உதிரத்தின்… காதலதிகாரம்! முன்னோட்டம்

UKA-b149aa22

உதிரத்தின்… காதலதிகாரம்!

நாவலுக்கான அட்டைப் படத்தினைப் பார்த்து ஓரளவு கதையினை யூகிக்கலாம். 

சபாஷ்!

சரியாகவே உங்கள் யூகம் இருக்கும்னு நம்புவோம்!

வழமைபோல… காதலும் அது சார்ந்த வாழ்க்கையும்தான் இந்த நாவல். 

ஆனா, இந்தக் கதையில காதலை வழி மொழியவும் வாழச் செய்யவும், அதனை அசை போடவும் ஆராதிக்கவும்,  ஒதுக்கவும்… விலக்க இல்லங்க விலகவும்னு கதையின் போக்கு நமக்கு ரொம்பப் போக்கு காட்டுது. 

உதிரம்… அதாங்க… இந்தக் குருதி, இரத்தம் இப்டியெல்லாம் சொல்லுவோமே…! அது இங்க நிறைய விசயங்களை… எப்டியெல்லாம் முடிவு செய்யுது… அப்டிங்கறதை கதையோட்டத்தில பாக்கலாம்.

அதுக்காக இது ஃபிக்சன் ஸ்டோரினு ஃபிக்ஸ் ஆகிறாதீங்கமா!

அப்டியெல்லாம் உங்களை சோதிக்கற ஐடியா எனக்கு எப்பவுமே இல்லை!

இந்தக் கதை நான் ‘உ’ போட்டு ஏறத்தாழ ஒன்னே கால் வருசம் ஆகிவிட்டது.  எழுதி முடிச்சிட்டு போடலாம்னு, நானும் எழுதிட்டே இருக்கேன். 

ஆனா, அடுத்த கட்டத்துக்குப் போகவும், நிறைவு செய்யவும் என்னால முடியல… சத்திய சோதனை!

அதனால, ஆன்கோயிங்லயே அத்தியாயங்களாக கொடுக்க முடிவு பண்ணி, நம்ம தளத்திலேயே கதையை துவங்கிட்டேன். அப்டியாவது கதையை எழுதி நிறைவு செய்திடலாம்னு ஒரு நம்பிக்கைதான்.

வாரத்துக்கு ரெண்டு அத்தியாயங்களாக கொடுக்க முடிவு செய்திருக்கேன்.  சப்போஸ் கூடுதலா எழுதிட்டேன்னா, அந்த ரெண்டு அத்தியாயம் கூடலாம்.  எழுதாம இருந்திட்டா… குறையவும் வாய்ப்பிருக்கு.

ஆனாலும், இறைவன்மேல பாரத்தைப் போட்டு, இன்னைக்கு டீசரோட வந்திட்டேன்.

இது என்னோட பதினைந்தாவது நாவல்.  இதுவரை என்னோட நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு அளவிடற்கரியது. அதேபோல, இந்த நாவலுக்கும் உங்க அனைவருடைய பேராதரவையும் எதிர்நோக்கி ஆரம்பிக்கறேன் டியர்ஸ்.

வாசிக்கும் வாசக நெஞ்சங்கள்… கருத்தை கருத்தா தெரிவிச்சு, என்னை ஊக்கப்படுத்துங்கனு அன்போடு கேட்டுக்கறேன். ஏன்னா… அப்பதான் அடுத்த யுடி எழுத பூஸ்டாகிறேன்.  வேற ஒன்னுமில்லைங்க…

 

கதையோட டீசர் சின்னதா…

வேலையாட்களின் வரவேற்பிலேயே திரும்பிப் பார்க்காமல், வந்தது யாராக இருக்கும் என்பதை தனி கண்ணாடி கேபினுக்குள் அமர்ந்து பணியாக இருந்த கௌதம் உணர்ந்தான்.

இளநகையோடு வேலை பார்த்துக் கொண்டிருந்தவனுக்குள், வந்தவளின் குரலைக் கேட்டு இனிமையும் உத்வேகமும் ஒருங்கே சேர்ந்திட, இதயத்தின் இதமான ஓசையை தனக்குள் மறைத்தபடியே, அதுவரை இருந்த இயல்பான முகம் மறைத்து, கடுமையை பூசிக் கொண்டான் வந்தவளின் கடுவன் பூனை.

முகமன்களை சிரிப்போடு ஏற்றுக் கொண்டவள், நேராக கௌதம் இருக்கும் இடத்தருகே சென்று, அந்த குறுகிய இடத்திற்குள் அங்கிருந்த நாற்காலி ஒன்றை அவனருகே இழுத்துப் போட்டு உரிமையோடு அமர்ந்தாள்.

அவன் சம்மதித்தால் மடியில் அமரக்கூட தயங்க மாட்டாள்.  கௌதமின் வள்ளெனும் கடுமையான பேச்சு, சிடுசிடுப்போடு கூடிய கண்டிப்பிற்கு பயந்தே இந்த இடைவெளி.

அவள் பிரகதி! இருபத்து மூன்று வயது நிறைவுறப் போகிறது. காணும்போது பதினெட்டு வயது மதிக்கத்தக்க வகையில் இருந்தாள்.

‘இப்ப எதுக்கு இங்க வந்த?’ எனும் பார்வையோடு அருகில் வந்தவமர்ந்தவளை முறைப்போடு எதிர்கொண்டான் கௌதம்.

கௌதமின் தீப்பார்வையை ஆசையோடு அள்ளிப் பருகியவள், சிறு முகவாட்டமும் இன்றி இதழில் புன்முறுவலோடு, அவனைப் பார்த்ததால் உண்டான மகிழ்ச்சியோடு, “என்ன தம்மு? எம்மேல கோவமா? நீ கோவப்படலைன்னாதான் ஆச்சரியம்.  எனக்கு பாக்கணும்போல இருந்தது.  அதான் வந்தேன்!” அவன் கேளாமலேயே பதில் கூறினாள்.

“பாத்துட்டல்ல… கிளம்பு!” மெல்லிய குரலில் பல்லைக் கடித்து வார்த்தைகளைக் கூறுபோட்டவாறு கூறினான்.

“அதெல்லாம் முடியாது.  இன்னிக்கு ஃபுல்லா இங்கதான்னு நேத்தே ஃபிக்ஸ் ஆகிட்டேன்!” உறுதியாகக் கூறினாள் பிரகதி.

“எனக்கு வெளிய வேலை இருக்கு!” தானாகவே விசயம் பகிர்ந்தான்.

“இருந்தா போ!” அசட்டையாகக் கூறினாள்.

“உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது?  இப்டி இங்க அடிக்கடி வராதன்னு!” சிடுசிடுப்பாக வினவினான்.

“வராத, பாக்காத, பேசாத, நினைக்காத, வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கோ, இதைத்தவிர நீ வேற என்னனாலும் சொல்லு! கேக்கறேன்!” மறையாத சிரிப்போடு பேசினாள் பிரகதி. அவனே சரணாகதி என்றிருப்பவள் அல்லவா!