இளைப்பாற இதயம் தா!-7ஆ

இளைப்பாற இதயம் தா!-7ஆ

இளைப்பாற இதயம் தா!-7B

வேறொரு அழைப்பு வருவதாகக்கூறி ஸ்டெல்லா சற்று நேரத்தில் அழைப்பைத் துண்டித்துவிட, அப்போதுதான் காரைக்குடியிலிருந்து வெளியே பேருந்து வந்திருந்தது.

அழைப்பு துண்டிக்கப்பட, ஐடாவிற்கு நேராக இருந்த ஸ்லீப்பரில் அவனுக்கு படுக்க வசதியாக இல்லையென்று பேசிக்கொள்வது கேட்டது.

“படு பாப்போம்” என்று ஒருத்தி கூற,

அவன் சென்று படுப்பதும் அதனைத் தொடர்ந்து இரு பெண்களும், “உன்னோட ஹைட்டுக்கு தனி ஸ்லீப்பர்தான் விடணும்போல” என்று சிரிப்பதும் கேட்டது.

“நாம வந்த பஸ்ஸுல இதவிட கொஞ்சம் கம்ஃபர்ட்டபுளா இருந்தது.  ஆனா அதுல டிக்கெட் கிடைக்கலை.  அதனால வேற வழியில்லைனு இதுல போட்டாச்சு.    அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் போகணும்” என்று பேசினான் அவன்.

“கிராஸா படுத்தா அவன் மட்டும் டபுள் ஸ்லீப்பர்ல நல்லா படுக்கலாம்” ஒருத்தி சிரித்தாள்.

“தனியா போனு தலையப் புடிச்சுத் தள்ளுனாலும் போக மாட்டானே” மற்றொருத்தி நகைத்தாள்.

இவர்களது பேச்சு சத்தம் அருகே இருந்த ஸ்லீப்பரில் படுத்திருந்த ஐடாவின் காதுகளில் அட்சரம் பிசகாமல் கேட்டது.  அதேநேரத்தில் ஓட்டுநர் அனைத்து விளக்குகளையும் அணைத்திருக்க, வெளிச்சமில்லாததால் தடுமாறிய நிலையில், “இந்தாளு வேற… நேரங்காலம் புரியாம… யாராவது லைட்டைப் போடுங்க” என்றாள் ஒருத்தி.

ஐடாவிற்குள் ஏதோ உந்த சட்டென திரும்பிப் பார்த்தாள்.  சற்று நேரத்தில் இருட்டான அந்த இடத்தில் சட்டென விளக்கெரிந்ததும்  திரைச்சீலையை மீறி உள்ளே இருந்தவர்களின் நிழலை அவளால் அவளது ஸ்லீப்பருக்குள் இருந்தபடியே காண முடிந்தது. 

‘நீ முதல்ல போ.  அடுத்து நான் படுத்துக்கறேன்’ எனும் பேச்சைக் கேட்டவளுக்கு மூச்சை அடைத்தது. மூவருமாக ஒரே ஸ்லீப்பருக்குள் செல்வது புரிந்திட பார்வையை அங்கிருந்து அகற்றியவள், கையில் பைபிளை எடுத்து இரவு பிரேயரைத் துவங்க மனதைத் திருப்பினாள் ஐடா.

அவளால் அந்த நிகழ்வை சாதாரணமாகக் கடக்க முடியவில்லை.  ‘எத்தனை அசிங்கம்.  ஏன் இப்படியெல்லாம் பொதுவெளியில் நடக்கவேண்டும்?  இவர்களையெல்லாம் நம்பி வெளியில் விட்டிருக்கும் பெற்றோருக்கு இதுதான் இவர்கள் செய்யக்கூடிய நம்பிக்கையான செயலா?’ இப்படியெல்லாம் எண்ணம் எழ, முயன்று பைபிளின் வரிகளில் கவனத்தைச் செலுத்த முயன்றாள் ஐடா.

 அதன்பின் விளக்கணைத்தபின்பு நடந்ததை பார்க்காதபோதும் அவர்கள் மூவரும் கிசுகிசுப்பது, கிண்கிணியாய் குறைந்த ஒலியில் நகைப்பது அனைத்தும் ஐடாவின் காதுகளை எட்டியது.

பைபிளை வாசித்து பிரேயருக்காக கண்களை மூடியவளுக்குள், ‘அந்த இடத்தில ரெண்டு பேருதான படுக்க முடியும்.  அதுல எப்டி மூனு பேரு…’ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.  ஒரு வழியாக பிரேயரை முடித்து படுத்தவளுக்கு உறக்கமும் வரவில்லை.  அந்த ஸ்லீப்பருக்குள் இருந்து வந்த மெல்லிய சத்தங்களும் சிரிப்பும் பெருமூச்சுகளும் ஐடாவிற்குள் எரிச்சலை உண்டு செய்த வண்ணமிருந்தது.

மூவரைப் பற்றிய அவளால் நல்ல விதமாக எண்ணவே முடியவில்லை.  மூவரும் தனியர்.  அப்படியிருக்க பயணத்திலேயே இப்படி என்றால், கடந்து சென்ற தினங்களில் எப்படி நடந்துகொண்டிருப்பார்கள்? என்கிற நினைப்பே மூவரைப் பற்றி நல்ல விதமாக யோசிக்கத் தூண்டவில்லை.

திருச்சியில் சற்று நேரம் பேருந்து நின்றது.  அப்போதும் மூவரும் வெளியில் சென்று திரும்பி வந்ததையும் ஐடா கவனிக்கும்படி ஆயிற்று.  ஆணோடு ஒருத்தி மட்டும் அந்த ஸ்லீப்பருக்குள்ளும், மற்றொருத்தி, “நான் என்னோட ஸ்லீப்பர்ல போய் படுக்கறேன்” என்று போனது என அனைத்தையும் கண்டும் காணாததுபோலவே சென்னை வந்தடைந்திருந்தாள் ஐடா.

அந்தப் பெண் போன பின்பும் விக்கிரவண்டி வரும்வரை கேட்ட சத்தம் அதன்பின் சற்று மட்டுப்பட பிறகே அசந்து உறங்கியிருந்தாள் ஐடா.  தாம்பரம் தாண்டி பேருந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில் மொபைல் அலாரம் அடிக்க எழுந்தவள் எந்த இடத்தில் பேருந்து வந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தாள்.

இன்னும் இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்குப் பிறகு தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வரவிருப்பதை அறிந்தவள், தனது பொருள்களை சரியாக எடுத்து வைத்து ஸ்லீப்பரை விட்டு வெளியே வர, அந்த பெண்களோடு வந்திருந்தவன் மட்டும் ஓட்டுநரோடு பேசியபடி வாயிலில் நின்றிருந்தான். அந்த இரு பெண்களையும் காணவில்லை.

‘ச்சேய்… இன்னைக்கு இவன் மூஞ்சியிலயா முழிக்கணும்’ இப்படி நொந்தபடியே அவனுக்குப் பின்னால் சற்று இடைவெளியில் நின்று கொண்டாள் ஐடா.

ஐடா இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்குவான் என நினைத்திருக்க அவன் இறங்கவில்லை. ஓட்டுநர் நிறுத்தம் பெயரைச் சொல்லிக் கேட்க, அவன் பின்னே நின்றிருந்த ஐடாவை திரும்பிப் பார்த்தான்.

ஐடா தனது நிறுத்தம் பெயரை உச்சரித்ததும், “அடுத்த ஸ்டாப்புலதான் ஒருத்தங்க இருக்காங்க” என்றான். அதன்பின் தனக்குப் பின்னால் நின்ற ஐடா இரண்டொரு முறை திரும்பிப் பார்த்தான் அவன்.

தன்னைத்தான் சொல்கிறான் என்பது புரிய, அத்தோடு அவன் அந்த நிறுத்தத்திலும் இறங்கப் போவதில்லை என்பதும் அவனது பேச்சின் வழியே புரியவர, ‘பைத்தியம்… அடுத்த ஸ்டாப்புலயும் இறங்கலன்னா, எதுக்கு ஆளுக்கு முன்ன போயி வாசப்படியில நிக்கறான்.’ மனதிற்குள் வைதபடியே அவள் நிறுத்தம் வந்ததும் முன்னே வந்தாள் ஐடா.

வழியில் அவன் நின்றுகொண்டிருந்தமையால் ஐடாவால் இலகுவாக இறங்க முடியவில்லை.  ஓட்டுநர் அருகே சென்று நின்றுகொண்டு ஐடாவிற்கு வழிவிட்டவன் அவளின் ட்ராலி பேகோடு இறங்கச் சிரமப்பட்டவளைப் பார்த்து, “நீங்க இறங்குங்க… நான் பேகை எடுத்துத் தரேன்” என்று தானாக முன்வந்தான்.  முன்வந்தவனிடம் மறுக்காமல் இறங்கிக் கொண்டு பேகை அவன் பேருந்தில் இருந்தபடி எடுத்து அவளிடம் நீட்ட, அதைப் பெற்றுக்கொள்ள வேண்டி அவனது கையை நோக்கித் திரும்பிய பார்வையில் அவளின் கவனத்தை ஈர்த்தது அவனது கையில் இடப்பட்டிருந்த டாட்டூ.

அவனது முகத்தில் தன்னைப் பார்த்தால் வந்திருந்த ஆர்வமான பார்வையை ஐடா காணவில்லை.  ‘இந்தப் பொண்ணு இவ்ளோ நேரம் இந்த பஸ்லதான் இருந்ததா? இது எங்க ஏறுச்சு?’ இப்படி அவனது நினைவுகள் ஓட… கையில் வைத்திருந்த ஐடாவின் ட்ராலி பேகை அவளிடம் நீட்டினான்.

ஆர் என ஆங்கில எழுத்தின் மேல் கிரீடம் போட்டிருந்த டாட்டு அவனது கையில் அத்தனை வசீகரமாக இருந்தது.  கீரிடத்தில் ஆங்காங்கு நீல, சிவப்பு நிற கற்களைப் பதித்திருந்ததுபோல பளிச்செனத் தெரிந்த டாட்டுவைப் பார்த்தபடியே அவளது ட்ராலி பேகை வாங்கிக்கொண்டு நன்றிகூட சொல்லாமல், ‘வின்னா, மின்னா, பின்னா ஏதோ ஒன்னுதான சொல்லிக் கூப்பிட்டுச்சுங்க அதுங்க… ஆனா கையில ‘ஆர்’னு போட்ருக்கு’ இப்படி யோசித்தபடியே, ‘ஒரு வேளை ரின் அப்டினு கூப்பிட்டதுதான் நமக்கு இப்படிக் கேட்டிருக்குமோ’ என நினைத்தவாறு அவளின் விடுதி நோக்கி விரைந்தவளுக்கு அடுத்து ஒரு வாரம் மூவரைப் பற்றிய சிந்தனை அவ்வப்போது வரத்தான் செய்தது.

அது அந்த இரு பெண்களைப் பற்றியும் உண்டான சிந்தனை. ‘வீட்டுல இவங்களை நம்பித்தானே பேரண்ட்ஸ் அனுப்பிருக்காங்க… அவங்களோட நம்பிக்கையை நாசமாக்குறதோட, இதுங்களும் நாசமாப் போகுதுங்க’ என்று நினைத்து வந்த சமூகம் கெட்டழிந்து போவதை எண்ணிய வருத்தம் அது.

அடுத்தடுத்த நாள்களில் இதைப்பற்றி மறந்து முற்றிலும் அவளது பணியோடு ஒன்றிப் போயிருந்தாள் ஐடா.  தான் அன்று அப்படி ஒரு டாட்டுவை பார்த்ததை அதன்பின் வேறு யார் கையிலும் பார்க்கடவில்லை.  ஆனால் நீண்டு நெடிய நாள்களுக்குப்பின்… இன்று அதே போன்ற டாட்டுவை கணவனின் கையில் பார்க்கிறாள்.

சட்டென நெஞ்சில் பாரமேறிய உணர்வு அழுத்தியது ஐடாவை.  பிறகு அன்றைய தினத்தில் தான் பார்த்தவனை நினைவுகூற முயன்றாள்.

தனக்கு மாப்பிள்ளை தேடத் துவங்கியபோதுகூட இந்த சம்பவம் அவளின் நினைப்பில் வரவில்லை. ஏன் தனக்கு வரப்போகிற கணவன் அப்படிப்பட்டவனாக இருக்கலாம் என்று அப்போதெல்லாம் தோன்றவில்லை என்றெல்லாம் சிந்தனை ஓடியது.

பெற்றோரை மலைபோல நம்பிய தனக்கு இப்படி ஒரு நிலையா? என்று மனம் தடுமாறியது.  ஆனால் ரீகனுக்கும் அந்த அவனுக்கும் ஒற்றுமை வேற்றுமை என்று யோசித்தால் அவனது முகம் தற்போது தெளிவாக தன் நினைவில் இல்லையே!

ரீகனைப் பார்த்தபோதுகூட அவளுக்கு எங்கோ பார்த்த உணர்வுதானே அன்றி, இவன் அவன்தான் என்று நிச்சயமாகத் தோன்றவில்லை.  தற்போதும் அது ரீகன்தான் என்று நிச்சயமாக கூற முடியாத நிலைதான் ஐடாவிற்கு.

          யோசிக்கையில் சில வேற்றுமைகள் இருந்ததும் அவளின் மூளைக்குள் குடைந்தது.  அதனால் குழப்பம் மிஞ்சியது.  ஆனால் அவனாக இருக்கும் நிலையில் ஐடாவால் நிச்சயமாக அவனோடு தனது வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

          நேற்றுவரை வேறாக இருந்த திருமண பந்தந்தில், இன்று புதிய சந்தேக வித்து விழுந்ததும்… மனம் குழப்பத்தைத் தாங்கியிருப்பதை ஐடாவின் முகம் தெளிவாகக் காட்டியது.

 ஐடாவின் பார்வை தனது கையில் இருந்த டாட்டுவின் மீது போனதையும், அதன்பின் அவளது முகத்தில் தோன்றிய பல மாறுதல்களையும் அவளின் யோசனையையும் கவனித்தபடியே மனைவியின் கையிலிருந்து வாங்கிய காஃபியை ரசித்து அருந்தினான் ரீகன்.

அவளாகவே இதைப்பற்றி பேசும்வரை வாய் திறக்க வேண்டாம் எனும் எண்ணத்தில் ரீகன் இருக்க, தனது சந்தேகத்தை தீர்க்க ஐடா முனைந்தாளா?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!