உயிரின் ஒலி(ளி)யே 1
உயிரின் ஒலி(ளி)யே 1
பெங்களூர் மாநகரம்.
பரபரப்பிற்கு பெயர் போன மாநகரங்களுள் ஒன்று.
ஆனால் அந்த பரபரப்பிலிருந்தும் அவசரத்திலிருந்தும் சற்று விடுப்பட்டு அமைதியாக இருந்தது அந்த இடம்.
கிராமத்தின் தொடக்கத்திலும் நகரத்தின் முடிவிலும் அமைந்து இருந்த அந்த இடம் கண்களுக்கு குளிர்ச்சி தருவதாய்.
அந்த இதமான சூழலை ரசித்தபடியே மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்தான் அவன்.
ராஜ்.
அவன் ஒரு மௌன சித்திரம்!
உதடுகள் இசை மீட்டாத புல்லாங்குழல்.
இதழ்களால் மொழிப் பெயர்த்து சொல்ல முடியாத குறையை தீர்த்து வைக்கும் கூரிய கண் அசைவுகள்.
மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் இடைப்பட்ட மௌனப் புன்னகையைத் தாங்கியிருக்கும் முகம்.
காற்றில் அலையாடிக் கொண்டிருந்த கேசத்தை கோதியபடி திரும்பியவனின் விழிகளில் விழுந்தது அதிதியின் உருவம்.
இவன் தங்கியிருந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் நின்றுக் கொண்டு தாய்-சி என்னும் யோகக்கலையை செய்துக் கொண்டிருந்தாள் அதிதி.
அவள் அசைவுகளில் அத்தனை நேர்த்தி.
முகத்தில் அப்படியொரு பொறுமை.
மொத்தத்தில் அமைதியின் உருவமாய் தெரிந்தாள்.
அந்த சாந்தமான முகத்தைக் கண்டதும் அவன் உள்ளத்தில் எக்குத்தப்பான கேள்விகள்.
‘யோகம் பண்றவங்க பொதுவா அமைதியின் வடிவமா இருப்பாங்க. ஆனால் இவள் மட்டும் இப்படி அடங்காபிடாரியா இருக்காளே. ஏன்?’ என அவன் யோசித்துக் கொண்டிருந்த சமயம் அவள் தாய்-சியை முடித்துவிட்டு நிமிர்ந்தாள்.
எதிர் வீட்டில் நின்றபடி தன்னையே வெறித்துக் கொண்டிருந்த ராஜ்ஜைப் பார்த்ததும் அவள் கண்களில் அதுவரை இருந்த அமைதி சென்று சிடுசிடுப்பு வந்தது.
அவனைப் பார்த்து கழுத்தை வெட்டிக் கொண்டு கோபத்துடன் கீழே இறங்க சென்ற சமயம், இருவரது காதுகளிலும் விழுந்தது, கரடுமுரடான பல குரல்கள்.
இருவரும் அவசரமாக தங்களது மொட்டைமாடியிலிருந்து எட்டிப் பார்க்க வெளியே நான்கைந்து பேர் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் முகம் முழுக்க கோபமும் ஆற்றாமையும்.
குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டவர்கள் வேகமாக கீழே இறங்கி வந்தனர்.
அதிதியின் முன்பு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், ஒரு பேப்பரை நீட்டிவிட்டு “இது நன்ன ஸ்தல” என்றார் கன்னடத்தில்.
ஏற்கெனவே பெங்களூரில் வசித்திருந்த அதிதிக்கு அவர் பேசிய கன்னடத்தை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர் சொன்ன வார்த்தையைத் தான் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.
இவர்களின் நண்பன் தீரன் தான் பெங்களூரில் தங்குவதற்காக ராஜ்ஜுக்கும் அதிதிக்கும் எதிரெதிர் வீட்டை விலைக்கு பேசி வாங்கியிருந்தான்.
ஆனால் இப்போதோ வேறு ஒருவர் வந்து “இது தன்னுடைய வீடு(இது நன்ன ஸ்தல)” என்று உரிமைக் கொண்டாடுவதை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.
அவர் நீட்டிய பத்திரம் பொய் சொல்லவுமில்லை. அந்த வீட்டில் அவருக்கு பங்கிருப்பதாய் தெள்ளத்தெளிவாய் அதில் எழுதி இருந்தது.
‘ஆனால் எங்கே நிகழ்ந்த கோளாறு இது?’ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே ராஜ் வேகமாக வந்து தன் அலைப்பேசியை அவளை நோக்கி நீட்டினான்.
அதில் தீரனுடன் ராஜ் தற்போது நடத்திய உரையாடல் இருந்தது.
“ராஜ் நான் அந்த வீட்டை ப்ரோக்கர் வெச்சு தான் முடிச்சேன். இரு, ஃப்ரோக்கர்க்கு கால் பண்ணிட்டு வரேன்.” என்ற செய்தி அதில் விரவியிருக்க அதைப் படித்த அதிதி அங்கிருந்தவர்களை நோக்கி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட முயன்றாள்.
ஆனால் முயல மட்டும் தான் முடிந்தது. பேச முடியவில்லை. எதிரே இருந்தவர்கள் பேசவிட்டால் தானே!
ஆயாசத்துடன் பெருமூச்சுவிட்டவளின் முன்பு மீண்டும் ராஜ் தன் அலைப்பேசியை நீட்டினான்.
“மச்சான் அவன் ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருதுடா. ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கா மாதிரி தோனுது. நீ அவங்க கிட்டே இருக்கிற டாக்குமென்ட்ஸ் ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்புடா. நான் நம்ம வக்கீல் கிட்டே கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன்.” என்ற குறுஞ்செய்தியைப் படித்ததும் இருவரிடத்திலும் அதிர்வும் குழப்பமும்.
அங்கே நின்றுக் கொண்டிருந்த நான்கு பேரின் செவிகளிலும் அதிதி விளக்கி சொன்ன காரணங்களும் நியாயங்களும் விழவே இல்லை.
அவர்கள் திரும்ப திரும்ப சொன்ன ஒரே விஷயம் இது தான்.
‘நீங்கள் சட்டப்படி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தீர்ப்பு வரும் வரை இந்த வீட்டில் தங்க அனுமதியில்லை’
அவர்கள் பக்க கோரிக்கையும் நியாயம் தானே!
அதுவும் கையில் எல்லா டாக்குமென்ட்டையும் வைத்துக் கொண்டு நிற்பவர்களிடம் என்ன பேச முடியும் இனி?
அதிதி அடுத்து என்ன செய்வது என்று தவித்து நின்றுக் கொண்டிருந்த நேரம் ராஜ்ஜோ அவளைத் தன் பக்கமாக திருப்பி எதிரிலிருந்த வீட்டை சுட்டிக்காட்டி கண்ணசைத்தான்.
அவன் சொல்ல வந்ததைப் புரிந்துக் கொண்டவள் வேறு வழியற்று தன் உடமையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
வீட்டின் முதல் உரிமையாளர் அதிதி வெளியே வந்த அடுத்த கணமே பெரிய பூட்டாகப் போட்டு பூட்டிவிட்டு அங்கேயே இன்னொருவரை வாச்ட்மேனாக அமர்த்திவிட்டும் சென்றுவிட இப்போது பெட்டி படுக்கையோடு ராஜ்ஜைப் பார்த்தாள்.
அவன் மௌனமாய் தன் வீட்டை நோக்கி நடந்தான்.
அவளிடம் ஏகத்துக்கும் பெருமூச்சு.
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவன் வீட்டில் தான் இப்போது தங்கியாக வேண்டும்!
எதுவும் பேசாமல் மௌனமாய் அவன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
ராஜ், அதிதி இவர்கள் இருவரும் ஏற்கெனவே சென்னையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பெங்களூருக்கு வந்திருந்தாலும் அவர்கள் இருவரும் இதுவரை ஒருவர் வீட்டிற்குள் இன்னொருவர் நுழைந்ததில்லை.
இப்பொழுது தான் அந்த வீட்டை முதன்முறையாக பார்க்கின்றாள் அதிதி.
மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது.
‘பரவாயில்லை உர்ராங்குட்டான் கொஞ்சம் சுத்தபத்தமா தான் இருக்கான்’ என மனதினில் நினைத்த பொழுது அவனோ ம் ம் என்று தொண்டையைக் கணைத்தான்.
திரும்பிப் பார்த்தவளிடம் எதிரே இருந்த அறையை சுட்டிக் காண்பித்தான்.
இனி அவள் தங்க வேண்டிய அறை என்பதை சொல்லாமல் சொல்கின்றான்.
மௌனமாய் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றவள் தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து தயாராகி வெளியே வந்தவளின் முன்னே தன் கைக்கடிகாரத்தை சுட்டிக்காட்டி முறைத்தான்.
‘என்னமோ அரை மணி நேரம் லேட்டானதுல கம்பெனியே மூழ்கிப் போயிடுறா மாதிரி பர்ஃபாமன்ஸ் பண்றான் பாரு’ என உதடுகளுக்குள்ளே முணுமுணுத்தது அவன் காதுகளில் துல்லியமாக விழுந்துவிட அவன் முகத்தில் ஏகத்துக்கும் கடுப்பு கூடியது.
வேகமாக வெளியே வந்தவன் அவள் உள்ளிருப்பதையும் பொருட்படுத்தாது ஒரு கதவை சாத்த முயல மறுகதவை சாத்துவதற்குள் அதிதியோ வேகமாக ஓடி வந்து வெளியே நின்றாள்.
‘ராட்சஸன். மனசாட்சியே இல்லாதவன். வெரி ரூட்’ என பெருமூச்சுவிட்டபடி புலம்பிக் கொண்டிருந்தவளின் குரலில் தற்போதோ டெசிபெல்லின் அளவு குறைந்திருந்தது.
வீட்டைப் பூட்டிவிட்டு சாவியைத் தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டவன் போர்டிகோவில் இருக்கும் தன் காரை நோக்கி செல்ல, இவளோ அவனுக்காக காத்திராமல் சாலையில் நடக்க துவங்கியிருந்தாள்.
இருவரும் நேரெதிர் வீட்டினில் தங்கியிருந்தாலும் ஒன்றாக இணைந்து பயணம் செய்ததில்லை.
இருவருடைய பயணமும் ஒன்றே. ஆனால் பாதைகள் மட்டும் வேறு!
அவர்களின் பாதையின் முடிவில் கம்பீரமாக நின்றுக் கொண்டி இருந்தது அந்த கட்டிடம்.
வி.யூ டெக்னாலஜிஸ்!
அந்த கட்டிடத்தின் ஏழாவது தளத்தை அடைந்தவள் பெருமூச்சோடு வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.
பேருந்து அலைச்சல் தந்த களைப்பு அது.
தண்ணீரை தன் தொண்டையில் சரித்தபடி இருந்தவளின் அருகே விழுந்தது ஒரு நிழல் உரு.
நிமிர்ந்துப் பார்க்க அங்கே ஒரு பெண் இதழில் சம்பிரதாய புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தாள்.
“ஹேய். ஐ யம் ஆதினி.” என்றவள் பேசத் துவங்கும் முன்பே அதிதி ஏதோ கண்டுகொண்டவளாக அவளை பார்த்தாள்.
“ஆர் யூ தமிழ்?” சந்தேகித்தபடி கேட்க,
“யெஸ். ஆர் யூ ஆல்சோ தமிழ்?” என்று பதிலுக்குக் கேட்ட ஆதினியின் முகத்திலும் தமிழனாய் இருந்துவிடமாட்டாயா என்ற ஏக்கம்.
அந்த ஏக்கத்தை தீர்க்கும் பொருட்டு “ஆமாங்க நானும் தமிழ் தான்” என்று மனதார புன்னகைத்தாள் அதிதி.
தங்களின் தாய்மொழியை வேறொரு ஊரில், வேறொருவரின் உதடுகளில் இருந்து கேட்கும் போது தங்களை அறியாமலேயே உள்ளுக்குள் ஒரு பாசம் உருவாகிவிடும்.
அப்படி தான் அவர்கள் இருவரின் மனதிற்குள்ளேயும் பாசம் பாய்மரமாய் விரியத் துவங்கியது.
தனது அறைக்குள் நுழைந்த ராஜ், தன் இருக்கையில் அமர்ந்தபடி முதலில் கணினியை உயிர்ப்பித்துவிட்டு அடுத்து அதிதியின் அறையை நோக்கினான்.
அவர்கள் மனதைப் போலவே அவர்கள் இருவரின் அறைக்கும் இடையே மிகப் பெரியதாக ஒரு கண்ணாடி தடுப்பு சுவர்.
அதன் வழியே தெரிந்த அதிதியின் முகத்தைப் பார்க்க, அவள் இதழ்களிலோ புதியதாக புன்னகையெல்லாம் அரும்பி இருந்தது.
‘இவளுக்கு சிரிக்கலாம் கூட தெரியுமா?என் கிட்டே மட்டும் எப்போ பாரு உம்முனு மூஞ்சை வெச்சுட்டு சுத்த வேண்டியது’ என மனதுக்குள் அவளைக் கடிந்தபடியே,
யாரிடம் பேசுகிறாள் என எட்டிப் பார்க்க முயல, அதிதிக்கு எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணின் முகம் சரியாக அவனுக்கு தெரியவில்லை.
அதற்குள் கணினியும் ஆனாகி விட அதிதியிடமிருந்து பார்வையை மீட்டுக் கொண்டவன் அலுவலக வேலையில் மூழ்கத் துவங்கினான்.
“சொல்லுங்க ஆதினி. ஹவ் கேன் ஐ ஹெல்ப்.” என்றாள், அதிதி சிநேகமாகப் பார்த்தபடி.
“நான் ஒன் மன்த் முன்னாடி தான் நம்ம கம்பெனியிலே டெவலப்பரா ஜாயின் பண்ணேன். பட் கொஞ்சம் பர்சனல் ப்ராப்ளம்னாலே இரண்டு வாரமா ஆஃபிஸ்க்கு வர முடியல. சோ ரீஜாயின் பண்ணதை எச்.ஆர் கிட்டே இன்ஃபார்ம் பண்ண சொன்னாங்க.” என்றாள்
“ஓகே ஆதினி. வெல்கம் அகெய்ன் டூ அவர் ப்ராஜெக்ட். உங்களோட டெவலப்மென்ட் டி.எல் இனி கார்த்திக்ராஜ். அவங்க கிட்டே டாஸ்க் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்.” என்று அதிதி வாழ்த்திவிட்டு தனக்கு அருகே இருந்த அறையை சுட்டிக் காட்டி “அது தான் உங்க டி.எல் ரூம்” என்றாள்.
ஆதினியும் அந்த புறம் பார்க்க கணினியில் தலையை சரித்துக் கொண்டிருந்தவனின் முகம் சரியாக தெரியவில்லை.
“ஓகே. நான் போய் அவங்களை மீட் பண்றேன்.” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு வெளியே வந்தவள், “மே ஐ கம் இன்” என்று கேட்டபடி கதவைத் தட்ட கையை கொண்டு சென்றாள்.
ஆனால் அவள் கை வைத்த அடுத்த கணமே அந்த ஆட்டோமாட்டிக் கதவு தானாக திறந்துக் கொண்டது.
கணினிக்குள் தலை சரித்திருந்த ராஜ் ஆளரவம் கேட்டு திரும்பிப் பார்க்க அங்கே கண்ட பெண்ணைக் கண்டதும் அவன் புருவங்களில் ஆச்சர்ய வளைவு.
திகைத்துப் போய் எழுந்து நின்றன கால்கள்.
இன்றும் அவளைக் கண்ட முதல் நொடி கல்வெட்டாய் மனதினில் பதிந்திருந்தது மனதினில்.
மறக்க முடியுமா இந்த பெண்ணை!
ஆதினியின் முகத்தில் நொடிப் பொழுதில் அசாத்திய மாற்றம் எழும்பி அவளும் அவனை மறக்கவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.
அவள் மனதினில் நடுக்கமும் தவிப்பும் ஒரே விகிதத்தில் ஒரு சேர எழும்பி அடங்க அதன் விளைவாய் கண்களில் உருண்டு திரண்டது நீர்முத்துக்கள்.
தாயைக் கண்ட குழந்தையைப் போல ஓடிச் சென்று அவன் நெஞ்சுக்குள் தஞ்சம் புகுந்தவள் “உங்களை எவ்வளவு நாள் தேடுனேன் தெரியுமா?” கண்ணீருடன் கேவினாள்.
அவளின் தலையை ஆதூரமாக வருடி ஆற்றுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான் ராஜ்.
ஏதேச்சையாக திரும்பிய அதிதியின் கண்கள், இவர்களிருவரும் அணைத்து நின்றுக் கொண்டிருந்ததை கண்ணாடி சுவர் வழியே பார்த்ததும் கோலிக்குண்டாய் உருண்டது.
தன்னையும் மீறி எழும்பி நின்றன கால்கள்.
ஒருவித அதிர்வுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அதிதியை, ராஜ் உதடுகளில் வழிந்த சிறுப்புன்னகையோடுப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கைவளைவுக்குள் இருந்த ஆதினியின் விழிகள் ராஜ்ஜை அன்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.
இருப் பக்கத்திலிருந்தும் ராஜ்ஜை நோக்கி வந்துக் கொண்டிருந்த ஒளிவீச்சில் அவன் உயிரின் அறையை நிறைக்கப் போவது எந்த ஒளியோ!
யார் யாருக்கு உயிரின் ஒலி(ளி)யோ!
—-உயிரின் ஒலி(ளி)யே