இளைப்பாற இதயம் தா!-7C
ஐடா எதையோ யோசிக்கிறாள் என்பது ரீகனுக்குப் புரிந்தது. ஆனால் அதை அவளாகவே முன்வந்து கேட்கட்டும் என்று விட்டுவிட்டவன், அடுத்து அவள் யோசிக்கவே இடம் தரவில்லை.
காஃபியை அருந்தி முடித்ததும் யோசனையோடு நின்றிருந்த ஐடாவைப் பார்த்தபடியே அவளின் பின்னே இருந்த டேபிளின் மீது கப்பை வைத்துவிட்டு மனைவியை பின்னிருந்து மெதுவாக அணைத்துக் கொண்டான்.
ஈரக் கூந்தலில் வந்த வாசனையை வாசம்பிடித்தபடியே, “ஹனி…” என்றான். அவனது அழைப்பை ஆமோதிக்க எண்ணி ‘ம்’ கொட்டிய அவளின் சத்தம் கணவனது நெருக்கத்தினால் வெளிவராமலேயே ஐடாவின் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொண்டிருந்தது.
“உனக்கு நம்ம ரூம்ல எதாவது சேஞ்சஸ் பண்ணணுமா?”
“எதுக்கு?”
“உன்னோட ஒப்பீனியன் எதுவும் இருந்தாச் சொல்லு. மாத்தச் சொல்லிரலாம்” என்றவன் அவளை அப்படியே அணைத்தபடியே அவர்களது பகுதியில் ஒவ்வொரு புறமாக அழைத்துச் சென்று காட்டினான்.
அவள் தனித்து முந்தைய தினம் வந்து பார்த்ததுதான். ஆனால் தனக்கு வேண்டி இத்தனை தூரம் யோசித்துக் கேட்பவனது பேச்சில், இதற்குமுன் அவனது கையில் பார்த்த டாட்டு சார்ந்த நினைப்பு ஐடாவிடம் மறைந்திருந்தது.
அவன் கேட்ட கேள்வியிலும், அவன் காட்டிய இடத்தில் என்ன மாற்றம் செய்யும்படி உள்ளது என ஐடாவின் சிந்தனை மாறியிருந்தது. ஆனால் எதையும் மாற்றும்படி சொல்ல வேண்டிய நிலை வராமலிருக்க, ரீகன் அடுத்தடுத்த பகுதிகளில் அவளின் கவனத்தை திசைமாற்றினான்.
அவளின் டாட்டு சார்ந்த யோசனைகளில் இருந்து அறுபட்டு, முற்றிலும் நடப்பு நிகழ்விற்குள் கவனம் வந்திருந்தது. ஐடா எதையும் கூறாமல் தாமதித்த வேளையில் மனைவியின் தோளோடு அணைத்து அழைத்து வந்திருந்தவன் தன்னை நோக்கி மனைவியைத் திருப்பினான்.
கணவனை நிமிர்ந்து பார்க்க முனைந்தவளின் இதழை இதமாக தன் இதழ் கொண்டு ஒற்றி எடுத்தான். அணைப்பை மேலும் இருக்க அவனது செய்கையில் உடலின் உணர்வுகள் ரீகனது வசமாவதை அவளால் தடுக்க முடியவில்லை. மறுக்க வேண்டும் என்கிற நினைப்பே அவளுக்குத் தோன்றவில்லை.
மனைவியின் கழுத்துப் பகுதியில் வாசம் பிடித்ததோடு முத்தத்தையும் தர, தடுமாறிப் போய் நின்றிருந்தாள் பேதை. சேலையில் இருந்தவளின் இடையில் தனது கரங்களால் கோலம் போடத் துவங்கியவனை சமாளிக்கும் வழி தெரியாமல் அவனது கரங்களில் விளையாட்டுப் பொருளாக மாறிப்போயிருந்தாள்.
தொய்ந்து நின்றிருந்தவளை தனது கரங்களால் ஏந்திக்கொண்டவனைக் கண்டு கீழிறங்க மனம் முயன்றாலும், அவளின் உடல் அவளின் எண்ணத்திற்கு ஒத்துழைக்காமல் சண்டித்தனம் செய்தது.
“வேற எதுவும் உனக்கு வேணுமா?” என்று அப்போது கேட்டவனிடம் என்ன பேசுவாள் ஐடா. அவனது கைகளில் விளையாட்டு பொம்மைபோல மாறி தனது செயலாக்கத்திற்கு அணை போட்டு அமைதியாக இருந்தாள்.
படுக்கையில் கிடத்தியவன், “ஒன்னும் அவசரமில்லை. நிதானமா பாத்து சொல்லு” என்றதோடு அவளின்மேல் படர, “பகல்ல யாராச்சும் வந்திருவாங்க” என்று பதறியவளின் அதரங்களை தனது வசமாக்கிக் கொண்டவனை அடுத்து தடுக்கும் வழி தெரியாமல் அவனது இழுப்பிற்கு இசைந்துபோயிருந்தாள்.
கணவனது தேடல் முடியும்வரை எந்த நினைப்பும் அவளுக்குள் இல்லை. அவன் தேவை முடிந்து விலகிய பின், தானிருந்த நிலை அவளுக்குள் கூச்சத்தைத் தர, படுக்கையில் கிடந்த அவளின் உடைகளை வாரிச்சுருட்டி சுற்றிக்கொண்டவளைப் பார்த்து, “ஹனி! நான் ரெடியாகி வரதுக்குள்ள நமக்கு பிரேக்ஃபாஸ்ட் என்னானு சாம்கிட்ட சொல்லிறியா?” என்றவன் அடுத்து குளியலறைக்குள் செல்ல முயல, “நான் முதல்ல குளிச்சிட்டு வந்திரேன். நீங்க வயிட் பண்ணுங்க” என்றாள் ஐடா.
“நீதான் அல்ரெடி குளிச்சிருக்கியே ஹனி!”
“சோ…” அவனது முகம் பார்க்க முடியாமல் குனிந்தபடியே குளியலறை நோக்கி விரைந்தபடியே கேட்டாள் ஐடா.
“அகெய்ன் எதுக்கு குளிக்கணும்?” புரியாமல்தான் கேட்டான் ரீகன்.
“இப்படி நடந்த பின்ன” படுக்கையைக் காட்டி, “குளிக்காம எப்டி?” என்றாள் ஐடா.
“அப்ப… ஒவ்வொரு டைமும் போயிக் குளிச்சிட்டே இருந்தா ஒரு நாளைக்கு எத்தனை தடவைக் குளிப்ப?” சிரித்தான்.
மௌனமாக கணவனை ஏறிட்டுப் பார்த்தவள், “எத்தனை தடவைன்னாலும் குளிக்கணும்னுதான் அம்மா சொல்லியிருக்காங்க” என்று உள்ளே சென்றுவிட்டாள்.
ரீகனுக்குத்தான் வருத்தமாகப் போயிற்று. அப்படி குளிப்பாள் மனைவி என்று முன்பே தெரிந்திருந்தால் இந்தக் காலையில் அவளைத் தொந்திரவு செய்திருக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணியபடி, இருவருக்குமான காலை உணவு என்னவென்பதை சாம்மிடம் கூறிவிட்டு வரும்போது, பாட்டி ரூபியைப் பார்க்க நேரிட்டது.
பாட்டியோடு சாதாரணமான பேச்சுகள். ரூபிக்கு ஐடாவின் நிலை என்னவென்பதை தெரிந்துகொள்ளும் ஆவல். “ஐடா எங்க?”
“அவ குளிக்கறா”
“இப்பத்தான் நீங்களும் எழுந்தீங்களா?”
“இல்லை. அவ இயர்லியராவே எழுந்துட்டாபோல” ரீகனது பேச்சைக் கேட்ட ரூபிக்கு இதற்குமேல் பேரனிடம் எதுவும் கேட்டறிந்துகொள்ளாமலேயே என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது.
“புது இடம். நீ மட்டுந்தான் அவளுக்கு க்ளோஸ். சோ வெளிய எங்கேயும் போறதா இருந்தா, என் ரூம்ல கொண்டு வந்து விட்டுட்டுப் போ. நீ பாட்டுக்கு கிளம்பிப் போயிறாத” என்றவர், “இன்னும் உங்கம்மா, யாரையும் காணோம்” என்று கேட்டார்.
“எல்லாம் நேத்து அலைச்சல்னால டயர்ட்ல ரெஸ்ட் எடுக்கறாங்க பாட்டி” என்றவன், “நாளைக்கு மார்னிங் சென்னை எத்தனை மணிக்கு கிளம்பற பிளான்”
“பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு கிளம்புவோம். ஐடாகிட்டயும் சொல்லிரு. வேற… உங்கம்மா அங்க வராலாமா?” ரூபி.
“வந்து மருமகளை குடிவைக்க அங்க வரதாத்தான் சொல்லிட்டு இருந்தாங்க. எல்லாருமே வரதாத்தான் இருங்காங்க” ரீகன்.
“எல்லாருமேன்னா…”
“நம்ம ஃபேமிலி மெம்பர்ஸ் அண்ட், ஐடா வீட்டுல வந்திருக்காங்கல்ல அவங்க எல்லாரும். அவங்க பேரண்ட் நாளைக்கு அங்க டேரக்டா வந்திரதா இருக்காங்க”
ரூபி பாட்டியோடு பேசிக்கொண்டிருந்தவன், அடுத்து ஐடாவின் உறவினர்களையும் சென்று பார்த்து அவர்களுக்கு வேண்டியதை சாம்மிடம் கொண்டு சென்று குடுக்குமாறு பணித்தான்.
அன்றைய தினம் முழுமையும் வரவேற்பிற்கு வர முடியாதவர்கள் வீட்டில் வந்து மணமக்களை நேரில் வந்து வாழ்த்திச் சென்றனர். ஐடாவோடு அனைவருமே இணக்கமாகப் பேச, அன்றைய பொழுது முழுமையும் அவளால் வேறு எதையும் சிந்திக்கவே முடியவில்லை. அதற்கான தனிமை அவளுக்கு வாய்க்கவே இல்லை.
ஆனால் ஐடாவின் ஒவ்வொரு அசைவையும் ரீகன் கவனத்தில் வைத்திருந்தான். அவளின் முக மாறுதல்கள் அல்லது சுணக்கம் இப்படி காண நேரும் நேரங்களில் அவளை தேற்றும் வழியும், அவளை அதிலிருந்து மாற்றும் வழியும் அறிந்திருந்தான்.
அதில் அவள் தன்னை சந்தேகிக்கிறாள் என்கிற எண்ணமில்லை. புது இடம். யாரும் அத்தனை பழக்கமில்லாத காரணத்தினால் உண்டாகக்கூடிய மனச் சுணக்கம் அது என்று எண்ணியே அவளின் நேரங்களை தனதாக்கிக் கொள்ள முயன்றான்.
அன்று முழுமையும் அவளோடு கூடவே இருக்க எண்ணினான். ஆனால் மாறாக தொழில் சார்ந்த வேலை வர… சென்று வர எண்ணி புறப்பட்டான். அதுவரை மனைவியோடு நிறையப் பேசினான். மதிய உணவிற்குமேல் அவளிடம், “நீ ரெஸ்ட் எடு ஹனி. நான் கொஞ்சம் வெளில வேலை முடிச்சிட்டு ஈவினிங் வந்திருவேன்” என்று வெளியேறியபோதுதான் அவளால் மீண்டும் அன்று காலையில் பார்த்த டாட்டுவைப் பற்றியே சிந்திக்க முடிந்தது.
யோசித்தவளுக்கு விளங்கியது, ‘அன்னைக்குப் பார்த்த முகம் இதுதான்னு தெளிவாத் தெரியலை. அந்த பையன் முகத்துல தாடி பாத்த ஞாபகம். ஆனா இவங்க தாடி வைக்கல… அந்தப் பையன் இன்னும் மெலிஞ்சு இருந்த மாதிரி இருந்தது. ஆனா இவங்க அவனைவிட பெரியாளா தெரியறாங்க… அத்தோடு ஆர்ங்கற கேரக்டர் மேல க்ரவுன் டாட்டு பாத்தது உண்மை. ஆனா… இப்டியேதான் அச்சு அசலா இருந்துதான்னா… அதுவும் சரியா நியாபகத்துல வரமாட்டுது.’ இப்டியான சிந்தனைகளோடு இருந்தவளுக்கு, திருமண பந்தத்தில் நம்பிக்கை தம்பதியருக்கிடையே எத்தனை அவசியம் என தேவாலயத்தில் எடுத்த வகுப்பில் கூறிய விசயங்கள் மனதிற்குள் வந்து போனது.
கணவனிடம் கேட்கலாமா என யோசித்தவளுக்கு, ‘அது அவங்க இல்லைன்னா, நாம சந்தேகப்பட்டதா ஆகிரும். அதனால இந்த விசயத்தைக் கேக்க வேணாம். அப்படி இருந்த ஒருத்தனால, தொழில்ல இவங்களை மாதிரி எப்படி சக்சஸ் பண்ணலாம் முடியும். இவங்கதானே இவங்க அப்பா, அம்மா ரெண்டு சைட்ல எல்லாத்தையும் பாத்துக்கறதா பாட்டி சொன்னாங்க’ இப்படி நினைத்தாள் ஐடா.
ஆனாலும் ஒரு மூலையில் சிறு சந்தேகப்பொறி இருந்ததை அவளே அறிந்திருக்கவில்லை.
சற்று நேரத்தில் அங்கு வந்த ரீகனின் சகோதரிகள் மற்றும் சகோதரனின் மக்கள் அத்தை சித்தி என்று அவளோடு அன்பைப் பொழிந்தார்கள்.
‘மாமா வரும்வரைதான் அத்தையோட பேசலாம். இருக்கலாம். அவன் வந்துட்டா எல்லாரும் அங்க இருந்து வெளிய வந்திரணும்’ என்று ரீகனது சகோதரிகள் சொல்லி அனுப்பியிருந்ததையும் ஐடாவோடு வெள்ளந்தியாகப் பகிர்ந்து கொண்டன குழந்தைகள்.
ரீகனைப் பற்றி ஐடா கேட்ட சில வினாக்களுக்கு, ‘மாமா எப்பவாச்சும் வந்தா எங்களுக்கு சாக்லேட்ஸ், கேக்ஸ், ட்ரெஸ் எல்லாம் வாங்கி வருவாங்க. அத்தோட உடனே கிளம்பிப் போயிருவாங்க. அதனால எங்க மாமான்னா எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். வேற அவ்ளோதான் மாமா பத்தித் தெரியும்’ என்று முடித்திருந்தார்கள்.
“சித்தப்பா என்ன கேட்டாலும் வாங்கித் தருவாங்க. வெளிய போகணும்னு சொன்னா கூட்டிட்டுப் போவாங்க. ஐ லவ் வெரி மச்” என்றன அவனது அண்ணனின் பிள்ளைகள்.
அதே நேரத்தில் சார்லஸ்ஸின் மனைவியோடு நேரம் செலவிட எண்ணி குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த பகுதிக்குச் சென்றாள் ஐடா.
நேரம் போனதே தெரியவில்லை. மாமியாரின் வேண்டுகோளுக்கிணங்க நாத்தனார்களோடு வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். மாளிகை போன்றிருந்தது.
‘இத்தனை வசதியிருக்கறவங்க என்னைப் மருமகளா எடுத்ததே ஆச்சர்யமா இருக்கு’ என்று தோன்றியது ஐடாவிற்கு. அவள் நினைத்ததை சார்லஸின் மனைவி ஐடாவிடம், “இவங்க வசதிக்கு நம்ம மாதிரி நடுத்தரக் குடும்பத்துல வந்த பொண்ணு எடுத்ததே ஆச்சர்யமா இருக்குல்ல ஐடா” என்று கேட்டாள். இப்படி அன்றைய மாலைவரை பொழுது அவளை இழுத்துச் சென்றது.
ரூபி பாட்டியின் அறைக்குச் சென்றபோது அங்குதான் இருந்தான் ரீகன். “ரீகன் உன்னைக் காணோம்னு இங்க வந்து பஞ்சாயத்து வைக்கிறான். நீ எங்க போயிருந்த ஐடா” என்று வரவேற்றார் பாட்டி.
அனைவரும் ஒன்று சேர்ந்து வந்திருந்த நேரத்தில் பாட்டி இப்படிக் கேட்டது ஐடாவிற்குமே தர்மசங்கடமாகப் போயிற்று. ஆனாலும் விசயத்தைக் கூறினாள்.
“உனக்கு இங்க எல்லாம் புடிச்சிருக்கா?” பாட்டி
தனது ஆமோதிப்பை பாட்டியிடம் கூற, சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவிற்கு அழைத்தார்கள். டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் இருபது நபர்களுக்கு மேல் அமரும்படி அமைக்கப்பட்டிருந்தது.
அனைத்திலும் அவர்களது அந்தஸ்து மற்றும் செழிப்பு தெரிய, அனைத்தையும் மனதில் குறித்துக்கொண்டபடியே தங்களின் அறைக்குத் திரும்பிய ஐடா, உள்ளே நுழைந்ததுமே கேட்ட கேள்வியில் ரீகன் திகைத்துத்தான் போனான்.
ஐடாவிடமிருந்து அப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திராதவன் சொன்ன பதில்?
***
Leave a Reply