உடையாத(தே) வெண்ணிலவே 16b

உடையாத(தே) வெண்ணிலவே 16b

அசைவு!

சில சமயங்களில் பெரும் புயலே வந்தாலும் அசையாத இலைகள் சிறு மூச்சுக்காற்றின் பாரம் தாங்காமல் அசைந்து கொடுக்கும்.

அப்படி தான் அந்த மருத்துவமனை முகப்பு பூங்காவில் அமர்ந்து இருந்த மான்யா அத்தனை பெரிய ஊத காற்று மோதியும் கொஞ்சமும் அசைவில்லை.

அவள் மூளை ஸ்வேதாவின் ஆக்ஸிஜென் படபடவென குறைந்து போன அந்த கணமே உறைந்துப் போய்விட்டது.

வெற்றிகரமாக முடிந்துவிட்டது என நினைத்த மாத்திரத்தில் இப்படியொரு பின்னடைவை அவள் எதிர் பார்க்கவில்லை.

ஷ்யாம் மட்டும் இல்லையென்றால் அந்த சிக்கலான தருணத்தை இத்தனை எளிதில் சமாளித்து இருக்க முடியாது என்று உணர்ந்தவளின் உள்ளத்தில் நன்றியுணர்வு நிரம்பியது.

அருகிலிருந்த பூவைப் பார்த்தவள், “அப்பா, ஷ்யாம் பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கான் இல்லை. ஒரு குட்டி தேங்க்ஸ் சொல்லிட்டு வந்துடுறேன்” என்று எழுந்தவள் நேராக கேன்டீனை நோக்கி சென்றாள்.

நன்றியின் நிமித்தமாக  ஒரு சாக்லேட்டையும் கூல்டிரிங்க்ஸையும் வாங்கியவளின் கால்கள் ஷ்யாம் அறையின் முன்பு தயங்கி நின்றது.

ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் அவனுக்காக வாங்கிவிட்டாலும் அதை கொடுக்க முனையும் போது ஏதோ இடறல், ஏதோ நெருடல்.

‘ஒரு டாக்டரா என்னோட கடமையை செஞ்சதுக்கு எதுக்கு நீ எனக்கு நன்றி சொல்லணும் சாக்லேட் தரணும். என் கோபத்தை கிளறாம ஒழுங்கா எடுத்துட்டு போ இன்டெர்னு சொல்லுவான். அவன் கிட்டே போய் நோஸ் கட் வாங்கணுமா’ என்று  நினைத்தவள் வேகமாக திரும்பி செல்ல அடியெடுத்து வைத்தாள்.ஆனால் முழுவதாக அங்கிருந்து நகர மனம் முரண்டு பிடித்தது.

‘என் இன்ஜினியரோட உயிரை ஒரு இக்கட்டான சமயத்திலே காப்பாத்தி கொடுத்து இருக்கான். எப்படி தேங்க்ஸ் சொல்லாம இருக்கிறது’ என்று யோசித்தவள் மீண்டும் அறை கதவை தட்ட எத்தனித்தாள்.

‘ஆனால் அவன் இந்த சாக்லேட்டை வாங்காம போயிட்டா அவமானம் ஆகிடுமே. வேணாம் மான்யா போயிடு’ என நினைத்தவள் மீண்டும் திரும்பி செல்ல முனையும் போது அவளது அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

“என்ன இன்டெர்ன். என் ரூமுக்கு முன்னாடி நின்னு சடுகுடு ஆடிட்டு இருக்க?” என்ற கேள்வியைப் படித்ததும் அவள் விழிகளில் விரிவு.

‘இவன் எப்படி, அவன் கதவு முன்னாடி நான் நின்னுட்டு இருக்கேன்றதை கண்டுபிடிச்சான்?’ குழப்பத்தோடு எண்ணியவள் அன்று பார்த்ததைப் போல மீண்டும் ஒரு முறை திரும்பி சுற்றியிருந்த சி.சி.டி.வி கேமராவை திருதிருவென பார்த்தாள்.

மீண்டும் அவள் உள்பெட்டியில் ஷ்யாமிடமிருந்து குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

“நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல இன்டெர்ன். சிசிடிவி கேமாரவுலே மானிட்டர் பண்ற அளவுக்கு நீ வொர்த் இல்லைனு” என்ற குறுஞ்செய்தியைப் படித்ததும் அவள் மூக்குநுனி சிவக்க வேகமாக தன்னறைக்குள் நுழைந்தாள்.

‘சைக்கோ சைக்கோ. இவனுக்கு போய் தேங்க்ஸ் சொல்லலாம்னு நினைச்சேன் பாரு. கொழுப்பு கொழுப்பு உடம்பு எல்லாம் கொழுப்பு’ சப்தமாக முணுமுணுத்தாள்.

“யாருக்கு கொழுப்பு?” என்ற கேள்வியோடு விஷ்வக் உள்ளே நுழைந்தான்.

“வேற யாருக்கு எல்லாம் உன் சீனியர்க்கு தான்” என்றாள் நொடித்துக் கொண்டே.

“மான்யா என் சீனியர் நல்லவர். அவரை ஏன் நீ சும்மா சும்மா திட்டிட்டு இருக்க?” என்றவன் தனக்கும் ஷ்யாமிற்கும் ஏற்கெனவே இடையிலிருக்கும் மனஸ்தாபத்தையும் மீறி அவனுக்காக வக்காலத்து வாங்கினான்.

அதைக் கண்டு மான்யாவின் இதழ்களில் முறுவல்.

“பார்ரா என்ன தான் சீனியர் மேலே கோபமிருந்தாலும் அவருக்காக சப்போர்ட் பண்றியே. அந்த அளவுக்கா உன் சீனியரை ரொம்ப பிடிக்கும்?” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

“யெஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கு அம்மா அப்பா யாருமே இல்லை மான்யா. குறிப்பிட்டு சொல்ல போனா அனாதை. ப்ரெண்ட்ஸ்ம் அதிகமா இல்லை. ஆனால் சீனியர் மட்டும் தான் எனக்கு ஆதரவா இருந்தாரு, இருக்காரு. எந்த எதிர்பார்ப்பும் கைமாறும் நன்றிக்கடனும் எதிர்பார்க்காத உறவு கிடைக்கிறது சுலபமில்லை மான்யா. என் சீனியரை அத்தனை சீக்கிரம் விட்டுக் கொடுத்திட மாட்டேன்”  பரவசமாக சொன்னவனின் முகத்தில் மெல்ல நெகிழ்வு படர்ந்தது.

“அப்புறம் ஏன் இன்னும் உன் சீனியர் மேலே கோவமா இருக்க?” என்றவளின் கேள்விக்கு “அது வேற டிபார்ட்மெண்ட்” என்றான் கண்ணடித்துக் கொண்டே.

“ஆனால் விஷ்வக், நீ இப்பவே உன் சீனியர் கிட்டே பேசுறது தான் சரினு எனக்கு படுது.  அவர் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றாரோனு தோணுது” மான்யா சொல்லவும் விஷ்வக்கின் முகம் கலவரமானது.

“எப்படி சொல்ற மான்யா?” என்ற கேள்விக்கு மான்யா நேற்று நடந்த விஷயங்களை விவரிக்கவும் விஷ்வக்கின் முகத்தில் வாட்டம்.

“ஏன்னு தெரியலை மான்யா. அந்த ஒரு கேள்வியை கேட்டா மட்டும் சீனியர் டக்குனு நொடிஞ்சு போயிடுவார்” வருத்தமாக சொன்னவன் “நான் ஷ்யாமைப் பார்த்துட்டு வந்துடுறேன்” என்றவன் அவசரமாக ஷ்யாமின் அறையை நோக்கி சென்றான்.

அங்கே சிலையென சமைந்திருந்தான் ஷ்யாம். அவன் முகத்தில் ஏகப்பட்ட கவலை கோடுகள், யோசனை முடிச்சுகள்.
“ஷ்யாம்” என்று விஷ்வக் குரல் கொடுக்க நொடிப் பொழுதில் ஷ்யாம் முகம் மலர்ந்தது.

“வாடா விஷ்வக். என் மேலே இருந்த கோபம் போயிடுச்சா?” அந்த கேள்வியைத் தவிர்த்தவன், “என்னாச்சு ஷ்யாம் ஏன் டல்லா இருக்க?” கவலையோடு எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

“தெரியலைடா. ஏனோ எனக்கு பிடிச்சவங்க எல்லாரும் என்னை விட்டுட்டு தூரமா போறா மாதிரி இருக்கு” ஷ்யாமின் குரலில் விரிசல் விட்டிருந்தது.

“அதெல்லாம் எதுவும் இல்லை சீனியர். ஏன் இப்படி யோசிக்கிறே. நான் இல்லையா உனக்கு?” என்று கேட்க அவன் முகத்தில் கவலை சூழ்ந்தது.

“நீயும் அந்த மான்யா வந்த அப்புறம் தானே என் கூட சண்டை போட ஆரம்பிச்சு இருக்க. எனக்கு பிடிச்சவங்க எல்லாரையும் எனக்கு எதிரா திருப்பி விடுறா” அந்த குற்றச்சாட்டிற்கு விஷ்வக் மறுத்து பேச வரும் முன்பே ஷ்யாமின் முகம் ரௌத்திரத்தை பூசியிருந்தது.

“அன்பு அன்புனு பேசி மனுஷனை டார்சர் பண்றாடா. எந்த அன்பை வைச்சு என்னை தோற்கடிக்க நினைக்கிறாளோ அதே ஆயுதத்தை வெச்சு நானும் ப்ளே பண்ணா  அவள் தாங்குவாளா? பார்க்கிறேன் தாங்குறாளானு”

ஷ்யாம் கோபத்தில் வார்த்தையை விடுகிறானா? இல்லை உள்ளே வஞ்சத்தை உள்ளே வைத்து சொல்கிறானா என்பதை விஷ்வக்கால் முழுமையாக  புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. மான்யா ஷ்யாமிடம் இனி கவனமாக இருக்க வேண்டும் என.

💐💐💐💐💐💐💐

ஆழ்ந்த மயக்கத்திலிருந்த ஸ்வேதாவையே அருகில் அமர்ந்து கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள் மான்யா.

பில்டிங் ப்ளாக்ஸால் கட்டப்பட்ட அந்த குட்டி மதுரா மருத்துவமனையை கவனமாக எடுத்துக் கொண்டு வந்து ஸ்வேதாவின் படுக்கைக்கு முன்னே வைத்தாள்.

அந்த குட்டி, கட்டி முடித்த கட்டிடத்தைப் பார்த்து விழிப்பதற்காக மான்யா செய்த ஏற்பாடு அது.

“இன்ஜினியர், உன்னை காப்பாத்திட்டோம்டா. இனி நீ பெரிய பெரிய பில்டிங்ஸ் கட்டலாம்” அவள் ஆதூரமாய் கைகளைப் பற்றிய படி பேசிக் கொண்டிருக்க ஸ்வேதாவின் அன்னை  லஷ்மியின் முகம் மலர்ந்தது.

“டாக்டர் உண்மையை சொல்லணும்னா இந்த சர்ஜரியை ஒரு இன்டெர்ன் தான் பண்ண போறாங்கனு சொன்னதும் ரொம்ப பயந்தேன். ஆனால் ஷ்யாம் சார் உங்களைப் பத்தி அவ்வளவு நம்பிக்கையா சொன்னாங்க. அவர் நம்பிக்கை வீண் போகலை” என்றவரின் வார்த்தைகள் அவள் விழிகளை விரிக்க வைத்தது.

“ஷ்யாம் சாரா அப்படி சொன்னாரு?” உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கேட்டாள்.

“ஆமாம் மா. அவர் முதலிலே சர்ஜரிகான ரிஸ்க் பத்தி எடுத்து சொல்லவும் ரொம்ப பயந்தேன். அவர் கிட்டேயே நீங்க என் நிலைமையிலே இருந்தா உங்களோட முடிவு என்னவா இருக்கும்னு கேட்டேன்” அவர் சரியான நேரத்தில் இடைவெளி விட,  “என்ன சொன்னாரு?” ஆர்வம் தாங்காமல் கேட்டாள் இவள்.

“வேற யாராவதுனா கொஞ்சம் தயங்கி இருப்பேன். ஆனால் மான்யா பண்றதா இருந்தா கண்டிப்பா ஒத்துப்பேன். பிகாஸ் ஷீ இஸ் பர்ஃபெக்ட். என்ன கொஞ்சம் ஆர்வ கோளாறு அதை மட்டும் பக்கத்துலே இருந்து தட்டி நான் சரி பண்ணிடுவேனு சொன்னாரு டாக்டர்” லஷ்மியின் வார்த்தைகளைக் கேட்டு மான்யா வானத்தில் பறக்காத குறை.

இதுவரை ஷ்யாம் அதட்டி உருட்டி தான் பார்த்து இருக்கின்றாள்.

ஆனால் அவன் தன் மனதில் தன்னை இத்தனை நம்பிக்கைக்குரியவளாக வைத்து இருக்கிறான் என்பதை அறிந்ததும் அவள் விழிகள் ஆனந்தத்தில் நீரை கசியவிட்டது.

“நீங்க என் பொண்ணோட உயிரை திருப்பி கொடுத்த கடவுள்மா. ரொம்ப நன்றி டாக்டர்” ஸ்வேதாவின் அன்னை கண்ணீரோடு சொல்ல மான்யாவின் வேர்கள் நெகிழ்ந்தது.

“எதுக்குமா பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க” சின்ன புன்னகையோடு சொன்னவளின் உள்ளத்திலோ எதையோ சாதித்த உணர்வு.

அவன் அத்தனை குறை சொல்வது தன்னை நோகடிக்க அல்ல தன்னை மெருகேற்ற தான் என்பதை லஷ்மியின் வார்த்தைகளில் முழுமையாக உணர்ந்தாள்.

தன்னை நம்பி இத்தனை பெரிய சர்ஜரியை கொடுத்த ஷ்யாமிற்கு நன்றி சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதை உணர்ந்தவள் இந்த முறை தயக்கமின்றி அறைக் கதவை தட்டினாள்.

உள்ளே நுழைந்தவளை அவன் கேலி பார்வை வரவேற்றது.

“பரவாயில்லையே இந்த முறையும் சடுகுடு ஆடிட்டு அப்படியே போயிடுவேனு நினைச்சேன். ஆனால் நேரா உள்ளே வந்துட்டியே” என்றான் நக்கலாக.

எப்போதும் போல அவன் கேலியில் இந்த முறை அவள் மனம் உடையவில்லை.
“தேங்க்ஸ் எ லாட்” என்றாள் மனம் நிறைந்த புன்னகையுடன்.

“எதற்காக?” என்றான் இவன் கேள்வியாக.

“என்னை நம்புனதுக்காக” என்று சொன்னபடி அவனிடம் ஒரு சாக்லேட்டை நீட்டினாள்.

ஷ்யாமின் பார்வை கேள்வியாக அவள் மீது விழுந்தது.

“தேங்க்ஸ் ஃபார் தி சப்போர்ட்” என்றிவள் சொல்லியபடி சாக்லேட்டை நீட்ட முதலில் தயங்கிய ஷ்யாமின் கண்கள் பின்பு எதையோ கணக்கு போட்டு நிமிர்ந்தது.
அவளை விட பெரியதாக புன்னகைத்தவன், “மை சப்போர்ட் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ இன்டெர்ன்” என்றான் ஒரு வித குரலில்.

அந்த குரலின் வேறுபாட்டை பிரித்து அறியாத மான்யா, “என்னை நீங்க நம்புவீங்கனு நான் எக்ஸ்பெக்டே பண்ணலை. உங்களோட நம்பிக்கையை இனி நான் அழிக்க மாட்டேன்” என்றவளின் குரலில் சந்தோஷ ரேகை.

அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி அவன் இதயத்தில் அந்த நர்ஸ் இருவரும் பேசிய பேச்சு துல்லியமாக ஒலிக்க மனமோ எரிதழலாக தகித்தது.

“யெஸ் மான்யா நீ என் நம்பிக்கை அழிக்காதவ தான். ஐ நோ யூ” அவன் ஒரு வித கொதிப்போடு சொல்ல அதை அறியாத மான்யாவின் இதயத்தில் சிலிர்ப்பு.

முதன் முறையாக மான்யாவின் இதயத்தில் அன்பின் விதை ஊன்றிய இதே நாளிலே தான் அங்கே ஷ்யாமின் இதயத்தில் காலம் வெறுப்பின் விதையை தூவ வேண்டுமா!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!