இளைப்பாற இதயம் தா!-5

IIT copy-1a993a66

இளைப்பாற இதயம் தா!-5

இளைப்பாற இதயம் தா!-5

திருமணத்திற்கு முன்பாகவே விடுப்பு எடுத்துக்கொண்டு தேவகோட்டை வந்திருந்தாள் ஐடா.  ஐடாவின் பெற்றோர் மகளுக்கு வேண்டியவற்றை பார்த்துப் பார்த்து வாங்கினர்.

ஐடா, “உங்க விருப்பப்படி வாங்குங்க… இதப்பத்தியெல்லாம் எனக்கு ஐடியா இல்லைம்மா” என்று சொன்னாலும், “உனக்கு இதுல எதாவது சஜஜன் இருந்து சொன்னா, இப்பவே மாத்திக்கலாம்னுதான் கேக்கறேன் ஐடா” என்றார் ஸ்டெல்லா.

இப்படி சேர்ந்த பொருள்களையெல்லாம் பார்த்த ஐடாவிற்கு, “இது அத்தனையும் எனக்கா?  இதையெல்லாம் கொண்டு போயி வைக்கவே தனியா ஒரு வீடு வேணும் போலயே!”

“மாப்பிள்ளையோட அண்ணனுக்கு இப்டித்தான் தந்தாங்களாம்.  உங்க மாமி பேச்சு வாக்குல சொன்னாங்க…! அப்பவே எனக்குப் புரிஞ்சிருச்சு…! நேரடியா இது வேணும்னு கேக்காம, இப்படி மறைமுகமா கேக்கறாங்கனு!  நீ என்னடான்னா இதுவே அதிகங்கற!” ஸ்டெல்லா.

“எதுனாலும் நம்ம  பொண்ணுக்காகத்தான செய்யுறோம் ஸ்டெல்லா.  அவங்க சொன்னாலும், நம்ம பொண்ணுக்கு பிடிக்காத எதையும் கொடுக்க நினைக்க மாட்டோம்தான… அதனால இதையெல்லாம் அவகிட்ட போயி ஏன் சொல்லிட்டிருக்க?” என்று ஐடாவின் தந்தை ஆல்வின் மனைவியைக் கடிந்துகொண்டார்.

சென்னையில் இருக்கும்போதே ஐடாவும், ரீகனும் சாதாரணமாக போனில் பேசிக்கொள்வது என்று ஆரம்பித்தது, இங்கு வந்தபிறகும் தொடர்ந்தது.

ஐடாவிற்கு புதிய அனுபவம்.  ஒரு ஆணுடன் தனியாக, தனது பிடித்தங்களை, விருப்புகளை, நிராகரிக்கத் தோன்றும் விசயங்கள், தேவைகள் மற்றும் தேடல்கள் பற்றிய ஆத்மார்த்தமான விசயங்களை மேலோட்டமாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய தருணங்கள்.

சிலவற்றைப் பேசத் தயங்கி, முகம் காணாத போதிலும் வெட்கிய தருணங்கள்! நேரில் அவனது முன் இருந்தால் எந்த மாதிரியாக தான் எண்ணியிருக்கக்கூடுமோ அதையே அலைபேசிப் பேச்சுக்கு இடையிலும் கற்பனையில் உணர்ந்துகொண்ட நிமிடங்கள்! ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவங்கள் ஐடாவிற்கு.

          ரீகனும் அதிக உரிமையெடுத்து உள்ளார்ந்து பேசினாலும், வரம்போடு பேசினான்.  ஐடாவைப் பார்த்தது முதலே அவளிடம் அப்படித்தான் பேசத் தோன்றியது.

          ரீகனுக்கு அவளைப் பார்த்துவிட்டு வந்த அன்று தன்மீதே சந்தேகம்.  முதல் நாள் அலுவலகத்தில் ஏதேனும் சந்தேக நிமித்தம் சக பெண் பணியாளர்கள் யாருடைய கேபினுக்கு சென்று அமர்ந்தாலும் இயல்பாகத்தான் சென்றமர்வான்.

          சில பெண்களை லேசாக உரசினாலும், சட்டென ரியாக்ட் செய்துவிடுவார்கள்.  சிலர் கண்டுகொள்ளாது, ‘இதுலாம் ஒரு பெரிய விசயமா?’ என்பதுபோல அதைக் கண்டும் காணாததுபோல அமர்ந்திருப்பர்.

          ரீகன் அப்பொழுதே முடிவெடுத்துவிடுவான். முன்னது போல நடந்துகொள்ளும் பெண்களிடம், ‘இதுகிட்ட சட்டுன்னு நம்ம பாச்சா பலிக்காது.  சோ… இத விட்டுத்தான் புடிக்கணும்.  கண்ணகி வம்சத்துட்ட அதே மாதிரியே அப்ரோச் பண்ணணும்.  அதுக்கு நமக்குப் பொறுமையில்ல…  அதனால… அடுத்து நர்மதாவோ, பிரியாவோ கிடைக்குதானு போயிப் பாக்கலாம்’ என அவர்களிடமிருந்து தான் தன்னை அறியாமல் அப்படி நடந்துகொண்டாற் போன்ற மாயையை அவர்களிடம் உண்டாக்கிவிட்டு அதன்பின் வரக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகுந்த கவனத்தோடு நடந்துகொள்வான்.

          இதுவே இரண்டாவதாகச் சொன்னதுபோன்ற பெண்களிடம், ‘பட்சி எந்த ரியாக்சனுமில்லாம தேமேன்னு இருக்கே…! பிஸிக்கலி மெண்டலி பிரசண்டானு முதல்ல கன்பார்ம் பண்ணுவோம்!’ என்பதுபோல உதவ வந்த விசயத்தைப் பற்றிக் கேட்பதுபோல கேள்விகளை அவர்களிடம் முன் வைப்பான்.

          பதில் சொல்லும்போதும் தனது நிலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி அப்படியே அவர்கள் அமர்ந்தபடி இருந்தால், ‘இது தெரிஞ்சேதான் உக்காந்திருக்கு.  அடுத்து கேபிடோரியா போகும்போது கம்பெனி குடுக்குதானு பிட்டப் போடுவோம்’ என்று அடுத்த கட்டத்திற்கு செல்வான்.

          ஒரே நாளிலேயே பெண் எத்தகையவள் என்கிற முடிவுக்கு வந்து விடுவான்.  சிலது சட்டெனப் படியும்.  சிலது முதலில் கடினமாக இருந்தாலும், பிறகு பிசின்போல விடாமல் ஒட்டிக் கொள்ளும்.  சிலது இழுபறியாக இருக்கும்.

          இழுபறி என்றால் இயன்றவரையில் அவர்களிடம் சகவாசமே வேண்டாமென்று ஒதுங்கிச் சென்றுவிடுவான்.

          ஐடாவைப் பார்த்தது முதலே இப்படியெல்லாம் அவளிடம் முயற்சி செய்து அவள் எப்படிப்பட்டவள் என்று கணிக்க ரீகனது மூளை வேலை செய்யச் சொல்லவில்லை.

          முதலில் யோசனைதான்.  ‘எப்போவுமே இது தேறுமா?  இது தேறாதா?  இது படியுமா? இது படியாதானு? யோசிக்கற ரீகனுக்குள்ள எந்த ரியாக்சனும் தோணாமப் போச்சே… என்னாச்சு எனக்கு?’ என்று முதலில் சுயஅலசல் இருந்தது.

          அது தற்காலிகமாக தன்னோடு பயணிக்கக்கூடியவர்கள் என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்.  ஆனால் ஐடா தனது வாழ்க்கை முழுமையும் பயணம் செய்யப்போகிறாள் என்பதால் நிதானம் வந்திருக்கிறதோ என்று தோன்றியது.

          அப்படி இருந்தவனுக்குள் ஐடா வீட்டிலிருந்து சாதகமாக எந்த பதிலும் வராமல் போனபோது, ‘அவங்களையெல்லாம் பாக்கும்போது தோணுன மாதிரி, இந்த ட்ரெஸ்ல இந்த போஸ்ல அப்டி இப்படினு இவளை மட்டும் கற்பனையிலகூட வேற மாதிரி யோசிக்கவே தோண மாட்டுதே’ என்று கவலையாக இருந்தது ரீகனுக்கு.

          ஆனால் பார்த்த அன்றே தனக்குள் வித்தியாசமான உணர்வுகளைத் தோற்றுவித்தவளாயிற்றே.  அதில் அவளது பொறுப்பு என்பது துளியும் இல்லை என்பதுதான் அவனுக்கு அத்தனை ஆச்சர்யம்.  ஆம், மற்ற பெண்கள் மறைமுகமான அவனுக்கு அழைப்பு விடுவித்திருப்பர்.  அதனால் அப்படியெல்லாம் யோசித்திருக்கக்கூடும்.  ஆனால் எதையும் தனது செயலாலோ பார்வையாலோ தன்னிடம் பகிர்ந்துகொள்ளாதவளிடம் அவனையறியாமல் உண்டாகி மறைந்த உணர்வுகளைப் பற்றிய சிந்தனை அவனை அத்தனை எளிதில் நிம்மதியாக இருக்கவிடவில்லை.

          மேலும் ரூபி பாட்டியின் கடுமையான திட்டல் மற்றும் விமர்சனத்திற்குப்பின், ‘இவ என்ன மத்தவங்களைவிட பெரிய வித்தியாசமானவன்னு இவங்க வீட்டுல சம்மதம் சொல்லாம போனதுக்காக வருத்தப்படறேன்’ என்றெல்லாம் தோன்றத் துவங்கியிருந்தது ரீகனுக்குள்.

          ஐடா வீட்டில் சாதகமாக எந்த பதிலையும் கூறாது நாளைக் கடத்தியதும், ‘அவங்க வீட்டுல சாதகமா சொல்லாததால வேற எதுலயும் என்னால கான்சன்ட்ரேட்கூட பண்ண முடியாம இருக்கே’ என்று நொந்து போன நிமிடங்களையும் கடந்து வந்திருந்தான்.

          இப்படி போன ரீகனது எதிர்பார்ப்பு மிக்க நிமிடங்களை, நிசமாக்கிய தருணங்கள் அத்தனை நிம்மதியைத் தந்ததென்னவோ உண்மை.

          ஐடாவை இரண்டாவது முறை வெளியில் சந்தித்த பிறகு, ஏதோ ஒரு ஆத்மார்த்த உணர்வோடு வேறு எதிலும் சிந்தனை லயிக்கவில்லை. அதன்பின் ரீகனது சிந்தனை முழுமையும் ஐடாவின் நினைவுகளால் ஆக்ரமிக்கத் துவங்கியிருந்தது.

          வீட்டிலோ, அலுவலகத்திலோ, வெளியிலோ அவனது ஓய்வு நேரங்களில் அவனது சூழலை ஒட்டிய கற்பனை நிமிடங்களில் அவனோடு உடன் ஐடா இருப்பதை உணர்ந்த தருணங்கள் அவை.

          அவனது அறையில் இருக்கும் வேளையில், ‘அவ இந்த ரூம்ல இருக்கும்போது அந்த நிமிடங்கள் எந்த மாதிரியான சந்தோசத்தை தனக்குக் கொடுக்கும்’ என்பதுபோல எதிர்பார்ப்பாக மாறியிருந்தது.

          இதுவரை அவன் எத்தனையோ பெண்களோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறான்.  ஆனால் யாரையும் அவனது வீட்டிலுள்ள படுக்கையறையில் வைத்து கற்பனை செய்த நிமிடங்கள் அவன் நினையாதது.  அவன் யோசிக்கவே முனைந்திராத விசயங்கள் அவை.

          ஆனால் வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் அவளை இருத்தி, நிறுத்தி இப்படி அவனுக்கு சந்தோசம் தரக்கூடிய வகையில் ஒவ்வொரு இடங்களிலும் உலாவச் செய்து ஐடாவுடனான கற்பனையில் தோன்றிய விசயத்தை எண்ணி மகிழ்ந்திருந்தான்.

          இதற்கு முழுமையான காரணம் பாட்டி ரூபியின் பொறுமையான வார்த்தைகள்தான். ஒவ்வொன்றையும் அவர் தனது கடந்துபோன வாழ்க்கையை பேரனோடு பகிர்ந்துகொண்டமை அவனையும் அவ்வாறு எண்ணச் செய்திருந்தது.

          ‘நான் பிறந்தது சென்னைதான்.  ஆனா உங்க தாத்தா திருச்சி.  எங்க பேரண்ட்ஸ்ஸூக்கு நான் ஒரே பொண்ணு.  என்னை உங்க தாத்தா வீட்டுக்கு அனுப்பிட்டு தனியா இருக்க முடியாதுன்னு எங்க பேரண்ட்ஸால சொல்லவும் முடியலை.  ஆனா என்னை அவர்கூட திருச்சிக்கு அனுப்பாம இருக்கவும் முடியலை.

          அப்பத்தான் உங்க தாத்தாவுக்கு ஒரு ஐடியா.  வேலை பாத்துட்டே ஏன் சென்னையில தொழில் தொடங்கக்கூடாதுன்னு.  எனக்காக அவர் யோசிச்சு பண்ண முதல் விசயம் அது.

          தொழிலை காரணம் காட்டி வாரத்துல மூனு நாள் இங்க.  மூனு நாள் மாமியார் வீட்ல.  டிராவல் ஒரு நாள்.  இப்படியே சில வருசங்கள் போனது. உங்கப்பா, உங்க அத்தைங்க எல்லாம் பிறந்த பின்ன குழந்தைங்களை காரணம் காட்டி, அப்புறம் அவங்க படிப்பைக் காரணம் காட்டினு பெரும்பாலும் இங்கதான் இருந்தேன்.

          ஆரம்பத்தில மாதம் ஒரு தடவைன்னு திருச்சி போறது வரதுன்னு ஆனது. பிற்பாடு மூனு மாசத்துக்கு ஒரு தடவைனு மாறினது.

          இப்படி அவரோட அன்பை தன்னோட செயல்கள் மூலமா ஒவ்வொன்னா செய்து அன்பாலயே என்னைக் கட்டிப் போட்டார். எனக்கு சிகரெட் ஸ்மெல் பிடிக்கலைங்கறதை என்னோட முகத்தைப் பாத்தே தெரிஞ்சிட்டு கொஞ்ச கொஞ்சமா விட்டுட்டார்ன்னா பாத்துக்கோவேன்.

          இங்க என்னைக் கூட்டிட்டுப் போனார்.  இப்படியெல்லாம் எனக்காக செய்தார்’ என்று ரீகனின் தாத்தா பற்றிய பெருமையெல்லாம் பாட்டியின் வாய் வார்த்தையாக சமீபமாக கேட்கத் துவங்கியது முதலே வேறு மார்க்கமாக மாறத் துவங்கியிருந்தான் ரீகன்.

          அவனுக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  ‘அந்தக் காலத்துலயே இந்தத் தாத்தா ரூபி பாட்டியோட பயங்கரமா ரொமன்ஸ் பண்ணியிருக்காருன்னா… அவரைக்காட்டிலும் அவரது பேரன் குறைஞ்சி போயிட்டதா பேரு வாங்கினா நமக்குத்தான அசிங்கம்.  அதனால… நாம அவரைவிட பேரு வாங்கணும்’ என்பதுதான் அது.

          ஐடாவைப் பார்த்துவிட்டு வந்தபிறகு இதுபோன்ற பாட்டியின் பழைய நினைவுகள் ஒவ்வொன்றையும் கேட்டறியும் வாய்ப்புக் கிட்டக்கிட்ட தன் மனைவியோடுடனான எதிர்கால வாழ்வு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று திட்டமிடத் துவங்கியிருந்தான் ரீகன்.

          அதன் விளைவால் ஐடாவை மூர்க்கமாக நெருங்காமல், இயன்றவரை நிதானமாக நெருங்க முற்பட்டான்.  அந்த நிதானத்தை ஐடாவும் விரும்பினாள்.  அவனது அருகாமை அவளுக்குள்ளும் இதத்தை விதைக்கத் துவங்கியிருந்தது.

          பேச்சுகள் சராசரி காதலர்களைப் போலல்லாமல், நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்த தம்பதிகளைப்போல முதிர்ச்சி தாங்கியிருந்தது.  அதில் அவசரமில்லை.  அனுசரணை இருந்தது.

          இதுபோன்ற உரையாடல்களால் ஐடாவிற்கு ரீகனைப் பற்றிய அஸ்வினது சந்தேக விதை முளைக்காமல் முளையிலேயே கருகிப் போயிருந்தது.

வீட்டிற்கு வந்த மகளிடம் மாப்பிள்ளை ரீகனைப் பற்றியும்,  அவரது பாட்டி பற்றியும் ஸ்டெல்லா வினவினார்.  அவர்கள் நேரடியாக ரீகனை ஒருமுறை மட்டும் பார்த்திருந்தார்கள்.   அதனால் மகளின் இரண்டாவது சந்திப்பிற்குப் பிறகு ஸ்டெல்லா மகளிடம் கேட்க, “நீங்க அவங்க எனக்கு மேட்ச்சா இருப்பாங்கனு ஓகே பண்ணதால, எல்லாம் சரியாத்தான் இருக்கும்னு செட்டாகிட்டேன்.  அதனால அவங்களோட ஆக்ட்டிவிட்டிஸ் பாத்து இதுவரை வித்தியாசமா ஒன்னும் நினைக்கத் தோணலைம்மா.” என்றவள், நிதானித்து தாயின் தோளில் வந்து சாய்ந்தபடி, “தேங்க்ஸ்மா” என்றிருந்தாள்.

ஆனாலும் அவ்வப்போது அஸ்வின் கூறிய வார்த்தைகளும் மனதின் ஓரத்தில் ஒலிக்கவே செய்தது.  ‘உனக்கு மேரேஜ் அன்னிக்குவரை யோசிக்கவும், முடிவெடுக்கவும் டைம் இருக்கு ஐடா.  அதனால நான் சொன்னதைக் கேக்கப் பிடிக்கலைன்னாலும் நல்லா விசாரிச்சு ஒரு முடிவுக்கு வா.  இது உன்னோட ஃபியூச்சர்!’ என்று கூறி அனுப்பியிருந்தது நினைவில் வந்து போனாலும், அந்த வரிகளை எண்ணி பயப்படவில்லை ஐடா.

ஊருக்கு வந்தது முதலே திருச்சபை வகுப்புகளை விட, அதிமுக்கிய விசயங்களைப் பற்றி மகள் ஐடாவிடம் ஸ்டெல்லா பேசியபடியே இருந்தார்.

மகளுக்குள் தான் கூற வந்த விசயங்களை மனதில் பதியும்வரையில் திருமணம் என்னும் உறவு பற்றி, அதில் கணவன் மனைவி என்கிற இருவர் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடும், சில தருணங்களில் நண்பர்களாகவும், சில தருணங்களில் பெற்றோரைப்போல கரிசனையோடும் இருக்க வேண்டுமென்பதை மகளுக்கு உரைத்தார்.

உண்மையான உறவாக அது இருக்க இருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், சந்தேகம் என்பது இருவருக்கிடையே எழக்கூடாது, அப்படித் தோன்றினால் உடனே அதனைப் பேசித் தீர விசாரித்து நேருக்கு நேராக அதைப்பற்றி அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

தாம்பத்தியம் சார்ந்த விசயங்களில் அருவெறுப்போ, கூச்சமோ, அசூசையோ இன்றி ஒருவரின் தேவையை இன்முகமாக நிறைவேற்ற முனையவேண்டும் என்பதையும் கூறியிருந்தார்.

மகளை மிகவும் சரியாக வளர்க்க எண்ணி கட்டுக்கோப்போடு வளர்த்ததால், சில விசயங்களை ஏற்றுக்கொள்ள மகளால் இயலாமல் போய்விடக்கூடாதே என்கிற பரிதவிப்பு அவரை அவ்வாறு மகளிடம் பேசச் செய்திருந்தது.

தான் கூறினால் நிச்சயம் அதனை மகள் ஏற்றுக்கொள்ள முனைவாள் என்கிற நம்பிக்கையும் அவருக்கு மலைபோல இருந்தது.

ஆனால், ரீகனைப் பற்றி தொழில் மற்றும் உறவினர் வட்டத்தில் மட்டுமே விசாரித்து தன் பெண்ணை கொடுக்கிறோம்.  அவனது நண்பர்கள் வட்டத்திலோ, அவன் பணிபுரிந்த அலுவலக வட்டத்திலோ இருக்கக்கூடியவர்களுக்கு அவனைப்பற்றி மேலும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை ஏனோ அவரால் யூகிக்க முடியாமல் போனது வருத்தத்திற்கு உரியதே.

இதை அறியாமல் அவர்கள் தீர விசாரிக்காமல் செய்த பிழையால் தனது கட்டுக்கோப்பான வளர்ப்பால் களங்கமின்றி கல்மிசம் தெரியாமல் வளர்ந்த மகளுக்கு, ரீகனைப் பற்றிய உண்மை விசயங்கள் தெரிய வரும்போது அது அவளை எங்ஙனம் காயம் செய்து முடக்கிடக்கூடும் என்பதையும் உணராமலேயே ஏற்பாடு செய்திட்ட திருமண நாளும் நெருங்கியிருந்தது.

திருமணத்திற்கு முந்தைய தினமே ரீகனது குடும்பம், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் தேவகோட்டைக்கு வந்திருந்தனர்.  அவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்திருந்தனர் ஐடாவின் பெற்றோர்.

அத்தனையிலும் பெற்றோர்கள் பணத்தை வாரியிறைத்து மணமகன் வீட்டார் குறைசொல்லிவிடாமல் இருக்க மிகுந்த சிரத்தையெடுத்திருந்தது ஐடாவிற்குத் தெரிந்தது.

மறுநாள் காலையில் தேவாலயத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட போது இருவரது முகத்திலும் திருமணக்களை முற்றிலுமாக வந்திருந்தது. 

ராபர்ட் ரீகனின் ஆளுமையான புன்னகையும், கிரேஸ் ஐடாவின் வெட்க மென் புன்னகையும் அவர்களின் திருமணத்திற்கான ஆமோதிப்பை வார்த்தைகளால் விவரிக்காமலேயே காண்பவர்களுக்கு தெளிவாக உரைத்தது.

வெண்ணிற திருமண கவுனில் தலையில் ரீத்துடன் வந்த கிரேஸ் ஐடாவைப் பார்த்தபோது ஆண்டவர் தனக்காக பிரத்தியேகமாக வடிவமைத்து அனுப்பிய தேவதை திருச்சபையில் வந்திருப்பதாகவே ரீகனுக்குத் தோன்றியது.

ஐடாவிற்குமே அதே எண்ணம்தான்.  நேவி ப்ளூ வெட்டிங் சூட்டில் வந்த ராபர்ட் ரீகனைக் கண்டபோது ஒரு வித கிறக்கம் அவளுக்குள் தோன்றியது உண்மைதான்.

திருச்சபையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு திருமணம் சார்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் தொடங்கியது. திருமணத்திற்கான முதற்கட்ட தேவாலய நிகழ்வுகளுக்குபின் இருவரிடமும் சம்மதம் கேட்கப்பட்டது.  அதுவரை ஐடாவின் மறுப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அஸ்வின் இருவரின் ஆமோதிப்பைக் கேட்டதும் குறிப்பாக ஐடாவின் ஆமோதிப்பைக் கேட்டதும் மிகுந்த மனவருத்தத்தோடு வெளியேறியிருந்தான்.

அஸ்வின் தனது கடைசி முயற்சியாக முழு நம்பிக்கையோடு ஐடாவின் திருமண நிகழ்விற்கு வந்திருந்தான். தனது சந்தேகத்தினை தீர விசாரித்திருந்தால் நிச்சயம் மண நிகழ்வு நடைபெறாது என்பதால் வருகை தந்திருந்தான்.

அவனது எதிர்பார்ப்பு பொய்த்திட, மனமெங்கும் ரணம் சூழ அப்போதே அங்கிருந்து தாமதிக்காது கிளம்பியிருந்தான்.

அதற்கு முற்றிலும் மாறான மனநிலையில் மணமகளின் கழுத்தில் தாலி செயினை அணிவித்தான் ரீகன்.  அதன்பின் மோதிரங்கள் மாற்றிக்கொள்ளப்பட்டது.

கோலாகாலமாக நடந்து முடிந்திருந்த திருமண நிகழ்விற்குப்பின் மணமக்களை பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பால் பழம் கொடுத்தனர்.

தேவகோட்டையில் இருந்த மஹாலில் அதன்பின் வரவேற்பு.  முதலில் சற்று நேரம் திருமண கவுனில் இருந்த மணப்பெண்ணிற்கு சந்தன நிறத்தில் பட்டாடை உடுத்தி, மணமகன் க்ரே நிற சூட்டிலும் வரவேற்பில் கலந்துகொண்டனர். 

மணமக்களை உற்றார் உறவினர் நண்பர்கள் மட்டுமல்லாது ஊர் மக்களும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர்.

‘பொருத்தம்னா இதுதான் நல்ல பொருத்தம்.   ஒருத்தவங்களுக்காகவே இன்னொருத்தவங்க பிறந்தது மாதிரி அத்தனை அருமையான ஜோடிப் பொருத்தம்.’ இப்படித்தான் வந்தவர்கள் அனைவரும் கூறினர்.

தனது தாய் தந்தை சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தவர்களையும், உறவினர்களையும் கணவனுக்கு மரியாதை நிமித்தம் அறிமுகம் செய்தாள் ஐடா. வந்தவர்களோடு புகைப்படங்களையும், வீடியோவும் எடுத்துச் சோர்ந்தார்கள் மணமக்கள்.

ஸ்டெல்லாவிற்கும், ஆல்வினுக்கும் மகளின் திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்ததிலும், மக்கள் கூட்டம் வந்திருந்து வாழ்த்திச் சென்றதிலும் அளவற்ற சந்தோசம். 

மூன்று மணிவரை அங்கிருந்தவர்கள் அதன்பின் திருச்சியில் நடைபெற இருக்கும் வரவேற்பிற்கு கிளம்பினர். ராபர்ட் ரீகன் – கிரேஸ் ஐடா திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் ஒரு வேனிலும், அவனது குடும்பத்தினர் ஒரு காரிலும், மணமக்கள் தனிக் காரிலும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

பயணமெங்கிலும் மனைவியின் அருகாமையில் அவளின் தலையை தனது தோளில் சாய்த்து அவளின் சோர்வை அகற்றிட முனைந்தான். விரல்களுக்கு சொடுக்கெடுத்தபடியே சின்னச் சின்ன வதனம் செம்மையேறக்கூடிய உரையாடல்களோடு திருச்சியை வந்தடைந்தனர் மணமக்கள்.

இரண்டு மணி நேர பயணம் சடுதியில் முடிந்த உணர்வில் இருவருமே.  மற்றவர்கள் அலுத்துச் சளைத்துக் களைத்திருக்க இருவரும் மற்றவர்களின் அருகாமையில் பொலிவோடு வந்திறங்கியது அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்திருந்தது.

ரீகனின் தமக்கை, “ரீகன் நாங்கல்லாம் ட்ராவல் டயர்ட்ல இருக்கோம்.  நீங்க ரெண்டு பேரும் எப்டி இத்தனை ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க?” என்று தனது சந்தேகத்தைக் கேட்கவும் செய்திருந்தாள்.

ஐடா கணவனை வெட்கத்தோடு நோக்க, ரீகன் தோளைக் குலுக்கி, தெரியவில்லையே என்பதுபோல உடல்மொழியில் கூறினான்.

ரூபி பாட்டி, “இதெல்லாம் உனக்கு ஒரு டவுட்டுன்னு வீட்டுக்கு வந்த பொண்ண வெளிய வயிட் பண்ண வைக்காதே ஷர்மி.  சீக்கிரமா உள்ளே அழைச்சிட்டுப் போ” என்றார்.

மாலையில் வீட்டிற்கு வந்தவர்கள் சற்று இளைப்பாறிவிட்டு, உடனடியாக மண்டபத்திற்கு விரைந்தனர்.  மிளகாய் நிற சிவப்பு நிற லெஹங்காவில் ஐடாவை அலங்கரித்திருந்தனர்.  மாப்பிள்ளைக்கு ராயல் ப்ளூ நிற சூட். எந்த உடையிலும் இருவரும் அத்தனை அருமையான ஜோடியாக காட்சியளித்தனர்.

வந்த உறவினர்களை மனைவிக்கு அறிமுகம் செய்தான் ரீகன்.  தொழில்முறை சார்ந்தவர்களையும் அறிமுகம் செய்தான்.

திருச்சியில் ரீகனின் தந்தை மற்றும் தாய் வழி உறவுகள், நண்பர்கள் மற்றும் சுற்றம் அனைத்தும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  ஐடாவின் தூரத்துச் சொந்தமான அம்மா வழி மாமன் மகன் சார்லஸ் தனது மனைவியுடன் ஸ்டெல்லா தம்பதியரால் ஐடாவுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தான்.

சார்லஸின் மனைவி பிரவீணா ஐடாவுடன் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டாள். இரவு பத்து மணிவரை மண்டபத்தில் இருந்தவர்கள் இரவு உணவை முடித்துக்கொண்டபின் ரீகனது பூர்வீக வீட்டிற்கு திரும்பினார்கள்.

மணமக்களை அவர்களது தனியறைக்கு அனுப்பி வைக்கும்முன் வாசல் மறிக்கும் முறை என்று மாமன் மகனான சார்லஸ், தனது முறைப்பெண்ணான கிரேஸ் ஐடாவை ரீகனது அறைக்குள் அனுப்பி வைக்க மாட்டேன் என்று தடுத்தி நிறுத்தியிருந்தான்.

சார்லஸ் ஐடாவைப் பிடித்து வைத்தபடி, ‘தம்பி.  பொண்ணு எனக்கு முறை.  அதனால ஐடாவை உங்களோட அனுப்பி வைக்க முடியாது’ என்று பொய் தர்க்கம் செய்ய,

ரீகன் சிரித்தபடியே பாட்டியைத் தேடினான்.

பெரியவர்கள் மட்டுமே அங்கிருந்தனர்.  சிறுபிள்ளைகளுக்கு அங்கு அனுமதி இல்லை.  ஆகையால் சிலர் தங்களது ஜோடிகளோடு இன்முகமாக அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ரூபி பாட்டி பேரனிடம், “இந்தா இந்த மோதிரத்தை சார்லஸ் கையில போட்டு விட்டுட்டு, நீ ஐடாவைக் கூட்டிட்டு ரூமுக்குப் போ” என்று மோதிரத்தை நீட்ட,

பாட்டியிடம் வாங்கிய மோதிரத்தை கையில் வாங்கியவன் சார்லஸை நெருங்கி,  அவனது கையைப் பிடித்து மோதிர விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு, ஐடாவைத் தனது கரங்களால் பிடித்துக் கொண்டு சார்லஸிடம் விடைபெற ஒரே மகிழ்ச்சி கூக்குரல் அங்கு.

நாணத்தோடு நின்றிருந்தவளை தனது கரம் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றவன் அவன் அறையை நெருங்கும்போது அவளைத் தன் தோளோடு அணைத்துப் பிடித்தபடி அறைக்குள் நுழைந்தான். ரீகனோடுடனான ஐடாவின் வாழ்வு இனிமை தந்ததா?

***

Leave a Reply

error: Content is protected !!