இருட்டில் விழும் நிழல்கள் யார் கண்ணிற்கும் தெரிவதே இல்லை. அதே போல தான் ஷ்யாம் சித்தார்த்தின் மனதில் உள்ள வலிகளை யாரும் அறிந்ததே இல்லை.
எப்போதும் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் அவன் இதய கதவு ஒரே ஒரு நொடி மட்டுமே திறக்கப்பட்டு மீண்டும் வேகமாக சாத்திக் கொண்டது.
அந்த சில கணங்களிலேயே அவன் எத்தனை அழுகையை மன அறைக்குள் தேக்கி வைத்து இருக்கின்றான் என்பதை மான்யா தெளிவாக கண்டு கொண்டாள்.
ஷ்யாம் சித்தார்த்தின் கடினமான வேர் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்ந்துக் கொண்டிருக்க ஆரனாஷியிடம் ஸ்தம்பிப்பு.
தந்தை அடித்த கோபத்தில், அதுவரை முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவள் அவன் கண்ணீரைக் கண்டதும் ஓடிப் போய் அணைத்துக் கொண்டாள்.
“அப்பா சாரி. ரியலி சாரிபா. நான் அம்மாவைப் பத்தி கேட்டாலே நீங்க அழுவீங்கனு தெரிஞ்சும் நான் கேட்டு இருக்கக்கூடாதுபா” ஆஷியின் கதறல் கேட்டும் ஷ்யாமின் முகத்தில் நிழல் விழவேயில்லை.
“ஆஷி டூ பேட் கேர்ள். இந்த பேட் கேர்ள் சொன்னதை நினைச்சு அழாதீங்கபா” பரிதவித்த குரலில் சொல்லி அவன் கன்னத்தை தட்ட வேகமாக திரும்பியவன் மகளின் கண்ணீரைக் கண்டதும் தன் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டான்.
“இல்லை ஆஷிமா குட் கேர்ள். அப்பா தான் ரொம்ப பேட். என் செல்லத்தை நானே அடிச்சுட்டேன். அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு” கலங்கிய குரலில் சொல்லி அவள் முதுகில் கோபமாக தன் விரல் பதிந்த இடத்தில் ஆறுதலாக வருடிக் கொடுத்தவனின் இதயத்திலோ இமயமலை பாரம்.
“உனக்கு அம்மா ஏக்கம் வருதாடா? அப்பா உன்னை சரியா கவனிக்கலையா?” ஷ்யாமின் கேள்வி ஆஷியை திணற வைத்தது.
தன்னுடன் படிக்கும் தோழர்கள், என் அம்மா அதை செய்தார்கள் இதை செய்தார்கள் என்று பெருமையாக சொல்லும் போது தன் அம்மா எதை செய்தாள்? என்ற கேள்வி அவள் மனதை குத்தாமல் இருந்தது இல்லை.
பழைய பள்ளியில் உனக்கு அம்மா இல்லை, அந்த பாசம் புரியாது உனக்கு என்று தொடர்ந்து கேலி செய்யவும் மனதில் அடிப்பட்டு போனாள்.
தன் தந்தையிடம் இன்னதென்று காரணம் சொல்லாமல் புதிய பள்ளியில் அடம்பிடித்து சேர்ந்துவிட்டாள். ஆனால் இந்த பள்ளியிலும் அதே கேலிக்கு தான் ஆட்பட கூடாது என்பதற்காக தான் அன்னை இருக்கிறாள் என்று தன் நண்பர்களிடம் பொய் சொன்னாள்.
அந்த பொய்யை மறைக்க முடியாமல் திண்டாடிய சமயம் மான்யா ஆபத்பாந்தவனாய் வந்து காப்பாற்றவும் இவள் மனதில் அன்பின் விதை ஊன்றியது.
அம்மா என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்று இவள் நண்பர்கள் ஏற்கெனவே சொல்லி வைத்த பிம்பம் மான்யா என்னும் சட்டத்தில் பொருந்திப் போக அவர்கள் இருவரிடையே இருந்த பெயரிடப்படாத உறவிற்கு இவள் அன்னை என்றும் பெயர் வைத்து விட்டாள்.
அந்த உறவை சட்டென்று முறிக்க சொல்ல இவள் மனம் கிளையாய் முறிந்தது.
‘அம்மா ஏக்கம் வருதா?’ என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலை சொல்லி ஷ்யாமை வருத்த விருப்பமில்லை. அதே போல இல்லையென்றும் மனதார பொய் சொல்ல முடியவில்லை.
எதுவும் பேச முடியாமல் திணறி நின்ற ஆஷியைப் பார்த்தவன் ஒரு முடிவோடு எழுந்து கொண்டான். அவனுக்கு தன் மகளின் மனநிலை புரிந்தது.
“ஆஷிமா மான்யாவை உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ கூப்பிட்டுக்கோ. அப்பா தடுக்க மாட்டேன்” உணர்ச்சி துடைத்த குரலில் சொன்னான்.
“என் மேலே கோவம் இல்லை தானேபா. இனி நான் அப்படி கூப்பிட்டா கஷ்டப்படுவீங்களா?”
“உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் ஆஷி” என்று உரைத்தவனின் பார்வை மான்யாவின் மீது ஒரு கணம் விழுந்தது. பறவையை குறிப் பார்க்கும் வேடனின் கூரிய பார்வை அது.
அந்த பார்வையில் அவள் திணறிய நேரம் ஷ்யாம் தன் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
அந்த பெரிய ஹாலில் இப்போது மான்யா மட்டும் தனியாக.
சில நேரங்களுக்கு முன்பு அங்கு நடந்த பூகம்பத்தில் தான் நின்று கொண்டிருந்த நிலம் மட்டும் துண்டாக பிளந்து தீவைப் போல நின்று கொண்டிருப்பதை போன்ற மாயை மான்யாவிற்குள்.
அந்த வீட்டில் நாளுக்கு நாள் தான் அந்நியப்பட்டு போவது தெளிவாக புரிந்தது.
தான் காட்டும் அன்பு ஏன் ஷ்யாம் மனதில் அத்தனை அதிர்வுகளை உண்டாக்குகிறது என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அதுவும் இன்று கலங்கி நின்ற ஷ்யாமை கண்டு அவளுக்குள் குற்றவுணர்வு குளமாய் நிரம்பியது.
ஷ்யாம்மை வெல்ல தான் நினைத்தாலே தவிர அவனை இப்படி உடைத்துப் போட அவள் நினைத்ததில்லை. ஷ்யாமிடம் பதிலுக்கு பதில் மல்லு கட்ட பிடிக்கும் ஆனால் இப்படி பதில் பேச முடியாமல் கலங்கி நின்ற ஷ்யாமை அவள் பார்க்க ஆசைப்பட்டதில்லை.
‘ஆஷியின் அம்மா யார்?’ என்ற கேள்விக்கு ஏன் ஷ்யாம் இப்படி உடைந்து போனான்?’ கேள்வியோடு தன் கட்டிலில் உறங்காமல் புரண்டவள், அதே கேள்வியோடே காலையில் எழுந்துக் கொண்டாள்.
எப்போதும் ஷ்யாம் ஆஷியின் பேச்சில் கலகலக்கும் அந்த டைனிங் டேபிள் இன்று பெரும் நிசப்தமாய்.
மீனாட்சியம்மாளை அழைத்துக் கொண்டு வந்தவள் அங்கே உணவை அளந்துக் கொண்டு அமர்ந்திருந்த இருவரையும் கண்டு விழிகளை சுருக்கினாள்.
“என்னாச்சு ஆஷிமா? சாப்பிடாம இருக்கீங்க?” மான்யாவின் கேள்வியில் அதுவரை தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்த ஷ்யாம் வெகு வேகமாக கலைந்தான்.
“ஏன் ஆஷிமா சாப்பிடலை?” ஷ்யாம் இப்போது தான் கவனித்து கேட்க அதுவரை குனிந்திருந்த ஆஷியின் தலை நிமிர்ந்தது. அவளது இரண்டு விழி கடலிலும் இரண்டு கண்ணீர் முத்துக்கள் முகிழ்த்திருந்தது.
அதைக் கண்டு பதறியவன் வேகமாக அவளின் கண்ணீரைத் துடைத்து “என்னாச்சுடா ஏன் அழற?” என்றான் கலக்கமாக.
“சாரிபா நான் நேத்து அப்படி பேசியிருக்கக்கூடாது. ரொம்ப கில்டா இருக்கு” கண்ணீர் உகுத்தது அந்த சிறிய கண்கள். நேற்று தந்தை சிந்திய கண்ணீர் அந்த குழந்தையை வெகுவாக பாதித்திருந்ததன் வெளிப்பாடு.
“அச்சோ ஆஷிமா அப்பா எதுவும் ஃபீல் பண்ணலை. ஒழுங்கா சாப்பிடுடா” என்றான் அவள் தலையை வாஞ்சையாய் வருடியபடி.
“என் மேலே கோபமில்லைனா, எனக்கு ஊட்டி விடுங்க” அவன் புறம் தட்டை நகர்த்தியபடி கேட்க, அதுவரை கலக்கம் குடிக் கொண்டிருந்த ஷ்யாமின் உதட்டில் புன்னகை மொட்டு.
மெல்லிய முறுவலுடன் ஊட்டிவிட ஆஷி கண்களில் பூத்த சந்தோஷத்துடன் அன்பின் கவளத்தை வாங்கிக் கொண்டாள்.
அவர்கள் இருவரிடையே இருந்த பாசபிணைப்பைக் கண்டு நெகிழ்ந்த மான்யா மீனாட்சியம்மாளிற்கு உணவு கொடுத்துவிட்டு வாசலைப் பார்த்துவிட்டு தன் கைகடிகாரத்தைத் திருப்பி பார்த்தாள்.
மணி எட்டரை.
இந்நேரத்திற்கு லயா இங்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ஏன் இன்னும் வரவில்லை என்ற கேள்வியோடு வாசலைப் பார்க்க அங்கே மீரா உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்.
“சாரி ஷ்யாம். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நான் இனி அம்மாவைப் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க” என்று மீரா சொல்ல மான்யா குழப்பமாய் ஷ்யாமைப் பார்த்தாள்.
“அப்போ லயா வரலியா?” என்றாள் கேள்வியாக. அவளை கோபமாக முறைத்தவன் இல்லையென்று மறுத்து தலையாட்டினான்.
“இனி லயா வர மாட்டா. புதுசா ஒரு கேர் டேக்கர் தேடணும். அதுவரை மீரா தான் அம்மா பார்த்துக்க போறாங்க” தகவலாக சொன்னவனின் பார்வை மான்யாவின் மீது தீர்க்கமாக விழுந்தது.
“புதுசா இங்கே வேலையிலே சேர போற கேர் டேக்கர்ஸையும் வேலையை விட்டு ஓடுறா மாதிரி பண்ணிடாதே. எங்க அம்மா மேலே உன் அன்பை அளவா காட்டுனா போதும்” என்றவன் அந்த ‘அன்பு’ என்னும் வார்த்தையில் சற்று அதிகமாகவே அழுத்தம் கொடுத்தான்.
அந்த அழுத்தத்தை மான்யா சற்று கவனமாக கேட்டு இருக்கலாமோ!
💐💐💐💐💐💐💐💐💐
மதுரா மருத்துவமனை.
ஸ்வேதாவின் அறுவை சிகிச்சை துவங்க இன்னும் சில மணிநேரங்களே இருந்தது.
அதற்கு முன்பு ஏனோ அந்த குழந்தையைப் பார்த்துவிட துடித்த மான்யா வேகமாக அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் கதவைத் திறக்க எதிரே கண்ட காட்சியைக் கண்டு விழிகளில் விரிவு.
இவள் வாங்கி கொடுத்த பில்டிங் ப்ளாக்ஸை வைத்து மதுரா மருத்துவமனை போலவே ஒரு குட்டி கட்டிடத்தையே அத்தனை சோர்விலும் வலியிலும் வெகு நேர்த்தியாக செய்து முடித்து இருந்தாள் அந்த குட்டி இன்ஜினியர்.
“எப்படி இருக்கு என்னோட பில்டிங்?” என்றவளின் கேள்விக்கு மான்யா மனதார பாராட்டிய நேரம் அகில் உள்ளே வந்தான்.
“பேபிக்கு இனிமா கொடுக்கணும்” என்றவன் சொன்னதும் மான்யா ஆமோதித்து நகர முயல ஸ்வேதாவின் கைகள் மான்யாவைப் பற்றிக் கொண்டது.
“என்னைக் காப்பாத்திடுவீங்களா ஆன்டி? எனக்கு நிறைய பில்டிங் கட்டணும்னு ஆசையா இருக்கு” என்றிவள் கைப்பிடித்து கேட்க அங்கே நின்றிருந்த மூவரும் மௌனமாய் அந்த குழந்தையை வெறித்தனர்.
ஸ்வேதாவின் தாய் கண்ணீரோடு அணைத்து தலையை வருடிவிட மான்யாவும் அகிலும் மாறி மாறிப் பார்த்தனர்.
இந்த சர்ஜரிகான சக்சஸ் ரேட் வெறும் முப்பது சதவீதம் மட்டுமே என்று அறிந்தவர்களுக்கோ இதயத்தை அழுத்தும் பாரம்.
இத்தனை சிறிய பெண்ணுக்கு ஏன் இத்தனை பெரிய வியாதியை அந்த கடவுள் கொடுத்துவிட்டான்.
கண்ணீரோடு நினைத்தவள், “உன்னை காப்பாத்துறதுக்காக என்னோட முழு எஃபோர்டையும் போடுவேன் இன்ஜினியர். உன்னை விட்டுக் கொடுத்துட மாட்டேன்” உறுதியாக சொல்லிவிட்டு வந்தவள் தன் லாக்கரை திறந்தாள்.
எதிரே அவளது அன்னையின் புகைப்படம் இவளைப் பார்த்து சிரித்தது. இவளும் பதிலுக்கு புன்னகைக்க முயன்றாள்.
“அம்மா எப்படியாவது நான் இந்த சர்ஜரியிலே இன்ஜினியரை பிழைக்க வெச்சுடணுமா. எனக்கு அதற்கான வலிமையை கொடு” மனமுருக வேண்டியவள் லாக்கரை மூடிவிட்டு உள்ளிருந்து அறைக் கதவை திறந்த அதே சமயம் வெளியே இருந்து ஷ்யாமும் கதவைத் திறந்தான்.
எதிர்பாராத இந்த நிகழ்வில் மான்யா பின்னோக்கி நகர அவளது கால்கள் நிலைத் தடுமாறியது. பிடிமானமில்லாமல் கீழே விழப் போனவளின் இடையில் ஷ்யாமின் கரம் கொடியென படர்ந்து அவளை நிமிர்த்தியது.
அவன் கைவளைவுக்குள் இருந்தபடியே அவனது தோளை கவலையாய் பார்த்த அதே நொடி ஷ்யாம் அவளுக்கு வேறு எங்காவது அடிப்பட்டு இருக்கிறாதா என்று ஆராய்ச்சியாக பார்த்தான்.
இவர்கள் இருவரது பார்வை பரிமாற்றத்தை அந்த பக்கமாக நடந்து சென்ற மோகனா, பிரியங்கா காதல் பரிமாற்றமாக புரிந்துக் கொண்டு மோவாயில் கைவைத்து அவர்களையே பார்த்தனர்.
“ஆர் யூ ஓகே மான்யா?” ஷ்யாமின் கேள்விக்கு தலையாட்டியவள், “என்னை பிடிக்க போய் உங்க தோள்பட்டைக்கு பெயின் வந்துடுச்சா?” என்றாள் கவலையாக.
“நோ” என்று மறுத்தவனின் அலைப்பேசி ஒளிர்ந்தது.
அகிலிடமிருந்து தான் குறுஞ்செய்தி. “அனஸ்தீஷியா கொடுத்தாச்சு” என்ற தகவல் வரவும் மான்யாவின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு ஆப்பரேட்டிங் ரூமிற்கு விரைந்தான்.
இணைந்து இருந்த அவர்கள் இருவரது கையைப் பார்த்து மீண்டும் அதிர்வில் மோகனாவும் பிரியங்காவும் வாயைப் பிளந்தனர்.
இங்கே ஆப்பரேட்டிங் ரூம் அருகே விஷ்வக்கும் தயாராய் நின்றுக் கொண்டிருக்க மூவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்தனர்.
ஸ்வேதா மயக்க நிலையில் அந்த டேபிளின் மேலே படுத்துக் கிடந்தாள்.
எங்கே சர்ஜரி செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் மட்டும் கோடு வரைந்த மான்யா, மீதி இடத்தில் பச்சைத் துணியை விரித்துவிட்டு அகிலை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“வைட்டல்ஸ் ஸ்டேபிளா இருக்கு. நீங்க சர்ஜரி ஸ்டார்ட் பண்ணலாம் மான்யா” அகில் அனுமதி தந்ததும் கையில் ஸ்கேபிலை எடுத்தாள்.
“ஆல் தி பெஸ்ட் மான்யா” ஒரே நேரத்தில் ஷ்யாமும் விஷ்வக்கும் சொல்ல மெல்லிய தலையாட்டலால் அங்கீகரித்தவள் சர்ஜரியை செய்ய துவங்கினாள்.
அவளுக்கு அசிஸ்டென்டாக நின்று கொண்டிருந்த விஷ்வக் அவளுடைய அடுத்த அசைவை முன்பே கணித்து தயாராக அவளுக்கு எல்லாமே எடுத்துக் கொடுத்தான்.
ஷ்யாம் அவளது ஒவ்வொரு நகர்விலும் அவளை நொடிக்கு நொடி சீர் செய்து கொண்டிருக்க மான்யா பதற்றமே இல்லாமல் அந்த லிவ்வர் சர்ஜரியின் பெரும் பகுதியை முடித்திருந்தாள்.
ஆனால் மீதமிருக்கும் ஒரு பகுதி கேன்சர் செல்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க அந்த சவ்வுப் பகுதி மிக மெல்லியதாக இருந்தது.
அதை இழுத்து தைக்கும் போது கிழிய நிறைய வாய்ப்பிருக்கிறது. மான்யா கலக்கமாக நிமிர ஷ்யாம், “நம்பர் சிக்ஸ் சர்ஜிகல் ஸ்டிரிங் யூஸ் பண்ணு” என்றதும் அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.
இந்த அளவுக்கு செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்று இவன் முன்பே கணித்து இருக்கின்றானே.
அதனால் தான் அன்று அந்த மெல்லிய நூலிழையை வைத்து முடிச்சு போட கற்றுக் கொடுத்தானா?
அவனையே ஆச்சர்யமாக பார்த்தவள் அந்த மெல்லிய ஸ்டிரிங்கை கையில் எடுத்தாள்.
ஒவ்வொரு முடிச்சையும் போட்டவளின் இதயத்தில் அன்றைய நாளின் நினைவின் ஊஞ்சல்.
அன்று போல இன்றும் ஷ்யாம் பின்னிருந்து அவள் கையைப் பிடித்து தையல் போடுவதாய் கற்பனை செய்தவளுக்குள் தைரியம் ஊற்றெடுக்க வேக வேகமாய் ஸ்வீட்சர் செய்து முடித்தாள்.
விஷ்வக்கின் முகத்தில் மெச்சுதல். “வெல்டன் மான்யா” என்று சொல்ல அவளின் பார்வை ஷ்யாமின் முகத்தையே ஆராய்ந்தது, பாராட்டின் சின்னம் தெரிகிறதா என்று.
ஆனால் அவன் கவனம் முழுக்க குட்டி என்ஜினியரின் மீது தான்.
“அகில் வைட்டல்ஸ்லே எந்த சேன்ஞ்ம் இல்லை தானே. லங்க்ஸ்லே எனி மால்ஃபன்ஷன் நோட்டிஸ் பண்ணீங்களா? ஸ்டேபில் பண்ணிடலாமா? ” எனக் கேட்க அகில் பதில் சொல்ல வருவதற்கு முன்பு ஸ்வேதாவின் ஆக்ஸிஜென் லெவலில் சட்டென பெரும் மாற்றம்.
அதுவரை சர்ஜரி நன்றாக முடிந்துவிட்டதாக நினைத்து நிம்மதி பெருமூச்சுவிட்ட மான்யா, விஷ்வக் முகத்தில் பெரும் கலக்கம்.
“லங்க்ஸ் மால்ஃபன்ஷன்” பதற்றத்தில் தந்தடியடித்தது மான்யாவின் உதடுகள்.
ஷ்யாமின் முகத்தில் பதற்றமில்லை. சலனமில்லை.
சர்ஜரி செய்த இடத்தையே உற்று நோக்கியவன், “ஆர்.எஸ்.ஐ கிட் எடுங்க. இன்டூபேட் பண்ணனும். மறுபடியும் பீரீத் பண்ண முடியாம உடம்பு தூக்கிப் போட்டா ஸ்டிட்சஸ் பிரிய சான்சஸ் இருக்கு” என்றவன் வேகமாக ஸ்வேதாவிற்கு ஆர்டிஃபிஷியல் ரெஸ்பிரேடரை பொறுத்திவிட்டு நிமிர்ந்தான்.
திகைத்து நின்ற மான்யாவை நோக்கி, “நவ் ஃப்ரீத்தீங் இஸ் நார்மல். ஸ்டேப்பிலர் பண்ணு சீக்கிரமா” என்றதும் அவள் வேக வேகமாக ஸ்டேபில் செய்தாள்.
“அகில் நீங்க பேஷன்டை ஹைபிரிட் ரூம்க்கு மாத்திட்டு வைட்டல்ஸ் தொடர்ந்து மானிட்டர் பண்ணுங்க. எனி எமெர்ஜென்சி கால் மீ” என்று சொன்னவன் “தேங்க்ஸ் ஃபார் தி க்ரேட் ஹெல்ப் விஷ்வக்” என்றான் புன்னகையுடன்.
ஆனால் ஷ்யாமின் வார்த்தைகள் தன் காதில் விழாதது போல விஷ்வக் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
‘என்னிடம் பேசிவிடமாட்டாயா?’ என்ற கேள்வியை தாங்கியிருந்த ஷ்யாமின் விழிகளை தவிர்த்து செல்வது விஷ்வக்கிற்கு பெரும் சவாலாக இருந்தது.
ஆனாலும் தன்னை அத்தனை பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியவனை அத்தனை எளிதில் மன்னிக்க அவனால் முடியவில்லை.
குறைந்தபட்சம் இன்றிரவு வரையாவது மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் பதில் பேசாமல் வெளியே சென்றுவிட்டான்.
அவன் சென்ற திசையையே பெருமூச்சோடு பார்த்தவன் அந்த அறையை விட்டு வெளியேறி தன் கையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த நேரம், பக்கத்து அறையிலிருந்து பேசிய ப்ரீத்தி, மோகனாவின் வார்த்தைகள் இவன் காதில் விழுந்தது. அதைக் கேட்டு இவனிடம் அப்பட்டமான ஸ்தம்பிப்பு.
“மோகனா நீ ஷ்யாம் சாரை மறந்துடு. மான்யா எப்பவோ அவரை மடக்கிட்டா. ஒரு மாசத்துக்குள்ளே ஷ்யாம் சாரை மடக்கிடுவேனு மான்யா சொன்னது உண்மை தான் போல” என்ற பிரியங்காவின் வார்த்தைகளைக் கேட்டு ஷ்யாமின் கைகள் இறுகியது.
விடாமல் வழிந்து கொண்டிருந்த தண்ணீர் அவன் கையிலிருந்த கிருமிகளை அழித்தது போல அவர்கள் விடாமல் பேசிய பேச்சு மான்யாவின் மீது அவன் வைத்த நன்மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துவங்கிவிட்டதோ?
இருள் கவிந்த அவன் முகத்தில் இருந்தது மான்யாவின் மீதான வஞ்சமா? இல்லை ஏமாற்றமா?