விதத்தில் ஸ்ரீயை பயன்படுத்தினர். அதற்காக அவன் ஒருநாளும் வருத்தபட்டதுமில்லை.

அதன் பிறகும் படிபடியாக சரக்கு மாற்றும் வேலைகள் அவனிடம் வந்தன. பதினெட்டு வயது முடிந்து வெளியே வந்த பிறகும் ஸ்ரீகரணுக்கு தெரியாமல் சில வேலைகள் முடித்தான். இப்பொழுதுதான் அந்த பக்கமே எட்டிப் பார்க்காமல் இருக்கிறான். 

. இப்பொழுதும் போலீஸ்காரர்கள் மத்தியில் ‘சக்ரவர்த்தி’ என்றுக் கூறினாலே அவனுக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர்கள் மட்டுமல்ல பல அரசியல் புள்ளிகளிடமும் இவனுக்கு மரியாதை உண்டு.

ஆனால், இப்பொழுதோ எந்த தொடர்பும் இல்லாமல் இவர்களுடன் இணைந்துவிட்டான். இது அவனுக்காக உருவாக்கபட்ட  குடும்பம் என இவன் வாழ்ந்திருக்க ஒரே வார்த்தையில் எல்லாம் அடியோடு அழித்துவிட்டாள் ஷிவானி.

கோபம் கோபமாக வந்தது… அதிலும் அவன் அங்கு உழைப்பதற்கு சம்பளம் வாங்குறான். ஒசியில் இருந்து தின்பவன் அல்ல அவன்!

இதெல்லாம் ஷிவானிக்கு தெரியுமா? தெரியாதா? என்பது கூட அவனுக்கு தெரியாது ஆனால் அவள் பேசியது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அப்படிபட்டவனை ‘சொத்தை ஏமாற்றி வாங்கதானே நடிக்கிற?’ என்று ஷிவானி கேட்டது மிகப்பெரிய அபத்தம்!

அப்படியே அங்கு மோட்டார் அறையில் படுத்துக்கொண்டான். இப்படி அழுக்கான இடத்தில் இருப்பது கூட அவனுக்கு பிடிக்காது.

சிறு வயதிலையே அவனது உடையில் சிறு கறைபட விடமாட்டார்கள். அப்படிபட்டவனை இந்த குப்பையில் படுக்க வைத்திருந்தாள் ஷிவானி.

‘இனி அந்த வீட்டில் தான் இருக்க வேண்டுமா?’ என்ற எண்ணம் அவன் மனதில் தன்னைப் போல் வந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!