உயிரின் ஒலி(ளி)யே 13

சில நேரங்களில் அப்படி தான்…

முடிந்துவிட்டது என நினைத்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர்ந்தால் சில புள்ளிகளை சேர்த்து காலம் முடிவில்லாமல் காய்களை நகர்த்தும்.

அப்படி நகர்த்திய விதியின் அந்த ஆட்டத்தில் தான் கொதித்துப் போய் நின்றிருந்தான் கார்த்திக் ராஜ்.

யாரை தன் வாழ்நாளில் மீண்டும் காணக்கூடாது என்று நினைத்திருந்தானோ இன்று அவளையே நேருக்கு நேர் நிற்க வைத்திருந்தது காலம்.

கயல்!

துரோகத்தின் இருப்பிடம்.

வஞ்சத்தை வஞ்சனையில்லாமல் கொண்டிருப்பவள்.

பணத்திற்காக தான் காதலித்த இருவரின் வாழ்க்கையையும் யோசியாமல் சிதையில் தள்ள எத்தனித்தவள்.

தேள் கொடுக்காய் இருக்கும் அந்த நாக்குகள் கார்த்திக் ராஜ்ஜை காயப்படுத்த துவங்கியது.

“எப்படி இருக்க ராஜ்? நான் இல்லாம நீ நல்லா இல்லை தானே?” என்றவள் கேட்க ராஜ்ஜின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நிர்சலனமாய் நிமிர்ந்து நின்றான்.

தன் வார்த்தைகள் அவனை சலனப்படுத்தவில்லை என்பதை அறிந்ததும் கயலுக்குள் சலனம் சலம்ப துவங்கியது.

அவன் இதய வேர்களை அசைய வைக்கும் முனைப்போடு கோடாரியாய் அவள் வார்த்தைகள் விழுந்தது.

“ஆமாம்லே உனக்கு தான் குரல் இல்லையே. அப்புறம் எப்படி என் கிட்டே பேசுவே? எனக்கும் சைன் லேங்குவேஜ் தெரியாதே அப்போ எப்படி பேசுறது இந்த ஊமை கிட்டே?” அவள் அவன் இயலாமையை குத்தி கிழிக்க அதிதியின் முகத்தில் செந்திவலைகளாய் கோபம் சிதறியது.

எதிரிலிருந்த பெண்ணை சொடுக்கிட்டு அழைத்தவள், “மிஸ்… மைண்ட் யுவர் லேங்குவேஜ்” என்றாள் ஆங்காரமாய்.

அதுவரை ராஜ்ஜை மட்டுமே கவனித்திருந்த கயலின் விழிகள் இப்போது தான் எதிரிலிருந்த பெண்ணை மேலிருந்து கீழாய்ப் பார்த்தது.

“இப்போ எதுக்கு அவனுக்காக வக்காலத்து வாங்குற? நீ என்ன அவன் கேர்ள் ஃப்ரெண்டா… இல்லை இந்த ஊமைக்கு தான் கேர்ள் ப்ரெண்ட்லாம் இருக்குமா?” நக்கலாக கேட்டபடி வேகமாய் ராஜ்ஜின் பக்கமாய் திரும்பினாள்.

“என்னோட உன் வாழ்க்கை அத்தியாயம் முடிஞ்சுப் போயிடுச்சு தானே? நான் தானே உன்னோட முதலும் கடைசியுமான காதலி?” என்றவளின் கேள்விக்கு ராஜ் மௌனத்தையே கையாண்டான்.

 

ஆனால் அதிதியால் அப்படி இருக்க முடியவில்லை.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்?

ஒருவரின் இயலாமையை சாதகமாக எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே செல்வாளா?

வேகமாய் நிமிர்ந்தவள், “ஹலோ, ஊமை அவர் இல்லை, நீங்க தான்!” என சொல்ல கயலின் உடல்மொழியில் மறுப்பு செல்களின் கூட்டம்.

“நானா? ஹவ் டேர் யூ” அவள் வேகமாய் மறுக்க முனையும் போது அதிதி கை நீட்டி இடை மறித்தாள்.

“தொண்டைவளை சரியா இருந்தும் சரியான வார்த்தைகளை பேச முடியலைனா அவங்க தானே ஊமை. அப்போ நான் சொன்னது கரெக்ட் தானே கயல்” அதிதியின் பதிலில் ராஜ்ஜின் முகத்தில் அப்பட்டமான ஆச்சர்யமும் அதிர்ச்சியும்.

சடாரென நிமிர்ந்து அதிதியைப் பார்த்தான்.

அவளின் குத்துவெட்டு பதிலில் கயலின் கால்கள் வேரோடி நின்றுவிட அதைக் கண்ட அதிதி வேகமாய் ராஜ்ஜிடம் திரும்பி கண்ணடித்து சைகையாலேயே ஆற்றுப்படுத்தினாள்.

அதுவரை விடாமல் பேசிக் கொண்டிருந்த கயலின் உதடுகளை ஒற்றைப் பதிலில் அடைத்த அதிதியைப் பெருமை பொங்க பார்த்தான்.

அவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றம் கயலின் இதயத்தில் பொறாமை திரியை திகுதிகுவென எரிய வைத்தது.

“நீ அவனோட வொர்க்கர் தானே… எதுக்கு இப்படி அவனுகாக பேசிக்கிட்டு இருக்க? இதுக்கெல்லாம் அவன் சம்பளம் போட்டு தர மாட்டான்… நியாபகம் வெச்சுக்கோ!” கைநீட்டி எச்சரித்தாள்.

நீட்டிய அவள் விரல்களின் மேலாகவே பட்டென அடித்த அதிதி, “இந்த கை நீட்டி பேசுற பழக்கம்லாம் இங்கே வெச்சுக்காதே… அப்புறம் செஞ்சுடுவேன்” என்றாள் தன் தலைமுடியை ஆசுவாசமாக கோதியபடி.

அதுவரை கவலையில் இறுகிக் கிடந்த ராஜ்ஜின் முகத்தில் புன்னகை கொடி படர, கைகளை கட்டிக் கொண்டு நடப்பதை வேடிக்கைப் பார்க்க துவங்கினான். 

ராஜ்ஜிற்காக எதிர்த்து நிற்கும் இந்த அதிதியை கயலுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

“ஓய் இப்போ எதுக்கு அவன் லவ்வர் மாதிரி அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு நிற்கிற?”

 

“ஏன்னா அவனுக்காக பேச வேண்டிய அந்த காதலி கேடு கெட்டவளா போயிட்டாளே” என்று எதிரிலிருந்த கயலை சுட்டிக் காட்டியவள் “அந்த தகுதியை இழந்து நிற்கிற உனக்கு பதிலா நான் தானே பேசணும்?” என்றாள் கைகளை விரித்து.

“ஆனால் நீ ஏன் பேசணும்… நீ என்ன அவனோட ஆசை காதலியா?” கயலின் அந்த கேள்விக்கு அதிதியிடம் அசாத்திய மௌனம்.

அவளின் மௌனத்தைக் கண்டு கயலின் இதழில் ஆணவப் புன்னகை சதிராட, “எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். எல்லாருக்கும் நியாயம் செய்யறவன், தனக்கு வரப் போற துணைக்கு நியாயம் செய்யாம இருப்பானா?” என்று கேட்க ராஜ் கயலின் அந்த வார்த்தையில் அமிலத்தை தொட்டாற் போல வேகமாய் நிமிர்ந்தான்.

“கண்டிப்பா ஊமையான அவன், இதுக்கு மேலே எந்த பொண்ணையும் தன் வாழ்க்கைக்குள்ளே அனுமதிக்க மாட்டான். அவளோட வாழ்க்கையும் கேள்விக்குறி ஆக்க விரும்பவே மாட்டான். அவனை மடக்கிப் போடணும்னு ஏதாவது ப்ளான் போட்டு வெச்சு இருந்தா அதை இப்பவே ட்ராப் பண்ணிட்டு வேற யாரையாவது ட்ரை பண்ணு” கயல் பேச பேச அதிதிக்குள் எறும்பு ஊற துவங்கியது.

தன்னுடைய உள்மனதின் முடிவை கயல் அப்பட்டமாய் படம் பிடித்துக் காட்ட கார்த்திக் ராஜ்ஜின் முகமெங்கும் இயலாமையின் இறகுத்தடங்கள்.

இவளின் முன்பு ராஜ்ஜின் தலை தாழக்கூடாது. அவனை நிமிர்ந்து நிற்க வைக்க  வேண்டும்.

முடிவுடன் நிமிர்ந்தவள், “அப்படி தானு வெச்சுக்கோயேன்” என்றாள் ராஜ்ஜின் கரங்களை தன் கைகளுக்குள்ளாக சேர்த்தபடி.

அதுவரை தாழ்ந்திருந்தவனின் தலை வேகமாய் நிமிர அதிதி அவனை பார்வையால் அடக்கினாள்.

“இவள் முன்னாடி நீ தலை குனியக்கூடாது” அவள் அவனுக்கு மட்டும் புரியும்படியாய் சைகை காட்ட ராஜ்ஜின் மனதை மெல்லிய மயிலிறகொன்று வருடிவிட்டு சென்றது.

சேர்ந்திருந்த அவர்கள் இருவரின் கரத்தைக் கண்ட கயலுக்குள் எதுவோ ஒன்று உடைந்தது.

என்ன தான் வேறொருவரை அவள் திருமணம் செய்திருந்தாலும் இன்னொருவர் கார்த்திக் ராஜ்ஜை சொந்தம் கொண்டாடுவதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“நீ பொய் தானே சொல்றே?” அவள் தடுமாற்றமாய் கேட்டு கொண்டு இருக்கும் போதே “ஹலோ லவ்லி கப்புள்ஸ். வாட் எ ப்ளெசண்ட் சப்ரைஸ்” என்ற குரல் காற்றில் மிதந்து வந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அங்கே கிம்ஜின் நிறுவனத்தின் பங்குதாரரான லதா நின்று கொண்டிருந்தார்.

அவரைக் கண்டதும் இருவரின் முகத்திலும் சட்டென ப்ளாஸ்டிக் சிரிப்பு ஒட்டிக் கொண்டது.

“ஹாய் மேம்” என்று அதிதி சம்பிரதாயமாய் சொல்ல கார்த்திக்ராஜ்

மரியாதை நிமித்தமாக அவரிடம் கைகுலுக்கினான்.

“என்ன ரெண்டு பேரும் வீக் எண்ட் என்ஜாய் பண்ண ஹோட்டலுக்கு வந்து இருக்கீங்களா?” என்றவரின் கேள்விக்கு இருவரும் வேகமாய் தலையாட்டினார்.

அதுவரை இவர்கள் இருவரும் காதலர்களாய் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பி கொண்டிருந்த கயலின் மனம், லதாவின் பேச்சில் உடைப்பட்டு போக அடிவாங்கிய உணர்வோடு நிமிர்ந்து பார்த்தாள்.

ஆக இவள் சொன்னது உண்மை தானா!

இவர்கள் இருவரும் காதலர்களா…

நினைக்கும் போதே கயலின் உள்ளம் வேப்பிலையாய் கசந்தது.

“நானே உங்களை நாளைக்கு மீட் பண்ணலாம்னு இருந்தேன், ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி சொல்றதுக்காக” பீடிகையோடு லதா துவங்க இருவரின் முகமும் தீவிரமாய்.

அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்த லதாவின் பார்வை இப்போது அருகிலிருந்த கயலின் மீது விழுந்தது.

“மிஸ் கயல். நான் வி.யூ டெக்னாலஜிஸோட ப்ராஜெக்ட் ப்ரொபோசல் சொல்லி இருந்தேன்லே. இவர் தான் கார்த்திக் ராஜ் அந்த கம்பெனியோட சி.இ.ஓ… இவங்க ராஜ்ஜோட பெட்டர் ஹால்ஃப்” என்று சொல்ல அதிதியின் முகமெங்கும் அதிர்ச்சி ஊற்று.

அப்படியானால் இவன் தான் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ வா?

அவள் முதல் திகைப்பிலிருந்து வெளி வருவதற்கு முன்பாகவே அடுத்த அதிர்ச்சி அவர்களை அடிக்க காத்திருந்தது.

“மிஸ்டர் ராஜ். இவங்க நம்ம நியூ ஷேர் ஹோல்டர். நம்ம கிம்ஜின் நிறுவனத்தோட இரண்டு பங்குகளை வாங்கி இருக்காங்க.” லதா சுட்டிக் காட்டிய திசையில் கயல் ஆணவமாய் சிரித்து நின்றாள்.

அதிதியின் முகத்தில் ஈயாடவில்லை.

ஆனால் ராஜ் எதிர்பார்த்த ஒன்று நிகழ்ந்தது போல அமர்த்தலாய் புன்முறுவல் பூத்தான்.

போட்ட கணக்கு பிசாகமால் சரியாய்  நிகழும் போது புன்னகை வர தானே செய்யும்.

இவள் இப்படி ஏதாவது செய்வாள் என்று தெரிந்து தான் சென்னையிலிருந்து நேராய் பெங்களூர் வந்தான். எதிர்பார்த்தது போலவே இங்கேயும் வந்து தன் காய் நகர்த்தலை ஆரம்பித்துவிட்டாள் அந்த கயல்.

அந்த பாவனை தான் ராஜ்ஜின் முகத்தில்.

“கயலும் நம்ம பண்ண போற நியூ ப்ராஜெக்ட்க்கு ஓகே சொல்லிட்டாங்க, பட் ஒரு கன்டிஷனோட… நீங்க டெலிவர் பண்ற ப்ராஜெக்ட் ஒகேவா இருந்தா மட்டும் தான் ஃபைனல் பேமெண்ட் பண்ணுவோம்” என்றவரின் வார்த்தைக்கு அதிதி வேகமாய் மறுத்துப் பேச வாயெடுக்கும் முன் ராஜ் தன் கட்டை விரலை உயர்த்தி சம்மதம் தெரிவித்தான்.

அதிதியின் முகத்தில் குழப்பம் கூத்தாடியது. இவன் தெளிவான மனநிலையில் தான் இருக்கின்றானா?

ஏன் சம்மதம் தெரிவித்தான்?

எதற்காக சம்மதம் தெரிவிக்க வேண்டும்?

குழப்ப நூல்கள் அவள் இதயத்தை சிலந்தியாய் பின்னிய நேரம் ராஜ் அதிதியை தன் பக்கமாக திருப்பி வேகமாய் வாயசைத்தான்.

“இந்த டீல் ஓகே. பட் ப்ராஜெக்டான முதல்கட்ட செலவு முழுக்க எங்களுடையதா இருக்கிறது தான் யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கு.  எங்க டெலிவிரியிலே உங்களுக்கு மனநிறைவு இருந்ததுனா பேசுன காசை விட இருபது சதவீதம் அதிகமா கொடுக்கிறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்னு சொல்லு” அவனின் இந்த புது கோரிக்கையில் அதிதியின் முகத்தில் வியப்பு கூடாரமடித்தது.

சின்ன கல்லைப் போட்டு பெரிய அதிர்வலையை உருவாக்க முயல்கின்றானோ இவன்!

அதிதி அவன் சொன்ன விஷயத்தை லதாவிடம் சொல்லவும் அவரின் நெற்றிச்சுருக்கம் யோசனையை காட்டியது.

பின்பு கயலின் காதுகளில் வார்த்தைகளை மெதுவாக மென்றுவிட்டு ஒரு  முடிவோடு நிமிர்ந்தார்.

“ஓகே ஐ யம் ஓகே வித் திஸ் டீல். பட் ப்ராஜெக்ட் எங்களுக்கு ஓகேவா இருந்தா மட்டும் தான்  ட்வண்டி பர்சென்ட் எக்ஸ்ட்ரா பே பண்ணுவோம்” என சொல்ல ராஜ்ஜிடம் சம்மதமான தலையாட்டல்.

மீனை வலைக்குள் இழுத்துவிட்ட திருப்தியில் கயல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். ஆனால் அவளுக்கு தெரியாது அந்த வலையை பின்னியவனே கார்த்திக்ராஜ் தான் என்று.

“உங்களோட க்ளையண்ட்டான எனக்கு, எந்த மனக்குறையும் வராம நடந்துப்பீங்கனு நம்புறேன்” அவள் புன்னகையை தைத்துக் கொண்டு அவன் கையைப் பற்றி குலுக்க அந்த தொடுகை ராஜ்ஜின் உடம்பில்  கம்பளிப்பூச்சியை ஊற வைத்தது.

ஆனாலும் லதாவின் முன்னால் கையை வெளிப்படையாக உதற முடியாதே!

மௌனமாய் நிமிர்ந்தவன், “கன்டினியூ யுவர் லன்ச்” என்று அவர்கள் முன்பு டைப் செய்துவிட்டு வேகமாய் ஹோட்டலின் முகப்பிற்கு வந்து நின்றான்.

அதுவரை

விடாமல் உள்ளுக்குள் தேக்கி வைத்திருந்த பெருமூச்சொன்று ஆசுவாசமாய் அப்போது தான் வெளிப்பட்டது.

கை கழுவிவிட்டு திரும்பிய ஆதினி மற்றும் விமலின் காதுகளில் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த அத்தனை களேபரங்களும் விழ மௌனித்துப் போய் அப்படியே நின்றுவிட்டனர்.

ராஜ் வெளியே வரவும் இருவரும் அவனை பின் தொடர்ந்து வந்தனர்.

கயலின் முன்னே நெருக்கமாய் நின்று கொண்டிருந்த அதிதியும் ராஜ்ஜும் இங்கே எதிரும் புதிருமாய் நின்று கொண்டிருந்தனர்.

உள்ளே இருந்த அன்னியோன்யம் வெளியே வந்ததும் காணாமல் போய் இருக்க விமலின் புருவங்கள் முடிச்சுட்டு கொண்டது.

வேகமாய் அதிதியை நெருங்கியவன்,

“அக்கா இங்கே இப்போ என்ன நடந்தது? நீங்க உண்மையாவே ராஜ்ஜை காதலிக்கிறீங்களா?” என்று கேட்கவும் அதிதி மறுக்கும் பாங்கோடு வேகமாய் நிமிர்ந்தாள்.

“சே சே இல்லை. அந்த கயலை நோஸ்கட் பண்ணணும்னு தான் பொய் சொன்னேன்” அதிதி வேகமாய் சொல்லவும் விமல் பெருமூச்சுவிட்டான்.

“அப்பாடா நான் கூட உண்மையோனு பயந்துட்டேன், இந்த உராங்உடான் நமக்கு வேணாம்கா… நான் உங்களுக்கு சூப்பரான மாப்பிள்ளை பார்க்கிறேன்” என்றவன் சொல்லிய அடுத்த நொடி முன்னே சென்று கொண்டிருந்த கார்த்திக்ராஜ் திரும்பி ஒரே பார்வை பார்த்தான்.

அந்த ஒரு பார்வையில் விமல் ஒரு கணம் மிரண்டு போனது உண்மை தான்.

பார்வையா அது? நெருப்பை கக்கும் எரிமலை…

மெதுவாக

குரலை தாழ்த்திக் கொண்டவன், “அக்கா இவருக்கு குணம் மட்டுமில்லை பார்வையும் சரியில்லை… நாம நல்லா லுக்கு இருக்கிற மாப்பிள்ளையா பார்க்கலாம் ஓகேவா” என்று சொல்லி ஹைஃபை சொல்ல அதிதி பதிலுக்கு ஹைஃபை கொடுத்தாள்.

அவர்கள் இருவரையும் முறைத்தபடியே

ஆதினியின் புறம் திரும்பிய ராஜ், “நான் ட்ராப் பண்ணட்டுமா?” என்று குறுஞ்செய்தியாய் கேள்வியை வைக்கவும் வேகமாய் திரும்பியவள் அதிதியின் முகத்தைப் பார்த்தாள்.

அதிதி முகத்தையும் கண்களையும் குறுக்கி கொண்டு அவள் முகத்தைப் பார்த்த அடுத்த கணமே, “இல்லை இல்லை நான் பஸ்லே போக போறேன், அதுவும் தனியா” என்றாள் வேகமாக.

அந்த பதிலில் புன்னகை படர ஆரம்பித்த அதிதியின் முகம், “இல்லை ஆதினி… நான் உன்னை கொண்டு போய் விடறேனே” என்று ஆரம்பித்த ராஜ்ஜின் வார்த்தைகளை கேட்டதும் சுருங்கியது.

“ராஜ் அவள் தான் சொல்றாளா… அவள் போயிடுவா” என்று தடை போடவும்

ராஜ், அதிதியின் முகத்தை கெஞ்சலாக பார்த்தான்.

“நோ மீன்ஸ் நோ” என்று ராஜ்ஜிடம் சொல்லிவிட்டு ஆதினியின் புறம் திரும்பினாள்.

“ஆதிமா,  ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணுங்க. பார்த்து பத்திரம்” என்று சொல்லவும், “ஓகே திதிமா” என்ற ஆதினி தன் பாதையில் தனியாய் பயணிக்க துவங்கினாள். விமலும் அடுத்து கிளம்பிவிட இப்போது அங்கே ராஜ்ஜூம் அதிதியும் மட்டும்.

அவர்கள் எதிரே அவன் கையில் எப்போதும் அசுர வேகத்தில் பறக்கும் அந்த கார்.

“சார் நாமளும் போகலாமா? ஆனால் ஐம்பதுக்கு மேலே ஸ்பீட் போகக்கூடாது ஓகே” என்றவள் மீண்டும் அதே பல்லவியைப் பாட அவன் தலையிலடித்துக் கொண்டான்.

“சே நிம்மதியா சாப்பிடலாம்னு வந்தா முதலிலே அந்த விளங்கா மண்டையன் விமல் வந்து டார்ச்சர் பண்ணான். அடுத்து இந்த கயல். இப்போ நீயா? பேசாம உள்ளே ஏறலை இருக்கிற கோவத்துக்கு காரை உன் மேலே ஏத்திடுவேன்” என்றவன் சலிப்பாய் வாயசைக்கவும்

“சரி காரை என் மேலேயே ஏத்து” என்றபடி அசையாமல் அங்கேயே நின்றாள்.

எப்படி சென்றாலும் முட்டுக்கட்டையாக நிற்கும் அதிதியைக் கண்டு பெருமூச்சு பெரியதாக வெளிப்பட,

“ஏறு… ஏறித் தொலை அம்பதுக்கு மேலே போக மாட்டேன் போதுமா” சம்மதமே இல்லாமல் சம்மதம் தெரிவித்தவனைக் கண்டு அவள் இதழ்களில் குறுநகை முகிழ்த்தது.