உடையாத(தே) வெண்ணிலவே 25

தொற்று!

சில நேரங்களில் அது நேசத் தொற்றாக. சில நேரங்களிலோ உயிரையே அழிக்கும் வாதையின் தொற்றாக.

விஷ்வக் கையிலிருந்த காகிதத்திலிருக்கும் தொற்றின் முடிவு இதில் எந்த விதமோ?

உலகையே உலுக்க தொடங்கியிருந்த கொடிய கொரானா வைரஸ் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த எமெர்ஜென்சி அறையில் ஒரு நோயாளிக்கு தொற்றியிருந்தது.

அந்த அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிறருக்கும் பரவிவிடக் கூடியதிற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாய் இருப்பதை உணர்ந்த மருத்துவ நிர்வாகம், உடனே அந்த அறையிலிருந்த நோயாளிகளை  தனிமைப்படுத்திவிட, அவர்களுக்கு மருத்துவராக விஷ்வக் உள்ளிருந்துவிட்டான்.

விஷயம் அறிந்து மீரா பதற்றமாய் வந்த நேரம் அந்த அறையின் கண்ணாடி கதவுகள் மருத்துவ ஊழியர்களால் இறுக்கமாக மூடப்பட்டது.

உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தனியொருவனாக அங்கிருந்தவர்களை கவனித்து கொண்டிருந்த விஷ்வக்கைக் கண்டு அவள் நாசியின் மீது உடைந்து விழுந்தது காதலின் முதல் கண்ணீர்த்துளி.

வேகமாக கதவைத் திறக்க முயன்றாள், ஆனால் முடியவில்லை.

நிமிர்ந்து பார்க்க, மறுபுறம் விஷ்வக் கதவின் மறுபுறத்தை இறுக்கமாக பிடித்திருந்தான்.

“கையை எடுங்க விஷ்வக். நான் உங்களுக்கு துணையா பக்கத்திலே இருக்கணும்” என்றாள் கண்ணீர் மல்க. ஆனால் விஷ்வக்கின் விரல்களில் அசைவில்லை.

“நமக்குள்ளே இருக்கிறது டாக்டர், நர்ஸ் ரிலேஷன்ஷிப் தானே. அப்புறம் ஏன் இவ்வளவு துடிக்கிறீங்க மிஸ் மீரா” என்றான் உணர்ச்சி ஒட்டாத குரலில்.

“ப்ளீஸ் விஷ்வக். என்னை விடுங்க” அவள் கெஞ்சும் போதே அவனிடம் லேசான இருமல். அதைக் கண்டு பதறியவள் “ஆன்டிபயோடிக்ஸ் அன்ட் விட்டமின்ஸ் டேப்லேட் எடுத்திங்களா” என்றாள் வேகமாக.

“அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு மிஸ்.மீரா. ஹாஸ்பிட்டெலிலே பர்சனல் ஃபீலிங்க்ஸ் காமிக்கக்கூடாதுல, போங்க போய் உங்க வொர்க்கை பாருங்க” அவள் வார்த்தையை வைத்தே அவளை குத்தினான்.

கலங்கிப் போய் பார்த்தவள், “இந்த ஹாஸ்பிட்டலிலே தானே இரண்டு எமோஷன்ஸேயும் மிக்ஸ் பண்ணக்கூடாது, இதுவே நான் வேற ஹாஸ்பிட்டெலுக்கு போயிட்டா நாம லவ் பண்ண தடையில்லை தானே.” அவளின் வார்தைகளால் விஷ்வக்கின் இதய அறையில் மிருதங்க தாளங்கள்.

“மீரா யூ மீன்?” வார்த்தைகள் அகப்படாமல் சிக்கித் தவித்தான்.

“யெஸ் ஐ மீன் இட் விஷ்வக். நான் நேத்தே ரெசிக்னேஷன் லெட்டரை டாக்டர் வெங்கட்ராம் கிட்டே கொடுத்திட்டேன்”

அவள் முடிவு ஆனந்த அதிர்ச்சியில் அவனை தள்ள, “ப்ளீஸ் இப்பயாவது என்னை உள்ளே விடுங்க” என்றாள் கெஞ்சலாக.

அவளின் கெஞ்சலையும் கொஞ்சலையும் சமாளித்து உள்ளே வரவிடாமல் தடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு.

இங்கோ சர்ஜரியை முடித்துவிட்டு வெளியே வந்த மான்யாவிற்கும் ஷ்யாமிற்கும் கொரானா பாதிக்கப்பட்ட அறையில் விஷ்வக் இருக்கின்றான் என்று தெரிவிக்கப்பட இருவரும் பதறிப் போய் அங்கே ஓடினர்.

இவர்கள் வந்ததை கவனிக்காமல் விஷ்வக் உள்ளே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தான்.

ஒரே ஒரு மருத்துவனாக உள்ளே விஷ்வக் மட்டும் திணறிக் கொண்டிருப்பதை கண்ட மான்யா, வேகமாக உள்ளே நுழையப் போனாள்.

அவள் கரங்களை ஷ்யாம் அழுத்தமாக பிடிக்கவும் “கையை விடுங்க” என்றாள் தீர்க்கமாக.

“உன்னை உள்ளே போக விடமாட்டேன்” அதே தீர்க்கம் அவனிடமும் இருந்தது.

நெருங்கி வந்து அவன் முகத்தை கூர்ந்துப் பார்த்தவள், “ஓ என் மேலே லவ்வா? அதான் பிடிச்ச கையை விடாம பேசுறீங்களோ?” அந்த கேள்வி அவனை மௌனியாக்கியது.

“இப்படி கையைப் பிடிச்சு நிறுத்த நான் ஒன்னும் உங்க லவ்வர் இல்லையே. என்னை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” குத்தலாய் கேட்டுவிட்டு உள்ளே சென்றவளின் இறுதி வார்த்தைகள் அவன் இதயத்தில் கூரிய கடப்பாரையை இறக்கியது.

அவள் சென்ற திசையின் விளிம்பைப் பார்த்தவன் ஒரு முடிவோடு வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல முயன்றான், ஆனால் அவனுக்கு இடையூறாக வெங்கட்ராம்.

“என்ன பண்ண போற ஷ்யாம். இங்கே மீதமிருக்கிற ஒரே ஒரு சர்ஜன் நீ தான். நீயும் உள்ளே போனா யார் பேஷன்ட்ஸை பார்த்துப்பா. பர்சனெல் ஃபீல்ங்க்ஸை ப்ரொஃபஷனலா  கொண்டு வர ஆரம்பிச்சுட்டியா?” அவர் கேள்வி ஷ்யாமை கட்டிப் போட கையறு நிலையில்  மான்யாவைப் பார்க்க வைத்தது.

வெங்கட்ராமை கசந்த முறுவலோடு பார்த்துவிட்டு,”போகலை போதுமா” என்றான் ஆத்திரமாக. வெங்கட்ராம் வெற்றிப்புன்னகையுடன் சென்றுவிட ஷ்யாமின் பார்வை மான்யாவை சுற்றியே வந்தது.

கிட்டத்தட்ட பதினான்கு நாட்களாக அந்த கண்ணாடி கதவுக்கு வெளியில் தவித்தபடி நின்று கொண்டிருந்த ஷ்யாம் சித்தார்த்தை கண்டு, அவள் முகத்தில் புன்னகை.

தவிப்பானாம், எனக்காக கவலைப்படுவானாம், என்னையே விழியகலாமல் பார்ப்பானாம், ஆனால் காதல் மட்டும் இல்லையாம்!

‘அடேய் ஷ்யாம் சித்தார்த், இறுக கட்டிய உன் இதய கயிற்றை அணு அணுவாக அறுக்கிறேன் பார்’ சவாலாக நினைத்தவள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவளையே அங்குல அங்குலமாக விழிகளால் அளவிட்டவனை கண்டு “ஹலோ என் சீனியரா இருந்துட்டு சைட் அடிக்கிற வேலை எல்லாம் என் கிட்டே வேணாம்” கை நீட்டி அவள் எச்சரிக்க, அவன் முகத்தில் சுணக்கம்.

“பட், லவ்வரா சைட் அடிச்சா எனக்கு நோ அப்ஜெக்ஷன்” குறும்பாய் இம்முறை கண் சிமிட்டினாள்.

அவள் வார்த்தைகளைக் கேட்டு விழிகளில் புன்னகையேற, “நீ ஃபைன் தானே இன்டெர்ன்” என்றான் மருகலாக.

“நீங்க உண்மையை சொல்ற வரை ஐ யம் நாட் ஃபைன்” கைவிரித்து சொல்லிவிட்டு சென்றவளின் மீதிருந்து கஷ்டப்பட்டு விழியகற்றிய நேரம் அறை கதவைத் திறந்து கொண்டு விஷ்வக் வெளியே வந்தான்.

“நல்லா இருக்கியாடா?” ஷ்யாமின் அக்கறையான கேள்விக்கு எங்கோ பார்த்தபடி விஷ்வக் தலையாட்டினான்.

இன்னும் மான்யா விஷயத்தில் அவனுக்கு கோபம் போகவில்லை என்று உணர்ந்த ஷ்யாம் “நான் எது பண்ணாலும் ஒரு காரணம் இருக்குனு உனக்கு தெரியும்ல விஷ்வக்?” அவன் கைகளை இறுகப் பிடித்து கேட்டான்.

விஷ்வக்கின் தலை தன்னை மீறி ஆமோதிப்பாய் ஆடியது.

“மான்யாவை கஷ்டப்படுத்தக்கூடாதுனு தான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன் விஷ்வக். ப்ளீஸ் நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிடாதே” அவன் குரலில் அப்பட்டமான தவிப்பு.

இதுவரை தன் சீனியர் இப்படி கலங்கி விஷ்வக் பார்த்ததேயில்லை. சட்டென்று ஷ்யாமின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்ட நேரம் நர்ஸ் ப்ரீத்தி வந்து நின்றாள்.

“நீங்க வெளியே வந்ததும் தன் டேபிள் மேலே இருக்கிற சர்ஜரி ஃபைல்ஸ் எடுத்துட்டு மீட்டிங்கு வர சொல்லி வெங்கட்ராம் சார் சொன்னாரு” என்றதும் விஷ்வக்கின் கால்கள் அவர் அறையை அடைந்தது.

அன்றைய மாதத்தில் அவர்கள் சமாளித்த சவாலான சர்ஜரி நுணுக்கங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் மீட்டிங் அது.

அதற்கு தேவையான டாக்குமெண்ட்ஸை வெங்கட்ராமின் மேஜையிலிருந்து எடுத்த போது கை தவறி சில காகிதங்கள் பறந்து போய் இடுக்கில் விழுந்தது.

அதை எடுக்க கீழே குனிந்தவனின் கைகளில் அகப்பட்டதோ ஒரு பழைய செய்தித்தாளின் துணுக்கு.

புருவமுடிச்சோடு அந்த காகிதத்தை திருப்பியவன் கண்கள், அதிலிருந்த

செய்தியைக் கண்டு கடுங்கோபத்தில் துடித்தது.

‘எவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை எளிதாக மறைத்து என்னை முட்டாளாக்கிவிட்டார்களே!’

ஷ்யாம் இத்தனை நாள் தன் மீது காட்டிய அன்பு எதையும் எதிர்பார்க்காத நேசம் அல்ல என்று உணர்ந்தவனுக்குள் இடி இறங்க அவன் முகம் தீயாய் தகித்தது.

வேகமாக வெங்கட்ராமன் மேஜையிலிருந்த பொருட்களை ஆராய அவன் கைகளுக்கு வரிசையாய் புகைப்படங்கள் அகப்பட்டது.

ஒன்று வெங்கட்ராம், மீனாட்சியம்மாளின் தோளில் கைப்போட்டபடி ஷ்யாமுடன் நிற்கும் சிறு வயது புகைப்படம்.

இன்னொன்று வெங்கட்ராமன் தன் இன்னாள் மனைவி மற்றும் மீராவுடன் இணைந்து நிற்கும் புகைப்படம்.

ஆக ஷ்யாம், வெங்கட்ராமனின் மகன். மீரா, ஷ்யாமின் தங்கை.

‘எவ்வளவு சூட்சமமாக நடித்து என்னை ஏமாற்றி இருக்கிறார்கள்?’ ஆத்திரமாக நினைத்த நேரம் உள்ளே வந்த ஷ்யாம்,”இன்னும் மீட்டிங் வரலையா?” என்றான் கேள்வியாக.

ஷ்யாமையே வெறுப்பாக பார்த்தவன் கோபமாக அந்த புகைப்படங்களை விசிறியடித்துவிட்டு செய்தித்தாளை நீட்டினான்.

“குடும்பமா சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்கிங்கள்ல?” விஷ்வக் கர்ஜனையாய் கேட்க ஷ்யாம் தடுமாறினான்.

“விஷ்வக் ப்ளீஸ்டா. நான் சொல்ல வரதை கேளு” என்றான் அவசரமாக.

“இதுக்கு மேலேயும் உன்னை நம்ப நான் முட்டாளா ஷ்யாம். இந்த ஹாஸ்பிட்டலிலே ஒரு நொடி கூட இனி இருக்க மாட்டேன்” கோபமாய் சொல்லிவிட்டு கதவை திறக்க, எதிரே மீரா.

அவள் பின்னே நின்ற மான்யா, விஷ்வக்கின் கோபமுகத்தைக் கண்டு குழப்பமான பொழுது “வாங்க ஷ்யாமோட தங்கச்சி மீரா” என்றான் கசந்த முறுவலோடு.

அவன் வார்த்தைகள் மீராவையும், மான்யாவையும் ஒரு சேர திகைக்க வைக்க விஷ்வக்கோ மீராவை ஒருவித வெறுப்போடு பார்த்தான்.

“உன்னை நம்பினேன் மீரா. ஆனால் நீயும் என்னை ஏமாத்திட்டல்ல? இனி என் முகத்திலே எக்காரணம் கொண்டும் முழிக்காதே” கோபமாய் சொல்லிவிட்டு சென்ற விஷ்வக்கின் பின்னால் மான்யா செல்ல , மீராவோ அவன் குற்றச்சாட்டில் நின்ற சிலையாகிப் போனாள்.

அவள் தோளை வாஞ்சையாக பிடித்த ஷ்யாமின் குரலில் முறிவு. “எது நடக்கக்கூடாதுனு பயந்தேனோ அது கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சுடுச்சு மீரா” என்றான் கலக்கமாக.

“எனக்கு எதுவுமே புரியலை அண்ணா. ஏன் விஷ்வக் என் மேலே கோபமா போறாரு?” கண்ணீரோடு கேட்டவளின் கைகளை ஆதூரமாக பிடித்தவன் அந்த செய்தித்தாளிலிருந்த அனைத்தையும் சொல்லி முடிக்க அவள் விழிகளில் கண்ணீர்திரள்.

“நீ இப்படி உடைஞ்சு போயிடக்கூடாதுனு தான் விஷ்வக்கை விட்டு தள்ளியிருக்க சொல்லி மறைமுகமா எச்சரிக்கை பண்ணேன் மீரா. ஆனால் எல்லாம் இப்போ கை மீறிப் போயிடுச்சு” அவன் முகத்தில் வருத்தப்புயல்.

“நான் என்ன அண்ணா தப்பு பண்ணேன், நம்ம அப்பாவுக்கு மகளா பிறந்தது தவிர… அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?” கேவலோடு கேட்டவளை ஷ்யாம் மொழியற்று பார்த்தான்.

தன் அறைக்கு வந்த விஷ்வக்கோ கோபத்தில் கையிலிருந்த  செய்தித்தாளை விசிறியடித்தான். அது பறந்துப் போய் அவன் மேஜைக்கு அடியில் புகுந்த நேரம் மான்யா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள், “என்ன ஆச்சு?” என்ற கேள்வியோடு.

 

“ப்ளீஸ் மான்யா என் கிட்டே எதுவும் கேட்காதே. நான் ஆர்மி கார்ப்பா ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்த இடத்திலே ஒரு நிமிஷம் கூட இனி இருக்க மாட்டேன்” வேகவேகமாக சொன்னவன் சற்றே நிதானித்து, “உன்னை இனி ரொம்ப மிஸ் பண்ணுவேன்” கண்ணீர் குரலில் சொன்னவனின் கை அவள் தலையை வாஞ்சையாய் கோதியது.

நேற்று வரை செல்ல தயங்கி கொண்டிருந்தவன் இப்போது திடீரென்று செல்வதாக சொல்கிறானே! இது நிச்சயம் சரியில்லை.

விஷ்வக்கின் இந்த முடிவை மாற்ற ஷ்யாம் ஒருவனால் மட்டுமே முடியும் என்று தோன்ற வேகமாக அவனிடம் விஷயத்தை சொல்ல அடுத்த நொடி இருவரும் விஷ்வக் அறையில். ஆனால் அதுவோ இப்போது மிக வெறுமையாய்.

அவன் மேஜையில் சிம் கார்டை கழற்றி வைத்துப் போய் இருக்க இனி அழைத்துவிடாதே என்ற செய்தி அதில் மறைந்து கிடந்தது.

ஷ்யாம் பதற்றமாய் வெளியே வர விஷ்வக் வேகமாக காரை எடுத்தான்.

“நில்லுடா” கத்தியபடி ஷ்யாம் ஓட, அவன் பின்னாலேயே கால் கொலுசு அவிழ மான்யாவும் சாலையில் ஓடினாள்.

ஆனால் இவர்கள் நெருங்கும் முன்பே விஷவக்கின் கார் மருத்துவமனையை விட்டு சாலையில் வழுக்கிக் கொண்டு மறைந்துப் போனது.

கண்ணீர் மல்க சாலையில் ஸ்தம்பித்து நின்ற ஷ்யாமை மருத்துவமனை முகப்பு பூங்காவிற்கு அழைத்து வந்து ஆதரவாய் அவனை தாங்கிப் பிடித்தாள்.

அவள் ஸ்பரிசம் பட்ட அடுத்த கணமே அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டான். அவன் உடல் எதையோ அஞ்சி நடுங்கி கொண்டிருக்க, அவன் முதுகை வருடிக் கொடுத்தவள் “ஏன் விஷ்வக் கோவமா போனாரு” என்றாள் மெதுவாக.

“ப்ளீஸ் இன்டெர்ன் எந்த கேள்வியும் கேட்காம என்னை அணைச்சுக்கோயேன். ஐ நீட் யூ நவ்” என்றான் தவிப்பாக.

அதன் பின்பு மான்யா ஒரு வார்த்தை பேசவில்லை, அவன் நடுக்கம் நிற்கும் வரை தலையை இதமாக கோதி அமைதிப்படுத்தியவளின் பார்வை ஏதேச்சையாக தன் பாதத்தின் மீது விழுந்தது.

ஷ்யாம் ஆசையாய் பரிசளித்த கொலுசு அவள் கால்களில் இப்போதில்லை. சுற்றி முற்றி தேட, சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்டு வேகமாக ஓடிப் போனாள்.

தன்னை விலக்கிவிட்டு செல்பவளை குழப்பத்துடன் பார்த்தவனின் முகம், எதிரில் கண்ட காட்சியில் சட்டென்று மாறியது.

கொலுசை குனிந்து எடுத்த மான்யாவை நோக்கி அதிவேகத்தில் ஒரு லாரி வந்து கொண்டிருக்க, “மான்யா” என்று வேகமாக கத்தினான்.

ஆனால் அவன் குரல் அவளை அடையும் முன்பே கொலுசையும் அவளையும் சேர்த்தே நசுக்கிவிட்டு சென்றது அந்த வாகனம்.

ஷ்யாமின் கண்கள் அதிர்ச்சியில் தெறிக்க “இன்டெர்ன்” என்றான் பெருங்குரலெடுத்து.

ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தவளை வேகமாக மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடியவன் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கி கொண்டிருந்தவளின் கன்னத்தை தட்டினான்.

“இன்டெர்ன், நான் உன்னை காப்பாத்திடுவேன். நீ எதுக்கும் பயப்படாதே. உன் ஷ்யாம் உன் கூட தான் இருக்கேன்”  கண்ணீரோடு அவன் சொல்ல மான்யாவின் குரல் திக்கி திணறி வந்தது.

“நீங்க என்னை ஒரு பேஷன்டா, வெறும் மரக்கட்டையா பார்க்கிறதுலே எனக்கு விருப்பமில்லை. வேற யாரையாவது சர்ஜரி பண்ண சொல்லுங்க” அவளின் வார்த்தைகள் ஷ்யாமின் போலித்திரையை முற்றிலுமாக கிழித்துப் போட “மை இன்டெர்ன்” என்றான் கதறலாக.

“என்னை காதலிக்கிற தானே ஷ்யாம் இப்பவாவது ஒத்துக்கோயேன்” உயிர் போகும் நிலையிலும் தன் காதலுக்காக போராடியவளைக் கண்டு அவன் மனம் துடியாய் துடித்தது.

இதற்கு மேலும் இவளை வருத்துவது நியாயமில்லை என்று உணர்ந்தவன் ஒரு முடிவோடு அவளைப் பார்த்தான்.

“யெஸ், என் இன்டெர்னை நான் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்” என்றதும் அங்கிருந்த ஐஸ்வர்யாவும் மோகனாவும் வாய் பிளந்து ஷ்யாமைப் பார்த்தனர்.

“ஐ லவ் யூ இடியட் இன்டெர்ன். உன் கூட நிறைய சண்டை போட்டு உன்னை நிறைய இரிடேட் பண்ணணும். அதுக்காகவது சீக்கிரமா எழுந்து வந்துடேன்” கேவலோடு தன் கையைப் பிடித்து கதறியவனைக் கண்டு அவள் உதட்டில் அந்த நிலையிலும் புன்னகை பூத்தது.

அவனை வீழ்த்திவிட்டதற்கான புன்னகையா அது!