Marainthirunthu paarkkum marmamenna – Teaser

Marainthirunthu paarkkum marmamenna – Teaser

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

முன்னோட்டம்

 

வீட்டிற்கு வெளியில் இருக்கும் வெப்பநிலைக்குச் சிறிதும் குறைவில்லாது கொதிக்கும் அக்கினிப் பிழம்பாய் நின்றிருந்தனர் தம்பதியர் இருவரும்.

இவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்பும் நிலை அங்கு இல்லை.

“ஏய் என்னடி விட்டாப் பேசிக்கிட்டேப் போற?”

“உனக்கெல்லாம் என்ன டா மரியாதை? கல்யாணத்தை நான் தான் நிறுத்தினேன்னு என்கிட்டயே வந்து சொல்ற?”

“உன் கல்யாணாத்தை நிறுத்தினேன்னு உன்கிட்ட வந்து தான் சொல்ல முடியும். பின்ன உங்கப்பாகிட்ட போயா சொல்லச் சொல்ற?”

“சீ, நீ எல்லாம் என்ன மனுஷன்? கந்து வட்டி வசூலிக்கிற கூட்டம் தானே நீயெல்லாம். உன் கிட்ட மனசாட்சி எல்லாம் எதிர் பார்த்தா அது என் தப்பு தான். ”

“ஏய், தேவை இல்லாம கண்டதையும் பேசாத. இனி அந்த வேலை தான் உனக்கும் சேர்த்து சோறு போடப் போகுது.”

“ஓ, உனக்கு அப்படி எல்லாம் ஒரு நினைப்பிருந்தா இன்னையோட தலை முழுகிடு. பட்டினி இருந்து செத்தாலும் சாவேன், கண்டிப்பா உன் பணத்துல எதுவும் வாங்கி சாப்பிட மாட்டேன். உனக்கும் வேணும்ன்னா சேர்த்து நான் சாப்பாடு போடறேன். ” ஏளனம் மட்டுமே ஆதினியின் குரலில்.

“ரொம்ப அதிகமாப் பேசுற ஆதினி. புள்ளப் பூச்சி மாதிரி இருந்த அன்னைக்கு நான் பேசும் போது, இப்ப எவ்வளவு திமிரு உனக்கு. என்னை, என் வேலையை இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத. இனி நீ பேசின, என் வாய் பேசாது என் கை தான் பேசும். போ டி உள்ள.” கோபம் கொப்பளிக்க எழுந்த வேகத்தில் அவன் அமர்ந்திருந்த அந்த பழைய பிளாஸ்டிக் நாற்காலி தள்ளிச் சென்று விழுந்திருந்தது.

“இன்னும் நீ என்னை எப்படி வேணும்ன்னாலும் மிரட்டு அடி. ஆனா உன்னோட இந்த பாவப் பட்ட காசில் சாப்பிட்டுக்கிட்டு உன்னை மாதிரி கேவலமான ஒருத்தனுக்குப் பொண்டாட்டியா இருப்பேன்னு மட்டும் கனவிலும் நினைக்காத.” அவனை விட அதீத கோபத்தில் கத்தி இருந்தாள் ஆதினி.

“நான் கேவலமானவனா?” அடித்துவிடும் ஆத்திரத்துடன் அவன் அருகே நெருங்க, அவன் கத்திய கத்தில் அவளின் சப்தநாடியும் ஒடுங்க மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் சுவற்றுடன் ஒன்றியிருந்தாள்.

அடிக்க ஓங்கிய கையுடன் அருகில் வந்தவனுக்கு, ஏனோ அவள் நின்ற கோலம் அவனுள் ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்த, அவளின் முகத்தருகே குனிந்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“இப்படி பைத்தியக் காரத்தனமா பேசினா இனி எல்லாம் கன்னத்துல இல்ல என்னைப் பேசுற அந்த வாய்க்குத் தான் முத்தம் குடுப்பேன்” என்றவன் அடுத்த நிமிடம் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்தான். அவளை நெருங்கும் பொழுதுகளில் தான் தன் நிலையில் இல்லை என்பது அவனுக்குத்  திண்ணம்.

அவனின் பேச்சும் செய்கையும் தந்த அதிர்வில் பேசும் சக்தி எல்லாம் வடிந்து, தன் வாழ்க்கை இனி என்ன ஆகுமோ என்ற எண்ணமும் தாக்க, கண்களில் வடியும் நீரைக் கூடத் துடைக்கும் எண்ணமில்லாமல் மடிந்து அமர்ந்து அழுதவள், அந்த அயர்ச்சியில் பின் எப்பொழுதோ அப்படியே அந்த இடத்திலேயே தூங்கி இருந்தாள்.

error: Content is protected !!