இனிய தென்றலே

இனிய தென்றலே

தென்றல் – 8

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே!

கங்கை கரை அல்லவோ காதலின் மன்றமே!

அந்த மீராவைப் போல் ஏங்கினேன்…

தினம் வாடாமல் நான் வாடினேன்…

வெகு நாட்களுக்கு பிறகு தோழிகளுடனான சந்திப்பில் தன்னை மறந்து கலகலத்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. தோழி நிஷாந்தினியின் திருமண வரவேற்பில், மனதின் இறுக்கங்களை எல்லாம் தகர்த்தியபடி கல்லூரித் தோழிகள், உடன் பணி புரிந்த நண்பர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.

“எல்லாரும் ஒரு வழியா செட்டில் ஆகிட்டு வர்றாங்க… உனக்கு எப்போ மேரேஜ் வைஷூ?” தோழி ஒருத்தி விசாரிக்க,

“அந்த ரோமியோ என்ன ஆனான்? இன்னுமா நீங்க செட் ஆகல!” மானேஜர் மனோகரும் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க, சங்கடத்துடன் சிரித்தாள் வைஷாலி.

“சார்! இவ அரைகுறை சாமியாரிணின்னா, இவள தேடி வந்தவரு சுத்த சந்நியாசியா இருக்காரு… ஏதாவது மிராக்கிள் நடந்தாதான் உண்டு” ஸ்வப்னா கேலியில் இறங்க,

“சும்மா இருடி… உனக்கு லேட் ஆகலையா? அண்ணாவ கூப்பிடவா?” தோழியை அடக்கும் வழி தெரியாமல் மிரட்டலில் இறங்கினாள் வைஷூ.

அன்னபூரணியும் நேரமாகி விடும், சீக்கிரம் ஊருக்கு கிளம்பலாம் என்று பேத்தியை அழைக்க,

“நேர்ல பார்க்குறப்பதான் ஃப்ரீயா பேச நேரம் கிடைக்குது பாட்டி. ப்ளீஸ் இன்னைக்கு கொஞ்சம் லேட்டா கிளம்புங்க…” என்று ஸ்வப்னா கெஞ்சலில் இறங்க,

“ஆமாம் பாட்டி… சிவப்பி குடும்ப ஸ்திரியான பிறகு, துணிக்கு இஸ்த்ரி போடவே டைம் பத்த மாட்டேங்குது! இன்னைக்கு மட்டும் லேட்டா போவோம் ப்ளீஸ்!” வைஷாலியும் பல தாஜாக்களை செய்ய, வேறு வழியில்லாமல் பாட்டியும் ஒத்துக் கொண்டார். 

தோழிகளின் அரட்டைகளுக்கு இடையே அசோக் வந்ததை பார்த்த வைஷாலிக்கு அந்த நேரமே படபடப்பு ஒட்டிக் கொண்டது. இங்கும் வந்து தனது பல்லவியை ஆரம்பித்து விடுவானோ என்ற பதட்டத்தில் அவன் புறம் தன் பார்வையை திருப்பாமலேயே ஒரே இடத்தில் அமர்ந்து தனது கச்சேரியை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஸ்வப்னாவும் தோழியிடம், ”உன்னோட ஆள் என்ட்ரி குடுத்திட்டான்டி!” எச்சரிக்கும் விதமாய் சொல்ல, வைஷூ முறைத்தாள்.

“சரி, சரி… ரெட் ஆங்ரி பேர்ட் கமிங்… அலர்ட் ஆகிக்கோ!” விடாமல் வம்பிழுக்க,

“அடங்குடி, இல்ல…” பல்லைக் கடித்தபடி கழுத்தை நெறிக்க வந்தாள் வைஷாலி.

“ம்ம்… ப்ளாக் ஜீன்ஸ் வித் கிரே டீ-ஷர்ட், ப்ளாக் பிளேசர்… சார் மாப்பிள்ளையாதான் வந்திருக்காரு” என்றவள் நமுட்டுச் சிரிப்புடன் வைஷூவை ஏற இறங்கப் பார்த்து,

“இங்கேயும் அப்படிதான் போல…” கிண்டலோடு வைஷூவின் அலங்காரத்தை குறிப்பிட்டாள்.

“நீ இடத்தை காலி பண்ணு… விளையாட்டா பேசப் போய்தான் எல்லாம் வினையா முடியுது!” என்று தோழியை கண்டித்தாலும், மனதை அடக்கமுடியாமல் அவனை முழுவதுமாய் பார்த்து, நொடியில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“என்னை சொல்லிட்டு நீயே ஸ்டார்ட் பண்றீயா? ஸ்டடி வைஷூ… பீ கான்ஃபிடென்ட்… நீ நோக்குற விஷயம், பாட்டிக்கு தெரிஞ்சது… அவ்வளவுதான்!” ஆள்காட்டி விரலசைத்து ஸ்வப்னா மிரட்டலை விட,.

“ரொம்ப ஓட்டாதே சிவப்பி… உன்னோட பேச்சுதான் என்னை பார்க்க வச்சது… இல்லன்னா நான் சும்மா இருந்திருப்பேன். என்னை மிரட்டுற வேலை வேணாம்” பொய்கோபத்தில் சிலிர்த்துக் கொள்ள,

“மீசையில மண் ஓட்டல வைஷூமா!” விடாமல் வாரிவிட்டு, அன்றைய திருமண ஜோடிகளை கேலி செய்யும் பொன்னான வேலையில் இறங்கினாள் ஸ்வப்னா.

வைஷாலிக்கு குறையாத அவஸ்தையை அசோக்கும் அனுபவித்தான். பச்சை வண்ண சில்க் காட்டனில் மயில்தோகை சிறியதும் பெரியதுமாய் விரித்திருக்க, வெள்ளி இழையோடிய ஆரஞ்சுநிற பார்டர் புடவையை பாந்தமாய் உடுத்தியவளை கண்ணெடுக்காமல் பார்த்தான்.

இந்த ஆறுமாதத்தில் முதுகை தாண்டிய கூந்தலும் இடையை தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதோ என்ற பொல்லாத சந்தேகம் வந்து அவனது கண்களை உறுத்தியது.

பின்னழகில் அவளை ரசித்துக் கொண்டிருந்தவன் மறந்தும், அவளின் முகம் பார்க்கவில்லை. தன்னால் அவளுக்கு ஏற்பட்ட இன்னல்கள் போதும், இனி ஒருமுறை அந்த வேதனையை அவளுக்கு தரவேண்டாம் என்ற முடிவில் அவளை, முன் நின்று பார்ப்பதையும் தவிர்த்தான்.

தன்னையும் மீறி அவளிடம் பேசி விடுவோமோ என்ற அச்சத்தில் பார்வையால் அவளை தொடர்ந்தவன், தன் மனதை முயன்று அடக்கிக் கொண்டு, கவனத்தை வேறொரு பக்கம் திசை திருப்பிக் கொண்டான்.

இளையவர்கள் பட்டும் படாமலும் இருக்க முயற்சி செய்ய, பெரியவர்களுக்கு அந்த அவதி எல்லாம் இல்லை. சகஜமான வார்த்தையாடல்கள் அவர்களுக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

தங்கமணிக்கு வைஷாலியைப் பார்க்கும் பொழுதெல்லாம் தன்னையுமறியாமல் ‘இவள், எங்கள் வீட்டிற்கு வரவேண்டிய பெண்’ என்ற ஏக்கப் பெருமூச்சு வெளிவருவதை தடை செய்ய முடியவில்லை. பிள்ளையை பெற்றவருக்கு இதை விட, வேறென்ன கவலை வந்து விடப் போகிறது?

அன்னபூரணி பாட்டிக்கோ, தனக்கு சக்தி இருந்தால் கண்களால் பஸ்பம் ஆக்கி விடுபவரைப் போல, அசோக்கை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தார்.

இவனது தான்தோன்றித் தனத்திற்கு, தன் பேத்தியின் திருமணம் அல்லவா கேள்விகுறியாகி நிற்கின்றது என்ற காட்டம் மனதிற்குள் எழுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதுமட்டுமா…

அவரின் பேத்தி இன்றைக்கு வரையிலும் தனது இயல்பை தொலைத்து நடமாடிக் கொண்டிருக்கிறாளே, இந்த அவதிகளை எல்லாம் எங்கே போய் சொல்வது? அவரது இத்தனை நாள் மன அழுத்தங்களே, தற்பொழுது கோபப் பார்வைகளாக மாறி அசோக்கை எரித்துக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக தோழிகளை அனுப்பி விட்டு, இவள் வருவதற்கும், தங்கமணி அசோக்குடன் கிளம்புவதற்கும் சரியாக இருக்க, நால்வரும் சேர்ந்தே மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர்.

இரவு மணி பத்தை தொட்டுக் கொண்டிருந்தது. துறையூருக்கு செல்ல வாடகைக் காருக்கு பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், பேத்தியை கடிந்து கொள்ள ஆரம்பித்தார் பெரியவர்.

“எல்லாரும் அவங்கவங்க வீட்டு ஆம்பளைகளோட வந்திருக்காங்க… நாம அப்படியா! கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா? இப்ப பாரு வண்டி வருமா வராதான்னு ரோட்ல நின்னு காத்து கெடக்க வேண்டி இருக்கு… நாளைக்கு விடியக் காத்தால மலைக்கோவிலுக்கு போகனும். மறந்திட்டியா நீ!” என்று கடுகடுக்க,

“அடடா! கொஞ்சம் பொறுமையா இரு, பாட்டி! பத்திரமா போய் சேர்ந்துடலாம்” என்று வைஷாலியும் சமாதானம் செய்து கொண்டிருக்க, வண்டியோ இன்னும் வருகின்ற வழியைக் காணோம்.

அந்த நேரத்தில், காருடன் வெளியே வந்த தங்கமணி தாங்கள் துறையூருக்குதான் செல்வதாகவும், தங்களுடன் வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

வேண்டாம் என்று இரு பெண்களும் சேர்ந்து தவிர்க்க, அசோக், தன்னை மனதில் வைத்தே மறுக்கின்றனர் என்ற வருத்தத்தில்,

“உங்களை பத்திரமா கொண்டு போயி விடுறது என்னோட பொறுப்பு பாட்டி… வேறெந்த வில்லங்கமும் வராது” தானாகவே வாக்குறுதி கொடுத்தாலும்,

‘ஏற்கனவே இவனால் கிடைத்திருக்கும் அவப்பெயர் போதாதா… இவனுடன் சேர்ந்து சென்று, அதை உண்மையாக்க வேண்டுமா?’ என்ற வேதனையில் அவனது உதவியை ஏற்காமல் தயங்கியே நின்றார் பாட்டி.

“சரி விடுங்க… என் ஃப்ரெண்ட்ஸ் யார் கிட்டயாவது வண்டி இருக்கான்னு கேட்டு பார்க்குறேன். அதுல போகலாம்” என்று மேலும் இவர்களுக்கு உதவுவதில் அசோக் குறியாய் நிற்க, இப்பொழுது பெண்களுக்கு தர்ம சங்கடமாய் போனது.

“என் பையன் மட்டும் வந்தா நீங்க தயங்கலாம் அத்தை… உங்க கூட நானும்தானே வர்றேன். எதையும் மனசுல போட்டு அழுத்திக்காம வாங்க… வண்டி கிடைக்கலன்னா எங்கேயாவது போய் தங்குறதுக்கும் அலையனும்தானே. அதுக்கு கார்ல போயிடலாம், வாங்க!” என்று தங்கமணி வற்புறுத்தி அழைத்தார்.

வீம்புடன் மறுக்க நினைத்தாலும் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டு, நேரமும் சூழ்நிலையும் அந்த உதவியை ஏற்றுக் கொள்ளச் சொல்ல நால்வரும் பயணத்தை தொடர்ந்தனர்.

பின்புறம் மூன்று பெண்களும் அமர்ந்துவிட, அசோக் அவர்களுக்கு காரோட்டியாக மாறியிருந்தான். பத்து நிமிடங்கள் அமைதியுடன் கரைய, தங்கமணி தானாகவே பேச ஆரம்பித்தார்.

ஒன்றரை மணிநேரப் பயணத்தை கடந்தாக வேண்டுமே! அதோடு மண்டபத்தில் அன்னபூரணியிடம் உரையாடியது, தற்போது இயல்பாய் பேச வைத்தது. அவர்களின் பேச்சு ஊர் உலகமெல்லாம் சுற்றி அவரவர் வீட்டுப் பிள்ளைகளின் மீது நிலைத்து விட,

“பெரியவன் எந்த வீம்பும் பண்ணாம சொல்பேச்சு கேட்டு கல்யாணம் குழந்தைன்னு செட்டில் ஆகிட்டான். இவனுக்குதான் எப்போன்னு தெரியல?” தனது மகன்களின் நினைவில் பேசிய தங்கமணி தொடர்ந்து,

“எல்லாம் ஒழுங்கா நடந்திருந்தா இந்நேரம் வைஷாலி எங்க வீட்டுப் பொண்ணா மாறியிருப்பா…” தன்னையும் அறியாமல் மனதில் உள்ளதை கொட்டி விட்டார்.

“என்ன பண்றது தங்கம்? என்ன சொன்னாலும் சரின்னு தலையாட்டுற பொம்மைகளா நம்ம புள்ளைங்க இருந்தா, நம்ம ஆசையும் நிறைவேறி இருக்கும்” பாட்டியும் தன்போக்கில் சொல்லிவிட, வைஷாலிக்கு கோபம் துளிர் விட்டது.

“அப்படி ஒன்னும் சொல்பேச்சு கேட்காத பொண்ணு இல்ல நானு. இப்பவும் உனக்கு பிடிச்ச மாப்பிள்ளையதானே பார்க்க சொல்லியிருக்கேன்… இன்னும் என்ன வேணும் பாட்டி உனக்கு?” தன்னை குறை சொல்வாயா என்று சிலிர்த்துக் கொண்டு, முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“அப்புறம் ஏன்மா, எம் பையன வேண்டாம்னு சொன்ன?” சற்றும் தாமதிக்காமல் தங்கமணி காரணம் கேட்க,

“அம்மா! நாங்க கல்யாணம்தான் வேண்டாம்னு சொன்னோம்” என்று அவளின் பேச்சிற்கு வக்காலத்து வாங்கினான் அசோக்.

இத்தனை நேரம் பெண்களின் பேச்சில் தலையிடாமல் இருந்தவன், பேச்சு தங்களை நோக்கி நகர்கிறது என்பதை அறிந்து சுதாரித்துக் கொண்டான்.

எக்காரணம் கொண்டும் வைஷாலிக்கு தன்னால் மீண்டும் ஒரு சங்கடம் வந்துவிடக் கூடாது என்ற மெனக்கெடலில், வேகமாய் பதில் அளித்தான். அவனது பதிலில் சமாதானமடைந்த வைஷாலி, மேலும் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள,

“இப்ப அதகூட நான் சொல்றதில்ல…” மிக அப்பாவியாய் மாறி, சுவாரசியமாக பேச்சில் கலந்து கொண்டாள்.

“அப்பிடின்னா, இப்ப என் புள்ளைய கல்யாணம் பண்ணிக்கிறியா?” வைஷாலியிடம் கேட்ட தங்கமணி, சற்றும் தாமதிக்காமல் அன்னபூரணியை பார்த்து,

“அத்தை, உங்க பேத்திய எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறீங்களா?” வேகமாக மனம் திறந்து கேட்டதில்,

“உன் பிள்ளை சம்மதிச்சு, என் பேத்தியும் வந்தா கூட்டிட்டு போ! நான் வேண்டாம்னா சொல்றேன்” அன்னபூரணியும் வெளிப்படையான பதிலைச் சொல்லி விட்டார்.

அவரின் நினைவடுக்குகள் எல்லாம் பேத்தியின் திருமணக் கோலத்தையே கனா கண்டு கொண்டிருக்க, மனதின் ஆசை வார்த்தையாக வடிவம் கொண்டது.

அந்த நேரம் அசோக்கின் பழக்க வழக்கம், அவனது சுபாவங்கள் எல்லாம் அவருக்கும் மறந்து போயிருந்தன. மாலையில் இருந்து இரவு வரை தங்கமணியிடம் பேசிக் கொண்டிருந்த சுமூகமான மனநிலை, அசோக்கின் மேலுள்ள கோபத்தை சற்று மட்டுப்படுத்தியும் இருந்தது என்றால் மிகையில்லை.

பெரியவர்களின் பேச்சினில் இடையிட்ட அசோக், “இவ்ளோ வேகம் எதுக்கும்மா? அவங்கள வீட்டுக்கு கொண்டு போய் விடத்தானே கார்ல ஏறச் சொன்ன… இப்போ சம்மந்தம் பேசிட்டு இருக்க… அப்படியெல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” சட்டென்று மறுத்து, இவர்களின் பேச்சினை தடை செய்ய,

வைஷாலியோ, தன்னை இவன் இன்னமும் நிராகரிக்கிறானே என்று மனதோடு குமுறிப் போனாள். அதை வெளிக்காட்டாமல் இருக்க, அவனுக்கு கொட்டு வைக்கும் வகையில் இவளும் தெனாவெட்டாகவே பதில் அளித்தாள்.

“எனக்கும் சிகரெட், ட்ரிங்க்ஸ், கேர்ள் ஃபிரண்ட்ஸ்ன்னு சுத்துற உங்க பையன் வேண்டாம்” அவன் பலவீனத்தை சொல்லி நிறுத்தியவள், தன் பேச்சு தனக்கே அதிகப்படியாகத் தோன்ற, நாக்கினை கடித்துக் கொண்டு அவசரமாக,

“சாரி ஆண்ட்டி… ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டேன்” என்று தங்கமணியிடம் மன்னிப்பை வேண்டினாள்.

“நீ வந்தா, இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுவான்மா… உன்னால அவனை மாத்த முடியும்…” விடாமல் தங்கமணி மகனைத் தாங்கிப் பேச, வைஷாலிக்கு மீண்டும் கோபம் எட்டிப் பார்த்தது.

“சாரி ஆண்ட்டி! நான் அன்னபூரணிக்குதான் பேத்தி! அன்னை தெரசாவுக்கு இல்ல… நான் சந்தோசமா வாழத்தான் உங்க வீட்டுக்கு வர விரும்புறேன். வெளியே சொல்ல முடியாத நல்ல பழக்கத்த எல்லாம் வைச்சிருக்கிறவரை நம்பி, தெரிஞ்சே தியாகியா வாழ எனக்கு விருப்பம் இல்ல…” என்று பேச்சினை கத்தரிக்கப் பார்க்க, அவளின் பேச்சில் உற்சாகம் அடைந்த அசோக்,

“நீ சொல்றது நெஜமாவா ஷா! உன்னோட ஆல்வேஸ் ஃப்ரீடம் மந்திரம் எங்கேயாவது காணமா போயிடுச்சா?” அன்றைய நாளில் முதன் முறையாக அவளிடம் சிரித்தபடி, பெண் பார்த்த நாளில் பேசிய அசோக்காக மாறிக் கேட்டான்.

“டெய்லி ரெண்டு பாக்கெட் சிகரெட், நிறைய பியர், வீக் எண்ட்ல குட்லுக்கிங் கேர்ள்ஸ் கூட டேட்டிங்… இதெல்லாம் நீங்க தியாகம் பண்ணிட்டு, அப்புறமா வந்து என்னோட சம்மதத்தை கேளுங்க சார்!” கண்டிப்புடன் கூடிய கடிவாளத்தை போட்டு, இவளும் நேரடியாக அசோக்கிடம் கூறினாள்.

“கொஞ்ச கஷ்டம்தான். ஆனாலும் பரவாயில்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்… பட் நான் உனக்கு ஃப்ரண்டா மட்டுமே இருப்பேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? உனக்கு ஓகேவா!” அசோக் பூடகமாக தனது சம்மதத்தையும் சேர்த்து கூறிக் கேட்க,

அவன் சொன்னதை சரியாக கவனத்தில் கொள்ளாமல், அவனுக்கு பதிலடி கொடுப்பதிலேயே குறியாய் இருந்தாள் வைஷாலி. பெரியவர்களும் இவர்களின் பேச்சு எதுவரை நீள்கிறது என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

“அட்ஜஸ்ட் பண்ணிட்டு போற அளவுக்கு அடாவடியாவா நான் இருக்கேன். அப்படி முடியலன்னா ஒதுங்கி போயிடுவீங்களா, இல்ல ஒதுக்கி வைப்பீங்களா பாஸ்?” இவள் சண்டைக் கோழியாக களம் இறங்க,

“இத்தனை பேச்சு பேசுறவ, நான் ஒதுங்கிப் போக முடியாத அளவுக்கு என்னை மாத்த மாட்டியா?” அவளை சீண்டவென கேள்வி கேட்டான்.

“அப்போ உங்க ஹாபிட்ஸ் மாத்திக்கத்தான், என்னை லவ் பண்றீங்களா? பாஸிங் க்ளவுட்ஸா நான்…” சற்றும் யோசிக்காமல் இவள் வார்த்தையை விட,

“சேச்சே… உன்னை அப்படி நினைப்பேனா ஷா!” தன்னை உணர்த்திவிடும் வேகத்தில் பின்புறம் திரும்பி பதில் சொல்லும் போதுதான், பெரியவர்களின் முகத்தை பார்த்து தன் பேச்சை நிறுத்திக் கொண்டான் அசோக்.

வைஷாலிக்கும் தனது துடுக்குத்தனமான பேச்சும், செயலும் அப்பொழுதுதான் அதிகப்படியாய் உரைக்க, எந்தவொரு எதிர்வினையும் காட்டாது அமைதியானாள். தங்களை அறியாமலேயே வெளிப்பட்ட அவர்களின் விருப்பங்களைக் கூட, இருவரும் கருத்தில் கொள்ளவில்லை

பெரியவர்களும் இவர்களின் பேச்சு மாறும் விதத்தை உணர்ந்து, நொடிநேரம் திகைத்து, பின் சகஜமாயினர். மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டு, தங்களின் ஒன்றுமில்லாத கொள்கைக்காக மட்டுமே வீம்புடன் இருவரும் அமைதியாக இருக்கின்றனர் என்பதை அறிய இதை தவிட வேறு சான்று அவர்களுக்கு தேவைப் படவில்லை.

இனி மறுத்தாலும், கண்டித்து இவர்களை சேர்த்து வைத்து விடலாம் என்ற நம்பிக்கை பெரியவர்களுக்கு தற்பொழுது வந்திருக்க, அந்த பூரிப்பில்,

“தங்கமணி, நாளைக்கு என் பேத்திக்கு பிறந்தநாள். பெருமாள் கோவில்ல பூஜை, அன்னதானத்துக்கு சொல்லியிருக்கேன். வீட்டுல எல்லாரையும் கூட்டிட்டு வா” என்று அழைப்பினை விடுத்து, உறவுச் சங்கிலியை இழுத்துப் பிடித்தார் அன்னபூரணி.

அந்த நேரத்தில் அசோக்கின் மேல் தான்கொண்ட கோபம் மனத்தாங்கல் எல்லாம் ஒன்றும் இல்லாத வெற்றிடமாகிப் போயிருந்தது. தன்பேத்தியின் மனதிற்கு பிடித்தவன், அவனுக்கும் அவளிடம் விருப்பம் இருக்கின்றது என்ற நினைவே மகிழ்வைக் கொடுக்க, வேறு எதையும் அவர் மனதில் இருத்திக் கொள்ளவில்லை.

அதற்கடுத்த நிமிடங்கள் அமைதியில் கரைய ஆரம்பிக்க, மிகப் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் அதிகாலையில் துறையூர் பிரசன்னா வேங்கடாஜலபதி பெருமாள் கோவிலுக்கு பேத்தியுடன் சென்றார் அன்னபூரணி.

இக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமண கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். இது துறையூரில் இருந்து 5கி.மீ தூரத்தில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 5கி.மீ மலைப்பாதையை வாகனம் மற்றும் படிக்கட்டுகளின் மூலம் கோவிலை அடையலாம். சுமார் 1500 படிக்கட்டுகளையும் ஏழு சிறிய குன்றுகளையும் தாண்டி இக்கோவில் அமைந்துள்ளது.

கோவிலில், இவர்களது நெருங்கிய சொந்தங்கள் என சிலர் வருகை புரிந்திருக்க, கேள்வியாக தன்னை பார்த்த பேத்தியிடம்,

“எல்லாம் உன் பிறந்தநாளுக்குதான் சொல்லி விட்டது கண்ணு!. நீ பூஜைய பாரு” என்று சொல்ல, சரியென்று தலையசைத்தாள். 

சற்று நேரத்தில், தங்கமணி, மாணிக்கம் மற்றும் குமாரசாமி குடும்பத்துடன் அங்கு வர, இயல்பாக புன்னைகத்து வரவேற்றாள் வைஷாலி. முன்தினம் தன்பாட்டியின் அழைப்பை ஏற்று வந்துள்ளார்கள் என்ற முறையில் அவளுக்கும் மகிழ்ச்சியே…

சுவாமிக்கு ராஜ அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு ஆராதனை முடிய, அன்னபூரணி குடும்பத்தாரும், தங்கமணி குடும்பத்தாரும் கோவில் மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து திருமணப் பேச்சினை ஆரம்பிக்க, அதிர்ந்து விழித்தாள் வைஷாலி.

கோபத்துடன் தன் பாட்டியை முறைத்தவள், அங்கிருந்து செல்ல முற்பட, அவளை இழுத்து பிடித்து நிற்க வைத்தார் அன்னபூரணி. கோவில் அர்ச்சகரை பொதுவில் வைத்து  நிச்சய தாம்பூலத்தை மாற்றிக் கொண்டு, கையோடு திருமணப் பத்திரிக்கையையும் அந்த நேரமே எழுதி முடித்தனர்.

அடுத்த பத்து நாட்களில் புரட்டாசி மாதம் ஆரம்பமாக இருப்பதால், ஆவணியில் திருமணத்தை முடிக்கும் பொருட்டு, அன்றிலிருந்து ஒன்பதாம் நாள் திருமணத்தை நடத்த முடிவெடுத்து, முகூர்த்த நேரத்தையும் குறித்தனர்.

வைஷாலிக்கு, நடக்கும் விடயங்கள் எதுவும் மனதிற்கு உவப்பாக இல்லை. தன்னையும் மீறி நிகழ்கின்ற செயலை தடுக்க இயலாமல் போக, பாட்டியின் கைப்பிடியினையும் உதறிவிட்டு கோவிலின் வெளி சுற்றுப் பிரகாரத்திற்கு சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள்.

தனக்கு விருப்பம் இல்லாத திருமணம் நடக்கப் போவதை நினைக்கவே மனமெங்கும் பாரமேறிவிட, பொங்கிய கண்ணீரை பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டாள்.

“வயசான காலத்துல இப்படி வேகமா என்னை நடக்க வைக்காதடி!” அதட்டலுடன் பின்னோடு தன்னை சமாதானப்படுத்த வந்த பாட்டியை ஏகத்திற்கும் முறைத்தவள்,

“ஏன் பாட்டி இப்படி பண்ற? என்னோட விருப்பம் உனக்கு முக்கியமா படலையா?” அழுகையில் வெடிக்க தயாரானவள், கோபத்துடன் கேட்க,

“நேத்து நீங்க பேசினத வச்சுதானே முடிவு பண்ணியிருக்கு… நல்லா யோசிச்சுபாரு! நீங்க என்ன பேசுனீங்கனு புரியும்” என்று பாட்டி முன்தின பேச்சை எடுத்துக் கொடுக்க,  அவளும் மனதில் ஓட்டிப் பார்த்து,

“ம்ப்ச்… இப்ப அதுதான் முக்கியமா போச்சா? என்னை பார்க்குறப்போ எல்லாம் வேண்டாம்னு தட்டிக் கழிக்கிறவர்கூட சேர்த்து வைக்கப் பார்க்கிற… இது சரியா வருமா?” கண்ணீரை துடைத்துக் கொண்டவளின் குரலில் வலிகள் வேரோடி இருந்தது.

உண்மை அதுதானே! இவளுடனான திருமணத்தைதானே அசோக் வேண்டாமென்று மறுத்து வருகிறான் என்றவனின் நினைவிலேயே நின்றவளின் வேதனையை சொல்லிட வார்த்தைகள் இல்லை.

“நீயும் தானேடா இப்போ வரைக்கும் அந்த தம்பிய வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க… எல்லாம் கல்யாணம் ஆனா சரியா வரும் தங்கம், அழக்கூடாது” பேத்தியை அணைத்துக் கொண்டு கண்ணீரை துடைத்தார்.

“அவரோட பழக்க வழக்கம் தெரிஞ்சுமா நீ இப்படி பேசுற?”

“உன் மனசுல அவன் இருக்கான். எனக்கு அது போதும் கண்ணு… அந்த தம்பி ஒன்னும் மொடாக் குடிகாரன் கிடையாது. இந்த பழக்கத்தை விடணும்னு கொஞ்சநாள்  முன்னாடி மருந்து கூட எடுத்துக்கிட்டான்னு தங்கமணி நேத்தே சொல்லிடுச்சு…” பாட்டி தன்னால் இயன்ற சமாதானங்களை சொன்னாலும் வைஷாலி கேட்கத் தயாராய் இல்லை.

“அதுக்காக இவ்வளவு அவசரமா கல்யாணம் வைக்கணுமா?”

“நீ பொறந்து கால் நூற்றாண்டு ஆகிடுச்சு. இன்னும் எத்தன நாளைக்கு வெட்டிச் சாமியாரா சுத்தப் போற? நேரம் காலமெல்லாம் யாருக்கும் காத்திருக்காது. உங்க சம்மதம் மட்டுமே எங்களுக்கு வேண்டி இருந்தது. கல்யாண வேலை பார்க்க எல்லாரும் தயாரா இருக்காங்க…” பாட்டி அடுக்கிக் கொண்டே போனார்.  

“என்ன சொன்னாலும் நீ செஞ்சது எனக்கு பிடிக்கல… அந்த அளவுக்கு நான் உனக்கு பாரமா போயிட்டேனா? சொல்லியிருந்தா எங்கேயாவது ஹாஸ்டல்ல போய் தங்கியிருப்பேனே..!” முறுக்கிகொண்டே அழுகையை தொடர்ந்தாள்.

“நான் கை காட்டுற மாப்பிள்ளைக்கு நீ கழுத்தை நீட்டுறேன்னு சொல்லியிருக்க… நான் பார்த்த மாப்பிள்ளை அசோக்தான். இதுக்கு மேல வேற பேச்சு பேசினா கோவில்ன்னு பார்க்காம கன்னத்துல போட்டுருவேன்…”

“அடி, திட்டு என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ… உன்னை ஏன்னு கேக்கதான் ஆள் இல்லையே! ஆனா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. பிடிக்காம ஆரம்பிக்கிற வாழ்க்கையில என்ன சந்தோசம் இருக்கும்? எப்படி நிம்மதி வரும்?” அடுக்கடுக்காய் தனது சந்தேகத்தை கொட்டிவிட,

“அதெல்லாம் இப்போ இருந்தே யோசிக்காதே கண்ணு! நல்லதே நடக்கும்டா!”

“எனக்கு பயமா இருக்கு பாட்டி! வேண்டாம்னு சொல்றவர், என்னை மொத்தமா ஒதுக்கி வைச்சுட்டா உன்கிட்டதான் வந்து நிப்பேன். எனக்கு வேற யாரையும் தெரியாது” அரற்றியவளின் வெகுளிப் பேச்சு பெரியவரை அசைத்துப் பார்த்தது.

“வேண்டாம்னு சொன்ன நீயே ஒத்துகிட்ட மாதிரி, அந்த தம்பியும் சரின்னு சொல்லும். என் தங்கத்தோட குடும்பம் நடத்த அவன்தான்டா கொடுத்து வச்சுருக்கணும். பாட்டி இருக்கேன்டா கண்ணு!” மேலும் பல சமாதானங்கள் சொல்லி அணைத்து ஆறுதல் படுத்தினாலும், பேத்தி இயல்பிற்கு வரவே இல்லை.

அசோக் உடனான திருமண ஏற்பாடு வைஷாலிக்கு ஆனந்தத்தை கொடுத்தாலும் அதை ஏற்க முடியாமல் தவித்தே போனாள். தனது கோபத்தையும் அழுகையையும் கட்டுப்படுத்த வழி தெரியாமல், மலைக்கோவிலை விட்டு படிகளில் கீழே இறங்க ஆரம்பிக்க, எதிர்புறம் அசோக் ஏறிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது இவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற அச்சத்தில் மிரண்டாலும் அமைதியுடன் அவனை எதிர் கொண்டாள். திருமணத்தை நிறுத்த மீண்டும் இருவரும் பேச்சு வார்த்தை நடத்துவார்களா? பெரியவர்களின் ஆசைகள் நிறைவேறுமா? அடுத்த பதிவில் காண்போம்…

ஏதோ ஓர் பொன் மின்னல் என் உள்ளிலிலே

ஏதோதோ கூறாதோ பூந்தென்றலே

காதோடு ஆனந்தம் கேட்கின்றதே

ஏன் என்று என்னுள்ளம் பார்க்கின்றதே…

நான் காணும் ஆனந்தம் ஆரோகணம்

வான் தூவும் பூவெல்லாம் அவரோகணம்

சங்கீத தாளங்கள் போடும் என் மனம்

சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்…

Leave a Reply

error: Content is protected !!