உயிரின் ஒலி(ளி)யே 4b

இப்படி தான் வருகிறது விடியல்.

சில இடங்களில் கொஞ்சம் வெளிச்சமாய். சில இடங்களில் கொஞ்சம் இருளாய்.

ஆனால் அந்த வீட்டில் மட்டும் வெளிச்சத்தையும் இருளையும் ஒரு சேர கொண்டு வந்தது அந்த விடியல்.

தன் முகத்தின் மீது விழுந்த கடந்த காலத்தின் இருளை சந்திக்க முடியாமல் போர்வையை இழுத்து மூடிக் கொண்டான் ராஜ். அவனுக்கு கட்டிலிலிருந்து எழுந்து கொள்ளவே பிடிக்கவில்லை.

உலகத்தை இன்று கொஞ்சம் தாமாதமாகவே சந்தித்துக் கொள்ளலாம் என நினைத்து கண்களை இறுக மூடிக் கொண்டான்.

ஜன்னலின் வழியே விழுந்த சூரியனின் கிரணத் தூறல்கள் பட்டு சோபாவில் படுத்து கிடந்த அதிதி மெல்ல அசைய துவங்கினாள்.

அவளை முழுவதுமாய் அசைத்துப் போட்டது “மியாவ்” என்று கேட்ட பூனையின் சப்தம்.

பட்டென்று சோபாவிலிருந்து அரக்க பறக்க எழுந்தவள் எதிரிலிருந்த குட்டிப் பூனையை தலை சாய்த்துப் பார்த்தாள்.

அதுவும் தன் நீலம் பாரித்த கண்களை சுருக்கி தலைசரித்துப் பார்த்தது.

அதன் விழிகளில் லேசாக வலி விரவிக் கிடப்பதைப் போல தெரிய வேகமாக பார்வையால் ஆராய்ந்தாள்.

அப்போது தான் அதிதியின் கண்களில் பட்டது அதன் கால்களில் போடப்பட்டிருந்த கட்டு.

அதைப் பார்த்ததும் இருந்த பயம் எல்லாம் விலகிட மெதுவாக அந்த பூனையின் அருகே சென்றாள். அதுவும் கால்களை நொண்டியபடி அவளருகே வர எத்தனித்தது.

“நீ வராதே குட்டி மியாவ், நானே வரேன்” என்று வேகமாக சென்றவள் பூனையின் அடிப்பட்ட காலைப் பார்த்து “ரொம்ப வலிக்கிதா?” எனக் கேட்டாள்.

அதுவும் இவள் பேசும் மொழி புரிந்தாற் போல மெல்ல தலையை சிலுப்பியது.

அதைக் கண்டு புன்னகைத்தவள் லேசாக அதன் தலையை வருடி “நீயும் நானும் சேம் பின்ச். உனக்கும் காலிலே அடிப்பட்டிருக்கு. எனக்கும் அடிப்பட்டிருக்கு” என்றவள் சமையலறைக்கு சென்று பாலை சுட வைத்து ஒரு தட்டில் ஊற்றி அதன் முன் வைத்தாள்.

அதன் கண்களோ நன்றியாய் அதிதியின் மீது படர்ந்தது.

இதுநாள் வரை பூனையின் கண்கள் பயத்தின் கூடாரம் எண்ணியிருந்தவள்  இப்போது தான் பூனையின் கண்கள் இவ்வளவு அழகாய் இருக்குமா என வியந்து ஊடுருவிப் பார்த்தாள்.

தூக்கம் களைந்து  கதவைத் திறந்த ராஜ்ஜின் விழிகளில் விழுந்தது இந்த காட்சி.

அதுவரை கசப்பிலிருந்த மனதிற்கு இந்ந பார்வை பரிமாற்றம் மனதை வருடுவதாய்.

மெல்ல கதவில் சாய்ந்தபடி அதிதியையும் பூனையும் பார்த்தான். ஒரே நாளுக்குள் அவர்கள் இருவரிடையே பிரியாத பாசப் பிணைப்பு ஏற்பட்டுவிட்டதை அவர்களின் பார்வை பறைசாற்றியது.

‘பரவாயில்லையே இவங்க இரண்டு பேருக்குள்ளே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிடுச்சே’ என்று நினைத்தவன் இதழ்களில் புன்னகை துளிர்த்தது.

யாரோ தன்னைப் பார்ப்பதை போல உணர்ந்த அதிதி, சட்டென்று திரும்பிப் பார்க்க எதிரில் ராஜ்.

அவனைக் கண்டதும் முன்பிருந்த தேன் பார்வை தீப்பார்வையாய் மாறியது. இவனும் தன் ரசனைப் பார்வையை மாற்றிக் கொண்டு ரசாயானப் பார்வைப் பார்த்தான்.

அதுவரை இயல்பாய் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதும் தோளில் தாடையை இடித்துக் கொண்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டனர்.

சட்டென்று மாறிய சூழ்நிலையக் கண்டு அங்கிருந்த பூனையின் விழிகளோ புரியாமல் இருவர் கதவையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றது.

வேகமாகி தயாராகி வெளியே வந்த ராஜ், அந்த பூனையை, அருகில் குடியிருந்த வயதான தம்பதியிடம் விட்டுவிட்டு வந்த அதே நேரம் அதிதியும் கிளம்பி வெளியே வந்தாள்.

வேகமாக கதவைப் பூட்டியவன் அவளிடம் ஒரு ஸ்பேர் கீயைக் கொடுத்துவிட்டு தன் சுட்டுவிரலை காரை நோக்கி நீட்டினான்.

அவளோ அவன் காட்டிய திசையை  கொஞ்சம் கூட மதியாமல் காலை தாங்கியபடியே ரோட்டில் இறங்கி வேறு திசையில் நடக்க ஆரம்பித்தாள்.

அதைக் கண்டதும் ராஜ்ஜிற்கு கண் தெரியாமல் கோபம் கூடிப் போனது.

‘கொழுப்பு கொழுப்பு உடம்பெல்லாம் கொழுப்பு. நான் என்ன சொன்னாலும் செய்யக்கூடாதுனு ஒரு முடிவுலே தான் இருக்கா போல. கீழே விழும் போது பிடிச்சா விலகிப் போவானு தெரிஞ்சு தான் அப்படியே விட்டது.  ஆயில்மென்ட் கொடுத்தா வாங்காம சீன் போடுவானு தான் கொடுக்கல.  இப்போ இந்த காலோட போக முடியாதுனு காரிலே வர சொன்னா சிலுத்துக்கிட்டு போறா’ என புலம்பியபடியே காரை எடுத்தான் ராஜ்.

அவனது கோபத்தின் வீரியம் சாலையில் பறக்கும் காரின் வேகத்தில் தெரிந்தது.

அந்த அசூர வேகத்தைக் கண்டவள் ‘எப்பவும் வண்டியை ஸ்லோவா ஓட்டுற பழக்கமே இல்லை. கொஞ்சமாவது திருந்துறானா பாரு’ என நொடித்தபடி பேருந்தில் ஏறி தன் அலுவலக நிறுத்தத்தில் இறங்கினாள்.

அங்கே இறங்கியதும் அதிதியின் கண்களில் விழுந்தது ஆதினியின் பதற்றமான உருவம்.

நடந்து சென்று கொண்டிருந்த ஆதினியின் பின்னே ஒருவன் வேகமாக கூப்பிட்டுக் கொண்டே பின்தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

ஆதினிக்கு ஏதாவது பிரச்சனையோ என பதறியவள் அரக்க பறக்க ஓடிச் சென்று பின்தொடர்ந்தவனை நிறுத்தினாள்.

“வொய் ஆர் யூ ஃபோலாயிங் தட் கேர்ள்” என்றாள் கண்களில் கோபம் மின்ன.

அதிதியின் குரலைக் கேட்டதும் முன்னால் சென்ற ஆதினி வேகமாக திரும்பி வந்து பயத்தில் அவளது கைகளைப் பற்றி கொண்டாள்.

நடுங்க தொடங்கிய ஆதினியின் கைகளை ஆதூரமாகப் பற்றிக் கொண்டவள் “வொய் ஆர் யூ ஹாராஸிங் ஹெர்?” அதிதி கேட்கும் போதே, ஆதினியின் கண்களில் நீர் சாரை சாரையாக கண்ணீர் கொட்ட துவங்கியது.

அந்தப் பக்கமாக காரில் வந்த ராஜ்ஜின் கண்களில் இந்த காட்சி பட்டுவிட வேகமாக காரை ஓரங்கட்டியவன் நேராக ஆதினியை நோக்கி வந்தான்.

அவனைப் பார்த்த ஆதினி வேகமாக ராஜ்ஜின் மார்பில் தஞ்சம் புகுந்தவாறே “அவன் என்னை ஃபாலோ பண்றான்” என்றாள் நடுக்கம் விலகாத  குரலில்.

அதைக் கேட்டு ராஜ் கையை முறுக்கிக் கொண்டு வர, பின்தொடர்ந்து வந்தவனோ “ஷி மிஸ்ட் திஸ் பர்ஸ். தட்ஸ் வொய் ஐ கால் ஹெர்” என்று சொல்லி பர்ஸை அதிதியிடம் நீட்டினான்.

‘சே இதுக்கா இந்த ஆதினி புள்ளை இம்புட்டு அழுதா’ என மனதில் எண்ணமிட்டவாறே அந்த பர்ஸை அதிதி அவனிடமிருந்து வாங்க முற்பட, இதை அறியாத ராஜ்ஜோ அவனின் கன்னத்திலேயே ஒரு அறை வைத்துவிட்டு சட்டையைப் பிடித்து சரமாரியாக அடிக்கத் துவங்கிவிட்டான்.

“ராஜ், அவனை விடுங்க. அவர் எதுவும் பண்ணல” என அதிதி கத்தியது ராஜ்ஜின் காதுகளில் அது விழவே இல்லை.

அவனை அடிப்பதிலேயே மும்முரமாக இருந்த ராஜ்ஜின் இடையே புகுந்தவள், “அவனை விடு ராஜ். அவன் பெருசா எதுவும் தப்பு பண்ணல” என்று இவள் கத்தியபடி அவனை விலக்கினாள்.

“எது தப்பில்லை, இல்லை எது தப்பில்லைனு கேட்கிறேன். உன்னை  ஹராஸ் பண்ணா இப்படி தான் ஒதுங்கி போவியா? ஆதினிக்கு சப்போர்ட்டா நிற்கக்கூட தோணலைல உனக்கு. ஐ யம் அஷேம்ட் ஆஃப் யூ” என்று கோபமாக வாயசத்தவனைக் கண்டு அதிதியின் விழிகள் சிவந்தது.

ஆதினிக்கு அங்கே நடந்து கொண்டிருப்பது, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது எதுவும் பதியவில்லை. அவள் கவனம் முழுக்க நடுங்கிய தன் கரத்தின் மீதே பதிந்து இருந்தது.

கீழே விழுந்து கிடந்தவனை மீண்டும் ஒரு முறை எட்டி மிதித்துவிட்டு அதிதியை ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக ஆதினியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு காரில் ஏறினான்.

“அதிதி மட்டும் அங்கே நிற்கிறாங்க. அவங்களையும் கூட்டிட்டு போகலாம்” என ஆதினி சொல்ல

“ஆஃபிஸ் வர அவளுக்கு வழித் தெரியும். அவளே வந்துடுவா” என்று டைப் செய்து காண்பித்தவன்,

ஆதினியின் தலையை வாஞ்சையாய் வருடியபடி “ஐ யம் தேர் ஃபார் யூ. உனக்கு ஒன்னுனா நான் கண்டிப்பா அங்கே நிற்பேன். உன் சந்தோஷம் எனக்கு முக்கியம். அதுக்காக எந்த விலை வேணாலும் கொடுப்பேன். ராஜ் ஆதினி குட்டியை பத்திரமா பார்த்துப்பான்.  இனி  ஹேப்பியா இருக்கனும் சரியா” அவன் டைப் செய்த செய்தியைப் படித்தவளின் விழிகளில் கண்ணீர் ஊற்றாகப் பெருக்கெடுத்தது.

“என் அப்பாவுக்கு அப்புறம் உங்களை மட்டும் தான் நான் மனசார நம்புறேன் ராஜ்” என்று சொல்லியபடி தோளில் சாய்ந்தவளை வருடியவனின் மனதிலோ ‘இவளை காலத்துக்கும் யாரையும்  காயப்படுத்தவிடக்கூடாது. சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று முடிவெடுத்து கொண்டான்.

ஆனால் பாவம் ராஜ் அறியவில்லை!

காலத்தின் ஆட்டம் வேறாக இருக்கும், தானே ஆதினியை காயப்படுத்திப் பார்க்கும் ஒரு நிலை வரும் என்று.