எங்கே எனது கவிதை – 16

love-3189894_960_720-f9a09e55

எங்கே எனது கவிதை – 16

16        

அவன் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்தே, கார்த்திக் தனது கணினியைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட, அவனை தொந்தரவு செய்யாமல் சிறிது நேரம் இருந்த பாலகிருஷ்ணன், உறங்குவதற்கு நேரமாவதை உணர்ந்து, அவனை எட்டிப் பார்த்தார். அவன் சீரியசாக அமர்ந்துக் கொண்டு, எதையோ படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கவும்,

“மாப்பிள்ளை..” என்று அழைத்துப் பார்க்க, அவனது கவனம் மொத்தமும் கணினியில் இருக்கவும், அவன் நிமிர்ந்துப் பார்த்தான் இல்லை..

“கார்த்திக்..” அடுத்து அவர் சிறிது சத்தமாக அழைக்க, பட்டென்று அவன் நிமிர்ந்துப் பார்த்து, 

“சொல்லுங்க மாமா.. ஏதாவது வேணுமா?” என்று கேட்டவன், எழுந்து அவரின் அருகில் செல்ல,

“இல்லப்பா.. நேரம் ஆகுது.. அவ்வளவு தூரம் காரை ஓட்டிக்கிட்டு வந்திருக்கீங்க.. நேரத்தோட படுக்கலாம்ல.. மணி பத்தரை ஆகுது.. ரெஸ்ட் எடுக்கலைன்னா உடம்பு கெட்டுடப் போகுது..” அவர் கேட்கவும்,

“இல்ல மாமா.. செவ்வாய்கிழமை ஒரு முக்கியமான கேஸ் இருக்கு.. ஒரு பெரிய தொழிலதிபருக்கு எதிரா நான் ஆஜராகர கேஸ் இது.. அவருக்கு சைட்ல நிறைய தப்பான தொழில் எல்லாமும் இருக்குன்னு ஒரு செய்தி வந்தது. அதனால முதல்ல நம்ம வைக்கிற பாயிண்ட்ஸ் எல்லாம் ஸ்ட்ராங்கா வைக்கணும்.. அந்த கேஸ்ல இருந்து அவரைத் தப்பிக்க விடக் கூடாது.. அது தான்..” கார்த்திக்கின் பதிலில்,

“பெரிய ஆளுங்களுக்கு எல்லாம் எதிரா நின்னா உங்களுக்கு பிரச்சனை ஆகாதா மாப்பிள்ளை?” கவலையாக பாலகிருஷ்ணன் கேட்க,

“போலீஸ் வேலை போல இதும் எங்க வேலை தானே மாமா.. அதை நான் நேர்மையா செய்து தானே ஆகணும்.. என்னை நம்பி வந்தவங்களை நான் கை விட முடியாது இல்ல.. அதுவும் இந்த விஷயத்துல பாதிக்கப்பட்டது ஒரு சின்னப் பொண்ணு மாமா.. அதனால இதை விட முடியாது.. அதுக்கு தான் பார்த்துட்டு இருக்கேன்.. காலையிலேயே எங்க ஜூனியர்கிட்ட பாயிண்ட்ஸ் எடுத்து வைக்க சொன்னேன்.. அதை அவங்க மெயில் பண்ணி இருக்காங்க.. அதையும் பார்த்துட்டு, கூடுதல் பாயிண்ட்ஸ் ஏதாவது கிடைக்குமான்னு பார்த்துட்டு இருக்கேன்.. அது முடிச்சிட்டு படுக்க கொஞ்சம் நேரம் ஆகும் மாமா.. நீங்க படுங்க.. காலையில நாம எல்லாரும் எங்கயாவது பக்கத்துல வெளிய போய் சுத்தி பார்த்துட்டு வரலாம்.. அது தான் இப்போவே முடிச்சு வைக்கிறேன்..” என்றவனின் தோளைத் தட்டியவர்,

“காலையில மெல்ல எழுந்துக்கோங்க.. பொறுமையா இங்க பக்கத்துல எங்கயாவது போயிட்டு வரலாம்.. ரொம்ப நேரம் முழிச்சு இருக்கப் போறீங்களா? டீ ஏதாவது போட்டுத் தரச் சொல்லவா?” கரிசனையாகக் கேட்க,

“இல்ல மாமா.. வேண்டாம்.. நைட் சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்கு. நீங்க படுத்துக்கோங்க.. மாத்திரை எல்லாம் சாப்பிட்டீங்க தானே.. அடுத்த தடவ நீங்க சென்னை வரும்போது நான் வேற நல்ல டாக்டரா கூட்டிட்டு போறேன்.. எனக்கு இவரு தேவைக்கு அதிகமா மருந்து தரது போலத் தோணுது..” என்றவனின் தோளைத் தட்டிவிட்டு, பாலகிருஷ்ணன் நிம்மதியாக உறங்கச் சென்றார்..                

கார்த்திக் அமர்ந்து சீரியசாக கணினியில் படித்து, தனது கையேடில் எதுவோ குறித்துக் கொண்டிருக்க, ஆதிராவோ அவன் கூறியதைக் கேட்டு உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தாள். அவனிடம் பேசும் ஆவல் உந்த, அருகில் உறங்கிக் கொண்டிருந்த தனது தாயைத் திரும்பிப் பார்த்தாள்.           

சுதா நன்றாக உறங்கிக் கொண்டிருக்கவும், மெல்ல எழுந்து கொலுசின் ஒலி வராதவாறு அறையை விட்டு வெளியில் சென்று, கார்த்திக்கின் அருகில் சென்றாள்.. சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி, கணினியைத் தலையணையின் மீது வைத்து அவன் படித்துக் கொண்டே, காதில் ஹெட்போன்ஸ் வழியாக அவன் பாடல் கேட்டுக் கொண்டிருக்க, அவனது கண்களில் இருந்த கண்ணாடியைப் பார்த்தவள், மெல்ல அவன் அருகில் சென்றாள்..

“கார்த்திக்..” ஆச்சரியத்தில் அவள் அழைக்க, தனது கண்ணாடியை கழட்டி வைத்துக் கொண்டே,  

“என்னாச்சு பேபி டால்..” அவன் கேட்கவும்,

“கழட்டாதீங்க.. கழட்டாதீங்க.. போடுங்க.. போடுங்க.. நான் இப்போ தான் கண்ணாடி போட்டு உங்களைப் பார்க்கறேன்..” என்றபடி அவனது அருகில் வந்தவள், இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, அவனது முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்க்க, கார்த்திக் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தினான்..

“என்னடா? என்ன அப்படி பார்க்கற? இது கம்ப்யூட்டர் யூஸ் பண்ணும்போதும், ரொம்ப சின்ன எழுத்து படிக்கும் போது மட்டும் போடுவேன்.. ரொம்ப நேரம் கம்ப்யூடர் யூஸ் பண்ணினா தலை வலிக்கும்.. அதுக்காக..” புன்னகையுடன் கார்த்திக் சொல்லவும், அவனது தாடையில் கிள்ளியவள்,

“ரொம்ப க்யூட்டா இருக்கு அப்பு.. டூ மேன்லி..” என்றவள், அவனது அருகில் அமர்ந்துக் கொண்டு, அவனது மீசையின் நுனியை முறுக்கி விட்டு, கண் சிமிட்டிச் சிரித்தவள்,   

“என்ன கேட்டுட்டு இருக்கீங்க? பாட்டா.. இல்ல யார் கூடவாவது பேசிட்டு இருக்கீங்களா?” என்றபடி அவனது ஒரு காதில் இருந்த ஹெட்போனசை எடுத்து தனது காதில் வைத்துக் கொள்ள,

“நான் நைட் தனியா வேலை செய்யும் போது பாட்டு கேட்டுட்டு படிப்பேன்.. அது தான்.. ரொம்ப அமைதியா நல்லா இருக்கும்..” எனவும், அதைக் கேட்டவள்,  

“வாவ்.. செம பாட்டு..” என்றபடி அவனைப் பார்த்தாள்..   

“இன்னும் நீங்க தூங்கலையா? இப்போவே இப்படி படிக்கறீங்களே.. ஸ்கூல் எக்ஸாம்க்கு எல்லாம் எப்படி படிச்சு இருப்பீங்க?” என்று கேள்விக் கேட்க,

“அதெல்லாம் விடிய விடிய தூங்காம கூட படிப்பேன்.. ஒரு நாள் முழுசா தூங்காம கூட எக்ஸாம்க்கு படிச்சு இருக்கேன்..” என்றபடி, கணிணியை விட்டு பார்வையை அகற்றி, புன்னகையுடன் ஆதிராவின் முகத்தைப் பார்க்க, அவள் பாடலில் மூழ்கி, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருக்க, அந்த அழகில் கார்த்திக் சிக்கித் தவிக்கத் தொடங்கினான்…

அந்த மெல்லிய வெளிச்சத்தின் ஒளியில், அழகிய தேவதையாக ஒளிர்ந்தவளின் அழகை சிறிது நேரம் ரசித்தவனின் பார்வை அவளது இதழ்களில் நிலைத்தது.   

பாடலைக் கேட்டு, அதனுடன் பாடிக் கொண்டே அவள் தாளம் போட, அவனிடம் இருந்து எந்த அசைவுமின்றி, அந்த இடமே அமைதியாக இருக்கவும் கண்களைத் திறந்தவள், புருவத்தை உயர்த்தி, கண்களை கேள்வியாக அசைக்க, நொடிப்பொழுதில் அவளது கன்னத்தைத் தனது கையில் தாங்கியவன், அவளது இதழ் நோக்கிக் குனிந்தான்..                      

தேய்ந்து வளரும் தேன் நிலாவே

மடியில் வா

தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா

வானத்தில்..

வானத்தில் மின்னிடும் வைரத்தின்

தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா ..

இசையில் தொடங்குதம்மா… விரக நாடகமே..  

அந்த இரவு நேரத்தில், இசை ஞானியின் இசையில் ஒளிர்ந்த பாடல் காதில் ஒலிக்க, அந்த நேரத்தில், அவளது அருகாமையில், மெல்ல தனது நிலை இழக்கத் துவங்கியவன், அவளது இதழ் நோக்கிக் குனிய, தனது கன்னத்தின் மீது அவன் கை வைக்கவும், அவனது முகத்தைப் பார்த்தவள், அவனது பார்வையின் தாக்கத்தில் கட்டுண்டு போனாள்.. அவன் இதழ் நோக்கிக் குனியவும், மெல்ல கண்களை மூடிக் கொண்டவள், அவனது இதழ் தீண்டலுக்காக படபடப்புடன் காத்திருந்தாள்..

அவளது இதழின் அருகே நெருங்கியவன், அந்த நேரம் தன்னை சுதாரித்துக் கொண்டு, தலையை உலுக்கி, அவளது நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு நகர்ந்து அமர, படபடப்பாக காத்திருந்தவள், அவனது இதழ் தீண்டலில், இமைகளைத் திறந்து, விழி உயர்த்திக் கேள்வியாக அவனைப் பார்க்கவும், அவள் அருகில் இருந்து எழுந்துக் கொண்டே, “நேரமாச்சு.. நீ போய் தூங்கு.. காலையில வேற நீ எனக்கு ஊரைச் சுத்தி காட்டப் போற.. நான் இதுவரை கோயம்பத்தூரைச் சுத்திப் பார்த்ததே இல்ல.. நானும் இன்னும் ஒரு மணி நேரத்துல தூங்கிடுவேன்..” என்றவன், தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு, குளியறைக்குள் புகுந்துக் கொள்ள, ஆதிரா போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஆதிரா மெல்ல எழுந்து செல்லவும், அவளைப் பின் தொடர்ந்து பார்க்க வந்த சுதா, அவன் செய்ய இருந்ததைப் பார்த்து திகைத்துப் போனார்.. ‘ஆ..’ என்று அவளை அழைக்க வாய் திறப்பதற்குள், அவன் செய்ய இருந்ததை மாற்றி அவளது நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு, சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து உடனே விலகிச் சென்றதையும் பார்த்தவர், தனக்குள் அவனை மெச்சிக் கொண்டு, மீண்டும் வந்த சுவடே தெரியாமல் படுத்துக் கொண்டார்..  

அவன் குளியறைக்குள் புகுந்துக் கொள்ளவும், தனது முகத்தை துடைத்துக் கொண்டவள், அவனது இதழ் தீண்டலுக்காக படபடப்புடன் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டு, ‘ஹையோ..’ என்று நாணத்துடன் தனது தலையில் தட்டிக் கொண்டு, அவசரமாக வெளியில் சென்று, தனது அன்னையின் அருகே படுத்துக் கொண்டாள். 

அவனது சுவாசம் தந்த குறுகுறுப்பும், நெஞ்சின் படபடப்பும் மிச்சம் இருக்க, தனது நகத்தை கடித்துக் கொண்டு அவள் படுத்திருக்க, அப்பொழுது தான் கண் விழித்து போல கண் திறந்த சுதா, “எங்கடி இந்த நேரத்துல போயிட்டு வர?” என்று கேட்க,

“அவர் கூட பேசிட்டு இருக்கலாம்ன்னு போனேன்மா.. அவர் தனியா உட்கார்ந்து வேலை செஞ்சிக்கிட்டு இருக்கார்ல..” அவர்புறம் திரும்பிக் கொண்டே அவள் சொல்ல, ‘இந்த நேரத்துலயா?’ சுதா திகைப்பாக கேட்பது போல கேட்டார்..

அவருக்கு தனது மகளின் மனதையும் அறிய வேண்டி இருந்தது.. இந்த நேரத்தில், காதலனேயானாலும், அவன் அருகில் தனித்து செல்வது என்பது, அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.. அந்த நம்பிக்கையை அவன் கொடுத்திருக்க வேண்டும்.. எப்படி அந்த நம்பிக்கை வந்தது என்று தெரிந்துக் கொள்ளவே சுதா கேட்க,

“அம்மா அவரு என்னோட சுயமரியாதைக்கு பங்கம் வர மாதிரி நடந்துக்க மாட்டேன்னு சொல்லி இருக்கார்.. அதே போல என்னோட கௌரவத்தை பாதுகாக்கறதும் தன்னோட கடமைன்னு சொல்லி இருக்கார்.. கண்டிப்பா அதைச் செய்வார்ம்மா..” உறுதியாகச் சொல்லவும்,  

“எப்படி?” என்று அவர் கேட்க,

“போன வாரம் அவரோட பர்த்டேக்கு ரிசார்ட்டுக்கு போயிட்டு வந்தோம்ல..” அவள் சொல்லவும்,

“பீச்சுக்குன்னு இல்ல நீ சொன்ன?” சுதா குழப்பமாகக் கேட்க, ஆதிரா தலையை உருட்டினாள்.

“ஆமாம்மா.. அது ஒரு ரிசார்ட்ல இருக்கற பீச்.. ரிசார்ட்ல சாப்பிட்டு, அங்க சுத்திப் பார்த்துட்டு, அங்க இருந்த ப்ரைவேட் பீச்சுக்கு போயிட்டு வந்தோம்.. அவர் முதல்ல ரிசார்ட்டுக்கு போகலாம்ன்னு சொன்ன உடனே நான் கொஞ்சம் பேக்கு மாதிரி அவர்கிட்ட பேசினேன்.. அப்போ தான் அவர் சொன்னார்ம்மா.. அதே போல இப்போவும்..” என்றுத் தொடங்கியவள், தனது இதழ்களைக் கடித்துக் கொள்ள, அவளது கன்னத்தைத் தட்டியவர்,

“சீக்கிரம் தூங்கு.. நாளைக்கு நம்ம எல்லாரும் வெளிய போகலாம்ன்னு மாப்பிள்ளை சொல்லி இருக்காராம்.. உங்க அப்பாவுக்கு சந்தோசம் பிடிபடல.. தூங்கு.. நேரத்துல எழுந்து வேலை இருக்கு..” என்றவர், அவளது கன்னத்தில் தட்டிக் கொடுக்க, அவனது சுவாசம் தந்த குறுகுறுப்பு மெல்ல அடங்கி, ஆதிரா கண்ணுறங்க, சுதாவின் மனதில் கார்த்திக்கின் மேல் பல மடங்கு மதிப்புக் கூடியது.

மறுநாள் காலை, கார்த்திக் நன்கு உறங்கிக் கொண்டிருக்க, வீட்டில் இருந்த அனைவருமே எந்த சத்தமும் எழுப்பாமல், தங்களது வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தனர்..  

காலையிலேயே குளித்து, புடவையில் தயாராகி, நொடிக்கொரு முறை ஆதிரா கார்த்திக்கின் அறையைப் பார்த்துக் கொண்டிருக்க, “தம்பி எப்போ தூங்கினாருன்னே தெரியல.. நல்ல அசந்து தூங்கிட்டு இருக்கார்.” என்று சுதா சொல்லிக் கொண்டே, காலை உணவிற்கு, இட்லியும், மட்டன் குருமாவும் செய்துக் கொண்டிருக்க,

“மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்டி.. அவருக்கு என்ன பிடிக்கும்?” சுதா கேட்கவும்,

“அவருக்கு வீட்டு சாப்பாடுன்னாலே ரொம்ப பிடிக்கும்மா.. நீங்க எது செஞ்சாலும் சந்தோஷமா சாப்பிடுவார்.. அன்னைக்கு ஹோட்டல்ல கேட்டதுக்கு, ‘வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னார்மா..” என்றவளுக்கு தொண்டை அடைத்தது..

அப்பொழுது ஆதிராவின் செல்போன் இசைக்கவும், வேகமாக ஓடிச் சென்று போனை எடுத்தவள், “ஹலோ எஸ்.பி. சொல்லு..” ஆதிரா மெல்லிய குரலில் கேட்க,

“என்ன ஆதிரா இவ்வளவு பதிவிசா பேசற?” சரவணன் கேட்க,

“நான் ஊர்ல இருக்கேன்.. நேத்து திடீர்ன்னு கிளம்பி வந்துட்டேன்..” ஆதிராவின் பதிலில்,

“இங்க எங்க அண்ணன் கூட ஏதோ வேலை இருக்கு.. வர ரெண்டு நாள் ஆகும்ன்னு மெசேஜ் போட்டுட்டு எங்கயோ கிளம்பிப் போயிட்டான்.. எனக்கு அவன் இல்லாம போர் அடிக்குது.. அவன் இருந்தா சண்டையாவது போட்டுட்டு இருக்கலாம்.. அவன் எங்க போயிருக்கேன்னு உன்கிட்ட சொன்னானா? மொட்ட தாத்தா குட்டையில விழுந்தது போல ஒரு மெசேஜ் போட்டுட்டு போயிருக்கான்..” அவனது பதிலைக் கேட்டவள், நாக்கைக் கடித்துக் கொண்டாள்..

‘இவரு இங்க வந்ததைச் சொல்லல போல இருக்கே..’ என்று நினைத்துக் கொண்டவள்,

“ஏதோ கேஸ் விஷயமா வெளிய போறதா சொன்னாரு எஸ்.பி.” என்று சொல்லவும்,

“அவனுக்கு போன் அடிச்சா எடுக்கல.. காலையில எங்க அப்பாவுக்கு உங்க அப்பா கால் பண்ணி இருந்தாரு..” சரவணன் விஷயத்தைச் சொல்லவும்,

“அப்படியா? எங்க அப்பா பேசினாரா?” என்று கேட்டவள், தனது தாயைத் திரும்பிப் பார்க்க,

“ஆமா ஆதிரா.. காலையில நேரம் நல்லா இருந்ததுன்னு பேசினாங்க..” சுதாவின் கூற்று காதில் விழவும்,

“ஓ.. அப்படியா? அப்போ வீட்டுல நீ சொல்லிட்டயா? உங்க வீட்ல எல்லாருக்கும் அவன் ஓகே வா?” என்று கேட்ட சரவணன்,

“நிஜமாவே நீ என் அண்ணியா வரப் போறியா? முடிவே பண்ணிட்டயா? என்ன கொடும சரவணா இது?” அவன் புலம்பவும், ஆதிராவிற்கு புன்னகை அரும்பியது..

“உங்க அண்ணா என்னை என்னச் சொல்லி கூப்பிடச் சொன்னார்? இனிமே நீ என்னை அப்படித் தான் கூப்பிடணும்..” விளையாட்டாகச் சொல்லவும்,

“என்னது? அண்ணின்னா.. உன்னையா? போகச் சொல்லு அவனை. அவனுக்கும் வேற வேலை இல்ல.. உனக்கும் வேற வேலை இல்லாம ரெண்டு பேரும் லவ் பண்ணிக்கிட்டு திரியறீங்க. இதுல நான் வேற அண்ணின்னு கூப்பிடணும்மாம்ல..” சரவணன் பொங்கிக் கொண்டிருக்க,  ஆதிரவோ, கார்த்திக் அசைவது தெரியவும்,   

“சரி எஸ்.பி.. நான் உன்கிட்ட அப்பறம் பேசவா? எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு..” என்றவள், அவசரமாக கார்த்திக்கைக் காண ஓடினாள்.

அவளைப் பார்த்து சுதா சிரித்துக் கொள்ள, உள்ளே சென்றவளோ, கார்த்திக் சோம்பலாக கண்களை மூடிப் படுத்திருக்கவும், அவனையேப் பார்த்துக் கொண்டு நின்றாள்.    

காற்றில் அவனது முகத்தில் விழுந்த முடி அழகாக அசைய, தலைக்கு மீது கையை மடக்கி வைத்த படி, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, ஆதிரா அவனையே ரசித்துக் கொண்டு நின்றாள்.

‘அச்சோ.. பாப்பா போல இருக்கீங்களே அப்பு.” என்று அவனைக் கொஞ்சியவள், அவளது தலை முடிக்குள் மெல்ல தனது விரலை நுழைத்து, கோதிக் கொடுக்க, கார்த்திக் கண் திறந்து புன்னகையுடன் அவளைப் பார்த்தான்..

அவன் கண் திறக்கவும், “குட் மார்னிங் அப்பு..” என்றவள், அவனது முடியை மீண்டும் மெல்ல கோதிக் கொடுக்க, அமைதியாக அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள், மெல்ல அவன் அருகில் அமர்ந்தாள்..

“என்ன அப்படி பார்க்கறீங்க?” புருவத்தை உயர்த்தி கேட்க,

“என்னோட லைஃப்ல இன்னைக்கு எவ்வளவு அழகான மார்னிங் தெரியுமா? இது போல என் வாழ்க்கை இருக்கணும்ன்னு தான் நான் ஆசைப்பட்டேன்..” என்றவன், உணர்ச்சி வசத்துடன் அவளது கையை எடுத்து தனது உதட்டில் ஒற்றிக் கொண்டான்..

அவனது தொண்டை அடைப்பது போல இருக்கவும், அவனது தலையை கோதிக் கொடுத்து, அவனது கன்னத்தில் கை வைத்தவள்,

“இன்னும் கொஞ்ச நாளுல தினமும் இப்படி தான் உங்க நாள் இருக்கப் போகுது.. இப்போ எழுந்துக்கறீங்களா? இல்ல தூங்கப் போறீங்களா?” கேட்டவாறே கண்களைத் தழைத்துக் கொண்டவள், மெல்ல குனிந்து அவனது நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு நிமிர,

“ஓய்..” கார்த்திக் மகிழ்ச்சியுடன் கூவினான்..

“சீக்கிரம் எழுந்து ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. நான் சூடா காபி போட்டுத் தரேன்.. மணி ஒன்பது ஆகுது.. அப்பறம் டிபன் வேற சாப்பிடனும்..” என்றபடி அவள் எழுந்துக் கொள்ள, அவளது கையைப் பிடித்து இழுத்தவன்,

“கொஞ்ச நேரம் இப்படியே உட்காரேன்.. இது ரொம்ப நல்லா இருக்கு.” என்று அவளது கையைப் பிடித்துக் கொண்டு கேட்க, ஆதிரா சுதாவைத் திரும்பிப் பார்த்தாள்.

“அம்மா வேற அங்க இருக்காங்க.. அப்பா காலையில மாமாவுக்கு போன் செய்து பேசிட்டாராம்.. எஸ்.பி. கால் பண்ணி சொன்னான்..” ஆதிரா சொல்லவும், மீண்டும் அவளது கையில் இதழ் பதித்தவன், அந்த நிமிடங்களை ரசித்துக் கொண்டிருந்தான்..

“நாளனிக்கு ஊருக்கு போனதுக்கு அப்பறம் இந்த சரவணன் மூஞ்சில தான் முழிக்கணும்.. பேசாம நீ என் கூட வந்திரு.” அவளது கையில் தனது உதட்டை உரசிக் கொண்டே அவன் சொல்லவும்,

“இந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் வேற வேலையே இல்ல.. போங்கடா ரெண்டு பேரும்.. அவன் என்னடான்னா காலையில போன் பண்ணி உங்களுக்கும் எனக்கும் வேற வேலை இல்லாம லவ் பண்றோம்ன்னு சொல்றான்.. நீங்க என்னடான்னா அவன் மூஞ்சில முழிக்கணும்ன்னு சொல்றீங்க.. உங்களை..” என்று அவனது புஜத்தில் அடித்தவள்,

“எழுந்திருங்க.. மணி இப்போவே ஒன்பதுக்கும் மேல ஆச்சு.. சாப்பிட்டு வெளிய கிளம்பலாம்..” என்றவள், அவனைப் பிடித்து இழுக்க, அவள் இழுத்த இழுப்பிற்கு எழுந்தவன், சிரித்துக் கொண்டே குளித்து விட்டு வந்தான்..

வந்ததும் சூடான இட்லிகளைப் பார்த்தவன், “நான் முதல்ல சாப்பிட்டு அப்பறம் காபி குடிக்கறேன்..” என்றவனுக்கு ஆதிரா பார்த்துப் பார்த்து பரிமாற, மனம் நிறைந்து உண்டவன், அவர்களுடன் அன்றைய பொழுதை சந்தோஷமாகக் கழித்தான்..      

ஆதிராவை கார்த்திக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதைப் பார்த்த அவளது பெற்றவர்கள் இருவருக்கும் உள்ளம் நிறைந்துப் போனது.. கார்த்திக்கின் அழகிய குடும்பத்தின் ஏக்கமும், அன்று அவர்களுடன் ஊரைச் சுற்றும் பொழுது தீர, அந்தக் குடும்பத்தில் அவன் ஒருவனாகிப் போனான்..   

இரண்டு நாட்களில் அந்த வீட்டில் அவன் மகனாகவே மாறிப் போக, ஆதிராவிற்கோ, அவன் மீதான காதல் பலமடங்காக பெருகியது.. மூன்றாவது நாள் காலையில் சுதா, பாலகிருஷ்ணன் இருவரிடமும் கார்த்திக் விடைப்பெற,

“சீக்கிரம் வேலைய எல்லாம் முடிங்க மாப்பிள்ளை..” என்று பாலகிருஷ்ணன் சொல்ல, கார்த்திக் சிரித்துக் கொண்டே,

“கண்டிப்பா சீக்கிரம் முடிக்க சொல்றேன் மாமா..” என்று ஆதிரவைப் பார்த்து கண் சிமிட்டியவன்,

“நீங்க அங்க வந்து கொஞ்ச நாள் இருங்க.. நாம சென்னையை சுத்திப் பார்க்கலாம்..” கார்த்திக் அழைக்கவும்,

“அப்பா.. அதை மட்டும் நம்பிராதீங்க.. அங்க வக்கீலு ரொம்ப பிசி.. ஒரு கறுப்புக் கோட்டை மாட்டிக்கிட்டு எப்போ பாரு ஹைகோர்ட் வாசல்ல தான் இருப்பார்.. அங்க தான் நாம போய் தேடிப் பார்க்கணும்..” ஆதிரா கேலி செய்ய, கார்த்திக் சிரித்துக் கொண்டே அவளது காதைத் திருக,

“அவ வாயிலேயே ரெண்டு போடுங்க தம்பி.. ஓவரா பேசிக்கிட்டே இருக்கா..” என்ற சுதா, தான் செய்த அதிரசத்தையும், முறுக்கையும் அவளிடம் கொடுக்க, கார்த்திக் ஆதிராவைக் கண்களால் வருட,

“சரிம்மா.. நாங்க கிளம்பறோம். மணியாகுது.. அவர் சாயந்திரம் போய், அவரோட சீனியரைப் பார்க்கணுமாம்..” என்றவள், அதற்கு மேல் தாமதிக்காமல் கிளம்பிவிட, சுதா வாய் மீது விரலை வைத்துக் கொண்டார்..

“அடிப்பாவி.. முன்ன எல்லாம் இங்க வந்தா ஊருக்கு போறதுக்கு மூக்கால அழுது ஊரைக் கூட்டுவ.. இப்போ என்னவோ ஒரு அஞ்சு நிமிஷம் நிக்க மாட்டேங்கற? இப்போவே எங்களை கண்ணுக்குத் தெரியல.. இன்னும் கல்யாணம் ஆனா.. எங்களை யாருன்னு கேட்ப போல இருக்கே..” என்று வம்பு வளர்க்கவும், சிரித்த கார்த்திக்,

“அவ அதெல்லாம் செய்ய மாட்டா அத்தை.. என்னை சேலத்துல பஸ் ஏத்தி விடச் சொல்லுவா.. நானும் ஏத்தி விடுவேன்..” என்று வம்பு வளர்த்தவனை இழுத்துக் கொண்டு காருக்குச் செல்ல, சிரித்துக் கொண்டே கார்த்திக் அவர்களிடம் விடைப்பெற்றுச் சென்றான்..   

ஆதிராவைக் கூட்டிக் கொண்டு புறப்பட, ஊரின் எல்லைத் தாண்டவும், அவனது தோளில் சாய்ந்துக் கொண்டவள், “ஐ லவ் யூ அப்பு..” என்று அவனது கன்னத்தில் இதழ் ஒற்ற..

“ஹே.. கண்ணம்மா..” என்ற கூவலுடன் கார்த்திக் அவளது கன்னக் கதுப்புகளை மென்மையாகக் கடித்தான்.. இருவரின் மனதிலும் நிறைவும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்க, சந்தோஷமாக தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்..  

செவ்வாய்க்கிழமை முடிந்த வழக்கின் தாக்கம், அவளது நினைவுகளுடன், இன்றைய வலியும் சேர்ந்து தொடர்ச்சியாக மனதினில் உலா வர, “எனக்கு உன் மடி வேணும் கண்ணம்மா.. இப்போ நீ வரியா இல்ல நான் பப்க்கு போகவா? இப்போ போனா நான் மொக்கு முட்ட குடிச்சிட்டுத் தான் வருவேன்.. நீ எல்லாம என் நெஞ்செல்லாம் இறுக்கமா இருக்குடி.. நெஞ்சு வலிக்குது.. அப்படியே செத்துப் போயிடுவேன் போல இருக்கு. எனக்கு ஒரு பாட்டு பாடு.. என் தலை முடியில வருடிக் கொடு.. எனக்கு இப்போ நீ வேணும் ஆதிரா.. நீ வேணும்டி.. என்னை விட்டுப் போயிடாதே.. நீ இல்லாம நான் செத்திருவேன்டா கண்ணம்மா.. என்கிட்ட வந்திரு..” கண்களை மூடிக் கொண்டே புலம்ப, அவனது உடல் வியர்க்கத் துவங்கியது..

அவனது பிதற்றலைக் கேட்ட சரவணன் பதறி எழ, அவனது உடல் வியர்க்க, ‘கண்ணம்மா வந்திருடா.. என்னைத் தனியா விட்டுடாதே..’ என்று கதற, அவன் நெஞ்சு வலி என்று சொல்லி, அவனது உடலும் வியர்க்கவும், பதறிய சரவணன், தொண்டையடைக்க அவனைப் பிடித்து உலுக்கினான்..  

Leave a Reply

error: Content is protected !!