உயிரின் ஒலி(ளி)யே 5a
உயிரின் ஒலி(ளி)யே 5a
சில நேரங்களில் அப்படி தான், எங்கோ தொலைவில் வீசும் காற்றால் இங்கே அருகில் இருக்கும் மரத்திலிருந்து இலை உதிரும்.
அப்படி தான், ஆதினியின் மேல் ராஜ் வைத்த பாசம், அதிதியின் முகத்திலிருந்த புன்னகை இலையை உதிர வைத்தது.
இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்தவளை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தான் அவன்.
“ஏன் லேட்டுனு கேட்டேன், பதிலே வரலை மிஸ். அதிதி” என்று வாட்சை சுட்டிக் காட்டி கேட்டவனை வெட்டும் பார்வைப் பார்த்தாள்.
“ஒரு எச்.ஆர் நீங்களே லேட்டா வரலாமா?” என்று மீண்டும் வாயசைத்தவனின் முன்பு கோபமாக கைநீட்டி இடைமறித்தாள்.
“மிஸ்டர்.ராஜ் நான் சீக்கிரமா தான் கிளம்புனேன். ஆனால் வர வழியிலே ஒரு கிறுக்கன், எந்த தப்பும் பண்ணாத அப்பாவியைப் போட்டு அடிச்சுட்டான். அந்த பாவப்பட்ட ஜீவனுக்கு உதவிப் பண்ண போய் லேட் ஆகிடுச்சு” என்றவளைக் காரமாகப் பார்த்தான்.
“ஹவ் டேர் யூ. எப்படி அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்? ஆதினிக்கு சப்போர்ட்டா தான் நிக்கல, அது கூட ஓகே. பட் ஏன் எதிரியா நிற்கிற. நீயெல்லாம்” என்று அவன் மேலும் கோபமாக பேச எத்தனிக்கவும் இங்கே அதிதி தன் கையை முறுக்கினாள்.
“அடேய் கோளாறு கண்ணா. உனக்கு எல்லாமே கோளாறா தான் தெரியுமா? கண்ணைத் திறந்து எதையும் உருப்படியா பார்க்க மாட்டியா?” என அதிதி அவன் கண்ணை தன் இரட்டை விரலால் சுட்டிக் காட்டி கேட்டாள்.
பட்டென தன் கண் இமைகளை மூடித் திறந்தவன் “வாட் நான் கோளாறு கண்ணனா?” என்றான் அதிர்வாக.
“ஆமாம்” என்றாள் அதிதி தோளை குலுக்கிக் கொண்டு.
“உன்னை” என்று ராஜ் அவளைத் திட்ட வாயெடுத்த நேரம் விக்ரம் கதவைத் தட்டிக் கொண்டு அவசரமாக அறைக்குள் நுழைந்தான்.
ராஜ்ஜின் பார்வை கேள்வியாய் அவன் மீது விழுந்தது.
“ஒரு தப்பு நடந்துடுச்சு ராஜ். அதனாலே நம்ம சர்வரே க்ராஷ் ஆக வாய்ப்பு இருக்கு. இப்போ தான் டெஸ்டிங்லே கண்டுபிடிச்சோம். உன் ஹெல்ப் வேணும்” என விக்ரம் கேட்க, ராஜ் வேகமாக அவனுடன் நடந்தான்.
ஆனால் செல்லும் முன்பு அதிதியை ஒரு பார்வைப் பார்த்தான். அந்த பார்வை ‘உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்’ என்றது.
அதைப் புரிந்துக் கொண்ட அதிதியோ “நீ என்னடா என்னை வந்து கவனிக்கிறது. திரும்பி வா உன்னை நான் கவனிச்சுக்கிறேன்’ என மனதுக்குள் முணுமுணுத்தபடியே தன் இருக்கைக்கு வந்து விழுந்தாள்.
அவள் முகம் முழுக்க அப்பட்டமான சோர்வு.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதினி, “ஆர் யூ ஓகே அதிதி. பார்க்க ரொம்ப டயர்டா தெரியுறீங்களே?” என்று அக்கறையாக கேட்க அதிதியிடம் மெல்லிய புன்னகை.
“கொஞ்சம் அலைச்சல். அதனாலே லைட்டா டயர்ட் ஆகிட்டேன் ஆதினி. மத்தபடி ஐ யம் ஆல்ரைட்” என்று மறுத்து சொன்னாலும் குரல் அயர்ந்துப் போய் இருந்தது.
அதைக் கண்டு கொண்ட ஆதினி, “அப்போ ஒரு கப் காஃபி குடிச்சுட்டு வரலாமா? பெட்டரா இருக்கும்” என்று வினவவும் காஃபி ப்ரியை அதிதியை கேட்கவா வேண்டும்? மறுக்காமல் எழுந்துக் கொண்டாள்.
கஃபே ஏரியாவுக்குள் வந்த அதிதி, ஆதினியை அமர சொல்லிவிட்டு காஃபி வாங்க சென்றுவிட இங்கே ஆதினியோ அந்த இருக்கையில் தயங்கியபடி அமர்ந்தாள். எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைக் கண்டு அவளது தயக்கம் இன்னும் அதிகரித்தது.
ஆதினி இன்றைய நவநாகரிக உடையை அணிவதில் அதிகம் விருப்பமில்லாதவள். முகத்திலும் ஒப்பனை இருக்காது. சுடிதாருக்கும் துப்பட்டாவுக்குமிடையே கொஞ்சமும் பொருத்தம் இருக்காது.
அந்த பொருத்தமில்லாத உடையை தான் எதிரில் அமர்ந்து இருந்தவர்கள் கேலி செய்து கொண்டிருந்தனர்.
அந்த கேலிப் பேச்சை கேட்க முடியாமல் ஆதினி தன் துப்பட்டாவை இழுத்து முழுமையாக தன் மீது போர்த்திக் கொண்டு அந்த நாற்காலியில் குறுக்கிக் கொண்டு அமர்ந்தாள்.
ஆனால் அவளை மேலும் குறுக்கும்படி எதிரிலிருந்தவர்களின் பேச்சு தொடர்ந்தது.
“இந்த ஆதி காலத்து ட்ரெஸ் எல்லாம் இன்னுமா அழியாம இருக்கு. இந்த பொண்ணைக் கூட்டிட்டுப் போய் மியூசியம்லேயே வைக்கலாம், அந்த அளவுக்கு ஓல்டியா இருக்கா” என்று ஒரு பெண் ஆதினியை சுட்டிக் காட்டி பேச இன்னொரு பெண்ணோ,
“அந்த பெண்ணோட அந்த சுடிதாரைப் பாரேன். கழுத்து வரை மூடி பழைய பாட்டி சுடிதாரைப் போட்டா மாதிரி இருக்கு” என்றாள் இளக்காரமாக.
இவர்கள் பேசிய பேச்சு காஃபியை வாங்கிக் கொண்டு வந்த அதிதியின் காதுகளில் துல்லியமாக விழுந்துவிட காப்பியை தங்கள் மேஜையின் மீது வைத்துவிட்டு அவர்களின் முன்பு வந்து நின்றாள்.
“மிஸ் லேடிஸ். மியூசியம்லே கொண்டு போய் வைக்க வேண்டியது அந்த பொண்ணை இல்லை. உங்களை தான். மேனர்ஸ்னா என்னனே தெரியாத வித்தியாசமான ஜந்துனு நேம் போர்ட் போட்டு உங்க எல்லாரையும் தான் அங்கே நிறுத்தணும்” என்று கோபமாக உரைத்தவள்
“அடுத்த தடவை யாரையாவது தப்பா பேசுனீங்க, பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். ஒரு எச்.ஆரா ஆக்ஷன் எடுக்க வேண்டியதா இருக்கும். பி கேர்ஃபூல்” கைநீட்டி எச்சரித்துவிட்டு தன் நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.
எதிரே ஆதினியின் கண்களில் வழிவதற்கு தயாராக இருந்த கண்ணீரைக் கண்டதும் அதிதிக்கு கோபமும் வருத்தமும் ஒருசேர வந்தது. ஆனால் ஏற்கெனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பவளை திட்ட மனம் வரவில்லை. மெல்ல தன்னை சமன்படுத்திக் கொண்டு ஆதினியைப் பார்த்தாள்.
“டோன்ட் ஃபீல். காஃபி குடிங்க. சூடு ஆறிடும்” என்று சொல்லியபடி அவளது தோளைத் தட்ட, ஆதினியின் கண்கள் நன்றியாய் அவள் மீது விழுந்தது.
ஆதினி என்பவள் இதுவரை யாரோடும் சேராத தனித்தீவு. ஆனால் இப்போது அந்த தீவிற்கு வந்த வசந்த காற்றாய் அதிதியின் வரவு.
யாருடன் முதலில் பேசினாலும் அவர்களது பார்வை தன்னுடைய உடையின் மீது இளக்காரமாக படிந்து மீள்வதை பலமுறை ஆதினி உணர்ந்து இருக்கிறாள்.
ஆனால் அதிதி மட்டுமே இதுவரை அவளை வித்தியாசமாக பார்க்கவில்லை. அதனாலேயே எல்லாரிடமும் பேசாமல் ஒதுங்கி நிற்பவள் அதிதியிடம் மட்டும் இயல்பாக பேசினாள்.
இப்போது கூட தனக்காக எதிர்த்து பேசும் அதிதியை எண்ணி அவளுக்குள் நன்றியுணர்வும் நட்புணர்வும் ஒரு சேர ஊற்றெடுத்தது.
“தேங்க்ஸ் அதிதி” என்றவளது தொண்டை கமற, “ப்ரெண்ட்ஸ்குள்ளே தேங்க்ஸ் சொல்லலாமா?” எனக் கேட்டபடி காஃபியை பருகத் துவங்கினாள் அதிதி.
மெல்ல இருவரது கோப்பையிலும் நட்பின் வாசம் வீசத் துவங்கியது.
இருவரும் காஃபி குடித்துவிட்டு லிஃப்ட் நிற்கும் இடத்திற்கு வர அங்கிருந்தவர்களின் பார்வை ஆதினியின் மீதே கிண்டலாக பதிந்து மீண்டது.
ஏற்கெனவே கலக்கத்திலிருந்தவள், எதிரிலிருந்தவர்களின் பார்வையை சந்திக்க முடியாமல் அதிதியின் பின்னே மறைய முயன்றாள்.
அவளது தயக்கத்தையும் நடுக்கத்தையும் உணர்ந்த அதிதி அவளை முன்னே இழுத்து நிறுத்தினாள்.
“ஆதினி, யூ ஆர் லுக்கிங் சோ பியூட்டிஃபுல் டுடே” என்ற சொல்லி அவளையே ரசனையாகப் பார்க்க, “நான் உண்மையாவே இப்பவும் அழகா இருக்கேனா?” என்று ஆதினி நம்பாமல் கேட்டாள்.
“உன் அழகுக்கு என்ன குறை. ஐ லைக் யூ சோ மச்” என்று அவளை இலகுவாக்கியபடியே லிஃப்டிற்குள் ஏறினாள்.
ஏழாவது தளத்திற்கு லிஃப்ட் வந்து நின்றதும் வேகமாக ரெஸ்ட் ரூமிற்குள் ஆதினியை தள்ளிக் கொண்டு வந்தவள் அங்கிருந்த கண்ணாடியின் அருகே நிற்க வைத்தாள்.
“என் லிப்ஸ்டிக் ஷேட் கொஞ்சம் டிம் ஆகிடுச்சு. ஒரே ஒரு டச் அப் மட்டும் பண்ணிட்டு போயிடலாம்” என்றபடி அதிதி தன் கைப்பையைத் திறந்து ஒப்பனைப் பொருட்களை வெளியில் எடுத்து விரித்தபடி, ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தாள்.
ஏக்கமாக ஆதினியின் கண்கள் அந்த பொருட்களின் மீது படிந்தது.
உதட்டைக் குவித்து சாயமிடும் தன்னையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த அதிதி, “இந்த ஷேட் லிப்ஸ்டிக் ட்ரை பண்ணிப் பாருங்களேன். நல்லா இருக்கும்” என நீட்ட ஆதினியோ வேகமாக மறுத்து தலையசைத்தாள்.
அவளது மறுப்பு அதிதிக்கு குழப்பத்தைக் கூட்டியது.
‘ஒப்பனை செய்ய ஆசை இருக்கிறது ஆனாலும் ஏன் இவள் மறுக்கிறாள்’ என யோசித்தபடியே தங்கள் அறையை நோக்கி நடந்தாள்.
உள்ளே வந்ததும் அவர்கள் செய்ய வேண்டிய வேலை, வரிசை கட்டிக் கொண்டு மேஜையில் காத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்தபடி வேகமாக தங்களது வேலையைத் துவங்கினர்.
இங்கே ராஜ் அந்த பெரிய தவறைக் கண்டுப்பிடித்து நிமிரும் போது நேரம் சரியாக மதியம் இரண்டை நெருங்கியிருந்தது.
அதுவரை கணினியிலிருந்து குனிந்த தலையை நிமிராமல் இருந்தவன் அப்போது தான் இருக்கையில் இலகுவாக சாய்ந்து அமர்ந்தான். கழுத்தை இப்படியும் அப்படியுமாக நெட்டி முறித்தவனை கண்டு விக்ரமிடம் மெல்லிய புன்னகை.
“சே இந்த சின்ன மிஸ்டேக் எவ்வளவு நேரம் தலைவலியைக் கொடுத்திடுச்சுலே?” என்று விக்ரம் தலையில் தட்டிக் கொண்டபடியே கேட்க,
“எப்பவும் நாம கவனிக்காம விடுற சின்ன விஷயம் தான் பெரிய தலைவலியைக் கொடுக்கும்” என்று டைப் செய்துக் காண்பித்த ராஜ் மெல்லிய முறுவலுடன் தன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த அதிதியையும் ஆதினியையும் கண்ணாடித்திரை வழியே பார்த்து புன்முறுவல் பூத்தவன் அவர்கள் அறை நோக்கி வந்தான்.
ஆளரவம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்த ஆதினி, அவனைக் கண்டு புன்னகைத்தபடி எழ, அதிதியோ கோபமாக தன் கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.
“வாங்க ஆதினி, சாப்பிட போகலாம்” என்றாள் ராஜ்ஜைத் திரும்பிப் பார்க்காமலே.
ராஜ்ஜும் அவளைத் திரும்பியும் பாராமல் ஆதினியுடன் நடக்கத் துவங்கினான்.
கேன்டீனிற்குள் நுழைந்த ராஜ், உணவு வாங்க சென்றுவிட ஆதினியோ தன் கைப்பையில் எதையோ தேடி துழாவிக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்ட அதிதி “நீங்க தேடுறது இதுவா?” என்று கேட்டபடி பர்ஸை நீட்ட, “இது எப்படி உங்க கிட்டே?” எனத் தயங்கியபடி ஆதினி இழுத்தாள்.
“காலையிலே இந்த பர்ஸை கொடுக்க தான் அந்த பையன் உங்களை கூப்பிட்டாங்க” என்று அதிதி சொல்ல ஆதினியின் முகத்தில் மாற்றம்.
“அப்போ என்னை வம்பிழுக்க கூப்பிடலயா? இதை கொடுக்க தான் என்னை காலையிலே கூப்பிட்டாங்களா?” என்றவளது வார்த்தைகள் தயக்கத்தில் தந்தியடித்தது.
“யெஸ்” என்றாள் அதிதி அழுத்தம் திருத்தமாக.
அதைக் கேட்டு ஆதினியின் முகம் கலங்கிய நொடி உணவை வாங்கிக் கொண்டு அங்கே வந்த ராஜ்ஜின் முகத்திலும் கலக்கம்.
“தப்பு பண்ணிட்டேன். நான் அவரைப் பார்த்து பயந்து ஓடியிருக்கக்கூடாது” ஆதினியின் குரலில் குற்றவுணர்வு குளம் போல கட்டியிருந்தது.
“யெஸ் தப்பு தான். அடுத்த தடவை இப்படி பயந்து ஓடாதீங்க. எதிர்த்து நின்னு ஃபேஸ் பண்ணுங்க ஆதினி” கண்டிப்பான குரல் அதிதியிடம்.
“ம்” என்று தலையசைத்தவள் “இப்போ அவர் எப்படி இருக்கார்? அடி பலமா?” என்றாள் தவிப்பு மேலிட
“கொஞ்சம் பலமான அடி தான். ஒரு அடிமை சிக்கிட்டானு தாறுமாறா போட்டு அடிச்சுட்டாரே இவரு” என அதிதி ராஜை கோபமாய் பார்த்தாள்.
“நான் அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்கனும்” என்று ஆதினி சொல்ல ராஜ்ஜோ வேகமாக தலையசைத்து மறுத்தான்.
“நான் அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்கிறேன். நீ வர வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்” என்று டைப் செய்து வைக்க அதிதிக்கோ கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்?
ஆதினியை பாதுகாப்பதாக எண்ணி அவளை தொடர்ந்து பலவீனமாக்குகிறானா இவன்?