இனிய தென்றலே – 13
இனிய தென்றலே – 13
தென்றல் – 13
அசோக்கிருஷ்ணாவின் மருத்துவமனை வாசம் தொடங்கி பத்துநாட்கள் முடிந்தாயிற்று… மருத்துவரின் ஆலோசனையை சிரமேற்கொண்டு தாய், தந்தை, மனைவி என மூவரும் ஒருவர்மாற்றி ஒருவர், அவனுக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சை எடுத்துக்கொள் எனக் கெஞ்சியும் கண்டித்தும் ஒய்ந்து விட்டார்கள்.
எந்த மந்திரத்திற்கும் கட்டுப்படாதவனைப்போல், அவர்களுக்கும் மேலே சென்று, தன்பிடிவாதத்தில் நிலையாய் நின்றுவிட்டான் அசோக். குடும்பத்தாரின் ஆத்திரங்கள் அனைத்தையும் தன்வசமாக்கிக் கொண்டான்.
தினந்தோறும் உட்கொள்ளும் மருந்தின் பலனில், உடனிருப்பவர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்து, தனது பேச்சை மட்டும் சகஜமாக்கிக் கொண்டவன், தன்அழுத்தத்தை இறக்கி வைக்க மாட்டேனென்று உறுதியில் நின்றான்.
பெற்றோர்களிடம் தானாக முன்வந்து பேசுபவனுக்கு, மனைவியை அத்தனை எளிதாய் எதிர்கொள்ள முடியவில்லை.
ராமகிருஷ்ணன் கண்டிப்புடன் கலந்த மிரட்டலை விடுத்தும், அசோக் அசரவில்லை. பதிலுக்குபதில் பேசியே தப்பித்தான்.
அதனைத் தொடர்ந்த தாயின் கேள்விகளுக்கு, சால்ஜாப்பு வார்த்தைகளை சொல்லியே சமாதானம் செய்தான்.
“தேவையில்லாம பயப்படாதேமா! எனக்கு சரியாகிடுச்சு. ரெண்டுநாளா நல்லா பேசவும் செய்றேனே! இன்னும் என்ன வேணும் உங்களுக்கு…” மிகநல்லவனாய் சாதாரணமாக பேச,
“எப்பவும் நல்லாதான் தம்பி பேசுற.. ஆனா, அன்னைக்கு அப்படி நடந்திருக்கலைன்னா இத்தனை சங்கடம் இல்லையே ராஜா!” அப்பாவியாக கேட்டு தனது மனதாங்கலை வெளிப்படுத்தினார் தங்கமணி.
“இன்னும் நீ, வைஷாலிகூட மனசு விட்டு பேசுற மாதிரியே தெரியலையே… எதுக்கு அவளை பார்த்தாலே தலைகுனிஞ்சுபோற? விருப்பபட்டு கட்டிகிட்டவன், ஏன் அவகூட வாழமாட்டேன்னு சொல்ற? அதுக்கு காரணத்த சொல்லு… நாம வீட்டுக்கு போயிடலாம்” என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப்போல கெஞ்சினாலும் மகன், தன்அழுத்தங்களை மலையிறக்க முன்வரவில்லை.
இவனது அலம்பல்களில் குழம்பித் தவித்த, வைஷாலிக்கு அவனை வெட்டிப்போட்டு விடும் ஆவேசம் வந்தேவிட்டது.
எப்போதும் இறுகிய முகத்துடன் வலம் வருபவனை பார்க்கும் பொழுதெல்லாம், எப்பொழுது, என்ன கோமாளித்தனத்தை அரங்கேற்றுவானோ என்று மனம் பதறுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
‘எத்தனை நெஞ்சழுத்தம், திமிர் இவனுக்கு… என்பக்கம் நின்று, கேள்வி கேட்க ஆளில்லாத தைரியத்தில், இஷ்டப்படி ஆடிக்கொண்டிருக்கிறான் அழுத்தக்காரன். தனக்கு எதுவும் இல்லையென்று சொல்லிக் கொள்பவன், எதற்காக என்னை தவிர்க்க வேண்டும்?
அவன் வாழ்வில் இருந்தே, முழுதாய் அகன்றுவிட சொல்பவன், எதற்காக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். எமபாதகன்…’ என அவனுக்கான வசைமொழிகளை எல்லாம் குறைவின்றி மனதிற்குள் கொட்டித் தீர்ப்பவள், அசோக் பார்க்கும் ஏக்கப்பார்வையில் அடங்கிப் போய்விடுவாள்.
கணவனை பார்க்கும்போது, தன்னால் அவள் இதயம் இளகிவிடத்தான் செய்கிறது. நாட்கள் இப்படியே நகன்றால் தங்களின் திருமணத்திற்கு அர்த்தம்தான் என்ன? இருவரும் எந்த உறவில்தான் பிணைத்துக் கொண்டிருக்கிறோம் போன்ற ஆயிரம் கேள்விகள் வைஷாலியின் மனதிற்குள் அலைமோத தொடங்கியிருந்தன.
இருபதுநாள் திருமண வாழ்க்கை அத்தனை களைப்பையும் குழப்பத்தையும் கொடுத்திருக்க, தன்செயல்களில் பெருமளவு நிதானத்தை கொண்டு வந்திருந்தாள் வைஷாலி.
உரிமையுடன் கணவனருகே சென்றாலும், வெறுமையான பார்வையில் தன்னை ஒதுக்கி வைப்பவனை, எவ்வாறு அணுகுவதென்று தெரியாமல் தவித்தாள். பொறுமையை முயன்று கடைபிடித்தே தளர்ந்து போனாள்..
தனக்கான பாதை எதுவென்றுதான் அவளுக்கும் புரிபடவில்லை. இவளின் அலைபுறுதல்களை கண்ட ராமகிருஷ்ணன், அவளை அருகில் அமர்த்திக் கொண்டு,
“உன்வாழ்க்கை உன் கையிலதான் இருக்கு வைஷாலி… ஆனா அந்த வாழ்க்கையில யாரெல்லாம் நமக்கு ஆதரவா இருப்பாங்கனு, நாம யோசிச்சா மட்டுமே தெளிவான முடிவு கிடைக்கும். அவனை விட்டுப் போறதும், அவனோட உன் வாழ்க்கைய தொடர்றதும் உன்னோட விருப்பம்.” என்று அமைதியாக விளக்கினார்.
“இவரை விட்டுப் பிரியணும்னு நான் நினைக்கல மாமா… ஆனா, என்னோட நல்லதுன்னு நினைச்சு, இவர் செய்றதெல்லாம், எனக்கு கோபத்தையும் பயத்தையும்தான் கொடுக்குது” அவளும் தன்நிலையை எடுத்துக்கூற,
“எல்லா நேரத்துலயும் அமைதியும் அன்பும் வேலைக்காகாதுடா… உனக்கு எது நல்லதோ, அத செய்யப்பாரு! இதுதான் நமக்கான வாழ்க்கைங்கிறத மனசுல பதியவைச்சு முயற்சி எடு!” தட்டிக்கொடுத்து மருமகளை ஊக்கப்படுத்தினார் மாமனார்.
மருத்துவரின் ஆலோசனையில் தற்போதைய அசோக்கின் மனவுளைச்சலுக்கு காரணம், தன்அருகாமையை அவன் வெகுவாய் தேடியதே என்பதும் தெளிவாகவிட, சற்றும் தாமதிக்காமல் தனது கடமையாக கணவனை மீட்டெடுக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் இறங்கினாள்.
திருமணத்திற்கு முன்னும் பின்னும், அசோக், தன்னை தேடித் தவித்ததை பற்றி, மாமியார் கூறக்கேட்ட வைஷாலிக்கு, தன்பொருட்டு ஒருவன் துடித்திருக்கின்றானே என்ற நினைவில் மனம் வெதும்பி விட்டது.
எல்லா வகையிலும் நல்லவன், தன்னிடம் அன்பையும் கனிவையும் மட்டுமே எதிர்பார்த்தவனுக்கு, தன்னால் முயன்ற நல்லது செய்து விடவேண்டுமென்ற, மந்திரத்தை அவளின் மனமும் ஜெபிக்க ஆரம்பித்து விட்டது.
அடுத்து வந்த மூன்று நாட்களில் இவளது இரக்க சுபாவம் மெல்லமெல்ல கணவனின் புறம் சாய்ந்து, ஒளிந்திருந்த நேசம் வெளியே தளும்பியது.
இனி அவனை விட்டு விலகக்கூடாது என்ற தீர்மானத்தோடு, அன்றைய தினம் மதியவுணவை எடுத்துக் கொண்டு வைஷாலி மருத்துவமனைக்கு செல்ல,
”இப்பதான் டேப்லெட் போட்டு தூங்குறார் மேடம்..! ஸ்லீப்பிங்டோஸ் குடுங்க… இல்ல, வெளியே அனுப்புங்கன்னு டார்ச்சர் பண்றாரு… யார் என்ன சொல்லியும் அவர கண்ட்ரோல் பண்ண முடியல… கொஞ்சம் சொல்லி வைங்க..! அடிக்கடி இந்தமாதிரி கம்பெல்சன்ல டேப்லெட் எடுக்குறது, அவ்வளவு நல்லதில்ல…” செவிலிப்பெண் பெரியபாட்டொன்றை பாடிவிட்டு ஓய,
“ஒஹ்… ரியலி சாரி சிஸ்டர்..! இனி நான்தான் இருப்பேன் உங்களுக்கு தொந்தரவு இருக்காது” மனம் திறந்து பதிலளித்தவள் கணவனை காணசென்றாள்.
உடனிருந்த தங்கமணியிடம் இனி, தான்பார்த்துக் கொள்வதாககூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். கணவன் மருந்து எடுத்துக் கொண்டானா, இன்றைய பொழுதில் என்னென்ன வீம்புகளை மேடையேற்றினான் என்று மாமியாரிடம் கேட்டுக் கொள்ளவுமில்லை.
இவனது அலட்டல்கள்தான் தினம் ஒரு சிருங்காரத்தில் நாடகமாகிக் கொண்டிருக்கின்றதே! இந்த அழகினை கேட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்று மனம் அலுத்துக் கொண்டது.
நிர்சலனமான அமைதியில், இறுகிய முகத்துடன் உறங்குபவனை ரசிக்கவே செய்தாள். இதுநாள் வரையில் இவனது சுபாவங்களை நினைத்தே பயந்து பார்த்தவள், இன்று அவன் மீதான அன்பு, கனிவு, நேசம் என அனைத்தும் சேர்ந்து மனதிற்குள் முட்டிக்கொள்ள தானாய் கண்ணீர் சுரந்தது.
தன்னிடம் தோழமையை வேண்டி வந்தவனை அப்பொழுதே ஏற்றுக் கொண்டிருந்தால், இப்பொழுது இந்த நிலை இவனுக்கு இல்லைதானே என்று மனம் கேட்ட கேள்வியில் இவள் குற்றவாளியாகிவிட பெரிதும் துவண்டு போனாள்.
ஆசை என்ற சொல்லை விட்டுவிட்டு அன்பாய் கணவனை நோக்கும்போது, அவளின் வெதும்பிய மனமும் அமைதியடைந்ததை அழகாய் உணர்ந்தாள். இரக்கமென்ற நூலினை பிடித்து வந்தவள், இப்பொழுது அன்பெனும் ஊஞ்சலில் ஏறியிருந்தாள்.
தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பவன் அருகில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து, கணவனை விழியகலாது பார்க்க, அத்தனை அம்சமாய் தெரிந்தான்.
அலையலையான கேசம் வாரப்படாமலிருக்க, ஒருவார தாடியும் அவனை அழகனாக்கி இருந்தது. இமைக்காமல் அவனை பார்த்தபடியே அமர்ந்த நிலையில் உறங்கியும் போனாள்.
அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் நாற்காலியில் இவள் உறங்கியிருக்க, அசோக் விழித்துக் கொண்டான். நெடுநாளைய ஆசையாக, அவளை கனிவுடன் பார்த்தவன் தன்னையுமறியாமல் வாஞ்சையுடன் மனைவியின் தலையை தடவிவிட, அந்த ஸ்பரிசத்திலேயே விழித்துக் கொண்டாள் அவனது மனையாள்.
“அது ஒன்னுமில்ல… ஈ… இல்ல கொசு உட்கார்ந்திருந்தது, தட்டிவிட்டேன்” திக்கித் திணறிச் சொன்னவன், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்ள,
“செய்யுற வேலைய சரியா செய்யணும் அசோக்…” துடுக்காய் சொன்னவள், அவனது கையை பற்றி, நிறுத்திய செயலை தொடரச் சொன்னாள்.
“அதெல்லாம் அப்பவே போச்சு… நீ எதுக்கு வந்த? அம்மா எங்கே?”
“ஷப்பா… கேள்வி கேட்க மட்டுமே, வேகமா பேச்சு வருது!” பொய்யாய் அலுத்துக் கொண்டு,
“அத்தைக்கு ரெஸ்ட் வேணும் அசோக். ஏன் நான், உங்க பக்கத்துல இருக்க கூடாதா?” அவனது கடுகடுத்த வார்த்தைகளுக்கு, எளிதாய் பதிலளிக்கத் தொடங்கினாள் வைஷாலி.
“எனக்கு யாரும் தேவையில்ல ஷாலி! நீயும் வீட்டுக்குபோ… உனக்கும்தானே வீண்அலைச்சல், ஊருக்கு போகச் சொன்னாலும் மாட்டேன்னு அடம்பிடிக்கிற… நீ இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கல…” மனைவியிடம் முகத்தை சுருக்க,
“எப்படி? நீங்க ஆஸ்பத்திரியில இருக்கீங்க, அதனால, நான் ஊருக்கு வந்துட்டேனு சொல்லி, எல்லார்கிட்டயும் கெட்டபேர் வாங்கிக்கனுமா? என்ன ஒருநல்ல எண்ணம் உங்களுக்கு…” அவளும் உரிமையை கோபித்துக் கொண்டாள்.
“நான் ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லுடா!”
“இப்படியே, இன்னும் எத்தனநாள் சொல்லி சமாளிக்க?”
“கொஞ்சநாள் சமாளி… அதுக்குள்ள உனக்கான புதுலைஃப் தேடிக் கொடுத்து, நான், எல்லாருக்கும் விளக்கம் சொல்றேன்” என்றவனை பார்வையாலே எரித்தாள் வைஷாலி.
கடந்து வந்த நாட்களில் கணவனின், இந்த பேச்சை விரும்பாவிட்டாலும், இவனது மனநிலையை கருத்தில் கொண்டே, தடுக்காமல் அமைதி காத்தவளுக்கு இப்பொழுது அந்த பொறுமை பறந்து போயிருந்தது.
“ஒஹ்… பாருங்களேன்..! நீங்க எனக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்க. நான் உங்களுக்கு ஒரு கேர்ள்ஃப்ரெண்ட் பார்க்குறேன். ரொம்ப நல்லா விளங்கிடும் நம்ம லைஃப்..!” என்று கோபத்துடன் மூச்சு வாங்க,
“எனக்கு யாரும் தேவையில்லடா… நான் இப்படியே கண்டினியூ பண்ணிடுவேன். ஆனா உனக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கை நிச்சயமா வேணும்” என்றவனை, ஆள்காட்டி விரலால் பேசவேண்டாம் என்ற சைகையில் வாயை அடைத்தவள்,
“நீங்க ஒருமுடிவு பண்ணிதான் பேசிட்டு இருக்கீங்க அசோக்! எனக்கு, நீங்க எவ்வளவு தேவைன்னு உணரவே மாட்டீங்களா? நீங்க சொன்னதும் உங்களை தூக்கிப் போட்டுட்டு போயிடுவேன்னு நீங்க நினைச்சா… அதை எப்பவும் செய்ய மாட்டேன்.
உங்க மனநிலையும் என்னோட சந்தோஷமும் சேர்த்து நம்ம வாழ்க்கையா பார்க்க ஆரம்பிங்க அசோக்..! நமக்கான வாழ்க்கை, நட்பும் காதலுமான புரிதலோட இருப்போம்னு, அன்னைக்கு மலைக்கோவில்ல பேசினோம். அதுல எந்த மாற்றமும் இல்ல… வாழ்வும் சாவும், எனக்கு, உங்களோடதான்..!” என்றவள் ஆழப் பெருமூச்செடுத்து அவனை நேராய் பார்த்தாள்.
“இது சரிவராது. நான் என்ன சொல்ல வர்றேன்னா…” மீண்டும் அவன் ஆரம்பிக்க,
“உங்களோட விளக்கம் எனக்கு தேவையில்ல… எனக்கே எனக்கான தோழனா, என்நலம் விரும்பியா நீங்க என்கூட வாழ்நாள் முழுக்க வரணும், அதுக்கு நீங்க ஆரோக்கியமா இருக்கனும். உங்கமேல இருக்குற உரிமையில, நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்க சம்மதம் சொல்லிட்டீங்கன்னு சொல்லிடவா!” கணவனை தீர்க்கமாக பார்த்து கேட்க, பதில் சொல்ல முடியாமல் திண்டாடிவிட்டான் அசோக்
“நீ உணர்ச்சி வசப்பட்டு பேசுற ஷா! நான் எதார்த்ததுல நிக்கிறேன்…” இறங்கிய குரலில் விளக்க முற்பட,
“சட்டுன்னு வாய்க்கு வந்தத பேசி என்னோட நம்பிக்கைய வெட்டிச் சாய்ச்சுடாதீங்க அசோக்… நெஜமான அன்பும் பாசமும் நம்மை வாழவைக்கும். நீங்களும் அதே நம்பிக்கைய வைங்க… நாம இன்னும் வாழவே ஆரம்பிக்கல… நம்ம சந்தோசத்தை எதிர்பார்த்து நம்ம ரெண்டு குடும்பமும் இருக்கு, புரிஞ்சுக்கோங்க…” கரகரத்த குரலில் பெரும் வலிகளோடு சொன்னவள், தன்இமைகளின் கதகதப்பை முயன்று அடக்கிக்கொண்டு, அமைதியாகி விட்டாள்.
“எத்தனை இருந்தாலும், என்னோட தீர்க்க முடியாத குறையோட வாழ்க்கை முழுசும் உன்னால் வரமுடியாது ஷாலி! வரவும் நான் அனுமதிக்கமாட்டேன். உணர்ச்சிவசப்பட்டு, நான் செஞ்ச முட்டாள்தனம், ரெண்டு பேரையும் புரட்டி போட்டு வேடிக்கை பார்க்குது” இவனும் அயராத அவநம்பிக்கையில் வார்த்தைகளை வளர்த்தான்.
“அத சரி பண்ணிக்கதான் வழிகள் இருக்கே.. அதை ஏன் செய்யமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க? உங்களை நீங்களே தாழ்த்திக்கிறது எனக்கு பிடிக்கல…” என்றவளின் முகத்தை, கணவன் கைகளில் ஏந்திக்கொள்ள, அவளோ நடுங்கும் மனதோடுதான் அவனை ஏறிட்டாள்.
“உன்னை நீயே விட்டுக் கொடுக்காதே ஷாலி… எனக்காக சகிச்சுக்க ஆரம்பிச்சா, நீ தொலைஞ்சு போயிருவேடா.”
“உங்கமேல வச்ச அன்பு, எதையும் பெருசுபடுத்தி காட்டாது அசோக்”
“பொறுமைய சோதிக்காதே… கிளம்பு நீ, என் முடிவுல மாற்றமில்ல…” என விலக முயற்சிக்க,
“என் முடிவுலயும் மாற்றமில்ல… நம்ம உண்மையான அன்புக்கு அங்கீகாரம் வேணும். அதுக்கு நாம சேர்ந்து வாழ்ந்தே ஆகணும்” அவளுடைய குரலில் தெறித்த உறுதியில் ஒருநொடி அவன் அடங்கித்தான் போனான்.
“நீங்க, உங்கள சரிபண்ணிக்கணும் அசோக்… அப்டி இல்லன்னா உங்க நிலைமையில, நான் நிற்க ரொம்பநாள் ஆகாது” என்றவளின் அடக்கி வைத்த கண்ணீர் வெடித்துவர அவன் தோளில் முகம் புதைத்து, தன்பாரத்தை இறக்கி வைத்தாள்.
கணவனாய் தான்தரத்தவறிய அரவணைப்பை, அவளாக வந்து தேடிக் கொள்கிறாளே என்ற நினைப்பே அவனை கசக்கியது.
மனைவியின் கண்ணீருடன் கூடிய பிடிவாதம், மெல்லமெல்ல மீண்டும் அவனை பித்தனாக்கி கொண்டிருந்தது. மென்மையாய் மனைவியின் தலைவருடித் தந்தான். இன்னும் அவன் தோளோடு, இவள் முகம் புதைத்து ஒன்றிப் போனாள்.
கண்களில் வழிந்த கண்ணீரும், இவள் உரைத்த மந்திரமும் கணவனின் மனதை இளகவைத்து, இருவரும் இணைய பாலமாகி விடாதா என்று எண்ணியபடி வைஷாலி அமைதியாக தோளில் சாய்ந்தபடியே,
“எனக்கு, நீங்க வேணும் அசோக்! உங்க மூலமா வந்த உறவுகளும் வேணும்…” சிறுபிள்ளையாக மனைவி பிடிவாதம் செய்தாள்.
“உன்னோட கண்ணீருக்கு நான் தகுதியில்லாதவன் ஷா! நான் மீண்டு வர்றது அவ்வளவு சுலபமில்லடா… சொன்னாகேளு!” நலிந்த குரலில் அவளை அணைத்துக்கொண்டே அசோக் சமாதனப்படுத்த முயல, அவளுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
“நீங்க ஒரு கோழை அசோக்… உங்களையும், நீங்க சரி பண்ணிக்க மாட்டீங்க, என்னையும் வாழ விடமாட்டீங்க… ஒவ்வொரு தடவையும் என்உணர்ச்சிகளோட விளையாடுறதே, உங்களுக்கு பொழுதுபோக்கா இருக்கு. நீங்க ஒரு எமோஷனல் கில்லர்…” வார்த்தைகள் தறிகெட்டு வெளியேறும் நொடியில், கோபமும் மிகுதியாகிக் கொண்டே வந்தது மனைவிக்கு…
“ஒரு பொண்ண உடலளவு மானபங்கம் படுத்துறது மட்டும் குற்றமில்ல… காதல், கல்யாணம்னு நம்பிக்கை கொடுத்து, கைவிடறதும் பெரிய குற்றம்தான்.
நீங்க எனக்கு செய்ய நினைக்கிற காரியத்துக்கு பேரு பச்சை துரோகம். ஒன்னு, நீங்க வாழனும். இல்ல, என்னை வாழவைக்கணும் அது ரெண்டும் செய்ய முடியாத மிகப்பெரிய கோழை நீங்க…” கண்ணீரோடு வைஷாலி பொங்கிவிட,
அவளுக்கு சற்றும் குறையாத ஆங்காரம் வந்து, அவளை அடிக்க கையை ஓங்கி விட்டான், அசோக். அவனது அதிரடியில் சட்டென்று பின்னடைந்து வைஷாலி விலகிவிட, இவன்தான் தலையிலடித்துக் கொண்டான்.
“ஏன், இப்படி என்னை எல்லாருமா சேர்ந்து கொல்றீங்க? தெரியாத உண்மைக்கே என்னை, நீ கொலைகாரன் ஆக்கிட்ட… எல்லாம் தெரிஞ்ச பிறகு, என்னை முழுசா ஒதுக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?”
“எதுக்குங்க இவ்வளவு அவநம்பிக்கை? நம்ம அன்பு நிஜம், அந்த நம்பிக்கையில என்கிட்ட தயக்கமில்லாம பகிர்ந்துக்கலாம்… நமக்கான ரகசியம் அது. என்மேல இருக்குற, உண்மையான அன்பு, எந்த நிலையிலயும் நமக்கு பிரிவை கொடுக்காதுன்னு உறுதியா மனசுல பதிய வைங்க… அதுக்கு பிறகு உங்கள திடப்படுத்திட்டு சொல்ல முயற்சி பண்ணுங்க…” தீர்மானமாய் தீர்க்கமாய் உரைத்தவளை இமைக்காமல் பார்த்தான்.
அவன் வாழ்வில் ஒளிகொடுக்கும் அகல்விளக்காய் மனைவி நிற்க, அல்பாயுசில் மறையும் தீக்குச்சியான வெற்று தாழ்வு மனபான்மையை எண்ணி, உன்னை, நீயே ஏன் வதைத்து கொள்கிறாய் என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
வாழ்வை ஒளியேற்றப் போகின்றவளிடம், நீரூற்றி அணைக்கும் வித்தையை எப்படி பிரயோகித்தாலும் அது மடத்தனம்தானே என்று மனம், மனைவியின் வசம் சரணடைந்து விட்டது.
இவளின் போராட்டத்திற்கு தக்க பலனாய் இளகிய மனநிலையில் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருப்பவளிடம்,
“உன்மேல, எனக்கு இருக்குற அன்பு எப்பவும் மாறாதுடா… எனக்கு மீட்சி இருக்கோ இல்லையோ, நீ எந்த நிலையிலயும் என்னை புரிஞ்சுப்ப என்கிற நம்பிக்கை இருக்கு… அதையே ஆதாரமா வைச்சு என்னோட ரகசியங்களை இறக்கி வைக்கிறேன்.
அதுக்கு பிறகு உன்னோட எந்த விருப்பத்துக்கும் நான் தடையா இருக்கமாட்டேன். அப்பவும் உன்னோட வாழ்க்கை மட்டுமே எனக்கு முக்கியம். உன் ஆசைப்படியே டாக்டர்கிட்ட நான் கவுன்சிலிங்க்கு ரெடினு சொல்லிட்டு வா…” கனிவுடன் பேசியவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு விசும்பினாள் வைஷாலி.
“உங்களை இவ்வளவு கஷ்டபடுத்துறேன்னு நினைக்கவே எனக்கு வேதனையா இருக்கு… ஆனா உங்க பாரங்களை இறக்கி வைக்காம, உங்களால, என்னோட சாதாரணமாகூட இருக்க முடியாதுன்னு புரிஞ்சதாலதான், நானும் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறேன். ஐயாம் வெரி சாரி…”
“உன்அழுகை என்னை பலவீனமாக்குது ஷா… அதுக்கு காரணமா, எது இருந்தாலும் அதை தகர்த்துடனும் துடிப்பு வருது எனக்கு. இனி என்முன்னாடி அழுகாதடா…” என்று குரலும் கண்களும் கெஞ்ச மனைவியை முகத்தை நிமிர்த்தினான்.
“என் நம்பிக்கை பொய்க்ககூடாது, என் முயற்சி வெற்றியடையனும்னு என்னை வாழ்த்துங்க அசோக்… மனசும் அழுகையும் ரெட்டை குழந்தைகள் மாதிரி. அதை பூட்டி வைக்காம, வாழ ஆரம்பிச்சா எல்லாமே ஈசியாகிடும்.” சிரிப்புடன் கண்சிமிட்டி, கணவனை இயல்பாக்கினாள்.
அதற்கடுத்து நாளில் அமைதியான சூழலில் மருத்துவரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தவனுக்கு, தனது இன்னல்களை நினைவுபடுத்தி, விளக்கும் பொழுது பெரிதும் உணர்ச்சிவசப்பட்டவனாய் இருக்க, வார்த்தைகள் திக்கத் திணறியே வார்த்தைகள் வற்றிப் போனது அவனுக்கு…
தொடர்ந்த நாட்களிலும் இந்த பின்னடைவையே அவன் சந்திக்க, மருத்துவர் சிகிச்சை முறையை சற்றே மாற்றி கொண்டால் சிறந்த பலனளிக்குமென்று விளக்கினார். அதன்படி அசோக், மற்றும் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவர் பரிந்துரைத்த சிக்கிசைமுறை அறிதுயில்நிலை அல்லது ஆழ்மன சிகிச்சை – ஹிப்னோசிஸ் என்பதாகும்.
இந்த சிகிச்சைமுறை தனியறையில் நடைபெறும் நேரத்தில், நோயாளியின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் தெரிந்து கொள்ளவென நேரடிக்காட்சிகளாக பார்க்க அவர்களுக்கு வெளியே ஏற்பாடு செய்யபட்டிருக்கும்.
மிதமான ஒளியில், மிகஅமைதியான அறையில், உறங்குவதற்கு ஏதுவான இடத்தில் அசோக் படுத்திருக்க, அவனது எதிர்புறம் உள்ள ஸ்பைரல் வரைபடத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டிருந்தான்.
அவனிடம், உளமருத்துவர் மிகமென்மையான குரலில் தனது சிகிச்சையை தொடங்கினார். தன்முன்னால் படுத்து இருப்பவனின் முகத்தையும் மார்பையும் மிருதுவாக வருடிக் கொண்டே,
“தூங்கனும் அசோக்… இதோ, இப்ப நீங்க தூங்கப் போறீங்க… நீங்க தூங்கிட்டீங்க… ஆமா… நீங்க தூங்கியாச்சு!” என்று மிகமெதுவாகக் கூறியே துயில் நிலைக்கு, அவனை ஆட்படுத்தினார்.
இப்பொழுது அவனது மனமானது ஆழ்மன சிகிச்சைக்கு தயாராகி விட்டது. அதாவது அறிதுயில் நிலைக்கு அவன் ஆட்பட்டு விட்டான். இவனது இந்தநிலை, ‘நீ விழித்துக்கொள்’ என்ற கட்டளை பிறக்கும்வரை நீடித்திருக்கும்.
சாதாரணமாக நடைபெற்ற ஆலோசனையின்போதே அசோக், தன்னை பற்றிய பலவிஷயங்களை பகிர்ந்து கொண்டதால், அவன் எந்த இடத்தில் உணர்ச்சிவயப்பட்டு வாயடைத்து போனானோ, அந்த காலகட்டத்திற்கு அவனை கொண்டு சென்றார் மருத்துவர்.
இனி அவனது கடந்த காலங்கள் அசோக்கின் வாயிலாக வலம்வர, நாம் கதையின் போக்கில் காண்போம்…
இருபத்தியொரு வயது இளைஞனாக, கல்லூரி இறுதியாண்டை முடிக்கும் மாணவனாக, அசோக்கிருஷ்ணாவை அடுத்த பதிவில் தொடர்வோம்…
அறிதுயில் நிலை- ஆழ்மன சிகிச்சை- ஹிப்னாடிசிஸ்:
அறிதுயில் நிலையில் மனம் மிகவும் விழிப்பாக இருக்கும். மருத்துவ வல்லுநர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், முறையான மற்றும் தெளிவான பதில்களை அளிக்க மனம் தயாராக இருக்கும்.
உதாரணமாக, அந்நியன் திரைப்படத்தில் விக்ரமை, நாசர் ஒருஸ்பைரல் வரைபடத்தைப் பார்க்க வைத்து, ஆழ்மனதில் உள்ள நிகழ்வுகளை வெளிக்கொண்டு வருவார்.
இப்படிதான் ஹிப்னோசிச வல்லுனர்களும் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி, ஹிப்னோசிச நிலையை அடைய வைக்கின்றனர்.
ஒருவருடைய விருப்பமில்லாமல் அவரை, அறிதுயில் நிலைக்கு கொண்டு செல்வது கடினம். முடியாமலும் போகலாம்.
மறந்துபோன நினைவுகளை, நினைவில் கொண்டு வரலாமென்பது தவறான கருத்து. ஒருவரின் மூளையில் பதிந்திருக்கும் நினைவுகளை மட்டுமே இந்த சிகிச்சையின் மூலம் வெளிக்கொண்டு வரமுடியும்.
அறிதுயில்நிலை அல்லது ஆழ்மன சிகிச்சையின் மூலம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு, அதிகசினம் கொள்பவர்கள், அதிகம் பதட்டமடைபவர்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் பயனடைவர்.
ஹிப்னாடிசம் என்னும் ஆழ்மன சிகிச்சை எவற்றிக்கெல்லாம் தீர்வு தரும்:
1.குற்றவுணர்வு காரணமாக தனக்குள்ளேயே வைத்து வேதனைப்படுவது.
2.கலவி வேலையில் கவனமின்மை. குழப்பமான சிந்தனைகள்.
3.திருமணம் செய்ய பயம், பெண்ணுக்கு ஆணை பிடிக்காதநிலை, ஆணுக்கு பெண்ணை பிடிக்காதநிலை.
4.எதிர்காலம் பற்றிய பயம். அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் வரமுடியாமை.
5.வெளியில் தெரிந்தால் சமூக அந்தஸ்து என்னவாகும் என்ற பயம்.
இவையெல்லாம் சாதாரண மனிதர்கள் முதல் பெரும் பதவியிலிருப்பவர், கற்றவர் என பாரபட்சமின்றி நிகழும். இதற்கு சிலசூழ்நிலைகளும், காதலை வெளிபடுத்த இயலாமையின் காரணமாகவும் அமைகிறது.
ஹிப்னாசிஸ் சிகிச்சையின் அற்புதங்கள்:
மருந்தில்லா மருத்துவமுறை, அதனால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை.
வருடக்கணக்கில் சிகிச்சை தேவையில்லை. ஒருசில அமர்வுகளிலேயே சரியாகிவிடும்.
மனநிலை உடல்நிலை மட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் மாற்றம்.
அறியாத வயதில் மனதில் ஏற்பட்ட நமக்கே தெரியாத காயங்களை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும்.
நம்மால் மாற்றிக் கொள்ளமுடியாத பழக்க வழக்கங்களை எளிதாக மாற்றமுடியும்.
ஆழ்மன ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். உள்ளுணர்வு நினைவாற்றலை வளர்ப்பதன் மூலம் மேன்மையடையலாம்.
புராணத்திலும் ஆழ்மன சிகிச்சை:
இந்தக் காட்சியை மதசிந்தனையாக பார்க்காமல் முன்னோர்களின் அறிவாக பார்ப்போம்.
பிரகலாதன் கதை… எல்லோரும் அறிந்த ஒன்று. இரணியன் என்ற அரசனின் மகன்தான் பிரகலாதன்.
இரணியன், தான் தான் கடவுள்; அவர் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மக்களும் ‘இரணியாய நமக’ எனப் போற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.
இதை மாற்றி இரணியனுக்கு பாடம் புகட்ட எண்ணிய நாரதர், கருவுற்றிருக்கும் இரணியனின் மனைவி உறங்கும் நேரத்தில், அந்த குழந்தையிடம் ‘ஸ்ரீமன் நாராயணன்தான் கடவுள்; அவன் மட்டுமே கடவுள்’ என்று ஆழ்மனதில் பதிய வைக்கிறார்.
நாடே ‘இரணியாய நமக’ என்று கூறிவரும் நிலையில், அவன் குழந்தை பேச ஆரம்பித்த பிறகு, ‘அரி ஸ்ரீமன் நாராயணாயா நமக’ என்கிறது. இப்படி செல்கிறது கதை…
விஷயத்துக்கு வருவோம்… இப்படிதான் ஹிப்னாடிசம் வேலை செய்கிறது. அறிவார்ந்த குழந்தை, கல்வி, நினைவாற்றல், நேர்மறை எண்ணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் என்று பலஅற்புதங்களை செய்ய முடியும்.
பிறக்காத குழந்தைக்கே மனம் இவ்வளவு வேலை செய்யும்போது, மனதை அறிந்த நமக்கு இன்னும் பல ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும்.
ஆனாலும் ஆங்கிலேயர் அறிவை மட்டுமே நம்பும் காலமாக தற்போது மாறிவிட்டது. இந்தகலை நம்பாரம்பரிய கலையே!
இந்த சிகிச்சையால் கிடைக்கும் தீர்வுகள்:
கோபம், மனஅழுத்தம், தாழ்வுமனப்பான்மை, குற்றவுணர்ச்சி, காரணமற்ற பயம், தற்கொலை எண்ணங்கள், எதிர்காலம் பற்றிய பயம், ஞாபகமறதி, படிப்பில் கவனமின்மை, ஓரினச்சேர்க்கை, கணவன் மனைவி உறவில் பிரச்சனை, தாங்கமுடியாத தோல்விகள், தன்னைத்தானே வெறுத்தல் தனிமையை விரும்புதல், தூக்கமின்மை, தனிமையில் பேசுதல், தன்னைத்தானே வருத்திக் கொள்ளுதல்/ தனக்குத்தானே தண்டனை கொடுத்தல்… போன்ற பல இன்னல்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் இணையத்தின் மூலம் பகிரப்பட்டவை.