Kandeepanin Kanavu 18

                                                   காண்டீபனின் கனவு 18

 

தாத்தா தன் மகன் மோகனுக்குப் போன் செய்தார்.

“அப்பா! எப்படி இருக்கீங்க?” நலம் விசாரிக்க,

“மோகன், உடனே நீங்க நாலு பேரும் நம்ம ஊருக்கு கிளம்பி வாங்க. ஒரு நாலு நாள் இங்க இருந்துட்டுப் போகலாம். உங்க எல்லார் கிட்டயும் முக்கியமான விஷயம் பேசணும்.” நேராக விஷயத்திற்கு வந்தார்.

“என்ன பா? எதாவது பிரச்சனையா?” மோகன் பதட்டமடைய,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பா. எல்லாம் நல்ல விஷயம் பேசத் தான். வேதா கிட்டயும், கிருஷ்ணன் சுஜாதாகிட்டையும் விஷயத்த சொல்லி கூட்டிட்டு வா. இங்க வந்த பிறகு எல்லாம் சொல்றேன்.” வைத்துவிட்டார்.

மோகன் என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே, வீட்டில் அனைவரிடமும் ஊருக்குக் கிளம்பச் சொன்னார்.

அன்றே அனைவரும் காரில் புறப்பட்டனர்.  

        வீரா தான் கண்டெடுத்த நீலத் தாமரையையும், நீலக்கல்லையும் தன் பையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வர, வருணும் ஒரு பக்கம் இறங்கினான்.

“வருண், இந்த தாமரை பத்தியோ நீலக் கல் பத்தியோ கில் கிட்ட சொல்ல வேண்டாம்.” என்க,

“நானே உன்கிட்ட அதைச் சொல்லனுமனு இருந்தேன் வீரா. நாம அந்த மலையைச் சுத்தி எடுத்த போட்டோவ மட்டும் காட்டுவோம். நாளைக்கு விஷ்ணு மலை ஏறப் போகும் போது மறக்காம இந்த கல்லும் தாமரையும் எடுத்துட்டு வந்துடு.” ஞாபகப் படுத்தினான்.

“கண்டிப்பா.” சிரித்தான் வீரா.

“இன்னிக்கு உனக்கு என்ன கனவு வரும்னு எனக்கு ஆர்வமா இருக்கு டா!”வருணும் சிரிக்க,

இருவரும் சேர்ந்து கீழே வந்தனர்.

பேசிக் கொண்டே வந்தவர்கள் கில் பதட்டமாக இருப்பதைக் கண்டு அருகில் ஓடி வர,

“என்ன ஆச்சு கில்..?” வருண் கேட்க,

“என்ன கில்..?ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? சாம் எங்க?” வீரா அவர்களது டெண்ட்டுக்கு ஓடினான்.

சாம் அங்கு இல்லாததைக் கண்டு பதறியவன், கில்லிடம் ஓடி வர,

“கில் சொல்லுங்க… சாம் எங்க?” அவரைப் பிடித்து உலுக்கினான்.

“அது.. வீர்..” சொல்வதா வேண்டாமா என கில் தயங்க,

“சொல்லுங்க..” கலங்கியபடி வீரா நின்றான்.

நன்றாக இருட்டிவேறு விட்டது. அவன் மனதில் பயம் தொற்றிக் கொண்டது.

“வீர்..நீ விட்டுட்டுப் போயிட்டன்னு அவ கோவப் பட்டா…அப்பறம் நான் சொல்ல சொல்லக் கேட்காம ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டா…”கில் சொல்லி முடிக்கும் முன்பே,

“நோ வே…! ஐயோ..அந்த மலை அவளால ஏற முடியாது. அங்க நிறைய ஆபத்து இருக்குன்னு தான் அவள இங்கயே விட்டுட்டுப் போனேன். புரிஞ்சுக்காம ஏன் இப்படி பண்ணா…” தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்.

“ஆமா கில். அங்க பாறைகள் எல்லாம் கால் வெச்சா வழுக்கி விட்டுச்சு.. ட்ரெக்கிங்கு அவ்ளோ சேஃப் இல்ல”  வருணும் சேர்ந்து சொல்ல,

“இல்ல, இது வேலைக்கு ஆகாது. நான் போய் அவ சேஃப்பா இருக்காளான்னு பாத்தா தான் என் மனசு ஆரும்”, அவசரமாகச் சென்று கார் சாவியை எடுக்கப் போனான்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாம், வீரா பதறுவதைப் பார்த்து அவளும் கலங்கிப் போனாள்.

வருண் சொன்ன ஆபத்தை அவள் புரிந்து கொண்டாள். அதனால் தான் அவன் விட்டுச் சென்றான் எனத் தெரியவே மனம் சற்று சாந்தப் பட, வீரா வின் மேல் இருந்த அந்த சிறு கோபமும் போய்விட்டது. தனக்காகத் தான் அவன் பார்த்துப் பார்த்து செய்கிறான் என அவள் மனமே ஒப்புக் கொண்டது.

வீரா அவசரமாக வெளியே வந்து காரை ஸ்டார்ட் செய்ய, மறைந்திருந்த சம்ரக்க்ஷா வெளியே வந்தாள். காரின் முன்பு சென்று நிற்க, அவளைக் கண்டதும், பெரும் நிம்மதி வீராவிடம் தெரிந்தது.

காரை விட்டு வெளியே வந்தவன், அவளை அணைத்துக் கொண்டான்.

“சாம்!” என அவன் கட்டிக் கொண்டதும், கில் சிரித்துவிட்டார்.

“அவ உன்ன ஏமாத்தணும்னு தான் இப்படி செஞ்சா..வீர்” என்றதும்,

“விளையாடறதுக்கு ஒரு அளவு இல்ல.! இந்தக் காட்டுல நீ எங்கயாவது மாட்டியிருந்தா என்ன ஆகும்னு நான் பயந்துட்டேன். கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்ல உனக்கு. விட்டுட்டுப் போனா, ஏன் விட்டுட்டுப் போனேன்னு கொஞ்சம் யோசிக்கணும். அந்த மூளை இருந்தா நீ ஏன் இப்படி இருக்க..” வீரா இருந்த படபடப்பை அவளைத் திட்டியே தீர்த்தான்.

“போதும் போதும்…ஸ்டாப்..!” என காதை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்.

மூச்சு வாங்க வீரா அவளைத் திட்டி முடித்தான்.

“நீ ஏன் விட்டுட்டுப் போனன்னு இப்போ தான தெரியும். ஊர்ல இருந்து வரப்ப மலை எரலான்னு தான கூட்டிட்டு வந்த… அப்பறம் என்ன.. நீ மட்டும் கிளம்பிப் போயிட்ட, அதான் ரீசன் தெரியாம எனக்கும் கோவம் வந்துடுச்சு.” அவள் தன் பங்கு நியாயத்தைக் கூறினாள்.

“ரெண்டு பேரும் சமாதனம் ஆகி சீக்கிரம் வாங்க. பசிக்குது!” வருண் குரல் கொடுத்தான்.

ஓடும் நீரில் கை கால்களை கழுவியவன், சாப்பிடச் செல்ல,

“சாரி வீர்!” என்றாள்.

“..” திரும்பிப் பார்த்து பதில் சொல்லாமல் நிற்க,

“சாரி சொல்றேன்ல. கொஞ்சம் சிறியேன்!” அழகு காட்டினாள்.

அவளின் முகத்தைப் பார்த்து அதற்கு மேல் கோபம் கொள்ள அவனாலும் முடியவில்லை.

வழக்கம்போல அவளது கழுத்தில் முழங்கையை வைத்து இறுக்கி, “அவ்வளோ சீக்கிரம் நீ போய்டுவியா ஊருக்கு… அதுவும் என் உயிரை எடுக்காம! வந்து கொட்டிக்கிட்டு தூங்கு,” என இழுத்துச் செல்ல,

“தூங்கறதா.. நோ.. அப்புறம் நாளைக்கும் என்னை நீ விட்டுட்டு போயிடுவ..”அவன் கையை எடுத்துவிட்டு அங்கேயே நின்றாள்.

“இல்ல, டா. அந்த மலை எல்லாம் ட்ரெக் பண்ண வசதியா இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்கு, கேர்ஃபுல்லா இல்லனா, சறுக்கி விட்டுடும் அந்த பாறை. அதுனால தான் உன்னை நான் விட்டுட்டு போனேன்.” சமாதானமாகச் சொல்ல,

“ என்னால இங்க உக்காந்துட்டு இருக்க முடியல. ப்ளீஸ் டா. என்னையும் கூட்டிட்டு போ. நான் ஒவ்வொரு ஸ்டெப்பும் பாத்து வைக்கறேன். உன்னையே ஃபாலோ பண்ணி வரேன். ப்ளீஸ் ப்ளீஸ்…” கெஞ்சிக் கொண்டே வந்தாள்.

அவள் காதருகில் வந்தவன்,

“நேத்து கனவுல, இன்னிக்குப் போன மலையோட ஆபத்து தெரிஞ்சது, அதுனால தான் உன்னை விட்டுட்டுப் போனேன். இன்னிக்குக் கனவுல அப்படி எதுவும் வரலன்னா, உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.” என்றான்.

அவன் கனவுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதை எப்போதோ விட்டிருந்தாள். அதனால் வேறு வழி இல்லாமல், இப்போதும் அவன் பின்னே, சாப்பிடச் சென்றாள்.

இருவரையும் கிண்டல் செய்தபடி அனைவரும் உண்டு முடித்து உறங்கச் சென்றனர். சாம் தூங்காமல் வீராவையே பார்த்துக் கொண்டிருக்க, வீரா அவளைக் கண்டு கொண்டான்.

“ஹே! தூங்கு. இன்னும் ஏன் முழிச்சுட்டு இருக்க கைப்புள்ள…” அவளைப் போலவே கிண்டல் செய்ய,

“நீ என்னை கூட்டிட்டுப் போறேன்னு சொல்லு. அப்போ தான் தூங்குவேன். இல்லனா விடியற வரை உன்னைத் தான் பார்த்துட்டு முழிச்சுட்டு இருப்பேன்.” திட்டவட்டமாகக் கூறினாள்.

“அட லூசு. தூங்கு. காலைல என் கனவைப் பொறுத்து உன்னையும் கூட்டிட்டு போறதா இல்லையான்னு சொல்றேன்.” உள்ளதைக் கூறினான்.

“என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்ல. உன்கூடவே வரேன்!” அவள் கூறியது அவனுக்கு வேறு ஒரு அர்த்தத்த்தில் யோசிக்க வைக்க, மெலிதான புன்னகை பூத்தான்.

“சிரிச்சா என்ன அர்த்தம். என்னை உன்கூட கூட்டிட்டு போறியா இல்லையா. விட்டுட்டு போனா நாளைக்கு நிஜமாவே நான் தனியா ஊருக்குக் கிளம்பிப் போயிடுவேன்.” மிரட்டவே செய்தாள்.

“சரி…..!” முடித்துக் கொண்டான்.

“என்ன மொட்டையா சரின்னு சொல்ற. கூட்டிட்டு போறேன்னு சொல்லி.”

“யம்மா தாயே கடைசி வரை உன்னை என்கூடவே கூட்டிட்டுப் போறேன். போதுமா! இப்போ தூங்கு. குட் நைட்” என கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.

அவளது வார்த்தை அவனை அன்று கண்ட கனவைப் பற்றி சிந்திக்க வைத்தது என்றாள், அவளுக்கோ இப்போது அவன் கூறிய ‘கடைசி வரை’ என்ற வார்த்தை கில் சொன்ன ‘நல்ல ஜோடி’ என்றதை நினைக்க வைத்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே உறங்கிப் போக, கனவிற்குள் பிரவேசித்தான் வீரா.

மலை மேலே நின்று கொண்டிருந்தவன் திடீரென கீழே விழுந்து கொண்டிருந்தான். நீண்ட நேரம் காற்றில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது போன்ற பிரம்மை.

நீலக் கல்லும் நீலத் தாமரையும் அந்தக் காற்றில் பறந்தது. சிறிது நேரத்தில் தரையில் வேகமாக விழுந்தவன், சம்ரக்க்ஷாவின் கையில் தான் தவறவிட்ட இரண்டும் இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.

இருவரும் நின்ற இடம் ஒரு பிரம்மாண்ட வெட்டவெளி.

“இங்கு இருப்பவற்றை நீ கனவில் தெரிந்து கொள்ள முடியாது. இங்கே உனக்கு ஆபத்து உண்டாக்க அந்த ராட்சஷனால் முடியாது.” கொடூரமான குரல் ஒன்று அவனது கனவைக் கலைத்தது.

ஆனாலும் அவன் கனவில் தான் இருந்தான்.

யாரோ அவனைப் பிடித்து மீண்டும் கனவிற்குள் தள்ளுவது போன்ற பிரம்மை.

‘இது என்ன புது அவஸ்தை. கனவில் இருந்தும், கனவை காணவிடாமல் தடுப்பது எது?!’  மனம் குழம்பியது.

தூக்கத்தில், தூக்ககம் இல்லாமல் தவிப்பது ஒரு வித தலைவலி. மன அமைதியைக் கெடுக்கும் ஒரு அவஸ்தை. வீராவால் கண்ணை விழித்துப் பார்த்து எழுந்து கொள்ளவும் முடியவில்லை. முழுதாக தூக்கமும் இல்லை.

சற்று நேரத்தில் அவனை யாரோ பிடித்துத் தள்ளியது போன்ற உணர்வு. அப்படியே பிரண்டு போய் சம்ரக்ஷா வின் பக்கத்தில் படுத்து விட்டான். அவளது அருகாமையோ, அல்லது அந்த குளிருக்கு அவளின் உடல் கொடுத்த கதகதப்போ அவனை மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்த,

இப்போது கனவில் விட்ட இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.

அந்த பிரம்மாண்ட வெட்ட வெளியில், இருந்தது ஒரு நீளமான குழி. அதை யாரோ அளந்து ஏற்படுத்தியது போல இருந்தது. அங்கே அவன் நிற்க, அவன் மீது சரமாரியாக ஏதோ ஒன்று வந்து தாக்கிக் கொண்டே இருந்தது.

சட்டென சாம் கீழே விழ, அவளின் இதழ்களை சுவைத்துக் கொண்டிருக்கிறான்.

நீண்ட நேர கதகதப்பான உறக்கம். தன் கையில் இருந்த ட்ராக் வாட்ச் எழுப்ப, விழித்துக் கொண்டான் வீரா. அருகில் சாம் இருப்பதைக் கண்டு ஒரு எட்டில் நகர்ந்து தன் இடத்திற்குப் போனான்.

‘இங்க எப்படி வந்தோம். ஒரு வேளை கனவுல வந்ததுன்னு நினச்சு , அவள இப்போவே கிஸ் பண்ணிட்டேனா! ச்ச ச்ச…நான் ஜென்டில்மேன்’ தன்னையே பெருமையாக நினைத்துக் கொண்டு கிளம்ப,

கனவுல நடந்த கிஸ் மேட்டர் நிஜமா நடக்காம இருக்கணும்னா சாம்-அ அங்க கூட்டிட்டுப் போகக் கூடாது. யோசித்துக் கொண்டே பல்விளக்கி சற்று ரெடி ஆகி வர, அவனுக்கு முன் அங்கு சாம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

வீரா டெண்ட்டுக்குள் நுழைய,

“விட்டுட்டு போய்டலான்னு நெனச்சியா..பிராடு” அதிகாலையில் அர்ச்சனை செய்ய,

‘ஏன் டி… என் கனவைப் பத்தித் தெரியாம இப்படி படுத்தற!!’ நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

“கண்டிப்பா நீயும் அங்க வரணுமா?” அலுப்பாகக் கேட்க,

“இல்லனா நான் ஊருக்குப் போறேன்.” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“டார்ச்சர் டி நீ. எதாவது ஆச்சுன்னா என்னை தப்பு சொல்லக் கூடாது.”

“என்ன ஆகும்? நான் பாத்து நடந்துக்கறேன். எனக்கும் எல்லாம் தெரியும்.” என வாயடிக்க,

‘என்ன கிஸ் பண்றதுக்கா!’ வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

“கிளம்பு..” என அழைத்துச் சென்றான்.

மறக்காமல் கையில் நீலக் கல்லையும், அந்த நீலத் தாமரையும் எடுத்துக் கொண்டான்.

அவனுக்கான புது வித போராட்டங்கள் அங்கே காத்திருந்தன.

மலை மேல் ஏறுவது இம்முறை அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. மலையின் உச்சியை வெகு சீக்கிரத்திலேயே அடைந்தனர்.